Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும்

தத்தர்

பெருவல்லரசுகளும், வல்லரசுகளும் 21ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின்னான தமது எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்துள்ளன. சிங்கள அரசு ஈழத்தமிழினத்தை முற்றிலும் அடையாளம் அற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்குவதற்கான நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது.

தற்போது ஈழத்தமிழர்கள் தன்நிலையை விருப்பு வெறுப்பின்றி காய்தல் உவர்த்தல் இன்றி சரிவர மதிப்பிட்டு எதிரிகளின் பிடிகளிலும் அழிப்புக்களிலும் இருந்து எப்படி தப்பிப்பிழைத்து முன்னேறுவது என்பதற்கான ஒரு நீண்டகால பார்வை கொண்ட திட்டத்தை வகுத்தாக வேண்டும்.

ஈழத்தமிழர்கள் புவிப்பரப்பில் அறியப்பட்ட அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் இலட்சியங்களும் அறியப்படவில்லை. எதிரி ஈழத்தமிழரின் பிரச்சனைகளை பயங்கரவாத பிரச்சனையாக கீழ்மைப்படுத்தி இனஅழிப்புக்கான தனது ஒடுக்குமுறைக் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றான்.

ஈழத்தமிழரின் போராட்டமானது தேசிய இனஒடுக்குமுறைக்கு எதிரானதும் ஜனநாயகம், மனித நேயம், பண்பாட்டு வளர்ச்சி, சமூக மேம்பாடு, சமச்சீர் அபிவிருத்தி, சுதந்திரம் மற்றும் மனிதகுலம் சார்ந்த ஒட்டுமொத்த நீதிக்கான உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட போராட்டம் என்ற கருத்து நிலையை உலக அரங்கில் ஏற்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான முன்னுதாரணம் கொண்டதாய் வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த பூமியில் ஒரு மனிதனும் ஒரே ஒரு பெரும் தெருவும் இருக்குமானால் அந்த மனிதனால் எத்தகைய விதிமுறையும் இன்றி எப்படியும் பயணிக்கலாம். ஆனால் பெரும் சமுத்திரங்களையும் அடர்ந்த பெரும் காடுகளையும் உயர்ந்த பெரும் மலைகளையும், வறண்ட பல பாலைவனங்களையும் கொண்ட இந்த உலகில் பல்வேறு வகையான எண்ணற்ற ஜீவராசிகளின் மத்தியில் 2000 தேசிய பண்பாட்டு இனங்களையும் 183 அரசுகளையும் கொண்ட 650 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஆதலால் இந்த சிக்கல் மிக்க கூட்டுக்கலவையில் எந்த ஒரு மனிதனோ, அல்லது அரசோ அல்லது இனமோ தாம் நினைத்தவாறு நடந்துகொள்ள முடியாது. இதில் வலிமைமிக்க அரசுகளின் கை தூக்கலாக இருப்பினும் யாரும் அல்லது எந்தவொரு அரசும் தாம் நினைத்தபடி எழுமாத்திரமாக செயற்பட முடியாது. இதில் சிறிய அரசுகளின் அல்லது அளவால் சிறிய இனங்களின் அல்லது அரசற்ற இனங்களின் நிலை மேலும் பலவீனமானது.

விரும்பியோ விரும்பாமலோ ஈழத்தமிழர்கள் செழுமை பொருந்திய தேசிய இனமேயாயினும் அளவால் சிறிய அதேவேளை அரசற்ற ஓர் இனமாக மட்டுமின்றி அவர்களுக்கு குரல்கொடுக்க வல்லதாக வேறொரு தமிழின அரசுகூட இப்பூமியில் இல்லை. ஆதலால் அவர்கள் அதிகம் நிதானத்துடனும் முன்னறிவுடனும் நீண்டகாலப் பார்வையுடனும் மிக நுணுக்கமாக திட்டமிட்டு முதலில் தம்மை தக்க வைத்து பொருத்தமான வாய்ப்புக்களை பயன்படுத்தி தாவி முன்னேற வேண்டும்.

இப்போது எமக்கு தேவைப்படுவது நாம் பயங்கரவாதிகள் அல்ல. உரிமைக்கான நீதிக்கான ஜனநாயகத்தை அவாவி நிற்கின்ற மனிதகுலத்தையும், தர்மத்தையும் நேசிக்கின்ற உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட விடுதலை விரும்பிகள் என்பதை உலகின் கண்முன் படம்பிடித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எமது போராட்டம் கௌரவத்தை நிலைநாட்ட வேண்டிய அத்தியாவசியத்தில் உள்ளது. சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாக கருதப்படவும் வேண்டும் என்ற பழமொழி கவனத்திற்குரியது.

மனித குலம் அருவருக்கத்தகுந்த மிக மோசமான இனப்படுகொலையை புரிந்திருக்கும் சிங்கள பௌத்த அரசு தன்னை நியாப்படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டி செயற்படுவதை நாம் நோக்க வேண்டும்.

மேற்படி அதிக சிக்கல் நிறைந்த இந்த உலகத்தில் நாம் எமக்கான ஒரு நேர்கோட்டுப் பாதையை ஒருபோதும் வரைய முடியாது. குறுக்கும் நெடுக்கும், நெளிவும் வளைவும் சுழிவும் கொண்ட பல்முக சிக்கல்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய வகையிலான ஒரு பாதையை நாம் வடிவமைக்க அதிகம் பாடுபடவேண்டும். கூர்மதியும் நீண்டதூர பார்வையும் பரந்த மனமும், பல்வேறு தரத்தினரையும் எதிர்கொண்டு அரவணைத்து தக்கவழியில் முன்னேறுவதற்கு ஏற்ற மார்க்கத்தை இத்தகைய இடியப்ப சிக்கலான உலக அமைப்புக்குள்தான் நாம் தேடியாக வேண்டும். ஆதலால் அரசற்ற ஆனால் அளவால் சிறிய தேசிய இனமாகிய நாம் உலக அரங்கில் காணப்படுகின்ற எமக்கான வெளிகள் என்ன என்பதை அடையாளம் கண்டு அந்த வெளியில் எமக்கேற்ற பாத்திரத்தை வகிப்பதற்கு மட்டுமே வரலாற்றில் எமக்கு இடமுண்டு. அவ்வாறு அல்லாத எல்லாவகை நற்சிந்தனைகளும் கூட கற்பனையில் சஞ்சரித்து இறுதியில் இந்து சமுத்திரத்தில் ஜலசமாதி அடைந்திட நேரும்.

புவிசார் அரசியல் யதார்த்தத்தின் படி இந்தியாவுக்கு எதிரான வியூகத்தின் நிமித்தம் சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள அரசின் அச்சுநாடுகளாகும். அத்துடன் இராஜபக்சே அரசாங்கத்தின் அரசியல் கொள்கை அடிப்படையில் மேற்குல எதிர்ப்புத்தன்மை கொண்டதும் சீனசார்பு தன்மை கொண்டது என்ற வகையிலும் இந்த உறவில் இறுக்கம் மேலும் அதிகம் பலமானது. வரப்போகும் சில பத்தாண்டுகளுக்கு இராஜபக்சே வம்சத்தை இலங்கையில் வீழ்த்த முடியாத அளவுக்கு சிங்கள அரசின் தமிழின ஒடுக்குமுறை, இந்திய எதிர்ப்புநிலை என்பன வாய்ப்பான அம்சங்களாக காணப்படுகின்றன. சிங்கள அரசு இந்தியாவுடன் நல்லுறவு பேணுவதுபோல காட்சியளித்தாலும் அது தனது தேவைக்கான காலபோக நண்பனாக கையாள விரும்புகிறதே தவிர உள்ளடக்கத்தில் அது இந்திய எதிர்ப்பு தன்மை கொண்டதாகும்.

இப்பின்னணியில் இராஜபக்சே அரசாங்கம் புலிகளை வீழ்த்திய வெற்றி வீரனாக சிங்கள மக்களின் கண்களில் ஒரு புறம் காட்சியளிப்பதுடன் இந்தியாவை எதிர்கொள்ள சீன நட்பை கொண்ட தலைவர் என்கின்ற காட்சியையும் மறுபுறம் காட்டி தன் வம்சத்தை அரியணையில் சில பத்தாண்டுகள் தக்கவைக்கக்கூடிய அரசியல் வரலாற்று பின்புலத்தை கொண்டுள்ளார். இவ்வகையில் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கூட்டுடன் கூடவே மேலும் இந்தியாவுடன் கசப்புணர்வு கொண்ட பல ஆசிய நாடுகளையும் உலகரங்கில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளையும் தனக்கு அணியாக இராஜபக்சே கொண்டுள்ளார். இத்தகைய அணி உறவுதான் இங்கு முக்கியமே தவிர தர்மம் நீதி நியாயம் என்பன இவ்வரசுகளுககு இடையேயான உறவு இல்லை.

ஆதலால் சிங்கள அரசுக்கென பிராந்திய ரீதியிலும், பூகோள ரீதியிலும் நிரந்தரமான பலமான ஒரு அணி உண்டு. அதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அணியானது இராஜபக்சே அரசாங்கத்தை மாற்றி ஓர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என ஒரு தப்புக்கணக்கு போடுவதன் விளைவாக சிங்கள அரசுடன் ஒருவகை சமரச பாதைக்கான இடத்தையும் வைத்திருக்கிறது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் முன்னாள் இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியிலான பழிவாங்கும் அரசியல் நோக்கு நிலையிலிருந்து இராஜபக்சே அரசாங்கத்திற்கு ஒருவகையில் நன்றிக்கடன் உள்ளவர்களாக செயற்படுநிலையிலும் ஈழத்தமிழர்களுக்கான உலகரங்கம் இரண்டக நிலையைக் கொண்டுள்ளது. ஒருபுறம் இராஜபக்சே அரசாங்கத்திற்கு சீனா பாகிஸ்தான் மற்றும் ஆசிய நட்பு நாடுகள் உள்ளிட்ட அணியும் உலகரங்கில் அமெரிக்க எதிர்ப்பு அணியும் இராஜபக்சேவை இடமும் வலமுமாக பலப்படுத்துக்கின்றன. மறுபுறம் அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்தின் ஆட்சிமாற்ற நம்பிக்கையின் அடிப்படையிலான சமரசத்தின் நிமித்தமும் சிங்கள அரசுக்கு இந்திய அரசின் நன்றிக்கடன் அரசியல் நிமித்தமும் மற்றும் இந்திய அரசின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்புக்களின் தவறுகளின் நிமித்தமும் சிங்கள அரசுக்கு பாதுகாப்பான ஒரு வெளியுறவு சூழல் இருக்கின்றது.

அதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலம் மற்றும் இந்தியா என்பனவற்றில் காணப்படும் இரண்டக நிலையில் உள்ள ஒரு தளத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பான ஒரு வெளி இருக்கிறது. இந்த வெளியை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஒரு பலமான நுணுக்கம் மிக்க கூர்மையான தலைமைத்துவம் ஈழத்தமிழர்களிடம் இப்போது இல்லை.

கிரிமிய மக்கள் உக்ரைனியரின் ஆட்சியை விரும்பவில்லை என்கின்ற ஒரு ஒற்றைவரி நியாயத்தை கூறிக்கொண்டு ரஷ்யப்படை உக்ரையின் மீது படையெடுத்து கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு மாநிலமாக மார்ச் மாதம் 2014ல் இணைத்துக்கொண்டுவிட்டது. சைப்பரஸ் வாழ் துருக்கி இனத்தவரை பாதுகாப்பதற்கென துருக்கிய இராணும் 1974ஆம் ஆண்டு சைப்பரஸ் மீது படையெடுத்து துருக்கி சைப்பரஸ் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டு இற்றவரை 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிலைகொண்டுள்ளது. துருக்கி - சைப்ரஸ் இனத்தவர்களின் விருப்பத்தை சைப்பரஸ் மீதான படையெடுப்பின் மூலம் துருக்கிய அரசு நிறைவேற்றியுள்ளது. மேற்படி உக்ரைன் நாட்டில் வாழும் ரஷ்ய இன மக்களுக்காக படையெடுக்க ஒரு ரஷ்ய அரசு இருந்ததுபோல, சைப்பரஸில் வாழும் துருக்கிய இன மக்களுக்காக படையெடுக்க ஒரு துருக்கிய அரசு இருந்தது போல ஈழத்தமிழருக்கா இப்படி செயற்பட ஒரு தமிழரசு உலகில் இல்லை.

ஆனாலும் இந்திய அரசில் தமிழகம் ஏழரைக்கோடி மக்களைக் கொண்ட பலம்பொருந்திய பெரும் கடல்சார் மாநிலமாக இருப்பதினாலும் இந்திய அரசுக்கு நீண்டகாலப் பார்வையில் ஈழத்தமிழரின் புவியியல் பரப்பும் அதன் சார்ந்த கடலும் முக்கியம் என்பதினாலும் ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க முடியாத புவியியல் மற்றும் இனம்சார் பின்னணியை கொண்டுள்ளனர் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த அடிப்படையில் தமிழகத்தை முற்றிலும் நன்னிலையில் பேணிக்கொண்டு நீண்டகால அடிப்படையில் இந்திய அரசுடன் சதாகமான உறவை மேற்கொள்ள வேண்டும். ஈழத்தமிழரின் நிலப்பரப்பை ஒட்டிய கடல் பரப்பானது கேந்திர முக்கியத்துவமும் செழிப்பும் வளமும் கொண்ட கடலாக உள்ளது. சிங்கள பகுதி சார்ந்த கடலைவிடவும் தமிழீழ பகுதி சார்ந்த கடலே வளமும் முக்கியத்துவம் மிக்கதுமாகும். ஆதலால் இதற்கான கவர்ச்சி அதிகம் கவனத்திற்கு உரியது.

அரசியல் உறவுகள் மட்டுமல்ல. உறவுகள் என்றாலே பரஸ்பர நலம் சார்ந்தவை தான். அரசியலில் இத்தகைய உறவுகள் அதிகம் இரத்தமும் தசையுமாக பச்சையாக நலம் சார்ந்திருக்கும். ஆதலால் அமெரிக்கா என்றாலும் சரி இந்தியா என்றாலும் சரி எந்த ஒரு தேசம் என்றாலும் சரி அவைகள் தத்தம் நலன்களின் மீது நின்றுதான் அணுகும். ஆதலால் ஈழத்தமிழரின் நலன்களுக்கும் மேற்படி இவ்வரசுகளின் நலன்களுக்கும் இடையிலான ஒரு புள்ளியில்தான் நாம் எமக்கான உறவை தேடலாம். அவ்வாறு தேடுவதுதான் யதார்த்தம் அதைமீறி எதையாவது எதிர்ப்பார்த்தால் அது கற்பனையில் சஞ்சரித்து இறுதியில் இந்து சமுத்திர ஜலசமாதியில் முடிவடைந்துவிடும்.

இன்று உலக அரசுகளுக்கிடையே சித்தாந்த உறவு என்ற ஒன்று இல்லை. பச்சையான அப்பட்டமான நலன் சார்ந்த உறவுகளே உள்ளன. இவ்வகையில் இருபக்கம் கொண்ட பரஸ்பர நலன்களுக்கிடையேயான ஒரு புள்ளி சந்திக்கும் இடமே வெளியுறவாகும்.

ஈழத்தமிழர் பிரச்சனையை முதலில் முற்றிலும் அறிவுபூர்வமாக எடைபோட வேண்டும். ஈழத்தமிழர் பிரச்சனையானது புவிசார் அரசியல் பிரச்சனையின் அடிப்படையில் எழுந்த ஒரு தேசிய இன அழிப்பு சம்பந்தமான பிரச்சனையாகும். ஆதலால் அந்த புவிசார் அரசியல் பிரச்சனை சார்ந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதன் மூலமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கும் தீர்வுகாண முடியும். அதாவது ஈழத்தமிழர் பிரச்சனை என்பது வெறுமனே சிங்களவர் தமிழர் சார்ந்த ஒரு இனப்பிரச்சனை அல்ல. அது இந்தியா, சிங்கள அரசு இவற்றுடன் தொடர்புறும் பெருவல்லரசுகள் சார்ந்த ஒரு பூவிசார் பிராந்திய பூகோள பிரச்சனையாகும்.

இரண்டு யானைகள் அடிப்பட்டாலும் புல்லுக்குத்தான் சேதம். அவை புணர்ந்தாலும் புல்லுக்குத்தான் சேதம் என்ற வகையில் அரசற்ற ஈழத்தமிழர்களை பிராந்திய அரசு மற்றும் பூகோள வல்லரசுகளுக்கிடையேயான பகைமையும், புணர்ச்சியும் எப்போதும் பாதிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனை சரிவர புரிந்து தனக்கான வெளியை இதில் கண்டறிந்து தனக்கான ஆடுகளத்தை அமைத்து அதில் ஈழத்தமிழர்கள் தம் பாத்திரத்தை வகிப்பதன் மூலமே ஈழத்தமிழர்கள் தமக்கான விடுதலையை சாதிக்க முடியும்.

சிங்கள அரசின் இனப்படுகொலை இப்போது உலகரங்கில் விஸ்வரூபமெடுத்து பரவியுள்ளது. அது ஓர் அரசியல் தீர்மானமாக மாறவில்லையே தவிர தகவலாக அது ஸ்தாபிதமாகி உள்ளது. இதனை ஓர் அரசியல் தீர்மானமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் அதிகமுண்டு.

இங்கு இனப்படுகொலையானது உலகரங்கில் கருத்து ரீதியிலான ஸ்தாபிதம் அடைவதை காணும் சிங்கள அரசு ஈழத்தமிழர்களை வன்முறையாளர்கள் என்று காட்டுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது. அதன் மூலம் இந்த கருத்துத் தளத்தை தகர்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்க விரும்புகிறது.

ஆயுதம் தாங்கிய அரசியலில் ஈழத்தமிழர்கள் ஈடுபட முனைகிறார்கள் என்று கூறும் சிங்கள அரசு அவ்வாறான ஓர் ஆயுதம் தாங்கும் அரசியலை வளர்க்கவோ ஊக்குவிக்கவோ விரும்புகிறது. தன்னை அரசியல் ரீதியாக உள்நாட்டில் பலப்படுத்தவும் கருத்து ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்தவும் இப்படிப்பட்ட ஆயுதப் பிரயோக அரசியல் நிலையை அது விரும்புகிறது.

ஈழத்தமிழர்கள் இப்போது தமது மொத்த சனத்தொகையில் 24 வீதத்தினரே வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர் என்றும் மீதி தொகையினர் மேற்குலகிலும், இந்தியாவிலும் மற்றும் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் வாழ்கின்றனர் என்று சிங்கள அரசின் வெளியுறவு அமைச்சர் ஒரு கணக்குச் சொல்லியுள்ளார்.

தமிழ்மண்ணை விட்டு தமிழர்கள் தொடர்ந்து வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அவர் கூறும் கணக்கு அப்படியே உண்மையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க தமிழ் மக்களின் சனத்தொகையில் சுமாராக அரைப்பங்கினர் தமிழ்மண்ணுக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டதுடன் தமிழ் மக்களின் அந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்கள் விரைவான வளர்ச்சியை பெற்றுள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இயல்பு நிலையை குழப்பி இராணுவ கெடுபிடியை வைத்திருப்பதன் மூலம் தமிழ்மண்ணை விட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களை தொடர்ந்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தை சிங்கள ஆட்சியாளர்கள் மிக நுணுக்கமாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்மண்ணில் இயல்பு நிலையை வைத்திருக்கக்கூடாது என்பது அவர்களின் தலையாய திட்டம். இந்த இயல்பு நிலையை பேணுவது மூலம் தமிழர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டை நோக்கியும் குடிபெயரச்செய்வதன் மூலம் தமிழீழ மண்ணுக்கான இனத்தனித்துவத்தை அழிக்க முற்படுகின்றார்கள். இது அவர்களின் ஒரு நீண்டகாலத் திட்டம். இதனை எதிர்கொள்ளக் கூடிய வகையிலும் இதற்கு வாய்ப்பளிக்காத வகையிலும் நாம் செயற்படவேண்டும்.

தொடரும்

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=98e460af-165e-4a69-940d-ef6dea053045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.