Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்கள், தமிழ் இன உணர்வாளர்களுக்கு வைகோ கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vaiko1112.jpg
காவிரி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், ஜனவரி 20ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் கலைஞர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள், தமிழ் இன உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்து அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, 
 
வணக்கம். நலமே சூழ்க.
 
தொன்மைத் தமிழ்நாட்டின் பன்னெடுங்கால வரலாற்றில் இரண்டு கடல் கோள்களால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், இதுவரை ஏற்படாத அபாயம் தமிழக வாழ்வாதாரங்களுக்குத் தற்போது நேர்ந்துள்ள நிலைமை, மிகுந்த கவலையையும், அச்சத்தையும் தருகின்றது.
 
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தஞ்சை தரணியையும் மேலும் பல பகுதிகளையும் செழித்து வாழ வைத்த காவிரி நதி, தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரம் மட்டும் அல்ல; அனைத்துலக நாடுகள் வகுத்த ஹெல்செங்கி விதிகளின்படி நமக்குச் சட்டப்படி உரிமை உடையதும் ஆகும்.
 
1892, 1924, ஒப்பந்தங்களை மீறிய கர்நாடக மாநிலம், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் அணைகளைக் கட்டி, நமக்கு உரிமையான தண்ணீரில் பெரும்பங்கைத் தடுத்தது. அணை கட்டுவதைத் தடுக்க வேண்டிய கடமையில் மைய அரசும் தவறியது.
 
காவிரி நதிநீர் தாவாவின் மீது உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 2007-ஆம் ஆண்டில் அளித்த இறுதித் தீர்ப்புக்கு முற்றிலும் எதிராக, கர்நாடக அரசு, காவிரியில் மேக தாது, தாதுமணல் ஆகிய இடங்களில் இரண்டு புதிய அணைகளைக் கட்டவும், அவற்றில் 48 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. அந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அணைகளைக் கட்ட உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரி உள்ளது.
 
‘நாங்கள் அணை கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது’ என்று கர்நாடக அரசின் முதல் அமைச்சர் இறுமாப்போடு பேசுகிறார். மத்திய அரசு அனுமதி எப்படியும் கிடைக்கும் என்கிறது கர்நாடக அரசு. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி வேளாண்மை செய்யத்தான் அணை கட்டக் கூடாது என்பதால், மைசூரு, பெங்களூரு நகரங்களின்  குடிநீர்த் தேவைகளுக்காகத்தான் அணைகளைக் கட்டுகிறோம் என்று அப்பட்டமாகப் பொய் சொல்கிறது. அத்துடன், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய இடங்களில், ஏற்கனவே உள்ள அணைகளுக்கு அருகில், புதிதாக நான்கு தடுப்பு அணைகளைக் கட்டவும்  ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இதன் மூலம், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக, புதிதாக 11 இலட்சம் ஏக்கரில் காவிரி நீர்ப் பாசனத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றது.  
 
கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து பெருவெள்ளம் ஏற்படுகையில், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டு இருக்கின்றது. தற்போதைய திட்டப்படி அணைகள் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு சொட்டுத்தண்ணீர்கூட   மேட்டூருக்கு வரப்போவது இல்லை. இதன் விளைவுகளைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
 
சென்னை மாநகரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாழும் 5 கோடி தமிழக மக்கள் குடிதண்ணீரை இழப்பார்கள்; 3 கோடி விவசாயிகள் வேளாண்மையை இழப்பார்கள்; நன்செய் பொங்கிய தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசம் ஆகும்; பசியும் பட்டினியும்  மக்களை வாட்டி வதைக்கும்; தமிழகத்தின் பெரும்பகுதி இன்னொரு எத்தியோப்பியாவாக மாறும்.
 
கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளது. சட்டப்படித் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்ய வேண்டிய, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நயவஞ்சகமாகச் செயல்படுகிறது. கர்நாடக அரசுக்கு மறைமுகமாக உதவுகின்றது; தமிழகத்துக்குக் கேடு செய்கிறது.
 
இந்தப் பின்னணியில்தான், கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மிக நெருக்கமானவரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான, மத்திய அமைச்சர் அனந்த குமார் அவர்களின் டில்லி  இல்லத்தில்,  டிசம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் காவிரியில் புதிய அணை கட்டுவது குறித்து ஒரு சதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கர்நாடக பாக்கு உற்பத்தியாளர்கள் அமைச்சருடன் சந்திப்பு என்று வெளி உலகிற்கு அறிவித்து விட்டு நடைபெற்ற இச்சதிக்கூட்டத்தில், கர்நாடக மாநில எம்.பி.க்கள் மட்டும் அல்லாது, மத்திய சட்ட அமைச்சர்-கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா அவர்களும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களும் கலந்துகொண்டனர்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தெரிந்தேதான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
 
மத்தியில் புதிய அரசு பொறுப்பு ஏற்றவுடன், அன்றைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, காவிரி நதிப் பிரச்சினையில் சட்டப்படித் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டியதை வலியுறுத்தி, கோரிக்கை விண்ணப்பத்தை நேரில் கொடுத்தார். ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கோரிக்கைகளை இன்றுவரை நிறைவேற்ற முன்வரவில்லை.
 
உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும் விதத்தில் தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றோம். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாகக் கருதி கேரள மாநில அரசு செயல்பட்டதைப் போல, கர்நாடகம் மாநிலமும் செயல்படக் கூடும். அணைகளைக் கட்ட முயலக்கூடும். 
 
தற்போது கிடைத்து உள்ள தகவலின்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், புதிய அணைகள் கட்டுவதற்கான சுற்றுச் சூழல் அனுமதியும், மத்திய நீர்வள ஆணைய அனுமதியும் கொடுக்கப் போவது இல்லை என்று மத்திய அரசு வெளிப்படையாக ஒருபுறத்தில் அறிவித்துக் கொண்டே, மறுபுறத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்று முடிவு செய்து இருப்பதாகத் தெரிகிறது.
 
தமிழகத்திற்கு நேர இருக்கின்ற இப்பேராபத்தை முன்கூட்டியே தடுக்க, கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் ஒருசேர எழுந்து அறவழியில் போராட வேண்டும்;   கர்நாடகத்தில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கும் நிலையை, விரைவாக உருவாக்க வேண்டும்.
 
தஞ்சைத் தரணியிலும், சிவகங்கைச் சீமையிலும் நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நாசமாக்கி, விவசாயிகளுக்குப் பாசன நிலம் இல்லாமலும், பொதுமக்களுக்குக் குடிதண்ணீர் இல்லாமலுமான பெரும் தீங்கான நிலையை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு இருதயம், நுரையீரல், சரும நோய்களும், புற்று நோயும் ஏற்படுத்தக் கூடிய நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைத் தொடங்க விடாமல் தடுக்க வேண்டிய கடமையும் தமிழக மக்களுக்கு உண்டு.
 
போற்றுதலுக்குரிய மாமனிதர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், தன் இறுதி மூச்சு பிரியும் வரையிலும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராடினார்.
 
இன்றைய தமிழக அரசு 2011-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், மீத்தேன் திட்டத்தை  அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இருந்தபோதிலும், மாண்புமிகு நரேந்திர மோடியின் மத்திய அரசு, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகத் தீவிரம் காட்டுகிறது. 
 
அமெரிக்காவில், நியூ யார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரு க்வோமோ அவர்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் சுற்றுச் சூழலை நச்சுமயமாக்கும் என்பதால் நியூயார்க் மாநிலம் முழுவதிலும் அத்திட்டத்திற்கு தடை விதித்து, அண்மையில் 2014 டிசம்பர் 17 ஆம் தேதி அன்று  பிரகடனமே செய்துவிட்டார். உலகில் பல்வேறு நாடுகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
 
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பா, வரப்போகிற ஆபத்தை முன்கூட்டியே தடுப்பதுதான் அறிவுடைமை; இல்லையேல், நெருப்பில் சிக்கிய வைக்கோல்போல் அழியும் ஆபத்து நேரும் என்று எச்சரிக்கின்றது.
 
எனவே, தமிழகத்தைச் சூழ்ந்து வரும் பேராபத்துகளைத் தடுத்து, தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்க அனைவரும் ஒன்றுபட்டு விரைந்து செயல்பட வேண்டியதைக் கருதி, ‘காவிரி பாதுகாப்பு இயக்கத்தின்’ சார்பில், ஜனவரி 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  அன்று காலை 10 மணி அளவில், தஞ்சாவூர்  நகரில் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்து இருக்கின்றோம்.  
 
இந்தக் கூட்டம், காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரையில் நடைபெறும்.
 
தமிழகத்தின் நலனிலும், உரிமையிலும் பெரிதும் அக்கரை கொண்டு செயல்பட்டு வரும் தாங்கள், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது சிறப்பான பயனை விளைவிக்கும் என்பதால், தாங்கள் பங்கு ஏற்றுக் கருத்துகளைத் தர வேண்டுமெனப் பெரிதும் அன்புடன் வேண்டுகிறேன். தவிர்க்க இயலாத காரணங்களால் தாங்கள் பங்கேற்க இயலாவிடின், தங்கள் இயக்கத்தின் சார்பில் இரண்டு பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். 
 
தங்களது ஒப்புதலை, ஜனவரி 14- ஆம் தேதிக்கு முன்னரே தெரிவித்தால், ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கைகள் ஒதுக்குவதற்கும், அவற்றில் பெயர்களைப் பதிப்பதற்கும் மிகவும் உதவியாக அமையும்! இவ்வாறு வைகோ கூறியுள்ளார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.