Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பலமாகிறது அமெரிக்க சித்தாந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலமாகிறது அமெரிக்க சித்தாந்தம்

-சி.இதயச்சந்திரன்-

'மயக்கம்" வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆயினும் மயங்காமல் இருப்பதே புத்திபூர்வமானது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜெவ்ரி லன்ஸ்டெட் கூறிய, காலங் கடந்த ஞானத் துளிகள், தமிழ் மக்களிற்கான மயக்க மருந்து வடிவில் வெளிவந்துள்ளது.

இந்த "முன்னாள்" கள் எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள். இந்திய 'முன்னாள்" களும் இதற்கு விதிவிலக்கல்ல. சுருட்டு அணையமுன் வேரறுக்கப்படும் என்று பிரகடனம் செய்த இந்திய அறிஞர், பின்னாளில் யதார்த்தவாதியாக மாறியதும் வரலாறுதான்.

'முன்னாள்" களின் இராஜதந்திர உத்திகள் காலப் போக்கில் பழுதடைந்து, பின்னாளில் சமரச உத்திகளை முன்னெடுப்பதனை இன்னாளில் தரிசிக்கின்றோம்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை சட்டரீதியாக இணைத்த அமெரிக்க குடியரசு, விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துவதில்லையென்பது கொள்கையளவில் மேற்கொள்ளப்பட்டதே தவிர சட்டபூர்வமான தடையல்லவென்று புது வியாக்கியானம் வழங்குகிறது.

மயக்கம் தரும் குழப்பகரமான வார்த்தை ஜாலத்தை லன்ஸ்டெட் வெளியிட்டுள்ளார். பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து சட்டபூர்வமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கினால் இவ்வாறான சட்டக் குழப்பங்கள் லன்ஸ்டெட்டிற்கு ஏற்படாது. கொள்கையளவிலும் புலிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தடையாகவிருப்பது இது காலவரை எதுவாக விருந்ததென்பது அவருக்கு நன்றாகப் புரியும்.

பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாகவிருந்த ஐரோப்பிய யூனியன், பேசும் போதே புலிகளுக்குத் தடை விதித்ததால் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலிருந்து யூனியன் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டார்கள். இதுவும் 'கொள்கையளவில்" புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விடயம்தான்.

'தடை" விதித்தபடி பேசலாமென்கிற அரசியல் நாகரிகம், மேற்குலகின் ஜனநாயக வரலாற்றிற்கு பொருத்தமானதாகவிருந்தாலும் விடுதலைக்கான போராட்டத்தை மலினப்படுத்தும் சக்திகளோடு உறவாட மக்கள் விரும்ப மாட்டார்கள்.

அரசு மேற்கொள்ளும் வான்வெளித் தாக்குதல்களும், கிழக்கு மண்ணை கைப்பற்றும் நகர்வுகளும் விடுதலைப் புலிகளை அழித்து விடுமென கற்பிதம் கொண்ட மேற்குலகச் சிந்தனை, வான் புலிகளின் வரவோடு தடுமாற்றமடைவதையே 'லன்ஸ்டெட்டின்" விமர்சனம் வெளிப்படுத்துகிறது.

இந்திய நகர்வுகளால் உருவான பதற்றமே புலிகளை நோக்கிய 'வாய்க்கால்" வெட்டும் பணி. புது வெள்ளப் பாய்ச்சலிற்கு தயார்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் கடும்போக்கு அதிகரிக்கும் இவ்வேளையில், இடுக்கினுள் புகுந்து, இன்னுமொரு பாலஸ்தீனப் பிரதியாக்க வடிவத்தை களத்தினில் விரித்துவிட அமெரிக்கா முனைவதாகவே கருத இடமுண்டு. உள்நுழைய அனுமதித்து, சிக்குண்டு கரையொதுங்கிய போது, அரபாத்தை வெள்ளை மாளிகைக்கு அழைத்து இஸ்ரேலுடன் கைகுலுக்கச் செய்து இறுதியில் நட்டாற்றில் விட்ட அமெரிக்க புராணம், இராமாயணத்தை விட சுவாரசியமான சோகக் கதை.

இந்த அமெரிக்க பருப்பு, வன்னிக் களத்தில் வேகுமா? இல்லையா? என்பதை சொல்லாமலே புரிந்துகொள்ளலாம். மக்களால் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட இறையாண்மையுள்ள இலங்கை அரசு, தம்மிடமிருந்து உதவி பெறுவதற்குரிய உரித்துக் கொண்டதென அமெரிக்க தத்துவம் கூறுகிறது.

ஆனாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தம்மால் பயங்கரவாத இயக்கமாக குறி சுடப்பட்ட 'ஹமாஸ்" இயக்கத்திற்கு அந்த உரிமையை வழங்க இந்த அமெரிக்க தத்துவம் மறுக்கிறது.

அமெரிக்காவின் 'சுயவிமர்சனம்" எப்போதுமே மயக்கமானதுதான். தன்னால் இறக்குமதி செய்யப்பட்ட ஜனநாயகத்தை மட்டுமே ஈராக்கில் அங்கீகரிக்கும்.

பெரும்பான்மை இன மக்களின் அரசியல் அபிலாஷைகளை 'ஜனநாயக" முறைமையின் ரிஷி மூலமாகக் கொண்டால், வட அயர்லாந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண அமெரிக்கா, பிரித்தானிய மத்தியஸ்தம் தேவைப்பட்டிருக்காது.

தொலைக்காட்சிகளில் பல காலமாக ஊமையாக்கப்பட்ட வட அயர்லாந்து சின்பெயின் கட்சியின் தலைவர் ஜெரி அடம்ஸை குரலிழந்த விடுதலைப் போராளியாக ஆக்கியதும் இந்த ஜனநாயகங்கள்தான்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இலங்கை அரச தலைவரை முழு நாட்டிற்குமான தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதராகக் கற்பிதம் கொள்வது அமெரிக்காவிற்கு தோதாகவிருக்கும். இவ்வகையான ஜனநாயக விற்பன்னர்கள், வான்வெளி அடியோடு புதுநகர்வினை மேற்கொள்வது புதினமானதொன்றல்ல.

திருமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தை விட சிங்கப்பூரை முக்கிய மையமாகக் கருதுவதாகக் கூறி இந்தியாவை சாந்தப்படுத்த முனைகிறார் முன்னாள் அமெரிக்க தூதர்.

இந்தியா, கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது போன்று, திருமலைத் துறைமுகத்தை இந்தியாவிற்கு விட்டுக் கொடுக்கலாமென்ற தோரணையில் அமைகிறது அமெரிக்க தத்துவம்.

சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியே இவ்வாறான தத்துவங்களை அமெரிக்க வாயூடாக உதிர்க்க வைக்கிறது. சீனாவைக் கண்காணிக்க சிங்கப்பூர் போதுமென்பதே சொல்லப்படாத செய்தி.

தென் ஆசியாவின் கடல் வழித் தலைவாசல் பாதையில் திருமலைத் துறைமுகம் இல்லையென்பதையும் தூதுவர் முன்வைக்கிறார். நீண்ட காலத்திற்கு முழு தென்னாசியாவிற்கும் எண்ணெய் விநியோகத்தை செய்யக் கூடிய, நிலத்தடி சேமிப்புக் குதங்கள், துறைமுகத்தை அண்டிய சீனன்குடாவில் இருப்பதை மிக இலகுவாக மறைத்து விட்டார்.

இனி வரும் சுயவிமர்சனங்களில் சீனக்குடாவும் வரும், மன்னார் கடல் படுக்கையிலுள்ள எண்ணெய் வளமும் வரலாம். எம்மவர்க்குத் தெரியாத, ஆயினும் இவர்களுக்குப் புரிந்து இந்து சமுத்திரம் பிராந்தியம் குறித்த ஆழமான கருத்து நிலையொன்று உண்டு.

அதாவது, முழு தென்னாசியப் பிராந்தியத்திற்கான கேந்திர முக்கிய நகர்வுகளைத் தீர்மானிக்கும் அசைவியக்க, சக்தி மையம், (Pivotal Force) இலங்கை என்பதே அக் கருத்துருவமாகும்.

அம் மையத்தில் பிறிதொரு சக்தி, விடுதலைப் புலிகளாகவோ அல்லது வேறெதுவாகவோ இருந்தாலும் அதைப் பிராந்திய நலன் விரும்பிகளால் ஜீரணிக்க முடியாதென்பதே யதார்த்தமாகும். முன்னாள் தூதுவர் கூறுகிறார்... "Presumably, The LTTE designation was based on adetermination that peace and security in Southasia were important to U.S. national security and that they were threatened by the LTTE." ஆழ்மனத் தூக்கம் கலைந்து, தமது உள்மனக் கிடக்கையினை தெளிவாக முன்வைக்கிறார் லன்ஸ்டேட்.

அதாவது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு, தென்னாசியப் பிராந்தியத்தில் அமைதியும் பாதுகாப்பான சூழ்நிலையும் நிலவ வேண்டுமெனவும், அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக அமைவதாக அமெரிக்கச் சிந்தனை வெளிப்படுத்துகிறது.

ஈழப் போராட்ட ஆரம்ப காலங்களில் இந்த 'மையச் சக்தி" குறித்த கருத்து நிலை முன்வைக்கப்பட்ட போது, கவனத்தில் கொள்ளப்படாததொரு நிலைமை பரவலாகக் காணப்பட்டது.

இருப்பினும் 1987 ஆம் ஆண்டு உதயன் விஜயன் என்பவர்களால் எழுதப்பட்ட 'இந்து மகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்" என்ற நூலில் இது பற்றி விரிவாக ஆராயப்பட்டிருந்தது.

ஆயினும் இந்தியாவை மையமிட்டு ஈழ விடுதலை பற்றிய கருத்தாடல்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்க நலன் குறித்து அக்கறை கொள்ளாமல், அதீத கற்பனை என்கிற நகையாடலுடன் புறந்தள்ளப்பட்ட காலமும் உண்டு.

தற்போதைய போராட்ட வளர்ச்சியின் உச்சக்கட்ட நிலையில் முன்பு கற்பனையாக உருவாக்கப்பட்ட புறச் சக்திகளின் நிஜமுகங்கள் நிதர்சனமாவதை இன்று காண்கின்றோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு, சட்டபூர்வ நியாயப்பாடுகளுக்கு உட்பட்ட சோகங்கள் உண்டென்று அமெரிக்கா அங்கீகரிப்பதாக முன்னாள் தூதுவர் கூறுகிறார்.ஆயினும் போராடித்தான் அதைப் போக்க வேண்டுமென்கிற வழிமுறைகளையும் சிந்தனையையும் நிராகரிக்கிறார்.

ஏனெனில், ஆயுதப் போராட்டமும், சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும், அமெரிக்க தேச நலனிற்கு அச்சுறுத்தலாக அமைகிறதென்பதை பகிரங்கமாகக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார். 'உனது துன்பங்களை நான் உணர்கின்றேன். உனக்கான உரிமைகளையும் அங்கீகரிக்கிறேன். ஆனாலும் போராடாதே. எனது தேசிய பாதுகாப்பிற்கு அப்போராட்டம் ஆபத்தாக அமையும்." இதுதான் அமெரிக்கத் தத்துவம்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (20.05.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/21.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.