Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளன் வேறு வேலை பார்க்க வேண்டியதில்லை: ஜெயமோகன் நேர்காணல்

Featured Replies

newPic_554_jpg_2095174f.jpg
எழுத்தாளர் ஜெயமோகன்| கோப்புப் படம்.

எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர். நாவல், சிறுகதை, விமர்சனம், தத்துவம், வரலாறு எனப் பல தளங்களில் இயங்கும் இவர், பெரும் விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கிவருபவர். தற்போது மகாபாரத இதிகாசத்தை வெண் முரசு என்னும் பொதுத் தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு எழுதத் தொடங்கியிருக்கிறார்.

மகாபாரதத்தை நாளுக்கொரு அத்தியாயமாக எழுதிவருகிறீர்கள். இதற்கான உந்துதல் எது?

மகாபாரதத்தை முழுமையாக எழுதுவது சிறு வயதிலிருந்தே இருந்துவந்த ஒரு கனவு. ஆனால் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் காய்ச்சலின் காரணமாக உடல் சோர்ந்திருந்தது. கணிப்பொறியின் முன்னால் உட்கார்ந்திருந்தேன். ஏதாவது எழுதலாம் என்று இருந்தேன். என்னுடைய இயல்புக்கு சும்மா உட்கார்ந்திருந்தாலே எதையாவது தட்டச்சு செய்ய முடியும். ஆனால் அன்று ஒன்றுமே எழுத முடியவில்லை. ஒரு சாதாரண நெஞ்சுச் சளியே எழுத்தை இல்லாமல் பண்ண முடியும் என்றால், உடல் வலு இருக்கும்போதே மகாபாரதத்தை எழுதிவிடுவதுதான் நல்லது என்று தோன்றியது. உடல் வலு இல்லாமல் எழுதவே முடியாது. உலகத்தின் சிறந்த படைப்புகளை ஐம்பது வயதுக்குள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு அறிவிப்பை வெளியிட்டு அது கொடுக்கும் சவாலில் எழுதத் தொடங்கினேன். இப்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.

எழுத்தாளனுக்கு உடல் ஆற்றல் அவசியம் என்று கருதுகிறீர்களா?

உலகத்தில் உள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் அனைவருமே அசாதாரணமான உடல் வலு உள்ளவர்கள்தான். தால்ஸ்தாய் தனது கையையே சுத்தியல் போல பயன்படுத்தி ஆணி அடிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர் என்று சொல்வார்கள். ஒரு கல் உடைப்பவரும் சிற்பியும் ஒரே மாதிரியான உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்று சிற்பி ராய் சௌத்ரி சொல்வாராம்.அதனால்தான் தனது மாணவர்களை மல்யுத்தம் படிக்கச் சொன்னார். கன்னட எழுத்தாளர் சிவராம் காரந்த் சிறந்த யட்சகான நாட்டியக் கலைஞர். வைக்கம் முகமது பஷீரும் சிறந்த மல்யுத்த வீரர்தான். முதுமையிலும் அவரை வலுவுள்ளவராகவே நான் பார்த்திருக்கிறேன். நான் வெண் முரசு எழுத ஒரு நாளில் 12 மணி நேரம் உட்கார வேண்டும். அதற்கு உடல் வலு தேவை. தமிழில் எழுத்தாளர்களுக்குப் போதுமான உடல் ஆரோக்கியம் இல்லை. மதுப்பழக்கம் இருந்தாலே ஆரோக்கியம் போய்விடும்.

சென்ற நூற்றாண்டில் எழுதிய நவீன எழுத்தாளர்களுக்கும் இன்றைய எழுத்தாளர்களுக்கும் படைப்பு அடிப்படையில் உள்ள வித்தியாசம் என்ன?

நவீனத்துவ காலத்தில் ஒருவர் எழுதுவதைவிட எழுத முயற்சி செய்து தோற்றுப்போவதன் மேல் வசீகரம் இருந்தது. காஃப்காவை நாம் அவன் எழுதிய படைப்புக்காகப் போற்றவில்லை. ஏனெனில் அவன் சிறு வயதிலேயே இறந்துவிடுகிறான். அவன் எழுதியிருக்கக்கூடிய படைப்புகள் தொடர்பான வாசகர் களின் கற்பனையிலிருந்துதான் கொண்டாடப்பட்டான். இன்றுள்ள எழுத்தாளர் தனது வாழ்க்கை குறித்து எழுதுகிறேன் என்று சொன்னால் வாசகர் மதிப்பதில்லை. வாழ்க்கைதான் எல்லாரிடமும் இருக்கிறதே.

இன்றைய எழுத்தாளன் முழு உலகத்தையும், வரலாறையும் உருவாக்க வேண்டியுள்ளது. ஓரான் பாமுக் போன்ற எழுத்தாளர்கள் இதனால்தான் தலையணை, தலையணையாக எழுத வேண்டியிருக் கிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர் ஒரு தேசத்தின் வரலாறை வேறு ஒரு கோணத்தில் எழுதிவிட்டார் எனில், ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறு நினைவிலிருந்து மறைந்து படைப்பில் எழுதப்பட்ட வரலாறு நிலைபெற்றுவிடுகிறது.

உதாரணத்திற்கு இங்கிருந்து பிரேசில் போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள், போர்ஹேஸ் மற்றும் மார்க்வெஸ் படைப்புகள் ஏற்படுத்திய கனவுகள் வழியாகவே செல்கிறார்கள்.

தற்கால எழுத்தாளன் ஒரு அறிஞராகவும் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது இல்லையா?

சென்ற நூற்றாண்டில் எழுதிய நவீன எழுத்தாளர்கள் அறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் ஒரு அறிஞராகவும் இருக்க வேண்டும். உம்பர்ட்டோ ஈகோ மாதிரியான பேரறிஞர்கள் தான் இன்றைய புனைவை எழுத முடியும். என்னுடைய துயரத்தை மட்டும் எழுதிவிட்டுப் போவேன் என்று சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் என்னால் அறிவியலை எழுத முடியாது. நமக்கு அத்தனை அளவு கல்வித் துறை வாய்ப்புகள் இல்லை. ராபர்ட்டோ பொலானோ போன்ற எழுத்தாளர்களுக்கு இடைக்கால ஐரோப்பிய வரலாறு முழுவதும் தெரியும். கலை விமர்சன வரலாறு தெரியும். ஏழெட்டுத் துறைகளில் அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் அளவுக்கு விற்பன்னர்களாக இருக்கிறார்கள்.

இன்று எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கூப்பிட்டுத் தமிழக வரலாறை இருபது நிமிடம் சொல்லச் சொன்னால் அவர்களுக்கு அதைச் சொல்ல முடியாது. இப்படியான சூழ்நிலையில் தமிழகம் குறித்த விமர்சனத்தை அவரால் எப்படி உருவாக்க முடியும்? தமிழகத்தில் உள்ள எந்தச் சாதி எந்த நிலையில் இன்று இருக்கிறது என்பது பற்றித் தெரியாது. இதுதான் நம்முடைய பிரச்சினை.

மேற்கில் அவர்களது கலை இலக்கிய மரபு குறித்து அவர்கள் முழுவதும் தெரிந்து வைத்திருக் கிறார்கள். அதை மறுபடைப்பு செய்கிறார்கள். முழுநேர எழுத்தாளனாக இருந்தால்தான் அது சாத்தியம்.

ஒரு எழுத்தாளனாகத் தமிழ் சமூகத்தில் உங்கள் விமர்சனங்களால் தொடர்ந்து அதிகபட்ச சர்ச்சைகளை உருவாக்கிவருகிறீர்கள்…

தமிழ் மனதைப் பொறுத்தவரை எழுத்தாளன் முக்கியமான ஆளுமையே கிடையாது. அவன் மிகவும் பணிவாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கலைஞராக இருந்தாலும் பிரபுக்களுக்குச் சந்தனம் பூசிவிட வேண்டும் என்ற 1930-கள் காலகட்டத்திய மனநிலையில்தான் தமிழ்ச் சமூகம் இன்னும் இருக்கிறது. வணிக எழுத்தாளர்கள் அந்த சந்தனம் பூசும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். இங்கேதான் எனது சின்னஞ்சிறிய கருத்துகள்கூட இத்தனை சர்ச்சை களை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில் தொடர்ந்து இலக்கிய வாதியாகக் கருத்துகளைச் சொல்வதற் கான இடத்தை உருவாக்கியது நான்தான். ஜெயகாந்தன் தனது அரசியல் பின்னணி வழியாகத்தான் அந்த இடத்தை உருவாக்க முடிந்தது.

எழுத்தாளனுக்கும் சில கருத்துகள் இருக்கும். அது ஊடகத்தில் விவாதிக்கப்பட வேண்டியது என்ற சூழலை நான் உருவாக்கியிருக்கிறேன். எழுத்தாளரின் குரலுக்கு ஒரு சமூகத்தின் பொதுச் சிந்தனையில் இடம் இல்லாதவரைக்கும் படைப்புரீதியான சிந்தனை உருவாகவே ஆகாது. இன்று ஊடகங்களில் எழுத்தாளர்களுக்கு ஒரு இடம் உருவாகியிருப்பதற்குக் காரணமும் நான்தான்.

ஒரு எழுத்தாளன் முழுமையான அறிஞனாக உருவாவதற்கு அவனது முழு நேரத்தையும் அர்ப்பணிக்கக்கூடிய சூழல் இங்கு இருக்கிறதா?

இல்லை. எனக்கே சினிமாவுக்கு எழுத வந்த பிறகுதான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. எனக்கு ஒரு படத்திற்கு வசனம் எழுத ஐந்து நாட்கள் போதும். வருஷத்திற்கு மூன்று படங்கள் எழுதினால் போதும். எனக்கு ஒரு வருடம் இருந்து எழுதுவதற்கான பொருளாதார வலு கிடைத்துவிடும். இந்தியாவில் எழுத்தாளர்கள் எங்கேயாவது வேலை பார்த்துக்கொண்டு கிடைத்த நேரத்தில்தான் எழுத வேண்டிய சூழல் உள்ளது. மேற்கு நாடுகளில் ஒரு எழுத்தாளர் தான் எழுதப்போகும் ஒரு நாவலின் கருப்பொருளைப் பற்றி ஒரு பல்கலைக்கழகத்துக்குத் திட்ட முன்வரைவாகச் சமர்ப்பித்து நாவல் எழுத உதவித்தொகை பெற முடியும். அதற்குப் பிறகு ஏழெட்டு வருடங்கள் சும்மா உட்கார்ந்து நாவல் எழுதிக்கொண்டிருக்கலாம். இந்தியா வில் அதை நினைத்தே பார்க்க முடியாது.

நமது மரபிலேயே கலைஞன் வேலை பார்க்கக்கூடிய காலம் எப்போ வந்தது? 1947க்குப் பிறகுதானே!. கம்பனோ, புகழேந்திப் புலவனோ வேலை பார்த்தார்களா? அவர்கள் முழுநேர எழுத்தாளர்கள். ஒரு கலைஞனை வேலை பார்க்கும் சூழ்நிலையில் வைத்திருப்பது போன்று ஒரு சமூகத்தை அழிக்கக்கூடிய அம்சம் வேறு எதுவும் கிடையாது.

இங்கே உழைத்து வாழ வேண்டும் என்றெல்லாம் ஆலோசனை சொல் வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை எழுத்தாளர் உழைக்கக் கூடாது. அவன் எழுதலாம். எழுதாமல் போகலாம். “எனக்கு மூன்று வேளை சோறு மட்டும் போதும். வேறெதுவும் வேண்டாம்” என்று ஒருவன் சொல்வான் எனில் அதைக் கொடுத்து அவனைக் காப்பாற்றக்கூடிய சமூகத்தில் தான் கலையும் இலக்கியமும் ஆரோக்கிய மாக வளரும் என்று நித்ய சைதன்ய யதி குறிப்பிடுவார். நிச்சயமாக

அது தான் உயர்ந்த சமூகமாக இருக்கும்.

ஒரு இடத்தில் நூறு பேர் சோம்பேறியாக இருக்கலாம். இரண்டு, மூன்று பேர் கலைஞர்களாக உருவாவார்கள். ஐரோப்பியச் சமூகம் அப்படித்தான் இருக்கிறது.

சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article6385456.ece?homepage=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.