Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண சமூக கட்டமைப்பு சீர்குலைவுக்கு முன்வைக்கப்படும் காரணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சமூக கட்டமைப்பு சீர்குலைவுக்கு முன்வைக்கப்படும் காரணங்கள்

Jun 08, 2015 | 5:01 by நித்தியபாரதி in கட்டுரைகள்

jaffna-swords-300x200.jpg

புலம்பெயர் தமிழர்களின் நிதிச் செல்வாக்கின் தாக்கத்திற்கு வித்யா என்கின்ற பாடசாலை மாணவி கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை யாழ்ப்பாணத்தின் இன்றைய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்ற சாட்சியமாகக் காணப்படுகிறது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் அனந்த் பாலகிட்னர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

‘குடும்பங்களை மனதளவில் பாதிக்கின்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான மோசமான சம்பவங்களால் சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளதை காணமுடியும். குடும்ப மற்றும் சமூக உறவுகள், நிறுவகங்கள், நடைமுறைகள், சமூக வளங்கள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பெரியளவில் உளவியல் பாதிப்பை உண்டுபண்ணக் கூடிய சம்பவங்கள் உருவாவதற்குக் காரணமாகும். சமூக நிலை மாற்றமுற்றமை மற்றும் சமூக இழைகள் சிதைவுற்றமை போன்ற பல்வேறு காரணிகளே மிக மோசமான சம்பவங்கள் இடம்பெற வழிவகுக்கிறது’ என்கிறார் பேராசிரியர் தயா சோமசுந்தரம்.

பாரம்பரிய யாழ்ப்பாணத்து சமூகத்தில் தற்போது இடம்பெற்று வரும் சமூக மாற்றங்கள் தொடர்பாக புகழ்பெற்ற மூத்த உளவியல் பேராசிரியர் தயா சோமசுந்தரம் இவ்வாறு விபரித்துள்ளார். நீண்ட காலமாகத் தொடரப்பட்ட யுத்தமானது சமூகத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதற்கும், வீட்டு வன்முறைகள் மற்றும் பாலியல் மீறல்கள் இடம்பெறக் காரணமாகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் சோமசுந்தரம் அவர்கள் அனைத்துலக கல்விசார் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, இவர் தொடர்ந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் விரிவுரைகளை ஆற்றியுள்ளார். போர் காரணமாக இவரது நண்பர் பலர் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்து வேறிடங்களில் பணியாற்றிய போதும் பேராசிரியர் சோமசுந்தரம் யாழ்ப்பாணத்தில் தனது பணியைத் தொடர்ந்திருந்தார்.

இவர் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பாரிய உளவியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அனைத்துலக அமைப்புக்களிடம் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார். Broken Palmyra என்கின்ற நூலின் துணை ஆசிரியராகவும் பேராசிரியர் கடமையாற்றியிருந்தார். இந்த நூலானது 1980களில் யாழ்ப்பாணத்தில் நிலவிய குழப்பமான சூழல் தொடர்பாக விளக்குகிறது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய அரசியற் சூழல் உள்ளடங்கலாகப் பல்வேறு காரணிகள் யாழ்ப்பாணத்தின் சமூகக் கட்டமைப்பில் பாதிப்பைச் செலுத்துவதாக பேராசிரியர் சோமசுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையானது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த வடக்கு மாகாணம் முழுமையிலும் காணப்படுகிறது.

‘சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக யுத்தம் நீடித்திருந்தது. இதனால் இங்கு வன்முறைகள் நிலவின. இறப்புக்கள், படுகொலைகள், கடத்தல்கள், சொத்து அழிவுகள் போன்றவற்றைக் நேரில் கண்ட மக்களின் நடத்தை மாற்றமுற்றது. 2009ல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த யுத்தம் நிறைவுற்றது.

எனினும், இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதிலும் தமது வாழ்வைக் கட்டியெழுப்புவதிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்த சமூகத்தில் தற்போது புரையோடிப் போயுள்ள தீயசக்திகளை அழிக்க வேண்டிய மிகப் பெரிய சவால் ஒன்று காணப்படுகிறது’ என பேராசிரியர் மேலும் விளக்குகிறார்.

புங்குடுதீவு மாணவி வித்யா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை யாழ்ப்பாணத்தின் சமூகக் கட்டமைப்பு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளமைக்கான தெளிவான எடுத்துக்காட்டு எனவும் இந்தச் சம்பவமானது தற்போது சிறிலங்காத் தீவு முழுமையையும் வடக்கு மாகாணத்தின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் நோக்கித் திசை திருப்பியுள்ளதாகவும், இப்பிராந்தியத்தில் சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டுவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

‘யாழ்ப்பாணத்தில் மதுபானப் பாவனை, போதைப்பொருட் பாவனை என்பன மிக முக்கிய பிரச்சினைகளாகும். பாடசாலை மாணவர்கள் கூட மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். போருக்குப் பின்னான காலப்பகுதியில் போதைப்பொருட் பாவனை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள மதுவரித் திணைக்களத்தின் ஆய்வில் உறுதிப்படுத்தப்படுகிறது.

2008லிருந்து மதுபானப் பாவனை அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் 1,000,000 லீற்றர் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2014ல் இது 7,000,000 லீற்றராக அதிகரித்துள்ளது’ எனப் பேராசிரியர் சோமசுந்தரம் சுட்டிக்காட்டுகிறார்.

யாழ் குடாநாட்டில் வதியும் மக்களிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகளவான நிதி கிடைப்பதால் ஒரு சமனற்ற நிலை உருவாகியுள்ளதாகவும், தமது சொந்த இடங்களைப் பார்வையிட வருகின்ற புலம்பெயர் தமிழர்களின் நடத்தை முறைகள் போன்றன யாழ்ப்பாணத்தின் சீர்கேடுகளுக்குக் காரணமாக உள்ளதாகவும் பேராசிரியர் கூறுகிறார்.

‘முன்னர் ஈருருளிகளைப் பயன்படுத்திய யாழ்ப்பாணத்தவர்களின் போக்குவரத்து ஊடகமாகத் தற்போது உந்துருளிகள் காணப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு வீடுகளிலும் உந்துருளிகள் உள்ளன. ஆகவே இந்தப் போக்கானது புலம்பெயர் தமிழ் மக்கள் தமது உறவுகளுக்காக அனுப்பும் நிதிச் செல்வாக்காலேயே ஏற்பட்டுள்ளது’ என பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

புலம்பெயர் தமிழர்களின் நிதிச் செல்வாக்கின் தாக்கத்திற்கு வித்யா என்கின்ற பாடசாலை மாணவி கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை யாழ்ப்பாணத்தின் இன்றைய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்ற சாட்சியமாகக் காணப்படுகிறது. இக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 10 பேரில் ஒருவரான எம்.குமார் என்பவர் சுவிற்சர்லாந்து வாழ் தமிழராவார்.

குறித்த சந்தேகநபரான குமார் என்பவர் சுவிசிலிருந்து புங்குடுதீவுக்கு வரும்போதெல்லாம் இவர் தனது நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக உள்ளுர் வாசிகள் குற்றம்சுமத்துகின்றனர். இவருடன் இணைந்து களியாட்டங்களில் ஈடுபடும் புங்குடுதீவு இளைஞர்கள் மிகவும் மோசமானவர்கள் எனவும் மக்கள் கூறுகின்றனர்.

சுவிஸ் வாசியான குமார் என்பவர் புங்குடுதீவுக்கு வரும் போதெல்லாம் வெளிநாட்டு மதுபானங்களைக் கொண்டு வந்து இந்த இளைஞர்களுக்குக் கொடுப்பதாகவும் இதனால் இவர்கள் மோசமான காரியங்களில் ஈடுபடுவதாகவும் மக்கள் விசனமுற்றுள்ளனர்.

வித்யாவின் படுகொலையை அடுத்து யாழ்ப்பாண நீதிமன்றின் மீதான ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலானது இங்கு வாழும் மக்கள் சட்டம் ஒழுங்கைத் தமது கைகளில் எடுக்கத் தீர்மானித்துள்ளனர் என்பதையே கோடிட்டுக் காட்டுவதாக வடக்கு மகாணத்திற்கான சிறிலங்கா காவற்துறையின் பிரதிப் பொறுப்பதிகாரி லலித் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

‘யாழ்ப்பாண நீதிமன்றின் மீது காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இக்காடையர்களைக் கட்டுப்படுத்தி நிலைமையை சுமூகமாக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படை உட்பட மேலதிக படையினர் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறான குற்றச்செயல்களைத் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டது. நீதிமன்றின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட 130 பேர் கைதுசெய்யப்பட்டனர். வன்முறையை முடிவிற்குக் கொண்டு வருவதற்காகவே நாங்கள் இவர்களைக் கைதுசெய்தோம்’ என்கிறார் லலித் ஜெயசிங்க.

வடக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ் பேசும் காவற்துறையினர் பணிக்கு அமர்த்தப்பட்டு சட்ட ஒழுங்கு பலப்படுத்தப்பட வேண்டும் என பிரதி காவற்துறைப் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வடக்கில் உள்ள காவற்துறை நிலையங்கள் மற்றும் நீதிமன்றில் மொழி பாரிய பிரச்சினையாக உள்ளது. மக்களுடனான தொடர்பாடல் இடைவெளியைப் போக்குவதற்காக காவற்துறையில் தமிழர்களைக் குறிப்பாக பெண்களை இணைக்குமாறு கோரியுள்ளோம். தமது கல்வியை முடித்த பாடசாலை மாணவர்கள் தமது சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காக உதவிக் காவற்துறை உறுப்பினர்களாகத் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என நாம் கோருகிறோம். தற்போது வடக்கில் உள்ள காவல் நிலையங்களில் நிலவும் மொழிப் பிரச்சினையை ஈடுசெய்வதற்காகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது’ எனவும் காவற்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகள் சிறிலங்கா காவற்துறையில் இணைவதன் மூலம் இவர்கள் நல்ல குடிமக்களாக சமூகத்திற்கு சேவையாற்ற முடியும் எனவும் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

‘போரின் போது மிகமோசமான வன்முறைகளை யாழ்ப்பாண மக்கள் நேரில் கண்டுள்ளனர். மக்களின் வாழ்வானது துப்பாக்கிகள், குண்டுகள் எனப் பலதரப்பட்டவற்றால் சின்னாபின்னமாகியுள்ளது. ஆனால் தற்போது வடக்கில் வாழும் மக்கள் அமைதி வாழ்விற்குத் திரும்புகின்ற இந்நிலையில் யாழ்ப்பாண சமூகத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன’ என மூத்த வழக்கறிஞரும் பிரபல விளையாட்டு வீரருமான வி.ரி.சிவலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘முன்னர் எமது பிரதேசங்களில் ஆயுதங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் தற்போது வாள்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய 20 வாள்களை காவற்துறையினர் யாழ்ப்பாண நீதிமன்றில் சமர்ப்பித்தனர். பிரேசிலில் தயாரிக்கப்பட்ட வாள்கள் கூட இதில் காணப்பட்டன. இது என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. யாழ்ப்பாணத்து சமூகமானது அரசியல் தீர்வு மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கின்ற போதிலும் போதைப் பொருட்கள், மதுபானப் பாவனைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்ற பல்வேறு வடிவங்களில் யாழ்ப்பாணத்தில் சமூக விரோதச் செயல்கள் அரங்கேறுகின்றன’ என சிவலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி மற்றும் விளையாட்டு போன்ற பல்துறைகளிலும் ஆற்றல் மிக்கவர்கள் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண சமூகத்தில் இன்று சமூக விரோதச் செயல்கள் தலைதூக்கியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்’ என சிவலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்து இளையோர்களைத் தவறான பாதைக்குள் இட்டுச் செல்லும் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு யாழ். மாவட்டச் செயலகம் தீர்மானித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் தொடர்பாக ஏற்கனவே யாழ் மாவட்டச் செயலகம் அறிக்கை ஒன்றை மே 27 அன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலரால் காவற்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டின் 25 இடங்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களை ஒழிப்பதில் சிறிலங்கா அதிபரின் உதவியையும் ஒத்தாசையையும் நாடவுள்ளதாகவும் மாவட்டச் செயலர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாலியல் முறைகேடுகள், கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களில் வடக்கில் பாலியல் முறைகேடுகள் மிகவும் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்யலிங்கம் தெரிவித்துள்ளார். ‘கடந்த நான்கு மாதங்களில் பாலியல் முறைகேடுகள் தொடர்பாக 35 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளே இவையாகும். ஆனால் முறைப்பாடு செய்யப்படாத பாலியல் மீறல் சம்பவங்கள் அதிகம் உள்ளன’ என சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வடக்கின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாலியல் மீறல்கள் இடம்பெறுகின்றன. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் இது அதிகமாகும்’ என சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்து நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் அனுமதித்தமையானது பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள மக்களின் வடுக்களை ஆற்றுவதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக போரின் தாக்கத்தால் சமூக மற்றும் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக ஆராய்கின்றவரும் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் இடம்பெற்ற காலங்களில் பணிபுரிந்தவருமான உளவியல் பேராசிரியர் தயா சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

‘மக்கள் தமது மனவுணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த விடாது அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஏற்கனவே மனப்பாதிப்பிற்கு உள்ளாகிய சமூகத்தை மேலும் மோசமாக்கும். ஏற்கனவே போரின் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளாகிய மக்கள் தமது மனவுணர்வுகளை வெளிப்படுத்தி மனங்களை இலகுபடுத்தி தமது துயர்களைப் பகிர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். போரின் போது இறந்த தமது உறவுகளை அமைதி வழியில் நினைவு கூர்வதற்கு அனுமதிக்க வேண்டும். இந்த மக்கள் அமைதி வழியில் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் புரிந்துணர்வின் அடிப்படையில் இதற்கான விட்டுக்கொடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தென்னிலங்கை வாசிகள் கருதுகின்றனர்.

இதன்மூலம் நல்லிணக்க முயற்சிகள் துரிதமாக்கப்பட முடியும் என நான் நம்புகிறேன். மறுபுறத்தே, மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்த அனுமதிப்பதானது இவர்கள் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கும் வழிசமைக்கும்’ என பேராசிரியர் தயா சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/06/08/news/6845

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.