Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி -01 – என்.கே.எஸ். திருச்செல்வம்

NKST.jpeg

நேற்று முன்தினம் ஒரு மறக்க முடியாத நாள். இசை மாமேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தன் உடலை மட்டும் இவ்வுலகில் இருந்து எடுத்துச் சென்ற நாள். ஆனால் நம் நெஞ்சில் நிறைந்த பாடல்களை எமக்கெல்லாம் உயிராகத் தந்து விட்டுச் சென்ற நாள்.

அண்ணன் எஸ்.பி.பி. அவர்களின் பாடல்கள் தொடர்பில் கடந்த 50 வருடங்களாக என் அடி மனதில் தேங்கிக் கிடக்கும் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏனெனில் அன்று எனது பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது அவரின் பாடல்களே.

ஒரு திரையுலகப் பிரபலத்திற்காக நான் அதிக மனவேதனை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பம் நேற்றைய தினத்தில் நடந்தது.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை நான் மிகவும் வேதனையடைந்து, அன்று இரவு மிகவும் மனமகிழ்ச்சி அடைந்த மறக்க முடியாத நாள். அன்று இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

b-100.jpgஅன்று காலை, என் நெஞ்சில் மானசீக ஆசானாக வீற்றிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அந்த சமயத்தில் நான் அடைந்த துயரம் அளவிட முடியாதது. அன்று இரவே எனக்கு முதல் வாரிசாக என் மகன் பிறந்து, அந்தத் துயரத்தை ஈடுகட்டும் அளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நாள் அது.

அன்றைய தினத்தின் பின்பு நான் மிகவும் வேதனை அடைந்தது நேற்றைய தினத்தில் தான்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்த படியாக நான் நேசித்த, என் மனம் கவர்ந்த திரையுலகப் பிரபலம் என்றால் அது எஸ்.பி.பி அவர்கள் தான்.

காரணம் இந்த இருவரும் மானசீகமாக என் வாழ்க்கையோடு இணைந்து என்னை வழி நடத்தியவர்கள்.

சிறுவயது முதல் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்ல கருத்துக்களை கடைப்பிடித்து வளர்ந்தது போல, எஸ்.பி.பி.அவர்களின் இனிமையான பாடல்களை சிறுவயது முதல் கேட்டு மகிழ்ச்சியாக வளர்ந்தவன் நான்.

எனக்கு விபரம் தெரிந்த வகையில் நான் முதலாவதாக திரைப்படம் பார்த்தது1965 ஆம் ஆண்டு. நான் பார்த்த முதலாவது திரைப்படம் எம்.ஜி.ஆர் அவர்களின் “எங்க வீட்டுப் பிள்ளை”. அப்போது எனக்கு 4 வயது.

இரண்டு ரூபாய் கொடுத்து வாடகைக் காரில் குடும்பத்தோடு எம்மைக் கூட்டிச் சென்று அந்தப் படத்தைப் அப்பா காண்பித்தார்.

b-99.jpg

 

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்” எனும் பாடல் பசு மரத்து ஆணி போல இன்றும் என் மனதில் பதிந்துள்ளது.

என் தந்தையார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்படும்போது கூட்டிச் சென்று காண்பிப்பார். அன்று எமது தந்தை மட்டுமல்ல நான், எனது அண்ணா, சின்னத் தங்கை எல்லோருமே எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகர்கள் ஆனோம்.

அன்று முதல் என் தந்தையார் மூலம் மக்கள் திலகத்தின் பல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

கன்னித்தாய், அன்பேவா, பறக்கும் பாவை, தனிப்பிறவி, நான் ஆணையிட்டால், அரச கட்டளை, காவல்காரன், ஒளி விளக்கு, கணவன், கண்ணன் என் காதலன், குடியிருந்த கோயில், ரகசிய பொலிஸ் 115, நம்நாடு ஆகிய திரைப்படங்களைப் பார்த்த ஞாபகம் உண்டு.

இப்படங்களைப் பார்த்தபின் அதில் இடம் பெறும் எம்.ஜி.ஆர் பாடல்களை டி.எம்.எஸ் அவர்களின் குரலில் வானொலியில் விரும்பிக் கேட்க ஆசை ஏற்பட்டது.

அன்று திரைப்பட பாடல்களைக் கேட்டது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை-2 எனும் வானொலியில் தான். அன்று இருந்த ஒரே வானொலியும் அதுதான். திரையில் பார்த்த எம்.ஜி.ஆர் பாடல்களை ரசித்துக் கேட்கக் கூடிய ஒரே சாதனம் அதுதான். காலப்போக்கில் அதுவே என் உயிர் நாடியாக மாறியது.

b-98.jpgபாடசாலை நேரம், வீட்டில் படிக்கும் நேரம் தவிர நான் அதிக நேரத்தை செலவிட்டது வானொலிப் பெட்டியின் அருகிலே தான்.

1969 ஆம் ஆண்டு, எனக்கு 8 வயது. இலங்கை வானொலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது “புது வெள்ளம்” எனும் நிகழ்ச்சியில் ஒரு புதிய குரலில் அந்த இனிமையான பாடல் ஒலித்தது.

“ஆயிரம் நிலவே வா-ஓராயிரம் நிலவே வா”

பாடல் இடம்பெற்ற படம் – அடிமைப்பெண்.

பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா.

இசை-கே.வி.மகாதேவன்

பாடலை எழுதியவர்-புலமைப்பித்தன்

படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடல் இது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது.

பத்திரிகைகள் மூலம், பாடசாலை நண்பர்கள் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட எம்.ஜி.ஆரின் திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஒரு புதியவர் பின்னணி பாடியுள்ளார் என்பது சற்று வியப்பாக இருந்தது. இருந்தாலும் அந்தப் புதிய குரல் ஏதோ இனம் புரியாத வகையில் என் மனதைக் கவர்ந்தது.

எஸ்.பி.பி.அவர்கள் பாடி நான் கேட்ட முதலாவது பாடல் அதுதான்.

ஆனால் இது எஸ்.பி.பி அவர்கள் பாடிய 5 ஆவது தமிழ்த் திரை இசைப்பாடல்.

1969 ஆம் ஆண்டு எஸ். பி.பி.அவர்கள் தமிழ்த் திரை உலகில் அடி எடுத்து வைத்த காலம். அவர் மொத்தமாக 5 பாடல்களைப் பாடியிருந்தார்.

நாளையும்..

 

https://thinakkural.lk/article/72888

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-02 – என்.கே.எஸ். திருச்செல்வம்

 என்.கே.எஸ். திருச்செல்வம்

NKS.thiru_.200.png“ஆயிரம் நிலவே வா” பாடலை முதன் முதல் கேட்ட பின்பு இப்பாடல் மீண்டும் இலங்கை வானொலியில் எப்போது ஒளிபரப்பாகும் என அவதானித்துக் கொண்டிருந்தேன். கேட்ட முதல் தடவையே என் மனதில் இடம் பிடித்த இப்பாடலை கேட்டு எழுதிப் பாட வேண்டும் என எண்ணினேன்.

கையில் கொப்பியும், பென்சிலுமாக காத்துக் கொண்டிருந்தேன். பாடல் அடுத்த நாளும் வானொலியில் ஒலித்தது. வானொலியில் பாடலைக் கேட்டுக் கொண்டே அதன் வரிகளை வேகமாக எழுதத் தொடங்கினேன். இரண்டு தடவைகள் கேட்ட பின்பு பாடலை முழுமையாக எழுதி விட்டேன். அன்று முதல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் புதிய பாடல்களைக் கேட்டு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக இலங்கை வானொலியில் புது வெள்ளம், பொங்கும் பூம்புனல், அன்றும் இன்றும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தைத் தவற விடுவதில்லை.

இசைச் சிகரம் எஸ். பி.பி அவர்கள் தமிழ்த்திரை உலகில் அடி எடுத்து வைத்த 1969 ஆம் ஆண்டில் 5 பாடல்களை மட்டுமே பாடியிருந்தார். அந்த 5 பாடல்களில் அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்காக பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடல் மிகவும் பிரபல்யம் அடைந்தது. அடிமைப்பெண் திரைப்படம் அந்த ஆண்டு சித்திரை வருடப் பிறப்பின் பின் வெளியிடப்பட்டது.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்த இந்த பிரமாண்டமான திரைப் படத்தில் மொத்தமாக 6 பாடல்கள்.

அதில் 3 தனிப்பாடல்களை டி.எம்.எஸ் அவர்கள் பாடினார். கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது முதலாவது பாடலைப் பாடினார். பி.சுசீலாவுடன் எஸ்.ஜானகியும் இணைந்து ஒரு பாடலைப் பாடினார்கள்.

98-1.jpgஆனால் படத்தில் இடம்பெற்ற முத்தாய்ப்பான ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ்.பி.பி அவர்கள் பாடி, அதன் மூலம் மிகவும் பிரபல்யம் ஆகி, தமிழ்த்திரை இசையில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார்.

அன்றைய கால கட்டத்தில் கொழும்பில் உள்ள கலைமகள் கம்பனி, எம்.கே.பொன்னையாபிள்ளை, சாந்தி புத்தகசாலை ஆகிய இடங்களில் இருந்து தான் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும். அவை வெளிவருவதற்கு சில வாரங்கள் ஆகும்.

ஆனால் பாட்டுப் புத்தகங்கள் வெளிவரும் முன்பே வானொலியில் பாடல்களைக் கேட்டு முழுமையாக எழுதி, அவற்றை தாளம் தப்பாமல், ராகத்தோடு பாடும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டது.

இதனால் நண்பர்கள், உறவினர்கள் புதிய பாடல்களைப் பாடிக்காட்டும்படி என்னிடம் கேட்பார்கள். அவர்கள் விரும்பும் புதிய பாடல்களைப் பாடிக் காட்டி பாராட்டுக்கள் பல பெற்றேன்.

அதன் பின்பு எஸ்.பி.பி.அவர்களின் ஏனைய பாடல்களையும் தேடித்தேடி வானொலியில் கேட்டு எழுதினேன்.

1969 ஆம் ஆண்டு மொத்தமாக 5 பாடல்களை எஸ்.பி.பி.அவர்கள் பாடியிருந்தார்.

முதலாவது பாடலை எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் “ஹோட்டல் ரம்பா” எனும் திரைப்படத்திற்காகப் எஸ்.பி.பி. அவர்கள் பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை.

அவர் பாடிவெளிவந்த முதலாவது பாடல்.

“இயற்கையென்னும் இளையகன்னி”

எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் “சாந்தி நிலையம்” திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்காக பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய காதல் டூயட் பாடல்.

ஆங்கிலத் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம்

5 பாடல்கள். டி.எம். எஸ் அவர்கள் குழுவினருடன் ஒரு பாடல் பாடினார். பி.சுசீலா அவர்கள் 2 தனிப் பாடல்கள் பாடினார். எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடலைப் பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.

பாடலின் ஆரம்பத்தில் இருவரும் இசைத்த ஹம்மிங் நம் இதயத்தை வருடி எங்கோ கொண்டு சென்றது. இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு நான் ரசித்த இந்தப் பாடலும் பிரபல்யம் அடைந்தது.
இரண்டாவது பாடல்.

“முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு”

இது ஜெமினி கணேசனுக்காக கோதண்டபாணி அவர்களின் இசையில் “குழந்தை உள்ளம்” எனும் திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் எஸ்.பி.பி.அவர்கள் பாடிய பாடல். இந்தப்பாடலை அன்று இலங்கை வானொலியில் கேட்டதில்லை.

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் ஜெமினி, வாணிஶ்ரீ ஆகியோரை வைத்து சொந்தமாகத் தயாரித்த படம். படம் ஓடவில்லை.

படத்தில் மொத்தமாக 6 பாடல்கள். டி.எம்.எஸ் அவர்கள் ஒரு பாடலும், பி.சுசீலா 4 பாடல்களும் பாடினர். பி.சுசீலா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் ஒரு பாடல்,

எஸ்.பி.பி.அவர்களுடன் ஒரு பாடல். எஸ்.ஜானகியுடன் ஒரு பாடல், தனியாக ஒரு பாடல் என பாடினார். தனியாக பாடிய “அங்கும் இங்கும் ஒன்றை ரத்தம்” எனும் பாடல் மட்டும் கொஞ்சம் மனதில் நின்றது. எஸ்.பி.பி.பாடிய பாடல் உட்பட ஏனைய பாடல்கள் எதுவும் மக்கள் மத்தியில் வரவில்லை.

94-3.jpgஆனால் பாட்டுப் புத்தகத்தில் பாடல் இருந்தது. பாடலை வானொலியில் கேட்காத படியால் மெட்டு தெரியவில்லை. பலருக்குத் தெரியாத அபூர்வமான SPB பாடிய பாடல்.

பிற்காலத்தில் வீடியோவில் தான் இப்பாடலைப் பார்த்தேன்.

மூன்றாவது பாடல்.

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்.

புன்னகையின் நினைவாக”

“பால்குடம்” படத்தில் இடம் பெற்ற பாடல். எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் ஏ.வி.எம்.ராஜனுக்காக பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி.பாடிய சோகப் பாடல்.

“உனக்காக…அன்பே…நான்… உனக்காக.” எனும் வரிகளில் எஸ்.பி.பி யின் மாயக்குரல் மனதை உருக்கும் சோகமாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்க முடிந்தது.

இந்த இரண்டு படங்களும் 1969 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகின.
நான்காவது_பாடல்.

“பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா”

97-2.jpg“கன்னிப்பெண்” படத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் எஸ்.ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய காதல் டூயட் பாடல். பிற்காலத்தில் சூப்பர் பின்னணிப் பாடல் ஜோடி எனப் புகழப்பட்ட எஸ்.பி.பி- எஸ்.ஜானகி ஆகியோர் முதன் முதலாகப் பாடிய பாடல். படத்தின் இரண்டாவது நாயகனாக நடித்த சிவகுமாருக்காக எஸ்.பி.பி. இப்பாடலைப் பாடினார்.

எஸ். பி.பி. தனது முதலாவது ஆண்டில் பாடிய இந்தப் பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

மொத்தத்தில் SPB அவர்கள் தமிழத் திரையுலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலே பாடிய 5 பாடல்களில் 4 பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன.

நாளையும் ஒலிக்கும்..

https://thinakkural.lk/article/73196

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-03 – என்.கே.எஸ். திருச்செல்வம்

என்.கே.எஸ். திருச்செல்வம்

NKS.thiru_.200.pngஇசை அரசன் எஸ்.பி.பி அவர்கள் அறிமுகமான முதல் ஆண்டிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் 3 பாடல்களும், கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் ஒரு பாடலும், தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையில் ஒரு பாடலும் பாடினார்.

5 பாடல்கள் மட்டுமே பாடியிருந்தாலும் எஸ்.பி.பி அவர்கள் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் “ஆயிரம் நிலவே வா” பாடல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் “அடிமைப்பெண்” திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடியது. படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி அவர்கள் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

அறிமுக ஆண்டான 1969 ல் 5 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி அவர்களுக்கு அடுத்த ஆண்டான 1970 ல் 14 பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் என்று கூட சொல்லலாம். 14 பாடல்களில் 7 பாடல்கள் அவரின் இசையில் பாடினார்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0இந்த 14 பாடல்களில் ஒன்றைத் தவிர ஏனைய 13 பாடல்களும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்து அன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.

1970 ல் பொங்கல் அன்று “ஏன்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. ரவிச்சந்திரன், லஷ்மி, ஏ.வி.எம்.ராஜன் ஆகியோரின் நடிப்பில் டி.ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இசையில் 7 பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பை கிடைத்தது. இதிலே ஒரு சிறப்பான பாடல்.

89-14.jpgஅண்ணன், தங்கை ஆகியோர் பாடும் டூயட் பாடல்கள் தமிழில் மிக மிகக் குறைவு என்றே கூறலாம். பாசமலர் பாடலுக்குப் பின் அப்படியான பாடல்கள் வந்ததாக ஞாபகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பாடலை ஹம்மிங் பாடகி சரளாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.

வருவாயா_வேல்முருகா_என்_மாளிகை #வாசலிலே

எனும் பாடல் அது. அந்த அண்ணன், தங்கை பாடலை அண்ணன் ஏ.வி.எம். ராஜனுக்காக அனாயாசமாகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி.

அண்ணனும் தங்கையும் மகிழ்ச்சியோடு முருகனை வீட்டுக்கு அழைப்பது போன்ற வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

அண்ணனுக்கு பெண் பார்க்க-
வரும் அண்ணியை என் கண் பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க-
அந்த இன்பத்தை நீ பார்க்க-
நீ வருவாயா வேல்முருகா…

எனும் வரிகள் அண்ணன் தங்கை பாசத்தை படம் பிடித்துக் காட்டின.

இரண்டாவது பாடலை படத்தின் நாயகனான ரவிச்சந்திரனுக்காகப் பாடினார் எஸ்.பி.பி.

#இறைவன்_என்றொரு_கவிஞன்-
#அவன்_படைத்த_கவிதை_மனிதன்
என்ற இந்தப் பாடல் ஒரு தத்துவப் பாடலாக அமைந்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களில் டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சரளா ஆகியோர் 5 பாடல்கள் பாடியிருந்தனர். இருப்பினும் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்கள் இரண்டும் பிரபல்யம் அடைந்தன.

அந்த ஆண்டு சித்திரை புதுவருடப்பிறப்பு அன்று வெளியான இரண்டு படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

அவற்றில் ஒன்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் வசனம் எழுதி, திருமலை மகாலிங்கம் இயக்கிய “காதல் ஜோதி” எனும் திரைப்படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்தில் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் 4 பாடல்கள் இடம்பெற்றன.

ரவிச்சந்திரனுக்காக சீர்காழி கோவிந்தராஜன் இரண்டு பாடல்களைப் பாடினார். எல் ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார். மென்மையான இதய ராகமாக அந்தப் பாடல் ஒலித்தது.

#காதல்_ஜோதி_அணையாதது-

#கண்கண்ட_கனவெல்லாம்_கலையாதது எனும் இப்பாடலின் ஆரம்பத்திலும், இடையிலும் மனதை வருடும் ஹம்மிங் இசையை எஸ்.பி.பி, சுசீலா ஆகிய இருவரும் வழங்கி இருந்தமை பாடலைக் கேட்கும் எம்மை எங்கோ கொண்டு சென்றது. அத்தனை இனிமையான ஹம்மிங்.

இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடல் ஒலித்து சூப்பர் ஹிட் பாடலானது.

எஸ்.பி.பி. அவர்கள் பாடிய அடுத்த பாடல் இடம்பெற்ற படம் “பத்தாம் பசலி”. ஜெமினி கணேசன். நாகேஷ், ராஜஸ்ரீ ஆகியோரை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்தாலும் நாகேஷ் அவர்களுக்கே படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

90-8.jpgபடத்தில் மொத்தமாக 6 பாடல்கள். எல்லாப் படல்களையும் ஆலங்குடி சோமு எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார்.

நாகேஷ் அவர்களுக்காக டி.எம்.எஸ். குரலில் 3 பாடல்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் தனியாக ஒவ்வொரு பாடலைப் பாடினார். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுஷீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடியிருந்தார்.
#ராதை_கேட்பது_என்ன_வரம்-
#ரகசியம்_ஏனோ_முகுந்தனிடம்”

எனும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்க முடியவில்லை. படத்திலும் பாடல் இடம் பெறவில்லையாம். இன்று வரை இந்தப் பாடலை நான் கேட்டதில்லை. இப்படி ஒரு பாடல் உள்ளதென்பதை பாட்டுப் புத்தகத்தின் மூலமே நான் தெரிந்து கொண்டேன்.

நாளையும் ஒலிக்கும்

https://thinakkural.lk/article/74188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-04 – என்.கே.எஸ். திருச்செல்வம்

என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.png1970 ஆம் ஆண்டு மேமாதம்

“வீட்டுக்கு வீடு” எனும் திரைப்படம் வெளியானது. ஜெய்சங்கர், லக்ஷ்மி, முத்துராமன் நடிப்பில் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் 5 பாடல்கள். கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். பி.சுசீலா, சாயிபாபா ஆகியோர் ஒவ்வொரு தனிப்பாடல்களையும், எல். ஆர்.ஈஸ்வரி இரண்டு தனிப் பாடல்களையும் பாடியிருந்தனர்.

படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி பாடினார்.

“அங்கம் புதுவிதம்-அழகினில் ஒரு விதம்-நங்கை முகம் நவரச நிலவு” எனும் இப்பாடல் ஆரம்பத்தில் ஹம்மிங் இசையுடன் தேனாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி ஹிட் ஆனது.

“கற்பனை அற்புதம்-காதலே ஓவியம்-
தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம்”
எனும் முதலாவது சரணத்தின் இறுதியில் வரும் வரிகள், இருவரின் குரலிலும் தேனைக் கலந்து ஊட்டியது. பாடலும் வெற்றி பெற்றது.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B01970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் எஸ்.பி.பி அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு திரைப் படங்கள் வெளிவந்தன. ஒன்று ஜெய்சங்கர், லக்ஷ்மி நடித்து, சின்னப்பா தேவர் தயாரித்த “மாணவன்”. சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையில் படத்தில் 4 பாடல்கள். இரண்டு தனிப் பாடல்கள், இரண்டு ஜோடிப் பாடல்கள்.

ஜோடிப் பாடல்களில் ஒன்றை டி.எம்.எஸ். உடன் பி.சுசிலா பாடினார். “வீசிலடிச்சான் குஞ்சுகளா” எனும் இப்பாடலுக்கு மட்டும் உலக நாயகன் கமல் இளைஞனாக முதன் முதல் தோன்றி ஆடிப் பாடினார்.

அடுத்த காதல் ஜோடிப் பாடலை ஜெய்சங்கருக்காக பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார்.

“கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ” எனும் வாலியின் இப்பாடல் சங்கர்-கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடிய முதலாவது பாடலாகும்.

“ஆஹா.. ஹா.. ஆஹா.. ஆஹா..

லல்ல லல்ல லா…லல்ல லல்ல லா ‘

என பாடலின் ஆரம்பத்தில் தொடங்கும் ஹம்மிங் இசை இருவரின் குரலிலும் தித்திப்பாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இப்பாடல் எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த பாடல் போலவே இருந்தது. சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல் என்பதை நம்ப முடியவில்லை. அத்தனை சிறப்பாக மெட்டமைத்திருந்தனர் சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்.

பாடலின் இரண்டு சரணங்கள் மட்டுமே வானொலியில் ஒலித்தன. வீடியோவிலும் அப்படியே. இந்த இரண்டு சரணங்களுக்கும் இடையில் இன்னுமொர் சரணம் இருந்ததை பாட்டுப் புத்தகத்தின் மூலமே அறிந்து கொண்டேன்.

“வானவில்லின் ஏழு வண்ணம் கண்ணோடுதான்-

வாங்கி வந்த பாவை இனி உன்னோடுதான்-

நான் தொடத்தான்… நாணமோ

தேன் சுவைத்தேன்… தீருமோ”

என வாலி அவர்கள் எழுதிய அழகிய வரிகளை எஸ்.பி.பி-பி.சுசீலா அவர்களின் குரல்களில் கேட்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு தீவிர முருக பக்தர். இதனால் அவரது படங்களுக்கு பாட்டெழுதும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முருகன் பற்றிய சொற்களை சேர்த்து எழுதுவது வழக்கம். இதே யுக்தியை வாலி அவர்களும் இந்தப்பாடலில் கையாண்டிருந்தார். பாடலின் மூன்றாவது சரணம் அவ்வாறு எழுதப்பட்டது.

“மின்னுகின்ற கன்னிரண்டும் வேலாயுதம்-

மங்கை மனம் மன்னனுக்கு மயில் வாகனம்-

வா பக்கம் வா… நெருங்கி வா-

தா தொட்டுத் தா… தொடர்ந்து தா”

எனும் அந்த வரிகள் எஸ்.பி.பி-சுசீலா ஆகியோரின் குரலில் தேன் சுவையை ஊட்டியது.

90-11.jpg#1970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் வெளிவந்த அடுத்த திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ நடித்த “தலைவன்”. பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையானாயுடுவின் இசையில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. மூன்று ஜோடிப் பாடல்கள். ஒரு தனிப்பாடல். தனிப்பாடல் ஒன்றையும், ஜோடிப்பாடல்கள் இரண்டையும் டி.எம்.எஸ்.அவர்கள் பாடினார்.

படத்தில் ஒரு காதல் டூயட் கனவுப் பாடல். இப்பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக இரண்டாவது பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார்.

“நீராளி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்”

எனும் அப்பாடலை வாலி அவர்கள் எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் கேட்ட இப்பாடலை அப்போதே திரையிலும் பார்த்தேன்.

திரைப்படம் கருப்பு-வெள்ளையாக இருந்தபடியால் கனவுப் பாடலை நன்றாக ரசிக்க முடியவில்லை. எம். ஜி. ஆர். அவர்கள் எழுபதுகளில் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் மூன்று படங்கள் மட்டுமே கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டன. அவற்றில் “தலைவன்” படமும் ஒன்று. பாடலின் சரணத்தின் இடையில் எஸ்.பி.பி. அவர்கள் இசைக்கும் ஹம்மிங் இசை இதயத்தை வருடிச் சென்றது.

நாளையும் ஒலிக்கும்

https://thinakkural.lk/article/74976

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி 5 – என்.கே.எஸ். திருச்செல்வம்

என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.png1970 ஆம் ஆண்டு மீண்டும் இன்னுமோர் திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடும் வாய்ப்பு கிட்டியது. பழம் பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த “தேடி வந்த மாப்பிள்ளை” படத்தில் எம்.எஸ்.வி அவர்களின் இசையில் ஒரு பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

திரைப்படத்தில் மொத்தமாக 7 பாடல்கள். இவற்றில் டூயட் பாடல்கள் மூன்று. இந்த மூன்று பாடல்களையும் டி.எம்.எஸ், பி.சுசீலா ஆகியோர் பாடினர். தொடர்ந்து ஜோடிப் பாடல்களைப் பாடி வந்த எஸ்.பி.பி அவர்களுக்கு வழமைக்கு மாறாக இப்படத்தில் தனிப்பாடல் ஒன்றை மட்டுமே பாடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தனிப் பாடல்கள் 4. இவற்றில் இரண்டு பாடல்களை டி.எம். எஸ். அவர்களும், ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியும் பாட, அடுத்த பாடலை எஸ்.பி.பி. பாடினார்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B013 ஆவது பாடல்

“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்-

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்”

எனும் இப்பாடல் வாலி அவர்களின் வரிகளில் தாயைப் போற்றிப் பாடும் பாடலாக எஸ்.பி.பி. அவர்களின் குரலில் ஒலித்தது.

தாய்ப்பாலில் வீரம் கண்டேன்-

தாலாட்டில் தமிழைக் கண்டேன்

உண்ணாமல் இருக்கக் கண்டேன்-

உறங்காமல் விழிக்கக் கண்டேன்

மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ

அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

எனும் வரிகள் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் தாயைப் போற்றிப் பாடிய முதலாவது பாடலாக இது அமைந்தது.

b-10.jpg1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியான “நவக்கிரகம்” திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் முத்துராமன், சிவகுமார், லக்ஷ்மி, நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படத்தில் வாலியின் பாடல்களுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

படத்தில் மொத்தம் 5 பாடல்கள். நடிகர்களே வசனம் போல பேசும் பாடல்கள் மூன்று. இசையோடு பாடும் பாடல்கள் இரண்டு. அவற்றில் ஒன்றை ஏ.எல்.ராகவன் பாடினார். அடுத்த பாடல் ஒரு காதல் டூயட் பாடல். இப்பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து சிவகுமாருக்காக எஸ்.பி.பி. பாடினார். பாடினார் என்பதை விட “ஹம்” செய்தார் என்பதே சரி.

அன்றைய கால கட்டத்தில் பாடல்களின் ஆரம்பத்திலும், இடையிலும் பாடகர்கள் ஹம்மிங் இசைப்பது பாடல்களின் இனிமையைக் கூட்டும் ஒரு விடயமாகக் கருதப்பட்டது. அந்த வகையில் எஸ்.பி.பி அவர்களின் குரல் ஹம்மிங் இசைப்பதற்கு பொருத்தமானதாகவும் இருந்தது. இதை இனம் கண்டு கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள் எஸ்.பி.பிக்குக் வாய்ப்புக் கொடுத்த தனது முதல் பாடலிலேயே அவரை ஹம்மிங் இசைக்க வைத்தார். அந்தப்பாடல் “இயற்கையென்னும் இளையக்கன்னி”.

அதன் பின்பு இசையமைப்பாளர்கள் எஸ்.பி.பி பாடிய பல பாடல்களை ஹம்மிங் இசையோடு பாட வைத்தனர். இவர்களை விட ஒரு படி மேலே சென்று ஒரு வித்தியாசமான கோணத்தில் எஸ்.பி.பி. அவர்களைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் வி.குமார்.

14 ஆவது பாடல்

“உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது”

எனும் அந்தப்பாடல், ஆரம்பத்தில் எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசையோடு தொடங்கும். பி.சுசீலா அவர்கள் பாடலைப் பாடுவார். எஸ்.பி.பி பாடலின் இடையிலும், முடிவிலும் ஹம்மிங் மட்டும் இசைத்துக் கொண்டிருப்பார். இப்படி பாடல் வரிகள் எதையும் பாடாமல்

ஆஹாஹா… ஓஹோஹோ… ம்ம்ம்… லல்லல்லா..

என எஸ்.பி.பி அவர்களை ஹம்மிங் மட்டும் பாடவைத்து அந்தப் பாடலை முடித்து புதுமை செய்தார் வி.குமார். எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசைக்காக மட்டுமே இந்தப் பாடலை எத்தனை தடவையும் வேண்டுமானாலும் கேட்டகலாம்.

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இரண்டு திரைப்படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று “காவியத் தலைவி” எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், செளகார் ஜானகி ஆகியாரை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய படம். கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள். ஒரு பாடலைத் தவிர ஏனைய பாடல்கள் எல்லாம் இலங்கை வானொலி மூலம் பிரபல்யம் ஆயின. நான்கு தனிப் பாடல்களை பி.சுசீலா பாடினார். பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.வரலக்ஷ்மியுடன் சேர்ந்து சுசீலா மேலும் ஒரு பாடலைப் பாடி இருந்தார். “நேரான நெடுஞ்சாலை” எனும் ஒரு காவியப் பாடலை எம்.எஸ்.வி. பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ரவிச்சந்திரனுக்காகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி அவர்கள்.

15 ஆவது பாடல்

“ஆரம்பம் இன்றே ஆகட்டும்-ஆறேழு நாட்கள் போகட்டும்”

எனும் அப்பாடல் இலங்கை வானொலியில் பல தடவைகள் இனிமையாக ஒலித்ததைக் கேட்டேன். ஆனால் பிற்காலத்தில் இப்பாடலை வீடியோவில் பார்த்தபோது, நான் வானொலியில் கேட்ட பாடலை விட சற்று வித்தியாசமாக இருந்தது. வானொலியில் கேட்ட பாடலில் இடையிசை அதிகமாக இருந்தது. அத்துடன் சரணத்தின் சில வரிகள் இரண்டு தடவைகள் ஒலித்தன. அதனால் பாடல் ஒலிக்கும் நேரம் சற்று அதிகமாக இருந்தது. இப்படி பல பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்.

இன்னும் வரும்

https://thinakkural.lk/article/76508

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம்

என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.png1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி ஆகியோர் நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய “மாலதி”.

இப்படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மூன்றும் ஜோடிப் பாடல்கள். இவற்றில் ஒரு பாடலை டி.எம்.எஸ், எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடினர். ஏனைய இரண்டு பாடல்களையும் பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார். கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்திருந்தார்.

“கற்பனையோ கை வந்ததோ-சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்”.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0என ஒரு பாடல் தொடங்குகிறது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இந்தப் பாடலை அந்தக் காலத்தில் முணுமுணுக்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் பாடலாக இது விளங்கியது. இப்பாடலின் சரணத்தின் இறுதிப்பகுதியில் வரும் “சுகமோ சுகம்-சுகமோ சுகம்-சுகமோ சுகம்” எனும் வரிகள் இருவரின் குரல்களில் மனதை மயக்கின.

17 ஆவது பாடல்

“மாலதி” படத்தில் இடம்பெற்ற அடுத்த பாடல்

“சிடுசிடு சிடுசிடு சிடுசிடு சிடுசிடு எங்கே போவோம்”

எனத் தொடங்கும் பாடல். இப்பாடலிலும் பல்லவியின் இறுதிப் பகுதியில் வரும்

“பச்சைக் கிளிபோல ஊரெங்கும் பறந்து- இச்சை மொழிபேசி எங்கெங்கும் திரிந்து- பார்த்தும் பாராமல் மகிழந்தாலென்ன- பாடித் திரிந்தாலென்ன”

எனும் வரிகள் இருவரின் குரல்களில் சிறப்பாக அமைந்தன.

மாலதி திரைப்படத்தை அந்தக்காலத்தில் நான் பார்க்கவில்லை. பாட்டுப் புத்தகம் மட்டுமே என்னிடம் இருந்தது. எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் ரவிச்சந்திரனுக்காக பாடியிருந்தார் என நினைத்திருந்தேன். காரணம் பாட்டுப் புத்தகத்தின் முகப்பில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி ஆகிய இருவரின் படங்களே காணப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் இத்திரைப்படத்தை வீடியோவில் பார்த்தபின் தான் தெரிந்தது எஸ்.பி.பி. அவர்கள் குரல் கொடுத்தது ரவிச்சந்திரனுக்கு அல்ல, ஜெமினி கணேசனுக்கு என்பது.

18 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் “நிலவே நீ சாட்சி”.

உயிருக்குயிராக காதலித்த இருவரில் காதலி சந்தர்ப்ப வசத்தால் மனோதத்துவ டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. இதை அறிந்த காதலன் சுய நினைவை இழக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் தம்பியான காதலனை குணப்படுத்த மனோதத்துவ டாக்டர் கடும் முயற்சியை மேற்கொள்கிறார். அப்போது தன் மனைவிதான் நண்பனின் தம்பியின் காதலி என்பதை அறிந்து, தன் மனைவியால் மட்டுமே அவளின் பழைய காதலனுக்கு மீண்டும் சுயநினைவைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கணவன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கதை அமைந்துள்ளது.

பி. மாதவன் இயக்கத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடித்த இப்படத்தில் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள 5 பாடல்களும் பிரபல்யமானவை. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள். இவற்றில் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி.பாடியுள்ளார். ஒரு பாடலை தனியாகவும், அடுத்த பாடலை பாடகி ராதாவுடன் இணைந்தும் பாடியுள்ளார்.

அந்தக் காலத்து இளைஞர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக இப்பாடல் அமைந்திருந்தது. தான் காதலியை வர்ணித்துப் பாடும் அந்தப் பாடல்.

“பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ ”

பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடும் ஹம்மிங் வழமை போல மிகவும் இனிமையாக இருந்தது.

“மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து-

மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து-

போதை மதுவாகப் போனமேனி மலர்ந்து-

பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து”

என தன் காதலியை வர்ணிக்கும் இந்த வரிகளை எஸ்.பி.பி.யின் குரலில் மூன்று கனிச்சாற்றையும் பாடலைக் கேட்கும் நாம் ஒன்றாகப் பருகியது போல இனிக்கும். அதிலும் மூன்று சரணங்களிலும் வரும் கடைசி வரிகளான,

“பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து”

“காணக் காணவேண்டும் ஒரு கோடி இன்று”

“இன்பம் அவளின்னும் அறியாத கல்வி”

ஆகிய மூன்று வரிகளும் உண்மையில் எத்தனை தடவைகள் கேட்டாலும் அலுக்காதவை..

19 ஆவது பாடல்

அடுத்த பாடலை எஸ்.பி.பி. அவர்கள் பாடகி ராதாவுடன் இணைந்து பாடியிருந்தார். அரிதான சில பாடல்களை மட்டும் பாடிய பாடகி ராதா. படத்தில் மனதை உருக்கும் அந்த உச்சக்கட்டப் பாடல்,

“நிலவே நீ சாட்சி-மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்-

நிலவே நீ சாட்சி ”

காதலர்கள் காதலிக்கும் சமயம் நிலவை சாட்சியாக வைத்து காதலி பாடும் பாடல் இது. படத்தின் உச்சக் கட்டத்தில் காதலனுக்கு பழைய நினைவுகள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பதற்காக இன்னொருவனின் மனைவியான காதலி அந்தப் பாடலை மீண்டும் பாடும் போது, காதலன் நினைவு திரும்பி, தான் பழைய காதலியைப் பார்த்த மகிழ்ச்சியில் தானும் தொடர்ந்து அப்பாடலைப் பாடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களையும் ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

பாடல்கள் தொடரும்..

 

https://thinakkural.lk/article/76991

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் -பகுதி 7 -என்.கே.எஸ். திருச்செல்வம்

  • என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.pngஎஸ்.பி.பி. அவர்கள் பாடிய 20 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டு எஸ்.பி.பி. அவர்களின் குரலில் இலங்கை வானொலியில் ஒரு மென்மையான மெல்லிசை காற்றோடு கலந்து வந்து என் காதுகளில் ரீங்காரமிட்டுச் சென்றது. அந்த இனிமையான மெல்லிசைப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் “பெளர்ணமி”. இப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல், எஸ்.பி.பி. அவர்களின் ஏனைய பாடல்களைப் போல இனிமையான ஹம்மிங் இசையுடன் ஆரம்பமாகி பல்லவி, இரண்டு சரணங்கள் ஆகியவற்றுடன் மீண்டுமொரு மென்மையான ஹம்மிங் இசையுடன் முடிகிறது.

பாடலைக் கேட்கும் போது கதாநாயகன் பல வருடங்களின் பின் தன் ஊருக்கு வந்து, அதன் இயற்கைக் காட்சிகளை ரசித்தவண்ணம் தனது உறவுகளைக் காணச் செல்வது போல பாடல் புனையப் பட்டிருக்கும். அந்தப் பாடல்..

“காலம் எனக்கொரு பாட்டெழுதும்-
காற்று வந்தே இசையமைக்கும்-
தாளம் போடும் நீரலைகள்-
தாவிப் பாயும் நினைவலைகள்”

இலங்கை வானொலியில் இந்தப் பாடல் அடிக்கடி ஒலித்து சூப்பர் ஹிட் பாடல் ஆனது. ஆனால் இப்பாடல் இடம்பெற்ற படம் வெளிவரவில்லை எனத் தெரிந்தது.

“கைகளைப் போல் ஒரு நண்பனில்லை –
கால்களைப் போல் ஒரு தொண்டனில்லை –
உழைப்பதைப் போல் ஒரு இன்பமில்லை –
இதை உணர்ந்தவர் வாழ்வில் கவலையில்லை”

எனும் நம்பிக்கையூட்டும் வரிகள் பூவை செங்கூட்டுவன் அவர்களின் கை வண்ணத்தில் உருவாகியவை.

“எங்கே உருவம் அசைந்தாலும் –
அங்கே நிழலும் சதிராடும் –
என் இதயம் எங்கே இருந்தாலும் –
அது உறவைத் தேடி இசைபாடும்”

எனும் வரிகளில் நீண்ட நாட்களின் பின் தன் சொந்தங்களைக் காணப் போகும் ஏக்கம் தெரிகிறது.

இப்பாடல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் போது கேட்காத ஒரு சரணத்தை பூவை செங்கூட்டுவன் அவர்களின் பாடல் தொகுப்பு புத்தகத்தில் பார்த்தேன். அந்த வரிகளில் நாயகன் தான் குடும்ப உறவுகளிடம் கொண்டிருந்த பாசப் பிணைப்பு தெரிந்தது.

“கருணை பிறந்தது அன்னையிடம் –
கடமை பிறந்தது தந்தையிடம் –
பாசம் பிறந்தது அண்ணனிடம் –
அது நேசம் கொண்டது தங்கையிடம்”

எனும் இவ்வரிகளை எஸ். பி. பி. அவர்களின் குரலில் கேட்கக் கிடைக்கவில்லை. பெளர்ணமி படத்திற்கு ஆர்.கே.சேகர் எனும் இசையமைப்பாளர் இசை அமைத்திருந்ததாகவும், படம் வெளியாகி மூன்று நாட்கள் மட்டுமே ஓடியதாகவும் ஒரு குறிப்பில் படித்தேன்.

படத்தில் இடம் பெற்ற வேறு பாடல்கள் பற்றிய விபரங்கள் பற்றியோ, இப்படத்தில் நடித்த நடிகர்கள் பற்றிய விபரங்களையோ அறிய முடியவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் மொத்தமாக 19 பாடல்களைப் பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் எஸ்.பி.பி. அவர்களின் பாடல்களை வெகுவாக ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றே கூறலாம். ஏனெனில் 1971 ஆம் ஆண்டு எஸ்.பி.பி. அவர்களின் தென்மதுரக் குரலில் 39 பாடல்கள் வெளிவந்தன. அத்தனையும் பாடல்களும் முத்துக்கள்.

முதலாவது ஆண்டில் 5 படங்களில் ஒவ்வொரு பாடல் பாடிய எஸ்.பி.பி. அவர்கள் இரண்டாவது ஆண்டில் 3 திரைப்படங்களில் தலா இரண்டு பாடல்களையும், 8 திரைப்படங்களில் தலா ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

மூன்றாவது ஆண்டான 1971 ல் வெளியான சில படங்களில் 3 பாடல்கள் பாடியிருந்தார்.

1971 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று வெளியான திரைப்படம் “உத்தரவின்றி உள்ளே வா”. என்.சி.சக்கரவர்த்தி இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது. நண்பர்கள் நால்வர் ஒன்றாகக் குடியிருக்கும் வீட்டில் திடீரென வந்த ஒரு இளம் பெண்ணினால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. பின்பு அவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் மனதில் இடம் பிடிக்க போட்டி போட்டு முயற்சி செய்கின்றனர். ஆனால் அப்பெண்ணோ அவர்களில் ஒருவரைக் காதலிக்கிறாள். இப்படியான கதையை வைத்து ஒரு நகைச்சுவை சித்திரத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மாலி ஆகியோர் நண்பர்களாகவும், வீட்டிற்கு வரும் பெண்ணாக காஞ்சனாவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இவற்றில் 4 பாடல்கள் பிரபல்யம் ஆயின. மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. எஸ்.பி.பி. அவர்கள் முதல் தடவையாக மூன்று பாடல்கள் பாடிய படம் “உத்தரவின்றி உள்ளேவா” படத்தில் மிக இனிமையான மெல்லிசை ராகம் ஒன்று நாம் இதயத்தை வருடிச் சென்றது.

“மாதாமோ ஆவணி- மங்கையோ மாங்கனி”

எனும் இப்பாடலை பி.சுசீலா அவர்களுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி. பாடலின் இடையில் வரும் “தனன தனன தனன னா” எனும் ஜதி வரிகள் எஸ்.பி.பி, சுசீலா ஆகியோரின் குரலில் பாடலுக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன.

பாடல் காட்சியில் ரவிச்சந்திரனும், காஞ்சனாவும் ஆடிப் பாடும்போது ஏனைய மூன்று நண்பர்களும் அதைக்கண்டு மனதில் புழுங்கி புலம்புவதும், பின்பு பாடல் மீண்டும் தொடர்வதுமாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத எஸ்.பி.பி அவர்களின் பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.

தொடரும்..

https://thinakkural.lk/article/78410

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பி.யும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி 8 -என்.கே.எஸ். திருச்செல்வம்

  • என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.pngஎஸ்.பி.பி. அவர்கள் பாடிய 22 ஆவது பாடல்

1971 ஆம் ஆண்டு வெளியான “உத்தரவின்றி உள்ளே வா” திரைப்படத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இன்னும் இரண்டு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் ஒன்று, நண்பர்கள் மூவரும் போட்டிபோட்டு காதலிக்கும் நாயகியான காஞ்சனாவுடன் ஆடிப்பாடுவது போல் ஒவ்வொருவரும் கனவு காண்பது போன்ற காட்சி அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்.

மூன்று பேர் பாடும் அப்பாடல் ..
“உத்தரவின்றி உள்ளேவா-
உன்னிடம் ஆசை கொண்டேன் வா-
உலகினில் ஆடவர் ஆயிரம் ஆயிரம்-
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்”

இப்பாடலில் கஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். பாடலில் பாகவதாராகத் தோன்றும் நாகேஷ் அவர்களுக்கு டி.எம்.எஸ். பாடினார். இரண்டாவது சரணத்தில் நான்கு வரிகளை மட்டும் ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி. அவர்கள் பாடினார்.

23 ஆவது பாடல்

படத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய மூன்றாவது பாடல் .. “உன்னைத் தொடுவது இனியது-
நான் சொல்லித் தருவது புதியது-

இதில் மின்னல் போலொரு துடிப்பு-
இது முன்பின் இல்லாத நினைப்பு”

இப்பாடலை இரண்டு காதல் ஜோடிகள் பாடுவார்கள். ரவிச்சந்திரனும், காஞ்சனாவும் ஒரு ஜோடி. நாகேசும், ராமாபிரபாவும் அடுத்த ஜோடி. இந்த நான்கு பேரும் ஆடிப்பாடுவது போன்ற காட்சியில் பாடல் இடம்பெறும்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0முதல் ஜோடிக்கு எஸ்.பி.பியும், பி.சுசீலாவும், அடுத்த ஜோடிக்கு சாயிபாபாவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் குரல் கொடுத்தார்கள். பாடலின் ஆரம்பத்திலும், இடையிலும் எஸ்.பி.பி. அவர்களின் ஹம்மிங் இசை இடம் பெற்றிருக்கும். இலங்கை வானொலியில் ஒலித்த இப்பாடலும் பிரபல்யமான பாடல்தான்.

1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் முக்கியமான ஒரு திரைப்படமாக வெளியானது “நான்கு சுவர்கள்”.

வித்தியாசமான கதையமைப்பில் கே.பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் அன்றைய இளம் முன்னணி நடிகர்களான ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய இரு கதாநாயகர்களும் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படம் கே.பாலச்சந்தர் அவர்களின் முதலாவது கலர் திரைப்படமாகும்.

அநாதை விடுதியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் இருவர் அங்குள்ள ஒரு நய வஞ்சகனின் சூழச்சியால் வீண் பழி சுமத்தப் பட்டு, சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் வளர்ந்து, அதனால் சமூகத்தால் ஓட ஓட விரட்டப்பட்டு, இறுதியில் விரட்டியவர்களை எதிர்த்து நின்று அடித்து கொள்ளையர்களாக மாறுகின்றனர். இவர்களில் ஒருவன் இரக்கமற்ற கெட்டவன். ஒருவன் மனிதாபிமானம் மிக்க நல்லவன்.

இப்படிப்பட்ட கொள்ளக்காரர்கள் ஒரு நல்ல மனிதரின் அன்புக்குக் கட்டுப்பட்டு, திருடர்களையும், பிச்சைக்காரர்களையும், கைவிடப்பட்ட அனாதைகளையும் ஒன்று சேர்த்து ஒரு கிராமத்தை உருவாக்குவது தான் கதை. இந்த வித்தியாசமான கதையமைப்பில் கொள்ளைக்கார நண்பர்களில் நல்லவனாக ரவிச்சந்திரனும், கேட்டவனாக ஜெய்சங்கரும் நடித்திருந்தனர். இவர்களின் ஜோடிகளாக வாணிஸ்ரீ, விஜயலலிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தமாக ஆறு பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் மூன்று பாடல்களை எஸ்.பி.பி. அவர்கள் பாடினார்.

24 ஆவது பாடல்

அந்தக்கால கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான பாடல்களில் ஒன்று எஸ்.பி.பி.யின் குரலில் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ரசிகர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்றாகும். அப்பாடல்..

ஓ மைனா ஓ மைனா- அது உன் கண்ணா- பொன் மீனா
ஓடும் புள்ளி மானா- பூவில் சிந்தும் தேனா.

பாடலின் தொடக்கம் எஸ்.பி.பி. அவர்களின் குரலில் லா….. லா..லா.. எனும் இனிமையான ஹம்மிங் இசையுடன் ஆரம்பமாகி இறுதியில் இதே ஹம்மிங் இசையுடன் நிறைவு பெறும்.

“ஓ மைனா” எனும் இதே பாடல் படத்தில் இன்னுமொரு தடவையும் இடம் பெற்றுள்ளது. அப்பாடலை ஜெய்சங்கருக்காக டி.எம்.எஸ். பாடியிருந்தார்.

25 ஆவது பாடல்

படத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டாவது பாடல் ஒரு ஜோடிப் பாடலாகும். பி.சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய அப்பாடல்…

நினைத்தால் நான் வானம் சென்று- நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்.

எனும் பாடலாகும். இப்பாடல் காட்சி முழுதும் கோவாவில் படமாக்கப்பட்டது. ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பியும், வாணிஸ்ரீ அவர்களுக்கு பி.சுசீலாவும் பாடியிருந்தனர்.

26 ஆவது பாடல்

படத்தில் எஸ்.பி.பி. பாடிய மூன்றாவது பாடல் டி.எம்.எஸ். உடன் இணைந்து பாடிய ஓர் சமூக எழுச்சிப் பாடலாகும். நண்பர்களான ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் இப்பாடலில் நடித்திருந்தனர்.

ஓடி வாவென உலகத்தை அழைப்போம் – உலகம் வாராவிடில் புதியதாய் அமைப்போம்- ஏறு மேலென பூமிக்கு உரைப்போம் – இறங்கி வாவென வானத்தை இழுப்போம்.

எனத் தொடங்கும் இப்பாடல் முழுவதும் சமுதாயப் புரட்சிக் கருத்துக்களே நிறைந்திருந்தன. ஆனால் இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆகவில்லை என்பது மனவருத்தமே.

படத்தில் இடம்பெற்ற பாடல்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டு பாடல்கள் மட்டுமே பிரபல்யம் அடைந்தன. கே. பாலசந்தரின் முதலாவது கலர் படம் என்ற சிறப்பை இப்படம் பெற்றிருந்தாலும் இது ஒரு தோல்விப் படமாகும்.

தொடரும்..

 

https://thinakkural.lk/article/81003

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் பகுதி 9 -என்.கே.எஸ். திருச்செல்வம்

  • என்.கே.எஸ். திருச்செல்வம்

NKS.thiru_.200.png1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களுடன் வெளியான இரண்டு திரைப்படங்களில் அடுத்தது “தெய்வம் பேசுமா”.

ஏ.வி.எம்.ராஜன், நிர்மலா, புதுமுகம் சந்தியாராணி, சி.எல்.ஆனந்தன் நடித்த இந்தத் திரைப்படத்தை சின்னி-சம்பத் இயக்கியிருந்தனர். சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையில் 5 பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.

இப்பாடல்களில் இரண்டு பாடல்களை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். ஏனைய மூன்று பாடல்களையும் முக்கியத்துவம் மிக்க பாடல்களாக உருவாக்கினார்கள் சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்.

இவற்றில் ஒரு பாடலை பாட நீண்ட நாட்களின் பின் பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களை அழைத்து ப் பாட வைத்தனர். “கண்ணே வாடி-நான் தாண்டி உன் ஜோடி” எனும் பாடலை அவருடன் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0அடுத்த பாடலை கே.ஜே.ஏசுதாஸ் அவர்களைப் பாட வைத்தனர். 1963 ல் தமிழ்ப் பாடல்களைப் பாடத் தொடங்கிய கே.ஜே. ஏசுதாஸ் இதுவரை சுமார் 20 பாடல்களை மட்டுமே பாடியிருந்தார். அவரை இந்தப்படத்தில் ஒரு அருமையான தாலாட்டுப் பாடலைப் பாட வைத்தார் சங்கர்-கணேஷ்.

“பனி நிலவே-சிறு மலரே-கனி மொழி பேசும் பச்சைக் கிளியே நீ தானய்யா” எனும் அப்பாடல் தான் சங்கர்- கணேஷ் இசையில் ஏசுதாஸ் அவர்கள் பாடிய முதலாவது பாடலாகும்.

எஸ்.பி.பி. அவர்கள் பாடிய 27 ஆவது பாடல்.

அடுத்த முக்கியத்துவம் மிக்க பாடலை எஸ்.பி.பி அவர்களுடன் எஸ். ஜானகி இணைந்து பாடினார். இது ஒரு டூயட் பாடலாகும். அத்துடன் சங்கர்-கணேஷ் இசையில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டாவது பாடல். எஸ்.பி.பி-ஜானகி இணைந்து பாடிய இரண்டாவது பாடல், ஏ.வி.எம்.ராஜனுக்காக எஸ். பி. பி. பாடிய இரண்டாவது பாடல் எனும் பல இரண்டாவது பெருமைகளை இப்பாடல் கொண்டிருந்தது. எஸ். பி. பி. அவர்களின் ஹம்மிங் இசையுடன் ஆரம்பமாகும் அப்பாடல்…

81-2-10-1024x576.jpeg“ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்- உறவோடு தர வேண்டும் கன்னம்”
எனும் பாடல்.

இப்பாடலை புலமைப்பித்தன் அவர்கள் இயற்றியிருந்தார். படத்தின் நாயகன் ஏ.வி.எம்.ராஜன் தன் காதலி நிர்மலாவுடன் பாடும் காதல் பாடலாக இது அமைந்திருந்தது. இனிமையான இசையில் இப்பாடல் மெட்டமைக்கப் பட்டிருந்தாலும் பாடல் ஏனோ பிரபல்யம் ஆகவில்லை. காரணம் இலங்கை வானொலியில் இப்பாடல் ஒலிக்கவில்லை.

முக்கியத்துவம் மிக்க பாடல்களாக இவற்றை இசையமைப்பாளர் உருவாக்கி இருந்தாலும் இப்படத்தின் பாடல்களில் ஒன்று கூட பிரபல்யம் ஆகவில்லை. ஜேசுதாஸ் அவர்கள் பாடிய “பனி நிலவே-சிறு மலரே” எனும் பாடலை மட்டும் ஓரிரு தடவைகள் கேட்டதாக நினைவுள்ளது.

1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று “அருணோதயம்”.

சிவாஜி கணேசன், சரோஜாதேவி, முத்துராமன், லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் வி.சீனிவாசன் இயக்கிய இப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத கே.வி மகாதேவன் இசையமைத்திருந்தார்.

படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் இடம் பெற்றன.

அவற்றில் மூன்று தனிப்பாடல்களும், இரண்டு ஜோடிப்பாடல்களும் இருந்தன. தனிப்பாடல்களில் ஒரு பாடலை நடிகை மனோரமாவும், ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியும், ஒரு பாடலை டி.எம்.எஸ். அவர்களும் பாடினர்.

இரண்டு ஜோடிப் பாடல்களில் ஒன்றை டி.எம்.எஸ்-சுசீலா ஆகியோரும், அடுத்த பாடலை எஸ்.பி.பி-சுசீலா ஆகியோரும் பாடினர்.

28 ஆவது பாடல்.

எஸ்.பி.பி அவர்கள் சுசீலா அவர்களுடன் இணைந்து பாடிய அப்பாடல் அன்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. அப்பாடல்..

“எங்கள் வீட்டுத் தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா- திருவிழா.. திருவிழா”

எனும் இப்பாடல் சிவாஜி கணேசனின் படத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய முதலாவது பாடலாகும். ஆனால் பாடலை படத்தின் இரண்டாவது நாயகனான முத்துராமனுக்காக எஸ்.பி.பி. பாடியிருந்தார்.

இப்பாடல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளிவந்த “ஆராதனா” படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான “குங்குனா ரஹீ” எனும் பாடலின் சாயலில் கே.வி.மகாதேவன் அவர்களால் மெட்டமைக்கப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் உட்பட இப்படத்தில் இடம் பெற்ற “முத்து பவளம் முக்கனி சர்க்கரை”, “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே” ஆகிய பாடல்களும் பிரபல்யம் அடைந்தன.

1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான அடுத்த படம் “குலமா குணமா”. இதுவும் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படமாகும். படத்தில் அவருடன் பத்மினி, ஜெய்சங்கர், வாணிஸ்ரீ ஆகியோர் நடித்தனர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார்.

படத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள் இடம் பெற்றன. பி.சுசீலாவும், எஸ். ஜானகியும் இணைந்து ஒரு பாடலும், பி.சுசீலாவும், சூலமங்கலம் ராஜலட்சுமியும் இணைந்து ஒரு பாடலும் பாடினர். அடுத்தது ஒரு காதல் ஜோடிப்பாடலை டி.எம். எஸ் அவர்களும் சுசீலாவும் இணைந்து பாடினர்.

29 ஆவது பாடல்.

இப்படத்திலும் எஸ்.பி.பி. அவர்கள் சிவாஜி கணேசனுக்காகப் பாடவில்லை. இரண்டாவது நாயகனான ஜெய்சங்கருக்கே பின்னணி பாடியிருந்தார். அந்தப் பாடல் இரண்டு ஜோடிகள் இணைந்து பாடும் பாடல்..

“உலகில் இரண்டு கிளிகள்-அவை உரிமை பேசும் விழிகள்- இன்ப வலையில் விழுந்த மீன்கள்-தினம் மகிழந்து துள்ளும் மான்கள்”

எனும் இப்பாடலை டி.எம்.எஸ்-சுசீலா, எஸ்.பி.பி-எஸ்.ஜானகி ஆகிய நால்வரும் பாடினர். டி.எம்.எஸ்-சுசீலா ஆகிய இருவரும் சிவாஜி, பத்மினி ஆகியோருக்காகப் பாடினர். எஸ்.பி.பி-எஸ்.ஜானகி ஆகியோர் ஜெய்சங்கர்-வாணிஸ்ரீ ஆகியோருக்காகப் பாடினர். படத்தில் இடம் பெற்ற பாடல்களில் இப்பாடலே மிகவும் பிரபல்யம் ஆனது.

தொடரும்..

 

https://thinakkural.lk/article/83323

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி 10 -என்.கே.எஸ். திருச்செல்வம்

என்.கே.எஸ். திருச்செல்வம்

NKS.thiru_.200.png1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு திரைப் படங்கள் வெளிவந்தன.

எஸ்.பி.பி. அவர்கள் பாடிய 30 ஆவது பாடல்.

அவற்றில் ஒரு பாடல் எஸ்.பி.பி பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனது.

சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் இசையில், அன்றைய முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோரின் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று வெளிவந்த படம் “சுமதி என் சுந்தரி”.

இப்படத்தில் மொத்தமாக 7 பாடல்கள். ஒரு பாடலை மட்டும் கவிஞர் வாலி எழுத, ஏனைய 6 பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். அப்பாடல்களில் ஒன்று தான் அந்த சூப்பர் ஹிட் பாடல்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0“பொட்டு வைத்த முகமோ- கட்டி வைத்த குழலோ-
பொன் மணிச் சரமோ- அந்தி மஞ்சள் நிறமோ”

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.பி.பி. பாடிய முதலாவது பாடல் இது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பி. முதலாவதாக பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடல் போல சிவாஜி கணேசனுக்காக எஸ்.பி.பி. பாடிய முதலாவது பாடலான இதுவும் அன்றைய இளைய தலைமுறையினரின் அதிக வரவேற்பைப் பெற்ற பாடல் என்ற பெருமையைப் பெற்றது.

படத்தில் இடம்பெற்ற இரண்டு ஜோடிப் பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால் இப்பாடலை எஸ்.பி.பி. அவர்களுடன் இணைந்து பாடியவர் பி. வசந்தா எனும் பாடகி. இவர் அந்தக் காலத்தில் ஹம்மிங் இசைப்பதற்கு பெயர் போன பாடகி. எஸ்.பி.பி அவர்கள் சிவாஜி கணேசனுக்காகப் பாட, இவர் ஜெயலலிதாவுக்காக ஹம்மிங் மட்டுமே இசைத்திருந்தார். எம்.எஸ்.வி. போட்ட இந்த ஹம்மிங் இசையே பாடலுக்கு அதிக மெருகு சேர்த்திருந்தது.

இரண்டாம் சரணத்தில் இருந்தே ஹம்மிங் இசையை வசந்தா பாடியிருப்பார்.

வசந்தா: ஆஆஆ.. ஆஆ ஆ.. ஆஆஆ.. ஆஆஆ
ஆஆஆ.. ஆஆ ஆ.. ஆஆஆ.. ஆஆஆ
எஸ்.பி.பி: மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்-
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்-
மணமேடை தேடி நடைபோடும் தேவி-
பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
வசந்தா: லலலா.. லாலா.. லாலா.. லாலா..
எஸ்.பி.பி: என்னுடன் கலந்தாள்
வசந்தா: லலலா.. லாலா.. லாலா.. லாலா..

வசந்தா: ஆஆஆ.. ஆஆ.. ஆஆ….ஆ…ஆ..
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
எஸ்.பி.பி: மலைத் தோட்ட பூவில் மணம் இல்லை என்று-
மலைத் தோட்ட பூவில் மணம் இல்லை என்று-
கலைத் தோட்ட ராணி கைவீசி வந்தாள்-
ஒளியாகத் தோன்றி- நிழல் போல் மறைந்தாள்
வசந்தா: லலலா.. லாலா.. லாலா.. லாலா..
எஸ்.பி.பி: நிழல் போல் மறைந்தாள் வசந்தா: லலலா.. லாலா.. லாலா.. லாலா..
எஸ்.பி.பி: போட்டு வைத்த முகமோ வசந்தா: ஓ ஓ ஓ எஸ்.பி.பி: கட்டி வைத்த குழலோ வசந்தா: ஆஆஆ எஸ்.பி.பி: பொன் மணிச் சரமோ- அந்தி மஞ்சள் நிறமோ வசந்தா: லலலா.. லாலா.. லாலா.. லாலா.. எஸ்.பி.பி: அந்தி மஞ்சள் நிறமோ வசந்தா: லலலா.. லாலா.. லாலா..லாலா..

31 ஆவது பாடல்

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் வெளியான அடுத்த படம் “சபதம்”.

பி.மாதவனின் இயக்கத்தில் ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த இப்படத்திற்கு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தமாக 4 பாடல்கள். அவற்றில் ஒரு பாடல் எஸ்.பி.பி.யின் குரலில் ஒலித்தது.

கண்ணதாசனின் வரிகளில், இளம் காதலர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் மிருதுவான ராகம் எஸ்.பி.பியின் இனிய குரலில் இலங்கை வானொலி மூலம் இசையாய் ஒலித்து பிரபல்யமானது. அந்தப்பாடல்..

“தொடுவதென்ன தென்றாலோ மலர்களோ- பனியில் வந்த துளிகளோ கனிகளோ- உடலெங்கும் குளிராவதென்ன- என் மானமெங்கும் நெருப்பாவதென்ன”

இந்த மென்மையான மெல்லிசைப் பாடலில் ஓர் சிறப்பும் இருந்தது. அந்த காலகட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் கொம்போசிங் அசிஸ்டண்டாக இருந்த ஒருவரின் முக்கியமான பங்களிப்பும் இப்பாடலில் இருந்தது. இப்பாடல் இசைக்கு ஏற்ற இணைப்பு இசையை அவர் வழங்கியிருந்தார். அவர் தான் பிற்காலத்தில் பிரபல்யமான இசைஞானி இளையராஜா அவர்கள்.
பின்பு இளையராஜா அவர்கள் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய பின் அவரது இசையில் எஸ்.பி.பி.பாடிய முதலாவது பாடலான “நான் பேச வந்தேன்” என்னும் பாடல் “தொடுவதென்ன தென்றாலோ மலர்களோ” பாடலின் இசையை ஒத்ததாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தன் காதலி கே.ஆர்.விஜயாவை எண்ணி காதலன் ரவிச்சந்திரன் பாடும் இப்பாடலில்..

“தேரிலேறி தேவதை வந்து-இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று-
உடல் தேய்த்து விட்டாளோ-முகம் பார்த்து விட்டாளோ- இன்று சித்திர முத்துக்கள் சிந்திய ரத்தினம்- யாரோ.. அவள் யாரோ.. ம்ம் .. ம்ம் ஆ.. ஆ..ஆ..

எனும் வரிகள் எஸ்.பி.பி.யின் குரலில் இதயத்தை வருடிச் சென்றன.

32 ஆவது பாடல்

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ரவிச்சந்திரன், பாரதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மீண்டும் வாழ்வேன்”. டி.என்.பாலுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்.எஸ்.வியின் இசையில், கண்ணதாசனின் வரிகளில் 6 பாடல்கள் இடம் பெற்றன.

இப்பாடல்களில் ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார். அந்தப் பாடல்..

“வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்- இளங்காற்று தாலாட்ட-பொன் மேனி நீராட”

வில்லன் மனோகர் தனது பெண் கையாட்கள் உதவியுடன் கடற்கரையில் ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருக்கும் கதாநாயகி பாரதியைக் மூழ்கடித்துக் கொல்ல முயற்சி செய்கையில் நாயகன் ரவிச்சந்திரன் இடையில் பாய்ந்து கொல்ல வந்த பெண்களை விரட்டிவிட்டு நாயகியைக் காப்பாற்றுவது போன்ற சூழ்நிலையில் பாடல் அமைக்கப் பட்டிருந்தது.

அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்து பிரபல்யமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

தொடரும்..

https://thinakkural.lk/article/87150

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி 11 – என்.கே.எஸ். திருச்செல்வம்

என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.png1971 ஆம் ஆண்டு மே மாதம் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களுடன் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஒரு திரைப்படம் “கண்காட்சி.”
ஏ.பி.நாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவகுமார், குமாரி பத்மினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மேலும் இரண்டு ஜோடிகள் நடித்திருந்தனர். அவர்களில் ஒரு ஜோடி கள்ளபார்ட் நடராஜன், சி.ஐ.டி.சகுந்தலா. அடுத்த ஜோடி நகைச்சுவை நடிகர்களான சுருளிராஜன், மனோரமா.

சென்னையில் நடக்கும் ஒரு கண்காட்சியில் உள்ள அரங்கில் சங்கர், கெளரி எனும் ஜோடி பாரம்பரிய நடனங்களை ஆடிப் பாடி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அடுத்த அரங்கில் மதன்,மோகினி எனும் ஜோடி மேலைத்தேய நடனங்களை ஆடிப் பாடி இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்தக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக ஒரு மேலைத்தேய ஜோடி அரங்கத்திற்கு வருகிறது. சங்கர்,கெளரி ஜோடியின் அரங்கில் திடீரென மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அங்கு இருந்தவர்களின் தங்க,வைர நகைகள் மதன்,மோகினி ஜோடியின் கூட்டத்தினாரால் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையிடப்பட்ட பெருமதிமிக்க இந்நகைகளை பல வேஷங்கள் போட்டு சூழ்ச்சி செய்து கைப்பற்றுகிறது கண்காட்சியைப் பார்க்க வந்த நகைச்சுவையாக நடிக்கும் மேலைத்தேய ஜோடி.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0புராணக் கதைகளுக்கு உயிர் கொடுத்து பக்தி மணம் ததும்ப திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவரான இயக்குனர் ஏ.பி.நாகராஜன், “கண்காட்சி” எனும் இத்திரைப்படத்தில் பல மர்மங்கள் நிறைந்த கதையமைப்பில், நமது பாரம்பரிய நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படத்தில் சங்கர்-கெளரியாக சிவகுமார், குமாரி பத்மினி ஆகியோரும், மதன்-மோகினியாக கள்ளபார்ட் நடராஜன், சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோரும், மேலைத்தேய நகைச்சுவை ஜோடியாக சுருளிராஜன், மனோரமா ஆகியோரும் நடித்திருந்தனர்.

குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் படத்தில் மொத்தமாக 7 பாடல்கள் இடம் பெற்றன. இந்த 7 பாடல்களையும் 7 பேர் எழுதியிருந்தார்கள். இவற்றில் இரண்டு பாடல்களைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டும் ஜோடிப்பாடல்கள். இரண்டு பாடல்களையும் எஸ்.பி.பியுடன் இணைந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

33 ஆவது பாடல்

அவற்றில் ஒரு பாடல்..

“அனங்கன் அங்கஜன் அன்பன்-வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா-

மன்னுயிர்க்கின்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா”

எனும் பாடல். இப்பாடலை கே.டி.சந்தானம் இயற்றியிருந்தார். பாடலுக்கு சிவகுமார், குமாரி பத்மினி ஆகியோர் பாரம்பரிய நடனம் ஆடி நடித்தனர். பாடலின் ஆரம்பம் “வெண்ணிலவைக் குடை பிடித்து வீசு தென்றல் தேர் ஏறி…” எனும் ஆறு வரி வசன நடையோடு தொடங்கும். இவ்வசன நடையை இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பேசியிருந்தார். அதன் பின்பு “அனங்கன் அங்கஜன் அன்பன்..” என பாடல் தொடரும். மிகவும் வித்தியாசமான இசையை குன்னக்குடி வைத்தியநாதன் இப்பாடலுக்கு வழங்கியிருந்தார். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்து பிரபல்யம் ஆனது இப்பாடல்.

34 ஆவது பாடல்

கண்காட்சி திரைப்படத்தில் எஸ்.பி.பி.பாடிய அடுத்த பாடல்..
“துள்ளும் மங்கை முகம்-அள்ளித் தந்த சுகம் சொல்லச் சொல்ல தினம்-மெல்ல மெல்ல மனம் நினைத்தாலே இன்பம் பொங்குமே நிலையான காதல் வெல்லுமே”
எனும் பாடல். இப்பாடலை நெல்லை அருள்மணி என்பவர் எழுதியிருந்தார்.

இப்பாடலை மேலைத்தேய நடனம் ஆடி, நடித்த கள்ளபார்ட் நடராஜனுக்காக எஸ்.பி.பி.யும், சி.ஐ.டி.சகுந்தலாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருந்தனர். இப்பாடலுக்கும் மிகவும் வித்தியாசமான இசையை குன்னக்குடி வைத்தியநாதன் வழங்கியிருந்தார்.

35 ஆவது பாடல்

1971 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான அடுத்த திரைப்படம் “நீதி தேவன்”. இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீ நாயகன், நாயகியாக நடிக்க முத்துராமன், நிர்மலா, நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆர்.தேவராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் 4 பாடல்கள் இடம் பெற்றன. இவற்றில் 3 ஜோடிப் பாடல்கள். இதில் ஒரு ஜோடிப் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி. கண்ணதாசனின் வரிகளில் உருவான அப்பாடல்..

“மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக என் மனதைத் தரலாமா- நான் மடியில் வரலாமா-

காணிக்கையான பின் ஆணிப்பொன் ஊஞ்சலில் கவிதைகள் பெறலாமா-அதிலே கனவுகள் வரலாமா.”

கே.வி.மகாதேவனின் இசையில் மிகவும் இனிமையான இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆகவில்லை இலங்கை வானொலியில் மிக அரிதாகவே ஒலித்தது. ஏனைய மூன்று பாடல்களை நான் இலங்கை வானொலியில் கேட்டதில்லை. இத்திரைப்படத்தையும் நான் பார்க்கவில்லை. அன்று இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப் படவில்லை என நினைக்கிறேன்.
இதுவரை இப்பாடலின் வீடியோ காட்சியும் கிடைக்கவில்லை. அதனால் இப்பாடலுக்கு நடித்திருப்பவர்கள் யார் என்பது சரியாகத் தெரியவில்லை. திரைப்படத்தில் நாயகன், நாயகியான ஜெய்சங்கர், ராஜஸ்ரீ ஆகியோர் அல்லது துணை நாயகன், நாயகியான முத்துராமன், நிர்மலா ஆகியோரில் இருவர் இப்பாடல் காட்சியில் நடித்திருப்பர் என எண்ணுகிறேன். இப்படத்தின் பழைய பாட்டுப் புத்தகம் மட்டும் என்னிடம் உள்ளது. ஆனால் அதில் கதைச்சுருக்கம் கொடுக்கப்படவில்லை. மொத்தத்தில் “நீதி தேவன்” திரைப்படத்தில் இடம் பெற்ற 4 பாடல்களும், நடித்த நடிகர்கள் பற்றிய விபரங்களும் மட்டுமே தெரியும்.

தொடரும்..

 

https://thinakkural.lk/article/94418

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.