Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் தோன்றியது எப்படி -ஆவணப்படம் video HD

Featured Replies

முன்னுரை 

அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
einstein.jpg

ஐன்ஸ்டீன்

மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.

மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.

உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும்  முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.

இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.

எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.

இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.

இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!

பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!

-   
வினவு

 

நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.

ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.

இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.

journey-through-universe-01.jpg

பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது

 

தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.

பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும்  வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்‌தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.

மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.

அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்றது இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.

இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.

journey-through-universe-02.jpg

செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.

சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.

செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?

அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.

அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை பார்க்கிறோம். டைட்டனில் நமது புவிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.

அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.

journey-through-universe-03.jpg

எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்

பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?

இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.

அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.

நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?

இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.

இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.

நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.

journey-through-universe-05.jpg

வால் நட்சத்திர மோதல்

மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், அங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.

நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான  விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.

1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.

journey-through-universe-06.jpg

ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.

இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.

இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.

நட்சத்திரத்தின் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும்.

journey-through-universe-071.jpg

கருந்துளை

நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம்  எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் இந்நிலையை வந்தடையும்.

சூரியனை விட அதிக நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.

இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.

வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.

journey-through-universe-08.jpg

லட்சக் கணக்கான விண்மீன்கள்

விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் அதையும் விட அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.

இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.

நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.

journey-through-universe-09.jpg

இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் -  100 கோடி சூரியன்களின் நிறையுடையது

இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள  நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.

journey-through-universe-10.jpg

அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு

இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.

பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.

-    மார்ட்டின்

 

(நன்றி: நேஷனல் ஜியாகிரபிக்)

 

நன்றி  vinavu.com

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.