Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

September 16, 2021
0
 
மிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்சிகளைப்போல இல்லாமல், தி.மு.க-வானது கொள்கை வழிப்பட்ட அரசியலை முன்வைப்பதாகவும், திராவிடம் − சமூக நீதிதான் தி.மு.க-வின் கொள்கை என்பதாகவும் பேசப்படுகிறது. தனியார்மயம் − தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்தையும் வாரிக் கொடுக்கும் மோடியின் ‘‘குஜராத் மாடலுக்கு’’ எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் − என அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாக ‘‘திராவிட மாடல்’’ இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
‘‘தமிழகத்தில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் தி.மு.க−வின் ‘திராவிட மாடல்’… ‘‘தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு − ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
படிக்க :
 தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
 நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலைக் குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் (சாதாரணப் பேருந்துகளில்) இலவச பயணம், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவக் காப்பீட்டு அட்டை மூலம் இலவசமாக கொரோனா சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் − என ஐந்து திட்டங்களை முதல் கோப்பிலேயே கையெழுத்திட்டுச் செயல்படுத்தியுள்ளது, தி.மு.க. அரசு.
இத்துடன் மு.க.ஸ்டாலினைத் தலைவராகக் கொண்டு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு ஒன்றையும் தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது. இதன் துணைத் தலைவராக, பா.ஜ.க விமர்சகராகவும் பொதுவில் திராவிட இயக்க ஆதரவாளரகவும் அறியப்பட்ட பேராசிரியர் ஜெரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
puja-sep-2.jpg மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், முனைவர் நர்த்தகி நடராஜ் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
முக்கியமாக இந்தக் குழுவில், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், பேராசிரியர்கள் ராம.சீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.தீனபந்து, எம்.எல்.ஏ.வாகிய டி.ஆர்.பி. ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன் போன்ற சமூக அக்கறை கொண்ட அறிவாளிப் பிரிவினர் இடம் பெற்றிருப்பதால், தி.மு.க அரசு முற்போக்கு பாதையில் நடைபோடுவதாக நகர்ப்புற படிப்பாளிகள் பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் பொருளாதார நிபுணர்களான ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாரயணன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியான ஜீன் ட்ரெஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தி.மு.க அரசின் இந்த நடவடிக்கையை, ‘‘தி எக்கானமிஸ்ட்’’ என்ற பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையானது, ‘‘உலகப் புகழ் பெற்ற ஐந்து சூப்பர் ஸ்டார் பொருளாதார அறிஞர்களைத் தமது ஆலோசகர்களாக நியமித்ததன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்’’ என்றும், ‘‘திராவிடன் ஸ்டாலின்’’ என்றும் பாராட்டியுள்ளது.
முக்கியமாக, மோடி அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பழிவாங்கப்பட்ட ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், கார்ப்பரேட்டுகள் நலனைவிட மக்கள் நலனை முன்னிறுத்தும் பொருளாதார அறிஞர்கள் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக தி.மு.க அரசு முன்வைத்த இடைக்கால நிதிநிலை அறிக்கையை (ஆறு மாதங்களுக்கானவை) ‘‘திராவிட மாடல் வளர்ச்சி’’, ‘‘பொற்கால ஆட்சி’’ என்று திராவிட இயக்கப் பத்திரிகைகள் புகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறெல்லாம் போற்றிப் புகழப்படும் தி.மு.க அரசின் கொள்கைகளும் திட்டங்களும் உண்மையில் பொற்கால ஆட்சிக்குள் நம்மை கொண்டு செல்லுமா என்பதே நாம் கவனிக்க வேண்டிய விசயம்.
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசகர்களான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், உண்மையில் புதிய தாராளவாதத்தின் தேர்ந்த அறிஞர்களாவர். இவர்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்கள். ஏகாதிபத்தியச் சேவையில் சிறந்து விளங்கியதால்தான் இவர்கள் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களால் மெச்சிப் புகழப்படுகிறார்கள்.
puja-sep-1.jpg முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நோபல் பரிவு பெற்ற அமெரிக்கப்பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன், ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியாரான ஜீன் ட்ரெஸ்.
2014−ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்பட்டு நிதியமைச்சராக்கப்பட்ட அதேபாணியில்தான், இன்று பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனும் தேர்தல் நேரத்தில் முன்னிறுத்தப்பட்டு திடீரென நிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர், லேமன் பிரதர்ஸ், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் − சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார் என்று கூறி ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆம்! இந்த நிறுவனங்கள் அனைத்தும் உலக அளவில் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்து நற்சான்றிதழ் வாங்கிய இவர்தான், மக்களுக்கு சேவை செய்வதற்கு திட்டமிட்டுக் கொடுப்பார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
இன்று தி.மு.க-வில் முன்னணியில் இருக்கும் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்ற பல தலைவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களான கார்ப்பரேட் முதலாளிகளாக இருக்கின்றனர். இவர்களது வாரிசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கல்வியைப் பயின்று வளர்ந்தவர்கள். இந்த இரண்டாம் தலைமுறையினர் இன்று தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால்தான் தி.மு.க-வின் அணுகுமுறை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்தியைப் போலவே அமைந்துள்ளதை யாவரும் உணர முடியும்.
தி.மு.க அரசின் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சியானது, நிர்வாகத்தில் செய்துள்ள ஒரு விசயத்தை மட்டும் இங்கே கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகள், துறைத் தலைவர்கள் மாற்றப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இறையன்பு, உதயசந்திரன் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்ததை மட்டும்தான் பலரும் கவனித்துள்ளனர். அதேவேளையில், கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்று உயர் பதவிகளுக்கு வரும் முறையை தி.மு.க அரசு முற்றிலுமாகக் கைவிட்டு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் நியமித்துள்ளது.
தி.மு.க அரசின் இந்த அணுகுமுறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு செல்வதன் அவசியத்தை அவை வலியுறுத்தியுள்ளன. தி.மு.க அரசின் இந்த அணுகுமுறையால் அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறை மேலும் அதிகரிக்கும் என்றும், மக்கள் பிரச்சினைகள், நடைமுறை அறிவு போன்றவை புறக்கணிக்கப்படுவதால் குழப்பங்கள் விளையும் என்றும் தெரிவித்துள்ளன.
000
பா.ஜ.க தலைமையிலான பாசிச மோடி அரசின் பகிரங்கமான கார்ப்பரேட் சேவைகளுக்கும், ‘‘மனித முகம் கொண்ட புதிய தாராளவாதம்’’ என்று பேசும் காங்கிரசு, அனைவரையும் உள்ளடக்கிய ‘‘திராவிட மாடல்’’ வளர்ச்சி என்று பேசும் தி.மு.க போன்ற கட்சிகளுக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒன்று மட்டும்தான். மக்கள் நலத் திட்டங்கள் என்பதை முற்றாகவே உதறிவிட்டு அப்பட்டமான கார்ப்பரேட் கொள்ளையை அமல்படுத்துவதுதான் puja-sep-5-400x223.jpgமோடி அரசின் கொள்கை என்றால், சோளப்பொரிகளைப் போல பெயரளவிலான சில மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்டு, அதன்மூலம் தோற்றுவிக்கப்படும் கவர்ச்சிக்குப்பின் முடிந்த அளவு கார்ப்பரேட் கொள்ளையை மக்களின் எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்த முயலுவதுதான் காங்கிரசு − தி.மு.க உள்ளிட்ட எதிர்த்தரப்பு அரசுகளின் கொள்கையாகும்.
1990−களில் தனியார் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது முதல் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கொள்கை − கோட்பாடு என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டன. தங்களது பிழைப்புக்கு எந்த இடையூறும் வராமல் கமிஷனடிப்பதும் கல்லா கட்டுவதும்தான் எல்லா ஓட்டுக் கட்சிகளுடைய ஒரே கொள்கையாக மாறிப்போயுள்ளது.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றிக் கொடுப்பதையெல்லாம் அரசு தன் பணியாக மேற்கொள்ளக் கூடாது; அனைத்தையும் சந்தைக்கு திறந்துவிட்டுவிட்டு, பொதுத்துறைகளைத் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, வெறும் நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்; போலீசு − இராணுவம் − அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு சட்டம் − ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமே அரசினுடைய வேலையாக இருக்க வேண்டும் − என்று ஆணையிடுகின்றன, உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும். இதைத்தான் ‘‘குறைந்த அரசு – நிறைந்த நிர்வாகம்’’ என்று புதிய தாராளவாதிகள் சிலாகித்துப் பேசுகின்றனர்.
காங்கிரசோ, பா.ஜ.க.வோ – அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்தக் கட்சியாக இருந்தாலும் இந்த பாதையில்தான் அவர்கள் செல்கிறார்கள்; இந்தப் பாதையில் மட்டுமே அவர்களால் செல்ல முடியும் என்பதுதான் விதி. ஆகவே இதிலிருந்து தி.மு.க-வை விலக்கிவைத்துவிட்டுச் சிந்திப்பதே வேடிக்கையான ஒன்றாகும்.
ஆவின் பாலை விலைக் குறைப்பு, பெட்ரோல் − டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றலாம். ஆனால், கொள்கை − கோட்பாடு அற்றுப்போன ஓட்டுக் கட்சிகளுக்கு மக்களின் ஓட்டுக்களை கவர்ந்து ஆட்சியதிகாரத்தை பிடிக்க இதுபோன்ற கவர்ச்சி − இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியிருப்பது ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் ’புரட்சி’த் தலைவி அம்மா விலையில்லா ஆடு−மாடு வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி − கிரைண்டர் வழங்கும் திட்டம், விலையில்லாத நூறு யூனிட் மின்சாரத் திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படவில்லையா? ஏன், 2014−ல் ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு கூட கழிவறை கட்ட மானியம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 போன்ற திட்டங்களைக் கொண்டுவரவில்லையா? – இவையெல்லாம் எந்தளவுக்கு நடைமுறையில் மக்களுக்கு பலனளித்தன என்பது வேறு விவகாரம்.
இவைகளெல்லாம் ஓட்டு அறுவடைக்காக கொடுக்கப்படும் ‘‘கவர்ச்சிவாத’’ அறிவிப்புகளே. அனைவருக்கும் தரமான கல்வி, அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தரமான மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இக்கவர்ச்சித் திட்டங்கள் எந்த வகையிலும் ஈடேற்றவில்லை என்பதுதான் வரலாறு.
கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப் புகுத்திவிட்டு, தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ள இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவற்றையும் அமல்படுத்துகின்றன, இந்த ஓட்டுக் கட்சிகள். இவையெல்லாம், உழைக்கும் மக்களைக் கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் வஞ்சகத் திட்டங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்?
இவ்வாறு, தமிழகத்தில் சில கவர்ச்சிவாத சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதைக் காட்டியும், பா.ஜ.க-வும் காங்கிரசும் ஆட்சி செய்த பின்தங்கிய வட மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தும், இது திராவிட இயக்கங்களின் சாதனை என்று சிலர் மெச்சிப் புகழ்கின்றனர். குஜராத்தைப் பாருங்கள், உ.பி-யைப் பாருங்கள், தமிழகமும் கேரளமும் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும் என்று சிலர் கூறுகின்றனர்.
puja-sep-3-731x1024.jpg பிரபல முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களையும் நிபுணர்களையும் தனது ஆலோசகர்களாகக் கொண்டு கார்ப்பரேட் சேவை செய்ய கிளம்பி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் ‘தி எக்னாமிஸ்ட்’ பத்திரிகை.
இவ்வாறு ஒப்பீடு செய்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகை தாழ்வு மனப்பான்மையே. இவர்கள் யாரும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் இன்றைய வாழ்க்கைத் தரத்தை ஒப்பிட்டுப் பேசுவதற்குத் தயாராக இல்லை.
தனியார் பள்ளிகளில் நடக்கும் படுகொலைகளும், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் தலைமை மருத்துவமனை வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், டெங்கு நோய் மரணங்களைத் திட்டமிட்டு அரசே மறைத்ததும், தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் கொத்துக் கொத்தாக இறந்துபோனதும் போன்ற பல அவலங்கள், ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுகள் என்று கருத முடியுமா? வாழ வழியற்றுப்போய், பிழைப்புக்காக நாடோடியாக அலைந்து, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா அரிசி வழங்க வேண்டியிருப்பதும், அம்மா உணவகங்களும் தமிழக அவலநிலையின் சாட்சியங்கள். இவையெல்லாம் கழகங்களின் ‘பொற்கால’ ஆட்சிகளது விளைவுகள்.
‘‘நீங்கள் தி.மு.க-விடம் சோசலிசத்தை எதிர்ப்பார்க்காதீர்கள்’’ என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர். எனில், அனைத்து மக்களுக்குமான அரசு, பொற்கால ஆட்சி, திராவிட ஆட்சி என்று தி.மு.க-வும் அதனை ஆதரிப்பவர்களும் பேசுவது எதற்காக?
‘‘இன்று நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் மக்களின் முதல் எதிரி; இந்த எதிரியை வீழ்த்த சாத்தியமான அனைத்து சக்திகள், கட்சிகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்; தமிழகத்தில் தி.மு.க-தான் பெரிய கட்சி; இது ஓரளவிற்கு பா.ஜ.க-வை எதிர்க்கிறது; ஆகையால், தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்” − என்று பேசியவர்கள் பலரும், இன்று தி.மு.க-வின் யோக்கியதையைக் குறித்து பேச முன்வருவதில்லை.
எல்லா ஓட்டுக் கட்சிகளைப்போல தி.மு.க-வும் இலஞ்ச − ஊழல் முறைகேடுகளுக்கு உட்பட்டதுதான்; குடும்ப அரசியல், சாதி அரசியல், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, கவர்ச்சி அரசியல், பிழைப்புவாதம், கார்ப்பரேட் சேவை − என அனைத்தும் தி.மு.க-விடம் மலிந்து கிடக்கின்றன. டாஸ்மாக் விவகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்திலும் தி.மு.க சந்தர்ப்பவாதமாகவும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவும்தான் செயல்படுகிறது.
கார்ப்பரேட் பாணியிலான நேர்த்தியான சமூக உணர்திறன், புதிய முலாம் பூசப்படும் அதே பழைய கவர்ச்சிவாதம் (சமூக நீதி, நலத்திட்டங்கள்), ஊடக செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் முன்னால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது, பொதுச்சொத்தைக் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுப்பது, வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் சுரண்டலையும் கொள்ளையையும் நியாயப்படுத்துவது, தனது கட்சிக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் முறையான சலுகைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவற்கான ஏற்பாடு செய்வது என்பதுதான் தி.மு.க-வின் ‘பொற்கால’ ஆட்சி 2.0.
பாசிசத்தை எதிர்க்கும் விசயத்தில், தி.மு.க-வுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதும் கூட்டணி அமைப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியிலோ, கூட்டணியிலோ அங்கம் வகிக்கும் கட்சியை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை என்பதை தி.மு.க ஆட்சியை வலிந்து ஆதரிப்பவர்கள்தான் விளக்க வேண்டும்.
படிக்க :
 திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
 ‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான அனைத்து கட்சிகளுடன் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வதென்பது அவசியத் தேவையாகும். அதேவேளையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசமாகச் செல்லும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் ஜனநாயக பூர்வமான ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கான முன்தேவையாகும்.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதங்கள், ஊழல்கள், முறைகேடுகள், அராஜக செயல்பாடுகளைத் தனது அடித்தளமாக அமைத்துக் கொண்டுதான் பாசிசம் அரங்கேறுகிறது என்பது அரிச்சுவடியாகும். இந்த உண்மையை மறந்துவிட்டு, தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது தி.மு.க-விற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.
https://www.vinavu.com/2021/09/16/dravidian-model-corporate-service-compromise-saffron-fascism/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.