Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் செயலணி: பேரபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் செயலணி: பேரபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

Johnsan Bastiampillai   / 2020 மே 31

image_7029178ba9.jpg

 

1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், 'புல்டோசர்' இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக் குளத்துக்குள் போடும்படி, கூறுகிறார்.

சிலநாள்களின் பின்னர், அந்தக் கற்றூண், அம்பாறையில் உள்ள கல்லோயா அபிவிருத்திச் சபையின் அலுவலகத்துக்கு முன்னால், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காரணம், அந்தக் கற்றூணில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட சாசனம் காணப்பட்டது. அதில், குளத்துநீரை நீர்ப்பாசனத்துக்காகப் பங்கிடுவது தொடர்பான விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லோயாப் பிரதேசம், சிங்கள மக்களின் பூர்வீகப் பிரதேசம். இத்தகைய,  சிங்களவர்களின் பாரம்பரிய பிரதேசங்களை, தமிழர்கள் மறைக்க முற்படுகின்றனர் என்று, இச்சம்பவத்தின் பின்னர், பிரச்சாரம் ஒன்று சிங்கள மக்கள்  மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட சம்பவம், கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்ட வேலைகளின்போது இடம்பெற்றதாகும்.

பின்னர், இக்கற்றூணிண் உள்ளடக்கங்கள் எவையும் வெளியிடப்படவில்லை; அது மறைக்கப்பட்டுவிட்டது. தமிழர் பகுதிகளில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை, சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காக அப்போது, மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியாகவே இது கருதப்படுகின்றது. 

ஆனால், கல்லோயா குடியேற்றப் பிரதேசம், பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி ஆகிய இடங்களை அண்டிய தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களை உள்ளடக்கியதாகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதேசங்கள் தமிழர்களின் பாரம்பரிய இடப்பகுதிகள் தான் என்பதை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் களஆய்வுநடத்தி, ஆதாரபூர்வமாகவும் விஞ்ஞானரீதியாகவும் நிரூபித்து, அவற்றை ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தப் பகுதிகளின் வரலாற்று ஆய்வுகள் குறித்துப் பார்வைசெலுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

'ஒரு நாடு; ஒரு மொழி' என்ற தொனிபொருளில், இலங்கையை பௌத்த-சிங்கள நாடாக மாற்றும் கைங்கரியத்தில், சிங்களப் பேரினவாதம் ஈடுபட்டிருக்கின்றது. இதனை எதிர்த்துத் தனது மொழியையும் தனது இருப்பையும் பாதுகாக்கத் தமிழ்த் தேசியவாதம் போராடிக்கொண்டிருக்கின்றது. இன்றைய யதார்த்தத்தை, மிக எளிமையாக இவ்வாறுதான் சொல்ல முடியும்.

ஆனால், பிரித்தானியர் இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து, ஒரு நாடாக்கிய காலத்தில் இருந்து, 1930 வரையான காலப் பகுதி வரையில், சிங்கள-பௌத்த இயக்கங்களும் தமிழ்-இந்து இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கவில்லை. ஆங்கிலேய கொலனித்துவத்துக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்துக்கும் எதிராக, ஒன்றுக்கொன்று துணைபோனவையாகவே கைகோர்த்துப் பயணித்திருந்தன.

இருந்தபோதிலும், சிங்கள-பௌத்த இயக்கங்கள், ஆங்கிலேயரிடமிருந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாகத் தாம்தான் கைப்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும், தமிழரின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, அவற்றில் சிங்கள மக்களைக் குடியேற்றுவது தொடர்பில், அப்போதிருந்தே காய்களை நகர்த்த ஆரம்பித்திருந்தன.

உண்மையில், தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற குடியேற்றத் திட்டங்களை, பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட காணிக் கொள்கைகளுடன் ஒப்பிட முடியும். இரண்டுக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை. இலங்கை முழுவதையும் கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி இராட்சியத்தைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடினர்.

கண்டி இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முன்னர், அதன் எல்லைப் பிரதேசங்களை, ஏனைய பிரதேசங்களுடன் இணைத்து, கண்டியின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் அமைந்த காணிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே, வடக்கு-கிழக்கில் காணிகளை அபகரிக்கும் இலங்கை அரசின் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அதாவது, எல்லை ஓரங்களில் இருந்த தமிழரின் பூர்வீக பிரதேசங்களை, சிங்களப் பிரதேசங்களுடன் இணைப்பதன் மூலம், அதன் தனித்துவத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையையே அரசாங்கம், மிகநுட்பமான முறையில் மேற்கொண்டு வந்திருக்கின்றது.

காணி அற்றோருக்கு காணி வழங்குதல், நெல், உப-உணவு உற்பத்தியைப் பெருக்கி வருமான மட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக வறுமையை நீக்குதல், கிராமிய மட்டத்தில் நிலவும் வேலையின்மையை நீக்குதல், சமூக, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் என காணிக் கொள்கையும் குடியேற்றத் திட்டங்களின் நோக்கங்களும் அமைந்திருந்தன.

பிரதானமான ஏழு குடியேற்றத் திட்டங்களுக்கு, பின்வருமாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இத்திட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்டவையாகவே வெலிஓயா, கல்லோயா, துரித மாகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்திருந்தன.

1.            நடுத்தர மட்டத்திலான நீர்ப்பாசன திட்டங்கள்

2.            மழை நீர்ப்பாசன பண்ணை அபிவிருத்தி குடியேற்றத் திட்டங்கள்

3.            அத்துமீறிய குடியேற்றங்களை ஒழுங்குபடுத்தல்

4.            காணிக் கொடைகள் (சிறப்பு ஏற்பாடுகள்)

5.            இளைஞர் குடியேற்றத் திட்டங்கள்

6.            கிராம விரிவாக்க குடியேற்றத் திட்டங்கள்

7.            உயர்நிலக் குடியேற்றத் திட்டங்கள்

ஆனால், இத்தகைய குடியேற்றத் திட்டங்களால் அதன் நோக்கங்கள் அடையப்பெற்றனவா என்ற வினாவுக்கு விடை, இன்றுவரை குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் கிராமிய வறுமையும் தொழில் இன்மையும் மோசமடைந்து காணப்படுகின்றது என்பதாகவே உள்ளது. எனவே, அரசாங்கத்தால் பல்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத்த திட்டங்கள், தமது அபிவிருத்தி நோக்கங்களை அடையத் தவறிவிட்டன என்பதே உண்மை நிலையாகும்.

ஆனால், 1948ஆம் ஆண்டு முதல், பதவிக்கு வரும் எந்தவோர் அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களின்  நடைமுறைகளை மாற்றாமல், இன்றுவரை காலநேரவர்த்தமானங்களுக்கு ஏற்ப, பின்பற்றி வருகின்றமைக்கான காரணம், வெளிப்படுத்த முடியாத வேறு நோக்கங்களில், அரசாங்கம் வெற்றி அடைந்திருக்கின்றது என்பதேயாகும்.

1881ஆம் ஆண்டில், வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை, 7,326 (1.78 சதவீதம்) ஆகும். ஆனால், 1981ஆம் ஆண்டில், 278,829 (13.4 சதவீதம்) சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளார்கள். குறிப்பாகத் திருகோணமலையில், 1881ஆம் ஆண்டில் 935 சிங்களவரே வாழ்ந்துள்ளார்கள். 1946இல் இவர்களின் தொகை 11.850 (5.8 சதவீதம்) ஆக அதிகரித்து, 1981இல் 85,503 ஆக அதிகரிக்கச் செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்தாண்டு காலத்தில், அதாவது 1960இல் அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகி இருந்தார். இதேபோல், அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 1977இல் சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 

2015ஆம் நடைபெற்ற தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இருந்து, இரண்டு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் இருந்து நான்கு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறு, தமிழ் இனத்தின் நிலப்பரப்பை, அதன் இருப்பை, ஆளுகையை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழிப்பதில், சிங்களப் பேரினவாதம் வெற்றிகண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

போர் ஓய்வுக்குப் பின்னர், சிங்களப் பௌத்த பேரினவாதம், இலட்சக்கணக்கில்  சிங்கள மக்களை அழைத்துவந்து, அபிவிருத்தி என்ற பெயரில் குடியேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் அக்கறை செலுத்துகிறது. நிலங்களை அபகரித்துத் தக்கவைத்துக் கொண்டால், எப்பொழுதும் குடியேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது போலும்.

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களை இணைத்து, இன ஒற்றுமைக்கு உதவுதல் என்ற தொனிபொருளில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெளிநாடுகள் பெருமளவில் நிதிஉதவி செய்திருந்தன. ஆனால்,  போர்க்குற்றம், இனஒடுக்குமுறை போன்ற குற்றச்சாட்டுகள், இலங்கை அரசின் மீது படிந்திருப்தால், இப்போது தனது வழிமுறையை மாற்றி, மிகச் சூட்சுமமாக முன்னெடுத்துச் செல்ல எத்தனிக்கிறது. 

image_57eb31c129.jpg

அதன் அடுத்தகட்ட வீரியமான செயற்பாட்டுக்கு ஏதுவாகவே, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தன தலைமையில் 'கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி விசேட செயலணி' ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலணி, என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விக்கு அப்பால், இந்தச் செயலணியால் என்ன செய்ய முடியாது என்பது குறித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், பாதுகாப்புச் செயலாளர் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்த பதவியாகும். முப்படைகளையும் கட்டுப்படுத்தக் கூடிய பதவி இதுவாகும்.

கிழக்கில், பல அரச திணைக்களங்கள் ஊடாக அடையாளமிடப்பட்ட இடங்களில், மக்களின் கடும்எதிர்ப்புகள், போராட்டங்கள் காரணமாக, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல், கிடப்பில் இருக்கின்றன. எனவே, சக்தியும் அதிகாரமும் மிக்க ஒரு செயலணி ஊடாக, அடையாளப்படுத்தப்படுத்தப்பட்ட இடங்கள் சொந்தம் கொண்டாட முயற்சிக்கப்படவுள்ளன.

மக்கள் ஒன்றுகூட முடியாத, சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் போன்ற சட்டங்கள், கொவிட்-19 இன் சூழலில் அமலில் உள்ளமையால், மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படலாம். இதனால், எதிர்ப்புப் போராட்டங்களை மக்கள் நடத்த முடியாமல்ப் போகும். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, 'செயலணி'  காலூன்ற எத்தனிப்பதைத் தடுக்கமுடியாமல்ப் போகும். கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்ற இந்தப் பேரபாயத்தை, தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள். அதற்கான தந்திரோபாயங்கள் என்ன?

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கில்-பௌத்த-சின்னங்களைப்-பாதுகாக்கும்-செயலணி-பேரபாயத்தை-எதிர்கொள்வது-எப்படி/91-251113

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.