Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விகாரைகளுக்குள்ளிருந்து வராத நல்லிணக்கம் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைகளுக்குள்ளிருந்து வராத நல்லிணக்கம்

Barack Obama

- நிலாந்தன்

ண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ‘நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச் செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும்’ என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவர் ஒரு மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார். கலை இலக்கியத்தை அனுபவிப்பது தொடர்பான ஒரு மாநாடு அது. அதில் அவர் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெற்குக்குக் கொண்டு செல்லுமாறு இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.’ அரசியல்வாதிகளால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மதத்தலைவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்றோரும் இதில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற தொனிப்பட அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Nilanthanஇதைப்போலவே இம்மாதத் தொடக்கத்தில் அவர் சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறை சங்கத்தின் பொதுச் செயலாளரான எல்ஹாட் அசீயை சந்தித்தபோதும் நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் இருந்தே கட்டியெழுப்ப வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். வெளிநாட்டுச் சக்திகளால் நல்லிணக்கத்தை திணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 12ஆந் திகதி சனிக்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியவை அரசுத்தலைவரால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வு காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பேசிய மைத்திரி,

‘நாங்கள் தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எல்லோரும் தேசிய நல்லிணக்கம் என்றவுடன் அது பற்றிப் பேச வடக்கிற்கே வருகின்றார்கள். முதலில் நல்லிணக்கம் பற்றி தென்னிலங்கை மக்களிற்கே புரியவைக்க வேண்டும். தென்னிலங்கை மக்களின் மனங்களை சில கடும்போக்குவாதிகள் மாற்ற முற்படுகின்றார்கள்…’

என்று கூறியுள்ளார்.

உண்மைதான் நல்லிணக்கம் எனப்படுவது கீழிருந்து மேல்நோக்கியும் மேலிருந்து கீழ்நோக்கியும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு செய்முறை தான். அதை அரசியல்வாதிகளால் மட்டும் செய்ய முடியாது. அதில் சமூகத்தின் கருத்துருவாக்கிகளாகக் காணப்படுகின்ற அல்லது சமூகத்தின் மீது ஏதோ ஒரு விதத்தில் தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகின்ற தரப்பினர் என்று கருதத்தக்க அனைவரும் பங்கேற்க வேண்டும்.

உலகின் வெற்றிபெற்ற நல்லிணக்க முன்னுதாரணமாகக் காட்டப்படும் தென்னாபிரிக்காவில் அவ்வாறுதான் நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை அரசாங்கமும் இது தொடர்பில் தென்னாபிரிக்காவிடம் உதவி கேட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நிலைமாறுகாலகட்ட நீதி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக தென்னாபிரிக்காவிற்குச் சென்றுவந்த ஒரு தமிழ் செயற்பாட்டாளர் ‘தென்னாபிரிக்கா நல்லிணக்கத்தை விற்கிறதா?’ என்று கேட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

நல்லிணக்க அனுபவங்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு வெளியாரிடம் கடன் வாங்கவேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நல்லிணக்கத்தைப் பற்றி பௌத்தம் போதிப்பதை விடவும் கூடுதலாக வேறு யாரும் போதித்துவிட முடியாது. அகிம்சாமூர்த்தியான புத்தரிடமிருந்து நல்லிணக்கத்தைக் கற்காத ஒரு நாடு வேறு எவரிடமிருந்தும் அதைக் கற்க முடியாது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தவிர்க்கப்படவியலாத ஒரு பெரும் ஆய்வுப்பரப்பாகக் காணப்படுகிறது. ஏறக்குறைய முப்பதாயிரத்திற்கும் குறையாத பௌத்த துறவிகள் இங்குண்டு என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நாடு நல்லிணக்கத்திற்காக வெளிச்சக்திகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய ஒரு நிலை ஏன் ஏற்பட்டது?

1980களின் நடுக்கூறளவில் ஓர் இந்திய ஊடகவியலாளர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் பேட்டி கண்டார். ‘ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது’ என்று பிரபாகரன் ஒரு கேள்விக்குப் பதில் கூறியிருந்தார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்னிருந்த அதே நிலைதான் இப்பொழுதும் பிரபாகரன் இல்லாத இலங்கைத்தீவில் நிலவுகிறதா?

கடந்த ஆண்டு நோர்வேயைச் சேர்ந்த ஒரு நண்பர் நோர்விஜிய திருச்சபையைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற போதகரை இக்கட்டுரை ஆசிரியருக்கு அறிமுகப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையோடு இலங்தைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டது. இங்குள்ள பெரும்பாலான கிறிஸ்தவ திருச்சபைகளின் உயர்மட்டங்களோடு அவர் உரையாடி இருக்கிறார். தொடர்ந்தும் அதுபோன்ற உரையாடல்களில் ஈடுபட இருப்பதாகச் சொன்னார். அப்போது இக்கட்டுரை ஆசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். நல்லிணக்க முயற்சிகளை திருச்சபை வளாகங்களிலிருந்து தொடங்குவது வசதியானதே. ஏற்கனவே நிறுவனமயப்பட்டிருக்கிற திருச்சபைகளின் ஊடாக அதைச் செய்யும் போது பெரியளவில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டியிருக்காது. அதோடு மேற்கத்தேய பின்னணிகளைக் கொண்ட திருச்சபைகளுக்கூடாக நல்லிணக்கம் தொடர்பான மேற்கத்தைய பொறிமுறைகளை முன்னெடுப்பது மிகவும் இலகுவானது. ஆனால் இதில் ஓர் அடிப்படைப் பிரச்சினை உண்டு. திருச்சபைகளின் செயற்பாட்டை சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? என்பதே அது. புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களும், வெள்ளைப் புலிகளும் சேர்ந்து இலங்கைத் தீவுக்கு வகுப்பு எடுக்க முற்படுவதாக அவர்கள் சந்தேகிக்கக்கூடும். எனவே, மெய்யான பொருளில் இலங்கைத்தீவில் நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பதாகவிருந்தால் அதை விகாரைகளில் இருந்தே தொடங்க வேண்டும் என்று இக்கட்டுரை ஆசிரியர் மேற்படி நோர்விஜியப் போதகருக்குச் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று ஒஸ்லோப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராட்சியாளருடனான சந்திப்பின் போதும் அவர் கேட்டார் ‘இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளை எங்கிருந்து தொடங்கினால் அது பயன் பொருத்தமாகவும், வினைத்திறன்மிக்கதாகவும் இருக்கும்?’ என்று. அதற்கு இக்கட்டுரையாசிரியர் சொன்னார் ‘விகாரைகளிலிருந்து’ என்று.

நல்லிணக்கம் எனப்படுவது முதலாவதாகவும், முக்கியமானதாகவும் வென்றவர்களிடமிருந்தே தொடங்கப்பட வேண்டும். தென்னாபிரிக்க முன்னுதாரணமும் அத்தகையதுதான். இன ஒதுக்கற் கொள்கையால் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை கறுப்பின மக்கள் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற பின் முன்னெடுக்கப்பட்டதே தென்னாபிரிக்க நல்லிணக்கமாகும். அங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஒடுக்கியவர்களை தண்டிப்பதை விடவும் மன்னிப்பதற்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அந்த செய்முறைக்கு மண்டேலா எனப்படும் ஒரு பேராளுமை தலைமை தாங்கியது. ஆனால் இலங்கைத்தீவின் நிலைமை அவ்வாறு உள்ளதா?

இங்கு வெற்றிபெற்ற தரப்பாகவும், பெரும்பான்மையாகவும் காணப்படுவது சிங்கள மக்கள்தான். சிங்கள மக்கள் மத்தியில் அபிப்பிராயங்களை உருவாக்க வல்ல சக்தியோடும், நிறுவன வலையமைப்போடும் காணப்படுவது மகாசங்கம் தான். இலங்கைத்தீவின் அரசியலை தீர்மானிக்கும் தரப்புக்களில் ஒன்றாகவும் மகாசங்கம் காணப்படுகிறது. சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தின் அடிச்சட்டமாக இருப்பதும்மகாசங்கம் தான். இனப்பிரச்சினையின் மூல காரணம் சிங்கள பௌத்த மேலாதிக்கம் தான். இச்சிறிய தீவை ஏனைய சிறிய தேசிய இனங்களோடும், சிறிய மதங்களோடும் பங்கிடத் தயாரற்ற ஒரு மனோநிலையே அது. அந்த மனோநிலையில் மாற்றம் ஏற்படுவது என்றால் அதைப் பேணும் களமாகவும், பிரயோகிக்கும் களமாகவும் காணப்படும் விகாரைகளிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக அதை ஏன் செய்ய முடியவில்லை?

நல்லிணக்க முயற்சிகளில் பௌத்தத் துறவிகள் எப்படியான பங்களிப்புக்களை நல்க முடியும் என்பதற்கு கம்பூச்சியா ஒரு நல்ல உதாரணமாகக் காட்டப்படுகிறது. அங்கு ஒருபுறம் போர் நடந்துகொண்டிருக்கும் போதே இன்னொருபுறம் சமாதானத்திற்கான பாத யாத்திரைகளில் பௌத்தத் துறவிகள் ஈடுபட்டிருந்தார்கள். எனவே, குறைந்த பட்சம் கம்பூச்சிய உதாரணத்திலிருந்தாவது இலங்கைத்தீவு கற்றுக்கொள்ளத் தவறியது ஏன்?

ஆயுதமோதல்கள் முடிவடைந்த பின்னரும் ஒரு பொதுபலசேனாவை உற்பத்தி செய்யும் அளவிற்கே இலங்கைத்தீவின் நிலைமைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல கம்பூச்சியாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதிலாக பர்மாவிலிருந்து பௌத்த அடிப்படைவாதிகளை அழைத்து விருந்தோம்பும் ஒரு நிலைமையே சில ஆண்டுகளுக்கு முன் காணப்பட்டது. முஸ்லீம்களுக்காகப் பரிந்து பேசிய ஒரு பௌத்த துறவிக்கு சுன்னத்துச் செய்யும் ஒரு நிலைமையே சில ஆண்டுகளுக்கு முன் காணப்பட்டது. இது விடயத்தில் சில மாதங்களுக்கு முன் இயற்கை எய்திய சோபிததேரர் போன்ற புறநடைகளை இலங்கைத்தீவில் மிக அரிதாகவே காணமுடிகிறது. இத்தகையதோர் பின்னணியில் விகாரைகளிலிருந்து நல்லிணக்கத்தை தொடங்க முடியுமா?

இந்த இடத்தில் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். நல்லிணக்கம், மன்னிப்பு போன்ற பலவற்றுக்கும் முன்னுதாரணமாகக் காட்டப்படும் ஒரு சம்பவம் அது… ‘ஒருநாள் புத்தர் ஓர் ஆற்றங்கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். ஆற்றில் குளிக்க வந்த ஒரு பிராமணர் புத்தரைக் கண்டார். பிராமணியத்திற்கு எதிராகவும், இந்திய சாதிக்கட்டமைப்பிற்கு எதிராகவும், சடங்குகளுக்கு எதிராகவும் போதித்துவரும் புத்தரைக் கண்டதும் பிராமணருக்கு சினம் பொங்கியது. அவர் புத்தருக்கு நேரே போய் நின்று மோசமான வார்த்தைகளால் அவரைத் திட்டினார். புத்தர் அசையவில்லை. கண்களைத் திறக்கவுமில்லை. நிச்சலனமாகத் தியானத்தில் இருந்தார். பிராமணரால் பொறுக்க முடியவில்லை. புத்தரின் முகத்தில் காறித்துப்பிவிட்டு குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். குளித்தமுடித்தபின் தலையைத் துவட்டிக்கொண்டு திரும்பி வந்தார். புத்தர் அப்பொழுதும் அப்படியே அசையாமல் வீற்றிருந்தார். பிராமணர் துப்பிய எச்சில் புத்தருடைய முகத்தில் வடிந்து நாடிவழியாக ஒழுகிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பிராமணரைத் திடீரென்று குற்ற உணர்ச்சி தாக்கியது. தவத்திலிருக்கும் ஒருவரின் முகத்தில் காறித்துப்பி விட்டேனே என்று குற்ற உணர்ச்சி கொண்டார். ஓடிப்போய் தனது துணியால் புத்தரின் முகத்தைத் துடைத்தார். அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கால்களில் விழுந்தார். அப்பொழுதுதான் புத்தர் கண்களைத் திறந்தார். வாயையும் திறந்தார். ‘நீங்கள் துப்பும் பொழுது எனது மனமும் துணுக்குற்றது. ஆனாலும் நான் அதைக் கடந்து சென்றேன். உங்களிடம் எனக்குக் கோபம் இல்லை. உங்களுக்கும் இப்பொழுது என்மீது கோபம் இல்லை. நீங்கள் துப்பும்போது இருந்த புத்தரும் இல்லை. நீங்களும் இல்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஒன்று இன்னொன்றாக உருவாகிக் கொண்டிருக்கிறது.’…. என்று.

மேற்படி கதையை இலங்கைத்தீவன் கடந்த ஏழாண்டு கால அனுபவத்துடன் பொருத்திப் பார்க்கலாம். 2009 மே மாதம் அளவில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொல்லும் போதிருந்த அதே சிங்கள பௌத்த மனோநிலை இப்பொழுது இல்லை என்று கூறத்தக்க தேரவாத பௌத்தர்கள் எத்தனைபேர் இந்த நாட்டில் உண்டு? கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எல்லாவற்றிற்காகவும் அக்கொடுமைகளின் உச்சக்கட்டமாக நந்திக்கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டமைக்காகவும் குற்ற உணர்ச்சிகொள்ளும் தேரவாத பௌத்தர்கள் எத்தனைபேர் இச்சிறிய நாட்டில் உண்டு? இவ்வாறு கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்பு கேட்பதற்கு எத்தனை சிங்களத் தலைவர்கள் தயாராகக் காணப்படுகிறார்கள்?

கடந்த 09ஆந் திகதி நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டிருக்கிறது. சரியாக மூன்று மாதகால இழுபறிக்குப் பின் அவ்வாறு நாடாளுமன்றத்தை மாற்றுவதற்கான பிரேரணையின் முகப்புரை நீக்கப்பட்டதால் ஓர் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதும் அந்த முகப்புரையில் கூறப்பட்டிருந்ததே அதை நீக்குவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்து எழு ஆண்டுகள் ஆனபின்னரும் சிங்களத்தலைவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும்; புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாகவும், உத்தியோகபூர்வமாகவும் முகப்புரையில் கூறத்தயாரற்ற ஒரு நிலையே காணப்படுகிறது. மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் அவ்வாறு கூறத் தேவையான அரசியல் திடசித்தம் இல்லை ஆயின் இறந்த காலத்திலிருந்து சிங்களத்தலைவர்கள் பாடம் எதையும் கற்கவில்லை என்றுதானே பொருள்? இறந்த காலத்திலிருந்து சிங்களத்தலைவர்கள் பாடம் எதையும் கற்கவில்லை என்றால் அவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படாது.

அதாவது, சிங்கள அரசியல்வாதிகள், மதபீடங்கள், செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மத்தியில் குற்ற உணர்ச்சி ஏற்படாத வரையிலும் அல்லது அக்குற்ற உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் இடைமாறுகாலகட்ட நீதிக்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாதவரையிலும் இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் கட்டியெழுப்ப முடியாது. அது மட்டுமல்ல அரசியலமைப்பு மாற்றங்களில் இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வையும் உள்ளிணைக்க முடியாது.

 

http://www.nanilam.com/?p=8815

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.