Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுதான் என் லட்சியம்: திருச்சியில் முதல்வர் உறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் என் லட்சியம்: திருச்சியில் முதல்வர் உறுதி!

spacer.png

தமிழகத்தில் எந்தவொரு தனிமனிதருக்கும், அரசிடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒருநிலையை உருவாக்குவோம். இதுதான் என் லட்சியம் என்று திருச்சியில் முதல்வர் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் என மொத்தம் ரூ.1,231 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் முதல்வரால் தொடங்கப்பட்டன. அதுபோன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,084 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார்.

திருச்சி தாயனூர் கேர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “அமைச்சர் கே.என்.நேருவுக்கு மாநாடு போன்ற கூட்டத்தை எழுப்புவது என்பது சர்வ சாதாரணம். டீக்கடையில் நின்று டீ குடிப்பது போன்று. அதனால்தான் நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு.

அமைச்சர் நேருவும், அன்பில் மகேஷும் இரட்டையர்களாகத் திருச்சி மாவட்டம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து மொத்தம் 78,582 மனுக்களை மக்களிடத்திலிருந்து பெற்றுள்ளார்கள். அதில் 45 ,088 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. மற்ற மனுக்களை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், பரிசீலனை செய்துகொண்டிருக்கும் மனுக்களில் தகுதியான மனுக்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அதுதான் என் லட்சியம்” என்றார்.

மேலும் அவர், “இன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கான பெருந்திட்டங்கள் சிலவற்றை மட்டும் உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன். திருச்சி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் 210 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஞ்சப்பூரில் 100 எம்.எல்.டி. நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

திருச்சி - திருவரங்கம் இடையிலான பாலம் பழமையானதாக இருக்கிறது. அதனால் புதிய பாலம் அமைப்பது குறித்தும் - திருச்சி நீதிமன்ற ரவுண்டானா - முதல் சுண்ணாம்புக்காரன் பட்டி வரையில் புதிய வெளிவட்டச் சாலை ஒன்றை அமைப்பது குறித்தும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அது கிடைத்த பிறகு அந்தப் பணியும் விரைவில் தொடங்கப்படும்.

துறையூர் நகராட்சி மக்களுக்காக புதிய குடிநீர் திட்டமானது 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மணப்பாறை கூட்டுக் குடிநீர்த்திட்டம் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் மேம்படுத்தப்படும்.

திருச்சியைப் பொறுத்தவரையில் 153.22 கோடி ரூபாய் மதிப்பிலான 203 திட்டப்பணிகள் முடிந்து அவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இன்றைய தினம் 604.10 கோடி ரூபாய் மதிப்பிலான 532 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இவை விரைவாக முடிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். இங்கு நடைபெறும் இந்த பணிகளை நான் நேரடியாக ஆய்வு செய்வேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு (நேற்று) காலை தஞ்சையிலே இதே போன்று ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தது. நான் அங்கே பேசும்பொழுதும் தெளிவாகச் சொன்னேன். ஏன் என்றால் இன்றைக்கு அதிகம் கூட்டம் கூடக் கூடாது. அப்படியே ஒருவேளை கூட்டம் கூட்டினாலும் மாஸ்க்குடன் நீங்கள் வர வேண்டும். கொரோனாவுக்கு என்னென்ன விதிமுறைகள் வகுத்துத் தந்து இருக்கின்றோமோ நீங்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவை முழு அளவில் கட்டுப்படுத்தாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.

இப்போது ஒமைக்ரான் என்கிற ஒரு புதிய தொற்று வந்திருக்கிறது. வெளிநாடு மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அப்படியே தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது

ஆகவே, இந்தச் சூழ்நிலையில் நான் போய் தஞ்சையிலே, திருச்சியிலே இந்த நிகழ்ச்சியை நடத்தினால் அந்த நோய் பரவக்கூடிய காரணமாக அமைந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதனால் நேருவையும், மகேஷ் பொய்யாமொழியையும் இரண்டு நாளைக்கு முன்பு சென்னைக்கு வரச்சொல்லி, கலந்துபேசி ஏறக்குறைய தஞ்சையைப் பொறுத்தவரைக் கிட்டத்தட்ட 20,000 - 25,000 பேர் பயனாளிகளை அழைத்து நடத்த வேண்டும்.

அதே போல திருச்சியைப் பொறுத்த வரை 45,344 பயனாளிகளை அழைத்து நடத்த வேண்டும். ஆகவே அதை யோசித்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்ற சொன்னபோது,

அவர்கள், நாங்கள் அத்தனை பேரையும் கூப்பிடவில்லை. அதில் 25 சதவிகிதம் அதாவது 5,000 பேர் அவர்களையும் மட்டும் அழைத்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இடைவெளி விட்டு இடைவெளி விட்டு அவர்களை உட்கார வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அது ஒன்றும் தவறில்லை என்றார்கள். அதன்பின் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மீதமுள்ள பயனாளிகளுக்கு அவரவர் வீடுகளுக்கே நலத்திட்ட உதவிகள் வந்தடையும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இதே திருச்சியில் ஒரு மாபெரும் மாநாடு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏழு உறுதிமொழிகளை நான் தந்தேன். அந்த உறுதிமொழிப்படிதான் இன்றைக்கு நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

'தி.மு.க தலைமையில் அடுத்து அமைகிற ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக இருக்கும். பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியின் ஆட்சியாக இருக்கும்.

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நவீன மேம்பாட்டு ஆட்சியாக இருக்கும்.

பெருந்தலைவர் காமராசரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக இருக்கும். தோழர் ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக அமையும்!' என்று நான் சொன்னேன். அத்தகைய ஆட்சியைத்தான் நாம் அமைத்திருக்கிறோம். அமைத்தது மட்டுமல்லாமல், அத்தகைய ஆட்சியைத்தான் இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆறு மாத காலத்தில் ஏராளமான புதிய தொழில்களை உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. அதனால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறப் போகிறார்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்கை எட்ட இருக்கிறது.

வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என்று நிதிநிலை அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னோம். அதை முதல் நிதிநிலை அறிக்கையிலேயே மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறோம்.

வேளாண்மைத் துறைக்கு என்று தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பைக் கொடுத்து மகசூலை அதிகரிக்க உதவிகள் செய்து வருகிறோம். கிராமப்புறத் திட்டங்கள் அனைத்தையும் புதுப்பித்து நிதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறோம். புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் முதல் அதிநவீன மருத்துவமனைகள் வரை எத்தனையோ திட்டமிடுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், பாலங்கள் அறிவிக்கப்பட்டுப் பணிகள் நடக்கத் தொடங்கி இருக்கிறது.

தொழில் வளர்ச்சிக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை சமூக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும், பெண்களுக்கான மேம்பாட்டுக்கும் தரத் தொடங்கி இருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் திருச்சியில் தேர்தலுக்கு முன்பு நான் வழங்கிய ஏழு உறுதிமொழிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு, நான் செயல்படுத்தத் தொடங்கி விட்டேன். இதை திருச்சி மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் நான் விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு மக்களே உங்கள் கோரிக்கைகளை எங்கள் தோளில் இறக்கி வையுங்கள். அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம். நாளை மறுநாள் 2022 புதிய ஆண்டு பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் நான் குறிப்பிட விரும்புவது 2021 முடிந்து 2022 அடுத்த ஆண்டு பிறப்பதாகக் கருத வேண்டாம். கடந்த காலச் சுமைகள் - சோகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒரு சிறப்பான ஆண்டு பிறக்கப் போகிறது. மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கக்கூடிய ஆண்டாக இருக்கட்டும்” என்றார்.

முன்னதாக நேற்று காலை தஞ்சையில் பேசிய அவர், “1973ஐ தொடர்ந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு 166135 ஏக்கர் பரப்பளவில் இங்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1,06,250 ஏக்கர் என்ற இலக்கை தாண்டி பயிரிடப்பட்டுள்ளது. இந்த சாதனையை அடைவதற்கு அரசின் பல்வேறு முயற்சிகள்தாம் காரணம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக 2021 -22ஆம் ஆண்டு சம்பா / தாளடி இலக்கு என்பது 3,12,599 ஏக்கருக்குப் பதிலாக 3,42,973 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்துக்கான அரசுப் பணிகளை, அரசுத் திட்டங்களை மக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளைக் கவனிக்கவும், துரிதப்படுத்துவதற்கும், என்னதான் ஆட்சித் தலைவர், அதிகாரிகள் அதில் கடுமையாக அந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், ஆனால் அரசோடு அந்தந்த நிமிடத்தில் தொடர்பு வைத்து பேச வேண்டும் என்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நாங்கள் நியமித்தோம்.

பொதுவாக, இன்னொரு மாவட்டத்துக்கு வந்து பணிகளைச் செய்வது என்பது சாதாரண காரியம் கிடையாது. எல்லோராலும் முடியாது. ஆனால், தான் எந்த நிலத்திலும் வளரும் மரம் என்பதை நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
 

https://minnambalam.com/politics/2021/12/31/8/cm-stalin-speech-in-thanjai-and-trichy

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.