Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி

Featured Replies

அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி
 
 

‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம்.   

இந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன.   

இப்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பரப்புரைகளும் முடிவுக்கு வந்து விட்டன. 
வீராப்புப் பேச்சுகள், காதுகளை நிரப்பியிருக்கின்ற வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மனதில் பதிந்திருக்கின்ற நிலையில், இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர்கள் இறுதி முடிவு எடுப்பதற்காக, தேர்தல் பிரசாரங்கள் எதுவுமற்ற இரண்டு நாட்கள், ‘நிசப்தகாலம்’ வழங்கப்பட்டிருக்கின்றது எனலாம்.   

எனவே, மிகவும் அமைதியாக இருந்து, சிந்தித்து, ஆறஅமர நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்ற இறுதி முடிவை, குறிப்பாக முஸ்லிம்கள் எடுக்க வேண்டியுள்ளது.   

முஸ்லிம் கட்சிகள், இந்தச் சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டும், மக்களின் அபிலாஷைகளை எங்ஙனம் நிறைவேற்ற வேண்டும் என்று, இப்பக்கத்தில் நிறையத் தடவை எழுதியிருக்கின்றோம்.   

ஆனால், அதே முஸ்லிம் அரசியல்வாதிகள் அதைச் செய்யத் தவறுகின்ற போது, அதுபற்றியும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அதுமட்டுமன்றி, இன்னுமொரு தேர்தல் வரும் வரைக்கும், மறக்காமல் மனதில் வைத்திருந்து, இந்தப் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு, ஒரு பாடம் புகட்ட வேண்டிய ஏகப்பட்ட விடயங்களையும் தொடர்ச்சியாகப் பொறுப்புடன் குறிப்பிட்டு வந்திருக்கின்றோம்.   

இப்போது அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. நீங்கள் யாருடைய ஆட்சியதிகாரத்தை வெறுத்தீர்களோ, யாரை இனிமேல் பதவிக்கு கொண்டு வரக் கூடாது என்று கடந்த காலங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் முடிவு எடுத்திருந்தீர்களோ, யாருடைய தலைமைத்துவத்தை அல்லது பிரதிநிதித்துவத்தை நீங்கள் வெறுத்தீர்களோ அன்றேல் விரும்பினீர்களோ, நமது உள்ளூராட்சி மன்றங்களை எப்பேர்ப்பட்டவர்கள் ஆளவேண்டும், எவ்வாறான ஓர் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு உங்களிடம் இருந்ததோ...... இதையெல்லாம் மீட்டுப் பார்த்து, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை, எடுக்க வேண்டிய தருணமாக, இது காணப்படுகின்றது.   

வாக்களித்தல் என்பது, மிகவும் முக்கியமான ஒரு வரப்பிரசாதமாகும். மிக உயர்வான எழுத்தறிவு சதவீதமும் அரசியல் அறிவும் இருக்கின்ற நமது நாட்டில், குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களிலும் கூட, அநேக தேர்தல்களில் 75 அல்லது 80 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படுவதைக் காணமுடிகின்றது.   

அந்த நிலைமை இம்முறை இருக்கக் கூடாது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும். உலகில் எத்தனையோ இனக் குழுமங்கள் வாக்குரிமைக்காக உயிரைக் கொடுத்திருக்கின்றன. இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தச்சூழலில் நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்தப் ‘புள்ளடி’ எனும் ஆயுதத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.   

‘உள்ளூராட்சி மன்றம் தானே’ என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இந்த நாட்டின் ஆளுகைக் கட்டமைப்பில் ஆகச் சிறிய அரசாங்கமே, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும்.   

நேரடியாக ஒவ்வொரு குடும்பத்திலும் தாக்கம் செலுத்துகின்ற அதிகார அலகாக உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதுடன், இங்கிருந்துதான் மாகாண சபைகள், நாடாளுமன்றம் என்ற அடுத்தடுத்த கட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் செல்கின்றனர். எனவே, அனைவரும் சரியான தெரிவுடன் வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டியது தார்மீகக் கடமையாகும்.   

அத்துடன் இம்முறை, வாக்களிக்காதோரிடம் விளக்கம் கோருவது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்தாலோசித்து வருகின்றது.   

வாக்களிப்பது என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதுபோலவே சரியான ஒரு கட்சிக்கு (மறைமுகமாக வேட்பாளருக்கு) வாக்களிப்பதும் மிக மிக இன்றியமையாத விடயமாகும்.   

ஆதலால், எப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் நமது அரசியல் வழிப்படுத்துநர்களாக இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைக்கின்றார்களோ, அவ்வாறானவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.   

சமூக சிந்தனையுள்ள, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற, கெட்ட பழக்கங்கள் அற்ற, முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்ற போது அதற்கெதிராக முன்னிற்கின்ற, ஏமாற்று அரசியலைச் செய்ய விரும்பாத, இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்ட மோசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிராத, செயல்வீரமுள்ள வேட்பாளர்களைக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே முஸ்லிம் மக்கள் புள்ளடி இட வேண்டும்.   

நாளை 10 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு, வாக்கெடுப்பு ஆரம்பமாகி, பிற்பகல் நான்கு மணிக்கு முடிவடையவுள்ளது. வாக்குகள் இம்முறை வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படுவதால், நள்ளிரவு 12 மணிக்கு முன்னராக, அநேகமான வட்டார முடிவுகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.   

பொதுவாக, தென்பகுதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதில் கடும் சவால்கள் ஏற்படுவதுடன், வடக்கு, கிழக்கிலும் பல சபைகளில் முஸ்லிம் கட்சிகள் அல்லது அவர்கள் போட்டியிடும் பெரும்பான்மைக் கட்சிகள் தனித்து ஆட்சியமைப்பது சிரமமாகவே அமையும் என்று, அரசியல் அவதானிகள் கூறியிருக்கின்றனர்.   

எது எப்படியிருப்பினும் பொது மக்கள் தெளிந்த மனதுடன் சரியான கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.  
அவ்வாறு வேட்பாளரை, அதாவது கட்சியைத் தெரிவு செய்கின்ற வேளையில், ஓர் உள்ளூராட்சி மன்றத்தால் ஆற்றக்கூடிய பணிகள் என்ன, அதற்குள்ள அதிகாரங்கள் எவை என்பது பற்றிய, ஆய்ந்தறிவின் அடிப்படையில், யார் அல்லது எந்தக் கட்சி அதைச் செம்மையாகச் செய்வார்கள் என்ற முடிவை முஸ்லிம்கள் எடுக்க வேண்டியிருக்கின்றது.   

அந்த வகையில், பொதுச் சுகாதாரம், வீதிகளைப் புனரமைத்தலும் பராமரித்தலும், உரிமைச் சான்றிதழ்களை வழங்குதலும் குத்தகை அறவீடும், குடிநீர் வழங்குதல், இறங்குதரை அமைத்தல், அறக்கொடை வழங்கல், சமய கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல், திண்மக் கழிவகற்றல், சிறுவர்பூங்கா, விளையாட்டு மைதானம், மயானங்களை அமைத்தலும் பராமரித்தலும், தீயணைப்பு சேவைகள், கிராமிய மின்சாரம், வீடமைப்புத் திட்டம், தெருக்களுக்கு ஒளியூட்டல் என அந்தப் பணிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது. இவற்றை மனதில் கொண்டு, வாக்காளர்கள் சரியான தெரிவை மேற்கொள்வது அவசியமாகும்.   

மிக முக்கியமாக வாக்களிக்கச் செல்லும் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள ஆளடையாள ஆவணத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அதன்படி, ஆட்பதிவுத் திணைக்கள தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அரசாங்க ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கிய மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, அவ்வாறில்லாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய விசேட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து, தமக்குரிய வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.   

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, வட்டாரமுறை மற்றும் விகிதாசார முறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கலப்புத் தேர்தல் முறைமையொன்றின் கீழ், முதன்முதலாகத் தேர்தல் நடைபெறுகின்றது. 
அதாவது 60 சதவீதமான உறுப்பினர்கள் வட்டாரத்தில் இருந்தும், 40 சதவீதமானோர் விகிதாசாரப் பட்டியலில் இருந்தும் உள்ளூராட்சி மன்ற‍த்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.   

ஒவ்வோர் உள்ளூராட்சி சபையிலும் போட்டியிடும் கட்சிகளுக்கு அமைவாக, வாக்குச்சீட்டுகள் வேறுபட்ட கட்சிச் சின்னப் பட்டியலைக் கொண்டவையாகவும் அளவைக் கொண்டவையாகவும் அமைந்திருக்கும். 
உதாரணமாக, மூதூரில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டும் பாணந்துறையில் நீளம் குறைந்த வாக்குச் சீட்டும் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனால், கலப்பு முறைத் தேர்தல் என்றாலும், ஒற்றை வாக்குச்சீட்டே, வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.   

இப்புதிய தேர்தல் முறைமையின் கீழ், விருப்பு வாக்கு முறைமை இல்லாது செய்யப்பட்டுள்ளமையால், வாக்காளர்களாகிய நீங்கள், ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை அல்லது மூன்று பேரை விருப்பத் தெரிவு செய்யும் அவசியம் கிடையாது.   

நீங்கள் வாக்குச் சீட்டைக் கையில் எடுத்ததும், முதல் நிரலில் இருக்கின்ற உங்கள் விருப்பத்துக்குரிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு எதிரே உள்ள கூண்டில், புள்ளடி [x] இடுவதன் மூலம், உங்கள் வாக்களிப்பு கடமையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.   

இத்தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு, பல ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றது. விசேட தேவையுடையவர்கள், உதவியாள் ஒருவரை அழைத்துச் செல்லவும், உடல் வலுவிழந்தோர் விசேட போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.   

அத்துடன், அரச தனியார் நிறுவனங்கள், தமது ஊழியர்கள் வாக்களிப்புக்குச் சென்று வருவதற்காக, ஆகக் கூடியது மூன்று நாட்கள் வரை சம்பளத்துடனான விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருக்கின்றார். எனவே, வாக்களிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து வாக்களிக்க வேண்டும்.   புதிய தேர்தல் முறைமை பற்றிய, போதிய தெளிவில்லாமலும் அதை ஆய்ந்தறிந்து கொள்வதற்கான தேடல் இல்லாமலும் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.   

அதேபோல் போதிய விளக்கமில்லாத நிலையிலேயே முஸ்லிம் வாக்காளர்களும் நாளைய தினம் வாக்களிக்கப் போகின்ற நிலைமை காணப்படுகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.   

இப்புதிய தேர்தல் முறைமையில், வட்டார அடிப்படை மற்றும் விகிதாசார அடிப்படை ஆகியவற்றுக்கு இடையில் 60 இற்கு 40 என்ற சதவிகித அடிப்படை காணப்படுவதுடன், இம்முறை பெண்கள் பிரதிநிதித்துவமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள வேண்டும்.   

அதற்கமைய, குறித்த வட்டாரத்தின் அனைத்து வாக்குகளையும் எண்ணிய பிறகு, அதில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியின் வேட்பாளர் அல்லது (இரட்டை அங்கத்தவர் வட்டாரம் என்றால்) வேட்பாளர்கள், அந்த வட்டாரத்தில் இருந்து, குறித்த உள்ளூராட்சி சபையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகத் தெரிவு செய்யப்படுவார்.   

விகிதாசாரத் தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தின், மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையை, அச் சபைக்குரிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன்மூலம் நியம அல்லது தீர்மான வாக்கு எண்ணிக்கை என்னவென்பது கணிக்கப்படும்.   

அதன்பின், ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது சுயேட்சைக் குழுவானது அந்த உள்ளூராட்சி சபையின் கீழுள்ள அனைத்து வட்டாரங்களிலும் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் மேற்படி நியம அல்லது தீர்மான வாக்கு எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு உரித்தான மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.   

சமகாலத்தில், எந்தெந்த வட்டாரங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது, மேற்குறிப்பிட்டவாறு வட்டார வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, அந்த உள்ளூராட்சி சபைக்கு, அந்தக் கட்சி சார்பாகத் தெரிவான மொத்த உறுப்பினர்களில் இருந்து, அந்தந்த வட்டாரங்களுக்கு உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள்.   

அதாவது, கணித சமன்பாட்டின்படி, ஒரு கட்சி 10 உறுப்பினர்களைப் பெற்று, ஆறு வட்டாரங்களில் வெற்றி பெற்றிருந்தால், அந்த ஆறு வட்டாரங்களின் வேட்பாளர்களுக்கும் வட்டார முறைமை அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். மீதமுள்ள நான்கு பேரும் விகிதாரசார முறைப்படி, பொதுப் பட்டியலில் இருந்து, அதற்கான நடைமுறைக்கு அமைவாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.   

அதேபோன்று, அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், பல்-அங்கத்தவர் வட்டாரங்களாயின், வெற்றிபெற்ற கட்சிக்கே இரண்டாவது ஆசனமும் கிடைக்கும்.   

இதேபோன்று, பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிட்ட வீதத்தில் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு கணித சூத்திரம் உள்ளது. இது ஒரு கட்சிக்கானதாக அல்லாமல், குறிப்பிட்ட சபைக்கானதாகவே அமையும் என்பது கவனிப்புக்குரியது. இதைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். 

ஆனால், ஒரு சபைக்கு இத்தனை உறுப்பினர்கள்தான் தெரிவு செய்யப்படுவார்கள் என்று, அறுதியிட்டுக் கூற முடியாது. ஏனெனில், கணித சூத்திரத்தின் பிரகாரம், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றினால் அதிகரிக்கச் சாத்தியமுள்ளது. இதை ‘ஓவர் ஹேங்க்’ என்று சொல்வார்கள்.   

2011 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடெங்கும்  405,279 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 
2015 நாடாளுமன்றத் தேர்தலில், ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 123 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதில் தபால்மூல வாக்காளர்களான அரச உத்தியோகத்தர்களின் ஆயிரக்கணக்கான வாக்குகளும் உள்ளடக்கம். எனவே, மிகவும் சரியாகச் சிந்தித்து, செல்லுபடியாகும் தன்மையுடன் பொது மக்கள் வாக்களிப்பது இன்றியமையாதது.   

அந்த வகையில், நீண்டகாலம் முஸ்லிம்களும் ஏனைய சமூகங்களும் எதிர்பார்த்திருந்த நாள், நாளை உதயமாகின்றது. இந்த, அரசியல் கலாசாரத்தை மாற்றவேண்டும்; உள்ளூர் அதிகார சபையின் ஆட்சியை மாற்ற வேண்டும்; இந்த அரசியல்வாதிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று நினைத்த  மக்கள், இந்த வாக்களிப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   

இது உள்ளூர் ‘அரசியல் மேய்ப்பர்’களைத் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பமாகும். ஆடுகள், பிழையான மேய்ப்பர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அதன்பிறகு அழுது புலம்பி ஆகப் போவது எதுவுமில்லை.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-தலைவிதியை-தீர்மானிக்கப்-போகும்-புள்ளடி/91-211362

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.