Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சுமெழில் குற்றாலம்

Featured Replies

https://assets.roar.media/assets/tDXIQF6pPrauvic7_135c06d1da724fa71395e86d030f18b4.jpg?w=1080

சிற்றூர்தான்; ஆனால், பேரைச்சொன்னதும் தெரியுமளவு நாடுமுழுக்கப் புகழ்பெற்றுள்ளது குற்றாலம், இங்குள்ள அற்புதமான அருவிகளுக்காகவே!

ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் இவ்வூரைத் தேடிவருகிறார்கள்; இங்குள்ள பல அருவிகளில் ஆசை தீர நீராடிச் செல்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான குற்றாலத்தில் நீராடும் பருவம் (இதை ஆங்கிலத்தில் 'சீஸன்' என்றே சொல்லிப் பழகிவிட்டோம்) இப்போது உச்சத்தில் இருக்கிறது; நீங்கள் மகிழ்ச்சியாகச் சென்றுவரச் சரியான நேரம் இது; அதற்கு முன்னால், குற்றாலத்தைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

இலக்கியங்களில் குற்றாலம்

இயற்கை எழில் நிறைந்த பழைமையான ஊர் குற்றாலம். பழந்தமிழ் இலக்கியங்களிலும் பக்திப்பாடல்களிலும் சிறப்பிடம் பெற்றது.

தமிழிலக்கியங்களில் இயற்கைக்குத் தனியிடம் உண்டு. புலவர்கள் தேர்ந்தெடுத்த அழகுச்சொற்களால் மலைகளை, நதிகளை, வயல்களை, சோலைகளை, கடல்களை, ஏன், பாலைவனங்களைக்கூட அற்புதமாக வர்ணித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலுமுள்ள தாவரங்கள், விலங்குகள், வெவ்வேறு பருவங்களில் அவ்வூர்களின் அழகு, அதற்கேற்ற மக்களின் வாழ்க்கைமுறை என விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் தமிழில் அதிகம் பாடப்பெற்ற அருவிகள் குற்றாலத்தில் இருக்கின்றன.

திரிகூடராசப்பக்கவிராயர் எழுதிய 'திருக்குற்றாலக்குறவஞ்சி' தமிழின் மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. அதில் வரும் மலைவளக்காட்சிகளைப் படித்தாலே நெஞ்சுக்குள் குளிரடிக்கும், சாரலடிக்கும்.

குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன், திருக்குற்றாலநாதர். சைவத்தமிழின் முதன்மையான அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் திருக்குற்றாலநாதரைப் பாடியிருக்கிறார்கள்.

xxvetdhU7WTUFbTg_maxresdefault-%2810%29.jpg?w=750

kutralakuravanji Dance Drama (Pic: youtube)

திருகுற்றாலநாதர்

சிறப்பும் பழைமையும் அழகும் நிறைந்த திருக்குற்றாலநாதர் ஆலயம் குற்றாலத்தின் மையத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. வாகனத்தில் வருவோர் படிகளில் இறங்கிச் சிறிது தூரம் நடந்து கோயிலுக்குள் நுழையவேண்டும்; இறைவனைத் தரிசித்தபின் இன்னும் சிறிது நடந்தால் பேரருவிக்குச் சென்றுவிடலாம்.

கோயிலில் நுழைந்து இறைவனைத் தரிசித்துக்கொண்டிருக்கும்போதே அருவியின் சத்தம் நன்றாகக் கேட்கிறது. அதுவும் நாள்முழுக்க இறைவனுடைய திருப்பெயர்களைச் சொல்லிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

uWhau46OHI8iOrCD_8.jpg?w=750

சித்திரசபை

நால்வர் பாடிய பெருமானை வணங்கி வழிபட்டபின், இன்னொரு முக்கியமான திருத்தலத்தைத் தரிசிக்கவேண்டும்: சித்திரசபை.

தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய சபைகள் ஐந்து: திருவாலங்காடு (ரத்தினசபை), சிதம்பரம் (கனகசபை), மதுரை (வெள்ளிசபை), திருநெல்வேலி (தாமிரசபை), திருக்குற்றாலம் (சித்திரசபை).

சிறப்புமிக்க இந்தச் சித்திரசபை திருக்குற்றாலநாதர் ஆலயத்திலிருந்து சில நிமிட நடைதூரத்தில் இருக்கிறது. அறிவிப்புப்பலகைகள் உள்ளன; மக்களைக் கேட்டாலும் உடனே சொல்லிவிடுவார்கள். இதனைத் தரிசிக்க ஒரு சிறு நுழைவுக்கட்டணம் உண்டு.

பெயருக்கேற்ப, 'சித்திரசபை'யில் ஏராளமான ஓவியங்கள். திருக்குற்றாலக்காட்சிகளும், சிவபெருமானுடைய திருவிளையாடல் காட்சிகளும் இங்கு அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் மூலிகைகளை கொண்டு வரையப்பட்ட பழமையான ஓவியங்கள்!

சமீபகாலத்தில், இந்த ஓவியங்களை அதேபோன்ற மூலிகைகளைக் கொண்டு மெருகேற்றியிருக்கிறார்கள். ஆகவே பழைமையான ஓவியங்கள் புதிதுபோல் மின்னுகின்றன, அதேசமயம் அவற்றின் கலை நுணுக்கங்களையும் கவனித்து ரசிக்கமுடிகிறது.

ஒரு விஷயம், இவற்றையெல்லாம் மின் வெளிச்சத்தில் பார்ப்பது சிரமம்; இயன்றவரை இயற்கை வெளிச்சத்தில் பார்த்தால் சிறப்பாக இருக்கும். சித்திரசபை மாலை 6மணிவரைதான் திறந்திருக்கும் என்பதால், அதற்கேற்ப நேரத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

aM28tRcR8uMQxLAM_Gallery1.JPG?w=750

Chiththirasabai (Pic: tamilnadu-favtourism)

பேரருவி

சித்திரசபையிலிருந்து மீண்டும் வந்தவழியில் நடந்தால் சில நிமிடங்களில் பேரருவி. தண்மையான சாரல் காற்று நம்மைக் குளிக்க அழைக்கிறது. சும்மா பார்த்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம் என்று வருகிற கூச்சப்பேர்வழிகள்கூட, 'குளிச்சுத்தான் பார்ப்போமே' என்று துண்டைத் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த அருமையான அருவிக்குத் தமிழில் அழகாகப் 'பேரருவி' என்று பெயர் இருந்தாலும், இந்த ஊரிலுள்ள பெரும்பாலானோரும், பார்க்கவருகிற வெளியூர்க்காரர்களும் 'மெயின் ஃபால்ஸ்' என்றும், 'மெயின் அருவி' என்றும் தான் அழைக்கிறார்கள். தமிழில் அழகிய பெயர் இருக்கும்போது மற்ற மொழிச் சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும்?

'பேரருவி' என்ற பெயருக்கேற்ப இந்த அருவி உண்மையில் பிரமாண்டமானதாக இருக்கிறது. நல்ல உயரத்திலிருந்து பல அடுக்குகளாக நீர் அதிவேகத்துடன் கீழே விழுந்து ஓடுகிறது; ஆண்களும், பெண்களும் தனித்தனியே குளிப்பதற்குப் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டிருப்பதைக்கூடப் பார்த்தோம்.

ஆண்டில் சில மாதங்கள்தான் இந்த அருவியில் குளிக்க இயலும். மற்ற நேரங்களில் நீர்வரத்து இருக்காது, அல்லது, அதிவேகமாக இருக்கும், குளிக்க அனுமதி வழங்கப்படாது. ஆகவே, குற்றாலம் செல்கிறவர்கள் அங்குள்ள முக்கிய அருவிகளில் குளிக்க அனுமதி உண்டா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு சென்றால் ஏமாற்றத்தைக் குறைக்கலாம்.

பேரருவியின் எல்லையை நெருங்கும்போதே குளிர்ச்சியான நீர் நம்முடைய கால்களை வருடிக் குளியலுக்குத் தயார் செய்துவிடுகிறது. இன்னும் அருகில் செல்லச்செல்ல அங்கே குளித்துக்கொண்டிருந்தவர்கள்மீது பட்டுத் தெறிக்கும் நீர் நம்மை நனைத்து ஆவலைப் பெருக்குகிறது.

தயங்கித் தயங்கி அருவியை நெருங்குகிறோம், ஏதோ ஒரு கணத்தில் சடாரென்று தண்ணீர் நம் தலையில் விழ, கொண்டாட்டம் தொடங்குகிறது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் முட்டி மோதி உள்ளே நுழைந்து முழுக்க நனைந்துவிடுகிறோம்.

தடதடவென்று நம்முடைய தலையிலும் முதுகிலும் அருவி நீர் தாளம் தட்டுகிறது. கண்கள் தெளிவற்று நீரை மட்டுமே காண்கின்றன, சுற்றியிருக்கிற யாரும் தெரிவதில்லை, நிமிர்ந்துபார்த்தால் தண்ணீர் எங்கிருந்து கொட்டுகிறது என்பதும் தெரிவதில்லை, காதுக்குள் பெரும் ஓசை ஆனந்தமாக இருக்கிறது, அங்குமிங்கும் திரும்பித் தண்ணீரைக் கையிலும் காலிலும் முதுகிலும் வாங்குகிறோம்; யாரோ படபடவென்று அடிப்பதுபோலவும், இதமாக முதுகுபிடித்துவிடுவதுபோலவும் கலவை உணர்ச்சிகள்.

குற்றால நீர் மூலிகைகள் நிறைந்தது என்பார்கள்; இங்கு குளித்தால் பல உடல், மன நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கைகூட உண்டு. ஆனால் இதையெல்லாம் அறியாமல் கொண்டாட்டத்துக்காகவே குளிக்கவருகிறவர்களும் மிகுதி.

ஆரம்பத்தில் அருவியில் குளிக்கும்போது மூச்சுத்திணறுகிறது; அடிபட்டுவிடுமோ, கழுத்து சுளுக்கிக்கொண்டுவிடுமோ என்றெல்லாம் ஐயம் வருகிறது; சட்டென்று இதிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்றுகூடத் தோன்றுகிறது; ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக அந்த இயற்கைச்சூழலுடன் ஒன்றிப்போகிறோம்; இன்னும் இன்னும் உள்ளே சென்று குளிக்க நினைக்கிறோம்; கூட்டம் அதிகரித்து யாராவது நம்மை வெளியே தள்ளினால்தான் உண்டு என்கிற அளவுக்கு ஆசை தீரக் குளிக்கிறோம்.

முன்பெல்லாம் குற்றாலத்தில் குளிக்கிறவர்கள் சோப்புப் போடுவது, ஷாம்பூ போடுவது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்று நீரை மாசுபடுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது அதையெல்லாம் பெருமளவு கட்டுப்படுத்திவிட்டார்கள்; ஆகவே இயற்கையான தண்ணீரில் நன்கு நெடுநேரம் குளிக்கமுடிகிறது.

ஆனால் ஒன்று, குளியலுக்கு ஏற்ற மாதங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றாலத்தில் ஏராளமான கூட்டமிருக்கும்; சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டமாக வந்து குவிந்திருப்பார்கள். ஆகவே பேரருவிபோன்ற முக்கிய அருவிகளில் குளிப்பதற்கு முட்டிமோதவேண்டியிருக்கலாம், அதைக் கவனத்தில் கொண்டு உங்களுடைய பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

ADrHM7R3z8S6PGDo_maxresdefault-%2812%29.jpg?w=750

Periyaruvi (Pic: youtube)

குற்றாலத்தின் பிற அருவிகள்

பேரருவியிலிருந்து சிறிது தூரத்தில் ஐந்தருவி. மலையிலிருந்து ஐந்து பிரிவுகளாக நீர் விழுவதால் இதற்கு 'ஐந்தருவி' என்று அழகாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

எல்லாம் அருவிதானே, பேரருவியில் குளித்தபின் ஐந்தருவி எதற்கு என்று யோசிக்காதீர்கள்; எந்த இரு அருவிகளும் ஒன்றில்லை; இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.

ஐந்தருவியிலும் பாதுகாப்பாகக் குளிப்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன. நீரின் குளுமையும் வேகமும் கொண்டாட்டத்தைப் பெருக்குகிறது.

இவை தவிர குற்றாலத்தில் தேனருவி, செண்பக அருவி, பழைய குற்றாலம் என்று பல அருவிகள் இருக்கின்றன. சில தனியார் நிலங்களிலும் இயற்கையான, செயற்கையான அருவிகள்உள்ளன. நமக்கு வாய்ப்பு அமைவதைப்பொறுத்து அடுத்தடுத்துப் பல அருவிகளில் ஆனந்தமாகக் குளிக்கலாம்.

E7GgD85QUXWgn8XO_maxresdefault-%2811%29.jpg?w=750

Five Falls (Pic: youtube)

மற்ற வசதிகளும் சுவாரஸ்யங்களும்

குற்றாலத்தின் முக்கிய அருவிகளை இணைக்கும் பேருந்து வசதி உள்ளது. 'ஷேர் ஆட்டோ' பகிர்தல் வசதியையும் பயன்படுத்தலாம்.

உணவைப்பொறுத்தவரை அனேகமாக எல்லா இடங்களிலும் சூடான உணவுவகைகள், சுண்டல், மக்காச்சோளம் போன்ற தின்பண்டங்கள், பழங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. பக்கத்திலிருக்கும் தென்காசியில் பல உயர்தர உணவகங்கள் உண்டு.

குற்றாலத்தில் எங்கும் தென்படுகிற இன்னொரு விஷயம், பச்சை குத்துபவர்கள். கடவுள் உருவங்களில் தொடங்கிப் பெயர்கள்வரை எல்லா வடிவங்களிலும் இவர்கள் பச்சை குத்தக் காத்திருக்கிறார்கள். முன்பு பாரம்பரியமானமுறையில் பச்சை குத்திக்கொண்டிருந்தவர்கள் இப்போது பேட்டரியில் இயங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

குற்றாலத்துக்கு எப்படி வருவது?

தமிழகத்தின் பெரும்பாலான நகரங்கள், சிற்றூர்களிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில், பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து பேருந்துகள் அல்லது ரயில்களில் தென்காசி அல்லது செங்கோட்டை வந்து ஷேர் ஆட்டோவில் குற்றாலத்துக்கு வரலாம்.

குற்றாலத்தின் முக்கிய அருவிகளில் குளித்துத் திரும்புவதற்கு ஒருநாள் போதுமானது; அதேசமயம் இரண்டு நாள்களாகத் திட்டமிட்டுக்கொண்டால் பரபரப்பில்லாமல் நிதானமாக ரசிக்கலாம். தங்குவதற்குக் குற்றாலத்திலேயே வசதிகள் உள்ளன; அல்லது, தென்காசி, பிற சுற்றுவட்டாரப்பகுதிகளில் தங்கிக்கொண்டு குளிப்பதற்கு மட்டும் குற்றாலம் சென்றுவரலாம்.

ZteNM0UnsXrVDiZL_maxresdefault-%2813%29.jpg?w=750

அப்புறமென்ன? கிளம்பவேண்டியதுதானே?

Web Title: Courtalam the coolest Place

 

https://roar.media/tamil/main/travel/courtalam-the-coolest-place/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.