Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிழ்ச்சி விற்பனையின் காலம் இது!

Featured Replies

mask_2410775f.jpg

 

அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி!
 
நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாததன் விளைவே. நான் என் கூட்டை உடைத்துக்கொண்டு வரப்போகிறேன், உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய - ஏன் அவமானகரமான - உண்மையை ஒப்புக்கொள்ளப்போகிறேன். நான் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. தெருவில் போகிற ஆளைப் பார்த்து, ‘‘ஏன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக் கிறாய், மகிழ்ச்சியாக இரு’’ என்று ஆலோசனை கூறும் ஆளும் அல்ல. காரணம், அப்படி எப்போதுமே நடக்காது.
 
அதே வேளையில், நான் மகிழ்ச்சியற்ற மனிதனும் இல்லை. சிரிப்பதில் எனக்கு விருப்பம்தான். என்னுடைய நாவல்களில் சிலவற்றை நல்ல நகைச்சுவைக் கதைகளாகவே படைத்திருக்கிறேன். எல்லோரையும் போலவே எனக்கும் உணர்ச்சிகள் மாறிமாறி வரும். சில வேளைகளில் மகிழ்ச்சியாக இருப்பேன், சில வேளைகளில் சோகமாக இருப்பேன், பெரும்பாலான நேரங்களில் எந்தவித உணர்ச்சியும் அதிகமாக இல்லாமல் சாவதானமாக - அதே வேளையில் எதையோ சிந்தித்துக்கொண்டே - இருப்பேன். ஏமாற்றம், அச்சம், இழப்பு என்று அனைத்துக்குமே என்னுடைய வாழ்க்கையில் இடம் உண்டு. நம்பிக்கை, மகிழ்ச்சி என்பவை என்னுடைய வாழ்க்கையின் அங்கங்கள். எல்லா உணர்ச்சிகளும் எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
 
குறிப்பிட்ட இந்த உணர்ச்சிதான் என்று இல்லாமல் எல்லாம் கலந்த கலவையாகத்தான் ஒரு மனிதன் இருக்க முடியும் என்பதைச் சமூகம் ஏற்பதில்லை. நான் எப்போதும் பல்வேறுபட்ட உணர்ச்சிகளோடு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பேன். சில வேளைகளில் கருணை பெருகும், சில வேளைகளில் உற்சாகம் என்னை ஆட்கொள்ளும், சில வேளைகளில் எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கும். இப்படி இல்லா விட்டால் சமூக விரோதியாகவோ, எல்லோரையும் சபித்துக்கொண்டிருக்கும் முதியவனாகவோதான் இருப்பேன். நல்லவர்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கைபடிப் பார்த்தால் நான் நல்லவன் இல்லை. எல்லாவற்றையும்விட முக்கியம், நான் தோற்றுப்போனவன். ஏனென்றால், வெற்றி வீரர்களால்தானே எப்போதும் சிரித்துக்கொண்டிருக்க முடியும்?
 
மகிழ்ச்சிதான் உரைகல்லா?
 
‘மகிழ்ச்சிதான் மனிதனை எடைபோட நல்லதொரு உரைகல்’ என்ற பாசிசக் கண்ணோட்டம் சமீபத்தில்தான் அமெரிக்காவிலிருந்து எல்லா நாடுகளிலும் இறக்குமதி ஆகியிருக்கிறது. வாழ்க்கையின் லட்சியமே மகிழ்ச்சிதான். கடுமையாக உழைப்பதன் மூலமும் கடைக்குப் போவது, விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, தரும காரியங்களுக்கு நன்கொடை அளிப்பது, முதலாளித்துவத்தின் நவீன நாடகத்தில் நாமும் ஒரு பங்காக இருப்பது போன்றவற்றின் மூலமும்தான் நாம் அடைய முடியும் என்று நம்முடைய மனங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காரணம், மகிழ்ச்சி என்ற லட்சியத்தை முதலாளித்துவம் விரும்புகிறது. மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், ஏராளமான நுகர்பொருட்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அந்தப் பொருட்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாவிட்டால்? கவலையே வேண்டாம், மாற்றுப் பொருட்களை அவர்களே அறிமுகப் படுத்திவிடுவார்கள். வணிகம் என்பது உங்களுடைய சோகத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. ஒல்லியாக இருந்தால், அழகாக இருந்தால், கவர்ச்சியாக இருந்தால், அனைவருக்கும் தெரிந்தவராக இருந்தால், அனைவரும் விரும்புகிறவராக இருந்தால், நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்! இதற்கு உதவத்தான் செல்போன், கணினி, கார், சாக்லேட், ஆடைகள், நகைகள், வீடுகள் விற்கப் படுகின்றன!
 
நீங்கள் எப்போதும் சோகம் கப்பிய முகத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்பவன் அல்ல நான். மாறாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன். மகிழ்ச்சி உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. நீங்கள் விரும்புகிற வர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பதும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதையும்விடப் பெரிய சாதனை ஏதும் இல்லை. அப்படி உங்களால் முடியாவிட்டால் அதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.
 
எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால், அது சாத்தியம் என்று தோன்றவில்லை. செய்தி அலைவரிசைகளைத் திறந்தால் அதில் வந்து கொட்டும் சோகச் செய்திகளைக் கேட்கும்போது மகிழ்ச்சி கரைந்துவிடுகிறது. நான் நிரந்தரமானவன் அல்ல என்ற உண்மையே என் மகிழ்ச்சியைக் குறைத்துவிடுகிறது. முதுமையும் நோயும் என்னை அச்சுறுத்துகின்றன. தகவல்தொடர்புக்கான சாதனங்கள் அதிகமாக அதிகமாக மக்கள் தனிமைப் படுவதும் அதிகரிக்கிறது! அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழலும் கயமைத்தனமும் எல்லா இடங்களிலும் அநீதியே நிரம்பியிருக்கிறது என்ற உண்மையைப் பறைசாற்றுகின்றன. இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் கடுமையாக, மேலும் கடுமையாக, முன்னிலும் அதிகமாக வேலை செய்வதே... இருக்கும் நிலையில் அப்படியே நீடிப்பதற்காகத்தான் அல்லது உயிர் வாழ்வதற்காகத்தான் என்றறியும்போது, என்னுடைய மகிழ்ச்சியெல்லாம் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.
 
நல்ல வேலைகள் அல்லது தொண்டுகள் மூலம் மகிழ்ச்சியடையலாம் என்று சிலர் கூறுவதுண்டு. இது வெறும் சித்தாந்தம்தான். நல்ல தொண்டை ஆரம்பித்துவிட்டு, மகிழ்ச்சியடைவதைப் போல ஏமாற்றத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் சம வாய்ப்பு இருக்கிறது. எனவேதான், நல்ல தொண்டுகளைச் செய்வதும் கடினமாக இருக்கிறது.
 
1970-ல் தொடங்கி நாம் எல்லோரையுமே மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால், நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் எதிர்வினையையே தோற்றுவித்தன. கிடைப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழ்வது என்பதை அப்படியே ஏற்காமல் அந்தத் திருப்திக்கு மகிழ்ச்சி அவசியம் என்று நாமாகக் கற்பித்துக்கொண்டோம். இதனால் வாழ்க்கை திருப்தியாக அமைந்தால்கூட மகிழ்ச்சியாக இல்லையே என்று நுணுகிப்பார்த்து சோகத்தைத் தழுவுகிறோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தேடி அலைந்ததால் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்கிறோம். ‘அப்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்’ என்று சொல்லும் அளவுக்கு, குறிப்பிடத்தக்க அந்த காலகட்டத்தில் நாம் உண்மையில் முழுக்க மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
 
மனச்சோர்வின் காலம்
 
படுக்கையில் தள்ளுகிற அளவுக்கு மனச்சோர்வுநிலை இப்போது பலருக்கு முற்றிவிட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முன்காலத்தைவிட அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், ஆசிரியர்களும் அப்படியே. 35 வயதுக்குக் கீழே உள்ள ஆடவர்களில் பலரின் மரணத்துக்குத் தற்கொலையே காரணமாக இருக்கிறது.
 
தொலைக்காட்சிகளும் இணையதளங்களும் மிகவும் மகிழ்ச்சியான, துடிப்பான, உற்சாகம் மிகுந்த ஒரு சமுதாயம் நம்மிடையே இருப்பதுபோலப் பாவனை காட்டுகின்றன. அதைப் பார்க்கும்போது நல்ல சம்பாத்தியம் இருந்தாலும், வாழ்க்கையில் பெரிய குறைகளோ, தோல்விகளோ இல்லாவிட்டாலும் என் வாழ்க்கை, திரையில் காட்டப்படுகிறவரின் வாழ்க்கை அளவுக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது. வாழ்க்கை என்பது சில வேளைகளில் நன்றாகவும் சில வேளைகளில் மோசமாகவும் இதர வேளைகளில் இரண்டும் கலந்துதான் காணப்படுகிறது.
 
பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் மகிழ்ச்சி என்பதற்கு வேறு இலக்கணம் வைத்திருந்தனர். வாழ்க்கையில் உனக்கு ஏற்படக்கூடிய தோல்விகள், ஆபத்துகள், துயரங்கள்குறித்து அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். “நீ நினைக்கிறபடி அது ‘மோசமாக’ இருக்காது, ‘படு மோசமாக’இருக்கும்” என்று அறிவுறுத்தி வந்தார்கள். ஆனால், இப்போதோ வேறுமாதிரி கேள்விப்படுகிறோம். ஆக்கபூர்வமான எண்ணங்கள் நமக்கு இருந்தால் வான மேகங்களில் நாமும் சிறகடித்துப் பறக்கலாம் என்று இப்போதைய சிந்தனையாளர்கள் உண்மைக்கு மாறாகக் கூறுகிறார்கள்.
 
ஸ்லாவாய் ஜிஜெக் கூறியதைப் போல நான் கூற விரும்பவில்லை. “உங்களை மிகவும் மன அழுத்தத்தில் ஆழ்த்துவது எது?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டபோது, “முட்டாள்களின் மகிழ்ச்சிதான் அது” என்று பதில் அளித்தார். ஆனால், அவர் எதைச் சொல்ல வந்தார் என்று எனக்குப் புரிகிறது. அறிவாளியாகவும் உணர்ச்சிமிக்கவராகவும் சிந்தனைகளோடும் இருப் பவர்களால் உலகையும் தன்னையும் பார்க்கிற பார்வையானது பெரிய வியப்பு எதையும் கண்டுவிடாது. வெளிச்சம் இருளை நம்பித்தான் வாழ்கிறது! இதை நாம் ஒப்புக்கொண்டால் மகிழ்ச்சி, மகிழ்ச்சியற்றது என்ற விவகாரத்தில் நாம் மறுத்துக்கொண்டிருப்பதன் சுமை குறையும். அப்படியென்றால் என்ன, நாம் முன்பைவிட மகிழ்ச்சியோடு இருப்போம்!
 
© ‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: சாரி
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.