Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாப் பாட்டி - புத்திசாலிப் படகோட்டி - இந்தோனேசிய நாட்டுப்புறக் கதை

Featured Replies

நிலாப் பாட்டி (குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், புதிர்கள்,தகவல்கள்) 

 

ஒரு குட்டிப் புலியின் குரல்

 

1_2029920h.jpg

 

சுட்டிக் குழந்தைகளே! நான்தான் குட்டிப் புலி கோபு! இப்போதான் முதன்முதலா உங்களைப் பாக்குறேன். அதனால, நானே அறிமுகப்படுத்திக்கிறேன்.
 
நான் ஒரு வேங்கைப் புலிக் குட்டி (Bengal Tiger). வேங்கைப் புலின்னா, ஏதோ வித்தியாசமான புலின்னு நினைச்சுக்காதீங்க. இந்தியாவோட தேசிய விலங்குன்னு படிச்சிருப்பீங்கள்ல. அந்தப் புலியோட குட்டிதான் நான். மூங்கில் புதர்கள் நிறைஞ்ச ஒரு காட்டுலதான் நான் பொறந்தேன். இப்போதான் இந்த உலகத்தை எட்டிப் பாக்குறேன்.
 
ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப குட்டி. எனக்கு பார்வை தெரிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆச்சு. பொறந்து ரெண்டு, மூணு வாரத்துக்குப் பின்னாடிதான் புலிக் குட்டிகளுக்கு கண்ணு தெறக்கும். நாங்க எல்லாமே ‘மியாவ் மியாவ்’னு கத்தும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. சந்தேகமா இருந்தா, என்னையும் உங்க வீட்ல இருக்கிற பூனையோட உடலையும் பக்கத்துல பக்கத்துல வைச்சு யோசிச்சுப் பாருங்க. எங்களை பெரிய பூனைகள்னு சொல்வாங்க.
 
என்னோட கூடப் பொறந்தவங்க ஒரு அண்ணனும் அக்காவும். நாங்க எங்க அம்மாவோட இருக்கோம். எங்க அப்பா இந்தக் காட்டுலதான் இருக்காரு, ஆனா எங்ககூட இல்லை. புலிக் குடும்பங்கள்ல இதுதான் வழக்கம். அம்மாதான் எங்களை வளர்ப்பாங்க. எப்படி வேட்டையாடுறதுன்னும் அவங்கதான் சொல்லிக் கொடுப்பாங்க. இப்போதைக்கு நான் வேட்டைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. எங்க அம்மா வேட்டையாடி கொண்டுவர்றதை சாப்பிட்டுட்டு, அண்ணே, அக்காவோட விளையாடுவேன்.
 
அப்பப்ப நாங்க செல்லச் சண்டை போட்டுக்குவோம், தெரியுமா? ரொம்ப ஜாலியா இருக்கும். நாங்க மாறிமாறி கடிச்சுக்குவோம். ஆனா, வலிக்காது. எல்லாமே பொய்க்கடி. அந்த பொய்க்கடியை எப்படி நிஜக்கடியா மாத்துறதுன்னு, பின்னாடி எங்க அம்மா சொல்லிக் கொடுப்பாங்க. அப்போ, நாங்களும் அம்மாவோட வேட்டைக்குப் போவோம். நானே தனியா வேட்டையாட ஒண்ணு, ரெண்டு வருஷம் ஆகும்.
 
ஆனா அதுவரைக்கும், எங்ககூட இருக்க முடியுமான்னு தெரியலை, சந்தேகமா இருக்குன்னு அம்மா கவலைப்படுறாங்க. தனியா இருக்கும்போது அவங்க சோகமா இருக்கிறது, அதனாலதான்னு நான் நினைக்கிறேன்.
 
சரி, அவங்க ஏன் இப்படி கவலைப்படணும்? எங்க அம்மாவுக்கு இப்பவெல்லாம் சாப்பாடு ஈஸியா கிடைக்கிறதில்லை. அதுக்கு மேல, காட்டுல அப்பப்ப துப்பாக்கி சத்தம் கேட்கிறதுனாலதான் அவங்க கவலைப்படுறாங்க. என்னைக்கு வேணா, அவங்க மேல துப்பாக்கி குண்டு பாயலாம்னு நினைக்கிறாங்க.
 
உலகத்துல இப்போ மொத்தமே 3,500 புலிங்கதான் இருக்குதாம். அதுல பாதி இந்தியாவுல இருக்கோம். இதிலேர்ந்து தெரியலையா, எங்க இனத்தோட நெலமை எவ்வளவு மோசமா இருக்குன்னு? சரி, புலி அழிஞ்சு போறதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படணும்னு கேக்குறீங்களா?
 
மான்தான் எங்களோட முக்கியமான இரை. அதை நாங்க அடிச்சு சாப்பிடுறதால காட்டுல மரம், செடி-கொடியெல்லாம் ஒட்டுமொத்தமா அழியாம இருக்கும். இல்லைன்னா, மான்களெல்லாம் மொத்த காட்டையும் அழிச்சிடலாம். நாங்க மொத்தமா அழிஞ்சு போனா, மான்கள் பெருகும். அப்போ காடும் அழிஞ்சுதானே போகும். காடு அழிஞ்சா, மழை பெய்யாதுன்னு படிச்சிருப்பீங்க. காடு அழிஞ்சா மனுஷங்களுக்குத்தான் பெரிய பிரச்சினைன்னு அம்மா சொல்வாங்க.
 
இதுக்கு மேல நான் என்ன சொல்லணும்?
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

ஆடு...புலி...புல்லுக்கட்டு...

 
புதிர்:
 
ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில் இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து வர வேண்டும்.
 
அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்(ஏனெனில் படகில் இடம் காணாது.)
 
புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத் தின்றுவிடும்.
 
புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி ஆட்டைக் கொன்று விடும்.
 
இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை சேர்க்கனும்னா
 
எப்படிக் கொண்டு போவது?
 
 
 
 
1.முதல்ல ஆட்டைக் கூட்டிட்டுப் போய் அக்கரைல விட்டுட்டு வரணும்.
 
2. இரண்டாம் தர‌ம் புல்லுக் கட்டு அந்தப் பக்கம் போகணும், திரும்பி வரும் போது ஆட்டை இந்தப்      பக்கம்  கூட்டிவரவேண்டும்.
 
3. மூன்றாம் தரம் புலி அந்தப் பக்கம் போகணும்.
 
4.நாலாவது ட்ரிப்லே ஆட்டை அந்தப் பக்கம் கொண்டு போக வேண்டியதுதான்//
 
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
மாடர்ன் முயலும் முட்டாள் ஆமையும்..
 
ஹாய் குட்டீஸ்!
 
உங்களுக்கு புதிய முயல் ஆமை கதை தெரியுமா?
 
ஒரு காட்டுல இருந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வச்சாங்களாம்.
 
முயலோட போட்டி போட முடியாது. உன் தகுதிக்கு மீறி ஆசைப் படாதேன்னு ஆமையோட பிரண்ட்ஸ் சொன்னாங்களாம்.
 
அதுக்கு ஆமை சொல்லிச்சாம் 'போங்கடா பயந்தாங்கொல்லிகளா. இதுக்கு முன்னாலே எங்க தாத்தா இப்படித்தான் ஒரு முயலோட ஓட்டப் பந்தயத்துல கலந்துகிட்டாராம். தான் பலசாலி வேகமா ஓடுபவன் னு திமிரோட அந்த முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க எங்க தாத்தா ஆமை மெதுவா ஓடிப் போயி ஜெயிச்சிடுச்சாம்.
 
அப்போ அந்த ஜட்ஜ்'ஸ்லோ வின் த ரேஸ்னு' 
தன்னைப் பத்தி கர்வமாயிருப்பவன் ஜெயிக்கிறதில்லை அப்படீன்னு சொன்னாராம்.
 
அதனால நானும் ஜெயிச்சுக் காட்டுவேன்னு' சொல்லியதாம்.
 
போட்டி நாள் அன்னைக்கு ரெண்டும் ஓடத் தொடங்கியதாம்.
 
வேகமா ஓடிய முயல் பின்னால ஆமை வராததால சரி கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்போமென்று ஒரு மரத்து நிழல்ல படுத்து விட்டதாம்.
 
மெதுவா ஓடி வந்துகிட்டிருந்த ஆமை வெகு நேரம் கழித்து முயல் தூங்கும் மரத்தருகே வந்ததாம். மரத்தடியில முயல் தூங்குவதைப் பார்த்ததாம்.
 
ஆஹா இந்த முயல்கள் என்னைக்குமே கர்வம் புடிச்சவர்கள்.
திருந்தவே மாட்டார்களோ என்று நினைத்தபடி ஓட்டத்தைத் தொடர்ந்ததாம்.
 
திரும்பித் திரும்பி பார்த்தபடி ஓட முயல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணலையென்றதும் தன் தாத்தாவைப் போலவே தான் தான் ஜெயிக்கப் போறோம்னு ஆமைக்கு சந்தோஷமாம்.
 
வின்னிங் பாயிண்ட்டை நெருங்கும் போது பின்னால் வேகமாக முயல் வருவது தெரிந்ததாம்.
ஓடி வந்த முயல் வின்னிங் பாயிண்ட்டை முதலில் தொட்டு ஜெயித்ததாம்.
 
ஆமைக்கு ஒரே ஆச்சரியம் .அதோடு சந்தேகமும்.
 
நல்லா தூங்கிக் கொண்டிருந்த முயல் எப்படி திடீரென்று ஓடி வந்து ஜெயிச்சிடுச்சு.ஒருவேளை பயத்துல நாமதான் கனவு காண்கிறோமா இல்லை பிரமையா ன்னு தன்னையே கிள்ளிப் பார்த்ததாம்.
 
முயல் சிரித்துக் கொண்டே சொல்லியதாம்,'நண்பா எல்லா நேரத்திலும் எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க.எங்க தாத்தா ஏதோ தப்புக் கணக்குப் போட்டு தூங்கியதால தோத்துப் போயிட்டார்.
ஆனா நான் இந்தக் காலத்துப் பிள்ளை.எப்படி டைம் மானேஜ் பண்ணுவதுன்னு தெரியும்.
உன் வேகத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணக்கு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்ட் எடுத்தேன்.
எப்படி கரெக்ட்டான நேரத்துல விழிச்சேன்னு பாக்கறியா?இதோ பாரு என் கைக்கடிகாரத்தில் டைம் செட் பண்ணி அலாரம் வத்திருந்தேன்.அலாரம் அடித்ததும் எழுந்து ஓடி வந்து உன்னை முந்திவிட்டேன்' என்று சிரித்ததாம்.
 
ஆமை உடனே,'சாரி நண்பா நான் உன்னைத் தவறாக எடை போட்டுவிட்டேன்.உன் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் 'என்று வாழ்த்தியதாம்.
 
என்ன குட்டீஸ் கதை பிடிச்சிருக்கா? நீதி என்னன்னு கேக்கறீங்களா?
 
நீதி: யாரையும் தப்புக் கணக்கு [under estimate]பண்ணக்கூடாது
சரியானபடி திட்டமிட்டு [planning]ஒரு வேலையைச் செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
 
arumbugal.blogspot.ch/2007_08_01_archive.html#sthash.2hmTfTZ6.dpuf
  • தொடங்கியவர்

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்

 

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

 

முகநூலிலிருந்து

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

சுதந்திர தேவி சிலை யார் தந்த பரிசு?

 

6_2003986g.jpg

 

4_2003984g.jpg

சுதந்திர தேவி சிலை-அமெரிக்கா

 

நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரிசு அளித்துக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது கொண்ட நட்புக்கு அடையாளமாகப் பரிசு கொடுத்திருக்கிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசு அது. இப்போது தெரிந்திருக்குமே, அதுதான் சுதந்திர தேவி சிலை.

1. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு. இந்தத் தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

2. இந்தச் சிலையை உருவாக்கியவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவியிருக்கிறார். இவர்தான் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தையும் உருவாக்கினார்.

 

3. 1875-ம் ஆண்டு சிலை கட்டுமானம் தொடங்கியது. 1884-ம் ஆண்டு சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.

 

4. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன.

 

5. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர்.

 

6. சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

 

http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/article6216099.ece

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தமிழ் நீதிக்கதைகள் - புறா எறும்பு வேடன்

 

ant+and+dove+story.jpg

 

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
 
மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.
 
எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது
 
மற்றொரு நாள்.
 
ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.
 
ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.
 
விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.
 
கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது
 
அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.
 
எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.
 
 

 

 


முகநூலிலிருந்து

  • தொடங்கியவர்

ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் | சிந்தனை கதைகள்

 

crackedpic.jpg

 

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
 
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
 
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
 
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
 
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
 
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"
 
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
 
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
 
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
 
முகநூலிலிருந்து
 
  • தொடங்கியவர்

மனம் தளராதே | எறும்பு கதை

 

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

ant-is-catching-a-food-coloring-page.gif
 
அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.
 
பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.
 
  • 1 month later...
  • தொடங்கியவர்

பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?

 

2_2100533g.jpg

 

1_2100532g.jpg

 

உங்களுக்குக் காசு சேர்த்து வைப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும் அல்லவா? இதுக்காக உங்கள் அம்மா, அப்பா உண்டியல்கூட வாங்கிக் கொடுத்திருப்பார்கள். அது பெரும்பாலும் களிமண்ணால் செய்த உண்டியலாக இருக்கும்.

இல்லையென்றால் பிளாஸ்டிக், தகரத்தில் செய்த உண்டியலாகக்கூட இருக்கும். ஆனால் இப்போது குழந்தைகளுக்காகவே பன்றிக்குட்டி உருவத்தில் செய்யப்பட்ட விதவிதமான உண்டியல்கள் கடைகளில் நிறைய விற்கப்படுகின்றன. இதை ‘பிக்கி பேங்க்’ என்று சொல்கிறார்கள்.

பிக்கி பேங்க் எனப்படும் இந்த உண்டியல் ஏன் பன்றியின் வடிவில் உள்ளது? என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இருக்கிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் மண்குடங்களும், சட்டிகளும் ‘பிக்’ (pygg) எனப்படும் ஒருவித களிமண்ணாலேயே செய்யப்பட்டன.

சில்லறைக் காசுகள் வீட்டில் இருந்தால் அம்மா என்ன செய்வார்? ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு வைப்பார்தானே? அதுபோலவே அந்தக் காலத்திலும் அவசரத்துக்கு உதவும் என்று காசுகளைப் பாத்திரத்தில் போட்டு வைப்பது வழக்கம். இப்படி காசுகளைப் பாத்திரத்தில் சேர்த்து வைப்பதை ‘பிக்கி பேங்க்’ (Piggy Bank) என்று அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் ஒரு குயவரிடம் `பிக் பேங்க்’ செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். அதாவது, காசு சேமிக்க களிமண்ணில் பாத்திரம் செய்து தரும்படி சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பழக்கத்தை அறியாத குயவர், அதைத் தவறாகப் புரிந்துகொண்டார். பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மை செய்து, அதன் முதுகில் நாணயம் போட ஒரு துளை அமைத்தார். அதிலிருந்து பிக்கி பேங்க் வழக்கத்துக்கு வந்தது.

ஆனால், பன்றி உருவ உண்டியலுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. பன்றிகளை வளர்ப்பவர்கள் அவற்றுக்கு அதிகம் உணவு கொடுப்பார்கள்.

மாத இறுதியில் அவற்றைத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுபோல நாம் பணத்தை பிக்கி பேங்க் உண்டியலில் போட்டு வைத்தால், சேமிப்பு ஒரு நாள் பன்றி போலவே உபயோகமாக இருக்கும் இல்லையா? இதைக் குறிக்கும் வகையிலேயே ‘பிக்கி பேங்க்’ உண்டியல்கள் பன்றி உருவத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சேமிப்பு ஒரு நல்ல பழக்கம். அதைச் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வது அவசியம். சிறு துளி பெரு வெள்ளம் என்று சொல்வதைப் போலச் சிறுகசிறுக நீங்கள் சேமிக்கும் காசுகள், உங்களுக்கோ, உங்கள் அம்மா, அப்பாவுக்கோ தக்க சமயத்தில் உதவியாக இருக்கும் அல்லவா?

 

http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6395763.ece?homepage=true

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

உலகின் குட்டிப் பறவை

 

10_2143772g.jpg

 

11_2143771g.jpg

 

12_2143770g.jpg

 

# அமெரிக்காவில் உள்ள ஓசனிச்சிட்டு ரகத்தைச் சேர்ந்த பறவை இனம் தேன்சிட்டு.

# தேன்சிட்டுகளில் 132 வகையினங்கள் உள்ளன.

# இப்பறவைகள் உருவத்தில் சிட்டுக்குருவியைவிடச் சிறியவை. ஓசனிச்சிட்டைவிடப் பெரியவை.

# தேன்சிட்டு மலர்களில் உள்ள தேனை உணவாக உட்கொள்ளும். பூச்சிகளையும் சாப்பிடும்.

# ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் தேன்சிட்டுகள் காணப்படுகின்றன.

# தேன்சிட்டுகளின் அலகு மலர்களில் உள்ள தேனை எடுப்பதற்கு ஏற்றவாறு நீண்டதாய் வளைந்திருக்கும்.

# பெரும்பாலான தேன்சிட்டுகள் கிளைகளில் அமர்ந்து மலர்களில் தேனை எடுக்கும். சில தேன்சிட்டுகள் மலருக்கு இணையாக ஹெலிகாப்டரைப் போல காற்றில் பறந்துகொண்டே அலகை மலரில் வைத்து தேன் குடிக்கும்.

# ஆண் தேன்சிட்டுகள் ஆபரணங்களைப் போல மின்னும் வண்ணங்களை உடலில் கொண்டிருக்கும். பெண் தேன்சிட்டுகளின் நிறம் ஆண் தேன்சிட்டுகளைவிட பழுப்பாக இருக்கும்.

# தேன்சிட்டுகள் பகலில் உற்சாகமாக இருக்கும்.

# செடிகள் மற்றும் மரங்களில் தேன்சிட்டுகள் கூடு கட்டும். தேன்சிட்டுகளின் கூடுகள் மணிபர்ஸைப் போலவே இருக்கும். காய்ந்த சருகு, வேர்களைக் கொண்டு கூடுகளைக் கட்டும். சிலந்தி வலையைக் கொண்டு சருகு, வேர்களை ஒட்டவைத்து விடும்.

# கூட்டின் வாயிலில் மூன்று அல்லது நான்கு சென்டிமீட்டர் அளவிலான துவாரம் இருக்கும். துவாரத்திற்கு நம் வீடுகளில் அமைப்பதைப் போல சிறிய வாயில் இருக்கும்.

# ஆண் தேன்சிட்டுதான் கூடுகட்டும் இடத்தை முதலில் தேர்வு செய்யும். கூடு கட்டப்படும் கிளை வலுவுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும். பின்னர் பெண் தேன்சிட்டு அந்த இடத்தைப் பரிசோதிக்கும். அதற்கும் இடம் பிடித்துவிட்டால் பெண் தேன்சிட்டு அங்கே கூட்டைக் கட்ட மூன்று வாரங்கள் தேவைப்படும். கூடு கட்டப்பட்ட பின்னர் ஆண் தேன்சிட்டு வந்து வீட்டைப் பரிசோதித்துப் பார்க்கும். குறைபாடுகள் இருந்தால் சரி செய்யப்பட்டு, இரண்டு பறவைகளுக்கும் மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே இரண்டும் அதில் வசிக்கும்.

# ஆண் தேன்சிட்டுதான் கூடுகட்டும் இடத்தை முதலில் தேர்வு செய்யும். கூடு கட்டப்படும் கிளை வலுவுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும். பின்னர் பெண் தேன்சிட்டு அந்த இடத்தைப் பரிசோதிக்கும். அதற்கும் இடம் பிடித்துவிட்டால் பெண் தேன்சிட்டு அங்கே கூட்டைக் கட்ட மூன்று வாரங்கள் தேவைப்படும். கூடு கட்டப்பட்ட பின்னர் ஆண் தேன்சிட்டு வந்து வீட்டைப் பரிசோதித்துப் பார்க்கும். குறைபாடுகள் இருந்தால் சரி செய்யப்பட்டு, இரண்டு பறவைகளுக்கும் மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே இரண்டும் அதில் வசிக்கும்.

# கூட்டில் தங்கிப் போதுமான உணவை எடுத்துக்கொண்ட பின்னர் பெண் தேன்சிட்டு முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் ஒன்று முதல் மூன்று முட்டைகளை இடும்.

# முட்டைகளை அடைகாக்க ஆகும் காலம் மூன்று வாரங்கள். உணவுச் சேகரிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் வெளியே செல்லும். பெண் பறவை வெளியே செல்லும்போது ஆண் பறவை அருகில் உள்ள மரத்திலிருந்து முட்டைகளைப் பாதுகாக்கும். ஏதாவது அபாயம் தென்பட்டால் பெண் பறவையை சத்தமிட்டு அழைக்கும்.

# முட்டைகளை அடைகாக்க ஆகும் காலம் மூன்று வாரங்கள். உணவுச் சேகரிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் வெளியே செல்லும். பெண் பறவை வெளியே செல்லும்போது ஆண் பறவை அருகில் உள்ள மரத்திலிருந்து முட்டைகளைப் பாதுகாக்கும். ஏதாவது அபாயம் தென்பட்டால் பெண் பறவையை சத்தமிட்டு அழைக்கும்.

# முட்டை பொரித்த பின்னர் சில நாட்கள் ஆண் பறவை உணவைச் சேகரிப்பதற்கு உதவும். தேன்சிட்டின் குஞ்சுகள் இரண்டு வாரங்களிலேயே வளர்ந்துவிடும். அடுத்து ஒரு வாரம் பெற்றோருடன் இருக்கும். பிறகு தன் வழியைத் தேடத் தொடங்கிவிடும்.

# 5 கிராம் எடை அளவே கொண்ட கரும் வயிறு தேன்சிட்டுதான் மிகவும் சிறியது. 45 கிராம் அளவுள்ள சிலந்திவேட்டை தேன்சிட்டுதான் மிகப்பெரியது. தேன்சிட்டு உலகின் மிகச் சிறிய பறவையினம்.

# ஆண் தேன்சிட்டுகளின் வால் நீளமாக இருக்கும்.

# தேன்சிட்டுகளின் ஆயுட்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள்.

 

http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/article6480982.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

புத்திசாலிப் படகோட்டி - இந்தோனேசிய நாட்டுப்புறக் கதை

 

1_2176398g.jpg

 

இந்தோனேசிய மன்னர் டோஜராவை ஒரு வியாபாரி ஒரு நாள் சந்தித்தார்.
 
“என் கப்பலில் உள்ள அனைத்து வெளிநாட்டுப் பொக்கிஷங்களையும் உங்களுக்கு அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு முன் ஒரே ஒரு நிபந்தனை. உங்கள் குடிமக்களில் யாராவது ஒருவர் எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.
 
உடனே தன் அரசவையில் இருந்த அனைத்து அறிஞர் பெருமக்களையும் அந்த வியாபாரியைச் சந்திக்க அனுப்பினார் மன்னர்.
 
இரண்டு வாத்துகளை எடுத்துக் காட்டிய வியாபாரி, “ இதில் எது ஆண், எது பெண்?” என்று கேள்வி கேட்டார்.
 
அடுத்ததாக, நீள்உருளையான ஒரு குச்சியை எடுத்துக் காட்டி, “இதன் முன்முனை எது, பின் முனை எது என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
 
வியாபாரி கேட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் அறிஞர்களால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.
 
இதையடுத்து, தண்டோரா போடுபவர்கள் ஊரெங்கும் சென்று மன்னர் கூறிய அறிவிப்பை சொன்னார்கள்.
 
“இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நம் நாட்டுக்கு வந்துள்ள வியாபாரி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க குடிமக்களில் யாருக்காவது புத்திசாலித்தனம் இருந்தால், அவர் நம் தேசத்தின் அடுத்த இளவரசர்-இளவரசியாக அறிவிக்கப்படுவார்”
 
2_2176397g.jpg
 
அப்போது படகு ஓட்டி கொண்டிருந்த இளம் படகோட்டி இந்த தண்டோரா அறிவிப்பைக் கேட்டான்.
 
இந்தக் கேள்விக்கு இந்த நாட்டில் உள்ள யாராலுமே பதில் அளி்க்க முடியவில்லையா? அப்படியானால் இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அந்த படகோட்டி.
 
அடுத்த நாள்
 
“மேதகு மன்னர் அவர்களே! வியாபாரியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதற்கு நீங்கள் ஏரிக் கரைக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார் படகோட்டி.
 
இதையடுத்து மன்னர், அமைச்சர்கள், கேள்வி கேட்ட வியாபாரி அனைவரும் ஏரிக்கரைக்குச் சென்றார்கள். போகும்போது வாத்துகளையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
 
வியாபாரியின் கையிலிருந்த கூண்டை வாங்கி, அந்த படகோட்டி வாத்துகளை வெளியே எடுத்தான்.
 
அதன் பிறகு, கரையில் அந்த இரண்டு வாத்துகளையும் மெதுவாக நிற்க வைத்தான். அப்போது கறுப்பாக இருந்த வாத்து நீரில் இறங்கி முதலில் நீந்திச் செல்லத் தொடங்கியது.
 
உடனே படகோட்டி, “இந்த கறுப்பு வாத்துதான் ஆண் வாத்து” என்று பதில் கூறினான்.
 
“அப்படியா, அதை எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று கரையில் நின்று கொண்டிருந்த மன்னர் கேள்வி கேட்டார்.
 
“மன்னா, எப்போதுமே ஆண் வாத்துதான் நீரில் முதலில் இறங்கும். அதனால் கறுப்பு வாத்துதான் ஆண்” என்று மீண்டும் கூறினான் படகோட்டி இளைஞன். பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இதைக் கேட்டு வாயைப் பிளந்தனர்.
 
அந்த படகோட்டி இளைஞன், வியாபாரியின் கையில் இருந்த உருண்டைக் குச்சியை வாங்கி தண்ணீரை நோக்கி வீசினான்.
 
“அந்தக் குச்சி மூழ்கியுள்ள பகுதி, அந்த மரத்தின் அடிப்பகுதி. மேலே மிதக்கும் பகுதி அதன் நுனிப் பகுதி” அடுத்த கேள்விக்கான பதிலையும் கூறினான் படகோட்டி.
 
“இந்த இளைஞன் சொன்ன இரண்டு பதில்களும் சரியானவைதான். ஏற்கெனவே, நான் அளித்த வாக்குறுதிபடி, எனது கப்பலில் உள்ள வெளிநாட்டுப் பொக்கிஷங்களை உங்களுக்கு வழங்குகிறேன் மன்னரே” என்றார் வியாபாரி.
 
உடனே மன்னர், “ நீங்கள் மட்டுமல்ல, நான் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றியாக வேண்டும். நான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த இளைஞரை
 
எனது இளவரசராக அறிவிக்கிறேன்” என்று ஆணையிட்டார்.
 
இருந்தாலும் மன்னருக்கு மனதுக்குள் ஒரு சின்ன சந்தேகம்.
 
“சரி, எப்படி இந்த இரண்டு பதில்களையும் உன்னால் உறுதியாகச் சொல்ல முடிந்தது” என்று அந்த இளைஞனைப் பார்த்து கேட்டார் மன்னர்.
 
“அடிப்படையில் நான் ஒரு படகோட்டி. தண்ணீரில் எது மூழ்கும், எது மிதக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்புறம் ஏரியில்தானே நான் படகு ஓட்டுகிறேன். அங்கு சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்ததாலே, இந்தக் கேள்விகளுக்கு என்னால் எளிதாக பதில் சொல்ல முடிந்தது” என்று கூறினான் படகோட்டி இளைஞன்.
 
அந்த இளைஞனைப் பாராட்டிய மன்னர், அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்ட அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.