Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமையை நினைவுகூரும் டிசெம்பர் 06

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணய உரிமையை நினைவுகூரும் டிசெம்பர் 06

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:23Comments - 0

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறாகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு, வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாள்கள், முக்கியமானவை.   

சில நாள்கள், ஏனைய நாள்களைவிட முக்கியமானவை. அந்த நாள்கள் வரலாற்றின் திசைவழியை, அரசியல் சித்தாந்தத்தை, சமூக அசைவியக்கத்தை என, எல்லாவற்றையும் புரட்டிப் போடும் தன்மையுடையவை.   

உலக அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்படா விட்டாலும், இன்றைய தினம் (டிசெம்பர் 06) மிகவும் முக்கியமான தினம். இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று வரலாற்று நிகழ்வுகள், எவ்வாறு உலக அரசியலின் நிகழரங்கின் நடத்தையில், செல்வாக்கு செலுத்தியுள்ளன என்பதை இக்கட்டுரை நோக்குகிறது.   

முதலாவது நிகழ்வு, இற்றைக்கு 101 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தில் நடந்தவொன்று. 1917ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஆறாம் திகதி, பின்லாந்து, சோவியத் யூனியனில் இருந்து சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின் அடிப்படையில், பிரிந்து தனிநாடாகியது.   

தேச அரசுகளின் தோற்றத்தின் பின்னணியில், சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, தனிநாடாகிய முதலாவது நிகழ்வு நடந்தேறிய தினம் இன்றாகும்.   

சுயநிர்ணய உரிமை குறித்த கோட்பாடு, நடைமுறையானதை ஒட்டித் தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்களுக்கு, இந்நிகழ்வு  வழிவகுத்தது. இதுவே, உலக அரசியல் வரலாற்றில், சுயநிர்ணய உரிமையைத் தத்துவார்த்தத் தளத்தில் இருந்து, யதார்த்த அரசியலுக்குக் கொண்டு வந்தது என்பதை மறுக்கவியலாது.   

பின்லாந்து பிரிவினைக்கு, லெனினின் ஆதரவும் அதை ஆதரித்து, ஸ்டாலின் ஆற்றிய முக்கியமான உரையும், சுயநிர்ணய உரிமையை, மார்க்சிய லெனினியர்கள் எவ்வாறு நோக்கினார்கள் என்பதையும்  காட்டி நிற்கின்றது.   

அதேவேளை, சுயநிர்ணய உரிமை பற்றிய முன்னோடியான பார்வை, மார்க்சியச் சிந்தனையிலேயே இருந்தது என்பதையும் நினைவூட்ட வேண்டும். ஈழத்தமிழர் அரசியலில், முக்கியமான சொல்லாடலாக இருக்கும் சுயநிர்ணய உரிமை குறித்து, இக்கட்டுரை அலசுகிறது.   

இன்று, உலகத்தில் எற்பட்டிருக்கின்ற தேசியப் பிரச்சினைகளை நோக்கும் போது, தேசியவாதத்தின் வளர்ச்சியை, முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.   

ஒரு காலத்தில், முதலாளித்துவம் தேசியவாதத்தை ஆதரித்தது. அதே முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த பின்பு, தேசிய இன ஒடுக்கலை மேற்கொண்டு, இன விடுதலையை எதிர்த்தது.   

தேசிய இனப்பிரச்சினையில், ஏகாதிபத்தியத்துக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. தனது வசதிக்கேற்ப சில இனவிடுதலைப் போராட்டங்களை அது ஆதரிக்கும்; சில இனவிடுதலைப் போராட்டங்களை அது எதிர்க்கும். இன்று ஆதரித்ததை, நாளை எதிர்க்கவும் கூடும். அவ்வாறுதான், அது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை, தனது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தி வந்துள்ளது.   

சுயநிர்ணய உரிமை, அவ்வாறு மாறுபடக்கூடிய வியாக்கியானங்களை உடையதாக இருக்க முடியாது. இந்த இடத்தில், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தங்களது வசதிக்கு ஏற்றுவாறு, திரிப்பவர்களின் நோக்கங்கள் முக்கியமாகின்றன.  

சுயநிர்ணய உரிமை   

சுயநிர்ணய உரிமை என்ற கருத்துப்படிவம் ரஷ்யப் புரட்சியில், தன் தோற்றுவாயை உடையது. ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் உருவாக்கம், மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபட்டோரும், ரஷ்யப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட ரஷ்ய ‘ஸார்’ பேரரசால் ஒடுக்கப்பட்டு வந்தோருமான, 120க்கும் மேற்பட்ட இனப்பிரிவுளுக்குரிய மக்களை ஒன்றிணைத்தது. இம்மாபெரும் சாதனை, 1917 ஒக்டோபர் புரட்சியின் மூலம் இயலுமானது.   

இந்தப் பின்புலத்திலேயே, சுயநிர்ணய உரிமையை, முக்கியமான கோட்பாடாக ரஷ்யப் புரட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்திய வி.ஜ. லெனின் வளர்த்தெடுத்தார். இதில் லெனினின் பங்களிப்பு முக்கியமானது.   

இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் லெனின், ‘தேசங்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையானது, விடுதலைக்கான உரிமை. உரிமையை ஒடுக்கும் கட்டற்ற தேசத்திலிருந்து, அரசியல் ரீதியாகப் பிரிந்து செல்வதற்கு ஆதரவான கிளர்ச்சியை நடத்துவதற்கான கட்டற்றநிலை; பிரிந்து செல்வதா என்ற கேள்விக்கான தீர்வை ஒப்பங்கோடல், குடியொப்பம் மூலம் முடிவுசெய்ய வேண்டிய சுதந்திரம் இருக்க வேண்டிய அதேவேளை, இந்தக் கோரிக்கை பிரிந்துசெல்ல, கூறுபடுத்த, அல்லது சிறு அரசை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒத்ததல்ல. எந்த வடிவத்திலும் நடத்தப்படும், தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை விளக்கவரும், நேர்மைப் பொருத்தமுடைய வெளிக்காட்டுகையே அது. அரசாங்கத்தின் ஜனநாயக முறைமை, பிரிந்து செல்வதற்கான முழுமையான நிலையை அண்மித்திருக்குமாயின், முழுமையாகப் பிரிந்து போகும் சுதந்திரத்தை வழங்கும் போது, மிக அருமையாக அல்லது வலுக்குறைந்த தேசிய இனக்கூறே செயலளவில் பிரிந்துபோகும்.பொருளாதார முன்னேற்றம், மக்கள் நலன்களின் நோக்கில் தேசிய சுயநிர்ணய உரிமைசால் ஜனநாயக முறையைப் பேணும் பேரரசுகளுக்குப் பல நன்மைகளை வழங்கும் என்பது ஜயத்துக்கிடமானதன்று’ என்றார்.   

image_746a4a3ab4.jpg

அதேவேளை, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல், கூட்டிணைப்புக் கொள்கையை உருவாக்குவது போன்றதல்ல. இந்தக் கொள்கையையும் மத்தியில் ஜனநாயகம் மய்யப்படுத்தப்படுவதையும் சமரசமின்றி எதிர்க்கும் ஒருவர், தேசிய இனங்களின் சமனின்மைக்குத் தீர்வு காண, முழுமையாக ஒன்றித்த கொள்கையின் கீழ், கூட்டிணைப்பை விரும்பலாம் என விளக்குகிறார் லெனின்.  

பிரிந்து போவதற்கான உரிமை  

சுயநிர்ணய உரிமை என்பது, பிரிந்து போவதற்கான உரிமை என்றே எமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், சுயநிர்ணய உரிமையின் உண்மையான பொருள், எமக்குச் சொல்லப்படவில்லை.   

ஓர் உரிமையைக் கொண்டவர், அதை ஏன், எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராயாமல், ஓர் உரிமை இருப்பதால், அது பிரயோகிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று சிலர் ஏன் சொல்கிறார்கள்? அந்த உரிமை பிரயோகிக்கப்படாமை, அந்த உரிமையின் இழப்பல்ல.   

பிரிந்து போகும் உரிமை கோரிப் போராடுவோர், பிரிவினைக்காகப் போராடுவோரினின்று தெளிவாகவே வேறுபடுகிறார்கள். முன்னையோர், இணைந்து வாழும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு போராடுகிறார்கள். பின்னையோர், எவரிடமும் பிரிந்துபோகும் உரிமையைக் கேட்காமல் பிரிவினைக்காகவே போராடுகிறார்கள்.  

 எனவே, இவ்வாறான அடிப்படை வித்தியாசங்களை எளிதாக அலட்சியம் செய்துவிட்டு, புனையப்படும் ‘சுயநிர்ணயம் = பிரிவினை’ என்ற சூத்திரம், தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு புனைபவர்கள், தெரிந்து திட்டமிட்டே அதைச் செய்கிறார்கள். இனங்களிடையே நல்லுறவு ஏற்படுவது, அவர்களது நலன்களுக்குக் தீங்கானது. 

எனவே, சுயநிர்ணய உரிமையை, பிரிந்து போவற்கான உரிமை மட்டுமே என, வியாக்கியானம் செய்வதன் மூலம், சகல இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமைகள், மறுக்கப்பட அவர்கள் வழிசெய்கிறார்கள்.   
பிரிந்துபோகும் உரிமையின் அங்கிகாரம், பிரிவினையை ஊக்குவிக்கும் நோக்கத்தை  உடையதல்ல. மாறாக, அது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பைப் பலப்படுத்தும் நோக்கையுடையது.   

அதன் காரணமாகவே, சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையே என்று கூறுவோர், சுயநிர்ணய உரிமை என்பதன் கருத்தைத் திரிக்கிறார்கள். அதாவது, ஒன்றைச் செய்யும் உரிமையை, அதைச் செய்யும் நிர்ப்பந்தமாக மாற்றுகிறார்கள்.  

தேசிய இனங்களின் பிரச்சினை, முக்கியமாக, தேசிய அரசாக அமையும் வாய்ப்பில்லாத தேசிய இனங்களின் பிரச்சினை, இன்று மேலும் கவனமான பரிசீலனையை வேண்டி நிற்கிறது. சுயநிர்ணயம் என்பதன் பொருள், ஒரு தேசம் பிரிந்துபோகும் உரிமையை, எந்த நிலையிலும் மறுக்காத விதமாக, மேலும் விரிவுபடுத்தபட வேண்டிய தேவையை நாம் எதிர்நோக்குகிறோம்.   

தேசிய இனம் என்ற பதத்தின் பொருளை, மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. தேசிய இனங்களாக அடையாளம் காண முடியாத, ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகளது உரிமைகள் தொடர்பாகவும் தெளிவான கருத்துகள் அவசியமாகின்றன. தேச அரசுகள் முக்கியத்துவமிழந்து வரும் புதிய உலக ஒழுங்கில், புதிய சவால்களை நாம் எதிர்நோக்குகிறோம்.  ஒரு தேசிய இனம், ஒரு தேசமாக, ஒரு தேசிய அரசாக அமைவதற்குச் சில நடைமுறைச் சாத்தியமான தேவைகள் உள்ளன.   

அதற்குரிய தொடர்ச்சியான ஒரு பிரதேசம், முக்கியமான ஒரு தேவை. அவ்வாறு எப்போதுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததில்லை. தேசிய இனப் பிரச்சினை தொடர்பான கொள்கைகள், ஆதிவாதிகள், நாடோடிகள் போன்ற சமுதாயப் பிரிவினரைப் போதிய கணிப்பிலெடுக்கத் தவறியதன் காரணமாக, இம்மக்களது உரிமைகள், உலகெங்கும் நாளாந்தம் பறிக்கப்பட்டு வருகின்றன.   

இலங்கையில் வேடர் சமுதாயத்தின் பிரச்சினைகளோ, நாடோடிகளின் நிலைமையோ தேசிய இனப்பிரச்சினையின் ஒரு பகுதியாகவேனும், இதுவரை கருதப்படாமை கவனிக்கத்தக்கது.  

இன்னோர் அம்சம், மிகவும் அடிப்படையானது. மக்கள் பிரிவொன்று, தேசிய இனமாக அடையாளம் காணப்பட்டால், அதற்குச் சுயநிர்ணய உரிமை உண்டு. சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து போகும் உரிமை; பிரிந்து போகும் உரிமையைப் பிரயோகிக்கும் வசதி இல்லாத ஒரு மக்கள் பிரிவுக்கு, சுயநிர்ணய உரிமையை, அதன் முழுமையான அர்த்தத்தில் அனுபவிக்க முடியாது என்பது உண்மை.   

அதனால், அவர்களுக்குத் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையே இல்லை என்றாகிவிடுமா? அக்காரணத்தால் அவர்கள், தேசிய இனமொன்றாக இல்லாது போய்விடுவார்களா? ஒடுக்கப்பட்ட  தேசிய இனமொன்று, ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை மறுக்கிற போது, அதனது சுயநிர்ணய உரிமையை, ஏனைய இனங்கள் ஏற்க மறுக்கிற சூழலை, அது உருவாக்குகிறது. இது தீங்கானது. இவை, விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான பாதையில், பாரிய தடைக்கற்களாக அமையக்கூடும்.  

ஒன்றாக இருப்பது முடியாமல் போனால், சுயநிர்ணய உரிமையின்படி பிரிந்துபோக உரிமையுண்டே ஒழிய, அதுவே பிரிவினையாக மாட்டாது. இதை லெனின், மணமுறிவு உரிமையை எடுத்துக்காட்டி, ஒப்பிட்டு விளக்குகிறார்.   

மணமுறிவு உரிமை என்பது, மண உறவை முறிப்பதல்ல. ஆனால், ஒவ்வோர் ஆளும், மண ஒப்பந்தத்தை ஏற்படுத்தும்போது, பின்பயன் கருதி, மணமுறிவு உரிமையையும் உறுதிசெய்வதுபோல, மணமுறிவு உரிமை இல்லாமல், எந்தத் திருமணமும் நீடுநிலைப் பொறுப்புறுதி வழங்கமுடியாது.   

பிரிவதற்கான உரிமை, உறவைச் சமமாக வைக்கவும் நிலைத்து நிற்கவும் செய்வதற்கானது. ஆகவே, ஓர் ஒன்றியத்தின் (union) தேசிய இனங்களும் இனக்கூறுகளும் பிரிந்துபோவதற்கான உரிமை என்பது, இணைந்து வாழ்வதற்காக சாத்தியங்களை, துருவித் தேடலே என்பது, லெனின் முன்வைக்கும் கருத்தாகும்.  

மேற்குலகும் சுயநிர்ணய உரிமையும்  

மேற்குலகு சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருக்கும் என்ற படிமம், ஈழத்தமிழ் அரசியலிலும் விடுதலைப் போராட்டத்திலும் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டதொன்று.   

ஆனால், மேற்குலகு குறிப்பாக அமெரிக்கா, சுயநிர்ணய உரிமையைத் தனது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளது. மேற்குலகின் இரட்டை நிலைப்பாட்டை, பல்வேறு உதாரணங்களில் காணலாம்.  

 ஆசியாவில், இந்தியா உட்பட, பிரித்தானியக் கொலனிகள் பலவற்றுக்குச் சுதந்திரம் வழங்கப்படுவதை, அமெரிக்கா ஆதரித்துப் பேசிய அதேவேளை, வியட்நாமில், மக்கள் போராட்டங்களின் விளைவால், பிரெஞ்சுக் கொலனியவாதிகள் முறியடிக்கப்பட்ட பின்பு, தென் வியட்நாமை, அமெரிக்கா கைப்பற்றியது. அண்மித்த வேறு பல நாடுகளையும் கைப்பற்றியது. அந்நாடுகளில், தனது பொம்மை அரசாங்கங்களையும் நிறுவியது.   

ஆபிரிக்காவில் கொலனிய, நிறவாத ஆட்சிகளுக்கு எதிரான போராட்டங்களைப் பொறுத்தவரை, கொலனி ஆட்சிக்குப் பிந்திய எந்த ஆட்சியும் ஏகாதிபத்திய விரோதமானதாகவோ, சோவியத் ஒன்றியத்தையோ சீனாவையோ நோக்கிச் சாய்வதாகவோ அமையாமலிருப்பதை உறுதிப்படுத்த, ஐரோப்பியக் கொலனிய எஜமானர்களும் அமெரிக்காவும் ஒற்றுமைப்பட்டன.   

இரண்டாம் உலகப் போரின் பின், முன்னாள் கொலனிகளிலும் அரைக் கொலனிகளிலும் ஆட்சிகள் மாற்றப்பட்டுள்ளன; தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்; நாடுகள் தாக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையும் சீனா, சோஷலிசத்தைக் கைகழுவியதையும் அடுத்து, இப்போக்கு மேலும் உக்கிரமானது.  

தேசியப் பிரச்சினையைப் பற்றிய அமெரிக்கக் கொள்கை, என்றுமே உறுதியாக இருந்ததில்லை. ஏனெனில், அது சம்பந்தப்பட்ட தேசத்தினதோ, தேசிய இனத்தினதோ நலன்களின் அடிப்படையிலானதல்ல.   

மாறாக, அது அமெரிக்காவின் உலக மேலாதிக்க வேட்கையின் அடிப்படையிலானது. முன்னுக்குப்பின் முரணான, அமெரிக்க நிலைப்பாட்டுக்கு, எரித்திரியா மிகச் சிறப்பான உதாரணமாகும்.   

1945இல் எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு ஐ.நா தீர்மானமொன்றின் அடிப்படையில், 1952இல் சமஷ்டியாக்கப்பட்டு, மீண்டும் 1962இல் இணைக்கப்பட்ட எரித்திரியாவில், கிளர்ச்சியாளர்களுக்கான அமெரிக்க ஆதரவு கவனத்துக்குரியது.   

அமெரிக்காவும் மேற்குலகும் 1962இல் தொடங்கிய எரித்திரியப் போராட்டத்துக்கு 1977 வரை பகையாயிருந்தனர். சோவியத் ஒன்றியத்துக்குச் சார்பானவரான மெங்கிற்ஸு ஹெய்லே மரியம், 1977இல் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்பு, எரித்திரியப் போராட்டத்தை ஆதரிக்க, அமெரிக்கா முடிவெடுத்தது.   

அதேவேளை, சோவியத் ஒன்றியம், கட்சிமாறி, எதியோப்பியாவில் தனது புதிய கூட்டாளியை ஆதரித்தது. அதே ஆண்டில், எதியோப்பியாவின் ஒகடான் பிரதேசத்தை, சோமாலியா ஆக்கிரமித்ததையும் அமெரிக்கா ஆதரித்தது. இம் முயற்சி, சோவியத், கியூபா இராணுவக் குறுக்கீட்டால் முறியடிக்கப்பட்டது.   

1991இல் மெங்கிற்ஸு ஆட்சி கவிழ்ந்தது. அதே ஆண்டு, எரித்திரியா நிறுவிய ஓர் இடைக்கால அரசாங்கம், 1993இல் ஒரு சர்வசன வாக்கெடுப்பால் வரன்முறையாக்கப்பட்டது. மெங்கிற்ஸுவுக்குப் பிந்திய எதியோப்பியாவில், ஒரு புதிய கூட்டாளி அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலாக, எதியோப்பிய-எரித்திரியத் தகராறுகளில் எதியோப்பியாவின் தரப்பிலேயே, அமெரிக்கா இருந்து வருகிறது.   

அது மட்டுமல்லாது, சோமாலியாவில் தனது பிடியை நழுவவிட்ட பின்பு, அங்கு தனது போர்களை நடத்த, எதியோப்பியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதேபோல நிகழ்வுகள் ஏராளம் உள்ளன.   

இவை எமக்குச் சொல்லிச் செல்வது யாதெனில், சுயநிர்ணய உரிமை என்பது கண்முடித்தனமாகவோ, தேச, தேசிய இனக் கூறுகளின்மேல் அல்லது இனக்குழுக்களின் மேல் அழுத்திச் சுமக்க வைக்கும் ஒன்றல்ல.  

 ஒரு தேசிய இனக்கூற்றின் சுயநிர்ணய உரிமை என்பது, அதன் இருப்பும் உய்வும் அடையாளமும் அச்சுறுத்தப்படும்போது மட்டுமே, சுயநிர்ணய உரிமைக்கு அல்லது பிரிவினைக்கான போராட்டம் உருப்பெறுகிறது.  ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனக்கூறுக்குரிய போராட்டம், சிக்கலானதும் தொடர் வளர்ச்சியுறுவதுமாகும். எந்த இரு போராட்டங்களும் ஒரே மாதிரி அமையமுடியாது.   

பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில், இலங்கை உள்ளிட்ட நாடுகளில், மேலாண்மை உள்நோக்கத்தில் வழிநடத்தும் அந்நியத் தலையீடுகளின் அரசியல் பின்விளைவுகள் மென்மேலும் சிக்கலான நிலைமைகளுக்கே வழிசெய்துள்ளன. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுயநிர்ணய-உரிமையை-நினைவுகூரும்-டிசெம்பர்-06/91-226200

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.