Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரித்திர நாயகர்கள் - ஜீன் ஹென்றி டுனாண்ட் சர்வதேச செஞ்சிலுவை சங்க நிறுவுனர்

Featured Replies

திருவள்ளுவர் வரலாறும் திருக்குறளும்.

 

tiruvalluvar-nimban.jpg

 

முன்னுரை:

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
 
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர  நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.
 
 
திருவள்ளுவர் வரலாறு:
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.
 
திருவள்ளுவர் காலம்:
 
         அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்:
 
திருவள்ளுவரது வேறு பெயர்கள்:
-நாயனார்
-தேவர்
-தெய்வப்புலவர்
-பெருநாவலர்
-பொய்யில் புலவர்
-நான்முகனார்
-மதனுபங்கி
-செந்நாப் போதார்
-பொய்யாப்புலவர்
 
‘குறள்’ பெயர் வரலாறு:
 
திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால்  குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்.
tk001.jpg
நூல் அமைப்பு:
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
 
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய, "ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்" என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர். திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்:
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
*        அறத்துப்பால்
*         பாயிரம்
*         இல்லறவியல்
*        துறவறவியல்
*         ஊழியல்
*        பொருட்பால்
*         அரசியல்
*         அமைச்சியல்
*         அரணியல்
*         கூழியல்
*         படையியல்
*         நட்பியல்
*         குடியியல்
*        காமத்துப்பால்
*         களவியல்
*         கற்பியல்
 
பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்
1.      எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு
2.      பதினெண்கீழ்க்கணக்கு
3.      ஐம்பெருங்காப்பியங்கள்
4.      ஐஞ்சிறு காப்பியங்கள்
 
இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
 
திருக்குறள் சிறப்பு பெயர்கள்:
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்:
Ø  திருக்குறள்
Ø  முப்பால்
Ø  உத்தரவேதம்
Ø  தெய்வநூல்
Ø  பொதுமறை
Ø  பொய்யாமொழி
Ø  வாயுறை வாழ்த்து
Ø  தமிழ் மறை
Ø  திருவள்ளுவம்
என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
 
திருக்குறள் உரை:
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
Thiruvalluvar.jpg
திருக்குறள் அரங்கேற்றம்:
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
 
இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.  மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.
 
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.
 
திருவள்ளுவமாலை:
வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்: 
 
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று” 
 
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
 
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல - 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்
 
இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது. ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்
 
திருக்குறள்:
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
 
திருக்குறள் காலம்:
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
 
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

சுவாமி விவேகானந்தர்
 
1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 
 
இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

 

488.jpg
 

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

 
இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.
 
1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற Datta குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.
 
தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.
 
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

 

vivekananda.jpg
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.
 
செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.
 
அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??
 
தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.
 
உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு, ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
 

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

 
எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா ?உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா? தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் சில:-
  • உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்! 
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 
  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! 
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. 
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. 
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.
swami.jpg
39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் விவேகானந்தர் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரணமான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சுவாமி கூறியதுபோல் உடல்வலிமை, மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றில் சில பண்புகளை நாம் கடைபிடித்தால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
 
 

Read more: http://urssimbu.blogspot.com/2011/01/blog-post_12.html#ixzz38wTLoFqD

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506) 

 

imagesCASDJ7DQg.jpg

 

 

Christopher-Columbus-9254209-1-402.jpg

 

ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது இப்போது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது வரலாறு. ஏனெனில் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ அதைவிட சிரமமானது புதிய கண்டங்களையும், புதிய நாடுகளையும் கண்டுபிடிப்பது. அதனை துணிந்து செய்த ஒரு சிலரில் முக்கியமானவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்.
 
 
1451-ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனோவா( Republic of Genoa) நகரில் பிறந்தார் கொலம்பஸ். நம்மில் சிறுவயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும் ஆனால் கொலம்பஸ் கண்ட கனவு என்ன தெரியுமா? கடல்களை கடந்து புதிய தேசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு தந்த உந்துதலின் பேரில் பதினான்காவது வயதிலேயே மாலுமியானார் கொலம்பஸ். கடல்வழி மார்க்கம் என்பதே இல்லாத அந்தக்கால கட்டத்தில் பண்டமாற்றும், வணிகமும் தரை வழியாகத்தான் நடந்தன. அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக மலேசியா இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இந்தியா, சீனா, இந்தோனோசியா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் அங்கு கூடுவார்கள். தாங்கள் கொண்டு வந்த பேரிச்சைம்பழம், கலை நயமிக்க தரை விரிப்புகள், அரேபிய குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்து விட்டு அவற்றுக்கு ஈடாக பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள், பவளம் கோமிதகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவற்றை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக்கொண்டு தரைவழிமார்க்கமாக சீனா, ஐரோப்பாவை கடந்து இத்தாலியின் வெனிஸ் நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஐரோப்பியர்கள் தங்கம் கொடுத்து அவற்றை வாங்குவார்கள். 
 
ஐரோப்பாவில் குறிப்பாக மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அப்போது அதிக கிராக்கி இருக்கும். ஏனெனில் குளிர் காலங்களில் மாமிசங்களை பதப்படுத்தி வைப்பதற்கு அவை உதவின. அந்த நறுமணப் பொருள்கள் அத்தியாவசிய தேவை என்று உணர்ந்த ஐரோப்பியர்களுக்கு அவை இந்தியாவிலிருந்து வருகின்றன என்று தெரியும். ஆனால் இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாது. எவ்வுளவு காலம்தான் அரேபிய இடைத்தரகர்களுக்கு தங்கத்தை கொடுப்பது என்று எண்ணிய அவர்கள் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தால் அந்தப் பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தனர். அப்படி நினைத்தவர்களில் ஒருவர்தான் கொலம்பஸ். 1476-ஆம் ஆண்டு கொலம்பஸ் கடல் வழியாக ஐஸ்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் சென்றார். ஆனால் ஆசியாவுக்கு கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது தனியாத ஆர்வமாக இருந்தது. 
 
தனது முயற்சிக்கு உதவுமாறு அவர் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார் ஆனால் அது வீண்முயற்சி என்று நினைத்ததாலோ என்னவோ அந்த இரு அரசாங்களும் உதவ மறுத்தன. இறுதியில் அவருக்கு கைகொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா. கொலம்பஸுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் கண்டுபிடிக்கும் அனைத்து புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதி கூறினார் ராணி இசபெல்லா. அதுமட்டுமல்ல புதிய தேசங்களிலிருந்து கொலம்பஸ் கொண்டு வரும் சொத்துகளில் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தார்.
 
1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் நாள் தமது 41-ஆவது வயதில் தனது கனவை நோக்கி புறப்பட்டார் கொலம்பஸ். சாண்டா மரியா, நின்யா, பின்டா ஆகிய மூன்று கப்பல்களில் நூறு ஊழியர்கள் அவருடன் பயணித்தனர். அவர்கள், முதலில் ஆஃப்ரிக்ககக் கடலோரமிருந்த கானரித் தீவுகளில் இறங்கினார்கள். கானரித் தீவுகளிலிருந்து செப்டம்பர் 6 அன்று புறப்பட்டு, நேர் மேற்காகக் கப்பல்களைச் செலுத்தினார்கள். அது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. அவரது மாலுமிகள் அச்சம் கொண்டார்கள். தாயகம் திரும்பிவிட விரும்பினார்கள். ஆனால், கொலம்பஸ் பயணத்தைத் தொடரும்படி வலியுறுத்தினார். 1492 அக்டோபர் 12 அன்று அவர்களுக்குத் தரை தென்பட்டது. அங்கே தரையிறங்கினார்கள். இந்தியாவையே கனவு கண்டு கொண்டிருந்ததால் தாம் இந்தியாவை அடைந்து விட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைந்தார் கொலம்பஸ். ஆனால் அவர்கள் நங்கூரமிட்டது இந்தியா அல்ல வடஅமெரிக்காவின் 'பகாமஸ் தீவு' என்பது அவருக்கு அப்போதும் மட்டுமல்ல இறந்தபோதும் தெரியாது என்பதுதான் விசித்திரமான உண்மை. அதன்பிறகு அவர் மேலும் சில கடல் பயணம் மேற்கொண்டு கெனேரித் தீவுகள் பனாமா போன்ற நாடுகளையும், பல சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார். 
 
அடுத்து வந்த மார்ச் மாதத்தில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினார். பெருஞ்சாதனை புரிந்த கொலம்பஸ் வெற்றி வீரருக்குரிய மிக உயர்ந்த மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். அதன் பின்பு, சீனாவுடன் அல்லது ஜப்பானுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நம்பிக்கையில் அவர் மூன்று முறை அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும், கிழக்கு ஆசியாவுக்கு ஒரு கடல் வழியைத் தாம் கண்டுபிடித்து விட்டதாகவே அவர் உறுதியாக நம்பினார். அவர் கண்டுபிடித்தது கிழக்கு ஆசியாவுக்குரிய கடல் வழி அன்று என்பதைப் பெரும் பாலான மக்கள் நெடுங்காலத்திற்கு பின்னரே உணர்ந்தனர்.
கொலம்பஸ் கண்டுபிடிக்கும் ஏதேனுமொரு நிலப்பகுதிக்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக அவருக்கு இசபெல்லா அரசி வாக்குறுதியளித்திருந்தார். அதன்படி கொலம்பஸ் கண்டுபிடித்த நிலப்பகுதிக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், நிருவாகி என்ற முறையில் அவர் திறமையற்றவராக இருந்தார். எனவே, அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கை விலங்குடன் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டார். ஸ்பெயினில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதன் பின்னர் அவருக்கு நிருவாகப் பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் இறுதி நாட்களில் வறுமையில் வாடி மாண்டதாகச் சிலர் கூறுவர். ஆனால் அது உண்மையன்று அவர் 1506 இல் காலமான போது ஓரளவுக்குச் செல்வச் செழிப்புடனேயே இருந்தார்.
கொலம்பசின் முதற்பயணம் ஐரோப்பாவின் வரலாற்றில் புரட்சிகரமான தாக்குறவை ஏற்படுத்தியது. அதைவிட பெரும் விளைவுகள் அமெரிக்காவில் ஏற்பட்டன. இன்றைய உலகில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் 1492 ஆம் ஆண்டை அறிவர். ஆயினும், உலகப் பெரியோர்களின் வரிசையில் கொலம்பசைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒரு காரணம். புதிய உலகைக் கண்டு பிடிக்கும் முதல் ஐரோப்பியர் கொலம்பஸ் இல்லை, என்பதாகும். கொலம்பசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே லெஃய்ப் எரிக்சன் என்ற ஸ்காண்டிநேவிய (வைக்கிங்) மாலுமி அமெரிக்கா சென்றடைந்ததாகவும், அவரைப் பின்பற்றிக் கொலம்பசுக்கு முன்னதாக பல ஐரோப்பியர்கள் அட்லாண்டிக்கைத் தாண்டி அமெரிக்கா சென்று வந்திருக்கலாம் என்பதும் இவர்களுடைய வாதம். ஆனால், வரலாற்றை நோக்கிப் பார்த்தால் லெஃய்ப் எரிக்சன் முக்கியமானவர் அன்று. அவருடைய கண்டு பிடிப்புகள் யாருக்கும் தெரியவரவில்லை. மேலும், அவருடைய கண்டுபிடிப்புகளினால், ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ பெரும் மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. இதற்கு மாறாக, கொலம்பசின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் ஐரோப்பா முழுவதும் மிக விரைவாகப் பரவின. அவர் ஐரோப்பா திரும்பிய சில ஆண்டுகளிலேயே, அவருடைய கண்டுபிடிப்புகள் நேரடி விளைவுகளாக, புதிய உலகுக்குப் பல புதிய கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிலப்பரப்புகளை வெற்றி கொண்டு, குடியேற்றங்களை அமைக்கும் பணி தொடங்கியது.
 
கொலம்பஸ் தோன்றாமல் இருந்திருந்தாலும், அவர் சாதித்ததை யாராவது சாதித்திருப்பார்கள் என்று சிலர் வாதிடுவர். இந்நூலில் இடம்பெற்ற மற்ற பெரியார்களைப் பற்றிக்கூட இத்தகைய வாதம் எழுந்ததுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பா ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்தது. அங்கு வாணிகம் பெருகி வந்தது. வாணிகப் பெருக்கத்திற்குப் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாக இருந்தது. போர்ச்சுகீசியர்கள், கொலம்பசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே கிழக்கிந்திய தீவுகளுக்குப் புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்கா விரைவிலேயே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும். அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடிப்பதில் அதிகக் காலத் தாழ்வும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அமெரிக்காவை 1492 இல் கொலம்பஸ் கண்டுபிடிக்காமல் 1510 இல் ஒரு ஃபிரெஞ்சு அல்லது ஆங்கிலேய நாடாய்வுக் குழு கண்டுபிடித்திருக்குமானால், அதன் பின் விளைவுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். எது எவ்வாறயினும், அமெரிக்காவை உள்ளபடியே கண்டுபிடித்த மனிதர் கொலம்பஸே ஆவார்.
 
முதலாவது காரணம் கொலம்பசின் பயணங்களுக்கு முன்னரே. 15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் பலர் உலகம் உருண்டையானது என்பதை அறிந்திருந்தனர். உலகம் உருண்டை என்ற கொள்கையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கத் தத்துவஞானிகள் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றிய அரிஸ்டாட்டிலின் முற்கோளை 1400 களில் படித்த ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதை மெய்பித்துகூ காட்டியதற்காகக் கொலம்பஸ் புகழ் பெறவில்லை. உண்மையைக் கூறின், உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிப்பதில் அவர் வெற்றி பெறவில்லை. புதிய உலகைக் கண்டுபிடித்தற்காகவே அவர் புகழ் பெற்றார். பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்யிர்களே, அரிஸ்டாட்டிலோ அமெரிக்கக் கண்டங்கள் இருப்பதை அறிந்திருக்கவே இல்லை.
 
கொலம்பசின் பண்புகள் முற்றிலும் போற்றுவதற்குரியனவாக இருக்கவில்லை. அவர் மிகவும் பேராசை கொண்டவராக இருந்தார். தமது பயணத்திற்கு நிதியுதவியளிக்க இசபெல்லா அரசியை இணங்க வைக்க அவர் அரும்பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவர் மிகுந்த பேராசையுடன் பேரம் பேசியதேயாகும். மேலும், இன்றைய அறவியல் தராதரங்களின் அடிப்படையில் அவருடைய நடத்தையைக் கணிப்பது நியாயமில்லையென்றாலும், அவர் சிவப்பிந்தியர்களை மிகவும் கொடூரமாக நடத்தனார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், இது வரலாற்றில் உன்னதப் பண்பியல்புகளைக் கொண்டிருந்தவர்களின் பட்டியல் அன்று; மாறாக, மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களின் பட்டியலே இது. அந்த வகையில் பார்த்தால், இந்தப் பட்டியலில் முன்னணியிடத்தைப் பெறுவதற்கு கொலம்பஸ் முற்றிலும் தகுதியுடையவரே யாவார்.
 
அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும், வடஅமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு வழி பிறந்தது. பல தேசங்களைக் கண்டுபிடித்த களிப்பிலும், களைப்பிலும் ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் 1506-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் தனது 55-ஆவது வயதில் காலமானார். தனது கடைசி மூச்சுவரை இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடி புறப்பட்டதால்தான் உலகின் ஆழ அகலத்தை மனுகுலம் உணர முடிந்தது. கியூபா, பகாமஸ், மேற்க்கிந்திய தீவுகள், சிலி, பிலிப்பின்ஸ், பசுபிக் பெருங்கடல் என்று பல புதிய நாடுகளையும், சமுத்திரங்களையும், கடல்வழித் தளங்களையும் கண்டுபிடித்தனர்.
 
 
பூமியின் பல பிரதேசங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய இந்தியா கடைசியாக 1498-ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பஸ் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கனவு காண தயங்ககூடாது என்பதுதான். உலக வரலாற்றின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் ஓர் உண்மை மட்டும் மாறாதிருக்கும். அந்தப் பக்கங்களை அலங்கரிப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கனவு கண்டவர்கள் என்பதுதான் அந்த உண்மை. கனவு காணத் துணிந்தவர்களால்தான் சாதித்தும் காட்ட முடிகிறது. உங்கள் கனவு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். 
 
கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டபோது எத்தனை பேர் அதனை பகல்கனவு என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். உங்கள் கனவுகளையும் பகல்கனவு என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அது இயற்கையின் நியதி உங்களால் மாற்ற முடியாது. ஆனால் கனவு காண்பதோடு அதனை நனவாக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கொலம்பஸுக்கு அமெரிக்கா வசப்பட்டதைப்போல உங்களுக்கு உங்கள் கனவும் அதன் மூலம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும். 
 
 
 
  • தொடங்கியவர்

சரித்திர மாவீரன் நெப்போலியன்!

 

20269777.jpg

 

தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த  மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல்முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு. 
 
1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
 
நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.
 
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.
 
அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.
 
போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர்.  இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.
 
1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே  Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812. 
 
nbwithcrown.jpg
 
பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.
 
நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.
 
அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். “ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!”என வரலாறு எள்ளி நகையாடுகிறது.
 
அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!”என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன்.
 
“முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்”. “முடிந்தது” என்றார் நெப்ஸ். “அடுத்து” என கம்பீரமாக கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் – ஒரே தொழில் போட்டி” எனவும் சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?”எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!” “ஹ்ம்ம்” என்ற நெப்போலியன்…
 
“கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு – வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. “ஒன்…டூ…த்ரீ!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.
 
எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.
 

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். வாட்டர்லூவில் ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன்அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது. 

 

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Napoleon என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது. 

 
napoleon_iii.jpg
 
சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது.  “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது. 
 
 
“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.
 
 
பின்வரும் இரு இணையங்களிலும் இருந்து தொகுக்கப்பட்டது.
 
 
 
 
 
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) சர்வதேச செஞ்சிலுவை சங்க நிறுவுனர்.

 

2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நாம் மறந்திருக்க முடியாது. இயற்கையின் முப்பது வினாடி சீற்றத்தால் குஜராத் மாநிலம் துவண்டு போனபோது அங்கு துயர் துடைப்பிற்காக விரைந்து வந்த முதல் அமைப்பு அனைத்துலக செஞ்சிலுவை சங்கம். அந்த குஜராத் பூகம்பத்திற்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கையும், செயற்கையும் துயரங்களை விளைவிக்கும்போது விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டும் ஓர் உன்னத அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். உலகில் மனிதநேயம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஓர் மனிதநேய அமைப்பு அது. அந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம். 


images+(2).jpg

1828-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் டுனாண்ட். பெற்றோர்கள் மதபற்று கொண்டவர்களாக இருந்ததால் இயற்கையிலேயே டுனாண்டும் மதபற்றில் அதிக ஈடுபாடு காட்டினார். உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறிய அவர் சிறிது காலம் ஜெனிவா வங்கியில் வேலை செய்தார். 26 வயதானபோது அவர் வர்த்தகத் துறையில் அடியெடுத்து வைத்தார். அல்ஜீரியாவுக்கு (Algeria) சென்று சுவிஸ் காலனியான Setif என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கினார். அதில் விவசாயம் செய்தும், பண்ணை நடத்தியும் தன் தந்தையைப் போல் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த பண்ணைக்குத் தேவையான தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வரவேண்டியிருந்தது. பக்கத்திலிருந்த நிலப்பகுதியோ பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதி எனவே அங்கு குழாய் போட பிரெஞ்சு அரசாங்கத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருந்தது.

பலமுறை பிரெஞ்சு அதிகாரிகளை சந்தித்தும் பலன் கிட்டாததால் அப்போது பிரான்சை ஆண்டு வந்த மன்னன் மூன்றாம் நெப்போலியனை நேரில் சந்தித்து அனுமதி பெற முடிவெடுத்தார் டுனாண்ட். அந்த முடிவுதான் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த சமயம் ஆஸ்திரிய படைகளை இத்தாலியிருந்து துரத்தியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது பிரெஞ்சு இராணுவம். அந்த இராணுவத்தை வழி நடத்தி போரில் ஈடுபட்டிருந்தார் மூன்றாம் நெப்போலியன். இத்தாலியில் அமைந்திருந்த நெப்போலியனின் போர்த்தலைமையகமான  Solferino முகாமுக்கு நேரடியாக சென்றார் டுனாண்ட். நெப்போலியனை சந்திக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கும் என்று நம்பியதால் தன்னுடன் நிறைய பணத்தையும் அவர் கொண்டு சென்றிருந்தார் அந்த ஆண்டு 1859. போகும் வழியிலேயே போரின் அவலங்கள் அவரின் கண்களில் பட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன, பாலங்கள் தகர்க்கப்பட்டிருந்தன. எப்படியோ ஒரு மாட்டு வண்டி துணையுடன் Solferino-க்கு அருகிலுள்ள  Castiglione என்ற சிற்றூரை அடைந்தார்.

அந்த சிற்றூரிலிருந்த ஒரு மலை உச்சியிலிருந்து அவர் கண்ட காட்சிகள் அவரை கலங்கடித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக மூர்க்கமான போர்களில் ஒன்றை அவர் நேரடியாக கண்ணுற்றார். போர்க்களத்தில் பத்தாயிரம் பேர் மடிந்தனர் பதினைந்தாயிரம் வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த அவலங்களைக் கண்ட டுனாண்டுக்கு வந்த வேலை மறந்து போனது மனிதநேயம் பீறிட்டு எழுந்தது. காயமடைந்த வீரர்களில் சுமார் 500 பேர் அந்த சிற்றூரிலிருந்த தேவலாயத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு விரைந்த டுனாண்ட் எந்தவித மருத்துவ அனுபமும் இல்லாதிருந்தும்கூட முதலுதவி செய்து காயங்களை சுத்தம் செய்யத்தொடங்கினார். அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க சொன்னார். இறக்கும் தருவாயில் இருந்த வீரர்கள் கூறிய விபரங்களை எழுதி வைத்துக்கொண்டு அந்தந்த குடும்பங்களுக்கு செய்திகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தான் கொண்டு வந்திருந்த பணத்தை வைத்து உணவு ஏற்பாடு செய்ததோடு இன்னும் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்த்தார். 
solferino.jpg

ஒருமாதம் அங்கேயே தங்கி வீரர்களை கவனித்தார் டுனாண்ட். இறுதியில் நூறு வீரர்கள் மடிந்தனர், நானூறு வீரர்கள் அவரது முயற்சியால் குணமடைந்து இல்லம் திரும்பினர். பின்னர் சுவிட்சர்லாந்து திரும்பிய டுனாண்டுக்கு தன்னுடைய அல்ஜீரியா பண்ணைப் பற்றி முற்றிலும் மறந்து போனது. இரவு பகலாக போர்க்காட்சிகளே அவர் கண்முன் தோன்றின. எத்தனைப் போர்க்களங்களில் எத்தனை வீரர்கள் கவனிப்பின்றி இறந்திருப்பார்கள் என்று நினைத்து கலங்கினார். இனி எதிர்காலத்தில் உலகில் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும் அதில் காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்ற ஓர் அனைத்துலக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். போரில் தான் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் Solferino- நினைவுகள் எனும் தலைப்பில் நூலாக எழுதினார்.  

போரில் காயமடையும் எந்த தரப்பு வீரருக்கும் பாகுபாடின்றி மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களும், தாதியர்களும் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும். போர்க்காலத்தின்போது உதவ பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட திட்டத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த நூலில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். டுனாண்ட் அச்சிட்டு வெளியிட்ட அந்த நூலில் முதல் இரண்டு பதிப்புகள் விரைவாக விற்று தீர்ந்தன. அதனால் ஊக்கம் பெற்ற டுனாண்ட் அடுத்த பதிப்பில் தனது கோரிக்கையை விரிவுபடுத்தினார். அதன்படி போர்களின்போது மட்டுமின்றி எந்த ஒரு நாட்டில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிபத்து போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் அங்கு நேரடியாக நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளியிட்டார்.  
images.jpg

பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்கு ஆதரவு திரட்டினார். அவரது அயராத உழைப்பால் 1864-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் பனிரெண்டு நாடுகள் கூடி ஜெனிவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டன அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் உதயமானது. அந்த சங்கம் சுவிட்சர்லாந்தில் உருவானதால் அந்த நாட்டுக்கொடியின் வண்ணங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு அதுவே செஞ்சிலுவை சங்கத்தின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த சங்கத்தின் தோற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது சொத்தையெல்லாம் செலவழித்து மிகுந்த எழ்மைக்குள்ளானார் டுனாண்ட். உலகிற்கு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிக்கொடுத்தும் அவரிடம் பணம் இல்லாமல் போனதால் உலகம் அவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனது. சில சமயங்களில் அடுத்த வேளை உனவுகூட இல்லாமல் அவர் சிரமப்பட்டதாக சில வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. 

சுமார் முப்பது ஆண்டுகள் ஒதுங்கியே வாழ்ந்த அவரை 1895-ஆம் ஆண்டு அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஒரு பத்திரிக்கையாளர். அதன்பிறகு 1901-ஆம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கி கெளரவித்தது நோபல் குழு. தாம் ஏழ்மையில் இருந்தபோது கூட அந்த நோபல் பரிசுத்தொகையை பயன்படுத்தவில்லை. தன் மரணத்திற்கு பிறகு அந்த பரிசுத்தொகையில் ஒரு பாதியை சுவிட்சர்லாந்து ஏழைகளுக்கும், மறு பாதியை நார்வே ஏழைகளுக்கும் கொடுத்து உதவ ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். வாழ்நாளின் இறுதிவரை பிறரது நலனையே விரும்பிய அந்த உன்னத மனிதரின் உயிர் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் அவரது 82-ஆவது அகவையில் பிரிந்தது.    
61WejH6v3IL._SL500_SS500_.jpg

இன்று செஞ்சிலுவை சங்கம் இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது. துயர்துடைப்பு என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் அமைப்பு செஞ்சிலுவை சங்கமாகத்தான் இருக்கும். ஆண்டுதோறும் டுனாண்டின் பிறந்த தினமான மே எட்டாம் நாள் செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடப்படுகிறது. ஜீன் ஹென்றி டுனாண்ட் வரலாற்றில் இவ்வுளவு பெரிய சுவட்டை பதிக்க முடிந்ததற்கு காரணம்  மனுக்குலத்தின் இன்னல்களை களைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையும், துயர்துடைப்பிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மனிதநேயமும், தடைகளை கண்டு துவண்டு போகாத மனோதையரியமும்தான். டுனாண்டைப் போன்று உயரிய சிந்தனைகளோடு மனிதநேயமும், மனோதைரியமும் இணையும் போது நம்மாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த முடியும். 

urssimbu.blogspot.com/2013/08/jean-henri-dunant-historical-legends.html#ixzz398KE9xpl
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.