Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலங்குகளின் சிறப்புகள்

Featured Replies

விலங்குகளின் சிறப்புகள்

 
animal_1.jpg
 

பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா (ECHIDNA)

 
5066265085_5e42953beb.jpg

எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன.

எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன.

உருவ அமைப்பும் தகவமைப்பும்

உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள்.

இனப்பெருக்கமும் வாழ்க்கையும்

இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன.

எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை இறைவன் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும்

குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.
 

கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களைப் போலவே ஸ்குவாஸ்(skuas) என்ற கடற்பறவை பற்றிய தகவல் !!!

 
378-SP%2BSkua%2BDec%2B92%2B1A.jpg

அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை கொள்ளையடிப்பது மனித குலத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று நினைப்பது தவறு. சில காட்டு விலங்குகளும், பறவைகளும் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன.

கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளை யடிக்கும் கடற்கொள்ளையர்களைப் போலவே ஸ்குவாஸ் என்ற கடற்பறவை, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன.
ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகை பறவை. தாக்கும் குணம் கொண்டது. டெர்ன், பப்பின் உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், தங்களின் குஞ்சுகளுக்கோ அல்லது கூட்டுக்கோ கொண்டு செல்லும் உணவை, இப்பறவை இடைமறித்து கொள்ளை அடிக்கும். வானில் பறந்து கொண்டே சண்டை போட்டு மற்ற பறவைகளை கொல்லும் இயல்புடையது இப்பறவை. சில நேரங்களில் ஸ்குவாஸ் பறவைகள் ஒன்று சேர்ந்து, மற்ற பறவைகளை துரத்திச் சென்று வேட்டையாடுவதும் உண்டு.

இதனால் ஸ்குவாஸ் பறவைகளை கண்டாலே மற்ற கடற்பறவைகள் கதிகலங்குகின்றன. அமெரிக்கா மற்றும் ஆர்ட்டிக் பகுதிகளில் உள்ள ஸ்குவாஸ் பறவைகள், ஒட்டுண்ணி பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன. முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்துவது பெரும்பாலும் விலங்குகளிடம் காணப்படும் குணமாகும். மற்ற உயிரினங்களிடம் இருந்து கொள்ளையிட்டு தின்பதற்கு, “கிளிப்டோபாராசிடிசம்’ என்று பெயர். ஸ்குவாஸ் பறவைகளில் சில, கொள்ளை அடிப்பதற்காகவே தனியாக வாழ்கின்றன.

ஆர்ட்டிக் பகுதிகளில் வாழும் ஸ்குவாஸ் பறவைகள், பெரும்பாலும் கடலிலேயே வாழும். இனப்பெருக்க காலங்களில் மட்டும் கோடை காலத்தில் கரைக்கு வருகின்றன. ஸ்குவாஸ் குஞ்சுகள் வளர்ந்தாலும் கடலிலேயே இருக்கும். இவை, இனப்பெருக்கத்திற்கு தயாராக இரண்டு ஆண்டுகள் ஆகும். பொதுவாக, வேட்டையாடப்படும் உயிரினம், முட்டைகள், சிறிய பறவைகள் ஆகியவற்றையே மற்றவை உணவாக உண்ணும். ஆனால், ஸ்குவாஸ் பறவை சிறிய விலங்குகள் மற்றும் மீன்களையும் உண்ணும் இயல்புடையது.

ஸ்குவாஸ் பறவைகள் நீண்ட தூரம் பறக்க வல்லவை. பெரும்பாலான நேரங்களில், கடல் பகுதிகளில் பறந்து கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ட்டிக் பகுதியில் குளிர் காலம் தொடங்கியதும், பூமியின் தென்பகுதிக்கு அவை இடம் பெயர்ந்து விடுகின்றன.
 

வல்லநாடு வெளிமான் சரணாலயம் - ( Vallanadu Black buck Sanctuary )

 
DE27_PERISCOPE_BLA_1095698g.jpg

வல்லநாடு வெளிமான் சரணாலயம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் வெளிமான்களால் பிரபலமடைந்தது. வெளிமான்கள் என்பவை ஆடு போன்ற தோற்றமளிக்கும் மான்கள். இந்த வகையான மான்களை தற்போது தமிழகத்தில் உள்ள நான்கு சரணாலயங்களில் மட்டுமே காணமுடியும்.

அதில் ஒன்றுதான் இந்த வல்லநாடு சரணாலயம். கிண்டி தேசிய பூங்கா, முதுமலை வனவிலங்கு காப்பகம், கோடியக்கரை சரணாலயம் ஆகிய மற்ற மூன்று சரணாலயங்களிலும் வெளிமான்களை காணலாம். இந்த வல்லநாடு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் உள்ளது.

இந்த சரணாலாயம் அமைந்துள்ள இடம் புதர் காடுகளை உடையது. ஆதலால் மிக கனமுடைய மரங்களை இங்கு காணலாம். 19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகையான வெளிமான்கள் இந்தியாவில் அதிகம் காணப்பட்டன, ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிளேயே உள்ளன. பெரும்பாலும் இந்த மான்கள் சமமான நிலப்பரப்புகளிலேயே வாழும், ஆனால் சூழ்நிலை மாற்றங்களால் தற்போது காடுகளில் வசிக்கின்றன.

இந்த வகை மான்களின் முக்கிய உணவு புல், மேலும் இவை அதிகபட்சமாக 16 வருடங்கள் மட்டுமே உயிர்வாழும். வெளிமான் மட்டுமல்லாது இந்த சரணாலயத்தில் குரங்கு, புள்ளிமான், காட்டு பூனை, கீரிப்பிள்ளை, கருப்பு முயல், பாம்புகள் போன்ற விலங்குகளும் இங்குள்ளன. மேலும் மயில், நாரை, சிட்டுக்குருவி, கழுகு, மரங்கொத்தி, குயில், மரகதப் புறா, பருந்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.

தேடித்தேடி பறவைகளை புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த சரணாலயம் ஒரு நல்ல இடம். இன்னொரு தகவல்! - வருடத்தில் எந்த மாதம் நீங்கள் இங்கு சென்றாலும் வெயிலின் தாக்கத்தை உணரலாம். எனவே கோடை காலங்களில் செல்லாதீர்கள்.

எப்படி செல்வது?

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து இந்த சரணாலயத்திற்கு பேருந்துகள் உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் - திருநெல்வேலி, 16 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - தூத்துக்குடி, 25 கி.மீ தொலைவில்.
 

சிலந்தி தான் கட்டிய வலையில் சிலந்தி சிக்கிக்கொள்வதில்லை ஏன் தெரியுமா?

 
20070309_spider.jpg

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன

சிலந்திகளை சாதாரணமாக வீட்டில் பார்த்திருப்போமே தவிர, அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க மாட்டோம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் உதவப் போகின்றன. சென்னையில் உள்ள ‘இந்திய அறிவு அமைப்புகள் மையம்’, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த மையத்தினர், சிலந்திகளைக் கொண்டு இயற்கைக் கட்டுப்பாட்டு முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிலந்தியைப் பார்க்கும் போதே பலருக்குப் பயம் ஏற்படும். அவசரமாக விலகிச் செல்வார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான இந்தியச் சிலந்திகள் அபாயமற்றவை. நஞ்சு கொண்ட சில சிலந்திகளும் அதிகமாக அபாயத்தை ஏற்படுத்தாது.

‘ஓநாய் சிலந்தி’ போன்றவை விவசாயிகளின் தோழர்களாகி வருகின்றன. அவை, பயிர்களை நாசம் செய்யும் பழுப்பு தாவர வெட்டுக்கிளிகளை விருப்பமான உணவாகக் கொள்கின்றன.

‘பெரிய நண்டுச் சிலந்தி’ மற்றொரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். இந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறச் சிலந்தி, கரப்பான்பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.

இது வலை ஏதும் பின்னுவதில்லை. மாறாக, சமையலறை ‘சிங்க்’ மற்றும் வீட்டுக் குப்பைகளில் மறைந்திருக்கிறது. இரவில் மட்டும் வெளிப்பட்டு கரப்பான்பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்தச் சிலந்தியால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் கிடையாது.

சென்னை இந்தியா அறிவு அமைப்புகள் மையமானது நிறைய ‘பெரிய நண்டுச் சிலந்திகளை’ உருவாக்குகிறது. கரப்பான்பூச்சிகளை வேட்டையாடும் அளவுக்குப் பெரிதாகும் வரை அவற்றை வளர்க்கிறது. பின்னர், கரப்பான்பூச்சித் தொந்தரவு அதிகமுள்ள பகுதிகளில் அவற்றை விடுகிறது.

ஒரு கட்டத்தில் இந்தச் சிலந்திகளின் எண்ணிக்கையே அளவுக்கதிமாக அதிகரித்து ஒரு தொந்தரவாகிவிடுமா? கிடையாது. இந்தச் சிலந்திகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஒரே பாலினத்தைச் சேர்ந்த சிலந்திகளை ஒரு பகுதியில் அதிகமாக விடும்போது அவை பெருகாமல் போய்விடுகின்றன.

சிலந்தி அல்லது எட்டுக்கால் பூச்சிகளைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால் உண்மையாக எல்லாப் பூச்சிகளும் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. நீங்கள் சிலந்தி வலைப் பின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். சுவற்றின் மூலைகள் அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலைப் பின்னும். அது எவ்வளவு லாவகமாக அதைப் பின்னும் என்பது அதை உற்றுக் கவனிக்கப் புரியும். பகுதியில் அந்த வலையின் நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.

உலகத்தில் சிலந்தியின் வகைகள் சுமார் 50000 என்று சொல்லுகிறார்கள் ஆஸ்ட்ரேலியாவில் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம். சிலந்தி அல்லது எட்டுகால் பூச்சி கடித்தால் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு எதிர்ப்பலன்கள் reaction இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். சிலருக்கு உடல் முழுவதும் தடிக்கும், அரிக்கும், சிவப்பு சிவப்பாக, பட்டை பட்டையாக தோலின் மேல் அடையாளம் வந்து அரித்து தொல்லைக் கொடுக்கும். சிலருக்குத் தலைவலியுடன் சுரமும் வரலாம். குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.
 

அறிய வகை பசு மீன் பற்றிய தகவல் !!

 
%2528Underwater%2529%2B-%2BWallpapers4Desktop.com%2B005.jpg

இறைவனின் படைப்பில் எவளவோ அதிசியங்கள் அதில் இந்த பசு மீனும் அடங்கும் . கடலில் எவளவோ அதிசியங்கள் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது . ஒரு சிறிய உயிர் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அதில் எத்தனை சிறப்புகள் அடங்கி இருக்கிறது .

தலையில் இரண்டு கூர்மையான கொம்புகள் உள்ள இந்த வித்தியாசமான பிராணியைப் பாருங்கள். இது ஒரு மீன் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதிலும் இது பசு மீன். ஆமாம். பசுவிற்கு இருப்பதைப்போன்று இரண்டு கொம்புகள் உள்ளதுதான் இந்த மீனின் சிறப்புத் தன்மை.

இதற்கு இப்படிப்பட்ட கொம்புகள் உள்ளதால் எதிரிகளால் இதை அவ்வளவு எளிதாக விழுங்க முடியாது. அது மட்டும் அல்ல, தன் மேல் தோலில் கடும் விஷத்தைக்கொண்ட மீன் இது. ஆயினும் மஞ்சள் நிறத்தில் நிறைய வெண்புள்ளிகள் உடைய இவற்றைத்தான் வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் மீன் காட்சிச் சாலைகளில் மிகவும் அதிகமாக வளர்க்கிறார்கள்.
 

பிளாட்டிபஸ் ஓர் அறிய உயிரினம் !!! (PLATIPUS)

 
platypus-platipus.jpg

'பிளாட்டிபஸ்' என்னும் இந்த உயிரினம் மிகச் சிறிய பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். இவை முட்டையிட்டு பாலுட்டும் தன்மை கொண்டது இவை மற்ற பாலூட்டிகளினின்று எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் இவைகளின் செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள் இவற்றை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

'பிளாட்டிபஸ்' முட்டையிட்டு குஞ்சு பொரித்து தன் குஞ்சுகளுக்கு பால் கொடுப்பது மற்றும் அதன் உடல் அமைப்பு மற்ற எல்லா விலங்கிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். 'வாத்து'விற்கு உள்ளது போன்ற வாய் அமைப்பு. கால்களில் அமையப்பெற்ற விஷச்சுரப்பி. கழுத்து என்பதே இல்லாத ஓர் உயிரினம்.

இவை தாஸ்மேனியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், பல வகைகளிலும் வித்தியாசமான செயல்பாடுகளும் உடல் தகவமைப்புகளும் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்பியல்புகளாகும். 30 முதல் 40 செ.மீ. வரை நீளமும் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை வளரக்கூடியவை. இவற்றின் வாய் அமைப்பு வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் அலகு போன்ற வாய் அமைப்பு 6 செ.மீ. வரை நீளமும் 5 செ.மீ. வரை அகலமும் உடையது.

இவற்றின் வாயுடைய நுனிப்பகுதியில் மிருதுவான மோப்ப சக்தியை உணரக்கூடிய சதைப்பகுதியை கொண்டுள்ளது. (பன்றியின் வாய் பகுதியைப் போன்று), வாலும் உடலும் தடித்த மிருதுவான ரோமங்களை உடையதாகவும் பிதுங்கியது போன்ற தோற்றத்திலும் காணப்படுகின்றது. இவற்றின் வால் பகுதி தட்டையாகவும் சிறியதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் முக்கியமான எடுப்பான தலை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவைகள் சிறிய கண்களைப் பெற்றிருப்பினும் கூர்மையான பார்வைத் திறனையும் செவிப்புலன்களையும் பெற்றுள்ளன. இவற்றின் சிறிய தலைப்பகுதியானது கழுத்துப்பகுதி எதுவுமின்றி உடலுடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த அம்சமும் மற்ற பாலூட்டிகளினின்றும் வேறுபட்ட ஒன்றாகும்.

'பிளாட்டிபஸின்' கால் விரல்கள் ஜவ்வு போன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் பறவையினத்தின் வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த நீச்சல் திறனையும் பெற்றுள்ளன. இது நீர்வாழ் உயிரினங்களை ஒத்த அம்சமாகும். உலகில் காணப்படும் விஷத்தன்மை வாய்ந்த சில பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் பிளாட்டிபஸைக்காட்டிலும் ஆண் பிளாட்டிபஸ் அதிக விஷத்தன்மையைக் கொண்டுள்ளன. இவைகளின் பின்புறக்கால்களில் உள்ள குழிவுப்போன்ற பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இவற்றின் கால் பகுதியில் அமைந்துள்ள விஷச்சுரப்பியும் எந்த பாலூட்டிகளிலும் இல்லாத ஒன்றாகும். இவற்றின் மூலம் குறிப்பிட்ட அழுத்தத்தை பிரயோகித்து தங்கள் எதிரிகளின் மீது மிக வேகமாக விஷத்தைப் பீய்ச்சி அடிப்பதின் மூலம் இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இதுவே இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாகும்.

பூமியின் மிக ஆழத்தில் அமைக்கும் உல்லாச விடுதி
'பிளாட்டிபஸ்' தங்கள் வலைகளில் ஏற்படுத்தும் இவைகள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழுகின்றன. இவை ஆறுகளின் ஓரக்கரைகளில் பூமியில் மிக நீண்ட வலைத்தோண்டி அதில் வசிக்கின்றன. வலை ஏறக்குறைய 50 முதல் 60 அடி வரை ஆழம் உடையவை. இவ்வளவு ஆழத்தில் வலை தோண்டி வாழக்கூடிய பாலூட்டியும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இதுவும் மற்ற பாலூட்டிகளிலிருந்து வேறுபடும் ஒரு அம்சமாகும். வலை தோண்டும் பணியில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே ஈடுபடுகின்றன. ஏனெனில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே வலையில் வசிக்கின்றன. ஆண் பிளாட்டிபஸ் தங்களின் வாழ்வை வலைக்கு வெளியே கழிக்கின்றன. மேலும் இவைகள் தங்கள் வலையில் செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உண்மையில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகளை பகர்கின்றது.

வெள்ளப்பெருக்கு மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிறைய தடுப்புக்களையும் வளைவுகளையும் மண்ணினால் தங்கள் வலையிலே ஏற்படுத்துகின்றன. தங்களின் வலையின் இறுதியில் மிக நேர்த்தியான இருப்புக்களை புற்களைக்கொண்டும், இலை, தழைகளைக்கொண்டும் பரப்பி சொகுசான முறையில் அமைத்துக்கொள்கின்றன. நிச்சயமாக இவைகளின் திட்டமிட்ட இந்த ஏற்பாடுகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உண்டானது என்று எவ்வாறு நியாயப்படுத்த முடியும். நம்மைப்பொறுத்த வரை பின்வரும் வசனம் நமக்கு நல்லதொரு தெளிவைக் கொடுக்கின்றது

இனப்பெருக்கத்தின் மூலம் கருவுறும் பெண் பிளாட்டிபஸ், ஒன்று முதல் நான்கு முட்டை வரை இடுகின்றது. பிறக்கும் போது குட்டிகள் (குஞ்சு) பற்களை உடையதாகவும் முடிகள் அறவே இல்லாத நிலையிலும் பிறக்கின்றன. இவைகளைத் தாய் பிளாட்டிபஸ் தன் வாலைக்கொண்டு அரவணைத்து பாதுகாக்கின்றது.

இவைகள் தங்களின் இரையை பிடிக்க கையாளும் யுத்தி (முறை) மிக சுவாரசியமானது. ஆறுகள் மற்றும் குளங்களின் அடிப்பரப்பிற்குச் சென்று தங்கள் அலகு மூலம் சேறு சகதிகளைக் கிளருகின்றன.
இதன் மூலம் வெளிப்படக்கூடிய கிளிஞ்சல்கள், பூச்சிக்கள் மற்றும் புழுக்களை உட்கொள்கின்றன. இரையை பிடிப்பதில் இவைகளின் அலகு பெரும் பங்கு வகிக்கின்றன.

அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு உபயோகத்திற்கும் பயனில்லாத ஒரு உயிரினமாக இது கருதப்படுகின்றது. எனினும் இவைகளின் பயன்பாடுகளைபற்றி வரும் காலங்களில் தெரிய வரலாம்

சர்வதேச விதிகளின்படி 'பிளாட்டிபஸை' கொல்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஆய்வுக்கூடத்தில் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய இவை பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன.
 

வியக்கவைக்கும் பறக்கும் மீன் !!!!

 
flying-fish_2flying-fish.jpg

மன்னார் வளைகுடா கடலில் தாவித் தாவிக் குதிப்பதும் காற்றைக் கிழித்துக் கொண்டும் செல்லும் மீன்தான் பறக்கும் மீன். கடலுக்கடியில் பல்லாயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த மீனின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது:

""எக்ஸோசீடஸ் என்ற விலங்கியல் பெயருடைய இம்மீனின் முன்துடுப்புகள் மீக நீண்டதாக பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் எளிதாக காற்றில் படபடத்து தாவும் வகையில் உள்ளது. கடல் அமைதியாக இருக்கும்போது கடலின் மேல்மட்டத்துக்கு வருவதில்லை. கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது இம்மீன்கள் தண்ணீருக்கு வெளியில் வந்து குதித்தும் காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்றும் கடலில் குதிக்கும். இதனால் இதற்கு பறக்கும் மீன்கள் என்றும் பெயர் வந்தது. அதிக பட்சமாக 6 மீ உயரத்துக்குத் தாவுவதும் சுமார் 50 வினாடிகளில் 70கி.மீ வேகத்துக்கு பறப்பதும் இதன் சிறப்பு. வேகமாக பறக்கும் போது அதன் தூரம் 160அடி வரை பறப்பதாக தெரிய வந்துள்ளது.

காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் பறவைகளின் இறக்கைகளைப் போன்றே இதன் முன்துடுப்புகள் இவை எளிதாகப் பறக்க உதவுகிறது. ஒரு விநாடிக்கு 70 முறை இதன் வால் அசைவதால் காற்றில் அந்தரத்தில் ஒரு விதமான பேலன்ஸ் கிடைத்துப் பறக்கிறது. தண்ணீரில் ஒரு முறை குதித்தவுடன் திரும்பவும் தனது முன்துடுப்புகளை முன்பக்கம் திருப்பி தண்ணீரைத் தள்ளி விட்டு நீந்தும். பிறகு மீண்டும் கடலின் மேற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும்.பறக்கும் நேரத்தில் தவளையின் கால்களைப் போலவும் இதன் முன்துடுப்புகள் செயல்படுகின்றன.

கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள்தான் இதன் விருப்ப உணவாகும்.பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும் டால்பின்கள், டுனா, மர்லின் உள்ளிட்ட மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன. மீன் பிடிப்போர் ஒளி உமிழும் டார்ச்சுகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்தும் பிடிக்கின்றனர்.

இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாகவும் இருப்பதால் இதனைப் பிடிப்பதில் பல காலமாகவே உலக நாடுகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. பார்படாஸ், டிரினிடாட், டொபாக்கோ உள்ளிட்ட தீவுகளுக்கிடையே இம்மீனைப் பிடிப்பது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பின்னர் ஐ.நா.சபை இப்பிரச்னையில் தலையிட்டு சமரசம் உண்டாக்கியது.

ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக பிடிபட்டாலும் நமது நாட்டில் இதற்கென்று மீன்பிடி முறைகள் இல்லை. ஆனால் மீனவர்களின் வலைகளில் சிக்கியும் கடல் மாசுபடுவதாலும் இதன் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. பறக்கும் மீன்தான் பார்படாஸ் நாட்டின் தேசிய சின்னமாகவும் தேசிய மீனாகவும் திகழ்கிறது.''
 

கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்...!

 
mid-Cuttlefish.ogv.jpg

கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.

மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.

இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.

நீல நிற இரத்தம்

கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.
 

வண்ண மீன்கள் வீட்டில் வளர்பதினால் மனதிற்கு அமைதி ஏற்படுமாம் !!!

 
beauty_of_color_fish-1280x960.jpg

மீன் வளர்ப்பு என்பது ஒரு சிறந்த கலை. மீன் தொட்டி வீட்டை அழகாக காட்டவும் பயன்படுகிறது. வண்ண தொட்டிகளில் நீந்தும் அழகு மீன்களை பார்த்தாலே மனதில் உற்சாகமும் அமைதியும் வந்துவிடும். பொதுவாக மீன்கள் அழகுக்காக மட்டுமின்றி அமைதிக்காகவும் மீன்களை வளர்க்கின்றனர்.

அரவணா வகை மீன்கள் :

2004 ம் வருஷம் வரையிலும் அரவணா தனி ராஜ்யமே நடத்திட்டு இருந்தது. ஆனா இப்ப அதோட மவுசு கொஞ்சம் குறைஞ்சுதான் போயிடுச்சு. அரவணா வகை மீன்கள்லயும் கிட்டதட்ட 10 வகை இருக்கு.

பச்சை அரவணா
தி சில்வர் ஏசியன் அரவணா
ரெட் டெயில்ட் கோல்டன் அரவணா
தி கோல்ட் கிராஸ்பேக்
ரெட் சில்லி கோல்டன் அரவணா
என பலவகைகள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நாடுகள்ல பிரபலமா கிடைக்கும்.

அரவணா வகை மீன்களோட தர்பாரே தனி. சில வகை மீன்கள் 4 1/2 அடி வரையிலும் கூட வளரும் என்பதால் அதுக்கு மிகப் பெரிய தொட்டி தேவை. அதுவும் இந்த மீன்கள் தண்ணியோட மேல் பரப்புலயே சதா சுத்திட்டு இருக்கும். அதனால ஹை ஜம்ப்ல வேற எக்ஸ்பர்ட்டான இந்த வகை மீன்கள் தண்ணிலேருந்து ஒரே ஜம்ப் செஞ்சு வெளிய வந்து விழ வாய்ப்பிருப்பதால தொட்டிய மூடியே வச்சுக்கனும்.

ஃப்ளவர்ஹார்ன்: (வாஸ்து மீன்கள்)

இந்த வகை மீன்கள் இயற்கையாய் உருவானது இல்லை. மலேசிய நாட்டு மக்களுக்கு முன்நெற்றி கொஞ்சம் எடுப்பாத் தூக்கிட்டு இருக்கற வகை மீன்கள் மேல ஒரு தனி ஈர்ப்பு. அதனால் 1994ல் ரெட் டெவில் சிச்லிட் (red devil cichlid) மற்றும் ப்ளட் பேரட் (blood parrot cichlid) என்ற இரு வகை மீன்களின் கலப்பில் உருவானதுதான் இந்த ஃப்ளவர்ஹார்ன். ஆரம்பத்தில் இரண்டே இரண்டு வகை மட்டுமே இருந்தது. இன்று 100க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அவற்றிலும் ஏறக்குறைய 20 வகைகளே பிரபலமாக உள்ளது.

ஓரியண்டல் ப்யூட்டி
கான்ஸ்டிட்யூஷன் க்ளாஸ்
வொண்டர் ஸ்பார்க்
ஸ்டார்ம் ரைடர்
தி ஹாப்பி ஸ்டார்
தி ராயல் டைகர்
தி ரெட் ப்யூட்டி
மூன்லைட் ப்யூட்டி
தி மே ப்ளாஸம்

போன்றவை ஒரு சில ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள்.

ஃப்ளவர்ஹார்ன் தோற்றம்:

அதிகபட்சமா 16 இஞ்ச் வரையிலும் வளரக்கூடியவை இந்த ஃப்ளவர்ஹார்ன் வகை வாஸ்து மீன்கள். நெற்றிப்பகுதி துருத்திக்கிட்டு பஸ் ஹாரன் மாதிரி இருக்கும். அதனாலேயே இந்த பேர் வந்திருக்கலாம். ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கற இந்த மீன்களோட பக்கவாட்டுல சீன எழுத்துக்கள எழுதி வச்சமாதிரி கறுப்பு கலர் டிசைன் இருக்கும். எல்லாம் சூப்பரா இருந்தாலும் இது பெருசானா என்ன கலர் மற்றும் டிசைன்ல இருக்கப் போகுதுன்னு அது குட்டியா இருக்கறப்ப தெரியாது. அதாவது வளர வளர அதோட டிசைனும் மாறிடும். சிலர் குறிப்பிட்ட நிறத்துல குறிப்பிட்ட டிசைன்ல இருந்தாதான் வாஸ்து நல்லா இருக்கும்னு நம்பறாங்க. அவங்க விலையப் பத்திக் கவலைப்படாம வாங்கும்போதே பெரிய மீன்கள வாங்கிட வேண்டியதுதான்.

என்ன விலை இருக்கும்?

ஃப்ளவர்ஹார்ன் வகை மீன்கள் குட்டியா இருக்கறப்ப விலை கொஞ்சம் கம்மியா இருக்கும். வளர வளர அதோட விலையும் வளரும். குறைந்தபட்சம் ரூ.150/- லேருந்து ரூ. 10 ஆயிரத்திற்கு அதிகமான மீன்கள் கூட இருக்கு.

வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் மீன் வளர்ப்பாளர்கள் உங்களுக்காக கூறியுள்ள டிப்ஸ்.

வீட்டில் வளர்க்கும் மீன் வகைகள்:

ரெட் கேப் கோல்டு, ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். வசதியானவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை. இவ்வகை மீன்களை வாங்கி வீடுகளில் வளர்க்கலாம்.

இதைத்தவிர சீன வாஸ்து மீனான புளோரா, அரவானா மீன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இஞ்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலைமட்டும் ரூ.25,000!. இத்துடன் கிரீன் ஸ்னோவொய்ட், சில்வர் பிளாக் வகை மீன்களுக்கு உண்டு.

கலைநயம் மிகுந்த மீன் தொட்டிகள்:

மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.

வீடுகளில் வைப்பதற்கென்று விலைகுறைவான, கலைநயம் மிக்க தொட்டிகளும் உள்ளன. மீன் தொட்டிக்குள் சின்ன சின்ன பாறைகள், கூழாங்கற்கள், செடிகள் போன்றவற்றை கொண்டு அழகுபடுத்தினால்தான் அவை அதற்குரிய இடங்களில் வசிப்பதைப் போல உணரும்.

கடல் மீன்களை தொட்டியில் வளர்க்கலாமா:

பட்டர்பிளை ஏஞ்சல், புளூரிங் ஏஞ்சல் போன்ற மீன்கள் எல்லாம் கட்டாயமாக கடல் நீரில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் செயற்கை உப்பு கலந்த நீரில் வளர்க்கலாம். ஆனால் செயற்கை உப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120. சாதாரணமாக 3 அடி தொட்டிக்கு கடல் மீன்கள் வளர்க்க ரூ. 10,000 வரை செலவாகும்.

மீன்களுக்கு இருவேளை உணவு:

இந்த மீன்களுக்கு என்று தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்டட் உணவு, வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட்ட டிரை வார்ம்ஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும். மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விடவேண்டும்.

அப்பொழுதுதான் மீன்கள் ஆரோக்கியமாக இருக்கும். மீன்களை வடிகட்டி நல்ல நீரில் பாதுகாப்பாக வைத்தபின்னர் தண்ணீரை வெளியேற்றி தொட்டியை கழுவவேண்டும். தொட்டிகளில் உள்ள வேஸ்டான செடிகளை அகற்றிவிட்டு, பின்னர் தண்ணீரை நிரப்பி அழகு படுத்திய பின்னர் மீன்களை மறுபடியும் தொட்டியில் விடவேண்டும். அடிக்கடி மீன் தொட்டியை சோதனை செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.
 

விலாங்கு மீன் பற்றி இராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் விளக்கம் !!!!

 
eel.jpg

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு மீன்களின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகமாக வாழும் பல கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் விலாங்கு மீன். சுவை மிக்க மீன் வகையாக இருப்பதால் உலக அளவில் இதனை விரும்பி வேட்டையாடுகின்றனர்.ஆனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இவற்றைப் பிடிப்பதில்லை என்பதால் பவளப்பாறைகளின் இடுக்குகளில் இவை கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.
ஆங்குயில் பார்ம்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இவ்வினங்களில் சுமார் 800 வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குளங்களில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே கடலில் வாழும் விலாங்கு மீன்களும் தோற்றமளிக்கின்றன. கடலில் வாழும் இவ்வினமோ சுமார் 5 செ.மீ முதல் 4 மீட்டர் வரை நீண்டதாகவும் பாம்புகளைப் போல உருவத்தை உடையதாகவும் இருக்கின்றன.

உருவத்தில் மிகவும் பெரியதாகவுள்ள முரே விலாங்கு மீனின் எடை சுமார் 25 கிலோ வரைகூட இருக்கும். இதன் முன் பகுதியிலும் வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் இணைந்து ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும்.இத்துடுப்புகளே விலாங்கு மீன்கள் இடம் பெயரவும் உதவியாக இருக்கின்றன.

ஆழமற்ற கடல் பகுதிகள், மணல், சகதி நிறைந்த இடங்கள், பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவற்றில் சில வகைகள் மட்டும் கடலில் 13ஆயிரம் அடி வரையுள்ள ஆழத்திலும் வாழ்கின்றன. ஆங்குலிடே என்ற குடும்பத்தை சேர்ந்த விலாங்கு மீன் நல்ல தண்ணீரிலும் வாழும் தன்மையுடையது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கடலில் இருந்து ஆற்றுக்கு வந்து குஞ்சு பொரித்தவுடன் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் கடலின் மேற்புறத்தில் மிதந்து கொண்டே பனித்துளிகளையும் கடல் நுரையையும் சாப்பிடும். பின்னர் கண்ணாடி போன்ற புழுவாக மாறி துள்ளிக் குதிக்கவும் நீந்தவும் கற்றுக் கொள்கின்றன. பின்னர் படிப்படியாக உருமாறி தாயைப் போலாகியவுடன் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, நியுசிலாந்து, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த விலாங்கு மீன்களைக் கொண்டு சுவை மிக்க உணவுப் பதார்த்தங்கள் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் சுவைக்காகவே சில நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் சுவைக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் உயிரின வகைகளில் சிவப்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.சிறுத்தை போன்ற புள்ளிகளையுடைய விலாங்கு மீன், முரே விலாங்கு மீன் ஆகியன கடலுக்குள் நீந்தி செல்லும் ஸ்கூபா டைவர்களை பயமுறுத்தும் மீன்களாகவும் இருக்கின்றன. இம்மீன்கள் நீளமாக இருப்பதால் உடலை வளைத்துக் கொண்டு குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருந்தாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கும்'' என்றார்.
 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் யானை மீன் குறித்து விளக்கம் !!!

 
elephant_fish.jpg

கடலில் வாழும் விநோத உயிரினங்களில் ஒன்றுதான் யானை மீன். இதன் வாய்த்தாடை யானையைப் போன்ற தோற்றம் உடையதாக இருப்பதால் இதற்கு யானை மீன் என்று பெயர். இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார்:

""கலோரிங்கஸ் மில்லி என்ற விலங்கியல் பெயருடைய இந்த மீன், பார்ப்பதற்கு கணினியில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது போலவே இருக்கும். உலகிலேயே மிகவும் கடினமான சதைகளை உடைய தாடையைக் கொண்டதாகும். முன்பக்கத் துடுப்புகள் மூலம் தண்ணீரைப் பின்னுக்குத் தள்ளியவாறு கடலில் வேகமாக முன்னால் நகர்கின்றன. பின்புற பக்கவாட்டில் இரு துடுப்புகளும் அமைந்துள்ளன.

இத்தனித்துவமான துடுப்பு அமைப்பும் இதற்குக் கடலில் நீந்த பேருதவியாக உதவுகிறது. வாயின் தாடை அமைப்பு யானையைப் போன்றுள்ளதால் இதற்கு யானை மீன் என்கிறார்கள். பேய்ச்சுறா, யானைச்சுறா, வெள்ளை மீன் என்ற வெவ்வேறு பெயர்களிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அழைக்கப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும் அதிகமாக வாழ்வதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே 200 முதல் 500 மீட்டர் வரை ஆழம் உள்ள இடத்தில் மணற்பாங்கான அடிப்புறத்தில் வாழ்கின்றன. பெண் இனம் முட்டையிட மட்டுமே ஆழமற்ற பகுதிக்கு வரும் போது மீனவர்களின் வலைகளில் சிக்கி விடுகின்றன.

சிறிய தோல் பைகளை போன்ற தோல் கவர்களை உருவாக்கி அதில் முட்டையிட்டுச் செல்கின்றன. இம்முட்டைகள் கடலில் மிதந்து செல்லும் போது சூரிய வெப்பத்தின் தன்மைக்கேற்ப குஞ்சுகளாகி விடுகின்றன.

எலும்புகளே இல்லாமல் மிருதுவான சதையைக் கொண்டிருக்கும் இவையும் சுறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஒரு வயதான மீன் 60 செ.மீ. முதல் 120 செ.மீ. வரை வளர்ந்திருக்கும். இந்த யானை மீனுக்கும், மனிதனுக்குமான ஜூனோம் தொடர்பு மிக நெருக்கமாக இருப்பதாகவும் கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இம்மீனைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் சுத்தியல் சுறா எனும் ஒரு வகை மீனுக்கு இந்த யானை மீன் நெருங்கிய பங்காளியாகவும் இருக்கிறது எனலாம். கடலுக்கடியில் இருக்கும் சங்குகளையும், சிப்பிகளையும் உண்டு உயிர் வாழும் இந்த உயிரினத்தின் வாயில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலான ஓர் அமைப்பின் மூலம் இவை இதற்குத் தேவையான இரையைப் பிடித்து உண்கின்றன.''
 

கழுதைப்புலி பற்றிய தகவல் !!!

 
hyena.jpg

கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை திரிந்துகொண்டிருக்கும்.

கழுதைப்புலி அசாத்திய திறமை உடைய ஒரு விலங்கு. மோப்பம், சப்தம் ஆகியவற்றை உணர்வதில் கில்லாடி. பார்க் சாதாரனமாக இருந்தாலும் மிகவும் கொடுரமான விலங்கு. விதவிதமா ஊளையிட்டே தன் இன நன்பர்களுக்கு சொல்ல நினைக்கும் சங்கதியைத் தெரிவித்து விடுமாம். இதனுடைய வாலின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் அதன் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம். வால் நுனி பூமியை நோக்கி இருந்தால், சாதரனமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்து இருந்தால் எதற்கும் தயாராகிவிட்டது என்று அர்த்தம். வால் வில்லாய் வளைந்து முதுகைத் தொட்டுக் கொண்டு இருந்தால், 'ஜாலியாக' உள்ளது என்று அர்த்தம். வாலைச்சுருட்டி பின்னங்கால்களுக்கு இடையியே இடுக்கி வைத்துக்கொண்டு இருந்தால், எதையோ பார்த்து பயந்து போய் ஓடுகிறது என்று அர்த்தம்.

கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.
 

பச்சோந்தி பற்றிய தகவல் !!!!

 
chameleon-11.jpg


பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அது மட்டுமல்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பிராணி. அதனால் ஒரு நிமிடத்துக்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்குக் காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பது தான்.

மடகாஸ்கர் நாட்டில் உள்ள காடுகளில் ஜெர்மன் உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய உயிரினங்களை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது 18 மில்லி மீட்டர் உயரமே கொண்ட பச்சோந்திகள் அந்த காடுகளில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே இதுதான் சிறிய பச்சோந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சோந்தி! இந்த உயிரினத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். தான் வாழும் சூழலுக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு வித உயிரினத்தை இவ்வாறு அழைப்பார்கள். உயிர்வாழும் சூழலில் தன் பாதுகாப்பு கவசமாகவும் "நிறம் மாறுவது" அதற்கு உதவுகிறது.

இந்த பெயர் கொண்டு சில மனிதர்களையும் விளிப்பார்கள். காரணம் சூழ்நிலைக்கும், தாம் சார்ந்த நபர்களுக்கும் ஏற்ப தன் பேச்சு, செயல்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்களை பச்சோந்தி என்பார்கள். "நீ ஒரு பச்சோந்தி" என்று ஒருவனை ஏசும் போது அவனுக்கு கோபம் வரும். பச்சோந்தி என்று ஒருவனை விழிப்பது சமூகத்தில் தாழ்வான வார்த்தையாகவே இருந்து வருகிறது.

ஆனாலும், சில தருணங்களில் எம் சூழ்நிலை நாம் பச்சோந்தி போல இருந்தாலே வாழ முடியுமாக உள்ளது. உதாரணம் புலம்பெயர்ந்ததேசம்.

நாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு மேலைத்தேய/பிற நாடு ஒன்றுக்கு குடி பெயரும் போது, அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது கட்டாயமாகிறது. அதாவது பச்சோந்தி போல.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை பல பழக்கவழக்கங்களை மாற்றினாலே நம்மால் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆரம்பத்தில் இது மிகவும் கடினமாக தான் இருக்கும் , ஆனால் போக போக அதுவே பழக்கத்துக்கு வந்துவிடும். அதன் பின் பழையன கழிதலும் புதியன புகுதலும் போல நாம் மாறிவிடுகிறோம் என்று சொல்வதை விட, சூழல் நம்மை மாற்றிவிடுகிறது என்பதுவே உண்மை.

 

http://dreamsway2sucess.blogspot.com.au/p/entritiment.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.