Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோப்பை தான் பிரச்சினை: ஜயம்பதி விக்ரமரட்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4444444444444444444444444444.jpg

கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். ஷஷஅதுதான்  பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை|| என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை என்று கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

ஷதேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே| எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மகாராணி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழர்களின் பிரசித்த தலை வருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 37 ஆவது நினைவு நாளையிட்டு இந்த நினைவுப் பேருரையை ஆற்றுவதற்காக என்னை அழைத்த எஸ்.ஜே.வி. நினைவுச் சபையினருக்கு எனது நன்றிகள்.

 தோழர் பேனாட் சொய்ஸாவிற்குப் பின்னர் - சென்ற  மாதம்தான் அவரது பிறந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது - செல்வநாயகம் நினைவுப் பேரு ரையை ஆற்ற அழைக்கப்பட்ட இரண்டாவது சிங்களவர் நான்தான் எனத் தெரிந்து கொண்டேன். தோழர் பேனாட்டைப் பின்பற்றுவதில் மகிழ்ச்சியடை யும் அதேவேளை, அந்த உண்மை இரு இனங்களுக்கு இடையிலான பிரிவினையைச் சுட்டிக்காட்டி நிற்பதையிட்டு வருந்துகிறேன். அந்தப் பிரி வினையை நாம் இல்லாதாக்கி இணைந்து கொள்ள வேண்டும்.

இனவாத - அரசியல் முரண்பாடுகளின்  ஆழ் தளத்தில்  அரச அதிகாரம் 

இனம், மொழி அல்லது மதம் ஆகியவற்றால் வேறுபட்டு வரையறுக் கப்பட்ட பல சமூகங்கள் ஒரு நாட்டில் வாழும்போது அப் பல்வேறு சமூ கங்களின் உரிமைகள், அரசின் நிறுவனங்களில் அவர்தம் பிரதிநிதித்துவம் மற்றும் அரச அதிகாரத்தில் அவர்களின் பங்கு என்பவை குறித்து பல நிலையிலான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

சிறுபான்மை சமூகங்கள் பரந்து வாழும் நாடுகளில் தேவைப்படுவது சமவுரிமை என்பதேயாகும். அப்படியான சமூகங்கள் தமது காத்திரங்களுக்கு  அமைவாக சட்டவாக்கத்திலும் நிறைவேற்று அதிகாரத்திலும் உரிய பிரதிநிதித் துவத்தைக் கேட்டு நிற்கின்றன. அத்துடன் சமவுரிமைக்கான அரசமைப்பு உத்தரவாதங்களையும் பாரபட்சமற்ற நிலைப்பாட்டையும் வற்புறுத்துகின்றன. வேலைவாய்ப்பில் தமக்குரித்தான பங்கினை எதிர்பார்க்கின்றன. பொருளாதார வாய்ப்புக்கள், கல்வி, பல்கலைக்கழக அனுமதி ஆகியவற்றில் வாய்ப்பின்மை போன்ற விடயங்களும் தோன்றி விடுகின்றன. அவர் தம்  கலாசாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் உரிமை, அரசாங்கத்துடன் தொடர்பாடலில் ஈடுபடும் போது தமது மொழியை உபயோகிக்கும் உரிமை என்ற தேவையும் காணப் படும். தாமும் 'மக்கள்' அல்லது தமக்குரியது 'தம் நாடு| எனக் குறிப்பிட்டு, ஆகவே தாம் ஷசிறுபான்மையினர்| என விளிக்கப்படுவது குறித்து சில சிறிய சமூகங்கள் சினங்கொள்கின்றன. சில மொழிகளில் ஷசிறுபான்மை| என்ற சொல் சிறுமைப்படுத்தும் அர்த்தத்தைக் குறித்து நிற்கின்றது.

இப்படியான ஒரு சமூகம் புவியியல் ரீதியில் ஓரிடத்தில் செறிந்து வாழ்கையில் இப்பிரச்சினையானது முற்றிலும் வேறுபட்ட தன்மையை எடுத்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட சமூகங்கள் சமவுரிமைக்கான உத்தர வாதத்துடன் மட்டும் திருப்திப்பட்டு விடாமல் உள்ளூர் மட்டத்தில் தமது விடயங்களைத் தாமே தீர்த்துக் கொள்ளும் உரிமையையும் எதிர்பார்க்கின்றன. ஒன்றாகச் சேர்ந்து வாழ்கையில், அதில் ஒரு சமூகம் தனது கலாசாரத்தை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தி அடையாளப்படுத்தி காண்பிக்க விரும்புகிறது. அந்த வகையில் சுயாட்சி முறையாக அரச அதிகாரத்தில் ஒரு பங்கினை வற்புறுத்துகிறது. 'சேர்ந்து இருத்தல்' என்ற விடயம்தான் இந்தக் கோரிக்கையின் நடத்தையை மாற்றுகிறது. ஒரு புலத்தில் செறிந்து வாழும் இனம் ஒன்று காணப்படுகின்ற இடங்களில் எல்லாம் பிராந்திய தன்னாட்சிக்கான வற்புறுத்தல் எழுந்து கொள்கிறது. 

அந்தக் கோரிக்கை எப்போதும் குறைகளுடன் தொடர்புபட்டதல்ல. சொல்லப்போனால் இழப்புக்களின் துயரங்கள் காணப்படுகின்றனவா அல்லது இல்லையா என்பது முக்கியமற்றதாகக் காணப்படுகிறது. கலாசாரத் தனித்துவம் என்பதிலிருந்தே கோரிக்கை பிறக்கின்றது. எனினும், குறைகள் காணப்படுமிடத்து, கோரிக்கை மேலும் வலுப்படுத்தப்படுகின்றது.

பல பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளத் தவறுகின்ற குழுத் தாக்கம்  என்பதனை நிக்கோல் டொப்பாவின் விளக்குகிறார்  மிகப் பெரும்பான்மை யான நேரங்களில், சிறுபான்மைக் குழுக்கள் அரசு சம்பந்தப்பட்ட பகுதிக ளில் சிறுப்பான்மை என அடையாளம் காணப்படாமல்  சமமாக இனங்காணப் படுவதையே விரும்புகின்றன.... வேறு விதமாகக் கூறின் சமவுரிமைகளை அவர்கள் கேட்டு நிற்பதில்லை, மாறாக குழுக்களாகச் சமமாக இருக்கும் உரிமையை வற்புறுகின்றன.

பல் கலாசாரச் சமுதாயங்கள் எதிர்கொள்ளும் சவாலானது எப்படிப் பல்வேறு குழுக்களின் விருப்புகளையும் கோரிக்கைளையும் சேர்த்துப் பரிபாலிப்பது என்பதாகும். சனத்தொகையில் குறைவாக உள்ள சிறிய சமூ கங்கள் பரந்து வாழ்கின்றனவா அன்றிச் செறிந்து ஓரிடத்தில் உள்ளனவா என்பதற்கு அப்பால், இன ரீதியிலான அரசியல் முரண்பாடு என்பது அரச அதிகாரம் பற்றியதாகவே இருக்கின்றது என்பதில்தான் கூடுதல் அழுத்தம் அளிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதைத்தான் பெரும்பாலான பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர் அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இந்த முரண்பாடுகள் எல்லாம் அரச அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதனால் மட்டுமே தீர்த்துக் கொள்ளப்படக்கூடியவை. கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். 
அதுதான்  பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை.

சேர்த்துக்கொள்ள மறுப்பது தொடர்பில் பின்பற்றக்கூடாத ஓர் உதாரணம் இருக்குமாயின் அது சேர்பிய பெரும்பான்மைவாதம்தான். தயான் ஜயதிலக கூறுகிறார்:  பல்லின, பல்சமய யூகோஸ்லாவியாவை ஆதிக்கம் செலுத்த முனைந்து சேர்பியர்கள் தமது நாட்டில் சேர்பியா அற்ற பாகங்களை இழந்து (அவர்களுடைய புனித தலங்கள் காணப்பட்ட கொசோவோ உட்பட) அவர்களுடைய வரலாற்றுப் பெரும்பான்மையுடைய பாகத்துக்குள் முடக்கப்பட்டார்கள்  இலங்கையின் கூர்ந்த புத்திஜீவிகளில் ஒருவரான ஹெக்டர் அபயவர்த்தன, தெற்காசியாவின் சேர்பியர்கள் சிங்களவரே எனக் கூறிய எச்சரிக்கைக் குறிப்பை தயான் இங்கு நினைவு கூருகிறார்.

பெரும்பாலான தருணங்களில் ஆகக் குறைந்தது ஆரம்ப நிலைகளில் மட்டும் என்றாலும் அரச அதிகாரத்தைப் பகிர பெரும்பான்மைச் சமூகங்கள் மறுத்துவிடுகின்றன. இப்பெரும்பான்மை வாதம் ஏறத்தாழ உலகளாவியது. நட்பிணக்கமான பெரும்பான்மை இனங்கள் இல்லை; அதேபோன்று நட்பிணக் கமான சர்வாதிகாரிகளும் இல்லை. அரச அதிகாரத்தைப் பகிர்வதை மறுத்த லினால் சுயாட்சிக்கான கோரிக்கை வரை பிரச்சினை உயர்ந்துபோய் விடுகிறது. சில சமயங்களில் அது பிரிவினைக் கோரிக்கை வரை கொண்டுபோய் விடும். இலங்கை அதற்கு ஓர் உதாரணம். 

அரசியல் இடமளித்தலும் அரச அதிகாரத்தைப் பகிர்வதுமே நாடு பிளவுறாமல் தடுப்பதற்கான ஒரே மார்க்கம் என்பதை பெரும்பான்மைகள் சில நேரத்து டனும், எஞ்சியவை காலம் பிந்தியும் உணர்ந்துகொள்கின்றன. ஒற்றை யாட்சியைக் கொண்டிருந்த ஸ்பெயின், பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் எல்லாம் மீள்கட்டமைப்பு மாற்றத்துக்கு உட்பட்டன. ஐக்கிய இராச்சியத்தில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. என்றாலும் ஒற்றையாட்சி நடைமுறை உள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பார்னோஸ் ஹேல் கூறினார்: ஷஅதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட சபை தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்துக்குள் நின்று செயற்படும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபையாக மதிக்கப்பட வேண்டும், சாதரண பொது நிறுவனம் மாதிரியல்ல என்பதுதான் முக்கியமானது. சமஷ்டி மத்திக்கும் அதன் கீழ் அடங்கியுள்ள பகுதிகளுக்குமான உறவை சீர்படுத்தும் அரசமைப்பைக் கொண்டிருப்பதால் ஒரு வகையில் ஐக்கிய இராச்சியம் சமஷ்டி நாடாகியுள்ளது.

இதனால் ஸ்பெயின், பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தமது இனரீதியான அரசியல் பிரச்சினைகளை பூரணமாகத் தீர்த்துள்ளன எனக் கூறுவதற்கில்லை. புதிது புதிதாகப் பிரச்சினைகள் தோன்றத்தான் செய்கின்றன, அவற்றைச் சமாளிக்கத்தான் வேண்டும். கற்றலோனியா, பிளாண்டாஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் பிரிவினைவாதக் கோரிக்கைகள்  இன்றுமுள்ளன. ஷஅவை அரசற்ற தேசங்களுக்கு நல்ல உதாரணங்களாகக் காணப்படுகின்றன. தனித்துவமான வரலாற்று, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் அடையாளங்களுடன் கூடிய, நன்கு வரையறுக்கப்பட்ட பிராந்தியங்கள் அவை. அத்துடன் பாரிய அரசுகளுக்குள் நீண்ட காலப் போக்கிலே சட்டப்படி இணைக்கப்பட்டிருந்த போதிலும் கூடத் தமக்கென்ற தனித்துவ அடையாளத்தைப் பேணியுள்ளார்கள்.

இவற்றில் ஏதாவது ஒன்றில் துண்டுபடுதல் வெற்றிகரமாகுமாயின் அது அதிகாரப் பகிர்வு அல்லது சமஷ்டி முறையினால் அல்ல, அவை இல்லா மையினால்தான். ஸ்பெயினில் இடம்பெறும் நிகழ்வுகள், அதிகாரப்பகிர்வு பற்றிய ஏற்பாடுகள் குறித்து மீளக் கலந்துரையாட வேண்டிய  அவசியத்தை உணர்த்துகின்றன. பெல்ஜியத்தில் பிரிவினைக் கோரிக்கை அனுகூலமான தரப்பினரான டச்சு மொழி பேசுவோரிடமிருந்து வருகின்றது. வரலாற்றுக் காரணங்களும் சில சமயங்களில் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருந்தாலும் கூட எதியோப்பியாவுடன் எரித்திரியாவை சேர்த்து வைக்க வசீகரித்து விட முடியாது.

இலங்கை : அரச அதிகாரம் பற்றிய படிப்பினை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் தமிழர்களின் கோரிக்கை யானது. தேசிய மட்டத்தில் அதிகாரப் பகிர்வு என்பதாக இருந்தது. அப்போது நாடு (சிலோன்) பிரித்தானிய கொலனியாக இருந்தது. முன்னரே தீர்மானிக் கப்பட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் சட்ட சபையில் தங்களின் பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறைமையை தமிழர்கள் முன்வைத் தனர். 1910 ஆம் ஆண்டு யாழ்ப்பாணச் சங்கமானது பரிந்துரைக்கப்பட்ட சட்ட சபையில் சிங்களவர் - தமிழர்களிடையில் 2:1 விகிதாசாரம் பேணப் படும் விதத்தில் நியமனம் இடம்பெற வேண்டும் எனக் கோரியது. 1921 இல் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் மகாஜன சபை 3:2 என்ற விகிதா சாரத்தைக் கோரியது.

அரைவாசி பிரதிநிதித்துவம் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் எஞ்சிய அரைவாசிப் பிரதிநிதித்துவம் ஏனைய சமூகங்களுக்கும் என்ற - 'ஐம்பதுக்கு ஐம்பது' எனும் கோரிக்கை - 1930 களில் எழுந்தது.  எனினும், இது ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் அடிப்படைக்கு மாறானது.
இலங்கையில் சமஷ்டி அரசமைப்புக்கான கோரிக்கையை முதன் முத லில் முன்வைத்தவர்கள் தமிழர்கள் அல்லர். பின்நாட்களில் சிங்கள சார்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்துப் பிரதமராக வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கதான் அதை முதலில் பிரேரித்தார். 'சிலோன் மோர்னிங் லீடர்' பத்திரிகையில் ஆறு கட்டுரைகளை எழுதியும், யாழ்ப்பாணத்தில் பொது உரையில் அது பற்றிக் குறிப்பிட்டும் அவ்விட யத்தை அவர் முன்வைத்தார். இவை எல்லாம் 1926 இல் நடந்தது. டொன மூர் ஆணைக்குழு நாட்டுக்கு விஜயம் செய்தபோது கண்டியச் சிங்கள வர்கள்தான் தாங்கள் தனித் தேசத்தவர்கள் என்று குறிப்பிட்டு சமஷ்டி ஏற்பாட்டை முன்வைத்தார்கள்.

டொனமூர் அரசமைப்பின் கீழ் சமூகப் பிரதிநிதித்துவ முறை இல்லாது ஒழிக்கப்பட்டது. 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. பிரத்தியேக நிறைவேற்றுக் குழுக்களினால் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஏழு இலங்கையரான அமைச்சர்களையும், மூன்று அதிகாரிகளையும் கொண்டதாக அமைச்சரவை அமைந்தது. 1931 இல் அரச அவைக்கு நடந்த தேர்தலில் தெரிவான அமைச்சரவையில் ஒரு முஸ்லிமும், ஓர் இந்தியத் தமிழரும் இடம்பெற்றனர். வடக்குத் தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தனர். தமிழர்கள் பங்குபற்றிய 1936 தேர்தலின் பின்னரான அரசவையில் இடம்பெற்றிருந்த சிங்களப் பெரும்பான்மையினர். (இடதுசாரிப் போக்குடைய சமசமாஜக் கட்சியின் என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தனா போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து) நிறைவேற்றுக் குழுக்களின் தலைவர்கள் அனைவரும் சிங்களவர்களாக வருவதை உறுதிப்படுத்தும் விதத்தில் அதற்கான தேர்தலை தந்திரமாக்கிக் கொண்டனர். நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரச அதிகாரத்தை யார் தக்கவைத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பதைத் தமிழர்கள் தெரிந்துகொண்ட முதல் படிப்பினையாக இது பெரும்பாலும் அமைந்தது. இந்த அனுபவம், பிரதிநிதித்துவ உத்தரவாதத்தைக் கோரும் திசையை நோக்கித் தமிழர்களைத் உந்தியது.

தனியான அரசு ஒன்றை உருவாக்கும் உரிமை உட்பட்ட சுயநிர்ணய உரிமையுடன் தனியான தேசத்தவர்களாகத் தமிழர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முதன் முதலில் முன் வைத்தது ஒரு தமிழ்க் கட்சியல்ல. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான். தானும் ஓர் அங்கமாக இருந்த இலங்கை தேசிய காங்கிரஸிடம் தனது கட்சியின் சார்பில் 1944 இல் தான் சமர்ப்பித்த மகஜரில் 'சமஷ்டி அரசமைப்பு' குறித்து அது பிரஸ்தாபித்திருந்தது. எனினும் உத்தேச சமஷ்டிக் கட்டமைப்புப் பற்றிய விவரம் எதுவும் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.

அரசமைப்பு சீர்திருத்தம் பற்றி ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அரசினால் நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு 1944 இல் இலங்கைக்கு வந்த போது, அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்ட ஒரு கட்டமைவையோ, அல்லது ஒரு சமஷ்டி அமைப்பையோ நாடு கொண்டிருக்க வேண்டும் என்ற எந்தத் தீர்க்கமான முன்மொழிவும் எந்த அமைப்பினாலும் முன்வைக்கப்படவில்லை. ஆணைக்குழுவும் சுயாட்சி பற்றியோ அல்லது எஞ்சியோரின் பிரதி நிதித்துவம் பற்றிய ஒரு முறைமை குறித்தோ எந்தப் பரிந்துரையையும் செய்யவில்லை.

1947 இல் சுதந்திரத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர், அப்போது பிரிட்டிஷாரால் வழங்கப்பட்டிருந்த சோல்பரி அரசமைப்புக்குக் கீழ், நடத்தப் பட்ட தேர்தலின் பின்னர், அச்சமயம் இருந்த தமிழர்களின் ஒரேயொரு கட்சியான தமிழ்க் காங்கிரஸ், பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டரசு ஒன்றில் இணைந்தது.

ஆனால் 1947 தேர்தலில் வாக்களித்த பல நூறாயிரம் இந்தியத் தமிழர் களின் வாக்குரிமை, அவர்களை பிரிட்டிஷ் விவகாரமாகக் கணித்துப் பறிக்கப் பட்ட போது தங்களின் இந்திய தமிழ் உறவுகளின் வாக்குரிமை பறிக்கப் படுவதைத் தடுக்க முடியாதவர்களானார்கள் அரசில் இருந்த தமிழ்த் தலை வர்கள். இந்தக் கட்டத்தில்தான் எஸ்ஜே.வி.செல்வநாயகம், பிரிந்து தனித்துச் சென்று சமஷ்டிக் கட்சியைத் தோற்றுவித்தார். அவராவது படிப்பினையைச் சரியாகப் புரிந்துகொண்டார். சிங்களவர்களோ அரச அதிகாரத்தில் செல் வாக்குச் செலுத்த, மறுபுறத்தில் கொழும்புடன் தாங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று நினைத்திருந்த தமிழர்களுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. ஆகவே, பிரிந்து சென்றவர்களுக்கு பிராந்திய சுயாட்சியே ஒரே இரட்சிப்பு மார்க்கமாக இருந்தது.

1949 டிசெம்பர் 18 ஆம் திகதி சமஷ்டிக் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்ட உரையில் செல்வநாயகம் பின்வருமாறு கூறினார்.
இதுதான் நாங்கள் கேட்கும் தீர்வு: தமிழ் பேசும் சுயாட்சி மாகாண அலகையும் சிங்கள சுயாட்சி மாகாண அலகையும் உள்ளடக்கி இரண்டுக் கும் பொதுவான மத்திய அரசுக்கு வழிசெய்யும் சமஷ்டி யாப்பு ஒன்றை இலங்கைக்குக் கொண்டு வரவேண்டும். சிறிய தமிழ் பேசும் தேசம் அழிந்து அல்லது பெரிய தேசத்தால் சிதைக்கப்பட்டுப் போவதைத் தவிர்ப்பதற்கான ஆகக் குறைந்த ஏற்படாக இதுவே அமைய முடியும். (..........) சமஷ்டி அரசமைப்புதான் அடைவதற்குச் சிறந்த, தகுதியான ஏற்பாடு. அதனால் எவருக்கும் - குறிப்பாக சிங்களவர்களுக்கும் கூட - அநீதி இழைக்கப்படமாட்டாது. ஒரு மனிதனின் ஆளுமையின் பூரண விருத்திக்கு அவன் தான் வாழும் நாடு தன்னுடையது என்றும், நாட்டின் அரசு தனதே என்றும் உணர்ந்து கொள்வது அவசியம். இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த உணர்வு இன்று இல்லை. தங்களின் பிர தேசத்தை தாங்களே ஆளும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டு அந்த அரசாங்கம் தமக்குச் சொந்தமானது என அவர்கள் முழுமையாக உணர வேண்டும். முஸ்லிம்கள் தாம் வாழும் பகுதிகள் தமிழ் பேசும் மாகாணத் துடனா அல்லது சிங்களம் பேசும் மாகாணத்துடனா இணைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு பூரண சுதந்திரம் அளிக் கப்படவேண்டும்.

1952 இல் தொடர்ந்த தேர்தல்களில் இரண்டு ஆசனங்களில் மட்டுமே சமஷ்டிக் கட்சியினால் வெற்றி பெறமுடிந்தது. செல்வநாயகம் தாமே காங்கேசன்துறையில் தோல்வியடைந்தார். தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளரிடம் அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரிடம். நாற்பதுகளில் கிடைத்த அனுபவங்கள் இருந்த போதிலும் வடக்கு, கிழக்கிலிருந்த தமிழர்கள் தீர்க்கமான முறையில் சமஷ்டி முறையை நிராகரித்து, கொழும்புக்கு மீண்டும் சென்று ஐ.தே.கட்சியுடன் அதிகாரத்தைப் பகிர்வதற்கான ஆணையை தமிழ்க் காங்கிரஸூக்கு வழங்கினர்.

1955 எல்லாவற்றையும் மாற்றியமைத்துவிட்டது. தெற்கின் இரு பிரதான கட்சிகளான ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி என்பன ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக வேண்டும் என் றன. மற்றொரு பொதுத் தேர்தல் அண்மித்த வேளையில் இரு கட்சிகளும் ஷதனிச் சிங்களம்| எனத் தமது நிலையை மாற்றிக் கொண்டன. இது சமஷ்டிக் கட்சிக்கான ஆதரவை மேம்படுத்தியதுடன் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணியுடன் இலங்கை சுதந்திரக் கட்சி தெற்கில் அமோக வெற்றி பெற, சமஷ்டிக் கட்சி வடக்கு, கிழக்கில் அமோக வெற்றி பெற்றது. அம்முறை தமிழ்க் காங்கிரஸ் இரண்டு இடங்கள் மட்டுமே பெற்று அவமானப்பட நேரிட்டது. இத் தோல்வியிலிருந்து அது மீளவேயில்லை.

1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்டது. தமிழர்களும் இடதுசாரிகளும் அதனை எதிர்த்து நிற்க, எல்.எஸ்.எஸ். பியின் டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா  தீர்க்கதரிசனமாக ஷஷஇருமொழிகள் - ஒரு தேசம்; ஒரு மொழி - இரு தேசங்கள்|| என முழங்கினார். அந்த எச்சரிக்கை செவி மடுக்கப்படவில்லை. பெரும்பான்மையினர் மீண்டும் அரச அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைக்காட்டினார்கள். முரண்பாடு முடுக்கிவிடப்பட்டது.

பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான ஒரேவழி சேர்த்து அணைத் துக் கொள்வதுதான் என்பதை பிரதமர் பண்டாரநாயக்கா விரைவில் உணர்ந்து கொள்ள, தற்போதைய அரசமைப்பின் கீழ் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை விடக் குறைந்த அதிகாரங்களுடன் வடக்கு, கிழக்கில் பிராந்திய கவுன்ஸில்களை அமைக்கும் ஓர் உடன்பாட்டை 1957 ஜூலையில் செல்வநாயக்துடன் அவர் செய்துகொண்டார். வடமாகாணம் ஒரு பிராந்தி யத்தை உருவாக்கும் அதேசமயம் கிழக்கு மாகாணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியமாக வகுக்கப்படவும், இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்கள் மாகாண எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட வாய்ப்பளிக்கவுமான ஏற்பாட்டையும் அது கொண்டிருந்தது.  சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றம் தனது அதிகாரத்தை அந்தப் பிராந்தியங்களுக்கு ஒப்படைக்கவும் வழிசெய்யப்பட்டது. ஆனால் பொலிஸ் அதிகாரம் அதில் அடங்கவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் பிரபலமடைந்து, பலரும் அறிந்து கொண்ட போது கடும் போக்கு பௌத்த பிக்குகளும்,  ஐ.தே.கவும் மிக மூர்க்கமாக அதனை எதிர்த்து, பிரதமரை அதைக் கிழித்தெறிவதற்கு நெருக்குவாரப் படுத்தினர். நிலைமை மோசமடைந்து உச்சக்கட்டமாக ஷ1958 இனக் கல வரம்| வெடித்தது. இரண்டு சமூகங்களும் மேலும் தூர விலகிச் சென்றன.

1965 ஆம் ஆண்டுத் தேர்தலை அடுத்து, தமிழ்க் கட்சிகளுடன் அதி காரத்தைப் பகிரும் நிலைக்கு ஐ.தே.க.தள்ளப்பட்டது. பிரதமரான டட்லி சேனநாயக்கா செல்வநாயகத்தோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார் (டட்லி - செல்வா ஒப்பந்தம்). மாவட்ட சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்வதிலும் தமிழ் மொழிப் பிரயோகத்தில் சில விட்டுக் கொடுப்புக்களை வழங்கவும் சேனநாயக்கா முன்வந்தார். குடியேற்றம் தொடர்பான விடயத்தில், வடக்கு, கிழக்கில் இனி மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களில் இரண்டு மாகாணங்களிலும் உள்ள நிலமற்ற வர்களுக்கு முன்னுரிமையும், அதைத் தொடர்ந்து இரண்டு மாகாணங் களிலும் உள்ள தமிழர்களுக்கும், அதன்பின் ஏனைய மாகாணத்தவர் களுக்கும் என தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஏற்பாட்டுக்கு அவர் இணங்கினார். 1968 இல் மாவட்ட சபைகளுக்கான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன் பங்குக்கு அதனை எதிர்க்க, அக்கட்சியின் கூட்டணிப் பங்காளிகளான இடதுசாரிகளும் அதனுடன் இணைந்து கொண்டனர். எதிர்ப்புக் காரணமாக அறிக்கை வாபஸ் பெறப்பட, சமஷ்டிக் கட்சியும் விரைவில் அரசிலிருந்து வெளியேறியது.

இந்தப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், பண்டா - செல்வா மற்றும் டட்லி - செல்வா ஒப்பந்தங்களின் தோல்வியின் பின்னரும் கூட, தனிநாடு பற்றிய தீர்க்கமான பேச்சு ஏதும் எழவேயில்லை. உண்iமையில் கடைசியில் 1970 இல், சமஷ்டிக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாட்டைக் கூறுபோட விரும்பும் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்கும்படி தமிழ் மக்களைக் கோரியது. இது, முதலாவது பிரிவினை வாதக் கட்சியான - ஸி.சுந்தரலிங்கத்தின் தலைமையில் - ஷஈழத் தமிழர் ஒன்றுமை முன்னணி|க்கு எதிரான கருத்தே என்பது தெளிவானது.

பெரும்பான்மையின் அரசியலமைப்பு உருவாக்கம்

1972 இல் ஒரு பொன்னான வாய்ப்பு தவறவிடப்பட்டது. தமிழர்களின் பிரதிநிதிகள் உட்பட நாடாளுமன்றத்தின் முழு உறுப்பினர்களும் சேர்ந்து அரசமைப்பு அவை ஊடாக எமக்கான சொந்த அரசமைப்பை உருவாக்கி னோம்.  தமிழரசுக் கட்சியின் வி.தர்மலிங்கம், ஏலவே இருக்கும் அரசமைப்பை விடுத்து இன்னொன்றை நாடவேண்டிய தேவை என்ன எனக் கேள்வி எழுப்பிய அதேவேளை பின்வருமாறு குறிப்பிட்டார்:  ஷஷஇங்கு நாம் தோல்வி யடைந்தவர்களாக அல்லாமல் 1956 ஆம் ஆண்டிலிருந்து தேர்தல்களில் நிலையாக வெற்றியீட்டிய மக்களின் பிரதிநிதிகளாக உங்களோடு சேர்ந்து பொது முயற்சியாக இப்புதிய அரசமைப்பின் உருவாக்கத்தில் ஈடுபடு கிறோம். எமது மக்கள், தமிழர்களின் எல்லா இழிவுகளுக்கும் காரணமான இந்த அரசமைப்பினை மாற்றுவதற்கான ஆணையை எமக்குத் தந்துள் ளார்கள் என்றார்.

சர்ச்சைக்குரிய சிக்கலான விடயங்களில் பொதுக் கருத்தை அடையும்படி செல்வநாயகம் அவர்கள் அவையை உந்தினார். தனக்கு ஆதரவாக அவர் மேற்கோள் காட்டியது ஜவகர்லால் நேருவின் வாசகத்தைத்தான்:- ஷஷசர்ச்சைக் குரிய எல்லா விடயங்களிலும் பொது அடிப்படையிலான ஒரு கருத்தை எட்டும் திடமான உறுதிப்பாட்டுடன்தான் அரசமைப்பு அவைக்கு நாங்கள் செல்லவேண்டும்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படைப் பிரேரணை இல.2, இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு என்றது. ஒற்றையாட்சி என்பது சமஷ்டி என்ற வாசகத்தினால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என சமஷ்டிக் கட்சி கோரியது. அரசமைப்பு அவையின் வழிகாட்டு குழுவிடம் மகஜர் மூலமும், மாதிரி அரசமைப்பு மூலமும் தான் சமர்ப்பித்த யோசனையில் ஐந்து தேசங்களின் ஒன்றிணைந்த சமஷ்டிக் குடியரசாக நாடு இருக்க வேண்டும் என சமஷ்டிக் கட்சி முன்மொழிந்தது. வடமாகாணமும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களும் இணைந்து ஓர் அலகு. மத்திய அரசுக்குரிய விடயங்களும் அதிகாரங்களும் குறித்தொதுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டன. எஞ்சியவை சமஷ்டி அலகுக்கு எனச் சமர்ப்பிக்கப்பட்டன. அப்படி மத்திய அரசுக்குக் குறித்தொதுக்கப்பட்டவையிலேயே சட்டம், ஒழுங்கு மற்றும் பொலிஸ் விடயங்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எது, எப்படியொன்றாலும் அவையின் நடவடிக்கைகள் தமிழர்கள் ஓர் இணக்கப்பாட்டையே பற்றி நிற்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தி நின்றன. அடிப்படைத் தீர்மானம் இல.02 தொடர்பாக சமஷ்டிக் கட்சியின் பிரதான பேச்சாளராக உரையாற்றிய தர்மலிங்கம் நடைமுறையில் இருந்த அரச மைப்பு பல்லின நாட்டுக்கானதாக உருவாக்கப்படாததால் அது தோல்விய டைந்து என்றார். ஒற்றையாட்சி முறைமையின் கீழ் பல்லினத்தவர்களைக் கொண்ட  நாடுகளின் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகள், அபிலாஷை கள் நிறைவுசெய்வதற்காக சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையில் விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்பட்டமையை அவர் சுட்டிக்காட்டினார். சமஷ்டிக் கோட்பாடுகளுக்கான விட்டுக் கொடுப்புகள் மறுக்கப்பட்ட இடங் களில் பிரிவினை இயக்கங்கள் செயற்படுகின்றன.

சமஷ்டிக் கட்சி, ஸி.சுந்தரலிங்கம் மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைப் போன்ற பிரிவனைவாதிகள் அல்லர் தாங்கள் என்றும் குறிப்பிட்டமையோடு தாங்கள் கேட்பது நாட்டைப் பங்கு போடும்படி அல்ல, அதிகாரத்தைப் பங்கு போடும்படியே என்றும் விளக்கியது.

சமஷ்டிக் கட்சியின் நகலானது பேச்சுக்கான ஓர் அடிப்படை மட்டுமே என்பதை தர்மலிங்கம் தெளிவுபட எடுத்துரைத்தார். சமஷ்டிக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதையே தமது கட்சி கோருவதாகக் குறிப்பிட்ட அவர், தேவையானால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சம சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் அளித்த வாக்குறுதிப்படி  கச்சேரிகளின் இடத்துக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகளை நிலைநிறுத்தும் முறைமையை  இடைக்கால ஏற்பாடாக முன்னெடுக்கலாம் என்றும் ஆலோசனை முன் வைத்தார்.

அவர் கூறினார் சமஷ்டி அரசமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆணையை மக்கள் தமக்குத் தரவில்லை என அரசு கருதுமானால், அது குறைந்த பட்சம் அதன் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொள் கையான நிர்வாகத்தைப் பரவலாக்குவதை - தற்போது நடை முறைப்படுத்த எத்தனிக்கும் முறையில் அல்லாமல் - உண்மையான பரவலாக்கல் முறை யின் கீழ், கச்சேரிகளை அகற்றி, அவற்றின் இடத்துக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகள் மூலம் பிராந்தியங்களை நிர்வகிக்கும் முறையை ஏற்படுத்தலாம்.

தர்மலிங்கம் அவர்களைத் தொடர்ந்து பேசிய, நாட்டில் முதன்முதலில் சமஷ்டி முறையை பிரேரித்த அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சரத் முத்தெட்டுவேகம, ஷசமஷ்டி| என்பது இங்கு கெட்ட சொல் லாகிவிட்டது, ஏனென்றால் சமஷ்டி அரசு முறைமையினால் அல்ல, மாறாக, அதனை சமஷ்டிக் கட்சி முன்வைத்ததனால் என்று தெரிவித்தார். அவர் சமஷ்டிக் கட்சி ஐ.தே.கட்சியுடன் வைத்திருந்த உறவையும் அது பின்பற்றிய - தேசிய மயப்படுத்தல் மற்றும் பாடசாலைகள், வயல்கள் சுவீகரிப்புச் சட்டங்களுக்கு எதிராக வாக்களித்தமை போன்ற - பழமைவாதக்  கொள் கைகளையுமே வெளிப்படையாகக் கோடிகாட்டினார்.

தர்மலிங்கம் பிரேரித்த யோசனையை மறந்து விட்டுப் போலும், ஷபிராந்திய சுயாட்சி| எனும் பதத்தை சமஷ்டிக் கட்சி ஏன் பயன்படுத்தவில்லை என்று முத்தெட்டுவேகம கேள்வி எழுப்பினார். முத்தெட்டுவேகமவைத் தொடர்ந்து பேசிய ஐக்கிய முன்னணியின் பேச்சாளர்கள், சமஷ்டிக்கட்சியின் பரிந்து ரைகளுக்குக் கூடியோ, குறைத்தோ விட்டுக்கொடுத்துப் போவது பற்றிச் சிந்திக்கவே தாங்கள் தயாரில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். விளை வாக, அடிப்படைப் பிரேரணை இல.02 நிறைவேற்றப்பட்டது.  சமஷ்டிக் கட்சி அதற்கு முன்வைத்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டது. 

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் நீதி அமைச்சின் செயலாளராக இருந்து அரசமைப்புச் சீர்திருத்தத்தை உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்த கலாநிதி நிஹால் ஜயவிக்ரம, அரசமைப்பு விவகாரங்கள் அமைச்சராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவின் வழிகாட்டலின்  கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது நகல் யாப்பு, ஒற்றையாட்சி அரசிற்கான எந்த ஒரு குறிப்பையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறினார். ஆயினும் அமைச்சரவைத் துணைக் குழுவிலே நாடு ஷஷஒற்றையாட்சி அரசாக|| பிர கடனப்படுத்தப்பட வேண்டும் என முன்மொழிந்தார் அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க. ஆனால் அரசமைப்பு விவகார அமைச்சர் இது அவசியமானது எனக் கருதவில்லை. முன்மொழியப்பட்ட நகல் ஒற்றை யாட்சிக் கட்டமைப்பை கொண்டிருந்தாலும் செயற்பாட்டில் ஒற்றையாட்சி அரசமைப்பு பல வகைகளில் வேறுபடலாம் என அவர் வாதிட்டார். அப் படியிருந்தும் அந்தத் திருத்தச் சொற்றொடர் இறுதி நகலில்  இடம்பெற்று விட்டது. ஷகாலக்கிராமத்தில் இந்த மூர்க்கமான, தவறாகக் கருதப்படு கின்ற, முற்றிலும் அநாவசியமான சோடனை, இங்கு சிங்களத் தனித்துவ அரசு மட்டுமே உருவாகவேண்டும் என்று விரும்பிய தனியாள்;களினதும், குழுக்களினதும் கோஷமாக மாறும் அவலம் நேர்ந்துவிட்டது என கருத்து வெளியிட்டார் கலாநிதி ஜயவிக்ரம.

பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, சமஷ்டிக் கட்சி அதன் திருத்த யோசனை நிராகரிக்கப்பட்ட பின்னரும் கூட அரசமைப்பு அவையிலே கலந்துகொண்டது. வழிநடத்தும் விடய உபகுழுக்களின் கூட்டங்களில் செல்வநாயகம் ஒழுங்காகப் பங்குபற்றினார் என்பதை பதிவுகள் காட்டு கின்றன.

மொழி தொடர்பான அடிப்படைப் பிரேரணையை அரசைக் கொண்டு மேன்மைப்படுத்துவதற்கு சமஷ்டிக் கட்சி எடுத்த முயற்சிகளும் தோற்றுப் போயின. செல்வநாயகம் தாம் பிரதமருடனும், அரசமைப்பு விவகார அமைச்சருடனும் சந்தித்துப் பேசினார் எனவும், அந்தச் சந்திப்புகள் சுமு கமாக நடைபெற்ற போதிலும் அடிப்படைப் பிரேரணைகளில் மாற்றம் செய்ய அரசு மறுத்துவிட்டது எனவும் அரசமைப்பு அவைக்கு அறிவித்தார். 

அதனால் சமஷ்டிக் கட்சி அரசமைப்பின் எதிர்காலக் கூட்டங்களில் பங்கு பற்றாது என்று அவர் அறிவித்தார். ஷஷஉத்தேச அரசமைப்பில் எமது மொழி யுரிமை திருப்தி தரத்தக்க முறையில் இடம்பெறாது என்ற வருத்தம் தரும் முடிவுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இந்த அவையின் கலந்துரையாடல்களில் நாங்கள் தொடர்ந்து பங்குபற்றுவது எந்தப் பய னையும் தரப்போவதில்லை. யாரையும் நோகடிப்பதற்காக இந்த முடிவை நாம் எடுக்கவில்லை. நாங்கள் எமது மக்களின் கௌரவத்தைப் பேணவே விரும்புகிறோம்||. ஆர்ப்பாட்டமான வெளிநடப்புக் கூட அங்கு இடம்பெற வில்லை. ஷநாங்கள் வெளிநடப்பு மூலம் ஒரு விடயத்தை அரங்கேற்றிக் காட்டக் கூட விரும்பவில்லை| - என்றார் அவர். 

கலாநிதி ஜெயவிக்கிரமவின் தகவல்படி, பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கா, தாம் கலாநிதி கெல்வின் ஆர்.டி.சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில் மொழிப்பிரச்சினை பற்றிய விவாதத்தை மீளத் தொடங்குவது புத்திசாலித் தனமல்ல என்றும் இந்த விடயத்தில் சாதாரண சட்டங்கள் என்ன செல்லு கின்றவோ அதன்படியே - அப்படியே - அவற்றைச் செயற்பட விட்டுவிடுவது தான் நல்லது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அப்படியானால் அப்போதைய கேள்வி இதுதான்: செல்வநாயகத்தினால் இந்த விடயம் எழுப்பட்ட போது ஏன் அமைச்சரிடம் பிரதமர் அதைக் கேட்கவில்லை?

கலாநிதி சில்வாவுக்கும் திருமதி பண்டாரநாயக்காவுக்கும் நியாயமாக நடப்பதனால், அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இந்தக் கடிதமும் சில்வாவின் அரசமைப்புக்கான முதலாவது நகலில் ஷஒற்றையாட்சி| என்ற பதம் இல்லை என்ற தகவலும் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இந்த விடயம் குறித்து கலாநிதி சில்வா மேலும் பல கருத்துக்களைப் பகிர்ந்திருப்பார் என நான் நம்புகிறேன்.
ஐம்பதுகளிலும், எழுபதுகளிலும் இருந்த தமிழ்க்கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் மைத்துனர்கள் போல பல விடயங்களில் மிகப் பழ மைவாதப் போக்கையே பின்பற்றின என்பது உண்மையாயினும், இணக் கத்துக்காக சமஷ்டிக் கட்சி சமர்ப்பித்த முன்மொழிவுகளை நிராகரித் தமைக்குக் காரணம் ஏதுமே இருக்கவில்லை. என்னவென்றாலும், அதிகாரப் பகிர்வு என்பது இரு இனங்களுக்கு இடைப்பட்டதேயன்றி, இரு 
அரசியல் கட்சிகளுக்கு இடைப்பட்டதல்லவே...!

அதிகாரப் பகிர்வுக்கான சமஷ்டிக் கட்சியின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டிருந்தால் அது நம்பிக்கையைக் கட்டி எழுப்புதில் எல்லையற்ற தூரத்துக்கு மேன்மைப்பட்டிருக்கும். எதிர்காலத்தில் மேலும் அதனைக் கட்டியெழுப்பவும் வாய்ப்புக் கிட்டியிருக்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந் தால் அது அரசமைப்பு அவையிலே சமஷ்டிக்கட்சி தொடர்ந்து பங்கு பற்றுவதையும் உறுதிப்படுத்தியிருக்கும். இறுதியாக, ஐ.தே.கட்சி போல, சமஷ்டி கட்சியும் புதிய அரசமைப்புக்கு எதிராக வாக்களித்ததாயினும், அரசமைப்பை உருவாக்கும் முழு நடவடிக்கைகளிலும் அது பங்கு பற்றி யிருக்குமானால், அது 1972 அரசமைப்பைத் தமிழர்கள் பெரியளவில் ஏற்றுக்கொண்டதான பெறுபேறாக அமைந்திருக்கும்.
பிரித்தானிய முடியாட்சியிலிருந்து முழுமையாக முறித்துக் கொள்ளும் அச்சமயத்தில், நாடாளுமன்ற அரசு முறையை மீளப் பேணி, அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தி, அரச கொள்கைகளை வெளிப்படுத்தி பிரகடனப்படுத்துவது சந்தேகத்துக்கு இடமின்றி வலுவான தாக ஒலித்த போதிலும், 1972 அரசமைப்பு  பெரும்பான்மைப் போக்கின் வழி சென்று, சட்டத்தின் ஆட்சியையும் அரசமைப்பின் மேன்மையையும் குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைந்துவிட்டது.

அரச அதிகாரத்தில் பன்முக, பல்லினத் தன்மைகளுக்கு இடமளித்து, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு 1972 ஒரு சரித்திர வாய்ப்பாகும். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பும் தவறவிடப்பட்டுவிட்டது. ஐக்கிய முன்னணி, அரைவழித் தூரத்துக்காவது கீழிறங்கி வந்து சமஷ்டிக் கட்சி யுடன் கைகோர்த்திருக்குமானால் இன்று இந்த நாட்டின் சரித்திரம் வேறு விதமாக அமைந்திருக்கும். இறுதிக் கட்டத்தில் பங்குபற்றுதலை அவர்கள் தவிர்த்துக் கொண்ட போதிலும் கூட, சமஷ்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளத்தான் செய்தார்கள். விரைவில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரின் கீழ் ஒன்றிணைந்தார்கள். அது பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என மாறியது. 1976 இல் பிரபலமான வட்டுக்கோட்டை மாநாட்டில் பிரிவினையைத் தழுவிக் கொண்ட த.ஐ.வி.மு. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழம் என்ற தனி அரசை அமைக்கக் கோரும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

1977 ஏப்ரல் 26 ஆம் திகதி செல்வநாயகம் அவர்கள் மறைந்தார்கள். அவரது இறப்புக்கு மூன்று மாத காலத்தின் பின்னர் ஷஇறைமையுள்ள, சுதந் திர, சமயச் சார்பற்ற, சமதர்ம தமிழீழத்தைக் கட்டி எழுப்புதல்|  எனும் பிரிவினை மேடையைமைத்து, வாக்குறுதி தந்து, 1977 ஆம் ஆண்டுத் தேர் தல்களில் போட்டியிட்ட த.ஐ.வி.மு. தமிழர் பிரதேசங்களில் அமோக வெற்றியீட்டியது.
இங்கு குழுமியிருக்கும் உங்களில் பலருக்கு 1977 இற்குப் பிறகு என்ன நிகழ்ந்தது எனத் தெரியும். அவை எல்லாவற்றுக்கும் ஊடாக உங்களை கூட்டிச் செல்வது எனது நோக்கமல்ல, ஆனால் ஒரு சில விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

தமிழர்கள் பல இழப்புகளைச் சந்தித்தவர்கள் என்ற வகையில் அவை அவர்களைத் தனி நாடு நோக்கி இழுத்து சென்றுள்ளன என 1977 இல் தனது தேர்தல் சாசனத்தில் ஐ.தே.க. ஒப்புக்கொண்டது. தமிழர் பிரச்சி னைகளைத் தீரப்பது குறித்து  ஆலோசிப்பதற்காக வட்டமேசை மகாநாடு ஒன்றை நடத்த அது உறுதியளித்தது. வடக்கு, கிழக்குக்கு வெளியே வசித்த தமிழர்கள் பெருவாரியாக ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்;க அக்கட்சி 5ஃ6 பெரும்பான்மை பெற்றுக்கொண்டது. எனினும் விருப்பு வாக்குகள் 50.9 வீதம்தான் கிடைத்தன. ஆயினும் வட்டமேசை மாநாடு நடைபெறவில்லை.
1978 அரசமைப்பு, தீர்வு ஒன்றுக்கான இன்னுமொரு சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனால் சரியான முறையில் பதிலளிக்க ஐ.தே.க தவறியமை யால் தமிழர்கள் அரசமைப்பை உருவாக்குவதில் பங்கேற்க மறுத்தனர். இலங்கை வரலாற்றில் இரண்டாம் முறையாக தமிழ்ப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமல் அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப் பட்டது. சிங்களவரிடம்தான் அரச அதிகாரம் உள்ளது என்பதனை இது தெளிவாகக் காண்பித்து நிற்கின்றது. 

இலங்கையில் பௌத்த மதத்தின் மேன்மையான இடத்தையும் ஒற்றை யாட்சித் தன்மையையும் மாற்றவே முடியாது என 1978 அரசமைப்பு அறுதியிட்டதுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கான வழி யையும் சமைத்தது. 1983 இல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வலிந்து வெளியேற்றப்பட, இப்பிரச்சினை சர்வதேசமயமானது.
பிரிவினைப் போக்கு இருந்த போதிலும், அதைவிடுத்து சில இணக்கப் பாட்டுக்கு தயாராகவிருந்த த.ஐ.வி.மு. நாடாளுமன்றத்pல் இருந்து வெளி யேற, பல தமிழ் இராணுவக் குழுக்கள் மேலெழுந்தமை ஆச்சரியத்துக் குரியதல்ல. அதன் பேறாக முழு அளவிலான பிரிவினைப் போர் தொடர்;ந்து வெடித்தது.

தீர்வுக்கான முயற்சிகள்

யதார்த்தங்களின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி ஜெயவர்த்தனா 1987 இல் இந்தியாவுடன் ஓர் உடன்பாடு  செய்தார். இதைத் தொடர்ந்து அரசமைப்புக்கு 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வுடனான மாகாண சபைகள் நிறுவப்பட் டன. அது, ஆளும் ஐ.தே.கட்சி அதிகாரத்தை பரவலாக்குவதற்கு திடசங்கற் பம் கொண்டிருந்தமை காரணமாக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இந்தியாவின் அழுத்தம் காரணமாக முன்னெடுக்கப்பட்டது.

பதின்மூன்றாவது திருத்தம், அதிகாரப்பகிர்வுக்கு எதிராக நிறுத்துப் பார்க்கப்பட வேண்டியது. பல விடயங்கள் மற்றும் செயற்பாடுகளில் சட்ட வாக்கல் அதிகாரம் மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள போதிலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம், அதற்கு மேல் சவாரி செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டேயிருக்கின்றது. தேசியக் கொள்கைகளை வரையறுத்தல் என்ற பெயரில் மாகாண சபைக்கான விட யங்கள், செயற்பாடுகள் தொடர்பான பட்டியலில் தலையிட்டு நாடாளுமன்றம் சட்டங்களை விதிக்க முடியும். இரண்டுக்கும் பொதுவான அதிகாரம் பற்றிய பட்டியல் மாகாண சபையின் செயற்பாடுகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வழி சமைக்கிறது.

இதில் கவலைக்குரியது என்னவென்றால் தொடர்ந்து வந்த அரசுகள், மனதில் பட்ட எல்லா ஏற்பாடுகளையும் - பேச்சுவழக்கில் சொல்வதானால் அதில்  இருந்த முற்றுப்புள்ளி, கமா போன்ற எல்லாவற்றையும் - அதிகாரப் பகிர்வைச் சிதைக்க பயன்படுத்தின என்பதுதான்.

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதிப் பதவியை 1994 இல் ஏற்றதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றி, பரந்தளவிலான அதிகாரப் பகிர்வை முன்மொழிந்தார். முன்னாள் இராணுவக் குழுக்கள் உட்பட தமிழ்க்கட்சிகள் இதனை வரவேற்க, எல்.ரி.ரி.ஈ. அதனை நிராகரித்து, தொடர்ந்து தனது வன்முறைப் போக்கை முன்னெடுத்தது. நாணயத்தின் மறுபக்கமான சிங்களக் கடும் போக்காளர்கள் அந்த முன்மொழிவுகளை அடியோடு எதிர்த்ததுடன் அதிகாரப் பகிர்வு இறுதியில் பிரிவினைக்கே வழிகோலும் என்றும் தெரிவித்தனர்.

குமாரதுங்கவின் 2000 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டமூலம் பகுதி யான சமஷ்டி ஏற்பாட்டுக்கு வழி செய்தது. இலங்கை ஒற்றையாட்சி நாடு என்ற பதம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, மத்திய மற்றும் பிராந்திய நிறுவகங்கள் அரசமைப்பால் வகுக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரயோகிக்கும்| என அது குறிப்பிட்டது. இந்த விவரணம், சுட்டி (ஷலேபிள்|) முறை வராமல் தவிர்ப்பதற்கான புத்திசாதுரியமான சொல்லாடலாகும். ஷசமஷ்டி| - அது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று பலர் கருதுவதால் இலங்கை அரசியல் கட்டமைவில் அது ஒரு கெட்ட செல்லாகும். அதே போல தமிழர்களும் ஷஒற்றையாட்சி| ஏற்பாட்டுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வை வேண்டினர். மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் தெளிவான அதிகாரப் பிரிவு முன்மொழியப்பட்டது. இந்தச் சட்டமூலத்துக்கு ஆரம்பத்தில் ஐ.தே.க. இணங்கிய போதும் அது, பின்னர் பின்வாங்கி சட்டமூலம் நிறைவேறுவதை குழப்பியடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அதன் ஆதரவு இல்லாமல், சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாமல் போயிற்று.

எல்.ரி.ரி.ஈ. பிடிவாதம் 

ஜனாதிபதி குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் 2001 இல் ஐ.தே. கட்சியின் விக்கிரமசிங்க ஓர் அரசை அமைத்தார். எல்.ரி.ரி.ஈயுடன் யுத்த நிறுத்தம் ஒன்று இணங்கப்பட்டு சமாதானப் பேச்சுக்கள்  முன்னெடுக் கப்பட்டன. அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வுக்கான வாய்ப்புக் குறித்து ஆராய்வதற்கு டிசெம்பரில் ஒஸ்லோவில் இணங்கினர்.

வடக்கு - கிழக்கில் புலிகளின் மேலாதிக்கத்துடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றைத் தருவதற்கு அரசு முன்வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈயோ வடக்கு - கிழக்கை முழுமையாக ஆள்வதற்கான இடைக்கால சுயாட்சி அதிகார சபையை( ஐஎஸ்ஜிஏ) 2003 ஒக்ரோபரில் நிபந்தனையாக முன்வைத்தது. அந்த சபைக்கான சில அதிகாரங்கள் ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் சாத்தியமானவை எனினும், ஏனையவை நிச்சயமாக அப்படியிருக்கவில்லை. அத்தகைய முழுமையான அதிகாரத்தை வழங்குவது கூட்டு சமஷ்டி முறையின் கீழ் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. வன்முறைக்கு முடிவு கட்டும் விதத்தில் அமையக்கூடிய பரந்த சமாதான உடன்படிக்கையின் போது அதன் பகுதியாக சமஷ்டிக் கட்டமைப்பு இடம்பெறுவதை, கடை சியில் பொதுமக்கள் ஏற்று அங்கீகரிப்பார்களாயினும், இடைக்கால உடன் பாடாக 'இடைக்கால சுயாட்சி அதிகார சபையை' மக்களிடம் செலுத்துவது கஷ்டமானதாகவே இருக்கும்.

யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி சமாதானத் தீர்வுக்கான பேச்சுக்கு புலிகள் நேர்மையுடன் வந்தார்களா? பல பார்வையாளர்கள் அது புலிகளின் தந்திரோபாய நகர்வு மட்டுமே என்றும், புலிகளின் உண்மையான திட சங்கற்பம் தனிநாடு என்றும் இந்த விடயத்தை நோக்கினார்கள். அரசியல் தீர்வுக்கான இணக்கம் ஒன்றுக்கு வருவதற்கான இயலாமையிலேயே தென்னிலங்கையின் அரசியல் முறைமை இருந்ததை அது அறிந்தே இருந் தது. அரசமைப்பு ரீதியான தீர்வு இல்லாத நிலையில், ஆசுவாசப் படுத்துவ தற்கான நேரத்தையும் பெற்றுக் கொண்டு, இடைக்கால நிர்வாகத் தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்காக எல்.ரி.ரி.ஈ. சற்று வளைந்து கொடுக்க முன் வந்தமை போன்றே அது தோன்றியது. அதன் பேச்சுக்கான சிரேஷ்ட பிரதிநிதி கூட சமஷ்டிக் கட்டமைப்புக்குள் தமிழர்களின் பிரச்சி னைக்கு ஒரு தீர்வை ஆராயும் திட்டத்தை விடுதலைப் புலிகள் கைவிட்டி ருந்தனர் என்பதைப் பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை எல்.ரி.ரி.ஈ. எப்போதும் இரும்புக்கரம் கொண்டே ஆளுகை செய்தது. எத்தகைய அதிருப்தியும் பொறுத்துக் கொள்ளப்படவேயில்லை. ஏனைய தமிழ்க் கட்டமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட இலங்கையின் ஒற்றையாட்சி அரசிலிருந்து தமிழர்களுக்கு நீதி கிட்டவே மாட்டாது என்ற குற்றச்சாட்டோடு தனிநாட்டுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் உருவாக்கப்பட இருந்த தனிநாடான தமிழீழமோ, சிங்கள, முஸ்லிம் மக்களின் பலமான ஜனப்பரம்பல் அங்கிருந்த போதிலும், அது, மத்தியில் அதிகாரம் குவிக் கப்பட்ட, தனிக்கட்சி ஆட்சிமுறை கொண்ட, ஒற்றையாட்சி நாடாக முன் மொழியப்பட்டமைதான் கவனிக்கத்தக்கதாகும்.

எல்.ரி.ரி.ஈயின் பிடிவாதம், மிதவாதத் தமிழர்களை ஏமாற்றத்தில் தள்ளி யது மட்டுமல்லாமல், கரும்பாறையாக இருந்த அந்த அமைப்பிலேயே உடைவை ஏற்படுத்தியது. யுத்த நிறுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈயின் கிழக்கு மாகாணத் தலைவர்கள் பிரிந்து சென்றமையோடு, பின்னர் எல்.ரி.ரி.ஈயை இலங்கைப் படைகள் தோற்கடிக்கவும் உதவினர்.

புலிகளின் கடும்போக்கானது சிங்களப் பெரும்பான்மையோரில் உள்ள கடும்போக்காளர்களுக்கு உதவியது. மஹிந்த ராஜபக்ஷ 2005இல் சிங்களக் கடும்போக்குவாதிகளின் உதவியுடன் ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்தார்.

மிதவாதியை விட கடும்போக்காளரை எல்.ரி.ரி.ஈ. விரும்பி, தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் வாக்களிப்பன்று பகிஷ்கரிப்பை நடை முறைப்படுத்தி, அதன் மூலம், உயர்ந்தபட்ச அதிகாரப் பரவலாக்கலுக்கு இணங்கி முன்வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு சில நூறாயிரம் தொகையுடைய முக்கிய வாக்குகளால் வெற்றியை அது மறுக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் தீர்வில் அதற்கு சிரத்தை இல்லை என்பதை உறுதிப்படுத்த இது ஒன்று மட்டுமே போதுமானது. இராணுவப் படை என்ற முறையில் எல்.ரி.ரி.ஈ. தன்னை அளவுக்கு அதிகமாக மதிப்பிட் டுக் கொண்டது என்பதும் தெளிவானது. ஆனால், நான்கு வருடத்துக்குள் ராஜபக்ஷ இராணுவ இயந்திரம் எல்.ரி.ரி.ஈ. ஐ முழுமையாக சின்னாபின்ன மாக்கியது. அத்தோடு 9ஃ11 இற்குப் பின்னரான சர்வதேச நிலைமைகளை எல்.ரி.ரி.ஈ. தவறாகப் புரிந்து கொண்டது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை குறித்து சிலர் மகிழ்வுறவில்லையாயினும், பெரும்பாலான சர்வதேச செயல் தரப்பினர் எல்.ரி.ரி.ஈ.யை ராஜபக்ஷ வெல்வதற்கு நேரடி யாகவோ, மறைமுகமாகவோ உதவினர்.

சமாதானத்தை வெற்றி கொள்ளல் 

எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி ராஜபக்ஷ சர்வ கட்சி மாநாட்டை கூட்டினார். அது பின்னர் அரச மைப்புத் தீர்வுக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவாக தோற்றம் கொண்டது. இந்த க்கு உதவுவதற்காக 17 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அவர் நியமித்தார். அந்த நிபுணர் குழு தங்களுக்குள் பிளவுண்டு கருத்து வெளியிட்டது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரையும் உள்ளடக்கிய 11 நிபுணர்கள் வலிமையான அதிகாரப் பகிர்வு உடன்பாடு ஒன்றை முன் மொழிந்தனர். சிங்களவர்களான நான்கு நிபுணர்கள் மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்மொழிய, மற்றைய இருவர் தங்களின் சொந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.

மேற்படி 'பெரும்பான்மையினரின் அறிக்கை' என்று கூறப்பட்ட யோச னைத் திட்டம் விரிவான அதிகாரப் பகிர்வில் இரண்டு பக்க அணுகு முறைகளைக் கொண்டிருந்தது. சமூகங்கள் தத்தமது பிரதேசங்களில் அதிகாரத்தைப் பிரயோகித்து தமது சொந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளையில், மத்தியிலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கௌ;ள வும், பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய ஒன்றிணைவை மத்தி பலப்படுத்தவும் அது சிபாரிசு செய்தது.

அந்த முன்மொழிவில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இலங்கை யின் 'மக்கள்' என அரசமைப்பில் குறித்தொதுக்கப்படுவோர் 'இலங்கையின் மக்கள் கூட்டங்களின் அங்கம்' என்பதாகும். அத்தோடு 'ஒவ்வொரு மக்கள் கூட்டமும்', அதன் காரணமாக, அரச அதிகாரத்தில் உரிய பங்கையும் பெறும். இது, பொதுவான 'இலங்கையர்' என்ற அடையாளப்படுத்தலைப் பலவீனப்படுத்தாமல் முன்னெடுக்கப்படும்.
இந்தப் பெரும்பான்மை நிபுணர்களின் அறிக்கை சிங்கள மிதவாதிகளி னாலும் தமிழ், முஸ்லிம், இந்தியத் தமிழர்கள் தரப்பில் பெருவாரியானோ ராலும் வரவேற்கப்பட்டது. எல்.ரி.ரி.ஈயோ இந்த அறிக்கை குறித்து கருத்து எதனையும் வெளியிட முன்வராமல் போனமை ஆச்சரியத்துக்குரியதன்று. ஆனால் அது, அக்குழுவின் நிபுணர்களான தமிழர்கள் தமது இனத்தின் சார்பில் எப்படி அதில் பிரதிநிதித்துவம் செய்யலாம் எனக் கேள்வி எழுப்பியது.

நடவடிக்கைகள் மூன்று வருடங்கள் இழுபட்டன. சிங்கள தேசியக் கட்சிகள் பல கட்டங்களில் வெளிநடப்புச் செய்தன. ஆனால் அரசின் பிரதான கட்சியான ஸ்ரீ.ல.சு.கட்சி தொடரந்து அதில் நீடித்தது. உத்தி யோகபூர்வ அறிக்கை ஏதும் வெளியிடப்படாத போதிலும், யின் தலைவர் திஸ்ஸ விதாரண, அதன் முன்மொழிவுகளின் சுருக்கக் குறிப்பு ஒன்றை 2009 இல் ஜனாதிபதியிடம் கையளித்தார். 'பெரும்பான்மை அறிக்கை' பரிந்துரை செய்தவற்றிலும் மிகக் குறைவானவற்றையே அந்த முன்மொழிவுகள் கொண்டிருந்தன. எனினும் ஒற்றையாட்சிக்குள் மத்தியுடன் விரிவான அதிகாரப் பகிர்வு பற்றி அவை பிரஸ்தாபித்தன. அத்துடன் அவை விரிவான பேச்சுக்கான அடிப்படையாகக் கொள்ளக் கூடியவையாக வும் அமைந்தன. முன்மொழிவுகளின் சுருக்கத்தைத் தாம் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார் என விதாரண மீள்வலியுறுத்திய போதிலும் ஜனாதிபதி செயலகமோ அத்தகைய பிரதி தனக்குக் கிடைத்தது என்பதை மறுத்தே வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் தொடர்ச்சியாக இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.யோகராஜனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிஸாம் காரியப்பரும் அந்த முடிவுகளின் சுருக்கத்தை கூட்டங்களின் பதிவுகளின் அடிப்படையில் வெளியிட, அது சரியானதே என்று விதாரணவும் ஏற்றுக் கொண்டார்.

வட அயர்லாந்து, காஷமீர், முன்னாள் யூகோஸ்லாவியா, சூடான் போன்ற பிணக்குப் பிரதேசங்களில் கருத்துக் கணிப்பை நடத்தி தேர்ந்த அனுபவம் பெற்றிருந்த - லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த - கலாநிதி கொலின் இர்வின், யுத்தம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் - 2009 மார்ச்சில் - யுPசுஊயின் பூர்வாங்க முன்மொழிவுகள் தொடர்பில் சோதனை ஒன்றை நடத்திப் பார்த்தார். ஒரு வருடம் கழித்து - மார்ச் 2010 இல் - யுத்தம் முடிந்து 9 மாதங்களின் பின்னரும் - அதே முன்மொழிவுகள் சோதனை செய்யப்பட்டன. இம்முறை வடக்கு மாகாண மக்களையும் உள்ளடக்கி அதிக மாதிரிகள் உள்வாங்கப்பட்டன.

யுPசுஊயின் முன்மொழிவுகளை முன்வைத்து, அவை குறித்து 14 விட யங்களை ஒழுங்குபடுத்தி, அந்த விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத் துக்கள் உள்வாங்கப்பட்டன. 'அத்தியாவசியம்', 'விரும்பத்தக்கது', 'ஏற்றுக் கொள்ளக்கூடியது', 'தாங்கக்கூடியது', 'ஏற்றுக்கொள்ளமுடியாதது', என பல்வேறு விடைகளில் ஒவ்வொன்றை ஒவ்வொரு விடயத்துக்குமான பதி லாகத் தெரிவுசெய்யும்படி மக்கள் கேட்கப்பட்டனர். கடைசியாக முழு முன்மொழிவு வடிவம் தொடர்பிலும் அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அது தொடர்பில் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்தியத் தமிழ் மக்கள் ஆகியோர் 'அத்தியாவசியம்', 'விரும்பத்தக்கது', 'ஏற்றுக்கொள்ளக்கூடியது', என்ற பதிலை அளித்த விகிதம் பின்வருமாறு அமைந்தது.


        தமிழர்                      - 2009     -  82%        2010         -  83%
        முஸ்லிம்கள்             - 2009     -  85%        2010         -  88%
        இந்தியத் தமிழர்         - 2009     -  90%        2010         -  90%

இந்தப் புள்ளி விவரங்கள் ஆச்சரியமானவை அல்ல. ஆனால் சிங்களவர் களின் பிரதிபலிப்பு ஆச்சரியம் தருவதாக இருந்தது:-

2009 - 59%(அத்தியாவசியம் 13ம%விரும்பத்தக்கது 21%ஏற்றுக் கொள்ளத்தக்கது 25%)

2010 - 80%(அத்தியாவசியம் 20%விரும்பத்தக்கது 38%ஏற்றுக் கொள்ளத்தக்கது 22%)

அதிகாரப் பகிர்வை சிங்களவர்கள் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு அதை எதிர்த்தவர்கள் பிரசாரப்படுத்திய கட்டுக்கதைக்கு மாறாக, எல்.ரி.ரி.ஈ யின் முகத்துக்கு முன்னால் அதன் தோல்வி தோன்றியிருந்த - யுத்தம் முடிவுறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முந்திய - காலத்தில் 59 வீதத்தினர் யுPசுஊயின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகக் கண்ட னர். ஒரு வருடத்தின் பின்னர் - அதாவது யுத்தம் முடிவுற்று 9 மாதங்களின் பின்னர் - அந்த எண்ணிக்கை 80 வீதமாக உயர்ந்தது. 

அப்படியிருந்த போதிலும், ராஜபக்ஷ அரசு யுPசுஊ முன்மொழிவுகள் குறித்து இன்னும் கருத்து எதனையும் வெளியிடவில்லை. அந்த ஆட்சிப்பீடம் இன்னமும் இராணுவ வெற்றியின் கீர்த்தியில் திளைக்கிறது. மாறாக, ஆயுதப் பிணக்குக்குப் பிரதான காரணமாக அமைந்த மூல விடயம் - அரச அதிகாரத்தைப் பகிர்தல் - இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றது. ராஜபக்ஷ ஆட்சிப்பீடத்தில் கடும்போக்காளர்களே அதிகாரத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அரசி யல் தீர்வு குறித்து எப்போதாவது பேசப்பட்டாலும் அது பின்தள்ளப் பட்டதாகவே உள்ளது.

இலங்கையின் கதை என்பது சிங்களவர்களையும் தமிழர்களையும் பொறுத்தவரை சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்ட விவகாரமாகவே உள் ளது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் பிணக்கு முடியவில்லை. எல்லா சமூகங்களுக்கும் அரச அதிகாரத்தை உரியமுறையில் பகிர்வதே இரண்டாவது விடயத்தை முடிவுக்குக் கொண்டு வரும் - அது எல்லா அவதானிகளுக்கும் பிரதியட்சமான உண்மை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கையருக்கு அது தெரியவில்லை.

ஜனநாயக இடைவெளிக்கான தேவை

எமது இனத்துவ - அரசியல் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கான அத்திவாரத்தைப் போடுவதற்கான எமது இயலாமை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் அதற்குச் சமாந்தரமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உச்சபட்சத்திற்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
1978 அரசமைப்பின் கீழ் அரச முறைமை குறித்து விவாதித்த டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, அது 'நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வெளிச் சட்டையைப் போர்த்திய யாப்பு ரீதியான ஜனாதிபதி முறை சர்வாதிகாரம்' என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மை எனபது நிரூபணமாகியுள்ளது. காலவரையறையும் இல்லாமல், 17 ஆவது திருத்தமும் செயலிழந்து போனமையால், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மிக வலிமையானதாகவும் மிக இழிவானதாகவும் மாறிவருகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் எதிர்காலம் என்ன? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை சரியென வாதிட்ட ஐ.தே.கட்சி அதன் சொந்தத் தயாரிப்பின் முழு வலிமையையும் உணர்ந்த போதுதான் கடைசியாக அதை இல்லாதொழிக்கும் முடிவுக்கு மனதை மாற்றிக் கொண்டது. தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அது, தங்களது இனத்துக்கு எந்தப் பாதுகாப்பும் தராது என்பதில் எந்தப் பிர மையும் அவற்றுக்கு இல்லை. முரண்பாடாக, தற்போதைய ஸ்ரீ.ல.சு.க. தலைமையும், சிங்களக் கடும் போக்குவாதிகளுமே அதை இன்றும் ஆத ரித்து, அதேயளவுக்குத் தக்கவைக்கவும் முனைந்து நிற்கின்றனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் மனநிலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ இல்லாது விடினும், அழுத்தத்தின் கீழ் அதனை அவர் செய்யமாட்டார் என்று கூறுவதற்கும் இல்லை.

எதிரணியின் பொதுவேட்பாளர் என்ற 'தனி விடயத்தை மட்டும்' ஆராய் வது குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் அடிபடுகின்றன. அந்தத் தனி விடய விவகாரம் முழு எதிரணியையும் ஒன்றிணைப்பதுடன், ஸ்ரீ.ல.சு.கட்சிக் குள் உள்ள அதிருப்பதியாளர்களை நிறைவேற்று அதிகாரத்தை இல்லா தொழிப்பதற்கான உட்கலகத்துக்குத் தூண்டுவதில் வினைத்திறனையும் ஊட்டக்கூடியது.

தனது நிலைக்கு மோசமான சவால் வருமானால் ராஜபக்ஷ, எதிரணியின் எதிர்ப்பைச் சமாளிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையயைக் கைவிடவும் முன்வரலாம். எப்படியெனினும், அவர் தமது தற்போதைய நிலையை ஸ்திரப்படுத்திப் பேணுவாராயின், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிரணியும்,  ஸ்ரீ.ல.சு.கட்சி அதிருப்தியா ளர்களும் ஒன்றிணையும் விவகாரமாக அது அமைவதற்கான சாத்தியங்கள் அனேகமுண்டு.

முன்மொழிவுகளை தயாரிப்பதிலும் விட அரசமைப்பை உருவாக்குவது மிகச் சிக்கலானது. 1994 முதல் 2000 வரையான காலப்பகுதியில் முன்னெ டுக்கப்பட்ட அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை ஒத்த முயற்சிகளிலும் பார்க்க, புதிய வடிவத்திலான ஓர் அரசமைப்பை உருவாக்க முயல்வது இப்போதைய நிலையில் சாலச்சிறந்தது.

இன ரீதியாக சமாதானத்தை எட்டுவதற்கு மட்டும்தான் சீர்திருத்தம் அவசியம் என்பதல்ல, அரசமைப்பின் மேன்மை, உரிமைச் சட்டங்கள், தேர்தல் சீர்திருத்தம், சுயாதீனமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சியை மீள ஏற்படுத்துதல், உயர் பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் சுயாதீன மான நிறுவனங்கள் விடயத்தில் தேசிய இணக்கப்பாடு ஆகிய எல்லாவற் றிலும் அது கவனிக்கப்பட வேண்டும். பரந்தளவிலான சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியல் சூழலிலேயே அதிக சாத்தியமானவை என்பதால், அத்தகைய சீர்திருத்தத்தின் முதல் நடவடிக்கையானது, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்து ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவ தாக அமைய வேண்டும். இது, 17 ஆவது திருத்தத்தை உரிய மாற்றங்களுடன் மீளக் கொண்டு வருவதுடன் இணைந்;து முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய இடைவெளி பரந்தளவிலான சீர்திருத்தங்கள் குறித்து தீவிர மாகக் கலந்துரையாட வாய்ப்பளிக்கும். அதற்கு மேல் சீர்திருத்தங்கள் பரந்தளவிலும் ஊக்குவிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவது புதிய அரசியல் இயக்க நிலைமையைப் பொறுத்ததாக அமையும். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108298-2014-04-26-12-38-33.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.