Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும்

இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் திட்டம் தேவையானது தான். ஆனால் அது அழிவு அரசியலாக அமைந்துவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் என்ற தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத இலங்கையில் இந்திய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது. முரளிதரனைத் தமிழராக காட்ட முற்படுவது எவ்வளவு தவறானதோ அதைவிட ராஜபக்ச அரசிற்கு துணை போகும் தமிழ்த் தேசிய அரசியலும் தவறானது தான்.

மலையகத் தமிழர்கள்

spacer.png

இலங்கையின் மத்திய பகுதியில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் 19ம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் நாடுகடத்தப்பட்டு தென்னிந்தியாவிலிருந்து அடிமைகளாகப் பிடித்துவரப்பட்டவர்கள்.
இலங்கையின் பிரதான அன்னியச் செலவாணி தேயிலை உற்பத்தியே. அந்த வருமானத்தை இலங்கைக்கு ஈட்டித்தந்த மலையகத் தமிழகர்களின் வாக்குரிமை 1948 ஆம் ஆண்டு டி.எஸ் சேனாநாயக்க பிரதமராகப் பதவி வகித்த போது நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அன்றைய குடியுரிமைப் பறிப்பிற்கு ஆதரவளித்த தமிழ்க் கட்சிதான் இன்று வடக்கு கிழக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் தலைமை தாங்கப்படும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்.

பின்னதாக 1964 ஆம் ஆண்டு சிரிமாவோ பண்டாரநாயக்க பிரதமாரகப் பதவி வகித்த காலப்பகுதியில் சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பகுதி மலையக மக்களை அங்கிருந்து அவர்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதாக முடிவானது. தாம் வளப்படுத்தி வாழ்ந்து களித்த சொந்த மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பிடிங்கியெறியப்பட்டார்கள்.
மலையகத் தமிழர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் தனியான தேசிய இன்மாகவே தம்மை உணர்கின்றனர். வட கிழக்கிலிருந்த அரசியல் கட்சிகள் பல மலையக மக்கள் மத்தியில் வாக்குச் சேர்க்க முனைந்த போதும் தோற்றுப் போயின.

மலையக மக்கள் மத்தியில் அவர்களுக்கான தனியான கட்சிகளே செயற்படுகின்றன. அவர்கள் தம்மைத் தனியான தேசிய இனமாகவே உணர்சிகின்றனர். மலையக மக்களின் கலை இலக்கிய கலாச்சார வடிவங்கள் ஆகட்டும், அரசியல் எழுச்சிகள் ஆகட்டும் தமது தேசிய இனம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றன.

வட – கிழக்கில் ஈழப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றிய போது, “இடதுசாரி” கருத்தியலை உள்வாங்கிக் கொண்டவைகளாகக் கருதப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்றவை மலையக்கத்தையும் தமது ஈழ வரைபடத்தில் இணைத்துக்கொண்டு அங்கு தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முனைந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை, மாறாக மலையக மக்கள் மத்தியிலிருந்து மலையக மக்கள் விடுதலை முன்னணி போன்ற தனியான இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ, புளட் போன்ற வலதுசாரி இயக்கங்களாகக் கருதப்பட்டவைகள் மலையக மக்கள் தனியானவர்கள் என்ற கருத்தை அவ்வப்போது முன்வைத்த அதே வேளை அங்கு அவர்கள் அரசியல் செயற்பாடுகள் காணப்படவில்லை.

மலையக மக்கள் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போலன்றி, கல்வியறிவு கூட மறுக்கப்பட்டு கூலித் தொழிலாளர்களாக மட்டுமே பேணப்படும் அரச நிறுவன முறையை இலங்கை அரசு பேணி வருகிறது. இந்த ஒடுக்குமுறை வட – கிழக்குத் தமிழர்கள் மத்தியிலிருந்தும் அவர்கள் மீது செலுத்தப்படுகிறது.

மலையகத்தில் பெரும்பாலான நிர்வாகிகளும் ஆசிரியர்களும் யாழ்ப்பாணத்திலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டார்கள். கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் வீட்டு வேலையாட்களாக மலையக மக்களே பணியாற்றுகின்றனர்.

திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கை அரசின் ஒடுக்குமுறையோடு வட – கிழக்குத் தமிழர்களின் ஆதிக்கமும் இணைந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்க்கும் அப்பால், 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கைக்குச் சென்ற தென்னிந்தியத் வர்த்தக சமூகம் ஒன்றும் மலையகத் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தது. அவர்களைக் கூலிகளாகவே நடத்த ஆரம்பித்தது. இந்த வர்த்தக சமூகம் யாழ்ப்பாணத் தமிழர்கள் போலன்றி இலங்கை அரசோடும் நல்லிணக்கத்தைப் பேணியது. அவர்கள் தம்மை சிங்களப் பெரும்பான்மையோடு அடையாளப்படுத்துவதையே விரும்பினர்.

spacer.png
 

1983 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட சிறுபன்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறையில் இந்திய தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் சில தாக்கப்பட்ட போதும், அவர்களது அரச சார்ந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தைம் அது ஏற்படுத்தவில்லை.

முத்தையா முரளிதரன்

கண்டி, குண்டசாலைப் பகுதியில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தும் தொழில் அதிபரான முரளிதரனின் தந்தையின் தொழிற்சாலை 1983 ஆம் ஆண்டு பேரினவாத வன்முறையின் போது சிங்கள பௌத்த பேரினவாதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது. அப்போது தொழிற்சாலையோடு அமைந்துள்ள வீட்டிலிருந்து தொழிலாளர்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டவர் தான் முரளிதரன். இந்தியாவிலிருந்து குடியேறிய பல்வேறு வியாபாரிகளான ஞானம் போன்றவர்களின் வியாபார நிலையங்களிலும் தாக்கப்பட்ட போதும், அவர்களது அரசு சார்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படவில்லை.

முத்தையா முரளிதரன் இலங்கையின் உயர்குடிப் பாடசாலைகளில் ஒன்றான சென்ட் அந்தனிஸ் இல் கல்விகற்றார். தமிழர்களை விட சிங்கள இளைஞர்களே இவரின் நண்பர்களாகவிருந்தனர். தமிழர்கள் மத்தியில் கூட சிங்கள மொழியிலேயே பேசும் முரளி தன்னை தமிழராக அடையாளப்படுத்துவதை எபோதும் விரும்பியதில்லை.

மலையகத் தமிழ்த் தேசிய இனத்தோடு இவர்களுக்கு எந்த இணைப்பும் இருந்ததில்லை. இவர்களில் பெரும்பகுதியினர் இலங்கையில் குடியுரிமை பெற்றிருந்த போதிலும் தமது இந்தியக் குடியுரிமையையும் பேணி வந்தனர்.

முத்தையா முரளிதரன் இந்த வர்த்தக சமூகத்தைச் சார்ந்ததவரே தவிர மலையகத் தமிழரல்ல. 1920 ஆம் ஆண்டு இவரது தாத்தாவான பெரியசாமி சின்னச்சாமி தமிழகத்திலிருந்து வர்த்தகம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தார். பின்னதாக அவர் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிட முரளிதரனின் அப்பா கண்டியிலிருந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டார். முரளிதரன் மட்டுமன்றி அவரது முழுக் குடும்பமும் இந்தியக் குடியுரிமையையும் பேணி வருகிறது. முரளிதரன் இந்தியா செல்லும் போது இந்தியக் கடவுச் சீட்டில் இந்தியராகவே சென்று வருகிறார்.

ஏனைய இலங்கை வாழ் இந்திய வியாபரச் சமூகத்தைப் போன்று முரளியும் தன்னை மலையகத் தமிழராகவோ யாழ்ப்பாணத் தமிழராகவோ அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மாறாக தன்னைப் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தில் ஒருவராகவே கருதிக்கொண்டார்.
இந்திய வர்த்தகர்கள் ஒரு புறத்தில் மலையகத் தமிழர்களாகத் தம்மை அடையாளப்படுத்த விரும்பாத அதே வேளை மறுபுறத்தில் அவர்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சமூகத்துடனான போட்டியும் காணப்பட்டது. சிங்களப் பேரினவாதத்தின் கோரம் இவர்களை வட கிழக்குத் தமிழர்களைப் பாதித்த அளவில் இவர்களைப் பாதித்ததில்லை.

முரளிதரன் பல தடவைகள் தன்னை சிங்கள சமூகத்தைச் சேர்தவராகவே அடையாளப்படுத்தியிருந்த போதிலும், அவரது ராஜபக்ச ஆதரவு அரசியல் பிரவேசம் 2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் பின்னரே தீவிரமடைகிறது. முரளிதரனின் சகோதரர் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். தயாரிப்பிற்கான எதனோலை இறக்குமதி செய்வது தொடர்பான குற்றச்சாட்டில் ராஜபக்ச அரசினால் 2013 ஆம் ஆண்டு கைதாகும் முத்தையா சசிதரன் ராஜாபக்ச அரசால் கைதான பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின் பின்னரே விடுதலை செய்யப்படுகிறார்.

முத்தையா முரளிதரனை முன்வைத்து நடத்தப்படும் அரசியல்

ஈழத்தில் 1980 களில் பிரதான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மட்டுமன்றி பாராளுமன்ற வாத அரசியல் கட்சிகள் கூட தமிழ்த் தேசியம் என்ற மொழியை மட்டும் தேசிய இனத்திற்கான அடிப்படையாகக்கொண்ட “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை முன்வைத்ததில்லை. பொதுவாக வட-கிழக்கு சார்ந்த தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்த அனைவருமே, முஸ்லீம் தமிழர்கள் தனியானவர்கள் என்றும் மலையக மக்கள் தனியான தேசிய இனம் என்றும் இறுதிக் காலங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சி, மலையக மக்களின் பிரதி நிதியாக தொண்டைமானை ஏற்றுக்கொண்டு அவரது கட்சியையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போது சிறுபான்மைத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகவே அதனை முன் நிறுத்தியது.

இன்று தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தமிழ்த் தேசிம் என்ற பிற்ப்போக்கான இனவாதக் கருத்தியல் இவை அனைத்தயும் நிராகரித்து வட கிழக்கில் தோன்றும் தமிழீழத்தைத் மையாமாக வைத்து அனைத்துத் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையையும் மறுத்து மற்றொரு பாசிச கோட்பாடாக உருவெடுத்து வருவது ஆபத்தானது. முத்தையா முரளிதரனின் திரைப்படம் தொடர்பான திரைப்படம் குறித்து கருத்துத் தெரிவித்த முன்னை நாள் நாம் தமிழர் பிரதானியான ரஜீவ் காந்தி, மலையகத் தமிழரை வந்தேறிகள் எனக் குறிப்பிடுகிறார். இலங்கை பேரினவாத அரசு கூட அப்படிக் இன்று குறிப்பிடுவதில்லை.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களைத் தெலுங்கர்கள் வந்தேறிகள் என்று கூறிப் பழகிப் போன அருவருப்பான இனவாத அரசியலை மலைய மக்கள் மீது பிரயோகிக்காதீர்கள். மலையகம் அவர்களது சொந்த மண், அவர்கள் சுய நிர்ணைய உரிமைக்கு உரித்தான தனியான தேசிய இனம்.

spacer.png
தமிழர் அல்லாத முத்தையா முரளிதரனை தமிழராக முன்வைத்து திரைப்படம் எடுப்பது தவறானது தான். ஆனால் அதன் பின்னணியில் செயற்படும் வியாபார அரசியல் அதைவிட கேவலமானது. கொரோனா உச்சமடைந்திருந்த கடந்த ஏப்பிரல் மாதமளவில் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சிங்களவர்கள் மட்டுமே வாழும் பல பகுதிகளில் லைக்கா பவுண்டேஷன் ஊடாக உணவு வினியோகம் ஒன்று நடைபெற்றது. தமிழர்கள் வாழுகின்ற எந்தப்பகுதிக்கும் இது செல்லவில்லை. இந்த லைக்கா பவுண்டேஷனின் இலங்கையின் பிராண்ட் அம்பாசிடராகச் செயற்படுபவர் முத்தையா முரளிதரன். லைக்கா நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசுடன், குறிப்பாக ராஜபக்ச அரசுடன் நெருக்கமாக உறவைப் பேணி வருகிறது.

லைக்கா தொடர்பாக சீமானிடம் வினவிய போது அவர் தமிழர் என்பதால் ஆதரிக்கிறோம், என்று பதிலளித்தார். கத்தி, எந்திரன் 2.0 உட்பட இன்று பல திரைப்படங்கள் லைக்காவின் தயாரிப்பாகவே வெளிவருகின்றன. லைக்கா தொடர்பான ஆதார பூர்வமான தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இங்கு பிரச்ச்னை லைக்காவோ முரளிதரனோ அல்ல, அதன் பின்னாள் ஒளிந்திருக்கும் அரசியலே.

தமிழ் தேசியம் என்ற பெயரில் ஈழத்தை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்யும் சீமானாகட்டும், தோல்வியடைந்த திரைப்பட இயக்குனர்களாகட்டும் லைக்காவிற்கு எதிராக மூச்சுக்கூட விட்டத்தில்லை. இந்த சூழலில் தான் விஜை சேதுபதிக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஏதாவது உள் நோக்கம் காணப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

முள்ளிவாக்கால் இனப்படுகொலை நடந்து முடிந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும், ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியவாதிகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் வெற்று முழக்கங்களையும் வெறித்தனமான சுலோகங்களையும் காரணம் காட்டியே சிங்கள மக்களை பேரினவாதத்தை நோக்கி அணிதிரட்டும் பணியை ராஜபக்ச அரச்ய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது. சிங்களப் பெண்களின் மார்பகங்களை அறுப்பேன் என்ற சீமானின் பேச்சு மொழியாக்கம் செய்யப்பட்டு சிங்கள ஊடகங்களில் பரப்ப்பட்டது.

கமல ஹாசன், ரஜனி காந், அஜித் விஜய் போன்றவர்களை முன்வைத்து விதைக்கப்படும் பிற்போக்குக் கருத்துக்களால் கட்டுண்டு போயிருக்கும் சமூகத்தின் ஒரு பகுதியை மீட்டெடுக்க  800 திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களை ஊடாக புதிய அரசியலை முன்னெடுக்கலாமே? கமல ஹாசன், ரஜனிகாந்த், விஜய் அஜித் விஜய் சேதுபதி உடபட அனைத்து சினிமா சாகச நாயகர்ளும் வியாபாரிகளே என மக்களிடம் கொண்டு செல்வதற்கான சந்தர்பமாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாமே? தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து ஈழத் தமிழர்கள் மீதான பிண அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளலாமே?

-சபா நாவலன்

மேலதிக வாசிப்பிற்கு:

http://archive.srilankamirror.com/news/11580-murali-s-brother-fined-rs-15m

https://en.wikipedia.org/wiki/Sirima–Shastri_Pact

https://www.dnaindia.com/cricket/report-did-you-know-muttiah-muralitharan-has-indian-citizenship-2848350#:~:text=Did you know that Muttiah,Muralitharan’s family originates from India

 

 

http://inioru.com/muthaiya-muralitharan-the-hidden-truth/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.