Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?

Featured Replies

தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?

 
 

`கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.'

தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?
 

கருணாநிதி

``என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சுதான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி' என்றார். அதனால் அந்தப் பிறந்தநாளை முக்கியமான நாளாகக் கருதுகிறேன்" - 1997-ம் ஆண்டு 'முக்கால் சத வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள். இதில் எந்த வயதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?' என்ற கேள்விக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பதில் இது. 

அதே 44-வது வயதில் தி.மு.க.வின் தலைவராகவும் உயர்ந்தார் கருணாநிதி. அப்படி கருணாநிதி தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது ஆண்டைத் தொட்டுள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில், அதாவது 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். 

 

 

கருணாநிதி - எம்.ஜி.ஆர்.

அண்ணா மறைவுக்குப் பின்னர்...?

தி.மு.க.வை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்த முதல்வர் யார், தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி அப்போது எழுந்தது. காலம் கடத்தினால் பிரச்னைகள் உருவாகும் என்பதால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் கட்சி நிர்வாகிகள் வேகம் காட்டினர். அண்ணாவுக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு இருவர் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டிருந்தது. ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன். மற்றொருவர் கருணாநிதி.

 

 

`கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்துவிட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது; எனக் கட்சியின் மற்ற நிர்வாகிகளும், ஆர்வலர்களும் எண்ணினர். 'பிரச்னைகள் ஏதும் உருவாகிவிடக்கூடாது; ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஆபத்து வந்து விடக்கூடாது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் மத்திய அரசின் நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது," என்ற அச்சம் அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.

 

 

கருணாநிதி - பெரியார்

கருணாநிதியை அண்ணா புகழ்ந்ததே காரணம்?

யார் முதல்வராக வர வேண்டும் என்றபோது பலரால் முன்மொழியப்பட்டார் கருணாநிதி. பெரியாரும், ராஜாஜியும் 'கருணாநிதியே இருக்கட்டும்' எனச் சொன்னதாக சொல்லப்பட்டது.  அண்ணாவே கருணாநிதி பெயரைப் பலமுறை முன்மொழிந்ததே, கருணாநிதிக்கு ஆதரவை ஏற்படுத்தியிருந்தது. 

``வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதினேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” எனத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணா பேசியதும், `தண்டவாளத்தில் தலை வை' என்றாலும், ‘மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி' என்று கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பாராட்டிப் பேசியதும், ``என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் அடைபட்டுக்கிடக்கும் பாளையங்கோட்டை இடந்தான் எனக்கு யாத்திரை தலம்; புனித பூமி’’ என்று பொதுக்கூட்டத்தில் பெருமைபொங்க அண்ணா பேசியதுமே கருணாநிதிக்கு பெரும் ஆதரவை உருவாக்கியதாகவும் சொல்லப்பட்டது. 

அண்ணாவுக்கு இரங்கல் கூட்டம் நடந்து முடிந்த மறுநாள் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பெரும்பான்மையானோர் கருணாநிதியைத் தேர்வு செய்ய முதல்வரானார் கருணாநிதி. பெரும்பான்மையானோர் கருணாநிதியை முதல்வராகத் தேர்வு செய்தாலும், கட்சியில் பிணக்கு உருவாகவே செய்தது. எல்லாம் சரிசெய்த பின்னர் 1969ப்ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. இன்று கட்சியின் தலைவராகப் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறார்.

80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் என  கடந்த நூற்றாண்டில் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, தற்போது ஒரு இயக்கத்தின் தலைவராக 50-வது ஆண்டை துவக்கியதன் மூலம் இன்னொரு சாதனையைப் படைத்திருக்கிறார். 

கருணாநிதி

'பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு இல்லை'

``எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டுச் சென்று விடுவோமா' என எப்போதாவது நினைத்ததுண்டா? என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியிடம் கேட்டபோது அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பதிலாகத் தந்தார். ``சிறுவனாக இருந்தபோது நானும் என் நண்பன் தென்னனும் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்துக்குச் செல்ல முயன்றோம். முக்கால் பகுதி தூரம் கடந்து சென்ற பின்னால் என் நண்பன் தென்னனால் நீந்த முடியவில்லை. 'திரும்பி விடலாம் வா' என என்னை அழைத்தார். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான். அதற்கே செல்லலாம்." எனக்கூறி மைய மண்டபத்தை அடைந்தோம். பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசியல் நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. எல்லாப் பாதைகளிலும் குளிர்ச் சோலையும் இருக்கும். சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல." இதுதான் கருணாநிதி தெரிவித்த பதில். இந்தக் கதையை கருணாநிதி எங்கெல்லாம் சொல்லியிருப்பார். எத்தனை முறை சொல்லியிருப்பார் எனக் கணக்கே இருக்காது. 

அரசியலில் உயரத்தைப் போலவே நெருக்கடிகளையும் சந்தித்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் பிரிவால் 13 ஆண்டுகள் ஆட்சி பீடத்தை இழந்தார். ஆனால், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சி தொண்டர்களைச் சோர்ந்து விடாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். வைகோ பிரிந்து சென்றபோது ஏற்பட்ட நெருக்கடியைக் கூட்டணி மூலம் சமாளித்தார். 2ஜி ஊழல், இலங்கை பிரச்னைகளில் சறுக்கினார். காய்த்த மரங்களே கல்லடிபடுகிறது எனச் சொல்வதுண்டு. எதிலும் நீண்ட காலம் தாக்குப்பிடித்திருப்பதில் உள்ள ஒரு சிக்கலாகவே இதைப்பார்க்க வேண்டும்.

`கருணாநிதியின் அரசியல் எதிரிகள்கூட அவர் பேச்சுக்கு ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்' எனச் சொல்வார்கள். ஈழப்பிரச்னையின்போது அவரைத் திட்டித்தீர்த்த இளம் தலைமுறையினர் கூட, தற்போது உடல்நலமின்றி இருக்கும் கருணாநிதிக்காகக் கலங்குவதை காண முடிகிறது.

ஒரு இயக்கத்தின் தலைவராக 50 ஆண்டைத் தொட்டிருக்கிறார் கருணாநிதி. அவர் இப்போது பேசுவதில்லை. ஆனால், அவரைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம். முதுமை முற்றுகையிட்டு கோபாலபுரம் இல்லத்தில் இருக்கிறார் கருணாநிதி. குளத்தில் நீந்தி மையம் மண்டபம் அடைந்த திருக்குவளை சிறுவனைப்போல.

https://www.vikatan.com/news/coverstory/132176-karunanidhi-completes-49-years-as-dmk-president.html

  • தொடங்கியவர்

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்!

117_thumb.jpg
 
 

தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி  அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

கருணாநிதியின் பொன் விழாவும் ஆச்சர்ய 50 தகவல்களும்!
 

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி தன்னுடைய 95 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலிவுற்று கோபாலபுரம் இல்லத்தில் அப்போதே ஓய்வெடுத்து வந்தபோதிலும், வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதுடன், தன் வாழ்த்துகளையும் தொண்டர்களுக்குத் தெரிவித்தார். 

இந்த நிலையில் தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்று (27.07.2018) 50 ஆண்டுகளாகின்றன. தி.மு.க என்ற மாபெரும் ஓர் இயக்கத்தின் தலைவராக இத்தனை ஆண்டுக்காலம் கருணாநிதி பதவி வகித்த, அவரின் தலைவர் பதவி பொன்விழா ஆண்டையொட்டி  அவரைப் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

* திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் சிறிய கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் கருணாநிதி. 

 

 

* இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த கருணாநிதி, தன் பெயருக்கு முன்னால் 'டி.எம்' (திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி) என்ற இனிஷியலை, சி.என்.அண்ணாதுரை (காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை) வழியைப் பின் பற்றி, நீண்டகாலமாகப் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர், மு.கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார். 

 
 

 

* பள்ளியில் படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் முதன்முதலாக 1939-ம் ஆண்டு கருணாநிதி பேச்சைத் தொடங்கினார். அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து 'மாணவ நேசன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முறையாக அவர் தொடங்கிய இந்தப் பத்திரிகை ஒரு மாத இதழ். அவர் முதல் முறையாகத் தொடங்கிய அமைப்பு 'தமிழ் மாணவர் மன்றம்'. 

* கருணாநிதி எழுதி முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் 'பழனியப்பன்'. தமிழ் மன்றம் நடத்த நிதி திரட்டுவதற்காக, திருவாரூர் பேபி டாக்கீஸில் 1940-ம் ஆண்டு இந்த நாடகத்தை நடத்தினார் அவர்.

அண்ணா கருணாநிதி 

* பேரறிஞர் அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற கருணாநிதியின் கட்டுரை 1942-ம் ஆண்டு வெளிவந்தது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா, 'இளமைப் பலி' எழுதிய கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார். 'நடுவகிடு எடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு..." என அண்ணாவை முதல் சந்திப்பிலேயே தன்வசப்படுத்தினார் கருணாநிதி.

 * `முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942-ம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, 'முரசொலி' என்ற மாத இதழைத் தொடங்கினார். அதில் 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார்.

* திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் 28.5.1944 அன்று கலந்துகொள்ள வந்த பெரியார், முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு 'மிகச் சிறந்த பணி' என்று கருணாநிதியை உச்சி மோந்தார். பெரியாருடன் நட்பு ஏற்பட்ட பின், தொடர்ந்து அவரது இயக்கக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ஈரோட்டிலிருந்து வெளிவந்த `குடியரசு' பத்திரிகையில் கருணாநிதியை உதவி ஆசிரியராகப் பணியில் சேர்த்துக் கொண்டார் பெரியார்.

எம்.ஜி.ஆர் உடன்

* குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபடி, நேரடியாகப் பெரியாரிடம் பயிற்சி பெற்ற கருணாநிதிக்கு இயக்கப் பணி, எழுத்துப் பணி ஆகியவற்றோடு திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. `ராஜகுமாரி' படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்தார்.

* கருணாநிதியின் திரைப்பட வாழ்க்கையில் அவர் கடைசியாக கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர். தொலைக்காட்சி தொடர் 'ராமானுஜர்'. சிவாஜி கணேசன் நடித்த, 'பராசக்தி' திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனம், தென்னிந்திய திரையுலகத்தையே புரட்டிப்போட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் நடிகர்களுக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை தன் கதை, வசனம் மூலம் அளித்தவர் கருணாநிதி. 

* 6 சரித்திர நாவல்களையும் 10 சமூக நாவல்களையும் 21 நாடகங்களையும் கருணாநிதி எழுதியுள்ளார். தி.மு.க-வின் தேர்தல் சின்னமாக உதயசூரியன் கிடைத்தபோது, அதைப் பிரபலப்படுத்துவதற்காகவே, `உதயசூரியன்' என்ற நாடகத்தை எழுதினார். 'இனியவை 20' என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

ஒரு சந்தோஷத் தருணத்தில்...

* முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்களில் தொண்டர்களும் பொதுமக்களும் கருணாநிதியை அன்போடு அழைப்பார்கள். ஆனால், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். கருணாநிதி எழுதிய, `தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதா அவரை முதன்முதலில் 'கலைஞர்' என்று கூறி, அந்தப் பட்டத்தை அளித்தார்.

* எம்.ஜி.ஆருக்கு, `புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை, கருணாநிதி கொடுத்தார். கருணாநிதியை எம்.ஜி.ஆர், `ஆண்டவரே' என்று ஆரம்பகாலங்களில் அழைத்து வந்தார்.

* முதன்முதலாகத் தன்னுடைய 33 வது வயதில் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் கருணாநிதி. 45 வயதில் முதல் அமைச்சர் ஆனார். இதுவரை 13 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். குளித்தலை தொகுதியில் முதலில் வென்றார். தற்போது, சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதி உறுப்பினராக உள்ளார். 1957-ம் ஆண்டிலிருந்து, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருணாநிதி, சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

* மாநில அரசுகளின் சார்பில் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மாநில ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றிவந்தனர். 1974-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கருணாநிதி வலியுறுத்திக் கேட்டு, சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தார். முதன்முதலாக 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் கருணாநிதி. 

* மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, 'நீராரும் கடலுடுத்த... என்று தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து, தமிழக அரசு விழாக்களில் தொடக்கத்தில் பாடும் நடைமுறையைக் கொண்டுவந்தவர் கருணாநிதி.

* அரசு நிகழ்ச்சியானாலும் கட்சி நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்துக்கு முன்பாகவே மேடைக்கு வந்துவிடுவார். குறித்த நேரத்தில் விழாவை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

முரசொலி மாறனுடன்...

* ராஜாஜி, பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று தமிழகத்தின் 11 முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்தவர் கருணாநிதி.

* சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பூம்புகார் மீட்டெடுப்பு, பெரியார் சமத்துவபுரம், குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலை, கோவையில் உலக செம்மொழி மாநாடு, உணவுப் பாதுகாப்புகாக இந்திய உணவுக் கழகத்தைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.  

* நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக மகளிர் திருமண உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்கள் உதவியோடு, தமிழ் ஆண்டு வரிசைக்கு, 'திருவள்ளுவர் ஆண்டு' என்ற முறையைக் கொண்டு வந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து, பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்.

* பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 'இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில் பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமஉரிமை உண்டு' என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

கருணாநிதி நித்யா

* கருணாநிதியின் உதவியாளராகக் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவைப் புரிந்துகொண்டு செயல்படக் கூடிய உதவியாளர். கருணாநிதியின் தனி உதவியாளராக நித்யானந்தன் என்பவர் இருக்கிறார்.

* 2005-ம் ஆண்டு ரூ.5 கோடியில் 'கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை' நிறுவி, மாதந்தோறும் அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் ஒவ்வொரு மாதமும் 12 பேருக்கு தலா ரூ.25,000 வீதம், 'கல்வி மற்றும் மருத்துவ நிதியுதவி' வழங்கி வருகிறார் கருணாநிதி. 

* 'தன்னுடைய கோபாலபுரம் இல்லம், தயாளு அம்மாளின் காலத்துக்குப் பிறகு, மருத்துவமனையாகப் பயன்பட வேண்டும்' என்று எழுதி வைத்துள்ளார் கருணாநிதி.

https://www.vikatan.com/news/politics/132258-karunanidhi-50-years-as-dmk-leader.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.