Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றைத் திரிக்கிறாரா ’லகான்’ இயக்குநர்? -ஹிருத்திக் ரோஷனின் 'மொகஞ்சதாரோ' சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mohenjo-daro.jpg

பிரபல இயக்குநர் அசுதோஷ் கௌரிகரின் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கிறது மொகஞ்சதாரோ. ' சிந்துசமவெளி நாகரிகத்தையே உலகின் முதன்மையான நாகரிகம் என திரித்துப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் டிரைலரில் காட்டப்படும் காட்சிகளில் இருந்தே இதை உணர்ந்து கொள்ள முடிகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

பாஜிராவ் மஸ்தானியும் மொகஞ்சதாரோவும்...

ashutosh.jpgஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் உருவாகி உள்ள மொகஞ்சதாரோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலரை 13 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். லகான், ஜோதா அக்பர் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகரின் அடுத்த படைப்பு என்பதால் பாலிவுட் ரசிகர்கள் மொகஞ்சதாரோவுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக மிகவும் மெனக்கிட்டிருக்கிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

" நல்ல சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என படத்தின் புரமோஷனுக்காகக் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனால், எது உண்மையான வரலாறு என்பதை அறியாமல், இந்துத்துவ சிந்தனையாளர்களின் போக்கில் படம் எடுக்கப்பட்டதாகவே அறிகிறோம்" என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

அவர்கள் நம்மிடம், " இந்தி பட இயக்குநர்களின் திடீர் வரலாற்றுப் பாசம் பற்றி நாம் கேள்வி எழுப்பவில்லை. வரலாற்றைப் பற்றிய இவர்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் 'பாஜிராவ் மஸ்தானி' என்ற படத்தில் சளைக்காத இந்து போர்வீரனாக கதாநாயகன் வடிவமைக்கப்பட்டார். காவிக் கொடி ஏந்தி, இந்தியாவின் எதிரிகளான முகலாயர்களை வீழ்த்துவதுதான் அவரின் ஒரே குறிக்கோள் என்பதாகப் படத்தில் காட்டப்பட்டது. நவீன இந்தியா உருவாகாத நிலையில், முகலாயப் பேரரசு பற்றி சஞ்சய் லீலா பன்சாலியால் திரிக்கப்பட்டது. இப்போதும் மொகஞ்சதாரோ படம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரைலரில் சிந்து சமவெளி நாகரிகம் குறித்து உண்மைக்கு மாறாக திரிக்கப்பட்டிருக்கிறது.

ஹரப்பா காலத்தில் சமஸ்கிருதமா?

சிந்து வெளி அல்லது ஹரப்பா நாகரிகத்தின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றாக மொகஞ்சதாரோ இருந்துள்ளது. உலகின் தொன்மையான நகரம் ஒன்றின் கதை எனச் சொல்லிவிட்டு, இதன் காலத்தை கி.மு 2016 எனத் தெரிவிக்கிறார் அசுதோஷ். இதில் காட்டப்படும் அனைத்து அம்சங்களுமே தவறானவை. படத்தில் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியை பயன்படுத்தியுள்ளனர். 'இதே போன்ற ஒரு மொழிதான் சிந்துவெளியில் பேசப்பட்டிருக்கும்' என இப்படம் ஒருவரை எளிதில் நம்ப வைத்துவிடும். இதுபற்றிய அறிவிப்பும் டிரைலரில் காண்பிக்கப்படவில்லை. ஆனால், தொல்லியல் ஆய்வாளர்களோ, 'வெண்கல யுகத்தில் பல மொழி பயன்பாடு இருந்திருக்கலாம் அல்லது மொழியே இல்லாமல் இருந்திருக்கலாம்' என்கிறார்கள். அங்கே சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவோ எழுதப்பட்டதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை.

நாயகன் பேசும் இந்தி வசனங்கள் சினிமாவுக்கான சுதந்திரம் என்பதாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கல்வெட்டுகளில் எழுதப்பட்டதாகக் காட்டப்படும் சமஸ்கிருதம் தோய்ந்த ஹிந்தி எழுத்துகள், ரிக் வேத காலத்துக்கும் ஹரப்பா நாகரிக காலத்துக்கும் முடிச்சுப் போடும் இந்துத்துவ பிரசாரகர்களின்  கருத்துக்கு வலு சேர்க்கவே பயன்படும். நாயகன் ஹிருத்திக் ரோஷன், நாயகி பூஜா ஹெக்டேவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வசனங்களைப் பாருங்கள். 'து மெரி சங்ஹானி ஹை' (நீ என்னுடைய இணை) என்கிறார்.  இந்த வசனம், நடைமுறையில் உள்ள மொழிக்கும் எழுத்து மொழிக்கும் மாறி மாறி பயணிக்கிறது. மொழி அரசியல் இந்த விவகாரத்தில் முக்கியமானது. இது திட்டமிடப்பட்ட வேலையாகவே பார்க்க வேண்டியுள்ளது" எனக் கொந்தளித்தவர்கள் , தொடர்ந்து,

" இதைவிட மிக முக்கியமான வரலாற்றுப் பிழை, குதிரை முத்திரை தொடர்பானது.  1999-ம் ஆண்டு, அமெரிக்க வாழ் இந்துத்துவ கோட்பாட்டாளர் என். எஸ். ராஜாராம் மற்றும் தொல்லியல் வரைபட நிபுணர் நட்வர் ஜா ஆகியோர் இணைந்து எழுதிய The Deciphered Indus Script என்ற நூலில், ' ஹரப்பா எழுத்து சமஸ்கிருத குடும்பத்திலிருந்து வந்தது' என்கிறார்கள். அவர்கள் ஹரப்பாவின் தொல்லியலை வேத இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி எழுதியுள்ளனர். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு 2000 ஆண்டுகளுக்குப் பிறகே, ரிக் வேத காலம் வந்திருக்க வேண்டும் என்பதுதான் தொழில்முறை வரலாற்று அறிஞர்களின் ஆய்வாக இதுவரையில் உள்ளது. இந்த இரண்டுக்கும் இயற்கையான உறவு எதுவும் இல்லை என்பதும் அவர்களின் தீர்க்கமான கருத்தாக இருந்தது. ராஜாராமின் கருதுகோள் இந்து வலதுசாரிகளைக் கொண்டாடச் செய்தது. தொழில்முறையிலான வரலாற்று ஆசிரியர்கள் முன்வைத்த, ' ஆரியர்கள் இந்தியப் பூர்வக்குடிகள் அல்ல; அவர்கள் குடியேறிகள்' என்கிற கோட்பாட்டை தள்ளிவைத்துவிட்டு, 'இந்தியாவின் ஒளிமயமான இறந்த காலத்தை சிதைத்தது முஸ்லிம் படையெடுப்பே' என்றும், ஆரியர்கள் இந்தியாவில் வசித்தவர்களே, அவர்களே ‘அறிவியல்பூர்வமான’ வேத காலத்தை நிறுவியர்கள் என்றும் நம்ப வைக்கும் முயற்சியில் இறங்கினர்.


குதிரையா... ஒற்றைக் கொம்பு காளையா? 

ராஜாராமும் நட்வர் ஜாவும், ' ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது' என்றார்கள். Mackay 453 என்ற முறையைப் பயன்படுத்தி ஒற்றைக் கொம்பு காளையை, கொம்பு முளைத்த குதிரை என மாற்றினார்கள். ஆனால் ஆய்வின்படி ஆரியர்களின் புலம்பெயர்வுக்குப் பிறகே குதிரைகள் இங்கே கொண்டுவரப்பட்டன. குதிரைகள் கி.மு. 1500ம் ஆண்டில்  ஆரியர்களால் கொண்டுவரப்பட்டவை. மாடுகளின் மூலம் நகர்ந்த இந்திய மக்களை அடிபணிய வைக்க, வேகமான குதிரைகளை ஆரியர்கள் பயன்படுத்தினர். ஆனால் வலதுசாரி வரலாற்றாசிரியர் இவற்றை நிராகரித்து, 'இந்திய கலாசாரத்தில் குதிரைகளும் அங்கமானவையே' என்கிறார்கள். வேதகால இலக்கியங்கள் குதிரைகள் குறித்து நிறையவே பேசுகிறது. ஆனால் வேத காலத்துக்கு முன்பு இந்த விலங்கு குறித்து எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை.

hrithik3.jpg

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் ஆய்வாளர் மிக்கேல் விட்ஸெல் மற்றும் ஒப்பீட்டு வரலாற்று ஆசிரியர் ஸ்டீவ் ஃபார்மர் ஆகியோர், ராஜாராமின் கருத்துக்களுக்கு வரிக்கு வரி ஆதாரங்களை முன்வைத்து நிராகரித்தார்கள்.  ராஜாராம் இந்த குதிரை முத்திரையை கணினி மூலம் மெருகேற்றி ஜோடித்ததை நிரூபித்தது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளில் இந்த கருதுகோளைச் சொல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். ' இந்த குதிரை முத்திரை, ராஜாராம் நூலில் இருக்கும்  ஒரு ஏமாற்று. வேத சமஸ்கிருத அறிவு குறித்து இன்னும் மேம்பட்ட ஆய்வு தேவைப்படுகிறது. இறுதி வேதகாலத்தின் சமஸ்கிருதமே ஹரப்பாவின் மொழி என்கிறார் ராஜாராம். இது மொழியியல், தொல்லியல் உள்ளிட்ட துறைகளின் ஆய்வுகளிலிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. முதிர்ச்சியடைந்த ஹரப்பா கலாசாரத்திற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுகூட  வேத இறுதிக்காலம் இல்லை என்பதே உண்மை" என்கின்றனர் அவர்கள்.

sivaadv.jpgமொகஞ்சதாரோ படம் முன்வைக்கும் அரசியல் குறித்து நம்மிடம் விவரித்த வழக்கறிஞர் சிவக்குமார், " கி.மு. 2000-க்கு முன்பும், கி.மு. 1700-ன் முடிவிலும்கூட இந்தியாவில் குதிரைகள் இல்லை என்பதையே ஆதாரங்கள் காட்டுகின்றன.  சுருக்கமாகச் சொல்லப்போனால், சிந்துவெளி நாகரிக காலமே இந்தியாவின் பழமையான வேதகாலம் என நிறுவுவதற்கே இந்து வலதுசாரிகள் எப்போதும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜாராமின் கருதுகோள்கள் குறித்து, வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பார் விமர்சிக்கும்போது, ' அந்தக் குறிப்பிட்ட முத்திரை குதிரையினுடையதாக இருக்கும் என்று திணிப்பதன் மூலம், சிந்துவெளி நாகரிகத்தில் குதிரை முக்கியமானது எனச்  சொல்லவருகிறார் எனக் கொள்வோம். விட்ஸெல், ஃபார்மல் தங்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, அந்த முத்திரை, கணினி மூலம் மெருகேற்றப்பட்டது,  அந்தப் படத்தில் இருக்கும் விலங்கு குதிரை அல்ல என்பது தெளிவாகிறது. வேத காலத்தின், சிந்து வெளி நாகரிகத்தின் மையமாக குதிரை இருந்திருக்குமானால், அங்கே ஏராளமான குதிரை முத்திரைகள் கிடைத்திருக்கும். ஆனால் எண்ணற்ற முத்திரைகள் ஒற்றைக் கொம்பு காளையினுடையதாகவே உள்ளன" என்கிறார்.

இந்திக்கும் குதிரைக்கும் என்ன சம்பந்தம்? 

மேலும், " மொகஞ்சதாரோ படத்தின் டீசரில், ராஜாராமின் குதிரை முத்திரையையே பார்வைக்கு வைப்பதன் மூலம், அது மொகஞ்சதாரோவில் அரேபியக் குதிரைகள் இருந்ததாக நிறுவ முயல்கிறது. சிந்துவெளி நாகரிகத்தில், சமஸ்கிருதத்தின் ஒரு வடிவமான மொழி பேசப்பட்டது என்று நிரூபிப்பது, ஆரிய நாகரிகத்தின் தேவையாக இருக்கிறது. இதன் மூலம் ஆரிய இருப்பைக் கண்டறிய முயல்கிறார்கள். சிந்துவெளி காலத்தில் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதமாக இருக்கலாம் என நிரூபிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து போய்விட்டன எனவும் சுட்டிக் காட்டுகிறார் ரொமீலா தாப்பர். இந்துத்துவ பிரசாரத்திற்கு மொகஞ்சதாரோவின் டீஸர் பொருத்தாக உள்ளது. கெளரிகர் சொல்லும் வரலாற்று விவரங்கள், உண்மையிலிருந்து கணிசமான அளவு விலகியிருக்கின்றன.

நிரூபிக்கப்படாத, தவறான கருதுகோளான சிந்துவெளி நாகரிகம்தான், உலகின் மூத்த நாகரிகம் என்பதை வலதுசாரி கோட்பாட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு  முன்பே நிறுவப் பார்த்தனர். தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி மெசபடோமிய, எகிப்திய நாகரிகங்களே பழமையானவை. ஹரப்பா நாகரிகத்தை நன்கு ஆராய்ந்த பிறகே, அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட முத்திரைகள், செம்பின் பயன்பாடு, எடை அளவுகளின் பயன்பாடு, நகர வடிவமைப்பு மற்றும் பலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்துத்துவ உணர்வுக்கு தீனி போடுவதற்காகவே கௌரிகர், சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்திக்கும் குதிரைக்கும் இந்தப் படத்தில் கூடுதல் கவனம் தந்திருக்கிறார். சந்தேகமில்லாமல், இறந்துபோன குதிரை மீது சாட்டையை வீச இந்து வலதுசாரிகளுக்கு இந்தப்படம் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது" என சொல்லி அவர் ஆதங்கப்பட்டார்.

நாளை காலையில் படம் வெளியான பின்னர், வரலாற்று ஆய்வாளர்களின் கண்டனத்தில் இருந்து தப்பிப்பாரா அசுதோஷ் கௌரிகர்?

-ஆ.விஜயானந்த்

 

http://www.vikatan.com/news/coverstory/67051-did-lagaan-director-misleading-history-mohenjo-daro-movie-controversy.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.