Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

80 சீட் ஜெயிப்போம்! - எடப்பாடி தடாலடி

Featured Replies

மிஸ்டர் கழுகு: 80 சீட் ஜெயிப்போம்! - எடப்பாடி தடாலடி

 
 

 

p4d_1521544116.jpg

ழுகார் வந்தபோது, நம் கையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் இருந்தது. ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நாடெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்’, ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஆர்வமுடன் இணையும் மாற்றுக் கட்சியினர்’ என்ற தலைப்புச் செய்திகளைப் பார்த்துச் சிரித்த கழுகார், ‘‘தங்களைத் தாங்களே உற்சாக வார்த்தைகளைச் சொல்லி மெச்சிக் கொள்கிறார்கள் போல!” என்றார். தொடர்ந்து பேசிய கழுகார், ‘‘ஆர்.கே.நகர் அசத்தல் வெற்றி மூலம் அமித் ஷாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த  டி.டி.வி. தினகரன்,  தனது சொந்தக் கட்சிக்குள் எழுந்திருக்கும் கலகக் குரல்களைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் என்பதுதான் உண்மை” என்றார்.

“அப்படியா?”

“அ.ம.மு.க-வைத் தொடங்குவதற்கு முன்பு சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சென்றார் தினகரன். அந்தச் சந்திப்பு சுமுகமானதாக இல்லையாம். ‘பந்தக்கால் நட்டுவிட்டு வந்து என்னிடம் பர்மிஷன் கேட்கிறாயா?’ என்று கடுகடுத்தாராம் சசிகலா. ‘அ.தி.மு.க-வும் இரட்டை இலைச் சின்னமும் நமக்குக் கிடைக்காத சூழலில், புதிதாகக் கட்சியோ அமைப்போ தொடங்கினால், அதை அ.தி.மு.க-வுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரான செயலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்’ என்ற எண்ணம்தான் சசிகலாவின் கோபத்துக்குக் காரணமாம்.”

“ஓஹோ!”

“சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தினகரன் பற்றிய நெகடிவ் செய்திகள்தான் அதிகம் போய்ச் சேர்கிறதாம். திவாகரன், அவரின் மகன் ஜெயானந்த், இளவரசியின் மகன் விவேக், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோர் தினகரனுக்கு எதிரான விஷயங்களை சசிகலா காதில் ஓதிக்கொண்டே இருக்கிறார்கள். அதுதான், சசிகலாவின் கோபத்துக்குக் காரணமாம். ‘கட்சியில் சொந்தக்காரர்கள் ஆதிக்கம் இருக்கக்கூடாது’ என்று தினகரன் முடிவெடுத்திருந்தார். அதனால், இவர்களெல்லாம் என்ன செய்வார்கள் என்பது தினகரனுக்குத் தெரியும். ஆனால், தன் சகாக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் தினகரனை  அதிர்ச்சியடைய வைத்துள்ளன.”

“நாஞ்சில் சம்பத் விலகியதை வைத்துச் சொல்கிறீரா?”

p4e_1521544135.jpg

“நாஞ்சில் சம்பத்தைத் தனக்கு நெருக்கமான பட்டியலில் தினகரன் வைத்திருக்கவில்லை. தன் கட்சிக்குக் கிடைத்த பிரசாரச் செயலாளர் என்ற அளவில்தான் நாஞ்சில் சம்பத்தை அவர் பார்த்தார். நாஞ்சில் சம்பத்தும் இறங்கி வந்து யாருடனும் ஒட்ட மாட்டார். அதனால், சம்பத் போனதையும் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டாராம் தினகரன்!”

“அப்படியானால் வேறு யார்?”

“ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் இருவரும் ஒன்றுசேர்ந்த பிறகு தனி ஆளாக நின்றுகொண்டிருந்த தினகரனுக்கு, ஆதரவாக நின்ற இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கு இப்போது கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக் கிளம்பியுள்ளது. ‘அமைப்பு உருவாக்கம், கொடி வடிவம், சின்னம் என அனைத்து விஷயங்களிலும் தினகரன் தன்னிச்சையாகவே முடிவெடுத்து செயல்படுகிறார். மேலூர் கூட்டத்துக்கு முந்தைய நாள்தான், முக்கியத் தலைவர்கள் சிலருக்கு விழாவில் கலந்துகொள்ளவே அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கட்சியின் சீனியர்களான அவர்களை, மேடையிலும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் பேசிமுடிக்குமாறு யார் யாரோ கட்டளை யிட்டார்கள். சுருக்கமாகச் சொல்வதானால், கிராமத்துப் பண்ணையார் முறைதான் கட்சிக்குள் நிலவுகிறது’ என்று நொந்து புலம்புகிறார்கள். இதே பிரச்னையால்தான், முன்பு அமைச்சர்கள் சிலரும் தினகரனுக்கு எதிராக மாறினார்கள். தினகரனும் எடப்பாடியும் ஒற்றுமையாக இருந்த காலத்தில், அமைச்சர்கள் சிலர் தினகரன் வீட்டுக்குச் சென்றார்கள். ஒரே ஒரு சோபாவில் தினகரன் உட்கார்ந்திருக்க... அமைச்சர்கள் அனைவரும் நிற்க வைக்கப்பட்டார்கள். அதுதான் அனைத்து அமைச்சர் களையும் தினகரனுக்கு எதிராகத் திரும்ப வைத்தது. அதுதான் இப்போதும் நடக்கிறதாம்.”

‘‘அடடா!”

‘‘எதுவாக இருந்தாலும் தினகரனும் அவர் மனைவியுமே முடிவுசெய்து, அதை மர்மமாக வைத்திருந்து செயல்படுத்துகிறார்கள் என்பதுதான் தினகரனைச் சுற்றிலும் இருக்கும் சீனியர்களின் வருத்தமாக உள்ளது. தங்க தமிழ்ச்செல்வனுக்கே இந்த வருத்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் விரைவில் சசிகலாவைச் சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். குடும்பத்தினரின் நெருக்கடி, சீனியர்களின் வருத்தங்கள் ஆகியவைச் சேர்ந்து தினகரனைக் குழப்பமடைய வைத்துள்ளது என்கிறார்கள்.”

‘‘தினகரனின் மேலூர் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் உசுப்பி விட்டுள்ளதே?’’

‘‘ஆம். அதனால்தான் அவர் மார்ச் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை தலைமைக் கழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஆவேசமாக முழங்கினார். ‘முன்பெல்லாம் ஒரு கான்ட்ராக்டை விடுவதாக இருந்தால், சசிகலா குடும்பத்திலிருந்து பல துண்டுச்சீட்டுகள் அமைச்சர்களுக்கு வரும். ‘அவருக்குக் கொடுங்கள்’, ‘இவருக்கு கான்ட்ராக்டை விடுங்கள்’ என ஒரே விஷயத்துக்கு நான்கைந்து சொந்தங்கள் துண்டுச்சீட்டு கொடுப்பார்கள். அந்தத் துண்டுச்சீட்டுத் தொந்தரவை நான்தான் ஒழித்தேன். இப்போது அமைச்சர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்’ என்றாராம் எடப்பாடி.’’

‘‘எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் வேறு என்ன விசேஷம்?’’

‘‘எல்லா எம்.எல்.ஏ-க்களுக்கும் நீண்ட அட்வைஸ் கொடுத்தாராம். ‘அ.தி.மு.க வேட்பாளராக யார் நின்றாலும் ஜெயிக்கிறமாதிரி எஸ்.பி.வேலுமணி, தன் தொண்டாமுத்தூர் தொகுதியை வைத்திருக்கிறார். அதுபோன்றே விஜயபாஸ்கர், தன் விராலிமலைத் தொகுதியை வைத்திருக்கிறார். திருமயம் தொகுதியில் 766 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற வைரமுத்து, எப்போது தேர்தல் வந்தாலும் நம் வேட்பாளராக ஜெயிப்பார். இப்படி உங்கள் தொகுதியை ஆக்குவதற்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், செய்து தருகிறேன். அடுத்த தேர்தலிலும் நாம்தான் மீண்டும் ஜெயித்து ஆட்சி அமைக்கப் போகிறோம். உங்கள் எல்லோருக்கும் சீட் உண்டு. ஜெயிக்கிற மாதிரி தொகுதியை வளப்படுத்துங்கள். நிச்சயம் 80 சீட் ஜெயிப்போம். அப்படி வந்தாலே ஆட்சி நம் கையை விட்டுப் போகாது’ என்று தடாலடியாகச் சொன்னாராம் எடப்பாடி. அவரின் நம்பிக்கையான பேச்சைப் பலரும் பிரமிப்புடன் பார்த்தார்களாம்!’’ 

‘‘சசிகலாவின் கணவர் நடராசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே?’’

p4c_1521544165.jpg

‘‘ஆம். 2017 அக்டோபரில் நடராசனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. கல்லீரல், கிட்னி என இரண்டு உறுப்புகளும் நடராசனுக்கு மாற்றப்பட்டன. அப்போது சசிகலா பரோலில் வந்து நடராசனைப் பார்த்துவிட்டுச் சென்றார். அதன்பிறகு நடராசன் தன் தம்பி ராமச்சந்திரனுக்குச் சொந்தமான போரூர் ஃப்ளாட்டில் தங்கியிருந்தார். அதன்பின்னர், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்தார். இந்த பிப்ரவரி மாதத்தில்தான் தனது பெசன்ட் நகர் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்தபடி சில நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்தார். நண்பர்கள் பலரையும் நேரில் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போதெல்லாம் நலமாகத்தான் இருந்தார்.’’
 
‘‘பிறகு என்ன ஆனது?’’

‘‘டாக்டர்கள் சொன்ன அறிவுரையை நடராசன் முறையாகப் பின்பற்றவில்லை எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இதுபோல உறுப்புமாற்று அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு நோய்த் தொற்றுப் பிரச்னை எளிதில் ஏற்படும். அது மற்ற உறுப்புகளையும் பாதித்து ஒவ்வொன்றாகச் செயலிழக்க வைத்துவிடும். இந்த விஷயத்தில் நடராசன் கவனமாக இருக்கவில்லை என்கிறார்கள். அதேசமயம் கல்லீரலிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால், கடந்த சில நாள்களாக நினைவு தவறுவதும், கை-கால்கள் செயலிழப்பதுமாக இருந்தது. 16-ம் தேதி மாலை லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து குளோபல் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் தான் இருக்கிறார்.’’

p4b_1521544195.jpg

‘‘அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பாவுக்குத் திருமணம் என ஓர் அழைப்பிதழ் சுற்றிக் கொண்டிருக்கிறதே?’’

‘‘ஆம். அந்த அழைப்பிதழைப் பார்த்துவிட்டு, அவருக்குப் பலரும் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். அதற்கு அவரும் ‘தேங்க்ஸ்’ எனப் பதில் அனுப்பியுள்ளார்.’’

‘‘அதுசரி. அழைப்பிதழில் மணமகன் பெயர் ‘ராமசாமி’ எனப் போட்டிருந்ததே... யார் அவர்?’’

‘‘ஜெயலலிதா இறந்தபிறகு, அவரின் உடன்பிறவாத் தோழி சசிகலா, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, இந்த சசிகலா புஷ்பாவால் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த நேரத்தில், அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதை விசாரணைக்குக் கொண்டு வந்தவர் இந்த ராமசாமிதான். அதன் பின்னணியில் சில நாடார் சங்கப் பிரமுகர்களும் இருந்தனர். சசிகலா புஷ்பாவுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் பெற்றுத் தந்தவர். நீதிமன்ற வட்டாரங்களில் ‘ராமசாமி ஐயர்’ என்று அழைக்கப்படுவார் இவர். அப்போதே இவர் சசிகலா புஷ்பாவுக்கு உதவியாக இருந்தார். ராமசாமியின் முதல் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மகள் மட்டும் உண்டு. டெல்லியில் ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டர் ஒன்றும் நடத்தி வருகிறார்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: கே.ராஜசேகரன், வி.ஸ்ரீனிவாசுலு


p4_1521544097.jpg

dot_1521544065.jpg ‘‘ஹூ இஸ் திஸ் கே.சி.பழனிசாமி?’’ - தன்னை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கேட்டார். ‘காவிரிப் பிரச்னையில் கோர்ட் சொன்னபடி மத்திய அரசு நடந்துகொள்ளாவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கும்’ என்கிற ரீதியில் டி.வி ஒன்றுக்கு கே.சி.பழனிசாமி சில மணி நேரங்களுக்கு முன்புதான் பேட்டி கொடுத்திருந்தார். வெங்கய்ய நாயுடு கேட்டதும் கே.சி.பழனிசாமியை அ.தி.மு.க-வை விட்டே நீக்கிவிட்டார்கள். 

dot_1521544065.jpg எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்தும் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் தொடர்பான பணப் பரிமாற்ற விஷயங்களை மத்திய ரெவின்யூ இன்டலிஜென்ஸ் பிரிவு கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிக்கிறது. நாளிதழ் சந்தா என்கிற பெயரில் விழுப்புரம் சார்பாக ரூ.75 லட்சம், கோவை சார்பாக ரூ.40 லட்சம் என வசூலானதாக விழாக்களில் அறிவிக்கப்படுகிறது. ‘‘யார் சந்தாதாரர், எந்த முறையில் பணம் கட்டினார் என்பதையெல்லாம் விசாரித்தால் சிலர் மாட்டுவார்கள்’’ என்று தினகரன் தரப்பினர் புகார் கிளப்பியிருக்கிறார்கள்.

dot_1521544065.jpg டெல்லியில் அ.தி.மு.க எம்.பி-க்கள் 50 பேரும் கடந்த பத்து நாள்களாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களை இயக்குவது குமார், ஹரி, அருண்மொழித்தேவன் ஆகிய மூன்று எம்.பி-க்கள். இவர்கள் சீனியர் தலைவரான வேணுகோபாலை முன்னிறுத்தி, தினம் தினம் மீடியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனமான முறையில் போராடுகிறார்கள்.

dot_1521544065.jpg ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் எடுப்பதற்கு முன்பு கோவை ரூரல் எஸ்.பி மூர்த்தியைச் சந்தித்து அவருடைய அனுபவங்களைக் கேட்டாராம் நடிகர் கார்த்தி. அவையெல்லாம் படத்தில் காட்சிகளாக வந்தன. படம் ரிலீஸான பிறகு, ராஜஸ்தானில் கொள்ளை கோஷ்டியை பிடிக்கப்போன இடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த பெரியபாண்டியன் வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் கார்த்தி. அங்கு அவர் கேட்டறிந்த விஷயங்கள் கண்ணீரை வரவழைத்தாம். கார்த்தியின் ஐடியாப்படி, பணி நேரத்தில் இறந்துபோகும் போலீஸார் குடும்பங்களுக்கு உதவும் வகையில் டிரஸ்ட் ஒன்று, மார்ச் 18-ம் தேதி கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. விழாவில் நடிகர் சிவகுமாரும் கார்த்தியும் கலந்துகொண்டார்கள். 

dot_1521544065.jpgஅடுத்த தமிழக தலைமைச் செயலாளராக சண்முகத்தைக் கொண்டுவர, சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சில ஐ.ஏ.எஸ்-கள் காய்நகர்த்தி வருகிறார்கள். மோடிக்கு நெருக்கமான ஒரு குஜராத் அதிகாரியைப் பிடித்து, அவர் மூலம் மோடியிடம் சிபாரிசு செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.