Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி

Oct 01, 2018 

Sri-lakan-flags.jpgஉலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

அந்த கட்டுரையிலே உலகில் தற்போது அரசியல் செல்வாக்குமிகுந்த அம்சங்கள் பலவற்றை எடுத்துக் கூறுகிறார்.

சமயம்சார்ந்த அரசியலா? அல்லது மனித உரிமை சார்ந்த அரசியலா? அல்லது இணையத்தளத்தால் பலம்பெற்றுள்ள டிஜிற்ரல் தொழில்நுட்பமா? இவை எல்லாவற்றையும் விட நாடுகள் பாதுகாப்புக்கான மிகப்பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அணு ஆயுத பலமா? எது இன்றைய உலகில் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்சக்தி என்ற கேள்வியை மையமாக வைத்து அந்தக் கட்டுரை வரையப்பட்டிருந்தது.

ஆனால், அங்கே இந்த அலகுகள் எல்லாவற்றையும் பின்தள்ளி விட்டு, தனது சொந்த தெரிவாக, உலகிலேயே மிகவும் பலம்வாய்ந்த அரசியல் சக்தி யாதெனில், அது தேசியவாதம் தான் என அவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருந்தார்.

பல மனித கலாச்சாரத்தை கொண்டதாக இருந்தாலும், ஒரே மொழியையும் தமது கடந்த காலத்தில் ஒரே வகையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனவுமான, இனக்குழுக்கள் ஒரு அரசை நடத்துவதற்குத் தகுதி உடையனவாகின்றன என்பது அவரது விவாதமாக உள்ளது.

இந்த விவாத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களுடைய அரசியலை எடுத்து நோக்குவோமாயின் , இந்த சனநாயக உலகிலே கடந்த பத்து வருடகால தேர்தல் அரசியலில் அணு ஆயுததிலும் பார்க்க, பலம்மிக்க தேசியவாதம் ஏன் தமிழர்களுக்கான அபிலாசைகளை இன்னமும் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற கேள்வி எம்மத்தியில் எழுகிறது .

எதிர்ப்பு அரசியலில் அல்லது கருத்துபேத அரசியலில், கருத்து வேறுபாட்டை பாராளுமன்றத்தில் தெரிவித்தல்,  வெளிநடப்புச் செய்தல் , மறியல் போராட்டம் செய்தல், வன்முறை அற்ற போராட்டங்கள் செய்தல், கலவரம் விளைவித்தல், வன்முறையில் இறங்கி ஆயுதப்போராட்டம் செய்தல் என எதிர்ப்பு அரசியல் பல்வேறு வடிவங்களைக் கொண்டது.

இதில் ஆயுதப் போராட்டமே மிகவும் உச்சநிலையானதாகும். இந்த உச்சநிலையும் தமிழ்மக்களிடம் இருந்து நசுக்கப்பட்டு விட்டது. ஆனால், மக்களின் மனங்களிலே எழுந்த தேசியவாத சிந்தனை என்றும் அழிந்து போய்விட முடியாது.

தேசியவாதம் எல்லாவற்றிலும் பலம்மிக்கது என்பதை விளக்கும் இன்னுமோர் ஆய்வாளர், இன்றைய சர்வதேச அரசியலில் தாராளவாத மேலாதிக்கப்போக்கு தோல்வி கண்டுவிட்டது. என்பதை நிலைநிறுத்தி ஆய்வு செய்கிறார்.

மிகவும் ஒழுங்கீனமற்ற கீழ்த்தரமான நாடு என்று பட்டியல் இடப்பட்ட வடகொரியாவுடன், உலகின் முதல்தர வல்லரசு என்றும், தாராளவாத அரசியலின் பாதுகாவலன் என்றும் போற்றப்படும் ஐக்கிய அமெரிக்கா சரிநிகர் சமானமாக இருந்து பேச்சுகள் நடத்துகிறது.

ஆப்கானிஸ்தானில் இலட்சக்கணக்கான இராணுவச் சிப்பாய்களைப் போட்டும் மில்லியன் டொலர்கள் செலவு செய்தும் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பின்வாங்க வேண்டி ஏற்பட்டது,

அரபு நாடுகளில் எதேச்சாதிகார அரசுகளுக்குப் பதிலாக மேலைத்தேய தாராளவாத  அரசியலை ஆட்சி நடைமுறையை கொண்டு வரும் பொருட்டு எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிவடைந்துள்ளது என பல உதாரணங்களை முன்வைக்கும் அந்த ஆய்வாளர், இவை எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம், அந்த நாடுகளின் உள்ளுர் தேசியவாத- மேலைத்தேய தாராளவாத மேலாதிக்கத்தை தோல்வி அடையச் செய்தது எனக் கண்டறிகிறார்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளுரில் தேசியவாதம் பேசும் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தை உறுதியுடன் பயன்படுத்தக் கூடிய தலைமைத்துவத்தைப் பெற்று  கொள்கின்றனர். சில நாடுகளில் அதே தேசியவாத போராட்டங்கள் ஆட்சியில் இருக்கும் தலைவர்களை ஆட்டம் காணவைக்கிறது . அதேவேளை  எந்த வல்லரசும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு தேசியவாதத்தின் பெயரால் எழும் பிரச்சினைகளுக்கு தலைகொடுக்கத் தயங்குகின்றன.

இவ்வாறு வல்லரசுகளின் தலையீடுகள் பல்வேறு நாடுகளிலும் அதிக செலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எண்பதுகளின் இறுதியில் இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் தலையிட்டு தமிழ் தேசியத்திடம் பட்டபாட்டையும்  கண்டிருந்தோம்.  இந்தியா கோடிக்கணக்கான பணத்தையும் பல்லாயிரக்கணக்கான ஆளணியையும் இந்தக் காலப்பகுதியில் செலவிட்டிருந்து

அதேபோல, மனித இனத்தையே அழிக்கக் கூடிய அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளுடனும், வல்லரசுகள்  மோத நினைப்பதில்லை. அணுஆயுத பலம் உள்ள நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எத்தனிப்பது மிகவும் அபாயகரமானது.

எதேச்சாதிகார போக்கைக் கொண்ட அணுஆயுத பலம் கொண்ட நாடுகளின் தலைவர்கள், எத்தகைய தீர்மானத்தை எடுப்பர் என்பது நிச்சயமாக சொல்லமுடியாத நிலை உள்ளது. இதனால் வல்லரசுகள் நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மேலைநாடுகளின் பார்வையாக உள்ளது.

ஆகவே, இந்த இரு விடயங்களும் ஒரு முக்கிய கருத்தைக் கூறிச்செல்கிறது சர்வதேச அளவில் வல்லரசுகளை சவாலாகக் கொண்டு அரசியல் புரியும் தலைவர்கள், அணுஆயுதம் வைத்திருக்க வேண்டும் அல்லது தேசியவாத சக்திகளைத் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்த இரு அரசியல் மேதாவிகளினதும் பார்வையாக உள்ளது.

ஆனால் தேசிய இனங்களில் ஒன்றான தமிழினம் மட்டும் மாறுபட்ட மனப்பார்வைக்குள் உள்ளாக்கப்படுகிறதை காணலாம். தமிழர்கள்  தேசியவாதத்தை கையில் எடுத்தால் வன்முறையாளர்களாக சித்தரிப்பதுவும் தமிழ் அரசியல் தலைவர்களையும் கூட பிரிவினைவாதிகளாக சித்திரிப்பதுவும் பொதுவான சிறீலங்கா பேரினவாதப் பண்பாகும்.

ஒருபகுதி தமிழ் அரசியல்வாதிகள் தேசியவாதத்தை தமது வாக்குவேட்டை அரசியல் கருவியாக அல்லது அரசியலில் தூண்டில் புழுவாக மட்டும் பயன்படுத்துவது இன்னும் ஒரு அனுபவமாகவும் உள்ளது.

நாடாளுமன்ற இருக்கைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு சிங்கள தேசியவாதத்திற்கு கீழ்படிந்ததே தமிழ்த் தேசியவாதம் என்ற போக்கில் தமிழர்களின் அபிலாசைகளை கேட்க முற்பட்டால், சிங்களம் கொந்தளித்து விடும் என்று பார்ப்பதுவும் சரியானதா என்ற கேள்வியும் இங்கே உள்ளது..

சர்வதேச அனுபவங்களின் அடிப்படையில் தேசியங்கள் எவ்வாறு வழிநடத்தப்படுகின்றனவோ அவை அந்த சூழலுக்கு ஏற்றவகையில் தம்மை மாற்றிக் கொண்டதாக காணப்படுகிறது. உதாரணமாக, 1930 களின் மத்தியில் ஜேர்மானிய மக்களை அடொல்வ் ஹிட்லர் என்ற அரசியல் தலைவர் உலகின் வல்லரசாக்கும் வகையில் எவ்வாறு வழிநடத்தினார் என்பதுவும் ஐரோப்பிய கண்டத்தையே தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்தார் என்பதுவும் வரலாறு.

அடுத்து மாவோ சே துங் சீன மக்களை ஒரு முகப்படுத்தி, அவர்கள் இன்று ஒரு முதல்நிலை பொருளாதார வல்லரசாக ஆகுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார்.

இங்கே தோல்வி- வெற்றி என்பதற்கு அப்பால், தேசிய இனங்களை அந்த இனங்களின் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளத்தக்க சிந்தனை வடிவங்களின் ஊடாக வழிநடத்தி உள்ளன என்பதை தமிழர்களும் தமது கடந்தகால அனுபவங்கள் ஊடாக நன்கு அறிவர்.

இந்தநிலையில், நியாயம்மிக்க தேவைகளை அரசியல் தலைவர்கள் முன்வைத்தபோது, எந்த இனமும் அதனை ஏற்றுக்கொண்டு வழிநடத்தல்களைப் பின்பற்றி உள்ளன என்பதை இங்கே காணக் கூடியதாக உள்ளது.

இன்றைய சர்வதேச அரசியலில், ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, தேசிய இனங்களின் போராட்ட வடிவங்கள் வேறுபட்டு உள்ளன. அவை மொழி சார்ந்ததாக இருக்கலாம் அல்லது இணையத் தள வலைப்பின்னல் வழிமூலமானதாக இருக்கலாம் அல்லது வெறும் தெருப்போராட்டங்களாக இருக்கலாம், அவற்றின் அடிப்படைத் தேவைகளில் அல்லது அபிலாசைகளில் எப்பொழுதும் என்பது பல்வேறு ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது.

தேசியவாத சிந்தனைகள் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டு, வழிநடத்தப்படுமாயின், உள்ளுர் மக்கள் , வெளியார் ஊடுருவலை அல்லது அத்துமீறல்களை எதிர்த்து நிற்பது தவிர்க்க முடியாததாகி விடும். அதேபோல, ஆக்கிரமிப்புகளும் நிலையற்றதாக ஆகிவிடும்.

ஆனால், அரசுகள் தமது ஆட்சி இயந்திரத்தை இயக்கவல்ல, பல்வேறு திணைக்களங்களை செவ்வனே செயலாற்றி, தமது ஆட்சியை உறுதிசெய்து கொள்ளும், அதேவேளை, தேசியத்தின் பெயரால் ஒருமித்து வாழ எண்ணும் சமுதாயத்தின் மத்தியில்,  தானே மறைகேடுகளை  உருவாக்கி தமது பிரசன்னத்தை,  சட்டம் ஒழுங்கு  என்ற பெயரால் வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன.

போதைப் பொருட்களை உலாவ விடுதல், மதுப்பழக்கம் போன்றவற்றை தெரிந்தும் தெரியாத போக்கில் விடுதல் போன்ற சமூகப்பொறியியல் யுக்திகளை கையாழுகின்றன.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு யுக்திகளை கையாண்ட ஜோர்ச் புஷ் அரசாங்கமும், ஒபாமா அரசாங்கமும் பல மில்லியன் டொலர் பணம் செலவு செய்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரைக் குவித்து, தாராள சித்தாந்தத்தை நிறுவ முயன்ற போதிலும், அதீத தேசியவாதத்தை போதித்த தலிபான்களின் செயற்பாடுகளை நிறுத்த முடியவில்லை.

அத்துடன் அணுஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டை, அது முறைகேடான ஆட்சியில் இருந்தாலும், எந்த வல்லரசுகளும் அணுகமுடியாது போனது. ஆனால் இங்கே முக்கியமான விடயம் என்ன வெனில், அதீதவாதமும், எதேச்சாதிகாரமும் தேசியவாதத்துடன் கலந்த நிலையிலேயே வெற்றிகளை கண்டுள்ளன.

தமிழ்த் தேசியவாதம் என்ற போக்கில் தமிழர்களின் அபிலாசைகளை கேட்க முற்பட்டால், சிங்களம் கொந்தளித்து விடும் என்ற பார்வையைக் கொண்டவர்கள், சிங்கள அதீத தேசியவாதத்தை எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்ற பார்வையின் ஊடாக , அரசியல் அதிகாரமுறையை பெறும் பொருட்டு, நிறுவனமயப்படுத்தப்பட்ட நேர்மையான சனநாயக பண்புகளை கொண்ட தேசியவாத அமைப்புகளும் அரசியல்கட்சிகளும் மக்கள் ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்த ஆதரவின் அடிப்படையில் சர்வதேசத்தின் ஊடாக சிந்திப்பது சிறந்ததாக தெரிகிறது.

  • லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

http://www.puthinappalakai.net/2018/10/01/news/33184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.