Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிக்க முடியாத ஈழம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்க முடியாத ஈழம்

தீபச்செல்வன்

தமிழீழம் சாத்தியமற்றது என்று Ôதி இந்துÕ நாளிதழின் ஆசிரியர் ராம் தனது பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஈழ மக்களின் போராட்டத்திற்கு எதிராக அவ்வாறு தெரிவித்தமைக்கு எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஈழத் தமிழர்களுக்கு தான் விரோதமானவர் அல்ல என்று சொல்லும் ராம் விடுதலைப் புலிகளையே தான் விமர்சிப்பதாகக் கூறுகிறார். ஆனால் தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலமும் இனப்படுகொலையாளியான ராஜபக்சேவின் நண்பனாக இருந்துகொண்டு ஈழ இனப்படுகொலை விடயத்தில் அவரையே விசாரணை செய்ய வேண்டும் என்பதும் ஈழத் தமிழருக்கு விரோதமானதே.

தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலம் ஈழத் தமிழர்களின் அறுபது வருடகால போராட்டம்மீது தனது விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ராம் போன்ற நடுநிலைமைவாதிகள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தொடர்பாக நீங்கள் பேசிக்கொண்டே இருக்கும் நிலையில் எங்கள் இனம் அழிக்கப்படுகிறது. எங்கள் தாயகம் அபகரிக்கப்படுகிறது.

நீங்கள் விடுதலைப் புலிகளை விமர்சித்துக்கொண்டே வேறு ஒரு பக்கத்திற்கு பார்வையை இழுத்துச் சென்று ராஜபக்சேவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறீர்களா? விடுதலைப் புலிகள்மீதான காய்ச்சலில் இருந்து விடுபட்டு வெளியில் வாருங்கள். அழிக்கப்படும் ஈழ மக்களைக் காப்பாற்றுங்கள். ஒடுக்கப்படும் ஈழப்போராட் டத்திற்கு ஆதரவு தாருங்கள். எல்லாவற்றின் பிறகும் ஈழமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

முல்லைத்தீவிலிருந்து மணலாறு வழியாக திருகோணமலை சென்று கொண்டிருந்தேன். முல்லை திருகோணமலை வீதியிலிருந்து மணலாற்றுக்குச் செல்லும் அந்த வழிகளில் இராணுவமுகாம்கள் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக் கின்றன. அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லும்போது சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஒரு காலத்தில் மணலாற்றில் தமிழ் மக்கள் வசித்துவந்தார்கள். ஈழத்தின் இருதய பூமி என்று மணலாற்றைச் சொல்வார்கள்.

மணலாறு காடுகளுக்குப் பெயர் போன பிரதேசம். இன்று அந்தப் பிரதேசத்திற்குப் பெயர் வெலியோயா. புலிகளால் மணலாறு ஒரு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஈழத்தின் இருதய பூமியாக மணலாறு காணப்பட்டதால் அந்தப் பிரதேசத்தை கைப்பற்ற புலிகள் தொடர்ந்தும் யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

மணலாற்றைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்கு புலிகளிடம் ஒரே காரணமே இருந்தது. 1985இல் கொக்கிளாய் மீதான தாக்குதலின்போதும் சரி, 1990கள் மற்றும் 1995இல் நடந்த தாக்குதல்களின் போதும் சரி, மணலாற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர புலிகள் முயன்றார்கள். முப்பது வருடங்களாக ஈழப் போராளிகளின் நிழலிலும் இருபது வருடங்களாக புலிகளின் நிழலிலும் வடக்கு கிழக்கு இருந்திருக்கா விட்டால் இன்று முழுத் தாயகமும் சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டிருக்கும். மணலாற்றில் திட்டமிட்ட வலிந்த சிங்களக் குடியேற்றங்களை தடுக்கும் நோக்கி லேயே அந்தப் பகுதியை புலிகள் கைப்பற்ற நினைத்தனர். மணலாறு, கொக்கிளாய் முதலிய பகுதிகளில் தமிழ் மக்கள் இனக்கலவரம் செய்து விரட்டப்பட்ட பின்னர் அங்கு சிங்களக் குடியேற்றங்களே நிகழ்த்தப்பட்டன.

ஜனகபுர, சிங்கபுர, 13ஆம் கொலனி என்று முல்லைத்தீவின் எல்லையில் சில சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அந்தப் பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டபொழுது குடியேற்றப்பட்டவர்கள் இன்று முப்பது ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்கள். முழுக்க முழுக்க சிங்களக் கிராமத்தைப் போல அவை மாறிவிட்டன. ஆங்காங்கே மரங்களுக்குக் கீழாகவும் புத்தர் சிலைகளுக்கு அருகாகவும் சைவக் கோயில்கள் சிறியளவில் உள்ளன. முழுக்க முழுக்க சிங்களப் பெயர்ப் பலகை கள் என்று சிங்களக் கிராமமாகவே மாறிவிட்டது. இந்தக் கோலத்தைப் பார்க்கும்பொழுது ஈழத் தமிழர்களின் நெஞ்சம் கொதிக்கும்.

13ஆம் கொலனிப் பகுதியை அண்டி இப்பொழுது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை திருகோணமலையின் தென்னை மரவாடியை நோக்கி நகர்கின்றன. சிறிய சிறிய மண் வீடுகள் தகரங்களால் வேய்ந்தபடி அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 13ஆம் கொலனியில் வலிந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு போரால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் முப்பது வருடப் போரால் இன வன்முறையால் பாதிக்கப்பட்ட தென்னைமரவாடி மக்கள் இன்னமும் தற்காலிக வீடுகளில்தான் வசிக்கின்றனர். இந்த இனவொதுக்கல் தம்மைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக தென்னை மரவாடி மக்கள் குறிப்பிட்டார்கள்.

ஒதிமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் கஜபாகுபுர ஆக்கப்பட்டுள்ளன. சிலோன் தியேட்டர், டெலஸ் பாம் என்பனவும் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து ஒதியமலை பகுதியை நோக்கி நாளும் பொழுதும் ஒரு வீடு என்ற வகையில் சிங்களக் குடியேற்ற முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. ஒதியமலையில் மக்கள் வசிக்கும் காணிநிலங்கள் அபகரிப்பு எல்லையிடும் சூழலில் மக்களின் காணிகளை நோக்கி இந்த சிங்களக் குடியேற்றங்களால் நடந்து வருகிறது. வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் சுற்றி வளைக்கப் படுகின்றது. வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக் குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திருமலை, அம்பாறை முதலிய மாவட்டங்களின் நிலைமை சிங்களக் குடியேற்றங்களால் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது.

வலிந்த சிங்களக் குடியேற்றங்களை நாம் எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. கொழும்பில் தமிழர்கள் காணிகள் வாங்கி குடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசாலோ அல்லது சில அரசியல்வாதிகளாலோ திட்டமிட்ட நோக்கங்களுக்காகக் கொண்டு குடியேற்றப்பட்டவர் களல்ல. வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டன. திருகோணமலையைப் பொறுத்த வரையில் 1915 லேயே சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் மக்களின் தாயகப் பரப்பை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழ் மக்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடனும் அவர்களின் அரசியல் உரிமையை பறிக்கும் நோக்கத்துடனும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் அதைப் பிரிவினைவாதமாக பார்க்காமல் இலங்கை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஒருமுறை குறிப்பிட்டபோது சிங்கள இனவாதிகள் கடுமையாக இதனை எதிர்த்தார்கள். ஜே.வி.பி. மற்றும் வாசுதேவ நாணக்கார போன்ற போலி இடதுசாரிகளும்கூட இதனை எதிர்த்து தமது இனவாத முகத்தை வெளிப்படுத்தினார்கள். வடக்கு கிழக்கை இணைக்க முயன்றால் அதற்கு அரசியல் அமைப்பு ரீதியாகப் பதில் அளிக்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. இலங்கை அரசால் தனது நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தை வைத்து தமிழ் மக்களுக்கு எதிரான எதையும் செய்ய இயலும் என்பது உண்மையே.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள இன நல்லிணக்கம் முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்டு என்று அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல சொன்னார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு நிலவும் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இங்குதான் இலங்கை அரசு எதனை இன நல்லிணக்கமாக கருதுகிறது என்பது வெளிப்படுகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று கொந்தளித்த தேசிய தேசப்பற்றுள்ள இயக்கம், முஸ்லிம் தரப்புடன் இணைந்து தமிழ் தரப்பு இதனை விரைவில் நிறைவேற்றும் என்றது.

இந்தியாவின் தேவைக்காகவே வடக்கு கிழக்கை இணைக்க கூட்டமைப்பு முற்படுகிறது. அந்த எண்ணம் ஒரு பொழுதும் நிறைவேறாது என்று ஜே.வி.பி. செயலாளர் ரிவின் சில்வா குறிப்பிட்டிருந்தார். தமிழ்மக்களுக்குத் தேவையான வீடுகள், தொழில், கல்விப் பிரச்சினையைத் தீர்த்து வைக்காமல் பிரிவினைவாதத்திற்கு தூபமிட்டு வடக்கு கிழக்கை இந்தியாவுக்குத் தாரைவார்க்க கூட்டமைப்பு செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் ஈழ மக்களின் தாயகம் பாதுகாக்கப்படுமே தவிர, அது இந்தியாவுக்குத் தாரைவார்ப்பதாக எப்படி அமையும்? தமிழ் மக்களுக்கு சோறு இல்லை என்று கண்ணீர் விடும் ஜே.வி.பி.யின் போலி முகத்தை இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையையும் அவர்களின் கோரிக்கைகையும் நிராகரிக்க ஜே.வி.பி. சமயத்திற்கு ஏற்ற முகம் அணிந்து வார்த்தைகளால் திசைதிருப்புவது புதியதல்ல.

வடக்கும் கிழக்கும் உயர்நீதிமன்றத்தால் விவாகரத்துப் பெற்றுவிட்டன என்று தெரிவித்துள்ள ஹெலஉறுமய, பிரிந்து போன இரண்டு மாகாணங்களுக்கு விக்கினேஸ்வரன் திருமணம் செய்து வைக்கத் தேவையில்லை என்றது. இது இலங்கையின் சட்டத்தின் தீர்ப்பு என்று தெரிவித்துள்ள அக்கட்சி இதனை மாற்றி வடக்கு கிழக்கை இணைக்க முற்படுவது இலங்கையின் நீதித்துறையை மதிக்காத செயல் என்றும் தெரிவித்தது. அத்துடன் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனில் நாடு முழுவதும் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கருத்தைப் பெற வேண்டும் எனவும் தெரிவித் தது. இலங்கை உயர்நீதிமன்றத்தில் ஒடுக்கப்படும் ஈழ மக்களுக்கு நீதியான தீர்ர்புக்கள் எதுவும் கிடைத் தனவா? சிங்கள அரசின் ஒடுக்கு முறைக்கு நீதித் துறையும் போதிய ஒத்துழைப்பு நல்கி வருகிறதல்லவா?

வடக்கு கிழக்கு இணைப்பைத் தெற்கில் உள்ள வர்கள் எதிர்க்கின்றார்கள். வடக்கு கிழக்கில் வாழ்பவர் கள்தான் வடக்கு கிழக்கு இணைப்பைக் குறித்து முடிவெடுக்க வேண்டும். வடக்கு கிழக்கைத் தெற்கோடு இணைத்து வைத்திருக்க விரும்புவதும் வடக்கு கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களை இணைக்க விரும்பாமல் இருப்பதும் என்ன வகையான அரசியல். தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை இணைக்க எதற்கு சிங்கள மக்களிடம் அனுமதி கோரவேண்டும். சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையினர் என்பதனால் அவர்களால் வடக்கு கிழக்கு இணைப்பை முறியடிக்க முடியும் என்பதற்காகவே இவ்வாறு சிங்கள இனவாதிகள் சொல்லுகின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பை சிங்கள அரசும் சிங்கள இனவாதிகளும் கடுமையாக எதிர்க்க என்ன காரணம் இருக்கக்கூடும்? வடக்கு கிழக்கில் சிங்கள மக்களைப் பலவந்தமாக குடியேற்றுவதற்கான காரணமே அது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதனை இந்தியா ஒரு தீர்வாக முன்வைத்தது. 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி 1988ஆம் ஆண்டு நடந்த தேர்தலைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டது. இதன்படி வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா,கிழக்கில் மட்டக்களப்பு, திருகோண மலை, அம்பாறை முதலிய எட்டு மாவட்டங்கள் இணைக்கப் பட்டன. திருகோணமலை தலைநகரமாக்கப்பட்டது. இலங்கை- இந்திய ஒப்பந்தம் எப்பொழுதும் கிழித்தெறியப் படக்கூடிய ஒப்பந்த மாகவும், இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு இலங்கை நீதித் துறையின் பெயரால் எப்பொழுதும் பிரித்துப் போடக்கூடியதாகவும் இருந்தது.

இதன் காரணமாகவே இன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. பிரிக்கப்பட முடியாத தாயகம் என்பது தனி ஈழம் என்ற அடிப்படையிலேயே அந்தக் கோரிக்கை அன்று முன்வைக்கப்பட்டது. தமிழர்கள் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமையும் அன்றைய சூழலில் சிங்கள அரசு தற்காலி கமாகவே வடக்கு கிழக்கை இணைத்தது என்பதும் சிங்கள அரசுகள் தமிழ் மக்களை ஒடுக்க எப்பபெழுதும் செயலாற்றுகிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது. பிரேமதாசாவின் தற்காலிக அரசியல் தீர்வை மகிந்த ராஜபக்சே நிரந்தரமாக கிழித்துள்ளார். சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கான தீர்வை எப்பொழுதும் முன்வைக்கப் போவதில்லை. அவை தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் எதிரானவையே.

வடக்கு கிழக்கில் வேகமாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வடக்கு கிழக்கு இணைப்பு அவசியமானது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டது போன்ற பலவீனமாக இணைக்க முடியாது. இன்று தமிழ் மக்களுக்கு எதிராக நடை பெறும் அத்தனை உரிமை மீறல்களுக்கும் நில அபகரிப்புகளுக்கும் இன அழிப்புக்கும் தமிழ் மக்கள் தமிழ் மக்களை ஆளும் தீர்வொன்றுதான் அவசியமானது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஈழத் தமிழர்களின் உரிமை சார்ந்தது. இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தடுக்கவும் ஈழத் தமிழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவும் வடக்கு கிழக்கு இணைந்திருப்பது அவசியமானது.

பலவந்தமாக ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்ட ஈழத்தைப் பிரிக்க வேண்டாம் என்று சிங்கள இனவாதிகள் கூச்சலி டுகின்றனர். காலம் காலமாக மொழியால், இனத்தால், வரலாற் றால், பண்பாட்டால் இணைந்திருந்த வடக்கு கிழக்கு என்ற எம் தாய் நிலத்தைப் பிரிக்க வேண்டாம் என்று தமிழ் மக்கள் கோருவது மட்டும் பிரிவினைவாதமாகிறது. தமிழர்களின் நிலத்தை துண்டு துண்டாகப் பிரிப்பதுவே பிரிவினைவாதம். ஒன்றுபட்ட ஈழ மண்ணில் வாழ நினைப்பது பிரிவினைவாதமல்ல. நாம் ஒரு இனத்தை அழிப்பதற்காக ஈழத்தைக் கோரவில்லை. அழிக்கப் படும் ஒரு இனத்தைப் பாதுகாக்கவே ஈழத்தைக் கோருகிறோம். நாம் சிங்களவர்களின் தாயகத்தைக் கோரவில்லை. நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் தாயகத்தையே கோருகிறோம்.

இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்றபோதும் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்று இடதுசாரி அமைச்சர் வாசுதேவ நாயணக்கார போகிற போக்கில் சொல்லுகிறார். தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்று சொல்லிக்கொண்டே இது பௌத்த சிங்கள நாடு என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். தமிழ் மக்கள் மதித்த ஒரு இடதுசாரி வாசுதேவ. பின்னர் ஒரு அமைச்சராகவும் ராஜபக்சேவின் ஆட்சியில் அங்கம் வகித்து இடதுசாரி முகத்தை வெளிப்படுத்திய வாசுதேவ இன்று சிங்கள பௌத்தவாதி என்ற தன் மற்ற முகத்தையும் காட்டியிருக்கிறார். வாசுதேவ நாயணக் காரரே இவ்வாறு இருப்பாரெனில் மகிந்த ராஜபக்சேக்களும் பொதுபலசேனாக்களும் எப்படி இருப்பர்? இலங்கையில் பிறகெப்படி இன நல்லிணக்கம் இருக்கும்?

இலங்கை பௌத்த நாடா? இந்து நாடா? என்கிற விவாதம் ஒன்று அண்மையில் பாராளுமன்றில் நடந்தது. இலங்கையை ஆள்பவர்கள் எல்லோரும் இலங்கை பௌத்த சிங்கள நாடு என்று பேசிக்கொண்டே இன நல்லிணக்கத்தையும் இன அழிப்பையும் மேற்கொள்கின்றனர். குறித்த விவாதத்தின்போது இராவணன் ஓர் சிங்கள பௌத்தன் எனவும் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இராவணனை சிங்களவன் - பௌத்தன் என சொல்லும் வரலாற்று அரசியல் அறிவுள்ள ஒருவர் அமைச்சராக இருப்பது மிகவும் ஆபத்தும் வேடிக்கையும் கொண்டது.

புலிகள் பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளையே அழித்தோம், வடக்கு கிழக்கில் இன நல்லிணக்கம் நிலவுகிறது, தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர், ராஜபக்சேவைப் பாராட்டுகிறார்கள். இதுபோன்ற பொய்களை எல்லாம் சம காலத்திலேயே சொல்ப வர்கள் வரலாற்றை மாற்றிச் சொல்வது ஆச்சரியமா னதல்ல. உண்மைகளையும் வரலாற்றையும் நிகழ் காலத்தையும் மறைத்து மாபெரும் இன அழிப்பையும் உரிமை மறுப்பையும் சிங்களப் பேரினவாதிகள் மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இது போன்ற புனைவுப் பேச்சுக்கள் தக்க உதாரணங்களாகின்றன.

வடக்கும் கிழக்கும் வாழும் மக்களால் ஒன்றான தாயகம். இனத்தால் மொழியால் பண்பாட்டால் வரலாற்றால் அது ஒன்றிணைந்த தேசம். சட்டங்களும் அரசியல்களும் ஆக்கிரமிப் புகளும் வடக்கு கிழக்கைப் பிரித்துவிட முடியாது. வடக்கும் கிழக்கும் என்றைக்கும் பிரிக்க முடியாத தாயகம் என்பதை இலங்கை அரசுக்கு ஈழ மக்கள் பல சந்தர்ப்பங்களில் சொல்லியி ருக்கிறார்கள். வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனி தேசமாக அறிவிக்க வேண்டியது இலங்கைப் பிரச்சினையின் தீர்வாக உள்ளது. அந்தத் தீர்வு ஒன்றே தமிழர்களின் காயங்களுக்கு மருந்தாகவும் பிரச்சினைக்கு முடிவாகவும் அமையும். எனவே இணைந்த வடக்கு கிழக்கு என்பது அவசியமானது.

கொழும்பில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது பற்றியும் இராவணன் சிங்களவன் என்றும் இலங்கை பௌத்த சிங்கள நாடு என்றும் பேசிக் கொண்டிருக்கையில் வடக்கு கிழக்கில் சிங்கள பூமியாக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப் படுகின்றன. இலங்கை அரசு என்பது சிங்கள அரசாகவும் சிங்கள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் ஆனது. சிங்கள அரசு, தமிழர் தாயகத்தை ஒடுக்கி அழிக்க நினைப்பது. அழிக்கப்படும் இனத்தைப் பாதுகாக்கவும் அபகரிக்கப்படும் தாயகத்தை மீட்கவும் வேண்டிய அவசியம் இன்றைய காலத்தில் இன்னமும் அவசியமாகியுள்ளது.

வடக்கு கிழக்கைப் பிரிப்பதன் மூலம் ஈழக் கனவைத் தகர்ப்பதாகவே சிங்களப் பேரினவாதிகள் நினைத்தனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கென்று ஒரு துண்டு நிலம்கூட இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதனாலேயே தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் குடியேற்றங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு நடத்தப்பட்ட மாகாண சபைத் தீர்வை புலிகள் அன்று எதிர்த்தார்கள். புலிகள் எதிர்த்தது வடக்கு கிழக்கு இணைப்பை அல்ல. மாகாணசபையையே. ஏனென்றால் வடக்கு கிழக்கை இணைக்கும் சிங்கள அரசாங்கம் அதை எப்பொழுது வேண்டுமானாலும் பிரிக்கலாம். அந்த அதிகாரம் இலங்கை அரசிடம் உண்டு. எக்காலத்திலம் வடக்கு கிழக்கைப் பிரிக்க முடியாத தீர்வு ஒன்றையே விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தார்கள். அதுதான் தமிழீழம்.

இலங்கை அரசால் பிரிக்க முடியாத, தலையிட முடியாத ஒரு தீர்வையே புலிகள் இயக்கம் கோரியது. அதன் மூலமே தமிழர் நிலத்தை அபகரித்தலையும் தமிழ் இனத்தை அழித்தலையும் நிறுத்த இயலும். இந்த தீர்வுக்கு இணங்குவதன் மூலம், விடுதலைப் புலிகளை உலகோடு இணைந்து அழித்ததன்மூலம் எது நடக்கக்கூடாது என்றும், எது ஈழத் தமிழினத்தை அழிக்கும் என்றும் விடுதலைப் புலிகள் நினைத்தார்களோ அதையே இன்றைக்கு சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே தமிழ் ஈழ நிலத்தை சிங்களப் பேரினவாத அபகரிப்பிலிருந்தும் தமிழ் இனத்தை இன அழிப்பிலிருந்தும் காப்பாற்ற வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழத் தீர்வு ஒன்றே தீர்வாக உள்ளது

http://uyirmmai.com/Contentdetails.aspx?cid=6496

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.