Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - இன்னொரு கோணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 8-ஆம் தேதி மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் இருப்பிடம் பற்றி இன்றுவரை எந்தவித உருப்படியான தகவல்களும் இல்லை. இந்த சம்பவம் விமானப் பயணங்களின் பாதுகாப்புக்கும், இன்று இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கும் ஒரு பெரும் சவால். மேலும், இந்த விஷயத்தை மலேசிய அரசும், இந்திய அரசும், இணையமும் கையாண்ட விதம் மிகுந்த கவனத்துக்க்குரியது.

c9f75b33e95ae4befe6026e04181776f_XL.jpg

இந்தக் கட்டுரை 'விமானம் இப்படிப் பறந்திருக்கும், அங்கு விழுந்திருக்கும், இவர்கள்தான் கடத்தியிருப்பார்கள்' என்ற கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இன்னொரு வதந்தியைப் பரப்பும் கட்டுரை அல்ல. மாறாக இந்த விஷயத்தை உலகம் எப்படிக் கையாண்டது என்பதைப் பற்றியும், இதன் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதைப் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரை.

MH370 விமானம் கடத்தப்பட்டுள்ளதாக 'நம்பும்' மலேசிய அரசு!

மலேசிய அரசு இந்த சம்பவத்தை கையாண்ட விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம், அவர்கள் கொடுத்த தகவல்களில் இருந்த முரண்கள்தான். முதலில் ஒன்றைச் சொல்வது, பின்னர் அதை மறுப்பது, பின்னர் முதலில் சொன்னதை உறுதிப்படுத்துவது என மலேசிய அரசு குழப்பியதுதான் அதிகம். 'விமானம் வழிமாறிச் சென்றது தெரிந்தும் அதை பல நாட்கள் மறைத்தது ஏன்?' என்பது இன்றுவரை பதிலளிக்கப்படாத மில்லியன் டாலர் கேள்வி!

மார்ச் 9-ஆம் தேதி, மலேசிய அரசின் தற்காலிக போக்குவரத்துத் துறை அமைச்சர் 'விமானம் தனது வழக்கமான வழியில் இருந்து பாதைமாறியிருக்கலாம்' என்றார். 

MH370, போயிங் 777-200 விமானம் சிவிலியன் ரேடாரில் இருந்து மறைந்தபிறகு மிலிட்டரி ரேடாரில் மலாக்கா ஜலசந்தி வரை பதிவானதாக அந்த நாட்டின் விமானப்படைத்தளபதி ஒரு பத்திரிகைக்குப் பேட்டியள்ளித்தார். ஆனால், மார்ச் 12-ஆம் தேதி 'நான் அப்படி ஏதும் சொல்லவே இல்லை. இந்தத் தகவல் உண்மையல்ல' என்று மறுத்தார். சில மணிநேரங்களில் முதல்முறையாக ராணுவத்துடன் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய மலேசிய அரசு, தேடுதல் வேட்டையை மலாக்கா ஜலசந்தி வரை விரிவுப்படுத்தப்பட்டதைத் தெரிவித்தது.

Mh370%20flight.jpg

இதுபோல், பத்திரிகைகளுக்கு அரசிடமிருந்தோ, ராணுவத்திடமிருந்தோ அல்லது தேடுதல் குழுவில் இருந்தோ 'மறைமுகமாக' யாராவது நடப்பதை சொல்லிவிட, 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை' என்று மறுப்பதே மலேசிய அரசின் வேலையாக இருந்தது. இதனால், ஏகப்பட்ட வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. முதலில் மலேசிய அதிகாரிகள் 'விமானம் பாதை மாறி சென்றிருக்கலாம்' என்றார்கள். பின்னர், அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தேடுதல் பரப்பளவை அதிகரித்தார்கள்.

பின்னர் 'விமானத்தை யாரோ வேண்டுமென்றே திசை திருப்பியிருக்கிறார்கள்' என்று பேட்டிதட்ட, பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ' விமானம் கடத்தப்பட வாய்ப்பில்லை. ஆனால், மிலிட்டரி ரேடாரில் பதிவானது MH370 விமானம்தான். அதன் உண்மையான வழியில் இருந்து ஏன் இங்கு வந்தது என்று தெரியவில்லை' என்றார்கள். பின்னர் கடந்த சனிக்கிழமை பத்திரிகையாளர்களை அழைத்து 'விமானத்தின் தொலை தொடர்பு சாதனங்களை  யாரோ வேண்டுமென்றே நிறுத்தி வைத்துவிட்டு, விமானத்தைத் திசை திருப்பியிருக்கிறார்கள்' என்று அறிக்கை விட்டார் மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக். 

இப்போது வரை மலேசிய அரசு 'ஆம், MH370 விமானம் கடத்தப்பட்டுவிட்டது' என்று ஒரு அறிக்கைவிடவில்லை. மாறாக, நடந்ததைப் பார்க்கும்போது விமானம் கடத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை மட்டுமே தன் நிலைப்பாடாகக் கொண்டு இருக்கிறது. 

இதுபோன்ற பல முரணான தகவல்கள், வெளியே வதந்திகளாக உருவெடுத்தன. முதலிலேயே தெளிவான விளக்கங்களோடு நடப்பவற்றை அப்படியே சொல்லியிருந்தால் தேவையில்லாமல் வதந்திகளை மறுப்பதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டிய தேவையெல்லாம் இருந்திருக்காது. 

இந்த போன்ற நடத்தைகளால் அதிகம் சூடானது சீனாதான். 17-ஆம் தேதியன்று, 'மலேசிய அரசு தொடர்ந்து அளித்து வரும் செய்திகள் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. விமானம் மாயமாகி ஒருவாரம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு தகவலும் இல்லை. விமானத்தில் பயணித்தோரில் முக்கால்வாசிப்பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மலேசியா தேடுதல் பணிகளை இன்னும் அதிகரிக்கவேண்டும். அனைத்துத் தகவல்களையும் தேடுதலில் பங்கேற்கும் நாடுகளிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்' என காட்டமாக அறிக்கைவிட்டது

Zahari%20Mh370%20Vikatan.jpg

ஆனால் மறுதினம் சீனாவின் அறிக்கையை மறுத்த மலேசிய அரசு, ' மற்ற நாடுகளுடன் நாங்கள் அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். அனைத்து நாடுகளுடனும் நாங்கள் ஒற்றுமையாகவே இருந்து விமானத்தைத் தேடி வருகிறோம்' என்றது. 

இந்த கட்டுரையை எழுதும்போது பீஜிங்கில் இருந்த சீனப் பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசு அனைத்து உண்மைகளையும் வெளியிடும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். 

உலகின் மிகப்பெரிய தேடுதல்/மீட்பு வேட்டை - அரசியல் மற்றும் ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ் பிரச்னை! 

கடலில் தேடுதல் பணி இப்போது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பகுதியும் சுமார் 1,60,000 சதுர நாட்டிக்கல் மைல் பரப்பளவு கொண்டது. தெற்குப் பகுதியும் இதே பரப்பளவு கொண்டது.  கடலில் தேடுதல் நடக்கும் மொத்தப் பரப்பளவு சுமார் 2.24 மில்லியன் சதுர நாட்டிக்கல் மைல்கள்]

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 10 நாடுகள் இந்த விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால், இன்றைய நிலவரப்படி 26 நாடுகள் தங்களிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட 60 போர்க்கப்பல்கள்(?!) மற்றும் 45 விமானங்கள் ஆகியவற்றைக் கடலிலும், நிலத்திலும் விட்டு தேடிக்கொண்டிருக்கின்றன. இத்தனை நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆபரேஷனில் இறங்குவது இதுதான் முதல்முறையாக இருக்கும். இவர்கள் அத்தனை பேரும் ஒற்றுமையாகத் தேடுவதுபோலத்தான் இருக்கிறது. 

ஆனால், இந்த ஒற்றுமையில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஏனென்றால், தெற்கு சீனக் கடல் ( South China Sea) மிகவும் பிரச்னைக்குரிய இடம். இந்தக் கடல்பகுதி சீனாவின் 'ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ்' (String of Pearls) எனும் கொள்கைக்குக் கீழ் வருகிறது. இந்தப் பெயரை சீனா அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், அமெரிக்கா சீனாவின் கொள்கையைக் குறிக்க இப்படிச் சொன்னது. 

இந்தக் கடலில் பெரும் பகுதியை தன்னுடையது என சீனா உரிமை கொண்டாட, அதை மறுத்து அதே பகுதிகளை தங்களுடையது என மலேசியா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகியவை உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு நடுவில் இந்தியா தனது INS Airavat போர்க்கப்பலை(?!) அனுப்பி 'எண்ணெய்வளம்' குறித்த 'ஆராய்ச்சிகளை' மேற்கொள்ளப்போகிறோம் எனக் குதிக்க, 'நாங்கள் இங்கு போர்பயிற்சி எடுக்கப்போகிறோம்' என்று அமெரிக்காவும் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது. இந்த சம்பவம் தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறையின் செய்திதொடர்பாளர் ஜியாங் யூ, இந்தியாவைப் பெயர் சொல்லாமல் தாக்கிப் பேசியது பரபரப்பானது. தெற்கு சீனக் கடல் ( South China Sea) பகுதியில் வியட்நாமும், இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்று சேர்வது இங்கே சீனாவின் ஆதிக்கத்தை கேள்விக்குறியாக்கிவிடும். அதனால்தான், மலேசியாவின் மீது காட்டமாக இருக்கிறது சீனா.

Untitled(1).jpg

ஒரு வருடத்துக்குமுன் இந்தக் கடல் சம்பந்தமாக சீனா, ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பெரும் நெருக்கடி உருவானது. சமீபத்தில் இதே கடல் பகுதியில் 'பயிற்சி'க்காக அமெரிக்கா இங்கு கொண்டுவந்து நிறுத்திய போர்க்கப்பல்களான USS Kidd மற்றும் USS Pinckney டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள்தான் முதலில் விமானத்தைத் தேட பயன்படுத்தப்பட்டது. பின்னர் 13-ஆம் தேதியுடன் USS Pinckney மட்டும் பராமரிப்புப் பணிக்காக சிங்கப்பூர் திரும்பிவிட்டது இந்தக் கப்பல். USS Kidd போர்க்கப்பல் அந்தமான் கடற்பகுதியில் தேடிவிட்டு, இப்போது மலாக்கா ஜலசந்தியை நோக்கி திரும்பிக்கொண்டு இருக்கிறது. 

இதே தெற்கு சீனக் கடல் ( South China Sea)  பகுதியில்தான் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க போர்க்கப்பலான கௌபென்ஸ் மற்றும் சீனப் போர்க்கப்பலான லியோனிங் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அளவுக்கு மிக நெருக்கமாக வந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் சீனா, அமெரிக்கா இரண்டும் பரஸ்பரம் குற்றம்சாட்டிவருவதால் இன்றுவரை இந்த சம்பவத்தில் உண்மையாக நடந்தது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஏன் இங்கு இதை எழுதுகிறோம் என்பது முக்கியம். இந்த சம்பவத்தை 'அமெரிக்க கடற்படையின் வரலாற்றில் ஒரு பெரும் கரும்புள்ளி. சீனாவின் போர்க்கப்பலிடம் மிரட்டலைப் பெற்று திரும்பியிருக்கிறது அமெரிக்கப் போர்க்கப்பல்' என்று அமெரிக்கப் பத்திரிகைகள் அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தன. 

இப்போது இந்த பிரச்னைக்குரிய இடத்தில் அமெரிக்காவோ, இந்தியாவோ விமானத்தைக் கண்டுபிடித்துவிட்டால் அது சீனாவின் அதிகார அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும். அப்படி நடந்துவிட்டால், தெற்கு சீனக் கடல் பகுதியை சீனாவில் முன்னர்போல் உரிமை கொண்டாட முடியாது. கௌபென்ஸ்/லியோனிங் பிரச்னைக்குப் பிறகு இந்தப் பகுதியில் நல்ல பெயரை நாட்ட அமெரிக்காவுக்கும் இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது.

விமானத்தை அமெரிக்கா கண்டுபிடித்தால் உடனடியாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக 'மலேசியா'-வும் 'வியட்நாமும்' மாறிவிடும் என்பதை உணர்ந்தே இருக்கிறது சீனா. இந்த விஷயத்தில் சீனா தன்னுடைய மக்களுக்காகப் பேசினாலும், அரசியல் காரணங்களுக்காக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் வியட்நாம் தன்னுடைய நிலப்பரப்பின் மீது சீன போர்விமானங்கள் பறப்பதற்கு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இத்தனை போர்க்கப்பலகள் மற்றும் போர் விமானங்கள் ஒரே ஆபரேஷனில் இறங்கியிருக்கும்போது, மிகக் கவனமாக இருக்கவேண்டும். எனவே, அரசியலை மறந்துவிட்டு தேடுதல் வேட்டையில் முழு கவனத்தையும் செலுத்துவதே இப்போதைய தேவை. 

MH370 சம்பவத்தை இணையம் கையாண்ட விதம்! - தகவல் தாகம்! 

MH370 சம்பவத்தை 'மர்மம்'-ஆகவே வைத்திருந்ததுதான் மலேசியா செய்த மிகப் பெரிய தவறு. டெக்னிக்கலாக இந்த விஷயத்தை தெளிவாக முதலிலேயே எடுத்துக்கூறியிருந்தால் இவ்வளவு வதந்திகள் பரவ வாய்ப்பே இல்லை. 'மர்மம்' என்ற ரீதியிலேயே வைத்திருந்ததால் இணையம் முழுக்க 'தீடீர்' ஏவியேஷன் எக்ஸ்பர்ட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இவர்களின் 'தியரி'-யை எடுத்துக்கூறி பல இணையதளங்களும் செம 'டிராஃபிக்' பார்த்தன.

captain-zaharie-ahmad-shah.jpg

ஒரே விஷயத்தை(வதந்தியை) பல பேர் கூற ஆரம்பிக்கவும், MH370 விமானத்தில் சென்ற உறவினர்களை, நண்பர்களை காணாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்கள் பதற ஆரம்பித்தார்கள். பிரச்னை சீரியஸாக ஆரம்பிக்கவும், மலேசிய அரசுக்கு ஒவ்வொரு வதந்தியையும், அதீதக் கணிப்பையும் மறுப்பதே பெரிய வேலையாகிப் போனது.

போதாக்குறைக்கு, மக்களுக்கு MH370  மீது இருக்கும் தகவல் தாகத்தை உணர்ந்த சைபர் கிரிமினல்கள் ஃபேஸ்புக்கில் பொய்யான 'மலேசியா ஏர்லைன்ஸ் விபத்து வீடியோ' ஒன்றைப் பரவவிட்டனர். இதன்மூலம் மால்வேர் பரவுவதை உணர்ந்த ஃபேஸ்புக் நிறுவனத்தினர் உடனடியாக அந்த லிங்க்குகளை அழித்துவிட்டனர். ஆனால், ட்விட்டரில் இன்னும் இந்த லிங்க் பரவியபடி இருக்கிறது கவனம். 

ட்விட்டரில் கடந்த வாரம் முழுக்க MH370 ட்ரெண்டிங்கிலேயே இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்ட பல பேர் சம்பந்தமில்லாமல் MH370 டேக்லைனை தங்களுடைய ட்வீட்டுகளில் இணைத்து 'விளம்பரம்'  தேடினர். 

MH370 சம்பவத்தின் மூலம் டிராஃபிக்கை தங்கள் பக்கம் இழுத்து இணையதளங்கள் ஈட்டிய லாபம் மட்டும் எவ்வளவோ கோடிகள் இருக்கும். 

தடுமாறிப் போன மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம்!

மாயமான MH370 விமானத்தை வைத்திருக்கும் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் 40 வருடம் வரலாறு உடையது. உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களுள் ஒன்று மலேசியா ஏர்லைன்ஸ். ஆனால், கடந்த 10 வருடங்களாக பட்ஜெட் விமான நிறுவனங்களின் வரவால் மலேசியா ஏர்லைன்ஸுக்கு பெரும் போட்டி உருவானது. இப்போது MH370 விமானம் மாயமான சம்பவம் இந்த நிறுவனத்துக்கு மரண அடியைக் கொடுத்திருக்கிறது.

மலேசியா ஏர்லைன்ஸ் இந்த சம்பவத்தை முதலில் கையாண்ட விதமும் பெரும் விமர்சனத்தை வாங்கிக் குவித்திருக்கிறது. ஏனென்றால், மலேசிய விமானப்படை மக்களுக்குத் தந்த தகவலுக்கும், மலேசியா ஏர்லைன்ஸ் தந்த தகவலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கனவே உறவினரைக் காணாமல் தவித்தவர்கள் மேலும் குழம்பிப்போனார்கள். 

சந்தையிலும் மலேசியா ஏர்லைன்ஸின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்தது. 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருந்த பங்கு மதிப்பில் வெறும் 10 சதவீதம்தான் இப்போது மலேசியா ஏர்லைன்ஸின் மதிப்பு. 2013-ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 1.17 பில்லியன் ரிங்கிட்டுகள் நஷ்டத்தைச் சந்தித்தது. 

கடந்த 12 வருடங்களில் 4 முறை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது மலேசியா ஏர்லைன்ஸ். காரணம், தவறான மேனேஜ்மென்ட், அரசின் தலையீடு மற்றும் விமானத்துறையில் சம்பந்தமில்லாதவர்க்ள் உயர்ந்த பதவியில் இருப்பது. இப்போது சி.இ.ஓவாக இருக்கும் அஹமத்  ஜவஹரி இதற்குமுன் எரிசக்தி நிறுவனங்களில் பணியாற்றியவர். 

மக்கள் தங்களுடைய நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்கத் தயங்குவதால் அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறது மலேசியா ஏர்லைன்ஸ். 

இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ளப்போவது என்ன? - தொழில்நுட்ப சவால்கள்? 

அதிநவீனம் என்று சொல்லப்படும் ராணுவத் தொழில்நுட்பங்கள், விமான தொழில்நுட்பங்கள், தொலைதொடர்பு தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகிய அத்தனையையும் தாண்டி 239 பேருடன், பிரம்மாண்டமான சைஸில் இருக்கும் போயிங் 777-200 விமானம் உலகின் கண்களில் இருந்து மறைந்துவிட்டது!. 

இந்த விமானத்தின் இருப்பிடம் பற்றி 10 நாட்களாகியும், ஒரு உருப்படியான தகவலும் கிடைக்காமல் இருப்பது நம் 'அதிநவீன' தொழில்நுட்பங்களுக்கு விடப்பட்ட ஒரு பெரும் சவால். 

1. எத்தனையோ விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்து, சோதித்து, இத்தனை நாடுகள் அதைப் பயன்படுத்தி 'சிறந்தது' என அங்கீகரிக்கப்பட்ட அத்தனை கண்காணிப்பு தொழில்நுட்பங்களையும் ஒரே சமயத்தில் ஒரு விமானியால் ஏமாற்றிவிட முடியுமா? 

2. மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ஒரு ரேடாரில்கூட இந்த விமானம் சிக்கவில்லை. மலாக்கா ஜலசந்தியிலேயே விமானம் விழவில்லை என்று அவர்கள்தான் சொல்கிறார்கள். 

3. காக்பிட் ரெக்கார்டர், பிளாக்பாக்ஸ் போன்ற சாதனங்கள் ஏதோ பெரிய பாதுகாப்பு அம்சம் போன்று ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவை விபத்து நடந்த பிறகு எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவே பயன்படுத்தப்படுகின்றன. ஏன், இந்த இரண்டு சாதனமும் லைவாக தாங்கள் ரெக்கார்ட் செய்பவற்றை பூமிக்கு அனுப்ப முடியாது? 

4. அத்தனை தொலைதொடர்பு சாதனங்களையும் ஒரு தனிமனிதனால் நிறுத்திவிட முடியுமானால், அதை ஏன் முதலில் நிறுத்தக்கூடியபடி ப்ரோக்ராம் செய்கிறார்கள்?

5. மொபைல் ஃபோன், பென் டிரைவ் மூலம் கூட ஒரு விமானத்தை ஹாக் செய்து கடத்த முடியும்படி, தொழில்நுட்பங்களை இன்னும் அப்டேட் செய்யாமல் இருப்பது யார் தவறு? இதுதான் உலகின் முதல் சைபர் ஹைஜாக்கா? 

6. மலேசியாவின் ப்ரைமரி மிலிட்டரி ரேடாரில் MH370 விமானம் வெறும் வெளிச்சமாகத்தான் தெரிந்திருக்கிறது. வழக்கத்துக்கும் மாறாக ஒரு புதிய பொருள் ஒன்று தன்னுடைய ரேடாரால் கவனிக்கப்படுவதை கண்டும்காணாமலேயே ஏன் மலேசிய ராணுவம் இருந்தது? 

7. ரேடார்களில் இருந்து தப்பிக்க மிகவும் தாழ்வாக விமானம் பறந்தது என்றால் விமானத்தின் எரிபொருள் விரைவாகத் தீர்ந்திருக்கவேண்டுமே? 

8. MH370 விமானத்தின் கேப்டன் ஜஹாரி அஹமத் ஷாஹ் தன்வீட்டில் இருந்த சிமுலேட்டரில்தான் விமானத்தைக் கடத்த பயிற்சி எடுத்தார் என்றால் அதை ஃபோட்டோவாக ஃபேஸ்புக்கில் போடுவாரா? 

9. 'Democracy is Dead' என்ற வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்திருந்தார். அதனால், அவர் இந்த அரசின் மீது உள்ள எதிர்ப்பைக் காட்டவே விமானத்தைக் கடத்தினார். விமானத்தைக் கடத்தினால் ஜனநாயகம் திரும்பக் கிடைத்துவிடுமா? 

10.  'Democracy is Dead' போன்ற வாசகங்கள் கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்தால் அவர் அரசுக்கு எதிரானவர் என்றால், அவரை விமானம் இயக்க அனுமதித்தது யார்? 

11. இந்தியாவில் 'Save Eelam' என்று ஒரு வாசகத்தைக் கொண்ட டிஷர்ட் வைத்திருக்கும் ஒரு விமானியை விமானம் இயக்க விடுவார்களா? 

12. விமானம் பறக்கும்போதே விமானி தற்கொலை செய்துகொண்டு மற்றவர்களையும் கொலை செய்துவிட்டார் என்று சொல்கிறது ஒரு தியரி. அப்படியானால் விமானத்தை தெற்கு சீனக் கடலிலேயே மூழ்கடித்திருக்கலாமே! அதைவிட்டுவிட்டு, தொலைத்தொடர்பு சாதனங்களை ஆஃப் செய்வது, ரேடாரில் இருந்து தப்பிக்க தாழ்வாகப் பறப்பது, முற்றிலும் வேறு வழியில் திரும்பிப் பறப்பது போன்று சுற்றிக்கொண்டா இருப்பார்? 

13. துணை விஞ்ஞானி இறுதியாக ஏர்-ட்ராஃபிக் கன்ட்ரோலரிடம் சொன்னதாக வார்த்தைகளாக 'ஆல் ரைட், குட் நைட்' அல்லது 'ஆல் ரைட், ரோஜர் தட்'  இந்த இரண்டில் எது என்று இன்னமும் அவர்கள் உறுதி செய்யவில்லை! 

14. எந்த ஒரு தொலைத் தொடர்பு சாதனமும் இயங்காமல் இருக்கும் நிலையில், ஒரு விமானத்தால் எந்த ரேடாரிலும் சிக்காமல் ஒரு நாட்டிற்குள் கண்காணிக்கப்படாமல் பறக்கமுடியும் என்றால், போர் சமயத்திலோ, உளவு பார்க்கும்போதோ எந்த ஒரு நாட்டின் விமானமும், எந்த ஒரு நாட்டின் எல்லைக்குள்ளும் பறக்கமுடியுமா? முடியும் என்றால் இந்த அத்தனை தொழில்நுட்பங்களும் வீணா? அல்லது அவற்றை ஹாக் செய்ய முடியும் அளவுக்கு வீக்கா? 

 - தொடரும்

-ர. ராஜா ராமமூர்த்தி

news.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.