Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா?

சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி
coronavirus lockdown cause food shortages in IndiaGetty Images

மார்ச் 31-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைதியில் உறைந்தது.

மகாராஷ்டிர மாநிலம் லசங்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அந்த சந்தையில் எப்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தடி நிறைந்திருக்கும். இந்தியர்களின் உணவில் முக்கியப் பாத்திரம் வகிக்கும் வெங்காயத்தை ஏற்றுவது, இறக்குவது, வகை பிரிக்கும் பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த சந்தையில் அப்போது இல்லை. 

இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத்தை வாங்கி விற்கும் இந்த சந்தை, மூன்றுவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு எப்படியோ சமாளித்துக் கொண்டு இயங்கியது. 

இந்த ஊரடங்கு காரணமாக பஸ், ரயில், விமானப் போக்குவரத்து மட்டும் முடங்கவில்லை. முன்னெப்போதும் பார்த்திராத அளவுக்கு புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது பணியிடங்களில் இருந்து தொலை தூரங்களில் உள்ள அவர்களது சொந்த கிராமங்களை நோக்கி விரட்டியது. 

ஆனால் விவசாயத்தை அத்தியாவசிய சேவை என்று மத்திய அரசு அறிவித்துவிட்டதால், விவசாயிகள் தொடர்ந்து நிலத்துக்குச் சென்று வெங்காயம் பறித்தனர். குறைந்த அளவு தொழிலாளர்களைக் கொண்டு லசங்காவ்ன் சந்தை தொடர்ந்து இயங்கியது. 

காலியாக கிடக்கும் சாலையில் சந்தைக்கு செல்லும் விவசாய விளைபொருள் ஏற்றிய வண்டி ஒன்று.Getty Images காலியாக கிடக்கும் சாலையில் சந்தைக்கு செல்லும் விவசாய விளைபொருள் ஏற்றிய வண்டி ஒன்று.

ஆனால், சந்தை இருக்கும் பகுதியில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பீதி பரவத் தொடங்கியது. சந்தை இயங்குவது நின்று போன நாளில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், ஏற்றுமதிக்காக மும்பை துறைமுகத்துக்கும் செல்வதற்குத் தயாராக 450 டன் வெங்காயம் காத்துக்கொண்டிருந்தது. 

“முதலில் லாரிகள் வருவது நின்றது. பிறகு கொஞ்சம் தொழிலாளர்கள் கிளம்பினார்கள். அதன் பிறகு வைரஸ் தொற்றியது பற்றிய செய்தி வந்தது. பிறகு மீதமிருந்த தொழிலாளர்களும் கிளம்பிவிட்டனர்” என்று மனோஜ் ஜெயின் என்ற வியாபாரி என்னிடம் கூறினார். நெரிசல் மிகுந்த வெங்காய ஏலச்சந்தையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மிகவும் கடினமாகவும் இருந்தது என்றும் அவர் கூறினார். 

1700 கி.மீ. தூரத்துக்கு அப்பால், பிகார் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு விவசாயி இதே போன்ற சங்கடத்தில் இருந்தார். 
 

சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள தமது 30 ஏக்கர் பண்ணையில் நெல், காய்கறி, பழங்கள் விளைவிக்கிற, கால்நடைகள் வளர்க்கிற மனுவந்த் சௌதரி என்கிற அந்த விவசாயி, சாலைக்கு அந்தப் பக்கத்தில் இருந்து வருகிற தொழிலாளிகள் வேலைக்கு வர மறுப்பதாக என்னிடம் சொன்னார். 

சாலையைக் கடந்து நிலத்துக்கு வருவதற்கே அவர்கள் பயப்படுகிறார்கள். வந்தால், திரும்பிப் போக அனுமதிக்கமாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறினார் சௌதரி. 

“வைரஸ் பற்றி ஏராளமான தவறான தகவல்கள், சமூக அச்சம் நிலவுவதால், அந்த கிராம மக்கள் வெளியே செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டனர். அவ்வப்போது கைகளைக் கழுவ வேண்டும் என்று நான் சொன்னபோது, அதற்குப் பதில் பசுவின் கோமியத்தை குடிக்கலாமா என்று அவர் கேட்டார். விளைநிலத்தில் பயிர்வேலை செய்யும்போது எங்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை” என்று கூறினார் சௌதரி. 

இந்தியாவில் சரிபாதிக்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் விவசாயத்தில் இருந்து வருகிறது. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, காய்கறி, பால் ஆகியவற்றை உலகில் அதிக அளவு உற்பத்தி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

இப்போது வேளாண் நடவடிக்கைகளை நிறுத்துவது விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கும் என்பதைத் தாண்டி உணவுப் பாதுகாப்பையே இது பாதிக்கும் என்ற அபாயம் இருக்கிறது. 

இந்தியாவில் வேளாண் நடவடிக்கைகள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மிக உச்சமாக இருக்கும். எனவே முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நேரம் மிக மோசமானது.

இந்த மாதங்களில்தான் குளிர்காலப் பயிர்களான கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் ஆகியவை அறுவடை செய்யப்பட்டு விற்கப்படும். பழங்களும் அதிக அளவில் விளையும் பருவம் இது. கோடைகால – மானாவாரிப் பயிர்களை, நெல், பயறு வகைகள், பருத்தி, கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் விதைக்கும் காலமும் இதுவே. 

இந்த இருவகைப் பருவங்களையும் முடக்க நிலை அறிவிப்பு பாதித்துள்ளது என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் இணைப் பேராசிரியர் மேகலா கிருஷ்ணமூர்த்தி. 

 

முடக்கநிலை அறிவிப்புக்கு முன்பே இந்திய விவசாயிகளின் பாடு போராட்டமாகவே இருந்தது. விளைபொருள்களின் விலை குறைவாக இருப்பதன் காரணமாக ஊரக நுகர்வு மந்தகதியில் இருந்தது. ‘சாதாரண’ நிலையிலேயே கூட விவசாயம் கட்டுப்படி ஆகாத ஒன்றாகவே ஆகிப்போனது என்கிறார் சௌதரி.

1997க்குப் பிறகு சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவற்றில் பெரும்பாலான தற்கொலைகள் வறுமை, கடன், இடுபொருள்களின் கடும் விலை உயர்வு, பூச்சி தாக்குதலால் பயிர் அழிவு ஆகிய காரணங்கள் தொடர்புடையவை. 

உணவுப் பாதுகாப்புக்கும், ஏழைகளுக்குப் பணப் பட்டுவாடா செய்யவும் அரசாங்கம் இதுவரை 1.74 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் இது போதுமானதல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன.
 

விளைபொருள்களை கொள்முதல் செய்ய மாநில அரசுகள் நிதியைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றன. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு டிராக்டர்களை கடனாக வழங்கத் திட்டமிடப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அவற்றை இயக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. பொதுப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாமல் அளிப்புச் சங்கிலி பழைய நிலைக்கு எப்படித் திரும்பும் என்பதும் தெளிவாக இல்லை. 

அது தவிர, வேறுபல கடினமான சவால்களும் உள்ளன. புலம் பெயர் தொழிலாளர்களை மீண்டும் விளைநிலத்துக்கு வரவைப்பது எப்படி? நிச்சயமற்ற நிலையில் உள்ள வியாபாரிகள் எவ்வளவு விரைவாக, முடக்கநிலைக்கு முன்பு செய்த அளவுக்கு கொள்முதல் செய்வார்கள்? அவர்கள் குறைவாக கொள்முதல் செய்தால் ஒரே நேரத்தில் நுகர்வோருக்கு சந்தையில் உணவுப் பொருள்களின் விலை உயரும், விவசாயிகளுக்கு விளைபொருள்களில் இருந்து கிடைக்கிற வருமானம் மேலும் குறையும்.

ஆனால் கெட்ட செய்திகள் மட்டுமே இல்லை. களத்தில் சூழ்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Will coronavirus lockdown cause food shortages in India?AFP

இந்தியாவில் மொத்தம் சுமார் 7,500 மொத்த விற்பனை விவசாய விளைபொருள் சந்தையும், 25,000 சிறிய அளவிலான வாரச் சந்தைகளும் உள்ளன. “அவற்றில் சில மீண்டும் திறக்கப்படுகின்றன. எப்படி விளைபொருள்களை சந்தைகளுக்கு கொண்டுவருவது என்பது பற்றியும், சந்தைகளில் எப்படி சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்படுகின்றன” என்கிறார் மேகலா கிருஷ்ணமூர்த்தி. 

குளிர்கால பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருந்தது என்பது இன்னொரு நற்செய்தி. இந்தியாவின் உணவுக் களஞ்சியம் நிரம்பி வழிகிறது. அதில் 6 கோடி டன் உணவு தானியம் குவிந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய அரசால் நடத்தப்படும் உணவு விநியோகத் திட்டம் இது. எனவே உணவுப் பற்றாக்குறை தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் மாமூல் நிலை திரும்பும் வரை விவசாயிகள், குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியவர்களை ஆதரித்துக் காப்பது, ஏழைகளுக்கு உணவைக் கொண்டுபோய் சேர்ப்பது, அடுத்த பருவத்துக்கான அறுவடை நடப்பதை உறுதி செய்வது ஆகியவையே சவாலான பணிகள். 

farmer கணேஷ் நானோட்

மலையளவு சோதனைகள் வந்தாலும், கலங்காமல் சகஜ நிலைக்குத் திரும்பும் வல்லமை மிக்கவர்களாக விவசாயிகள் காட்சி தருகிறார்கள். 

“சந்தை மூடப்பட்டுள்ளதும், போக்குவரத்து இல்லை என்பதும் எங்கள் பிரச்சனை. எனவே எங்களால் பொருள்களை விற்கமுடியவில்லை. ஆனால் நான் தற்போது என் வயலில் தன்னந்தனியாக வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்று தொலைபேசி வழியாகத் தெரிவித்தார் மகாராஷ்டிர மாநிலம், அகோலா என்ற இடத்தைச் சேர்ந்த கணேஷ் நானோட் என்ற பருத்தி விவசாயி. பிறகு, தாம் நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக, தனது வயலில் இருந்து எனக்கு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினார்.


 

https://www.bbc.com/tamil/india-52202568

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.