Jump to content

கூகுள்' சுந்தர் பிச்சை: "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
  • அமோல் ராஜன்
  • ஊடக ஆசிரியர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரி - கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்கள்

உலக அளவில் தடையற்ற மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் சேவை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

பல நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

பிபிசியுடனான ஓரு விரிவான நேர்காணலில் தன்னைச் சுற்றியுள்ள வரி சர்ச்சை, தனியுரிமை மற்றும் தரவுகள் குறித்தும் அவர் பேசினார்.

நெருப்பு, மின்சாரம் அல்லது இன்டர்நெட்டை விட செயற்கை நுண்ணறிவு மிகவும் ஆழமானது என்றும் அவர் வாதிட்டார்.

சுந்தர் பிச்சை, உலக வரலாற்றிலேயே மிகவும் நுட்பமான மற்றும் செல்வ வளம் கொழித்த நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை செயல் அதிகாரி.

அடுத்த புரட்சி

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நான் அவருடன் பேசினேன். பிபிசிக்காக உலகப் பிரபலங்கள் என்ற தலைப்பிலான எனது தொடரின் அங்கமாக அவரை சந்தித்தேன்.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் ஆகியவற்றுடன், வேஸ் ஃபிட்பிட், டீப்மைண்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு முன்னோடி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தில் மட்டும் இவர் ஜிமெயில், கூகுள் க்ரோம், கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த், கூகுள் டாக்ஸ், கூகுள் ஃபோட்டோஸ், ஆண்ட்ராய்டு உள்பட பலதரப்பட்ட தயாரிப்புகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஆனால், இவை எல்லாவற்றை விட மிகவும் பிரபலமானது கூகுள் சர்ச் என்ற தேடுதல் பொறி. கூகுளின் அர்த்தமாகவே அந்த தேடுபொறி ஆகியிருக்கிறது.

நாம் இன்று கையாளும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் பயன்பாட்டை கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் வேறு எந்த நிறுவனத்தையும் விட கூகுள் நிறுவனமே அதிகமாக மேம்படுத்தியிருக்கிறது என்று கூற வேண்டும்.

சுந்தர் பிச்சையைப் பொருத்தவரை, நமது உலகில் மேலும் புரட்சிகரமான இரண்டு பிற முன்னேற்றங்கள் அடுத்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் நடக்கக்கூடும். ஒன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு. மற்றொன்று குவான்ட்டம் கம்ப்யூட்டிங்.

படர்ந்து விரிந்த சிலிக்கான் வேலியில் உள்ள கூகுள் தலைமையகத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை விவரித்தார் சுந்தர் பிச்சை.

"மனித குலம் எப்போதும் வளர்ச்சியடைந்து செயல்படும்போது, அதனுடன் கலந்த மிக ஆழமான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.

"நெருப்பு அல்லது மின்சாரம் அல்லது இன்டர்நெட் எப்படி உள்ளதோ, அதை விட மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது செயற்கை நுண்ணறிவு."

செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் மனித அறிவாற்றலை ஒத்துப் புனையும் ஒரு முயற்சியே. பல வகை செயற்கை நுண்ணறிவு தளங்கள் ஏற்கெனவே மனிதர்களை விட அதிநுட்பமாக பிரச்னைகளை தீர்க்கக் கூடியவையாக உள்ளன.

குவான்ட்டம் கம்ப்யூட்டிங் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. சாதாரண கம்ப்யூட்டிங் என்பது பைனரி அடிப்படையிலானது: 0 அல்லது 1. அதற்கு இடையே எதுவும் இல்லை. இந்த நிலைகளை 'பிட்கள்' என்று அழைக்கிறோம்.

ஆனால் குவான்டம், அல்லது துணை அணு மட்டத்தில், ஒரு பொருளின் தன்மை மாறுபட்டதாக இருக்கும். அது ஒரே நேரத்தில் 0 அல்லது 1 ஆக இருக்கலாம் - அல்லது இரண்டிற்கும் இடையிலான ஸ்பெக்ட்ரமாக இருக்கலாம். குவான்டம் கணினிகள் குவிட்ஸால் கட்டமைக்கப்பட்டவை. அதனால்தான் அதன் தன்மை மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இது சிந்தனையைத் தூண்டும் விஷயம் ஆனால், உலகை மாற்றக்கூடிய திறன் படைத்தது.

சுந்தர் பிச்சையும் பிற முன்னோடி தொழில்நுட்பவியலாளர்களும் இதை தீவிரமாக்கும் சாத்தியங்களையே ஆராய்ந்து வருகிறார்கள். எல்லா நேரத்திலும் குவான்டம் உதவப்போவது கிடையாது. இன்று நாம் கடைப்பிடிக்கும் கம்ப்யூட்டிங் முறை எப்போதும் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த புது வகை தீர்வு என வரும்போது அதற்கான கதவுகளை திறக்கக்கூடிய சாவி குவான்டம் கம்ப்யூட்டிங்கிடமே உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பல நிலைகளில் பணியாற்றி, மிகவும் திறமையான, பிரபலமான மதிப்புமிக்க ஆற்றலை வெளிப்படுத்தும் மேலாளராக உயர்ந்தார் சுந்தர் பிச்சை.

குரோம், கூகுள் ப்ரெளசர், ஆன்ட்ராய்டு அல்லது செல்பேசி செயலி போன்ற எதுவும் சுந்தர் பிச்சையின் சிந்தனை கிடையாது. ஆனால், அந்த தயாரிப்புகளை வழிநடத்தியவர் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனர்களின் கண்காணிப்பின்கீழ் உலகை கட்டிப்போடும் செல்வாக்கு மிக்க தயாரிப்புகளாக அவற்றை உயர்த்தியவர் சுந்தர் பிச்சை.

ஒரு விதத்தில், அவர் இப்போது AI மற்றும் குவான்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றின் எல்லையற்ற பெரிய சவால்களை நிர்வகிக்கிறார். அதில் குறிப்பிட்டு மூன்று பிரச்னைகளை சொல்வதென்றால் ஒன்று வரி, தனியுரிமை மற்றும் ஏகபோக அந்தஸ்து குற்றச்சாட்டு

வரி ஏய்ப்பு சர்ச்சை

வரி தொடர்பான விஷயங்களில் கூகுள் தமது செயல்பாட்டை நியாயப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக, கூகுள் நிறுவனம் தமது வரி செலுத்தும் கடமைகளை சட்டபூர்வமாக குறைப்பதற்காக கணக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பெரும் தொகையை செலுத்தியுள்ளது.

உதாரணமாக, 2017ஆம் ஆண்டில், கூகுள் "டபுள் ஐரிஷ், டச்சு சாண்ட்விச்" என்று அழைக்கப்படும் உத்தியின் ஒரு பகுதியாக, டச்சு நிறுவனம் ஒன்றின் மூலம் பெர்முடாவுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அனுப்பியது.

இந்த கேள்வியை சுந்தர் பிச்சையிடம் முன்வைத்தேன். அவரோ, "அந்த திட்டம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை. இன்று உலகிலேயே மிகப்பெரிய அளவில் வரி செலுத்தும் நிறுவனமாக கூகுள் உள்ளது. அது செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் சட்டங்களை மதித்துச் செயல்படுகிறது" என்று பதிலளித்தார்.

கூகுள் அந்த திட்டத்தை பயன்படுத்துவதில்லை. உலகின் மிகப்பெரிய வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று கூகுள் என்றும் அது செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் வரிச் சட்டங்களுக்கு இணங்கி நடக்கிறது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அவரது பதிலே, பிரச்னையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று நான் குறிப்பிட்டேன். உண்மை என்னவெனில், இது சட்டபூர்வ பிரச்னை மட்டுமின்றி தார்மீக ரீதியிலான ஒன்று என்றேன். வறிய நிலையில் இருப்பவர்கள் எவரும் வரித்தொகையை குறைவாக செலுத்தவும் தங்களுடைய கணக்கு வழக்குகளை கையாளவும் கணக்காளர்களை வைத்திருக்க மாட்டார்கள். மிகப்பெரிய அளவில் வரி செலுத்தாமல் தவிர்ப்பது உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே. இதை சுந்தர் பிச்சையிடம் குறிப்பிட்டு, இப்படி செயல்படுவது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிறர் நியாயமாக செலுத்த ஈடுபாடு காட்டும் கூட்டு தியாகத்தை பலவீனப்படுத்தும் தானே என்றேன்.

வரி செலுத்தாமல் தவிர்த்த கூகுள் நிறுவனத்தின் செயல்பாடு பற்றி அவரது பதில்களுக்கு இடைமறித்து நான் உடனுக்குடன் கேள்வி எழுப்பியபோது அவற்றுக்கு பதில் தர அவர் விரும்பவில்லை.

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,GOOGLE

 
படக்குறிப்பு,

சான்டா பார்பரா கூடத்தில் குவான்டம் கம்ப்யூட்டிங் செயல்முறையை சுந்தர் பிச்சையிடம் விளக்கும் மூத்த ஆராய்ச்சியாளர் டேனியல் சாங்க்.

அதே சமயம், உலகளாவிய கார்பரேட்டுகளின் குறைவான வரி என்ற கருத்தாக்கம் பற்றிய விவாதத்தை தாம் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் வரிகளை எளிமைப்படுத்தி மேலும் அதைச் செலுத்தும் முறையை வலுப்படுத்த ஆட்சியில் உள்ள கொள்கை வகுப்பாளர்களிடம் கூகுள் பேசி வருவது தெளிவாகத்தெரிகிறது.

தங்களுடைய ஆராய்ச்சி மற்றும் வருவாயில் பெரும் பகுதியை தாம் அதிகமாக வரி செலுத்தும் அமெரிக்காவிலேயே கூகுள் முதலீடு செய்வதும் உண்மை என்பது நமக்குப் புரிந்தது.

எனினும், கடந்த பத்து ஆண்டுகளில் வேறு எந்த நிறுவனத்தையும் விட 20 சதவீதம் வரியை கூடுதலாகவே செலுத்தியிருப்பதாக கூகுள் கூறியிருக்கிறது. உலகம் முழுவதும் பெருந்தொற்றை சமாளிக்க, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வாங்கப்படும் கடன்கள், அவை செலவிடப்படும் முறை போன்றவை சாதாரண மக்கள் செலுத்திய வரிப்பணத்தின் அங்கமே. அத்தகைய வரிப்பணத்தை பிரபல நிறுவனங்கள் செலுத்தாமல் தவிர்ப்பதும் ஒருவித சுமையாகவே தோன்றுகிறது.

கூகுள் சந்திக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்னை, அதைச் சுற்றி உலாவரும் தரவுகள் கண்காணிப்பு, தனியுரிமை போன்றவைதான். உலகில் வேறு தேடுபொறிகளை விட கூகுள் தேடுபொறியே ஆதிக்கம் நிறைந்து ஏகபோகம் செலுத்தி வருகிறது.

இருந்தபோதும், "கூகுள் ஒரு இலவச தயாரிப்பு. அதை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்," என்கிறார் சுந்தர் பிச்சை.

பேஸ்புக் பயன்படுத்திய அதே வாதமும் இதுதான், கடந்த மாதம் வாஷிங்டன் டி.சி.யின் நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க்கிடமிருந்து மார்க் ஜக்கர்பெர்க்கின் நிறுவனம் ஒரு வலுவான ஒப்புதலைப் பெற்றது. அந்த சமூக ஊடக நிறுவனம் மீதான நம்பிக்கை விரோத வழக்குகளை நிராகரித்த நீதிபதி, ஏகபோகம் என்ற விளக்கத்துக்கான வரம்புக்குள் ஃபேஸ்புக் வரவில்லை என்று தீர்ப்பளித்தார்.

தொழிற்துறை மரியாதைசுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,GOOGLE

 
படக்குறிப்பு,

1998ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய லார்ரி பேஜ், செர்கே ப்ரின். இவர்களுடன் ஆறு ஆண்டுகள் கழித்து சேர்ந்தார் சுந்தர் பிச்சை.

நேர்காணலுக்கான தயாரிப்பு நடவடிக்கையின்போது, கூகுள் நிறுவனத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள மற்ற மூத்த நிர்வாகிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடினேன். ஒவ்வொரு முகாமுக்குள்ளும் வலுவான கருத்தும் ஒருமித்த கருத்தும் இருப்பதை அறிந்தேன்.

தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், சுந்தர் பிச்சையின் கீழ் உள்ள கூகுள் நிறுவனத்தில் அதன் பங்கு விலையின் வளர்ச்சி பற்றி நீங்கள் வாதிட முடியாது என்று கூறினர். காரணம், அது அவரது தலைமையின்கீழ் மும்மடங்கானது. அது ஒரு தனித்துவமான செயல்திறன். நுகர்வோர் நடத்தையில் சாதகமாக நிலவும் சூழலே இதற்கு காரணம் என விளக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எங்கெல்லாம் சிக்கினவோ, அங்கெல்லாம் தமது செயல்திறனை நிரூபித்தார் சுந்தர் பிச்சை. அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பு அவர் பல முறை ஆஜராகி சாட்சியம் அளித்தபோதும் கூட, அது கூகுள் நிறுவன பங்குகளில் சரிவை ஏற்படுத்தவில்லை. மேலும், கடினமான சூழ்நிலைகளில் கூட தமது நேர்த்தியான செயல்பாட்டால் எல்லாவற்றையும் எதிர்கொண்டார் அவர்.

தலைமை நெறிகள் அதிகாரி

சுந்தர் பிச்சையுடன் பணிபுரிந்தவர்களிடமிருந்தோ அல்லது அவருக்காகவோ பணியாற்றியவர்களிடம் இருந்தோ பொதுவான ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டேன்.

உலக அளவில் விதிவிலக்கான, சிந்தனைமிக்க, அக்கறையுள்ள தலைவராக சுந்தர் பிச்சை கருதப்படுகிறார். ஊழியர்கள் மீது கனிவு மிக்கவராக அவர் அழைக்கப்படுகிறார். அவரை அறிந்த பலரிடம் நான் பேசிபோது, நெறிசார்ந்த பணியை செய்பவருக்கு உதாரணமாக அவர் விளங்கினார் என்று அவர்கள் தெரிவித்தனர். வாழ்கால தரத்தை முன்னேற்றும்போது தொழில்நுட்ப தாக்கத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய நபராக அவர் விளங்கியதாக அவர்கள் தெரிவித்தார்.

அதற்கு உதவியது அவரது ஆணிவேராக அமைந்த பூர்விகம் என அறிந்தேன். அது பற்றி விரிவாக நான் அவரிடம் பேசினேன்.

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,SUNDAR PICHAI

 
படக்குறிப்பு,

அமெரிக்காவில் தரையிறங்கி பிறகு தமது தோழி அஞ்சலியுடன் கைகோர்த்த சுந்தர் பிச்சை பிறகு அவரை மணம் முடித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சுந்தர் பிச்சை. பல தொழில்நுட்பங்களின் மாற்றம் அவரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கை விரலில் எண்களை சுழன்று பயன்படுத்தும் தொலைபேசிக்காக வரிசையில் காத்திருந்தது முதல், மாதாந்திர இரவு விருந்துக்காக ஒரே ஸ்கூட்டரில் குடும்பமாக பயணம் செய்தது வரை என பலதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

கூகுள் நிறுவனத்தில் அவர் பொறியாளர்களையும் மென்பொருள் உருவாக்குநர்களின் மனங்களையும் வென்றார். அடிப்படையில் அவர் ஒரு உலோகவியல் பொறியியலாளர். மூளையில் சிறந்தவர்கள் பணியாற்றிய கூகுளில் அங்குள்ளவர்களை வெல்வது சாதாரண விஷயமல்ல. பூமியின் மிகப்பெரிய தலை கணம் படைத்தவர்களின் முகமையாக அந்தஇடம் இருந்தபோதும், அந்த மூளைகள், சுந்தர் பிச்சைக்கு வெகுவாகவே மரியாதை கொடுத்தன.

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,SUNDAR PICHAI

 
படக்குறிப்பு,

1994ஆம் ஆண்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் சுந்தர் பிச்சை

காரணம், உலகில் வேறெந்த பெரிய நிறுவனங்களின் செயல் அதிகாரிகளாலும் தங்களால் தான் அந்த நிறுவனத்தின் பங்குகள் ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தன என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.

ஆனால், கூகுளின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அதன் வளர்ச்சியை உன்னிப்பாக கவனிப்பவர்கள் இதை வேறு விதமாக பார்க்கிறார்கள்.

முதலாவதாக, கூகுள் - தற்போது பார்க்கப்படுவது போல மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் நிறுவனமாக முன்பு இருக்கவில்லை. கூகுள் இதை ஏற்க மறுக்கலாம். ஆனால், அப்படி கவனமாக இருப்பது நல்லதுதான் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டாவதாக, அசல் சிந்தனைகளைக் கடந்து 'நானும் தான்' என்ற உணர்வுடன் கூகுளின் சில வகை தயாரிப்புகள் உள்ளன. பிற பெரிய கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் கூகுள், பிறகு தமது பொறியாளர்களின் துணையுடன் அதே போன்ற மேம்பட்ட தயாரிப்பை உருவாக்குகிறது.

மூன்றாவதாக, வெற்றிகள் பல குவித்த சுந்தர் பிச்சைக்கும் கூகுள் கிளாஸ், கூகுள் பிளஸ், கூகுள் வேவ், பிராஜெக்ட் லூன் போன்ற பல தோல்விகள் இருந்துள்ளன. பரிசோதனையிலும் தோல்வியிலும் ஒன்றை கற்றுக் கொள்வதாக கூகுள் கூறுகிறது.

கூகுளின் மிகப்பெரிய மனித குல பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி பலவீனமடைந்து வருகிறது. உலகின் தலைசிறந்த கணிப்பொறி முனைவர்களைக் கொண்ட நிறுவனத்தால் உலகளாவிய பருவநிலை மாற்ற விளைவை மாற்றியமைக்க முடியுமா, புற்றுநோய்க்கு தீர்வு காண முடியுமா போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடைசியாக, மிகப்பெரிய ஆள் பலத்தை கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு அனுதாபமும் கிடைக்கிறது. காரணம், கலாசார ரீதியிலான யுகத்தில் சிக்கியிருக்கும் கூகுளில் இப்போதும் பரவலாக அதன் ஊழியர்கள், சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, தங்களின் அடையாளத்தை சுற்றிய சர்ச்சைகள் என பல காரணங்களை கூறி வெளியேறுகிறார்கள்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் கூகுளில், பெரும்பாலானவர்கள் தங்களுடைய கருத்துகளை மெசேஜ் போர்டுகள் எனப்படும் பலகையில் வெளிப்படுத்துகிறார்கள். உலக அளவில் பன்முகப்பட்ட நபர்களை தங்களுடைய அணியில் சேர்த்திருப்பதன் பெரும் பிரச்னையை உண்மையாகவே கூகுள் எதிர்கொண்டு வருகிறது. அதே சமயம், ஒரு நிறுவனமாக குறிப்பிட்ட பிரச்னைகளுக்காக கைகோர்க்கவும் சுந்தர் பிச்சையின் ஆளுமை தவறுவதில்லை.

வேகம்

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,SUNDAR PICHAI

 
படக்குறிப்பு,

சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமது சகோதரருடன் சுந்தர் பிச்சை (வலது)

மேற்கூறிய அனைத்தும் கூகுள் நிறுவனம் வேகமாக முன்னேற வேண்டும் என்ற நபர்களின் கவலைகள். பன்முகப்பட்ட ஜனநாயக நாடுகளில் பலரும் இதுபோன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனம் வளரக்கூடாது என்றே நினைப்பார்கள்.

சிலிக்கான் வேலியில் நான் செலவிட்ட நேரத்தில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதை பார்க்கவே என்னால் முடியவில்லை.

சீனாவின் இன்டர்நெட் மாடல் பற்றியும் அது ஏகாதிபத்தியம் மற்றும் மிகப்பெரிய கண்காணிப்புக்கு அடையாமாகிறதா என்று அவரிடம் கேட்டபோது, சுந்தர் பிச்சை கொடுத்த பதில் இதுதான்:

"சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது."

முக்கியமாக சீனாவை அவர் நேரடியாக குறிப்பிடாமல் பதில் அளித்தார். அதே சமயம், "எங்களுடைய எந்தவொரு தயாரிப்பும் சீனாவில் கிடைக்காது," என்று அவர் கூறினார்.

உலக அளவில் சட்டமியற்றும் உறுப்பினர்களும் ஒழுங்குமுறை அமைப்புகளும் வேகம் குறைந்த, வலுவற்ற மற்றும் மெதுவாக செயல்பட அவற்றின் இடத்தை பெருந்தொற்று பிடித்துக் கொண்ட நிலையில், ஜனநாயக மேற்கு நாடுகள், நம்மைப் போன்றோர் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முடிவை சுந்தர் பிச்சை போன்றோர் எடுக்க விட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

ஆனால், சுந்தர் பிச்சையைப் பொருத்தவரை, தனக்கு அந்த பொறுப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?'கூகுள்' சுந்தர் பிச்சை: "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - BBC News தமிழ்

'கூகுள்' சுந்தர் பிச்சை: "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.