Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் நலக்கூட்டணி உடைந்தது! வைகோ வெளியேறினார்

Featured Replies

மக்கள் நலக்கூட்டணி உடைந்தது! வைகோ வெளியேறினார்

 

1aa_11521.jpg

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/76035-vaikos-mdmk--came-out-from-makkal-nala-kootani.art

  • தொடங்கியவர்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்

 
வைகோ | கோப்புப் படம்: ஷேக் மொய்தீன்
வைகோ | கோப்புப் படம்: ஷேக் மொய்தீன்
 
 

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது.உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தோழமையும், நட்பும் என்றும் தொடரும்'' என்றார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தாலும் கூட்டமைப்பு தொடரும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து வைகோ மோடிக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

ஆனால், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/மக்கள்-நலக்-கூட்டணியில்-இருந்து-மதிமுக-விலகல்/article9445741.ece?homepage=true

  • தொடங்கியவர்

வைகோ விலகல்! மநகூ தலைவர்கள் சொல்வது என்ன?

 

makkal_aliance_2a_12191.jpg

மக்கள் நலக்கூட்டியத்தில் இருந்து மதிமுக வெளியேறியது குறித்து மக்கள் நலக்கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து நடந்து முடிந்த சட்டப்பேரவையில் தேர்தலை ஒன்றாக சந்தித்தது. தேர்தலில் படுதோல்வியை இந்த கூட்டணி சந்தித்தாலும் ஒன்றாகவே இணைந்து போராட்டத்தை நடத்தியது. இந்த நிலையில், இந்த கூட்டணி உருவாகி சில மாதங்களே ஆன நிலையில், மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தாலும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

வைகோவின் இந்த முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், வைகோ எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மக்கள் நலகூட்டியக்கம் நிரந்தரமான அமைப்பல்ல. விலகுவது தொடர்பாக கூட்டணித் தலைவர்களுடன் வைகோ ஆலோசிக்கவில்லை. ஆனாலும், வைகோவின் நாகரிகமான முடிவை வரவேற்கிறோம். கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க மதிமுகவுக்கு சுதந்திரம் உண்டு. மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் தொடரும். மதிமுக எந்த அடிப்படையில் முடிவை எடுத்தது என்று தெரியவில்லை" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மக்கள் நலக்கூட்டியக்க்த்தில் இருந்து மதிமுக விலகியது அதிர்ச்சி அளிக்கிறது. அணி உடைய நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று வைகோ கூறியிருந்தார். கூட்டணி தலைவர்களை ஆலோசிக்காமல் வைகோ முடிவு எடுத்துள்ளார்" என்று கூறினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் கூறுகையில், வைகோ எடுத்தது மதிமுகவின் நல்ல முடிவே" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76039-makkal-nala-kootani-leaders-comment-on-vaikos-decision.art

  • தொடங்கியவர்

வைகோவை விலக வைத்த 3 காரணங்கள்! -விளக்கும் திருமாவளவன் 

 

thiruma_vaiko_15119.jpg

க்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 'மக்கள் நலக் கூட்டணி இயங்குகிறதா' என்ற கேள்விக்கான முடிவுரையை ம.தி.மு.க.வின் உயர்நிலை குழுக் கூட்டம் எழுதிவிட்டது. ' ம.தி.மு.க.வைத் தவிர்த்து, மக்கள் நலக் கூட்டியக்கம் தொடரும்' என அறிவித்திருக்கிறார்கள் கூட்டணியின் தலைவர்கள். 

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசினோம். 

ம.தி.மு.க.வின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

"வைகோவின் இந்த முடிவு என்னைப் பொறுத்தவரையில் அதிர்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், 'விடுதலைச் சிறுத்தைகளோடும் இடதுசாரிகளோடும் நட்புறவு தொடரும்' என்று வைகோ அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அண்மையில் சில மாதங்களாக கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளை வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக, பண மதிப்பு செல்லாது என பிரதமர் அறிவித்தார். இதை ம.தி.மு.க வலுவாக வரவேற்கிறது. வி.சி.க.வும் இடதுசாரிகளும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறோம். நாளை புதுச்சேரியில் அரசியமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறோம். இது முழுக்க பிரதமரின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டிக்கின்ற வகையில் நடத்தப்படும் மாநாடு. 'இந்த மாநாட்டில் ம.தி.மு.க கலந்து கொள்ள வாய்ப்பில்லை' என்று வெளிப்படையாக வைகோ அறிவித்தார். இந்த முரண்பாடுதான், தற்போது வெளிப்படையாகவும் கூர்மையாகவும் வெளிப்பட்டு இருக்கிறது. உயர்நிலைக்குழுவில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதும் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்பதும் எனக்குத் தெரியாது. பிரதமரின் நடவடிக்கையை மூன்று கட்சிகள் எதிர்த்ததும் ம.தி.மு.க வரவேற்றதும் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடம் கொடுத்துவிட்டது. அந்த அடிப்படையில் ம.தி.மு.க இந்த முடிவை எடுத்திருக்கலாம்". 

வி.சி.க மாநாட்டு அழைப்பிதழில் வைகோ பெயரைப் புறக்கணிப்பது குறித்து, அவரிடம் தெரியப்படுத்தினீர்களா? 

"எங்களுடைய மாநாட்டில் அவர் பெயரை புறக்கணித்துவிட்டோம் என்ற பேச்சுக்கு இடமில்லை. டிசம்பர் 6-ம் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 60-ம் ஆண்டு நினைவுநாள். அப்போது மாநாட்டை நடத்தலாம் என முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒப்புதல் அளித்தார் வைகோ. அப்போது ஏற்பட்ட புயல் காரணமாக மாநாட்டை ஒத்திவைத்தோம். பிறகு, கவிஞர் இன்குலாப் மரணத்துக்குச் சென்றபோது வைகோவை அங்கு சந்தித்தேன். மாநாடு குறித்தும் பேசினேன். ' இது அம்பேத்கரின் நினைவுநாள் மாநாடு மட்டுமல்ல. பிரதமரின் நடவடிக்கைகளைக் கண்டிக்கின்ற மாநாடு. இதில் பங்கேற்பதில் உங்களுக்கு சிக்கல் இல்லையா' என்று கேட்டேன். 'யோசித்துச் சொல்கிறேன்' என்றார். அரைமணி நேரத்துக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டவர், ' இந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாது. அடுத்த நிகழ்ச்சியில் நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து பங்கேற்போம். நான் பிரதமரின் நடவடிக்கையை ஆதரிக்கிறேன். நீங்கள் மூவரும் எதிர்க்கிறீர்கள். இந்த நேரத்தில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது' என வெளிப்படையாகச் சொன்னார். அதன்பிறகே அழைப்பிதழை அச்சடித்தோம்". 

makkal_na_Kottani-_vijayakanth_long_1531

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியைக் கட்டமைத்ததில் உங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தேர்தல் முடிந்த ஆறு மாதத்திற்குள்ளேயே கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதே? 

"மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்குவது குறித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசினோம். ஜூன் மாதம் அதற்கு வடிவம் கொடுத்தோம். நவம்பரில் இருந்து மே மாதம் வரையில் கூட்டணியாக இயங்கினோம். ஏறத்தாழ ஓராண்டு காலம் மிகச் சிறப்பான முறையில் இணைந்து செயல்பட்டோம். ஆற்றல்வாய்ந்த ஒருங்கிணைப்பாளராக கூட்டணியை வழிநடத்தினார் வைகோ . கூட்டணிக்குள் தே.மு.தி.க.வும் த.மா.காவும் வந்தன. தேர்தலில் ஓர் இடத்தில்கூட எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பிறகு, உடனடியாக தே.மு.தி.க.வும் த.மா.கவும் ' தொகுதி உடன்பாடு மட்டும்தான் வைத்துக் கொண்டோம். கூட்டணியில் தொடரவில்லை' என அறிவித்தன. மே மாதத்துக்குப் பிறகு கடந்த ஆறு மாதங்களாக ஒன்றாகவே பயணித்தோம். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறோம். அண்மையில் மூன்று பிரச்னைகளில் எங்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டன. காவிரி பிரச்னையில் தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், வி.சி.க பங்கேற்பது என முடிவு செய்தபோது, மற்ற மூன்று கட்சிகளும் விரும்பவில்லை. மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. அதன்பிறகு, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டபோது, அங்கு மக்கள் நலக் கூட்டணி இயங்காதபோது, நாங்கள் தனித்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவானது. புதுவை வி.சி.க நாராயணசாமியை ஆதரிப்பது என முடிவெடுத்து என்னிடம் வந்தார்கள். ' அங்குள்ள சூழலுக்கு ஏற்ப முடிவெடுங்கள்' என்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாராயணசாமிக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை பார்த்தது. இதில் ம.தி.மு.க.வுக்கு உடன்பாடில்லை. இறுதியாக, பிரதமரின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை. இப்படி அண்மைக்காலமாக, மூன்று பிரச்னைகளில் முரண்பாடு ஏற்பட்ட சூழலில், தொடர்ந்து பயணிப்பதில் நெருக்கடி இருப்பதாக ம.தி.மு.க உணர்ந்திருக்கலாம்". 

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறீர்கள். இதில் வைகோவுக்கு உடன்பாடில்லை என்பதை உணர்ந்தீர்களா? 

"சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, நான் ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். 'சட்டமன்றத் தேர்தலில் கையாண்ட அதே உத்தியை நாடாளுமன்றத் தேர்தலில் கையாள முடியாது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்றன. நாடாளுமன்றத் தேர்தலின்போது, மாநிலத்தில் இந்த இரு கட்சிகள் மாநிலத்தில் தலைமை தாங்கினாலும்,  தேசியக் கட்சிகளுடன் அணி சேரவே விரும்புவார்கள்' என்று. அதுதான் நிதர்சனமான போக்காக தற்போது மாறி வருகிறது. நாங்கள் இதுவரையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் எந்த அணியில் சேருவது என்பது குறித்தும் முடிவு எடுக்கவில்லை". 

'என்னுடைய ராஜதந்திரத்தால் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தேன்' என ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசியதாக தகவல் வெளியானது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

"இப்படியொரு தகவல் வெளியானதும், வைகோவை தொடர்பு கொண்டு பேசினோம். 'மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுபோன்று நான் பேசவில்லை' என்று வைகோ தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் எத்தனையோ சூது, சூழ்ச்சி போன்றவை உண்டு. 'மக்கள் நலக் கூட்டணியை சிதற வைக்க பலரும் முயற்சித்தார்கள். என்னுடைய ராஜதந்திரத்தால், இதையெல்லாம் வெற்றிகரமாக வழிநடத்தினேன்' என்று அவர் சொன்னார். அதைத்தான் நாங்கள் ஏற்றுக் கொண்டோம்". 

இப்படியொரு கூட்டணி எதிர்காலத்தில் உருவாகுமா? 

"கூட்டணி சிதறிவிட்டது என்று நீங்கள் கருத வேண்டிய அவசியம் இல்லை. இந்த அணியில் ம.தி.மு.க.வைத் தவிர்த்து மற்ற மூவரும் கூட்டியக்கமாகவே செயல்படுவோம். இனி நாங்கள் செயல்படுத்த இருக்கின்ற செயல்திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். மக்கள் நலக் கூட்டியக்கம் தொடரும்".

http://www.vikatan.com/news/tamilnadu/76067-thirumavalavan-tells-us-the-3-reasons-why-vaiko-wanted-to-go-out-of-mnk-alliance.art

  • தொடங்கியவர்

'கூட்டணி பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன்!' - இரண்டு நாட்களுக்கு முன் உருகிய வைகோ

 

 மக்கள் நலக் கூட்டணி

ம. ந. கூ. இருந்து, ம.தி.மு.க வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திடீரென அறிவித்திருப்பதுஅரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ம.ந. கூ. உடையும் என்று பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது உண்மை ஆகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் என்ற பெயரில் மாற்று அணியை உருவாக்கின. பின்னர் இந்த இயக்கம் மக்கள் நலக்கூட்டணியாகி தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தது. விஜயகாந்த்-ஐ முதல்வர் வேட்பாளராக அறிவித்து தே.மு.தி.மு -மக்கள் நலக் கூட்டணியாகி, ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா-வும் அதில் ஐக்கியமானது. ஆனாலும் சட்டசபைத் தேர்தலில் ம.ந.கூ. படுதோல்வியைச் சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து, ம. ந. கூ. உடைந்து விடும் என்று பலரும் பேசி வந்த நிலையில், அதற்கான சூழ்நிலைகள் உருவெடுத்தன. காவிரி பிரச்னையில் தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது, பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஆதரவு போன்ற பல்வேறு விஷயங்களில், வெவ்வேறான நிலைப்பாட்டை வைகோ எடுத்தார். இதனால், ம.ந.கூ. தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உருவானது.

இந்நிலையில் வைகோ தலைமையில் சென்னையில் இன்று நடந்த ம.தி.மு.க உயர்மட்டக்குழு கூட்டத்திற்குப் பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதாக வைகோ அறிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் ம.ந.கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுடான தனது நட்பு தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க வெளியேறியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசியபோது, "வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. அதே வேளையில் விடுதலை சிறுத்தைகளோடும் இடதுசாரிகளோடும் நட்புறவு தொடரும் என்று கூறியிருப்பது ஆறுதல் தருகிறது. எந்த பின்னணியில் இருந்து அவர் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியாது. அண்மையில் பிரதமரின் ரூபாய் நோட்டு விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை  விடுதலை சிறுத்தைகளும், இடது சாரிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால் ம.தி.மு.க ஆதரவு தெரிவித்திருந்தது.  

விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 28)  நடக்கிறது. இந்த மாநாட்டில் ம.தி.மு.க பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான்  ம.தி.மு.க இந்த முடிவை எடுத்துள்ளது. எனினும் இந்த மூன்று கட்சிகளும் மக்கள் நலக் கூட்டு இயக்கமாகவே இயங்கும்".

வைகோ வெளியேறுவதற்கு உங்களுடனான கருத்து வேறுபாடு காரணமா? 

"கொள்கை அடிப்படையிலான முரண்பாடு மட்டும் என்று வெளிப்படையாக தெரிகிறது. வேறு ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளதா? என்பதை யூகத்தின் அடிப்படையில் சொல்ல இயலாது. உயர்நிலைக் குழு கூட்டத்தில் என்ன ஆலோசித்தார்கள். ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை" 

இதுகுறித்து வைகோவிடம் பேசுவீர்களா ? 

"வாய்ப்பு கிடைத்தால் பேசுவேன்" என்றார் திருமாவளவன்

ஜி.ராமகிருஷ்ணன் கருத்து!

ம.தி.மு.க வெளியேறியது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, "ரூபாய் நோட்டுப் பிரச்னை என்பது தேசம் தழுவிய முக்கியமான ஒரு பிரச்னை. அப்படிப்பட்ட ரூபாய் நோட்டுப் பிரச்னையில் மத்திய அரசை ஆதரிக்கிறார் வைகோ. கூட்டணியில் இருக்கும் மற்ற மூவரும் எதிர்க்கிறோம். எதிரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒரே அணியில் நீடிக்க முடியாது. அது சரியாகவும் இருக்காது" என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், "மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி விட்டதாக வைகோ வெளியிட்ட அறிவிப்பை நண்பர்கள் மூலமே அறிந்தேன். தோழர் மகாலிங்கம் இறப்புக்கு அஞ்சலி செலுத்த முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியில் இந்தத் தகவல் கிடைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட திரு. வைகோ என்னிடம் பேசும்போது, ' கூட்டணி பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன்' என்று தெரிவித்தார். இப்போது அவரே இந்த முடிவை எடுத்துள்ளார். முடிவெடுப்பது அவருடைய விருப்பம். அதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ம. ந. கூ. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அனைவரையும் அழைத்து இந்த முடிவைச் சொல்லியிருக்கலாம். ம.ந.கூ. தோழர்களுடனான நட்பு தொடரும் கூறியுள்ளார். அதுபோலவே, ம.தி.மு.க. தோழர்களோடு எங்களுடைய நட்பும் தொடரும்" என்றார்.

அண்மைக்காலமாக வைகோவின் பேட்டியைத் தொடர்ந்து, அனைவரும் எதிர்பார்த்தபடியே, வைகோவின் விலகல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவதுடன், எதிர்கால அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? என உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

பனிப்பாறையும் பதவி ஆசையும் ஒன்றுதான்! இரண்டிலும் மோதல் என்பது வெடித்து வெளியே தெரியும் போதுதான் விளைவின் விரீயம்  புரியும் என்பது நிதிர்சனம்! 

http://www.vikatan.com/news/tamilnadu/76093-‘i-wont-be-a-reason-for-split-in-pwf-alliance’-this-is-what-vaiko-said-some-days-ago.art

  • தொடங்கியவர்

முடிவெடுத்த மார்க்சிஸ்ட்... முந்திக்கொண்ட வைகோ... ம.ந.கூ.வில் ம.தி.மு.க. வெளியேறிய பின்னணி !

 

a6_10439.jpg


பொதுவாக கூட்டணி என்றால் அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே சில சிக்கல்கள், பிரச்னைகள் எழுவது என்பது வாடிக்கை தான். வெவ்வேறு கட்சிகள் ஓரணியாக சேரும் போது, 100 சதவீதம் ஒத்துப்போவது என்பதை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால் அணி சேர்ந்தது முதல் பல திகிலூட்டும் திருப்பங்களை கொடுத்து அதிர வைத்தது மக்கள் நலக்கூட்டணி. அதில் மிக முக்கியமான ஒன்று தான் கூட்டணியை உருவாக்கியதாக சொல்லப்படும் வைகோவே அணியில் இருந்து வெளியேறியது.

'மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் நடத்துவதற்காக...' எனச்சொல்லி 2015ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் மக்கள் நலக்கூட்டணி. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காந்திய மக்கள் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி என 6 கட்சிகளுடன் துவங்கியது மக்கள் நலக்கூட்டியக்கம்.

a7_10040.jpg

துவங்கிய வேகத்தில் வெளியேறிய கட்சிகள் !

இந்த இயக்கத்தில் சேர்ந்த வேகத்திலேயே வெளியேறினார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். "இந்த அணி தேர்தல் வரை நீடிக்காது. இதில் உள்ள கட்சிகள் எல்லாம் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்து பழக்கப்பட்ட கட்சிகள். இது அ.தி.மு.க.வை நோக்கி நகரும் முயற்சி தான். எனவே நான் வெளியேறி விட்டேன்" என காரணம் சொன்னார் தமிழருவி மணியன். இந்த இயக்கம் தேர்தலை சந்திக்கும் என வைகோவும் மற்றவர்களும் அறிவிக்கத் துவங்க... 'இது தேர்தலுக்கான அணி அல்ல' எனச்சொல்லி வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி. ஆரம்பித்த வேகத்தில் கூட்டணியில் ஆறாக இருந்த கட்சிகளின் எண்ணிக்கை 4ஆக குறைந்தது.

கூட்டணியில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் கலகத்தை ஏற்படுத்தியது இந்த முடிவு. மக்கள் நல கூட்டியக்கத்துடன் கூட்டணி என்ற முடிவுக்கு எதிராக ம.தி.மு.க.வின் நிர்வாகிகள் பலர் தி.மு.க.வுக்கு இடமாறினர். "2001, 2006, 2011 தேர்தல்களில் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டார். தொடர்ச்சியாக அணி மாறினார். சில சமயங்களில் போட்டியிடாமலே இருந்தார். இப்போது கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது என தெரிந்திருந்தும், மக்கள் கூட்டியக்கத்துடன் கூட்டணி என்கிறார். இதை நாங்கள் ஏற்கவில்லை," என வெளிப்படையாக அறிவித்து ம.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர்.

a4_10227.jpg

சமரசமும், குழப்பங்களும்...

மக்கள் நலக்கூட்டணி என முடிவெடுத்த பின்னால், அணியில் இருந்த நான்கு கட்சிகளும் நிதானமாய் ஆலோசித்து குறைந்த பட்ச செயல்திட்டங்களை வெளியிட்டது. இந்த நான்கு கட்சிகள் முரண்படும் எந்த விஷயமும் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளுடன், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்னை, கூடங்குளம் அணு உலை, முல்லை பெரியாறு அணைப்பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளில் முரண்பட்டு நிற்கும் நிலையில், குறைந்த பட்ச செயல்திட்ட வரைவு அறிக்கையில் மற்ற கட்சிகள் சமரசம் செய்து கொண்டன.

தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி. காங்கிரஸ், பா.ம.க. அல்லாத அணியை ஏற்படுத்துவது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு கண்டிப்பது உள்ளிட்ட முக்கியமானவை குறைந்த பட்ச செயல்திட்டங்களில் இடம்பெற்றிருந்தது. 'மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கப்போவதில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதை முடிவு செய்வோம்' என அறிவித்தனர்.  ஆனால் அடுத்த சில தினங்களிலே தே.மு.தி.க.வுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்த மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தனர். முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என்பதை பிரகடனம் செய்த வைகோவே, 'விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர். மக்கள் நலக்கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என அழைக்கப்படும்' என பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் த.மா.கா.வுடனும் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இதோடு நிற்கவில்லை. கோவில்பட்டியில் நானே நிற்கப்போகிறேன். எனக்கு அந்த தொகுதி வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் போராடி கோவில்பட்டி தொகுதியை பெற்ற வைகோ, வேட்புமனுத்தாக்கலின் போது போட்டியிடப்போவதில்லை எனச்சொல்லி பரபரப்பை கிளப்பினார். தேர்தல் பிரச்சாரத்தில் உணர்ச்சிப் பிழம்பான வைகோவின் பேச்சும், தொடர்பில்லாமல் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்த்தின் பேச்சும் பெரும் பின்னடைவாய் அமைந்தது. அதுவே தேர்தலிலும் எதிரொலித்தது.

a2_10328.jpg

தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்த குழப்பங்கள்

தேர்தலுக்கு பின்னரும் இது தொடர்ந்தது. தேர்தல் முடிவுகளில் நான் செய்த தவறுகள் என வைகோ பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. 'விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டிருக்க கூடாது. அது நான் எடுத்த முடிவு அல்ல' என வெளிப்படையாகவே பேசினார் வைகோ. "சக்திக்கு மீறிய சுமையை தூக்கிக் கொண்டு, கட்சிப்பணிகளுக்காக உறக்கமின்றி, சரியான நேரத்தில், மருத்துவர் ஆலோசனையின் படி உண்ணாமல் இருந்ததால், எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் என்னை கடுமையாக பாதித்திருக்கிறது. அதை உங்களிடம் சொல்வதில் தவறில்லை என கருதுகிறேன். அந்த பாதிப்பு கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நான் அறிவேன்" என்றார்.

த.மா.கா., தே.மு.தி.க. கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறியது. இருந்தாலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து இயங்கும் என்றே சொல்லி வந்தார்கள். காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சிக்கூட்டத்தை தி.மு.க. கூட்டிய போது, அதில் பங்கெடுக்க விடுதலை சிறுத்தைகள் முன்வந்தது. அதற்கு வைகோ ஒப்புக்கொள்ளவில்லை.

a5_10162.jpg

சிக்கலின் உச்சம் இது தான்..

இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என மக்கள் நலக்கூட்டணி அறிவிததிருந்த போது, புதுவை, நெல்ல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது விடுதலை சிறுத்தைகள். ரூ.500, ரூ.1000  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மக்களை பாதிக்கும் எனச்சொல்லி, அதை கண்டித்து விடுதலை சிறுத்தைகளும், இடது சாரிகளும் போராட்டங்களை அறிவித்த போது, மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பினார் வைகோ. அதோடு நிற்காமல் மோடியை நேரில் சந்தித்து வைகோ பாராட்ட கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

சஸ்பென்ஸ் நிறைந்த திரைப்படங்களில் கூட இத்தனை திருப்பங்களை நீங்கள் பார்த்து விட முடியாது. அத்தனை திருப்பங்களை தினம் தினம் அரங்கேற்றி வந்தது மக்கள் நலக்கூட்டணி. இதன் உச்சகட்டமாகத்தான் அணியை உருவாக்கிய ம.தி.மு.க.வே வெளியேறியது. திடீரென ம.தி.மு.க. வெளியேற என்ன காரணம் என விசாரித்தோம்.

a1_10261.jpg

முடிவெடுத்த மார்க்சிஸ்ட்.. முந்திக்கொண்ட வைகோ...

ம.தி.மு.க. அணியில் இருந்து வெளியேறவில்லை என்றால், ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டிருக்கும். அதனால் தான் ம.தி.மு.க.வே வெளியேறி விட்டது என்றார்கள் இடது சாரிகள். "மக்கள் நலக்கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டங்களில் மிக முக்கியமானது  மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பது. இதில் வைகோவின் செயல்பாடு என்பது ஏற்கத்தக்கதில்லை. மூன்று கட்சிகளும் ரூபாய் நோட்டு பிரச்னையில் தீவிரமாய் எதிர்ப்பு தெரிவித்த போது, வைகோ இதற்கு ஆதரவு தெரிவித்ததும், மோடியை நேரில் சந்தித்து பாராட்டியதும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த பட்ச செயல்திட்டங்களுக்கு எதிராக செயல்படுவது ஏற்க முடியாது. அவர் இந்த அணியில் நீடிக்க முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவிப்பதாக இருந்தது. அதற்குள் வைகோ முந்திக்கொண்டார். திடீரென உயர்நிலைக்குழு கூட்டத்தின்முடிவை ஏற்று வெளியேறுவதாக வைகோ சொன்னது இதைத்தான் காட்டுகிறது," என இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "ரூபாய் நோட்டுப் பிரச்னை என்பது தேசம் தழுவிய முக்கியமான ஒரு பிரச்னை. அப்படிப்பட்ட ரூபாய் நோட்டுப் பிரச்னையில் மத்திய அரசை ஆதரிக்கிறார் வைகோ. கூட்டணியில் இருக்கும் மற்ற மூவரும் எதிர்க்கிறோம். எதிரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒரே அணியில் நீடிக்க முடியாது. அது சரியாகவும் இருக்காது" என்றார்.
தமிழக அரசியலில் சுவாரஸ்யமான திருப்பங்களையும், பரபரப்பான நிகழ்வுகளை நிகழ்த்தக்கூடியவராக இருந்தார் வைகோ. இப்போது அவரால் அவருக்கே நிகழ்ந்துள்ளது பரபரப்பான திருப்பம்.

http://www.vikatan.com/news/coverstory/76129-reason-behind-mdmk-quits-from-peoples-welfare-front.art

  • தொடங்கியவர்

15777064_757123394438001_258085689502220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.