Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏனோ ராதா, இந்தப் பொறாமை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ ராதா, இந்தப் பொறாமை?

twomen.jpg?fit=600%2C313&ssl=1

 

தலைப்பு ஒரு பழைய திரைப்பாடலை நினைவூட்டுமென்று நம்புகிறேன். அதில் பழைய தமிழ்ப் பட மரபுப்படி பெண்களே பொறாமை பிடித்தவர்கள் என்பது போலப் பாடல் அமைகிறது. இதே மரபு அன்றைய நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எல்லாம் தொடர்ந்தது என்பது 1930களிலிருந்து தமிழ் பொது ஜன ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்குத் தெரியும். இன்றுமே தமிழ் தொலைக்காட்சிகளின் அவல நாடகத் தொடர்களில் இந்த மரபின் வேறோர் உரு தொடர்வதையும் கவனித்திருப்பீர்கள். 

இதற்கு மாறாக பொது ஊடகங்களிலேயே தொடர்ந்து வரும் அசல் வாழ்க்கைச் செய்திகளில் பார்த்தால், ஆண்கள் தம் காதல் மறுக்கப்பட்டதால், அல்லது தம்மை மணக்க மறுத்ததால் என்று ஏதோ ஓர் அற்பக் காரணத்தை முன்வைத்து இளம் பெண்களைக் கொல்வதும், எரிப்பதும், முகத்தில் அமிலம் வீசுவதும் என்று பயங்கரர்களாக மாறி வருவதைப் படிப்போம், பார்ப்போம், கவனிப்போம். ஆனால், தொலைக்காட்சிகளில் இந்தப் பயங்கரங்கள், செய்திக் காட்சிகளில் பரபரப்புச் செய்திகளாக ஒளிபரப்பப்படுகின்றனவே தவிர, அதே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் அவலநாடகங்களுக்கும் மட்டும் போய்ச் சேரவே இல்லை. அவை தொடர்ந்து பெண்களை மட்டுமே பொறாமையின் உருக்களாகச் சித்திரித்து மகிழ்கின்றன. 

ஆனால், ஆண்களும் பொறாமை பீடித்தவர்களாக இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை. பாலுறவுகளில் குறிப்பாக பொறாமை என்பது உலகளாவிய ஓர் விஷயமே. உலகில் பன்னாடுகளிலும் பெண்களின் மீது செலுத்தப்படும் வன்முறைகளுக்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடம் எழும் பொறாமையும் ஒரு காரணி. 

ஆனால், இதைப் பற்றிய ஓர் அறிவியல் ஆய்வுத் தொகுப்பு என்ன சொல்கிறது என்பதைக் கொடுக்கும் கட்டுரை இங்கே தொடர்கிறது.

ஸ்டீவ் ஸ்டூவர்ட் – விலியம்ஸ் என்பார் எழுதிய ஒரு நூலிலிருந்து சில பகுதிகளை இங்கே கொடுக்கிறேன். ***

உங்கள் நெருங்கிய தோழி நிறுத்த முடியாத அழுகையோடு உங்களிடம் வருகிறார். ’ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?’ என்று கேட்பீர்கள் அல்லவா? ’நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை;இப்போதுதான் தெரிந்தது; அலெக்ஸ் எனக்குத் துரோகம் செய்கிறார், ’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் உங்கள் தோழி. 

நீங்கள் என்ன செய்வீர்கள்? பொதுவாக, நீங்கள் உங்கள் பதிலை இப்படிச் சொல்லாமல் இருக்கலாம்,  ’இது வருத்தமளிக்கிறது.  ஏன் இப்படி. . . ?’ ஆம்,  பொறாமை. . நாம் அதை அனுபவபூர்வமாக உணர்வதற்கு முன்பே,  உள்ளுணர்வாலேயே அறிவோம் – கணவன்,  மனைவி,  காதலன்,  காதலி இவர்களிடையே நடக்கும் துரோகம் அதிக உள உளைச்சலைத் தரும் என்பதுதான் அது. 

மனித இயல்புகளைப் பற்றி அதிகம் தெரிந்திராத வேற்றுக் கிரக விஞ்ஞானிக்குப் பொறாமை என்பது புதிராக இருக்கலாம்.  நம் நண்பர்களுக்கு  வேறு நண்பர்கள் இருந்தால் நாம் பொறாமைப் படுவதில்லை. ஆனால்,  நம் இணைக்கு வேறு இணைகள் இருந்தால் நாம் கவலைப்படுகிறோம்.  நம் இணை ஒரு நல்ல சாப்பாட்டை நாம் இல்லாமலேயே உண்டார் என்றால் நாம் பொறாமைப்பட மாட்டோம்; ஆனால்,  அவர் மற்றவருடன் உறவு கொண்டார் என்பதில் நமக்குச் சீற்றம் வருகிறது.  நாம் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்றால் அனைத்தும் எளிதாகிவிடும். ஆனால், நம்மால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லையே?

நம்முடைய இந்தச் சிந்தை குழம்பிய செயல்பாடுகள் அந்த வேற்றுக்கிரக விஞ்ஞானிக்கு, இந்தப் பொறாமை எங்கிருந்து வருகிறது என்ற வினாவை ஏற்படுத்துகிறது. பசியும்,  பயமும் போல இது மனிதரிடத்தில் உள்ளார்ந்து இருக்கிறதா? அல்லது ஏழு நாள்கள் கொண்ட வாரம் போல,  பணம் என்பதைப் போல பண்பாட்டின் கண்டுபிடிப்பா?

நம் அறிவியலாளர்களும் இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்-அதில் தற்சமயம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

பொறாமை என்பது ஒரு சமூகக் கட்டமைப்பா? 

விவாதிப்பவர்களில் ஒரு சாரார் அதைப் பண்பாட்டின் கண்டுபிடிப்பு என்றே வாதிடுகின்றனர். இப்படிப் பேசுபவர்கள் ‘ஒரு வேற்றுக் கிரக விஞ்ஞானிக்கு பொறாமை என்பது எப்படிப் பொருள்படுமோ அப்படித்தான்  பல்வேறு கலாசாரங்களில் இது பொருள்படும். எடுத்துக்காட்டாக, இனூயிட் குழுக்களில் மலைப் பழங்குடியினர் தன் மனைவியரில் ஒருவரை முக்கிய விருந்தினருக்கு ஒர் இரவு வழங்கும் வழக்கம் இருந்துள்ளது. பொறாமை என்பது மேற்கத்திய நரம்புக் கோளாறின் சிந்தனை,’ என்கிறார்கள். 

பார்க்கப்போனால்,  மேற்கிலும் இதை ஏற்றுக்கொள்ளும் வகையினர் உண்டு.  நடிகை ஷெர்லி மக்லெய்ன், ‘எனக்கு இணை சார்ந்த பொறாமை கிடையாது’ என்று சொன்னார்.

ஆனாலும், பொறாமை அணுக்களில் உள்ளது என்று சொல்லும் மற்ற சாராருக்கு இதை ஒப்புக்கொள்வது சுலபமில்லை. அப்படி உணர்வது நம் இயற்கையான செயல் என்பது இவர்களின் வாதம். 

இவர்கள் சொல்வது: கல்வியாலும்,  கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,  பண்பாடு,  ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்?நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமா?அப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா? உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்தபட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா? 

பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசும் உளவியலாளர்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை கேள்விகளுக்கும் இல்லையெனப் பதிலளிக்கிறார்கள். பொறாமை என்பது நம் இயற்கைக் குணம்,  உலக மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. இதை ஒத்துக்கொள்ள மறுப்பவர்களின் கூற்றினை அருகி ஆராய்ந்தால் அதன் போதாமை புரிந்துவிடும் என்று சொல்கிறார்கள் இவர்கள். 

இனூயிட்டின் மனைவியைப் பகிர்தலையே எடுத்துக்கொள்ளுங்கள்- மனிதர்கள் இணையை உடமையெனப் பார்க்கும் கூற்றிற்கு மாறுபட்ட உதாரணமாக இதைக் குறிப்பிடுவதை  முதல் பார்வை சொன்னாலும்,  மனைவியைப் பகிர்தலை ஒரு பெரிய விஷயமாக இனூயிட் கருதவில்லை என்பதை நாம் அனுமானித்துக் கொள்கிறோம். இந்த அனுமானம் அவர்களின் வழக்கத்திற்கு நியாயம் செய்யவில்லை;அது ஒரு மிகப் பெரிய தாராளச் சிந்தனையின் அடையாளமே! இனூயிட்களும்,  மற்ற மனிதர்களைப் போலவே தங்கள் காதலிகளையும்,  மனைவியரையும் தங்கள் உடமையெனக் கருதியவர்கள்தான். இது நமக்கு எப்படித் தெரியும்? மனைவியரை உடமை என்று கருதாத பட்சத்தில் அவர்களை எப்படி அறிமுகமில்லாத ஒருவரோடு கலவிக்குப் போ என்று சொல்ல முடியும்? மனைவியருக்குச் சம உரிமை இருக்கிற சமூகத்தில் அவர்களை எந்த ஆணும் பிறரிடம் கலவிக்கு ‘அனுப்ப’ முடியாது. அவர்களே தம் விருப்பப்படி சென்றால் அது பண்பாட்டில் மாறுபாடு உள்ள நிலை என்றாகும். 

உலகில் பெரும்பாலான சமூகங்களில், ஆண்கள் தங்கள் இணையின் மீது செலுத்திய கலவி சம்பந்தப்பட்ட வன்முறைகள்அவர்களிடம் நிலவிய பொறாமையால் விளைந்ததே. பொறாமையற்ற மற்ற சமூகங்களிலும் நிகழ்ந்தது அதுவே. 

இவைகளில் மாற்றுகள் உண்டு. ஆனால்,  அவை எண்ணிக்கையில் குறைந்தவை,  சிதறி இருப்பவை. அதனால்தான் ஷெர்லியின் கூற்றான ‘எனக்கு இணைப் பொறாமை இல்லை’ என்பது  உலக அளவில் சலனத்தை ஏற்படுத்தியது. பல மனிதர்கள் பொறாமைப்படுகிறார்கள். நம்பினாலும்,  மறுத்தாலும்,  அன்புடன் தொடர்புடையது பொறாமை. அழைக்கப்படாத விருந்தினராக அன்புடன் தோழமை பூண்டு அது நிரந்தரமாக இருக்கையில் நாம் அதை எவ்வளவு முயன்றாலும் விலக்கவோ,  விரட்டவோ முடிவதில்லை.  

இப்படித்தான் பிறந்திருக்கிறோம்

இது உண்மையா என்ன?நம்மை அலைக்கழிக்கும் இந்த உணர்வை இயற்கை நமக்கு கொடுத்ததேன்?மன உளவியலாளர்கள் சொல்வது என்ன? ’பொறாமை என்பது தன் இணயைப் பாதுகாப்பதற்கு  என்று ஏற்பட்டுள்ளது. அது துரோகத்திற்கு ஒரு தீர்வாகும்.’

துரோகம் என்பது நம் இனத்திற்கு மட்டுமேயான பொதுவான ஒன்றில்லை- அது அபூர்வமும் இல்லை. மனிதர்களுக்கான குணாதியசங்கள்,  பல விலங்குகளுக்கும் பொதுவானவைதான். ’ஹார்ட் பர்ன்’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி-மெரில் ஸ்டீரிப் ஏற்று நடித்த கதாபாத்திரம் தன் தந்தையிடம் தன் புதுக் கணவன் தனக்கு துரோகம் செய்வதாகச் சொல்வார்;இரக்கமே இல்லாமல் அவர் தந்தை சொல்வார் ’நீ ஒரு தார மண உறவை வேண்டினால் அன்னத்தைக் கல்யாணம் செய்திருக்க வேண்டும்’. அதே நேரம்-விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையும் பார்ப்போம்- அன்னமோ- இணைபிரியா பிற உயிரினங்களோ,  மனிதர்களில் சிலரைப் போல,  தன் இணையைத்தவிர மற்றவற்றோடு எப்போதாவது உறவு கொள்வதை அறிந்தார்கள்; இணையை விடுத்து மற்றொன்றுடன் உறவில் ஈடுபடுவது இணையின்  வெற்றி வளர்ச்சிக்கு மிகப் பெரிய பயமுறுத்தலைக் கொணர்கிறது என்றும் கண்டறிந்தார்கள். 

இதற்கான காரணங்கள் ஆணுக்கும்,  பெண்ணுக்கும் வேறானவை. ஆணுக்கு அவன் தந்தைமை மிக முக்கியமாக இருக்கிறது. உட்கரு உயிரினங்களில் பெண்ணிற்கு தன் கரு தன்னுடையது என்ற உறுதி உண்டு;ஆணைவிட அதைப்பேணும் கருத்தும் அவளுடையதே. தன் உடலிலிருந்து வெளிவரும் குழந்தை தன்னுடையதுதான் என்பதற்கு வேறென்ன உறுதிப்பாடு வேண்டும்? நான் அறிந்த வரை உலக சரித்திரத்தில் பிள்ளை பெற்ற பெண் ’ஒரு நிமிஷம்;இது என்னுடைய பிள்ளையா?என் உடலிலிருந்து வந்ததா? மற்றொருத்தியின் குழந்தை இல்லையே?’ என்று சிந்திப்பதோ கேட்பதோ நடக்கவில்லை. மாறாக,  ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆண் உறவு கொண்ட பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளை அவருடையது எனச் சொல்வது அத்தனை நம்பத்தகுந்த சான்றில்லை. தன் இணை பெறும் குழந்தையைப் பராமரிக்கும் ஆண் அது தன் வம்சம் என எண்ணித்தான் அதைச் செய்கிறான்;ஆனாலும், அது அவனுடையதாக இல்லாமலிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. 

அதனால் இப்படி நடந்திருக்கக்கூடும்;பரிணாம வளர்ச்சியில் தன் வாரிசில் தனிக் கவனத்தைச் செலுத்தும் குணம் மனிதர்களுக்கு மேம்பட்டு வந்திருக்கும்; தன் பக்கத்து வீட்டுக்காரனின் வாரிசை விட அவனுக்கு தன் வாரிசு நெருக்கமானது. அந்தக் குணம் பொறாமை தான்.  அது தன் இணையின் மேல் ஒரு கண் வைத்திருக்கச் செய்யும்;சவாலான அடுத்த வீட்டுக்காரன் மீதும். தன் இணை, பக்கத்து வீட்டுக்காரன் ஆகிய இருவரையும் முடிந்தவரை இணையாகாமல் தடுப்பதற்கு இக்குணம் மனிதனிடம் வந்துள்ளது. 

தந்தைமையைப் பற்றிய தன் கவலைகளுக்காக ஆண்  நிஜமாக பொறாமையைப் பற்றி எண்ண வேண்டியதில்லை. பொறாமைப் படுகிறேன் என உணர்தலே போதுமானது.  ‘நான் ஞானமுள்ளவன்; என் இணை மற்ற ஆணுடன் உறவில் இருந்தால் பொருட்படுத்தாதவன்,’ என்ற சிந்தனையைக் கொண்ட ஆணை விட, தன் இணையைக் காவலில் வைக்கும் ஆணின் வாரிசுகளே அதிகம் என்பதால், அந்த ஆண்களின் பொறாமைக் குணமே சமூகத்தில் அதிக செல்வாக்கைப் பெறத் தேவையான எண்ணிக்கையைப் பெற்று விடுகிறது. 

ஆணிற்கு மட்டுந்தான் பொறாமை ஏற்படுகிறதா?பெண்ணிற்கு இல்லையா?அதற்கான தர்க்க விளக்கங்கள் வேறுவகை. பரிணாம வளர்ச்சியியல் பெற்றோரின் அரவணைப்பைப் பற்றிப் பேசுகிறது. நம் உறவில் குழந்தைகள் பிறக்கிறார்கள்-அவர்களை வளர்ப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு. ஒரு இனிய வலுவான உறவில் இருக்கும் பெண் பெறும் பிள்ளைகள் நன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் அத்தகைய உறவு கிட்டாத பெண்ணிற்கு இல்லையல்லவா?எனவே மற்றொரு பெண்ணிடம் உறவில்லாத ஆணைத் தெரிவு செய்வது ஒரு பெண்ணுக்குத் தேவையாகிறது; கர்ப்பகாலத்திலும், குழந்தை வளர்ப்பு நிகழும் துவக்க வருடங்களிலும் பெண்ணுக்குத் தன்னோடு எப்போதும் நம்பக் கூடிய வகையில் துணையாக, போஷிப்பவனாக இருக்கும் ஆண் தேவையாகிறது. இதற்கும் பொறாமைதான் உதவுகிறது!

பரிணாமத்தில் இது ஒரு கதை என நினைத்தால் பொறாமையுள்ள தன் இணை பிரியா மற்ற உயிரினங்களைப் பாருங்கள். ’கிப்பன்’களில் தன் ஆண் எதிரியை ஆணும், பெண் எதிரியைப்பெண்ணும் விரட்டியடிப்பதைப் பார்ப்பீர்கள். உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலும் நம் இனத்தில் பொறாமை இருப்பதை  அறிகிறோம்;அதே நேரம் பரிணாம வளர்ச்சி பொறாமை பற்றிச் சொல்லும் கோட்பாடும் சிந்திக்கத்தக்கதே.

10 சதவிகித மாயை

ஒரு தர்மசங்கடமான கேள்வியை இந்த விவாதம் எழுப்புகிறது. துரோகம் நம் இனத்தில் பொதுவாக எப்படி இருக்கிறது?தந்தைமையற்ற தரவுகளைப் பார்ப்பது ஒரு வழி; பிறப்புச் சான்றிதழ்களில் காணப்படும் ஆண் அந்தக் குழந்தையின் ‘பயாலாஜிகல்’ தந்தையா என்பதைக் காட்டும் தரவுகள் இதில் எடுத்துக்கொள்ளப்படலாம். 

அதிகமாக அறியப்பட்ட அனுமானங்கள் இதை 10% என்கின்றன;அதிகபட்சமாக 30% வரை சொல்கிறார்கள். அதிக நபர்கள் இந்தப் புள்ளி விவரத்தில் ஆச்சர்யம் அடைகிறார்கள்-அது வியப்பிற்குரியஒன்றுதான். அனேகமாக,  இந்த அனுமானங்களை உச்ச அனுமானங்கள் எனச் சொல்லலாம். இந்த விவரங்கள் தந்தைமையற்ற நிலை பற்றிய ஆய்வுகளிலிருந்து- பொது மக்கள் தொகையைவிட கணிசமான மாதிரித் தரவுகள்- பெறப்படுகின்றன. தொழில் முறையில் தந்தைமைத் தகவுகளைப்  பரிசோனைகள் மூலம்  நடத்தும் நிறுவனங்களிடமிருந்து இவை பெறப்படுகின்றன. இதில் சிக்கல் என்னவென்றால் தங்கள் மகவெனக் கொள்ளப்படும் குழந்தைகள் உண்மையில் தன்னுடையவைதானா என்ற சந்தேகத்தில் வரும் ஆண்கள் இத்தகைய ஆய்வகங்களை நாடுவதால் இந்த நம்பிக்கைத் துரோக எண்ணிக்கையின் நம்பகத் தன்மை சற்று கேள்விக்குள்ளாகிறது. 

இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தந்தைமையற்ற விகிதாசாரம் எதிர்பார்ப்பதைவிடக் குறைவு என வாதாடலாம். தங்கள் வாரிசு தங்களுடையதில்லை என வலுவாக நம்பும் ஆண்களில் மூன்றில் ஒரு பங்கினரே அதிக பட்ச எண்ணிக்கையில் ஏற்க முடிந்தவர். 

சரியான தரவுகளின் அடிப்படையில் தந்தைமையற்றவர் எனக் கருதப்படுவோர் 1% -அது 10% முதல் 30% வரை இல்லை.  எப்படி அன்னங்களைப் போல் நாம் தேவதைகள் இல்லையோ அப்படியேதான் நம்பிக்கைத் துரோகிகளுமில்லை. 

துரோகம் அரிதென்றால் நம்மிடம் பொறாமை ஏன்?தேவையைவிட அதிகமாக நாம் சந்தேகப்படுவதும், பொறாமை கொள்வதுமா?ஆம் என்பதே பதில். இதில் உறுத்தல் என்னவென்றால் அளவிற்கு மீறிய பொறாமை நம்மை நம் இணையைக் காபந்து செய்யத் தூண்டுகிறது;இணை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்கிறது. பொறாமை இந்த விதத்தில் உதவுகிறது!

தன் இணை துரோகம் செய்யக்கூடாதென்ற இந்த சிறு கிறுக்குத்தனம் ஒரு வகையில் பின் முன்னாகச் செயல்பட்டு இனத்தைக் காக்கிறது. நம் இனத்தில் துரோகம் என்பது அரிதானது என்பதற்காக பொறாமை தேவையற்றது எனச் சொல்ல இயலாது. பொறாமை என்னும் அரக்க குணம் செய்யும் அலைக்கழிப்புக்கள் மனிதரிடம் இயற்கையாக உள்ளதால் துரோகம் அரிதாக இருக்கிறது. 

Parts of this article were excerpted,  with changes,  from the book The Ape That Understood the Universe: How the Mind and Culture Evolve by Steve Stewart-Williams (Cambridge University Press)06-12-2019

https://www. sciencefocus. com/the-human-body/where-does-jealousy-come-from/?utm_content=buffer88128&utm_medium=social&utm_source=twitter. com&utm_campaign=buffer

SCIENCE FOCUS BBC

https://solvanam.com/2019/12/29/ஏனோ-ராதா-இந்தப்-பொறாமை/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.