Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

Featured Replies

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள் 

 

தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் அணிதிரண்ட முதல் வெகுஜன அரசியல் போராட்ட இயக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இப் பேரணி தமிழர் அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். 

D0225540.jpg

தமிழ் மக்களை இன்று அழுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு விரைவானதும் உருப்படியானதுமான தீர்வுகளை வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எழுக தமிழ்' பேரணி, தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்கள் என்னதான் விளக்கங்களைக் கூறினாலும்இ அரசாங்கத்தை நோக்கியதாக மாத்திரமல்ல, இன்று இலங்கைத் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக, அதன் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை நோக்கியதாகவும் விளங்கியது என்பதே உண்மையாகும். 

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபட முடியாதவர்களாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களது  பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் போராட்டங்களில் மீண்டும் இறங்குவதில் பெரிதாக அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை என்று பரவலாக கருதப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் யாழ். நகரப் பேரணி நிச்சயமாக வித்தியாசமான ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் இந்த வகையாக மக்களை பெருமளவுக்கு அணித்திரட்டக் கூடியதாக இருந்ததைப் போன்று வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் செய்ய இயலுமாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எது எவ்வாறிருப்பினும்இ  தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் அதற்காக அவர்கள் தைரியமான ஒரு தலைமைத்துவத்தை தேட ஆரம்பித்துவிட்டார்கள் அல்லது இப்போது இருக்கக்கூடிய தலைவர்கள் தங்களது அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை எழுகிறது என்பதை சுட்டிக்காட்ட முனைந்து நிற்கிறார்கள் என்பதையுமே ‘எழுக தமிழின்’ மூலமான செய்தியாகப் பார்க்க வேண்டும்.

14469705_1746844508676471_43607990847744

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ –மூனை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப்பேசி இன்றுடன் சரியாக ஒருமாதம் பூர்த்தியாகிறது. செயலாளர் நாயகத்திடம் சம்பந்தன்  தெரிவித்த ஒரு விடயத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். போருக்குப் பின்னரான கால கட்டத்தில் தமிழ் மக்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளையெல்லாம் பான் கீ –மூனுக்கு விளக்கிக்கூறிய அவர்இ  சுயாட்சிக்கான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தவறுமேயானால் நாட்டில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை அரசாங்கத்தினால் நிருவகிக்க முடியாத நிலைமையை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்று கடுமையான தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றபோதிலும்இ  தற்போதைய அரசாங்கத்துடன் இணக்கப்போக்கொன்றைக் கடைப்பிடிக்கின்ற சம்பந்தன்இ அரசியல் தீர்வு விடயத்தில் கொழும்பு அரசாங்கத்தினால் தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தை உணர்வதினால்தான் போலும் அத்தகைய எச்சரிக்கையை தனது  சுபாவத்துக்கு முரணானவகையில் பான் கீ – மூனிடம் விடுத்திருந்தார். தமிழர் பிரதேசங்களை அரசாங்கத்தினால்  ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சம்பந்தன் கூறியதை நாம் சத்தியாக்கிரகப் போராட்டம்இ ஒத்துழையாமை இயக்கம் என்று தான் அர்த்தப்படுத்த வேண்டும். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த ஆயுதப் போராட்டத்தைப் போன்று மீண்டுமொரு போராட்டத்தை தமிழர்களினால் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்குமென்று யாரும் நினைக்கமாட்டார்கள். 

இத்தகையதொரு பின்புலத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற தமிழ் மக்கள் பேரவை மக்களை வீதிப் போராட்டங்களுக்குத் தயார் செய்ய ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. போரின் முடிவுக்குப் பின்னரும் கூட தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் கிஞ்சித்தேனும் அக்கறை காட்டாத ராஜ பக் ஷ ஆட்சியின் இராணுவவாத அரசியலின் அடாவடித் தனங்களுக்குப் பிறகு 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நாட்டில் ஒப்பீட்டளவில் ஒரு ஜனநாயக வெளியை தோற்றுவித்திருக்கிறது என்பதை இன்றைய அரசாங்கத்தை விரும்பாதவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள். அத்தகைய ஜனநாயக வெளியை தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வேண்டி உறுதியான முறையில் குரல் கொடுப்பதற்கும் ஆட்சியாளர்கள் மீது நெருக்குதல்களைப் பிரயோகிப்பதற்கும் நிச்சயம் பயன்படுத்தியேயாகவேண்டும் முற்றிலுமாக இணக்கப்போக்கு அரசியலில் கவனத்தைக் குவித்திருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சியென்றே சொல்வோம்) தலைவர்கள் ஜனநாயக ரீதியான வெகுஜனபோராட்டங்களுக்கு தமிழ்மக்களைத் தயார்படுத்த வேண்டுமென்பதில் அக்கறை காண்பிக்காத இடைவெளியை தமிழ் மக்கள் பேரவை நிரப்புவதற்கு முயற்சிக்கிறது. பேரவையின் தலைவர்களைப் பொறுத்தவரை யாழ். நகர் “எழுக தமிழ்” பேரணி அவர்களுக்குப் ெபரும் நம்பிக்கையூட்டுவதாக  அமைந்துவிட்டது.

14359271_1746844448676477_17941421420377

தங்களது அரசியல் அணுகுமுறைக்கும் தந்திரோபாயங்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பயனின் தொடக்கமாக இவர்கள் இதைக் கருதுவதை அவர்களின் கருத்துக்களின் மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் “எழுக தமிழ்”போன்ற வெகுஜன அணிதிரட்டல் இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலமாக தமிழர் அரசியலின் தலைமைத்துவத்தை தமதாக்குவதில் அவர்கள் அக்கறையும் காட்டுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான அணி சேருகை இவர்களுக்கு இது விடயத்தில் மேலும் தெம்பூட்டக்கூடும்.

யாழ். நகர் “எழுக தமிழ்” பேரணியில் தமிழ்மக்கள் பேரவையின் தலைவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரைகளிலும் அங்கு வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் உள்ளடங்கியிருக்கும் கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும்  பற்றி இங்கு பிரத்தியேகமாகக் குறிப்பிட வேண்டியதில்லை. ஏனென்றால் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வந்திருக்கும் முக்கியமான கோரிக்கைகளே அவையாகும்.

இது விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடே கிடையாது. அணுகுமுறைகள் குறித்தே வேறுபாடு.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்து வருகின்ற கோரிக்கைகளும் அவரது அரசியல் பேச்சுக்களும் தமிழர் அரசியலை மீண்டும் தீவிரவாத மயப்படுத்தும் செயற்திட்டமொன்றின் அங்கம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.. உண்மையிலேயே அவரால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளோ அல்லது உரைகளில் அவர் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களோ தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்தின் இதுவரையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தீவிரவாதத்தன்மை கொண்டவையல்ல. தமிழ் மிதவாதத் தலைவர்கள் காலங்காலமாக முன்வைத்துவந்திருக்கக் கூடிய அரசியல் கோரிக்கைகளை புதிய சூழ்நிலைகளின் கீழ் –  அதாவது போரின் முடிவுக்குப் பின்னர் தமிழர் மத்தியில் வலுவான ஒரு அரசியல் சமுதாயம் இல்லாமல் இருந்துவந்த சூழ்நிலைகளின் கீழ் அவர் மீண்டும் முன்வைக்கிறார். என்றுதான் நோக்க வேண்டும். 

விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட கோரிக் கைகளையும் கருத்துக்களையும் கூட நாட்டுப் பிரிவினையை மீண்டும் தூண்டுபவை என்றுதான் தென்னிலங்கை இனவாதிகள் வர்ணித்தார்கள். தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான எந்தவொரு கோரிக்கையையும் ‘இனவாதத்தன்மை’ கொண்டதாக தென்னிலங்கையில் சிங்கள மக்களுக்கு காட்சிப்படுத்தி மிக எளிதாகவே அரசியல் இலாபம் கிடைக்கக்கூடிய  அளவுக்கு சிங்கள இனவாதம் மலைபோல் வளர்ந்து நிற்பது பெரும் கவலைக்குரியது. 

தமிழரசுக் கட்சியின் தலைவர்களுடைய அணுகு முறை களையும் செயற்பாடு களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெருமளவுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையானது. இன்றைய அரசாங்கத்தை எவ்வாறு தமிழர்களின் நலன்களுக்காக பயன்படுத்துவது என்பதில்தான் அவருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. போருக்குப் பின்னரான சூழ்நிலைகளில் மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கொழும்பு மீது சர்வதேச சமூகம் பிரயோகிக்கின்ற நெருக்குதல்களை அடிப்படையாகக் கொண்டே தமிழர் அரசியல் சமுதாயம் இன்று பொதுவில் அதன் அரசியல் அணுகுமுறையையும் தந்திரோபாயத்தையும் வகுத்துச் செயற்படுகிறது. தமிழர்களை அழுத்துகின்ற பிரச்சினைகளை உலகிற்கு கூறுவதே தமிழர் அரசியல் சக்திகள் இன்று பிரதானமாகச் செய்கின்ற காரியம். இது விடயத்தில் விக்னேஸ்வரனும் அவ்வாறே செயற்படுகிறார். ஆனால் இணக்கப் போக்கு அரசியல் ஒன்றை கொழும்புடன் செய்வதற்கு அவர் தயாரில்லை. அதுவே ஒரு வித்தியாசம். தற்போதைய அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணுகின்ற மார்க்கங்களை ஆராயுமாறே சர்வதேச சமூகம் தமிழர் தலைவர்களை அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறது. விக்னேஸ்வரனைச் சந்தித்த சர்வதேச சமூகப் பிரதிநிதிகள் பலரும் கூட இதையே இவரிடம் வலியுறுத்தியிருந்தார்கள்.அத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவையும் விக்னேஸ்வரனும் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்ற வெகுசன அணிதிட்டலை சர்வதேச சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதும் முக்கியமான கேள்வி.

எது எவ்வாறெனினும்,  தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் அடுத்த கட்டம் பற்றி  சிந்தித்தாக வேண்டியிருக்கிறது. சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல தமிழ் மக்களை அதற்குத் தயார்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றலையும் விவேகத்தையும் தமிழ் தலைமைத்துவங்கள் வரவழைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களைப் பொறுத்தவரை தங்களது தற்போதைய அணுகுமுறையும் செயற்பாடுகளும் தான் அந்தத் தயார்படுத்தல் என்று கூறுவார்களாக இருந்தால் வீதியில் இறங்குகின்ற தமிழ் மக்கள் அடுத்து போக வேண்டிய அரசியல் பாதை எது என்பதை அவர்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும். மக்களை வீதிக்கு இறக்கிவிட்டு அவர்கள் திரும்பிச் செல்ல முடியாது.மீண்டும் தமிழர்களை அவலத்துக்குள்ளாக்காத பாதையாக அது இருக்க வேண்டும். 'எழுக தமிழை' எட்டிப்பிடித்துக் கொண்டு மேலும் கெம்புவதற்கு சிங்கள இனவாதம் தயாராகி விட்டது என்பதும்  கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

http://www.virakesari.lk/article/12019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.