Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்ப்பின் கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பின் கொண்டாட்டம்

*

 

26169253_1042522049232104_6715334454019532809_n.jpg

 

 

"The Casteless collective " நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த "குரங்கன்" சுயாதீன இசைக்குழுவின் 'தென்மா' தான் இந்த புதிய குழுவினதும் இசைத்தயாரிப்பைச் செய்கிறார். பா. ரஞ்சித் தனது நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்தும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நிகழ்வு. அரசியல் மயப்படுத்தல் தான் இந்த இசையின் ஒரே குரல். சாதியின் பெயரில் தங்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அநீதிகளின் கதைகளை அவர்கள் பாடுகிறார்கள். கொண்டாட்டம் ஒரு எதிர்ப்பு வடிவமாக எப்படி இயங்க முடியுமென்பதற்கு இதுவொரு முன்னோடியான உதாரணம்.

 

ஒரு வகைப்பட்ட  கானாப் பாடல்களையே தொடர்ச்சியாக தமிழ்ச்சினிமா எங்களுக்குப் பழக்கப்படுத்தியிருக்கிறது. அது அநேகம் ஒரு நண்பனின் காதலுக்காக ஆறுதல் சொல்வதும்,  குத்துப்பாடலுக்கொரு மெட்டுப்போலவும் வந்து பதிந்திருக்கிறது. ரஞ்சித்தின் வருகை அதனை மாற்றியது. கானாவை, தான் நம்பும் மாற்றத்தின் இசையாய் கருத்தியல் வடிவில்  முன்வைக்க அவரால் முடிந்திருக்கிறது. அவருடைய படங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறை. அதன் கொண்டாட்டம். அதன் துக்கம். அதன் கலகம் என்பன எழுச்சியான மனநிலையையும் ஆரோக்கியமான மாற்றத்தையும் நோக்கி ஒடுக்கப்பட்ட மக்களை நகர்த்தும் என்று நம்புகிறேன். அறிவின் மூலமான சமூக மாற்றத்தைக் கோரும் ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தனது வெளிச்சத்தை இந்த இசைக்குழுவிற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவது அதனை ஆழமான மற்றும் அகலமான அளவில் சமூகத்திற்குள் கொண்டு சேர்க்கும்.

 

மகிழ்ச்சி ரஞ்சித்.      

 

26168558_1044026355748340_1050892418492191722_n.jpg

 

 

*

 

பல மாதங்களிற்கு முன்பு கேரளாவில் ஒரு பொலிஸ் நிலையம் அருகே வைத்து நீளமான தாடி, தலைமுடி வைத்திருந்தமைக்காக 'தீவிரவாதி' என்று விசாரணை செய்யப்பட்ட  சுயாதீன இசைக்குழுவொன்றின் பாடகர் ஒருவர், அடுத்த நாள் அந்தப் பொலிஸ் நிலையத்திற்கெதிரே வந்தொரு பாடலைப் பாடினார்.

 

"நாங்கள் மீசை வளர்ப்போம்

தாடி வளர்ப்போம் முழங்கால் தொடும் வரை முடியும் வளர்ப்போம்

அது எங்கள் இஷ்டம்.

 

எங்கள் உடம்பில் உள்ள மயிரைக் கூட உங்களுக்கா எழுதித்தர வேண்டும்.

உங்கள் கையில் பாசிசக் கோல் உண்டு.

 

ஆனால் எங்கள் தெருக்களில்

எங்கள் வயல்களில் எப்படி நடப்பதென்று

எங்களுக்குத் தெரியும்"

 

இது தான் அதன் சாரமான வரிகள். திரும்பத் திரும்ப பல நூறு முறை அந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன். மனித சுதந்திரம் தான் எத்தனை பெரியது? அதன் ஒவ்வொரு வரியும் அதிகாரத்திற்கெதிரான உயிரின் கலகமே. விடுதலை அதன் மைய இழை.

 

*

ஈழத்தில், அதுவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சாதியென்பது உள்ளோடும் விஷம். நான் முதல் முறையாக 'ஒருகைப்பறை' பழகிய போது, சாகாத அந்த நோயை மறுபடியும் நேரடியாகச் சந்தித்தேன். புத்தர் கலைக்குழு "மணிமாறன்" அண்ணன் தான் என் "பறை" ஆசான்.

 

"தங்கச்சிய என்ன பறையனுக்கே கட்டிக்குடுக்கப் போறாய்' "இவனுக்கேன் தேவையில்லாத வேலை" "பறையை வீட்ட வச்சிருந்தா ஆக்கள் என்ன நினைப்பினம்" என்று சொந்தக்காரர்கள், அப்பாவுக்கு வந்து குறை சொல்லிக்கொண்டேயிருந்தனர். 'அவன் என்ன செய்யிறான் எண்டு அவனுக்குத் தெரியும்" என்று அப்பா சொன்ன பின் தான் அடங்கினார்கள். இவ்வளவு காலமும் இவர்கள் எந்தப் புற்றுக்குள் ஒளிந்திருந்தார்கள்.

 

ஈழத்தில், எவ்வளவு தான் சாதி இல்லையென்று நாம் வேட்டியைக் கட்டி மறைத்தாலும், அதன் அரூப நிழல்கள் எல்லா மனங்களிலும் விழுந்து கொண்டுதானிருக்கிறது. அதன் சமீபத்தைய உதாரணம், மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றும் போராட்டம் வலுப்பெற்று எழுந்த போது, நகரமெங்கும் சாதித்தடித்தனங்கள் இரவில் கள்வர்கள் போல் வந்து சேர்ந்தன. 'மக்கள் முதலில் வந்தார்களா? மயானம் முதலில் வந்ததா?" என்று பட்டி மன்றம் நடத்தினார்கள். சரி, அவர்களின் மொழியிலேயே கேட்போம் என்று "மக்கள் முக்கியமா ? மயானம் முக்கியமா" என்று கேட்டோம். அதற்கு வாயை மூடிக்கொண்டு மறுபடியும் யார் முதலில் வந்ததென்று வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தாத்தாமார்களின் சொகுசுத்தனங்களையும் அவர்கள் மற்றவர்களை உறிஞ்சி உருவாக்கிவைத்திருக்கும்  வாழ்க்கை முறையையும் கைவிடமுடியாத பேரர்கள் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாயே மதிக்க மாட்டார்கள்.

 

திருநெல்வேலியில் உள்ள பாற்பண்ணையிலும்  மயானப் பிரச்சினை உள்ளது. இங்கேயும் கூலித்தொழிலாளிகளும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்களுமே அதிகம். இது எந்தவகையிலான ஒத்தத்தன்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், யாழ்ப்பாணத்தின்  பெரும்பாலான சிறுநகரங்களில் ஆதிக்க சாதியினரை மையமாகக் கொண்டு வெவ்வேறு சாதியினர் அடுக்கடுக்காக இருப்பர்.  உதாரணத்திற்கு திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால், அதன் மையமான சந்தியில்  வெள்ளாளர்கள் உள்ளனர். மையத்திலிருந்து வெளிநோக்கிச் சென்றால் தச்சர்கள், கொல்லர்கள் மற்றும் இன்ன பிற இடைநிலைச்சாதியினர் உள்ளனர்.  அதனைத்தாண்டி அதன் மையமான இடத்திலிருந்தொரு மூலையில் பாற்பண்ணையில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த அடுக்கின் அமைவுகள் தற்செயலானவையல்ல. இது சாதி அடிப்படையிலேயே உருவாகிய நகரம். இதன் இறுக்கங்களும் பழைய நடைமுறைகளும் குறைந்திருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் வாழ்கின்றன.

 

பாற்பண்ணையிலிருக்கும் அதிகமான இளைஞர்கள் திருநெல்வேலிச் சந்தியில்  மூட்டை தூக்குகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள், கூலித்தொழில் செய்கிறார்கள், சைக்கிள் கடையில் வேலை செய்கிறார்கள், சீவல் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இவை எல்லாம் ஏதோ இயல்பாக நடப்பதென்று நாம் சொல்லிக் கடந்து விட முடியாது. நமது மக்களின் இந்த நிலைக்கு வலுவான வரலாற்றுக்கு காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையில் இன்று பாதிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் விடயங்கள் எவையும் தானாய் நிகழ்ந்தவையில்லை என்றும் இந்த நிலை மாறவேண்டுமானால் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்றும் புரிந்துகொள்ளலாம்.

 

இந்த இடத்தில் தான் கடந்த காலப் போராட்டங்களைப் பார்க்கிறேன். இடதுசாரி இயக்களினாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அமைப்புகளாலும் எவ்வளவு ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட காலமிது. நாம் வரலாறு தெரியாதவர்களாக, அரசியலற்றவர்களாக அல்லது வெற்றுக் கோஷ அரசியலை முன்வைப்பவர்களாக இருக்க முடியாது.

 

இன்றும் யாழ்ப்பாணத்தின் கரையோர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கொடுமையாகத் தான் உள்ளது. குப்பைகளுக்கிடையிலும் மயானங்களுக்கிடையிலும் ஒரு வீடு.

 

நான் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்த போது குருநகருக்கு ஒவ்வொருநாளும் போவேன், தார்ச் சாலையில் வலை காய வைத்திருப்பார்கள். அநேகமான காலைகளில் யாரவது இரண்டு பெண்கள் சத்தமாகச் சண்டை பிடித்தபடியிருப்பார்கள். நடக்கும் சண்டையைச் சுற்றி பெடியள் சிரிப்பார்கள். குழந்தைகள் காலுக்கலும் கையுக்காலும் ஓடித்திரிவார்கள். பிறகு, மத்தியானம் திரும்பிப் போகும் போது அதே இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பேன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பள்ளிக்கூடம் முடிய வரும் சின்னப் பெடியள் புட் போலை உதைத்துக்கொண்டு மழை நீரில் நீந்துவார்கள். அடுக்குமாடிக்குடியிருப்புகள். ஒரே கலர் வீடுகள். புது வருஷம், விஜய், அஜித் பிறந்த நாள் எல்லாம் களை கட்டும். பெரும்பாலான வீடுகளின் முன் பெரிய பொக்ஸ் வைத்துப் பாட்டுப்போடுவார்கள். அவர்களின் ரசனை வித்தியாசமானது. எப்பொழுதும் 'கும் கும்மென்று' அதிரும் பாடல்களால் இரவையும் பகலையும் தெறிக்க விடுவார்கள்.    

 

இப்படியான ஊரில், அந்தச் சூழலிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் தான் அவர்கள் படிப்பார்கள், அதற்கு மேல் கொஞ்சம் அதிகம் படித்து முன்னேறுபவர்கள் குறைவு. அப்படியே கல்வி ரீதியில் முன்னுக்கு வருபவர்கள், தமது சமூக அடையாளத்தை மறைத்து, அந்த  சமூகத்தைக் கைவிட்டு தங்களை மேன்நிலையாக்கம் செய்கின்றனர்.

 

சமூக விடுதலையென்பது, எல்லா வகையான தளைகளிலிருந்தும் விடுதலை பெறுவது தான். சமூக நீதியுள்ள ஒரு சமூகத்தைக் கனவு காணும் ஈழத்தமிழர்களிடையில் ஒரு அம்பேத்கார் உருவாகவில்லையென்பது எத்தனை பெரிய இழப்பு. தமிழக சாதிய நிலவரங்களையும் அதன் கொடுமைகளையும் போல் இங்கே கொடுமைகள் சற்றுக் குறைவென்றாலும் இங்கிருப்பது மட்டும் யோக்கியமான நிலவரமல்ல. படித்தவொரு சமூகம் இதன் கட்டுகளிலிருந்து விழித்தெழும் காலம் வர வேண்டும்.          

 

*

 

26168984_1044027759081533_762983221261857572_n.jpg

 

 

"The Casteless collective" நிகழ்ச்சியை முழுவதும் பார்த்த போது, ஒரே நேரத்தில் ஒடுக்கப்படும் மக்களின் துயரின் குரலாகவும் எதிர்ப்பின் கொண்டாட்டமாகவும் நிகழ்வு மாறியிருந்தது.

 

அதிகாரத்திற்கெதிரானதும் ஒடுக்குதலுக்கெதிரானதும் குரலில் சில வித்தியாசங்கள் உண்டு. உதாரணம் மத்தியதரவர்க்க குரலில் சமூக மாற்றத்தையும் சுயசிந்தனையையும் பாடுதல், குரங்கன் இசைக்குழு எனக்கு மிகப்பிடித்தமானதொரு குழு. ஆனால் அவர்களின் கருத்தியல் அல்லது குரலின் 'தன்னிலை' என்பது எதிர்ப்பின் குரலில்லை. அவை இந்த சமூகத்தில் இருக்கும் சுயசிந்தனையின்மையை  தொடர்ந்து கேலி செய்யும் அல்லது சிந்திக்கச் சொல்லும் பாடல்கள்.

 

" ஊரே கைகொட்டி சிரிச்சா நானும் கைகொட்டி சிரிப்பன்

ஊரே கெணத்துக்குள்ள குதிச்சா நானும் கண்ணை மூடி குதிப்பன்

 

சுயமா உட்க்கார்ந்து யோசிக்க யாருக்கு நேரமிருக்கு..."

 

கேலியும் கேள்வியுமாய், மத்தியதரவர்க்கத்துடன் தனது உரையாடலை நிகழ்த்துகிறது இந்தப் பாடல். "தண்ணி இது தான்...", " சுதந்திரம் ஒரு டப்பா, இந்த நாலு சுவத்துக்குள்ள..." போன்ற பாடல்களிலும் தத்துவார்த்த மற்றும் மத்தியதர வர்க்க வாழ்வின் அலைச்சல்களுக்குள் உள்ள சுயசிந்தனையின்மையையே தொடர்ந்தும் 'கேபர் வாசுகி' பாடுகிறார்.

 

இன்னொரு வெளியில், விளிம்பு நிலை மக்களின் அசலான குரல்கள் பாடும் போது, அந்தக் கதைக்கும்  அந்த நியாயத்திற்கும் அந்தக் கேள்விக்கும் இருக்கும் எடை என்பது அவர்கள் தலைமுறை தலைமுறையாய் அனுபவித்த துயர். ஒவ்வொரு பாடலிலும் நெஞ்சு அலைந்து அமிழ்ந்தது.

 

"காலு ரூபா துட்டுன்னாலும் கவர்மண்டு துட்டுன்னு

ஊரு புல்லா சுத்துறேண்டா பீய வாரி கொட்டின்னு

மக்கிப்போன குப்பைன்னாலும் வாருவேண்டா டக்குன்னு

அப்பத்தாண்டா சொல்லுவீங்க நீங்க இத சிட்டின்னு"

 

கைகளால் மலமள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்தப் பாடலும், அதற்கு நிகழ்ச்சியில் அவர்கள் வைக்கும் முன்சொல்லும் முக்கியமானவை. திவ்விய பாரதியின் "கக்கூஸ்" ஆவணப்படம் உருவாக்கிய பாதிப்பு மிக ஆழமானது. முகத்தில் சாட்டையால் அடித்து, மனிதர்களை கையால் மலமள்ள விட்டுவிட்டு  நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டது அது. பாடலைக் கேட்கும் போது அந்த ஆவணப்படத்தில் வந்த முகங்களும் அவர்களின் கதைகளும் கண்ணீரின் ஊடே கலைந்து மங்கலாகத் தோன்றியது.

 

(யாழ்ப்பாணத்திலும் வீதி கூட்டும், துப்பரவு செய்யும் தொழிலாளர்களில் பெரும்பானமையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே. அவர்களின் வாழ்க்கையை நாம் என்றாவது பார்க்கிறோமோ? ஏன் எங்களால் பார்க்க முடியவில்லை. ஏன் எங்களால் அவர்களின் குரலைக் கேட்க முடியவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.)

 

 

விளிம்பு நிலை மக்களின் காதல், ஏற்கனவே சமூகத்தில் உள்ள புனித பிம்பங்களுக்கு மாற்றானது. ஆனால் புதிய குணம், புதிய பரவசம். பத்திரிகையாளர் சந்திப்பில் அறிமுகப் பாடல்கள் துணுக்குகளாகப் பாடியிருந்தனர். அதில் இசைவாணியின் இந்தப் பாட்டை இருபது முறை திரும்பத் திரும்பக் கேட்டு விட்டேன். துள்ளும் உயிரின் காதல் அது.

 

26196149_1044027915748184_4044377453958183526_n.jpg

 

 

"ஏ கருப்புக்குல்லா

கமருக்கட்டு

சிட்டியில உன்னைத் தொட்டு

உதட்டழகி ஒட்டிப்போனன் உன்னால

 

ஏ பாயும் புலி ; பதுங்கும் நாகம்

வழியவிட்டா ஒதுங்கிப் போகும்

என்னென்னமோ பண்ணுறியே தன்னால"

 

இசைவாணி போன்று இன்னும் வேறு பெண்பாடகர்கள் இசைக்குழுவிற்குள் உள்ளீர்க்கப்படல் வேண்டும். பெண் கானாப் பாடகர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதென்றார் ரஞ்சித். தமிழ் சமூகத்தில் பெண்கள் வெளியே சென்று இரவுகளில் பாடல்கள் பாடுவதில் உள்ள சிரமங்களைப் பற்றி ஒரு நேர்காணலில் இசைவாணியும் குறிப்பிட்டிருந்தார்.      

 

ஆரம்பத்தில் குறிப்பிட்ட "பண்பாட்டு அரசியல் நிகழ்வு" என்பதனை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். அரசியல் விழிப்புள்ள கலை அல்லது நேர்மையான அரசியலை முன் வைக்கப் பயன்படுத்தும் கலையென்பவற்றுக்கு, அறிதலின் கொண்டாட்டம் இருக்கிறது. அது ஒரே நேரத்தில் கொண்டாட்டமாயும் எதிர்ப்பின் வடிவமாயும் இருக்கும். இதனை "கார்னிவெலஸ்க் " என்ற அறிவார்ந்த எதிர்ப்பு வடிவத்துடன்  தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தை எழுச்சி கார்னிவெலஸ்க்கின் அத்தனை தன்மையும் பொருந்தியவொரு நிகழ்வு. இந்த சுயாதீன இசைக்குழு உருவாக்கம்  "அரசியல்" என்ற தெளிவான வடிவத்தை முன்னிறுத்திய அறிவார்ந்த / விழிப்புற்ற ஒரு உருவாக்கம். பாடல்களில் தொனிக்கும் கேலியும் அதிகார எதிர்ப்பும் கார்னிவெலஸ்க்கின் கூறுகள் தான்.

 

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற மாபெரும் மானுடக் கனவை நோக்கியே அனைத்துப் பேரியக்கங்களும் சமூக அறங்கள் பற்றிய உரையாடலும் நகர்கின்றன. இந்த மூன்றும் இந்த இசைக்குழுவின் பாடல்களில் வெளிப்பட்டு நகர்ந்து ஒவ்வொருவரையும் சென்று தழுவிக்கொள்வதை பார்க்க முடிகிறது.

 

26195304_1045424535608522_1699951905896223016_n.jpg

 

 

"நாங்க பிளாட்பாரம் எங்க நிலம எப்ப மாறும்", "வா சொன்ன வட சென்னை " "கறி..." போன்ற பாடல்கள் அற்புதங்கள். நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு நகரும் போது அநேகம் பேர், கதிரையில் இருந்து கை தட்டிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் தான் வளர்ந்தவர்கள் பலர் ஆடத் தொடங்கினர். ஆனால் சிறுவர்கள், தொடக்கம் முதலே இசைக்கு ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு தாய் தன்னை மறந்து அந்தக் கூட்டத்தில் முகமெல்லாம் சிரிப்பாக ஏதோவொரு காலத்தின் அந்தத்திற்குச் சென்று ஆடிக்கொண்டிருந்தார். பறை, தோலில் பிறந்த இசை. இடையில், ஒரு பாடலுக்கு தொலைபேசியில் உள்ள விளக்குகளை ஒளிரவிட்டுக் கைகளை அசைக்கும்படி கேட்டனர். மெரினாவில் நிகழ்ந்த அந்த ஒளியலைவரிசை ஒரு எதிர்ப்பின் வடிவம் என்றால், இங்கு நிகழ்ந்த ஒளியசைப்பு, ஏற்பின் வடிவம். அவர்களின் கதைகளையும் அவர்களின் சமூக நீதியையும் ஏற்றுக்கொண்டதற்கான குறியீட்டு அசைவு. சமூகத்தின் பேரிருளிற்குள் விழும் வெளிச்சத்தின் கீற்றுகள்.    

 

கிரிஷாந்

 

 

 

http://kirisanthworks.blogspot.co.uk/2018/02/blog-post_10.html?m=1

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.