Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமல்ஹாசன் பேட்டி: "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன் பேட்டி: "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?" #BBC_Exclusive தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

3 ஏப்ரல் 2021
கமல்ஹாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைபெறுகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலில் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பயணம் செய்கிறார், மக்களை சந்திக்கிறார். இதற்கு நடுவில், தமிழக சட்டமன்ற தேர்தல், திராவிட கட்சிகள், பிராமணர் - பிராமணர் அல்லாதோர் விவகாரம் ஆகியவை குறித்தெல்லாம் கோயம்புத்தூரில் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் கமல். அவரது பேட்டியிலிருந்து:

கே. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை நிலவரம் எப்படியிருக்கிறது?

ப. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அது வாக்காக மாற வேண்டும். இந்தப் பணநாயக விளையாட்டில் ஜனநாயகம் ஜெயிக்க வேண்டும்.

கே. பல இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறீர்கள்...இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னையாக எந்தப் பிரச்சனை இருக்கிறது என நினைக்கிறீர்கள்?

ப. ரொம்பவும் எளிதான பிரச்னைகள்தான். எனக்கு வியப்பாகக் கூட இருக்கிறது. நான் அரசியல் களத்துக்கு புதிதாக வந்த ஒரு நபர். மக்கள் சேவையில் எங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்றாலும்கூட, அந்த அனுபவமேகூட இந்தக் குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாம். அடிப்படை வசதிகளைக்கூட செய்துதராமல் என்ன நடந்துகொண்டிருந்தது என்று தோன்றுகிறது. அடிப்படை வசதிகளைக்கூட செய்துதராமல் அப்படி என்ன சுயநலம்? விளம்பரத்திற்குக்கூட நல்லது செய்யவில்லை. ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அந்த அவலங்களைப் போக்க பெரிய செலவு ஒன்றும் ஆகிவிடாது. ஆனால், வேண்டுமென்றே ஏழ்மையை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதைப்போல பாதுகாக்கிறார்களோ என பயமாக இருக்கிறது.

கே. ஆனால், தமிழ்நாடு எல்லா சமூகநலக் குறியீடுகளிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத்தானே இருக்கிறது...

ப. நம்முடைய ஒப்பிடுதல் இந்தியாவோடு இருக்கக் கூடாதோ என்னவோ. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் நியாயம். அப்போதுதான் நாமும் வளர முடியும். வங்கப் பஞ்ச காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் சிறப்பாகத்தான் இருக்கும். அல்லது பிஹாரைப் பார்த்து நாம் சிறப்பாக இருக்கிறோம் என நினைத்துக்கொள்வது சரியா? கேரளாவைப் பார்த்து ஏன் நாம் பொறாமைப்படுவதில்லை? அங்கே இருக்கக்கூடிய எழுத்தறிவை தமிழ்நாடு முந்த வேண்டாமா? 

எங்களிடம் நிறைய மருத்துவமனைகள் இருக்கிறது என்கிறார்கள். எல்லாம் இயங்காத மருத்துவமனைகள். அரசு பிரமாதமாக நடத்திக்கொண்டிருக்கும் தொழில் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். டாஸ்மாக் தான் அது. அதைப்போல எல்லாத் துறையிலும் வெற்றிபெற்றால், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது. 

கமல்ஹாசன்

கே. தற்போதைய தமிழக அரசு எந்திரம் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது எனக் கருதுகிறீர்களா?

ப. தோல்வியடைந்து விட்டது என்பதைவிட, ஊழல்மயமாகியிருக்கிறது என்பதுதான் முக்கியம். அரசு எந்திரம் தோற்கவில்லை. தோற்கவைத்துவிட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம், 30 சதவீதம் கமிஷன். எல்லாவற்றிலிருந்தும் 30 சதவீதத்தை எடுத்துவிட்டால், ஆரோக்கியமற்ற சூழல் ஏற்பட்டுவிடும். இப்படியாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் தமிழ்நாடு இருக்கிறது.

கே. ஊழல் தொடர்பாக நீங்கள் தொடர்ந்து பேசிவருகிறீர்கள். ஆனால், மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பதாகவும் குற்றம்சாட்டுகிறீர்கள். இந்தச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம்?

ப. தலைமைக்கு நேர்மை இருந்தால் அது எல்லா இடங்களிலும் அருவிபோல பரவிவிடும். பாறையும் நனைந்துவிடும்.

கே. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை இது இரண்டாவது தேர்தல். இந்தத் தேர்தலின் முடிவுகள் மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த அளவுக்கு முக்கியம்?

ப. இந்தத் தேர்தலில் களமிறங்கியபோதே மக்கள் ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். தேர்தல் அரசியலில் மய்யம் இனி பெரும் பங்கு வகிக்கும். எப்படி என்பதை மக்கள் இன்னும் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் இல்லாமல் இனி தமிழக அரசியல் இல்லை என்பதை எல்லோருமே சொல்கிறார்கள். சில பேர் சந்தோஷத்திலும் ஆர்வத்திலும் இப்போதே ஜெயித்தாகிவிட்டது என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது தேர்தலில் வெல்லுவது அல்ல. கொடுக்கப்பட்ட இலக்குகளை ஐந்து வருடத்தில் செய்து முடிப்பதுதான் வெற்றி. அப்படிப்பார்த்தால், என்னைப் பொறுத்தவரை நான் வெற்றியை நெருங்கக்கூட ஆரம்பிக்கவில்லை. 

கே. இந்தத் தேர்தலில் நீங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் நிலையில், உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்.. தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா.. மக்களுடைய பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்துவீர்களா?

ப. என்னுடைய பல வேட்பாளர்கள் வேறு வேலை செய்தபடிதான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். பொன்னுசாமி என்று ஒருவர் இருக்கிறார். அவர் வேலை பால் விநியோகம். அவர் அரசியலுக்கு வருவதால் அதை நிறுத்தப்போவதில்லை. நானும் அப்படித்தான். சினிமாவுக்கென நானும் நேரம் ஒதுக்குவேன். ஆனால், குறைவான நேரம் ஒதுக்குவேன். எனக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், நிறைய வேலை செய்ய வேண்டியதில்லை. 

24X7 என எந்த எம்.எல்.ஏவும் வேலை பார்ப்பதில்லை. 24X7 என கணவர்களும் கிடையாது. 24X7 என அப்பாவும் கிடையாது. 24X7 என எம்.எல்.ஏ. மட்டும் ஏன் இருக்க வேண்டும்? அரசுப் பணியில் இருப்பவர்கள் விளையாட்டு வீரர்களாகக்கூட இருக்கிறார்கள். எதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ, அதில் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள். எனக்கு இப்போது ஆர்வம் மக்கள் மீதுதான். கண்டிப்பாக கூடுதல் நேரத்தைச் செலவிடுவேன். 

ஆனால், இதைச் செய்வதென்னவோ பெரிய தப்பு மாதிரி சொல்ல முடியாது. ரவுடிகள் எல்லாம் சம்பாதிக்க வந்து அரசியலை முழு நேரமாகச் செய்யலாம். ஏற்கனவே சம்பாதித்துக்கொண்டிருப்பவர்கள் அதையும் பார்த்துக்கொண்டு, இதையும் பார்ப்பதுதான் சமூகசேவை என நான் நினைக்கிறேன். 

கே. உங்களுடைய சமீபத்திய பரப்புரையில் நான் 25 வருடத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால், அந்த காலகட்டத்தில் அரசியலுக்கே வர மாட்டேன் என பேசிக்கொண்டிருந்தீர்கள். உங்களை அரசியலுக்கு இழுத்துவந்தது எது? மனமாற்றம் எப்படி ஏற்பட்டது?

ப. தலைமையின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டதுகூட காரணமாக இருக்கலாம். 

கமல்ஹாசன்

பட மூலாதாரம், KAMALHASSAN TWITTER

கே. கடந்த 25- 30 ஆண்டுகாலத் தலைமைகளைச் சொல்கிறீர்களா?

ப. 30 - 35 ஆண்டுகளில் படிப்படியாக தரம் குறைந்துவிட்டது. தலைமைப் பொறுப்பே இப்படி இருந்ததென்றால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்குமே வந்துவிட்டது. 

கே. மக்கள் நீதி மய்யம் சுற்றுச்சூழலுக்கு என தனியாக ஒரு அணியை வைத்திருக்கிறது. இருந்தாலும் உங்கள் தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஊக்குவிப்போம் என்கிறீர்கள். சூழலியலாளர்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். 

ப. மரபணு மாற்றத்தை வைத்து வெள்ளைக்காரர்கள் செய்வது வியாபாரம். ஆனால், அறிவியலும் விவசாயமும் கலக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை ஒரு உயிருள்ள அறிக்கை. அதில் மக்களோடு இணைந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும். நாங்கள் ஒரு விஷயத்தை எழுதிவிட்டதால், அது கல்லில் எழுதிய சட்டம் என்று நான் சொல்ல மாட்டேன். அதில் விவாதங்கள் இருந்தால் அது மாற்றப்படும். ஜல்லிக்கட்டுக்கு நடந்ததைப்போல பெரிய போராட்டம் செய்துதான் மாற்ற வேண்டுமென்பதில்லை. மக்கள் ஒரு விஷயம் வேண்டாமென்றால் அதை அறிக்கையிலிருந்து நீக்குவதில் எங்களுக்கு அவமானமில்லை.

கமல்ஹாசன்

பட மூலாதாரம், KAMALHASSAN TWITTER

கே. நிரந்தர பசுமைப் புரட்சி குறித்தும் அதில் பேசுகிறீர்கள். அப்படியென்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்...

ப. "பசுமை புரட்சி பிளஸ்" என்று சொல்லியிருக்கிறோம். நிரந்தர பசுமைப் புரட்சி என்றால், அதற்கென ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும். அறிவியல் என்ற பெயரில் டெல்டா பகுதியை கார்ப்பரேட்களுக்கு விற்க முயல்கிறோம். அதைச் செய்யக்கூடாது. பூமிக்கடியில் வைரமும் தங்கமும் இருந்தால், மேலே விவசாயம் நடந்து கொண்டிருந்தால் விவசாயம்தான் தொடர்ந்து நடக்க வேண்டும். தங்கத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

கே. தமிழ்நாடு நீண்ட நாட்களாக இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. உங்களுடைய தேர்தல் அறிக்கையில் ஓரிடத்தில் மும்மொழிகள் கற்பிக்கப்படும் என வருகிறது. மற்றொரு இடத்தில் இரு மொழிக் கொள்கை குறித்து வருகிறது. மொழிகளைக் கற்பிப்பதில் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன?

ப. அண்ணா சொன்னதுதான். அண்ணாவும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார். அவர் இரண்டு பேசுவதைப் போல இருக்கும். ஆனால், ஒன்றுதான் பேசினார். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்றார். இது இரண்டு விஷயத்தைப் போல இருக்கும். ஆனால், ஒன்றுதான். ஆகவே, என்னப் பொறுத்தவரை தேவைக்கேற்றபடி செய்ய வேண்டும் என்பதுதான். 

கே. ஆகவே, இந்த விஷயத்தில் அண்ணாவை ஏற்றுக்கொள்கிறீர்கள்...

ப. நான் நவீன அரசியல்வாதி என்பதால் எல்லோரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேர்வுசெய்து சாப்பிட முடியும். Centerism என்பதில் மக்களை மய்யப்படுத்துவதால் இப்படித்தான் இருக்க வேண்டும்; அப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வீம்பு எங்களிடம் கிடையாது. 

கமல்ஹாசன்

பட மூலாதாரம், KAMALHASSAN TWITTER

கே. இந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்.. ஏன் இந்தத் தொகுதியைத் தேர்வுசெய்தீர்கள். இந்தத் தொகுதியின் பிரச்னைகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

ப. கண்டிப்பாக. நிச்சயமாக எனக்குத் தெரியும். தவிர, இந்தத் தொகுதியை ஒரு உதாரண களமாக நான் நினைக்கிறேன். அதற்கான எல்லா சிக்கல்களும் இதில் இருக்கிறது. எல்லாத் தகுதிகளும் இந்தத் தொகுதிக்கு இருக்கிறது. இது ஒரு மான்செஸ்டராக முடியும். 

எங்களைப் பொறுத்தவரை, புதிதாக மாண்பை உருவாக்குகிறோம் என்பதில்ல. இழந்த மாண்பை மீட்கிறோம் என்பதுதான். அப்படிப் பார்க்கும்போது இங்கே மத நல்லிணக்கம் ஒரு சவாலாக இருக்கிறது. அதைக் கையில் எடுக்க வேண்டுமென நினைக்கிறேன். தவிர, இங்கே பா.ஜ.க. ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வந்தார்கள். அந்த நம்பிக்கையைத் தகர்த்துக் காட்ட வேண்டுமென்ற ஒரு வீம்பும் இருக்கிறது.

கே. சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச முதல்வர் வந்தபோது, இங்கே ஒரு மோதல் நடந்தது. நீங்கள் அதைக் கண்டித்தீர்கள். ஆனால், பா.ஜ.க. எதிர்ப்பு என்பது உங்கள் பிரச்சாரத்தின் மையப் பகுதியாக இருப்பதில்லை...

ப. எங்கெங்கெல்லாம் எதிர்த்தால் தேவையோ, அங்கே எதிர்த்தால் போதும். பாரதப் பிரதமர் என்ற மரியாதை அவருக்கு எப்போதுமே உண்டு. ஆனால், பாரதத்திற்கு விரோதமான செயல்களைச் செய்தால், எந்தப் பிரதமராக இருந்தாலும் நான் எதிர்ப்பேன். எதிர்ப்பேன் என்பது கண்டனம் தெரிவிப்பது. ஜனநாயக முறைப்படி எதிர்ப்பது. நான் நக்ஸலைட் அல்ல. துப்பாக்கி எடுத்துக்கொண்டு சென்று சண்டை போட மாட்டேன். ஜனநாயகத்தில் இன்னமும் நம்பிக்கை உள்ளவன் நான். 

கே. அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்னைகள் எழும்போது அதற்காக போராட்டங்களை நடத்துகிறார்கள். உங்களுடைய அரசியலில் இம்மாதிரி போராட்டங்களுக்கு இடமிருக்கிறதா?

ப. காந்தி ஹீரோவாக இருந்தால், அந்தப் போராட்டத்தின் தொனியே வேறு மாதிரி இருக்கும். ஒத்துழையாமை இயக்கமும் போராட்டம்தான். பேருந்தை உடைப்பது அல்லது மாணவர்களோடு வைத்துக் கொளுத்துவது அல்லது மற்றவர்கள் அலுவலகத்தைக் கொளுத்துவது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது ஆகியவைதான் போராட்டம் என்றால், அதை நாங்கள் செய்ய மாட்டோம். அதை எழுதியே கொடுத்துவிடுகிறோம். அப்படிச் செய்தால் கட்சியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள்.

கே. உங்கள் கட்சியைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சிகளுடன் சித்தாந்த ரீதியாக எந்த அளவுக்கு ஒன்றுபடுகிறீர்கள்.. எந்த அளவுக்கு வேறுபடுகிறீர்கள்...

ப. நிறைய வேறுபடுகிறேன். நல்லதுகளை எடுத்துக்கொள்வேன். மதிய உணவுத் திட்டத்தைப் பொறுத்தவரை காமராஜர் செய்தாரா, எம்.ஜி.ஆர். செய்தாரா என்பது முக்கியமல்ல. இட ஒதுக்கீட்டை யார் ஆதரிக்கிறார்கள், யார் எதிர்க்கிறார்கள் என்பது முக்கியமல்ல. கடைசித் தமிழனுக்கு அது தேவையாக இருக்கும்வரை அது இருக்கும். அதுதான் என் நிலைப்பாடு. 

கமல்ஹாசன்

பட மூலாதாரம், KAMALHASSAN TWITTER

கே. தமிழக அரசியல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பிராமணர் - பிராமணரல்லாதோர் என்ற இரு துருவங்களுக்கு இடையில் நடந்துகொண்டிருக்கிறது. அது இன்னமும் செய்ய வேண்டிய அரசியல் என நினைக்கிறீர்களா?

ப. இல்லை. சொல்லப்போனால், பிராமணர் - பிராமணரல்லாதோர் விவகாரத்தை எளிதில் முடித்துவிடலாம். சாதி என்பதை அப்படியே இரண்டாகப் பிரிக்க முடியாது. பல படிநிலைகள் இருக்கின்றன. பிராமணர் அல்லாதவரெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாப் படிநிலைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. எல்லாப் படிநிலைகளிலும் இந்த ஏற்றத்தாழ்வைத் தாக்க வேண்டும். 

கே. தற்போதைய சூழலில் பிராமணர்கள் மட்டும் குறிவைக்கப்படுவதாகக் கருதுகிறீர்களா?

ப. இல்லை. அப்படிக் குறிவைத்தாக வேண்டும். அதைச் செய்தாகிவிட்டது. அப்படி பிராமணீயத்தில் நம்பிக்கை உள்ளவர்களை நாங்கள் எதிர்ப்போம். பிராமணர்களை எதிர்ப்பதென இதைச் செய்யக்கூடாது. காமராஜரை சாதி சொல்லி அழைப்பதை நான் ஏற்கவில்லை. காமராஜர் மாதிரி இருப்பவர்களுடன் எனக்கு நெருக்கம் உண்டு. ஆனால், இன்னமும் ஜாதி பேசுபவர்களுடன் இன்னமும் விமர்சனம் உண்டு. இப்போது விமர்சனம்தான் வைக்க முடியும். அந்த விமர்சனமே பிற்பாடு புரிதலுக்கு வழிவகுக்கும். அதுதான் என்னுடைய வேலை. விதையை நான் போடுவேன். பழம் பறிக்க நான் இருப்பேனா எனச் சொல்ல முடியாது.

கே. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. இந்த சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் அவர்களுடைய பங்களிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

ப. சித்தாந்தப்படி அவர்கள் பங்களிக்க வந்தது நியாயமானதுதான். அவர்கள் வரும்போது, காலத்தின் கட்டாயமாக இருந்தது. இப்போது அவர்கள் நீங்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். காரணம், அவர்களுடைய ஊழல். அவர்களுடைய சித்தாந்தங்களும் நலத்திட்டங்களும் அடிபட்டுப் போகிறது. 

கே. தமிழகத்தின் முக்கியமான தலைவர்களான பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோரின் கருத்துகளோடு எந்த அளவுக்கு நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள்...

ப. நான் முன்பே சொன்னபடி, காலத்தின் கட்டாயம்தான் தி.மு.க. நீதிக் கட்சியிலிருந்து இதைச் சொல்ல வேண்டும். ஆதி திராவிடர்கள் என்ற சொற்றொடரை உருவாக்கி, இது நம் அரசியல் திட்டத்தில் இடம்பெற வேண்டுமென முடிவு செய்தார்கள். இதைச் சுதந்திரத்திற்கு முன்பே செய்தார்கள். நீதிக் கட்சியில் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இம்மாதிரி தென்னகம் முழுக்க வரவேண்டுமென நினைக்கிறேன். என்னுடைய திராவிடம் அதுதான். என்னைப் பொறுத்தவரை திராவிடம், நாடு தழுவியது. அதை மூன்று குடும்பங்களுக்குள் அடக்க இயலாது. 

கே. இந்த சித்தாந்தத்தை நாடு தழுவிய அளவில் கொண்டுசொல்ல முடியுமென நினைக்கிறீர்களா?

ப. கண்டிப்பாக. திராவிடம் என்பது வெறும் சித்தாந்தம் மட்டுமல்ல. நம்முடைய உருவ அமைப்பு, வாழும் பகுதி எல்லாவற்றையும் குறிப்பிடும் சொல் அது. நீங்களும் நானும் வெவ்வேறுவிதமான திராவிடர்கள். ஆனால், உதட்டின் அமைப்பைவைத்து திராவிடர் எனக் கண்டுபிடித்துவிடுவார்கள். வெள்ளைக்காரர்களுக்கு இன்னும் சிறப்பாக இது புரியுமென நினைக்கிறேன். வட இந்தியனுக்கு இன்னும் தெளிவாகத் தெரியும். நான் சிவப்பு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் இருவருமே கறுப்பர்கள்தான். நமக்குத்தான் அது புரியில்லை.

ஆகவே, திராவிடம் என்பது நாடு தழுவியது. மொஹஞ்சதரோ, ஹரப்பாவிலிருந்து இது வருகிறது. அவர்கள் அகண்ட பாரதம் பேசும்போது, நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?

 
காணொளிக் குறிப்பு, அகண்ட பாரதம் பற்றி கமல்ஹாசன் விரிவாக பிபிசி தமிழிடம் பேசியுள்ளார்


 

https://www.bbc.com/tamil/india-56624380

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.