Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோடியும் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன்-

Featured Replies

IFP_CI.png

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் இது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டக் குழுவொன்று யப்பானின் சிறப்புத்தூதுவர் யசூசி அகாஷியைச் சந்தித்தது. இதன்போது அந்த இயக்கத்தின் தலைமையால் எழுதப்பட்ட ஒரு கடிதம் யசூசி அகாஷியிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும் என்ற தொனிப்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. அகாஷி அதை வாசித்துவிட்டு  பின்வரும் தொனிப்படப் பதில் சொன்னாராம்... ''யப்பான் ஒரு பெரிய கப்பலைப் போன்றது. அதை திடீரென்று திருப்புவது கடினமானது' என்று.

யப்பான் மட்டுமல்ல, அதைப் போன்ற பெரிய கேந்திர முக்கியத்துவம் மிக்க எந்தவொரு நாடும் அதன் வெளியுறவுக் கொள்கையை எடுத்த எடுப்பில் செங்குத்தாகத் திருப்ப முடியாது. ஏனெனில், நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் எனப்படுகிறவை அவ்வக் காலத்தின் பிராந்திய மற்றும் அனைத்துலக வலுச் சமநிலைகளைப் பிரதிபலிப்பவைதான். வலுச் சமநிலைகளைச் சடுதியாக மாற்றலாம் என்றால் வெளியுறவுக் கொள்கையையும் அப்படி மாற்ற முடியும்.

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை எனப்படுவதை அதன் மிக எளிமையான வடிவத்தில் விளக்கிக்கொள்வோமாக இருந்தால் அதை இரண்டு பிரதான காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று மாறாக் காரணிகள் மற்றது மாறும் காரணிகள்.

மாறாக் காரணிகள் எனப்படுபவை குறிப்பிட்ட நாட்டின் புவியியல் அமைவிடம் அதன் பருமன் அதன் இயற்கை வளங்கள் போன்றனவாகும்.

மாறும் காரணிகளானவை குறிப்பிட்ட நாட்டின் சனத்தொகையும் படைப்பலமும் அந்நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் (அதாவது வெளிநாடுகளிலும்) காணப்படும் சமுகப் பொருளாதார அரசியல் தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டுச் சூழல்களும் ஆகும்.

முதலில் மாறிலியான காரணிகளை சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். நெப்போலியன் ஒரு முறை சொன்னார் ''எந்தவொரு நாட்டினதும் வெளியுறவுக் கொள்கையை அந்நாட்டின் புவியியல் தான் தீர்மானிக்கின்றது' என்று.

ஒரு நாட்டின் புவியியல் அமைவிடமும் அதன் பருமனும் அநேகமாக மாறிலிகள்தான். உலகளாவிய அசாதாரண புவியியல் மாற்றங்கள் ஏற்படும்போதோ அல்லது பேரரசு உருவாக்கத்தின்போதோ ஒரு நாட்டின் எல்லைகள் மாறக்கூடும். பேரரசு உருவாக்கத்தின்போது நாட்டின் எல்லைகள் அகட்டப்படுவதுண்டு. எதுவாயினும், ஒரு நாட்டின் அமைவிடமும் அதன் பருமனும் அது தொடர்பாக அது கொண்டிருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவமும் அதன் வெளியுறவுக் கொள்கையை பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றன.

மற்றது மாறக்கூடிய காரணிகள். நாடுகளின் சனத்தொகைஇபடைபலம்இஅவற்றின் சமூகப் பொருளாதார தொழில்நுட்ப அரசியல் மற்றும் கலாசாரச் சூழல் போன்றவை மாறக்கூடியவை. குறிப்பிட்ட ஒரு நாட்டின் அரசாங்கம் மாறும்போது அதன் பொருளாதாரக் கொள்கைகள் மாறக்கூடும். இதுவும் வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். அதுபோலவே ஒரு நாட்டின் சமூகச் சூழல் அதாவது, இனங்கள், மதங்கள், சமூகங்களிற்கிடையிலான அமைதி குலையும்போது அதை வெளிச்சக்திகள் தமது தேவை கருதிக் கையாள முடியும். இதுவும் பிராந்தியத்தின் வலுச்சமநிலையைப் பாதிக்கக்கூடியது. எனவே, வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையிற் பார்த்தால் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுவதாயிருந்தால் அது மாறிலியான அம்சங்களால் ஏற்படுவதாயிராது. மாறாக, அது மாறக்கூடிய அம்சங்களால் தான் ஏற்பட முடியும். அதாவது, அந்த நாட்டிற்குள்ளும் வெளியிலும் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார அரசியல் தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு மாற்றங்களால் எற்பட முடியும்.

இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் வைத்து இனி மோடியின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் எவையெவை என்று பார்க்கலாம்.

மோடியின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையக்கூடும் என்று ஆரூடம் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. பதிலாக அவருடைய வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுவதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எது என்று பார்க்கலாம். அதன் அமைவிடம் பருமன், ஜனத் தொகை, படைப் பலம், பொருளாதாரம், பண்பாடு, ஆட்சி முறை என்பவற்றைக் கருதிக் கூறின் அது ஒரு பேரரசு. பிராந்தியப் பேரரசு. எனவே, ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையும்? பிராந்தியத்தில் அதன் மேலாண்மையைப் பேணுமொன்றாகத்தானே அமையும்?

இந்தியப் பேரரசின் வெளியுறவுக் கொள்கையின் மாறா அடிப்படை அது. மகாத்மா காந்தியே பிரதமராக வந்தாலும்கூட இந்த அடிப்படையை மாற்றுவது கடினம்.

இந்திய வெளியுறவுச் சேவையில் 37 ஆண்டுகள் சேவையற்றிய முன்னாள் ராஜந்திரியான ரி.பி. சிறினிவாசன் அப்படித்தான் கூறியுள்ளார். மஞ்சரி சட்டர்ஜி மில்லர் அண்மையில் ஃபொறின் எஃபயர்ஸ் (Foreign affairs)  சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளார். ''அதன் பரந்த வடிவத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கை ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக மாறாது காணப்படுகிறது. அப்படியேதும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை சடுதியானவை அல்ல. அரசியல் ரீதியானவையும் அல்ல. அவை பிரதமரின் அரசியல் கோட்பாடுகளின் பாற்பட்டவையும் அல்ல' என்று.

அதாவது, கடந்த சுமார் ஐந்து தசாப்த காலமாக குறிப்பாக, இருதுருவ உலக ஒழுங்கின்போதும் அதன் சரிவின்போதும் அதன் பின் உருவான ஒரு துருவ உலக ஒழுங்கின்போதும் அந்த ஒரு துருவ உலக ஒழுங்கிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கும் இந்நாள் வரையிலுமான ஏறக்குறை அரைநூற்றாண்டு காலத்துக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பெரியளவில் மாறவில்லை என்பதே ஒரு பொதுவான அதவானிப்பாகக் காணப்படுகிறது.

எனவே, நரேந்திர மோடி வந்தாலும் அதில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்பதே ஒரு பொதுவான வாதமாகவும் காணப்படுகிறது.

ஆனால், இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயப் பரப்பைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு பரந்துபட்ட பார்வையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறாதிருக்கிறது என்பது சரிதான். ஆனால், அந்த வெளியுறவுக் கொள்கையை செயற்படுத்தும் பிரயோக உத்திகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அதாவது, பிராந்திய மேலாண்மையைப் பேணிப் பாதுகாப்பது என்ற மூலோபாயத்தில் மாற்றமில்லை. ஆனால், அந்த மேலாண்மையை எப்படிப் பேணுவது என்ற செய்முறைத் தந்திரங்களில் அல்லது பிரயோக உத்திகளில் மாற்றங்கள் ஏற்பட முடியும்.

பிராந்தியத்தில் தனது மேலாண்மையை மீறிப் போகும் அயலவர்களை எப்படிக் கையாள்வது எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதில் கடந்த பல தசாப்தங்களில் மாறுபட்ட அணுகுமுறைகளை இந்தியா கைக்கொண்டு வந்திருக்கிறது. இம்மாறுபாடுகளைப் பிரதானமாக பின்வரும் காரணிகள் தீரு;மானித்திருக்கின்றன.

01)    இந்தியாவில் ஆட்சிக்கு வரும் தலைமைத்துவம் எத்தகையது என்பது.

02)    பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றங்களும், அதனால் ஏற்படக்கூடிய புதிய அணி சேர்க்கைகளும்.

03)    உலக அளவில் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களும், புதிய அணி சேர்க்கைகளும்.

மேற்படி காரணிகளைப் பொறுத்து இந்தியாவின் பிரயோக உத்திகளும் வித்தியாசப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, இந்திராகாந்தி ஒரு இரும்புப் பெண்ணாகக் காட்சியளித்தார். அவருடைய முதிர்ச்சியும் மிடுக்கும் பிராந்தியத்தில் அவரை கேள்விக்கிடமற்ற ஒரு பேரரசியாக நிறுவியிருந்தன. அவர் கெடுபிடிப் போர்க் காலத்துக்குரியவர். கெடுபிடிப் போர் நிலைமைகளுக்கேற்ப அவர் அதிரடியாகச் சில முடிவுகளை எடுத்தார். ஆனால், அவருடைய மகன் ரஜீவ் அப்படியல்ல. அவர் தாயைப் போல முதிர்ச்சியும் மிடுக்கும் ஜனவசியமும் மிக்கவராகக் காணப்படவில்லை. அவரோடு ஒப்பிடுகையில் இலங்கைத்தீவில் ஜெயவர்த்தன ஒரு பழுத்த அரசியல் வாதியாகக் காணப்பட்டார். மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றுமளவுக்கு ஜெயவர்த்தன தந்திரங்களில் தேர்ந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அது கெடுபிடிப் போரின் முடிவுக் காலம். எனவே, ரஜீவினுடைய முடிவுகள் அவருடைய ஆளுமை, முதிர்ச்சியின் அளவு எதிர்த்தரப்பின் முதிர்ச்சி, தந்திரம் மற்றும் காலச் சூழல் என்வற்றால் வரையறைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.

இந்திராவுக்குப் பின் இரும்பு மனிதர்கள் இந்தியத் தலைமைத்துவத்திற்கு வரவில்லை. இப்பொழுது இந்தியாவுக்குத் தேவை. (Visionaries) தரிசனமுடைய தலைவர்கள் அல்ல. யதார்த்த பூர்வமான (Pragmatic) தலைவர்களே என்று குளொடி ஆர்பி எழுதியுள்ளார். சர்தார் பட்டேலைப் போன்ற இரும்பு மனிதர்களே இப்பொழுது இந்தியாவுக்குத் தேவை என்பது அவருடைய கருத்து. மோடியும் பட்டேலைப் போல யதார்த்தபூர்வமானவர் என்றே பொதுவான ஒரு கணிப்பு உண்டு.  அதாவது, பல தசாப்தங்களுக்குப் பின் இந்தியத் தலைமைத்துவத்தில் ஒரு இரும்பு மனிதர் வந்திருக்கிறார்.

எனவே, இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் மாறிலியான அம்சங்களின் அடிப்படையில் ஒரு பிராந்தியப் பேரரசாக அதன் பிராந்திய மேலாண்மையை  எப்பொழுதும் பேண முற்படும். அதேசமயம் மாறும் அம்சங்களின் அடிப்படையில் உள்நாட்டிலும் நாட்டுக்க வெளியிலும்  தலைமைத்துவ மாற்றங்கள் மற்றும் புதிய அணிச் சேர்க்கைகள் உருவாகும்போது இந்தியா அதன் வெளியுறவுக் கொள்கையை அமுல்படுத்தும் பிரயோக உத்திகளை மாற்றுவதுண்டு.

இப்படிப் பார்த்தால் மோடியின் வருகை ஒரு மாற்றம். இது உள்நாட்டில.; அதேசமயம், பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன?.

அமிற்றாவ் ஆச்சார்யா வொஷிங்டன் டி.சி.யில் அமைந்திருக்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகள் துறையில் பேராசிரியராக இருக்கிறார். ''அமெரிக்க உலக ஒழுங்கின் முடிவு' என்று ஒரு புதிய நூலை அவர் வெளியிட்டிருக்கிறார்.

சீன மற்றும் மோடியின் எழுச்சியோடு உலகம் ஒரு துருவ (unipolar) உலக ஒழுங்கிலிருந்து இரு துருவ (bipolar)  அல்லது பல துருவ (multipolar)  ஒழுங்கொன்றை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பல துருவ உலக ஒழுங்கிற்குப் பதிலாக பலதுருவ கலப்புலகம் (multiplex world order)  ஒன்று உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகளைப் பற்றி அவர் சுட்டிக்காட்டுகிறார். பலதுருவ கலப்புலகம் எனப்படுவது ஒரு துருவம் மட்டும் உலகில் மேலோங்கிக் காணப்படுவதற்கு பதிலாக ஒன்று மற்றத்தில் தவிர்க்க முடியாதபடி தங்கியிருக்கின்ற பிராந்திய பேரரசுகள் மற்றும் பிராந்திய ஒன்றியங்கள் போன்ற பல்வேறு புதிதாக எழுச்சிபெறும் துருவங்களின் கூட்டிருப்பாகும்.  

ஐ.நா. மன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது அதில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகளின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. உலக சமூகத்தில் அமெரிக்காவும் அதன் எதிரிகளும் என்ற கறுப்பு வெள்ளைப் பிரிவினைக்கு மாற்றாக புதிய போக்குகள் உருவாகி வருவதை இது காட்டுவதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை உலகம் ஏறக்குறைய ஓரலகாகிவிட்டது. ஆனால், அதற்காக அனைத்துலக அரசியலை அதற்கூடாகத் தட்டையாக விளங்கிக்கொள்ளத் தேவையில்லை. ஓரே திறந்த சந்தைப் பொருளாதார அமைப்புக்குள்ளும் தேசிய உணர்வுகள் காரணமாகவோ அல்லது பிராந்திய மேலாண்மைக்கான வேட்கை காரணமாகவோ அல்லது உலக மேலாண்மைக்கான வேட்கை காரணமாகவோ புதிய துருவ இழுவிசைகள் உருவாகி வருகின்றன.

உக்ரெய்ன் விவகாரமானது அரசியலில் மென்சக்தி அணுகுமுறைக்குள்ள வரையறைகளை மட்டுமல்ல, உலகப் பேரரசான அமெரிக்காவிற்குள்ள சில வரையறைகளையும் உணர்த்தியிருப்பதாகவே கருதப்படுகின்றது.

உலக வங்கியின் உதவியுடன் உலகம் தழுவிய பொருளாதார ஒப்பீட்டுச் செயன்முறைத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் படி இந்த ஆண்டின்  முடிவில் சீனாவானது உலகின் ஆகப் பெரிய பொருளாதாரமாக மேலெழுந்து விடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னிருந்து உலகின் ஆகப் பெரிய இராணுவச் சக்தியாக இருந்து வரும் அமெரிக்கா அடுத்த ஆண்டிலிருந்து உலகின் ஆகப் பெரிய பொருளாதார சக்தியில்லை என்ற ஒரு நிலை முதன் முதலாகத் தோன்றப்போகிறது என்று அமிற்றாவ் ஆச்சார்யா கூறுகிறார்.  

இதில் மூன்றாவதாக இந்தியா நிற்கின்றது. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்படி புகோள ஓட்டப் பந்தயத்தில் இந்தியா புதிய உத்வேகத்துடன் ஓடத் தொடங்கும் என்ற ஓர் எதிர்பார்ப்பு மேற்கத்தைய விமர்சகர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. மோடியை இந்தியாவின் மாக்கிறட் தட்சர் என்று வர்ணிக்கும் சில விமர்சகர்கள் பிரித்தானியாவில் மாக்கிறட் தட்சர் அவருடைய ஆட்சிக் காலத்தில் சாதித்ததைப் போல மோடியும் இந்தியப் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

சந்தைப் போட்டியில் சீனாவை முந்துவதே மோடியின் கனவாயிருந்தால் அவர் தனது முழுக்கவனத்தையும் அதில் குவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இது விசயத்தில் சீனா தனது பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக எப்படி வெளிவிவகாரங்களில் அதிகம் முட்டுப்படாமல் விலகி இருந்து வருகிறதோ அதே பாணியை மோடியும் கையாள்வாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பதவியேற்பு வைபவத்திற்கு சார்க் தலைவர்களை அழைப்பது என்ற முடிவு முதலில் எடுக்கப்படவில்லையாம்.  நவாப் ஷெரீப்பை வரவழைப்பதன் மூலம் முஸ்லிம்களின் அவநம்பிக்கையைப் போக்கலாம் என்று மோடி விரும்பினாராம். நவாப் ஷெரீப்பை மட்டும் தனியாக அழைப்பது துருத்திக்கொண்டு தெரியும் என்பதால் சார்க் தலைவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்களாம்.

ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து டில்லிக்குப் போன வைகோவை மோடி சுமார் 35 நிமிடங்கள் சந்தித்தார். இச்சந்திப்பின்போது மோடி எதுவுமே பேசாமல் வைகோ கூறியவற்றை கேட்டுக்கொண்டிருந்தாராம். அருகிலிருந்த அருண் ஜெட்லி தான் சில தடவைகள் குறுக்கிட்டுக் கதைத்திருக்கிறார். பின்னர் ராஜபக்ஷவைச் சந்தித்த போது மோடி இந்தியாவுக்கு அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மட்டும் கூறவில்லையாம். தமிழ் நாட்டில் இருக்கும் தனது நண்பர்களில் சிலர் பிரிவினையை ஆதரித்தபோதும் தனது அரசாங்கம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஓர் இறுதித் தீர்வு காணப்படுவதையே ஆதரிக்கும் என்ற தொனிப்படவும் உரையாடியதாக ஒரு தகவல் உண்டு.

அதோடு,ஜெயலலிதா பெற்ற அமோக வெற்றியும் ராஜபக்ஷவின் வருகைக்கு தமிழ் நாட்டில் காட்டப்பட்ட எதிர்ப்பின் பருமனும் தமிழ் நாட்டைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைக்கு டில்லியிருப்பவர்களை தள்ளியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.

மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அருண் சொளரி. ஆனால், அவர் பின்னர் தெரிவு செய்யப்பட்டவில்லை. ஊடகவியலாளராகிய ரவி  அகர்வாலிடம் அவர் அண்மையில் பின்வருமாறு கூறியிருக்கிறார். ''மோடியின் திட்டங்களைத் தெரியும் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு மெய்யாகவே எதுவும் தெரியாது. ஆனால் யாருக்கு அவை தெரியுமோ அவர்கள் கதைக்கமாட்டார்கள்' என்று.

அப்படி இருக்கலாம். ஆனால், அதற்காக மோடியின் வெளியுறவுக் கொள்கையானது புதிர்களும் மர்மங்களும் நிறைந்ததாக இருக்கப்போகிறது என்று கருதத் தேவையில்லை. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா தனது பிராந்திய மேலாண்மையை எப்படி நிலைநாட்டப்போகிறது என்பதே இங்கு ஈழத் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான விடையில்தான்  தமிழர்களுடைய எதிர்காலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

http://globaltamilnews.net/

"பதவியேற்பு வைபவத்திற்கு சார்க் தலைவர்களை அழைப்பது என்ற முடிவு முதலில் எடுக்கப்படவில்லையாம்.  நவாப் ஷெரீப்பை வரவழைப்பதன் மூலம் முஸ்லிம்களின் அவநம்பிக்கையைப் போக்கலாம் என்று மோடி விரும்பினாராம். நவாப் ஷெரீப்பை மட்டும் தனியாக அழைப்பது துருத்திக்கொண்டு தெரியும் என்பதால் சார்க் தலைவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்களாம்."

இதை நிலாந்தனின் பல்லி கேட்டு சொல்லியதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.