Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரினவாதமும் காக்கிச் சட்டையும் உரசினால்தான் தமிழ்த் தலைமைகளின் இரத்தம் கொதிக்குமோ? - நடராஜா குருபரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதமும் காக்கிச் சட்டையும் உரசினால்தான் தமிழ்த் தலைமைகளின் இரத்தம் கொதிக்குமோ?

– நடராஜா குருபரன்...

28 ஏப்ரல் 2015

யாழில் தற்போது வாள் வெட்டுடன் கூடிய வன்முறைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.; இரவானதும் ஊருக்கு ஊர் கத்திகளோடு, கட்டுக்கடங்காத காளைகள் திரியத் தொடங்கி விடுகின்றனர். அந்த நேரம் யார் கண்ணில் தென்படுகின்றார்களோ அவர்களை வெட்டிச் சாய்ப்பதுவே இவர்களது வேலையாகிப் போகிறது என்கின்றனர் கிராம மக்கள்.யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் 9 பேரை நேற்று முன்தினம் இனந்தெரியாத சில குண்டர்கள் சுதுமலை சந்தியில் வைத்து வெட்டியும், போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாரியாகத் தாக்கியும் உள்ளனர். வெட்டப்பட்ட மாணவன் ஒருவனின் கை இரண்டாகி வெட்டப்பட்ட கையின் துண்டு நிலத்தில் துடித்துக்கொண்டு கிடந்திருக்கிறது. படுகாயமடைந்த மூன்று மாணவர்களையும் துண்டான கையையும் முதலில் மானிப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பின் யாழ்.போதானா வைத்தியாசலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். கைத்துண்டாடப்பட்ட மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான். கை பொருந்துமா? பொருந்தாதா? என்பதனை 72 மணி நேரத்திற்குப் பின்தான் கூற முடியும் என வைத்தியர்கள் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மாணவர்களில் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் எழும்ப முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றைய மாணவர் சுவாசிப்பதற்கு கஸ்டப்படுகிறார். பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர் மாணவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இப்பாரிய சம்பவம் இடம்பெற்று 2 நாட்கள் கழிந்துவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால் அவர்கள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இப் போராட்டத்தின் இறுதியில் அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெசிந்தன் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்: “ போர் நிறைவடைந்த பின்னர் பல்வேறு சமூக விரோதக் கும்பல்கள் சில அரசியல்வாதிகளின் பின்னூட்டல்களுடன் நாசகார செயல்களில் ஈடுபட்டு வருவருகின்றனர்.

பல்கலைக்கழகமாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உச்சபட்சமான தண்டனை வழங்கப்பட வேண்டும். அண்மைகாலமாக பொதுமக்கள் பல்கலைகழக மாணவர்கள் எனப் பலர் சமூக விரோதக் குழுக்களால் ஏற்படுத்தப்படும் பல்வேறு விதமான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான சமூக விரோத கும்பல்களால் பிரதேசங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அழிவடைந்து போகின்றன. பல்கலைகழக மாணவர்களின் பாதுகாப்பினை பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இனிவரும் காலத்தில் இவ்வாறான சமூக விரோதிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபட முடியாதவாறு காவல் துறை செயற்படவேண்டும்”

இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகளும் கவலைகளும் கண்டனங்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களைக் காக்கப் புறப்பட்ட மாகாண சபை முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இன்னும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும், தூக்கத்தில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

யாழ்ப்பாணத்தின் நீதித்துறை இவ் வன்முறைகளைக் கண்டு கொள்ளவில்லையா? அல்லது கண்டும் காணாது இருக்கிறதா? கவலைகள் மனதைக் குடைகின்றன.

குர்ரானை அவமதித்ததற்காக கொழும்பு கோட்டை நீதிமன்றம் தானாக முன்வந்து ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடருமாறு பொலிசாருக்கு உத்தரவு இட்டிருந்தமை ஞாபகத்திற்கு வருகின்றது. கடுமையான பாதுகாப்பு பிரச்சனை நிலவிய மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் கூட வவுனியா மாட்டத்தில் நீதிபதியாகக் கடமையாற்றிய இளஞ்செழியன் தனது தற்துணிவில் பொதுமக்களுக்கு எதிரான அவர்களின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிசாருக்கு அவ்வப்போது உத்தரவிட்டு வந்தமையும் இங்கு நினைவு கொள்ளலாம்.

இன்று ஜனாநாயகம் மீட்கப்பட்டு உள்ளதாகவும் நீதித்துறை சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்ற போது யாழ்ப்பாணத்தின் நீதிமன்றங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை ஏன் உறுதி செய்ய முற்படக் கூடாது? தற்துணிவுள்ள நீதித்துறை யாழில் இல்லையா? விளம்பரத்திற்காக கொப்பியும் பேனையும் பென்சிலும் கொடுத்துவிட்டு, புதிய மண்டபங்களின் திறப்புவிழாக்களில் நாடாக்களை வெட்டிவிட்டு பட அல்பங்களையும், மயிர்கூச்செறியும் உரைகளையும் ஊடகங்களுக்கு அனுப்பி வாக்குவங்கிகளை நிரப்பிக் கொண்டு இருக்கும் அரசியல் வாதிகளுக்கு இந்தப்பிரச்சனை மட்டும் தெரியாமல் போனது எப்படி?

கடந்த வாரம் சாவகச்சேரி உணவகமொன்றில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ள வாள் வெட்டுச் சம்பவமொன்றில் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவை தவிரவும் தொடர்ச்சியான தனிப்பட்ட குழுச் சண்டித்தனங்கள் யாழ் பகுதி எங்கும் பரவலாக நடக்கின்றன. படையினரின் அடாவடிகளுக்குப் பயந்த காலம் போய் இந்த ஊர் சண்டியர்களுக்கு பயந்து இரவானதும் ஊர் அடங்கிப் போவதாக யாழ்ப்பாணத்தின் பல கிராம மக்கள் கூறுகின்றனர். இளம் பெண் பிள்ளைகளை தனியே வெளியில் அனுப்புவதற்குப் பெற்றோர் அஞ்சுகின்றனர். இவை எதுவும் வடக்கின் அதிகாரத்தில் இருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கோ? அல்லது அதற்கு மாற்றுத் தலைமையாக உருவெடுக்க துடிக்கும் தமிழ்த் தேசிய முன்னணிக்கோ ஏன் தெரியவில்லை? இல்லை தெரிந்தும் இந்த ஊர்ச் சண்டையில் தமிழ்த் தேசியமோ, சிங்களப் பெருந்தேசியவாதமோ அல்லது காக்கிச் சட்டையோ சம்பந்தப் படாததனால் இதில் அரசியல் லாபம் ஈட்ட முடியாதென என இவர்கள் நினைக்கிறார்களா?

காக்கிச் சட்டை இப் பல்கலைக்கழக மாணவர்களின் உடம்பில் உரசி இருந்தால், அல்லது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்துத் “தமிழ்த் தேசியத் தலைவர்களும்” அறிக்கைப் போர் நடத்தி இருப்பர். இன்று பாராளுமன்றில் 19ஆவது திருத்தச் சட்ட விவாதத்தில் பங்கேற்ற தமிழ்த் தலைவர்கள் உணர்ச்சிப் பிளம்புகளை அள்ளி வீசியிருப்பர். பாராளுமன்றம் அதிர்ந்திருக்கும். ஊடக மாநாடுகளில் தூள் கிளம்பியிருக்கும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த்தேசிய வாதிகள் பிரதட்டை எடுத்திருப்பார்கள். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் இந்தப் பிரச்சனை ஒலி, ஒளி, படக் காட்சிகளாக விரிந்து சென்றிருக்கும்.

மேற்கூறியவாறு செய்ய வேண்டாமென்றோ ஒடுக்கு முறையை அம்பலப்படுத்த வேண்டாமென்றோ சொல்ல வரவில்லை.

ஆனால் அதேயளவு முக்கியத்துவம் உள்ள ஒரு சமூகப்பிரச்சனையை இது ஊர்ச் சண்டைதானே! ஊர்ச் சண்டியர்களின் அட்டகாசங்கள் தானே!! பல்கலைக்கழக மாணவனின் ஒரு கைதானே துண்டாடப்பட்டது? சிலர் காயம் அடைந்திருக்கிறார்கள். அவ்வளவுதானே. இதில் என்ன அரசியல் இருக்கிறதென்று புறந்தள்ளி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“நாளுக்கு நாள் யாழ் குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலை காணப்படுகின்றது. காவல் துறையினர் இது குறித்து மிகவும் விழிப்பாக செயற்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், இவ்வாறான செயற்பாடுகள் தொடராத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபரிடம் வேண்டியிருக்கிறார். என அண்மையில் ஒரு செய்தி வந்திருந்தது. இந்தச் செய்தி வந்திருக்கிறது என்பதற்காக அமைச்சராக இருந்த போது யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கை டக்ளஸ் தேவானந்தா நிலைநாட்டினார் என யாராவது நம்பினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே எனப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பது ; அரசும் இராணுவமும் தமிழர்களின் நிலங்களை பறிப்பது; படையினர் தமிழ் மக்களை கொல்வது போன்ற விடையங்களை மட்டுமே அரசியல் லாபம் தரும் விடையங்களாக நினைத்து அதற்கு எதிராக மட்டும் தான் போராட வேண்டும் குரல் எழுப்ப வேண்டும் என நினைப்பார்களாயின் இன்னும் 5 – 10 வருடங்களில் தமிழ்ச் சமூகம் தனது இன அடையாளங்களை தானே அழித்துவிடும். அப்போது கவலையைத்தவிர வேறெதுவும் எம்மிடம் எஞ்சியிருக்காது. ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.

1980களில் போராட்டம் தொடங்கிய காலத்தில் `அடுத்த தைப்பொங்கலுக்குள் தமிழீழம் கிடைத்துவிடும். நீ ஏன் விழுந்து விழுந்து படிக்கிறாய்? தமிழீழத்தில் இலங்கைக் கல்வி முறைமையை விடுத்து புதிதான கல்வி முறையைக்கொண்டுவருவோம்’ எனப் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த என் அக்காவிடம் சொன்னேன். அப்போது அப்பா சொன்னார்: “ சரி நீ தமிழீழத்தை எடுத்துக் கொண்டு வா. அப்ப அவள் புதிய கல்வித்திட்டத்திலும் படிப்பாள். அதுவரைக்கும் அவள் படித்து இப்ப இருக்கிற பல்கலைகழகம் போகட்டும். நீ உன்ரை பாட்டில போராடு”

அதுபோலத்தான் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடி முதலில் அதிகாரத்தை மீட்போம் பிறகு இந்த சமூகப்பிரச்சனைகளைப் பார்ப்போம் எனத் தமிழ்த் தலமைகள் நினைத்தால் தமிழ்ச் சமூகத்தின் இருப்பை தமிழ்ச் சமூகமே கேள்விக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119136/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.