Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் நில, கலாச்சார ஆக்கிரமிப்புகள்: புற்றுநோய் உடல் முழுக்கப் பரவ தொடங்கிவிட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் நில, கலாச்சார ஆக்கிரமிப்புகள்: புற்றுநோய் உடல் முழுக்கப் பரவ தொடங்கிவிட்டதா?

முத்துக்குமார்

வடமாகாணசபை செயற்படத்தொடங்கி 7 மாதங்களாகின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் முதன்முதலாக நெருக்கடிகள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்றிருக்கின்றார். வடமாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான ரவிகரனும், ஜெகநாதனும் அழைத்ததன் பேரிலேயே அங்கு சென்றதாகக் கூறியிருக்கின்றார். அவர்கள் அழைத்திருக்காவிட்டால் இந்தப்பயணமும் இடம்பெற்றிருக்காது.

கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்களோ அல்லது அதில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரோ செல்லவில்லை. அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. முதலமைச்சர் எப்பயணத்திற்கும் தங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். குறைந்தபட்சம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பேரினவாத ஆக்கிரமிப்பினால் படும் அவலங்களை அதிகளவில் வெளிக்கொண்டு வந்தார். அவர் கூட அழைக்கப்படவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், கல்வியமைச்சர் குருகுலராஜா, சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் அதிகாரிகள் என்போர் மட்டுமே சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் சிங்களக் குடியேற்றங்களினால் மட்டுமல்ல, பேரினவாத ஆக்கிரமிப்பினால் சூழலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம். அதனைப்பற்றிய விபரங்களை ஆய்வு நிலையில் புரிந்துகொள்வதற்கும், அறிக்கை விடுவதற்கும் சூழலியல் அறிஞரான ஐங்கரநேசனையும் அழைத்துச் சென்றிருக்கவேண்டும். இவர் விவசாய அமைச்சராகவும் இருப்பதனால், அவரது பிரசன்னம் முக்கியமானது. இதைவிட இம்மாவட்டம் கடல்சார்ந்த மாவட்டமாகவும் இருப்பதனால் கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரனும் சென்றிருக்கவேண்டும். அவர்கள் எவரும் செல்லவில்லை.

முதலைமச்சர் விக்னேஸ்வரன் மாவட்டம் முழுவதற்கும் செல்லவில்லை. ஒட்டிசுட்டான், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் பகுதிகளுக்கு மட்டும் சென்றிருக்கிறார். இப்பிரதேசங்கள் முக்கியமானவை என்பது உண்மைதான். எனினும் பேரினவாத ஆக்கிரமிப்புள்ள ஏனைய பகுதிகளுக்கும் சென்றிருக்கவேண்டும். குறிப்பாக நெடுங்கேணி, ஒதியமலை, கென்ற்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் பாம் போன்ற பகுதிகளுக்கும் சென்றிருக்கவேண்டும். இவை முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட எல்லைப்பகுதிகளில் இருப்பவை. இப்பிரதேசங்களை மையமாக வைத்துத்தான் வெலிஓயா சிங்களப் பிரதேசசெயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்கபூர்மான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பிரச்சினைகள் முழுமையாக உள்வாங்கப்படவேண்டும். இது நடைபெறாதது துரதிஸ்டவசமானது.

முதலமைச்சர் குழுவினர் முதலில் ஒட்டிசுட்டான் பாவட்டிமலைக்குச் சென்றனர். அங்கு பெரும்பான்மை இனத்தவர் இராணுவத்தின் உதவியுடன் கருங்கல் அகழ்வினை பாரிய இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்கின்றனர். இதனால் எதிர்காலத் தலைமுறைக்கும் அவசியமான மூலவளங்கள் அள்ளிச்செல்வது மட்டுமல்ல, சூழலியற் பாதிப்பினையும் இக்கருங்கல் அகழ்வு உருவாக்குகின்றது. ஒட்டிசுட்டான் மக்கள் இதன் சூழல் பாதிப்புப்பற்றி விரிவாகக் கூறினர். பாரிய வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால் அயற்கிராம வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதாகவும் முறையிட்டனர்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பிரதேசங்களுக்குச் சென்றபோது தமிழ்மக்களின் நிலங்கள் பச்சையாக அபகரிக்கப்படுவது பற்றியும் கடற்பிரதேங்கள் சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்படுவது பற்றியும் மக்கள் எடுத்துக்கூறினர். ஏறத்தாழ 500 சிங்கள மீனவர்கள் கொக்கிளாய்க் கடற்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் உறுதிகள் வைத்திருக்கின்ற காணிகள் இரத்துச் செய்யப்பட்டு வெளிமாவட்டச் சிங்களவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

கூட்டமைப்பு இதுவரை இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான எவற்றையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைத்தனர். இளைஞர்கள் சிலர் முதலமைச்சரிடம் உங்களுக்கு எங்களைப் பார்க்க வருவதற்கே 7 மாதங்கள் தேவையாக இருந்ததா என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டினர்.

கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த அருட்தந்தை ஜோர்ஜ் பெனான்டோ நாளாந்தம் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ளன, நாம் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளோம் எனக் கூறினார். அதிகாரமில்லையெனக் கூறாமல் சிறிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்காகவாவது முயற்சியுங்கள் எனக்குறிப்பிட்டார். விக்கினேஸ்வரன் சமாளிப்புப் பதில்களைக் குறிப்பிட்டாரே தவிர மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய எவற்றையும் கூறவில்லை.

வடபகுதியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மிகவும் தெளிவானது. தமிழ்த்தேசிய இருப்பிற்கான அடித்தளங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழித்தொழிப்பதே அவ்வேலைத்திட்டமாகும். தமிழ்த்தேசியத்தின் இருப்பு, நிலம், பொருளாதாரம், மொழி, கலாசாரம் என்ற தூண்களில்தான் தங்கியிருக்கின்றது. அத்தூண்களை ஒவ்வொன்றாக அழிக்கும் முயற்சியே தற்போது நடைபெறுகின்றது. இதற்காக திட்டமிட்ட வேலைத்திட்டங்கள், நீண்டகால நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எந்தவித கேள்வியும் இல்லாமல் எமது நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதற்கு பொதுநிலங்கள் மட்டுமல்ல தனிப்பட்ட உறுதிகள் வைத்திருக்கின்ற நிலங்கள் கூட உள்ளாக்கப்படுகிறது. இன்னும் சிறிதுகாலம் சென்றால் கிழக்கு மட்டுமல்ல மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும் தமிழ்மக்கள் இழந்தவர்களாகி விடுவர்.

எமது மூலவளங்கள் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களினால் பச்சையாக அபகரிக்கப்படுகிறது. எமது கடல்வளம், எமது கனியவளம், எமது நிலவளம் எதுவுமே இதற்கு விதிவிலக்காக இல்லை. தென்னிலங்கை வர்த்தகர்களின் படையெடுப்பினால் எமது வர்த்தகர்கள் திவாலாகிப் போயுள்ளனர். போர் முடிந்தவுடனேயே போர்க்காலத்தில் பொருளாதார ரீதியாக தமிழ்மக்கள் எப்படித் தாக்குப்பிடித்தார்கள் என்பதைக் கண்டறிந்து அதனை அடியோடு அழிப்பதற்கு ஒரு நிபுணர்குழு வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக்குழு நிலமும் கடலும் வெளிநாட்டுப் பணமும் தான் தாங்கிப்பிடித்தது என்பதைக் கண்டறிந்தது. இம்மூன்றையும் அழிக்கும் முயற்சியே தற்போது இடம்பெறுகின்றது.

கடலும் நிலமும் நேரடியாக ஆக்கிரமிக்கப்படுகிறது. வெளிநாட்டுப்பணம் வெறும் நுகர்வுக் கலாசாரத்திற்காக வீணடிக்கப்படுகிறது. எமது வர்த்தகர்களின் மீள் முதலீட்டிற்கு உதவாமல், தென்னிலங்கை வர்த்தகர்களினாலும், தென்னிலங்கை நிதிநிறுவனங்களினாலும் கொள்ளை அடிக்கப்படுகின்றது.

எமது கலாசாரத்தை அழிப்பதற்காக சிங்கள - பௌத்த கலாசாரம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. பௌத்தவிகாரைகள், திடீர் திடீரென பல இடங்களிலும் முளைக்கின்றன. இராணுவ நினைவுத்தூபிகள் கண்டகண்ட இடங்களிலெல்லாம் கட்டப்படுகிறது. இவை மிகப்பெரிய சுற்றுலாத்தலங்கள் போல காட்சிப்படுத்தப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்து நாள்தோறும் இவற்றைத் தரிசிப்பதற்காக சிங்கள மக்கள் படையெடுத்து வருகின்றனர். தென்னிலங்கை சுற்றுலா முகவர்களினால் வெளியிடப்பட்ட வடபகுதி சுற்றுலா வரைபடத்தின் 26 மையங்களில் 16 மையங்கள் விகாரைகளாகவும், இராணுவ நினைவுத்தூபிகளாகவும் இருந்தன.

வெசாக் தினத்தில் வடபகுதி எங்கும் வெசாக் கூடுகள் நிரம்பிவழிந்தது. நாற்றமடிக்கும் புல்லுக்குளங்களும் ஒளியூட்டப்பட்ட வெசாக்கூடுகளினால் நிரம்பிவழிந்தன. யாழ்.பல்கலைக்கழகத்தில் குறிப்பாக மருத்துவபீடத்தில் சிறிய இடைவெளிகள்கூட இல்லாது பல்கலைக்கழகம் மூடப்பட்ட நிலையிலும் வெசாக்கூடுகள் தொங்கி வழிந்தன.

எமது மொழியின் நிலைபற்றி சொல்லவே தேவையில்லை. தமிழர்களே அதனை வெறுக்கும் நிலைக்கு காலம் கொண்டு செல்கின்றது. மொத்தத்தில் புற்றுநோய் உடல்முழுக்கப் பரவத்தொடங்கிவிட்டது.

இங்கு எழும் கேள்வி தமிழ்த்தரப்பு இதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதே. தமிழ்த்தரப்பிடம் தற்போது ஆயுதபலம் இல்லை. மக்கள் பலமும், சர்வதேச அபிப்பிராய பலமுமே உள்ளது. அதனை முழுமையாகப் பயன்படுத்த முயல வேண்டும். கூட்டமைப்பு இதுபற்றி ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் மக்களுக்குள்ள கவலை.

இது விடயத்தில் மூன்று வேலைத்திட்டங்களை உடனடியாக நகர்த்தவேண்டும். பச்சை ஆக்கிரமிப்புகளை விஞ்ஞானபூர்வமாக ஆவணப்படுத்துதல், சர்வதேசமட்டத்தில் இதனை பேசுபொருளாக்கல், நிலம், புலம், தமிழகம் தழுவிய வகையில் மக்களை இணைத்துப் போராட்டங்களை நடாத்துதல் என்பனவே அம்மூன்றுமாகும். இதற்கு நிலம், புலம், தமிழகம் இணைந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமானது.

இப்பணி சற்றுக் கடினமானது என்பது உண்மைதான். அதற்காக இதனைச் செய்யாமல் இருக்கமுடியாது. செய்யாமல் விட்டால் எல்லோரும் சேர்ந்து அழியவேண்டியதுதான்.

ஆவணப்படுத்தல் வேலைகளுக்கு அரச அலுவலகங்களில் தங்கியிருத்தல் வேண்டும். தமிழ் அரச அலுவலர்கள் தகவல்களைத் தருவதற்கு அச்சப்படலாம். எனினும் பிரதேச சபைகள், கிராமிய அமைப்புகள் மூலம் தேவையான தகவல்களைச் சேகரிக்கலாம். நிபுணத்துவ உதவிகளுக்கு யாழ் பல்கலைக்கழ சமூகத்தினரின் உதவிகளையும் நாடலாம். ஏற்கனவே சில தனிநபர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் சேகரித்த தகவல்கள் ஆங்காங்கே உள்ளன. பத்திரிகைச் செய்திகளும் உள்ளன. அவற்றை முதலில் சேகரித்து ஒழுங்குபடுத்தினாலே அரைவாசிப் பணி முடிந்துவிடும். மீதியை மேற்கூறிய அரச அலுவலர்கள், பிரதேச சபைகள், கிராமிய அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாவது, வேலைத்திட்டமான சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்குவதற்கு, புலமும் தமிழ்நாடும் அதிகளவில் உதவக்கூடியதாகவிருக்கும். அவர்களினால் இது தொடர்பான மாநாடுகள், ஆய்வரங்குகள் ஒழுங்கு செய்து பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியும். இதற்குத் தேவையான ஆவணங்கள் நிலத்திலிருந்துதான் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். ஏற்கனவே நிலப்பறிப்புத் தொடர்பான காத்திரமான மாநாடு இலண்டனில் இடம்பெற்றது. இதுபோன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாடுகள் உலகெங்கும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

மூன்றாவது, போராட்டங்களை நடாத்துவது. இதுவும் நிலத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். நிலத்தில் மக்கள் அடக்குமுறைக்குட்பட்டு இருப்பதனால், போராட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பத்தில் தயக்கம் காட்டுவர் என்பது உண்மைதான். ஆனால் போராட்டம் வளரத்தொடங்கிவிட்டால் மக்கள் தாமாகவே பங்குபற்றுவர். டேவிட் கமரூன் வருகையின் போது மாவிட்டபுரப் போராட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர். அதனைக் கூட்டமைப்பு மிகமோசமாக சீரழித்தது என்பது வேறுகதை.

ஆரம்பப் போராட்டங்களுககு கூட்டமைப்பிலேயே போதுமான ஆட்கள் உள்ளனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டாலே ஐந்நூறு பேர்வரை சேர்ந்துவிடுவர். வெளியில் செயற்படும் பொது அமைப்புக்கள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்பவையும் இணைந்து கொள்ளலாம். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி போன்றனவும் போராட்டத்தில் பங்குபற்றும்.

ஆனால் கூட்டமைப்பு போராட்டங்களுக்கு தயாரில்லை என்பதுதான் துரதிஸ்டவசமானது. கட்சியினர் சிரமமெடுக்கத் தயாரில்லை. கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கூட்டமைப்பில் இருந்தபோதும் பரவிப்பாஞ்சான் காணிப் பறிப்புப் போராட்டத்தை இவை எதுவுமே இல்லாத தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் ஒழுங்குசெய்திருந்தது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சிலர் மட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டுச் சென்றனர்.

மற்றவர்களின் போராட்டங்களில் பங்குபற்றுவது என்பது பெரிய சிரமமில்லாத வேலை. ஒழுங்குபடுத்தலுக்காக ஓடி அலையத் தேவையில்லை. பணம் செலவழிக்கத் தேவையில்லை. பாதுகாப்புப் பிரச்சினையும் பெரியளவில் வராது. இலவசமாக ஊடகங்களில் மட்டும் பெயர் வந்துவிடும். இந்தக் குருவிச்சைச் செயற்பாடு மக்கள் அங்கீகாரமளித்த அரசியல் கட்சிக்கு அழகல்ல.

அதுவும் சுமந்திரன் போன்றோர் இவ் ஆக்கிரமிப்புப் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகச் சுருக்கிவிடப் பார்க்கின்றனர். நீதிமன்றத்திற்கு விடயம் போய்விட்டால் தமக்கு சிரமம் குறைந்துவிடும் என நினைக்கின்றனர். ஆனால் நீதிமன்றம் இதற்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தரப்போவதில்லை. ஏனெனில் இது ஒரு சட்டப்பிரச்சினையல்ல. மாறாக இது ஒரு அரசியல் பிரச்சினை.

நிலத்தில் போராட்டம் வலுப்பெறத் தொடங்கிவிட்டால் புலமும், தமிழகமும் கூட போராட்டங்களை முன்னெடுப்பது இலகுவாகிவிடும்.

இப்போது அவசியமானது வெட்டிப்பேச்சுக்களல்ல. மாறாக நடைமுறைச் செயற்பாடே.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=6b0633f5-7cb4-4e2e-8c3d-4c6f3104f6c4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.