Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கி.பி. அரவிந்தன்: அகதிநிலையைச் சுமந்து கொண்டலைந்த பயணத்தின் முடிவு

Featured Replies

கி.பி. அரவிந்தன்: அகதிநிலையைச் சுமந்து கொண்டலைந்த பயணத்தின் முடிவு APR 20, 2015by புதினப்பணிமனைin கட்டுரைகள்

ki-pi-anna.jpgதொடர்ந்தேர்ச்சியான சில முக்கிய ஆளுமைகளின் மரணங்களைக் கடந்த சில காலமாக இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்து வருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 08, 2015இல் நிகழ்ந்த கி.பி. அரவிந்தனின் மரணமும் இதன் முக்கியமானதொரு இழப்பாகக் கருதப்பட முடியும்.

இழப்புகள் ஏற்படுத்தும் கனிவுகளில் இறந்தவர்களின் தகைமைகள் ஒளிவட்டங்களாய்க் கீறப்படும் சூழலில், கி.பி.அரவிந்தனின் மறைவு நியாயமான அதிர்வுகளைக் கூட இலங்கைத் தமிழ்ச் சமூகத்திடையே ஏற்படுத்தவில்லையென்பது ஆச்சரியமான விசயமல்ல. 1970களில் தொடங்கி 2009இல் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற இலங்கையின் இனப் போராட்டம்பற்றி கி.பி. அரவிந்தனின் அவதானங்களில் வெளிப்பட்ட கருத்துகள் அச்சமூகத்தில் பரவசங்களை உருவாக்கக்கூடியவையாய் இருக்கவில்லையென்பது இதன் காரணமாய் இருக்கக்கூடும். அவர் வரலாற்றைக் கணிக்கும் நீரோட்டமாய் இருந்தாரென்பது, இனிமேலும் பரவசங்களை உருவாக்காமல்போக வாய்ப்பிருக்குமென்றாலும், அவர்பற்றிய உண்மை அதிலேதான் இருக்கிறது.

கி.பி. அரவிந்தனின் மரணம் எதிர்பார்த்திராத திடீர் மரணமல்ல. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குமுன்னர் அவரின் புற்றுநோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டதிலிருந்தும், ஓராண்டுக்கு முன்னர் நடந்தேறிய சத்திர சிகிச்சையிலிருந்தும் அதிர்வுகளை மெல்லமெல்ல உதிர்த்துக்கொண்டே வந்திருந்தது.

அவரது இழப்பின் சோகத்தில் இன்னொரு துளியாய்க் கலந்தது, பிறந்தநாளிலேயே அவரது மரணம் நிகழ்ந்திருந்ததென்பது. மார்ச் 08, 1953இல் பிறந்த கி.பி.அரவிந்தன் இறந்தது மார்ச் 08, 2015இல் ஆகும்.

இலங்கையின் வடமாகாணத்து நெடுந்தீவில் ஓர் இலங்கைத் தமிழனாய்ப் பிறந்ததுபோலவே, பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் சற்றொப்ப கால்நூற்றாண்டு வதிவுக்குப் பின்னரும் அவரது மரணம் ஒரு இலங்கைத் தமிழனாகவே நிகழ்ந்திருக்கிறதென்பது இன்னும் கனதியை அந்த மரணத்தில் ஏற்றுகிறது. அகதிநிலையை மாற்றி ஒரு பிரான்ஸ் குடிமகனாக மாறப் பிடிவாதமாக மறுத்துக்கொண்டிருந்தவர் அவர். ‘அகதியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப்போகிறேன்’ என்று சொன்னபடி ஒரு அகதியாகவே அவர் மரணித்திருக்கிறார்.

கி.பி.அரவிந்தன் எனக்கு மிகவும் பரிச்சயப்பட்ட மனிதரல்ல. 1978இல் தமிழ்நாட்டுக்கு வந்த அரவிந்தனைப்பற்றி நான் 1984இல் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னால்தான் அறிந்தேன். அவரது நண்பர்களாயிருந்த இலக்கியவாதிகளே தொண்ணூறுகளில் எனது நண்பர்களுமானபோது, அவர்களின் பேச்சில் பிரஸ்தாபிக்கப்பட்ட ஆளுமைமிக்க அந்தப் போராளி தமிழ்நாட்டில் இருக்கவில்லை. குறிப்பாக கவிஞர் விக்கிரமாதித்யனுடன் அவருக்கு நெருங்கிய அறிமுகம் இருந்ததாய்த் தெரிகிறது. அவர்பற்றிய விக்கிரமாதித்யனின் நினைவுகளின் இடையீடுதான் அவரை நிறைவாக அறியும் ஆர்வத்தை என்னில் கிளப்பியிருக்கவேண்டும்.

aravinthan-anna.jpg

‘இனி ஒரு வைகறை’, ‘முகங் கொள்’ ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் சென்னையில் ஜி. உமாபதி அரங்கில் தொண்ணூறுகளின் முதற்பாதியில் வெளியிடப்பட்ட பொழுது, நான் சென்னையில்தான் இருந்திருந்தேன். கி.பி. அரவிந்தனை ஒரு ஈழப் போராளியாய் மட்டும் அறிந்திருந்த எனக்கு அவரை ஓர் இலக்கியவாதியாகவும் அந்நூல்கள் அறிமுகப்படுத்தின.

கி.பி. அரவிந்தன் மீதான என் ஈடுபாடு இலக்கியார்த்தமானதெனினும், ஓர் இலங்கைத் தமிழனாய் என்னுள்ளிருந்த அரசியலுக்கு அவர் மிகநெருக்கமானவராக இருந்தாரென்பது அதன் ஒரு பகுதிக் காரணமாய் இருந்திருந்ததை இப்போது யோசிக்கப் புரிகிறது. இப்படி அவரை நேரில் அறிந்திராது அவரது கனவுகளை மட்டுமே அறிந்திருந்த வகையிலேயே அவர்பற்றிய இந்த நினைவை என்னால் ஏற்றமுடிகிறது. இது நேரில் அவரைத் தெரிந்திருந்த அல்லது அறிமுகமாயிருந்த பலபேரின் புரிதல்களைவிடவும், தூர இருந்தே அவதானத்தில் கொள்ளும் இந்தவகை மச்ச தரிசனம் மிக்க வீச்சானதாக இருக்க முடியுமென்றே நம்புகிறேன்.

இலங்கையின் இனப்போராட்ட வரலாற்றின் நீரோட்டமாக அவர் வாழ்ந்திருந்தார் என்பது சரியான ஒரு கூற்றே.

தந்தையின் தொழில்நிமித்தமான இடமாற்றங்களால் வடக்குக்கும் கிழக்குக்குமாக ஏற்பட்ட கிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் என்ற இளைஞனின் கல்விக்கான பயணங்கள் இருவேறு சமூகங்களினுடனான அவனது ஊடாட்டத்தை மிகுப்பித்து, அரசியல்ரீதியான கருத்துகளை வளர்ந்ததின் பின்னர் சரியான திசையில் அவன் எடுத்துச்செல்வதற்கு ஆதாரமாய் விளங்கியிருக்கின்றன.

எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ் மீனாட்சி கணக்கியல் கல்லூரியில் அவன் தொடர்ந்த கற்கை, அதே நிறுவனத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த உரும்பிராய் சிவகுமாரனுடனான அறிமுகத்தை ஏற்படுத்தியது. 1972 மே 22இன் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிரான துண்டறிக்கையை விநியோகிக்கையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் மாணவர் பேரவையில் ஈடுபாடாகவிருந்த பிரான்ஸிஸும் ஒருவனாக இருந்தான். சிறையிலிருந்தபோதுதான் சிவகுமாரனுடனான ஆழ்ந்த தொடர்பு அவனுக்கு ஏற்பட்டது.

சிறையிலிருந்து திரும்பியபின் ‘தமிழ் இளைஞர் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் எனத் தொடர்ந்தார்கள் நண்பர்கள். அஹிம்சை வழியில் சென்றுகொண்டிருந்த அவர்களின் ஆரம்பகாலச் செயற்பாடுகள் வன்முறைக்கு மாறியமை எதிர்பாராதவிதமாகத்தான் நேர்ந்தது. 1974 தை மாதத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸாரினால் விளைந்த களோபரத்தில் ஒன்பது பொதுமக்கள் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். அதற்கான பழிவாங்கலாகத்தான் இளைஞர் பேரவை சாத்வீக வழிமுறையைக் கைவிட்டு ஆயுதப் போராட்டத் துக்குத் தயாராகியது.

ஜுன் 05 1974ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்த்தியாகம் செய்யும் முதல் போராளியாக உரும்பி ராய் சிவகுமாரன் மரணமானபோது அவன்கூட இருந்தவர்களில் பிரான்ஸிஸும் ஒருவன். அதனால் தேடப்படுபவர்களில் ஒருவனாகி தலைறைவு வாழ்க் கையை வாழ நேர்கிறான். இக்காலத்தில் அவன் தனக்குச் சூட்டிக்கொண்ட பெயரே சுந்தர் என்பது.

aravinthan.jpg

அவனது இரண்டாவது கைது பலவகையான குற்றச்சாட்டுகளில் 1976ஆம் ஆண்டு நடந்தது. ஏறக் குறைய ஓராண்டாகச் சிறையிலிருந்திருக்கிறான் சுந்தர். நெருக்கமானவனாகவும் ஆதர்சமானவனாகவும் இருந்த சிவகுமாரனின் மரணம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. 1978இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலானதைத் தொடர்ந்து, இளைஞர்களின் கைதுகளும் மாணவர்களின் கொலைப்பாடுகளும் தொடர்ந்தன. இளைஞர் பேரவை அந்நிலையில் முற்றாகச் செயலிழந்திருந்தது. சுந்தர், ஈரோஸ் அமைப்பில் சேர்ந்துகொண்டு தோழர் சுந்தரானது அப்போதுதான் நடந்தது.

வளர்ந்துவரும் நிலையிலேயே ஈரோஸுக்கு பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பு ஏற்பட்டிருந்தது. 1978ன் கடைசிப் பகுதியில் லெபனானுக்கு அருளர் தலைமையில் சென்ற ஈரோஸ் குழுவில் தோழர் சுந்தரும் இடம்பெற்றிருந்தார்.

பெய்ரூட்டிலிருந்த பாலஸ்தீன அகதிமுகாம்களைப் பார்க்கவும், அதற்கும் மேலாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத்தை சந்திக்கவுமான சந்தர்ப்பம் அப்போதுதான் சுந்தருக்குக் கிடைத்தது. நவ.11, 2004இல் யாசர் அரபாத் இறந்தபோது பாரிஸ் TTN தொலைக்காட்சியில் ‘யாசர் அரபாத்: ஒரு முடிவுறாத வரலாறு’ என்ற தலைப்பில் சுந்தர் ஆற்றிய உரை அற்புதமானது.

லெபனானிலிருந்து திரும்பிவரும் வழியிலேதான் களச்செயற்பாட்டுக்காக தமிழகத்தில் தங்கும்படி இயக்கத்தால் சுந்தர் கேட்கப்படுகிறார். 1978-88 வரையான நீண்டகாலத்தில் சுந்தரின் செயற்பாடு பெரும்பாலும் இயக்கவேலைகளாகவே இருந்தன.

ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்துள் முறுகல்நிலை இருந்தது. இந்தியாவின் போர்ப் பயிற்சியை ஏற்பதா வேண்டாமா என்ற விஷயத்தில் தொடங்கிய அந்த முறுகல் தொடர்ந்திருந்த நிலைமையிலும் இயக்கம் இயங்கியது. ஆனால் அது மேலும் இறுகுவதற்கு 1988இல் கைச்சாத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகிவிடுகிறது.

ஒப்பந்த நிறைவேற்றத்துக்குப் பின்னர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு போராட்ட இயக்கங்கள் ஆயுதங்களைத் திரும்ப ஒப்படைக்கவேண்டுமென இந்திய அரசு நிர்ப்பந்தம் செய்தது. போராளிகளும் இந்தியாவைவிட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார்கள். ஆயுதங்களை ஒப்படைப்பதில் தோன்றிய கருத்துவேறுபாடு இயக்கத்தினுள் ஏற்கனவேயிருந்த முறுகல்நிலையை அதிகரிக்கச் செய்ததாகவே கருதமுடிகிறது. ஈரோஸின் ராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க இறுதியில் முடிவெடுத்த நிலையில், ஆயுதத்தை ஒப்படைப்பதில்லை என்ற கருத்துள்ள சுந்தர் சென்னைப் பொதுக்குழுக் கூட்டத்தில் தன் இயக்க விலகலை எழுதிக் கொடுத்துவிட்டு மண்டபம் முகாமில் அகதியாகப் பதிந்து கொண்டு கப்பல்மூலம் இலங்கையை அடைந்தார். பதினான்கு ஆண்டுகள் ஒரு போராளியாக இருந்துவிட்டு வீடு திரும்பிய தன் நிலையை, ‘வீரமும் களத்தேவிட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் என்னும் கம்பனின் வரிகள்போன்று வீடு திரும்பினேன்’ என்று வெளிச்சம் நூறாவது இதழின் நேர்காணலில் அத்திரும்பல் பற்றி அவர் கூறியிருப்பது சோகத்தை வரவழைப்பது.

1988இல் இயக்கத்தைவிட்டு வெளியேறியிருந் தாலும் 1989இல் ஈரோஸின் திட்டப் பிரகடன மாநாடு நடத்தப்பட்டபொழுது அதன் வெற்றிக்காக முழு வீச்சுடன் பாடுபட்டிருக்கிறார் அவர். ஒருவேளை இயக்க சார்பாக அவர் செயலாற்றிய கடைசித் தருணமாக அதைக் கொள்ளலாம்.

1990இல் சுந்தர் பிரான்ஸுக்குச் சென்றார். கி.பி. அரவிந்தனாக அவர் வெகுவாக அறியப்பட்டமை அங்கிருந்துதான் தொடங்குகிறது.

அவரது கவிதை ஈடுபாடு, இலங்கையில் அவரது கல்வியினதும் கலைகளினதும் ஈடுபாட்டின் தொடர்ச்சியானதாகக் கொள்ளமுடியும். தீவிரமான இலக்கியத் தளமொன்றினை ஸ்தாபிப்பதற்காக ஒருகாலகட்டத்தில் அவரடைந்த பாடுகள் பெரிதாக வெளித்தெரிய வரவில்லை. நண்பர்களூடான அறிகையில் இத்தோல்வியின் விளைவாகவே பின்னாளில் ‘ஓசை’ போன்ற சஞ்சிகையாளர்களுடனான அணுக்கத்தை அவர் அதிகமாகப் பேணியிருந்தாரென்று கொள்ளமுடிகிறது.

அவரது அரசியல் வெறும் தமிழ்த் தேசியமாகவன்றி வெகுவாகப் பதப்பட்டிருந்தது. அனுபவங்களாலும் வாசிப்புகளாலும். தந்தையின்மூலம் அம்பேத்கர், பெரியார் போன்றோரில் அவர் கொண்டிருந்த ஆதர்சமே தன் கருத்துநிலையில் உறுதிப்பாடடைய இவருக்குத் துணையாக நின்றிருந்ததாய்ச் சொல்லலாம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே விரும்புகிற மாற்றம் அவரது அரசியலில் முக்கியமானது. வெகுவாக நிகழும் ஈழ மக்களின் மரணங்கள் அவரை ‘இனியொரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்’ என்றும் சொல்ல வைத்தன.

அவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் பாலம் இதழில் எழுதிய கட்டுரை முக்கியமான வரைவு. அக்கட்டுரை பின்னர் 1992இல் வெளியான ‘முகங் கொள்’ என்ற கவிதை நூலின் பின்னிணைப்பாகவும் வெளிவந்திருந்தது. ‘விடைபெறும் நேரம்’ என்ற தலைப்பிலான அக்கட்டுரையில் அவர், ‘தமிழக மக்கள் இன்று வெறும் வீரவழிபாட்டிற்குள் மூழ்கி உள்ளனர். ஈழத்தின் உள்ளக முரண்பாடுகள் உங்களுக்கு இங்கே மறைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அவற்றை வெளிப்படையாகவே உங்கள் முன் வைத்தோம். தேசிய இனப் பிரச்னையின் கூர்மைக்குள் உள்ளக முரண்பாடுகள் மறைக்கப்பட்டிருந்தன’ என இலங்கையின் உள்ளக முரண்களைப்பற்றித் தீர்க்கமாக எழுதினார்.

ki-pi-anna.jpg

இனப் போராட்டத்தின் வெற்றிக்கான தடங்கல்களின் இதுபோன்ற கவனிப்புகள் அவரது மொத்தக் கனவுகளில் பெரும்பாலானவற்றின் அழிவுக்கான காரணங்களைச் சொல்லி நிற்கின்றன.

அரசியலிலிருந்து தன் கனவுகளின் மீதியுடன் ஒதுங்கும் அரவிந்தனின் மீதியின் கனவாக இலக்கியம் ஆவது இங்கே நிகழ்கிறது. வேறொரு படிநிலை சார்ந்த போராளியாகவும் இலக்கியவாதியாகவும் அவரை உருவாக்கியது இந்த இலக்கியத்தின் உள்மனம் என்றாலும் பொருந்தும்தான்.

1991 மார்ச்சில் வெளிவந்த தன் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘இனி ஒரு வைகறை’யை ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதற் சயனைட் தற்கொலையாளியாகும் தன் நண்பன் சிவகுமாரனுக்கு அர்ப்பணமாக்கும் அவர், அதில் எழுதினார்,

‘1974 ஜுன் 5ல்

மரித்தவனுக்கும்

அவன் காவித் திரிந்த

அந்த

சயனைட் குப்பிக்கும்’ என.

நாற்பத்தெட்டு பக்கங்களில் பதினைந்து கவிதைகளுடன் வெளிவந்திருந்த அந்த நூலில் மிக அழகானது அதன் இறுதியில் வந்திருந்த தவறு-திருத்தம் பகுதியேயாகுமெனக் கருதுகிறேன். மிகப் பழையமுறையாக அது இருந்தபோதும் அந்த இலக்கியப் பொறுப்பை நான் நன்கு விரும்பினேன்.

‘முகங் கொள்’ளென்ற தொகுப்பு 1992 ஓகஸ்டில் வெளிவந்தது. கி.பி.அரவிந்தனின் நீண்ட கவிதைகள் கொண்ட தொகுப்பு அது. இலங்கைத் தமிழினத்தின் அரசியல் அவலத்தை மட்டுமல்லாது, வாழ்வின் அவலத்தையும் அக்கவிதைகள் பேசின. முகங்கொள், மாலை விழுந்த பின், முன்னிராப் பொழுதொன்றில், உறைதலாய் ஆகிய கவிதைகள் தம் உள்ளடக்க அடர்த்தியை மீறியும் நீளமாய் அமைந்தவை. அவை அக்காலகட்டத்தின் ஒரு கவிதைமாதிரியைத் தொடர்ந்ததோடு இனஅழிப்பின் கொடுமையையும், நிலமிழப்பின் துயரத்தையும் மிக்க வலிமையுடன் எடுத்துரைத்தன.

‘கனவின் மீதி’ 1999 ஆகஸ்டில் வெளிவந்தது.

இத்தொகுப்பின் கவிதைகள் பெரும்பாலும் அகதி வாழ்வின் சோகத்தை எடுத்துப் பேசுவன. ‘அகதிவாழ்வின் சோகம் திசையிழந்த நிலத்திலே காணப்படுகிறது’ என்ற கா. சிவத்தம்பியின் கூற்றுக்கேற்ப அரவிந்தனின் திசையிழந்த வாழ்வின் அவலம் வெகுவாக இதில் காணப்படுகிறது. உலகமளாவிய அகதித்தனத்தை வன்மையாக எடுத்துரைத்த கவிதைகள் அவை. அதனால்தான்போலும் அதற்கு முன்னுரை எழுதிய கா. சிவத்தம்பி, ‘ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளது’ என்றிருக்கிறார்.

லண்டன் கனாவும், அரசியல் தஞ்சமும் சரிசம விகிதத்தில் இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வின் காரணங்களாக இருந்ததாய்க் கூறும் அரவிந்தனின் கணிப்பு பெரும்பாலும் சரியானதே. இந்தமாதிரி இலங்கைச் சமூகத்தின் அடியாதார விசயங்களிலிருந்தும், மனோநிலையிலிருந்தும் இனப் பிரச்சனையின் கூறுகளைக் கவனித்தமை, ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் தன்மையாக அரவிந்தனில் காணப்பட முடியும்.

தமிழர் பிரதேசங்களில் வடக்கு மாகாணமே அதிகமும் அழிந்துபட்ட நகராக பரவலாகப் பேசப்பட்ட பொழுது, கிழக்கு அடைந்த துன்பத்தையும் துயரத்தையும் கூறி அம்மக்களுக்கான அனுதாபக் குரலையெழுப்பவும் தயங்கவில்லை அரவிந்தன். ‘வடமராட்சியின் துன்பத்தை விடவும் கிழக்கு மாகாண விவசாயிகள் பெற்ற துன்பங்கள் கொடுமையானவை’ என அவர் ஒருபோது எழுதினார்.

அந்த நேர்மையைத் தன் இலக்கியத்திலும் ஏற்றியது தான் அரவிந்தன் நம் மதிப்புக்குரியவராக ஆவதற்குக் காரணமாகிறது.

ki-pi-french-book1.jpg

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிலைத் தொகுப்பு வெளியீட்டில் கி.பி.

ஆரம்பத்தில் ஓசை இதழின் ஆரம்ப கர்த்தாக்களுடன் இணைந்து இயங்கிய அரவிந்தன், பின்னால் மௌனம் என்ற சஞ்சிகையைத் தாமே துவக்கி சிறிதுகாலம் நடாத்திவந்தார். அவர் பங்குபெற்றிருந்த ‘அப்பால் தமிழ்’ குழுமத்தின் வழியாக உருவாக்கிய அப்பால்தமிழ் இணையதளத்தின் மூலம் பல கவிஞர்களை, எழுத்தாளர்களை உருவாக்கியமை அவரது இலக்கிய தாகத்தின் இன்னொரு பகுதி. அதில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து ‘பாரிஸ் கதைகள்’ என்ற பெயரில் வெளியிடவும் செய்தார். இறுதியாக வெளிவந்த ‘இருப்பும் விருப்பும்’ என்ற நூல் அவரது நேர்காணல், கட்டுரைகளின் தொகுப்பு. காக்கைச் சிறகினிலே இதழின் நெறியாளர்களில் ஒருவராகவும் இருந்து அவர் ஆற்றிய பணி நினைக்கத்தக்கது.

இயக்கத்திலிருந்து அவர் வெளியேறியமை அவரை செயல்முடக்கமானவராக மாற்றிவிட்டதென்பது உண்மைதான். ஆனாலும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அரசியலை வெகு ஆர்வமாகவும் ஆழமாகவும் அவர் கவனித்துவந்தார். அதனால்தான் இலங்கையின் இறுதியுத்த முடிவுபற்றி, ‘சிறிலங்கா(வோ) தனது வெற்றிக்காக மிகநுட்பமாய்த் திட்டமிட்டது. உலக நாடுகளிடையேயான முரண்பாடுகளைத் திறமையுடன் கையாண்டார்கள். ராஜதந்திர காய்நகர்த்தலில் தங்களது 2500 ஆண்டுகால முதிர்ச்சியை அவர்கள் பெற்றிருந்தார்கள். எங்களின் ராஜதந்திர பாரம்பரியம் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. போராட்ட வழிமுறைக்குள் அரசியலையும் நாம் இணைக்கவில்லை’ என ஆழி இதழுக்கான நேர்காணலில் அவரால் தெரிவிக்க முடிந்திருந்தது.

மீதியிலிருந்து விரிந்த இலக்கியக் கனவின் செயற் பாடுகள் தொடர்ந்திருந்ததோடு, அரசியல் அவதானியாகவுமிருந்த அரவிந்தன், சொல்வளம் மிக்க சிறந்த மேடைப் பேச்சாளியாகவும் திகழ்ந்தார். இன்று அந்தக் குரல் மௌனம் கொண்டுவிட்டது. தொடரும் துயர்களில் அரவிந்தனின் மரணமும் ஒன்றாகிவிட்டது.

– தேவகாந்தன்

நன்றி  – காலச்சுவடு- ஏப்ரல், 2015

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.