Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்”

பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்
யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் 
சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் - கொழும்பு
 

பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்‌ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான போராட்டங்கள், உலகம் பூராவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. போராட்டங்களும் அழுத்தங்களும் அவமதிப்புகளும் கூட, ஜனாதிபதி கோட்டாபயவை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர், தனது பதவியைக் கட்டிப்பிடித்தபடியே, ‘உணர்வுகள் அற்ற ஜடம்போல்’ இப்பொழுதும் இருக்கின்றார்.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற கொள்கைகளைக் கடைப்பிக்கும் நாடுகளில், பெரும் உயிரழிவுகளை ஏற்படுத்தும்  பேரழிவுககள், விபரீதங்கள், விபத்துகள் ஏற்பட்டுவிட்டால், அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரோ, நாட்டின் தலைவரோ அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, உடனடியாகப் பதவியில் இருந்து இறங்கிவிடுவார். இத்தகைய உயர் தலைமைத்துவப் பண்பு, அந்நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த அரசியல் நாகரிகத்தின் வழிவந்த ஜனநாயகப் பண்பாகும். பதவி என்பதற்கு அப்பால், பொறுப்புக்கூறல் என்பது நன்மதிப்பும் பெறுமதியும் மிக்கதாக மதிக்கப்படுகின்றது. ஆனால், இலங்கையில் இத்தகைய அரசியல் நாகரிகம் பின்பற்றப்படுவது கிடையாது; அல்லது தெரியாது.

image_99f1d02069.jpg

நாட்டைச் சூறையாடுவதற்காகவே தலைவர்களான இத்தகையவர்களின் நடத்தைககளால்த்தான், பிச்சைக்காரர்களிடம் கையேந்தும் இழிநிலையில் இந்தநாடு வந்துநிற்கின்றது. தலைவர்களின் ‘ரவுடி’த் தனமான போக்குகளை, இன்னும் விளங்கிக் கொள்ளாமல் அல்லது, அவர்கள் சொல்வதை ‘தேவவாக்காக’ நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவித்தனமான மக்கள் கூட்டம், இன்னும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றது என்பது, எமது நாட்டின் சாபக்கேடாகவேதான் இருக்கமுடியும்.

தலைமைத்துவம் ஒன்றின் அடிநாதமாக, ‘பொறுப்புக்கூறல்’ பண்பு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால்த்தான், அது சரியானதும் முன்னேற்றகரமானதுமான பாதையில் வழிநடத்தும் தலைமைத்துவமாக இருக்கமுடியும்.

தலைமை தவறான வழியில் பயணிக்குமாயின் ‘மக்கள்’, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி, தடுத்து நிறுத்தி, சரியான பாதையில் பயணிக்கவைக்கும் ஆயுதமாகவே, அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
‘கோட்டாவே வீட்டுக்குப் போ’ போராட்டத்தின் வீரியம்மிக்க ‘வீச்சு’, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை கழற்றிக் கொண்டுசென்றுவிட்டது. வெற்றிக்கான  இலக்குகளை நோக்கிய நகர்வுகளை, வீரியம் மிக்க போராட்டங்கள் உருவாக்குகின்றன. வீரியம் மிக்க போராட்டங்களை, தர்மத்தின் திசைவழி நிற்கும் நோக்கங்கள் உருவாக்குகின்றன. நிற்க!

image_7fcd112f04.jpg

‘நாட்டைப் பாதுகாப்போம்’ என்பதைப் போலவே, ‘வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்’ என்ற நோக்கம் கொண்ட போராட்டம் ஒன்று, சனிக்கிழமை (03) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றிருந்தது. ‘யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்’ என்ற தொனிபொருளில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வட்டுக்கோட்டை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், ‘Do not Distroy Jaffna College’, ‘Bishop Thiagarajah Go home’, ‘ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்காதே’, ‘Renovate the Building’, ‘பாடசாலை நிதி உங்கள் உல்லாச வாழ்க்கைக்கா?’, ‘கல்லூரிச் சொத்து உறுதிகள் எங்கே?’, ‘வெளிப்படைத் தன்மை வேண்டும்’, ‘Uphold the Constitution of the JC Board’, ‘Bishop, Sumanthiran No deal’, போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தார்கள்.

image_ab89d11781.jpg

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையில் இடம்பெறும் மற்றும், சபையால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மைமிக்கவையாக இருக்கவேண்டும் என்றும் கல்லூரியின் நிர்வாகத்துக்குள் கல்லூரிக்குப் பாதகமான வகையில் ஆளுநர் சபையின் தலைவர் மூக்கை நுழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்காவிலுள்ள நிதிகளின் தர்ம கர்த்தா சபைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, விலக்கிக் கொள்ளவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் ஆட்சிபீடத்தில் இருக்கும் ‘தலைமை’களிடத்தில் எத்தகைய கீழ்த்தரமான மனோபாவம் காணப்படுகின்றதோ, அத்தகைய மனோபாவத்தின் போக்கே, யாழ்ப்பாணக் கல்லூரியின் தற்போதைய ஆளுநர் சபையிடமும் காணப்படுகின்றது என்பதை, ஆர்ப்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாகைகளின் வாசகங்கள் படம்பிடித்துக் காட்டியிருந்தன.

வரலாறு படைக்கக்கூடிய உயர்பதவிக்கு வருவோர், அந்தப் பதவியின் அதிகாரம், புனிதம் போன்றவற்றை, வியாபார நோக்கம் கொண்ட மனப்பான்மையுடன் பார்ப்பதும் அணுகுவதும், சீரழிவுகளையே விளைவிக்கும். நாட்டின் இன்றைய வங்குரோத்துநிலை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வந்துவிடக்கூடாது என்பதால், இந்தப் போராட்டத்தின்பால் இருக்கும் நியாயங்களை மறுத்துவிடமுடியாது.

யாழ்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை

யாழ்ப்பாணக் கல்லூரியின் நலன்களைப் பேணுவதும் கல்லூரியை முன்னோக்கி நகர்த்துவதும் என யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையின் பொறுப்புகளை மிகஎளிய வடிவில் விளங்கிக்கொள்ளலாம். இந்தச் சபைக்கு 11 - 14 வரையான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். 1894ஆம் ஆண்டு, இந்தஆளுநர் சபையின் யாப்புவிதிகள் உருவாக்கப்பட்டதாக கல்லூரியின் வரலாற்று ஆவணங்களில் காணமுடிகின்றது. கல்லூரியின் முன்னேற்றம் கருதி, காலமாற்றங்களுக்கு ஏற்ப, யாப்புவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

image_ce054db5f7.jpg

இறுதியாக, 2015ஆம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த யாப்புவிதி மாற்‌றம்தான், யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் பாதகமான, மோசடித்தனமான காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அவ்வாறு, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை, ஓரிடத்தில் குவித்துவைத்திருக்கும் வகையில், புதிய யாப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது  முக்கிய விடயமாகும். 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்புவிதியின் பிரகாரம், தென்னிந்திய திருச்சபையின் பேராயர், யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவராக இருப்பார் என்று மாற்றப்பட்டுள்ளது.

கல்லூரியின் ஆளுநர் சபை உறுப்பினராக, தென்இந்திய திருச்சபையின் பேராயர் இருப்பார் என்பது, 1947ஆம் ஆண்டு யாப்புவிதிகளின் பிரகாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், 2015ஆம் ஆண்டு யாப்புவிதியில் தென்இந்திய திருச்சபையின் பேராயர், நேரடியாகவே கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவராக, அவருடை பதவிக்காலம் வரை இருப்பார் என மாற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னுள்ள யாப்புவிதியின் பிரகாரம், ஆளுநர் சபையின் தலைவர், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவராக இருந்தார்.

image_b5e14efc4d.jpg

யாழ்ப்பாணக் கல்லூரியின் 11 - 14 பேரடங்கியஆளுநர் சபை உறுப்பினர்கள் பின்வருமாறு நியமிக்கப்படுவர். தென்இந்திய திருச்சபையின் பேராயர் (தலைவர்), கல்லூரி அதிபர், தென்இந்திய திருச்சபையின் ஆறு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் (கொழும்பு பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த ரி. எதிராஜ் தற்போது பிரசன்னப்படுத்துகின்றார்), ஆசிரியர்களுக்கான பிரதிநிதி (இவர் ஆசிரியர் அல்லாதவராக இருத்தல் வேண்டும்), ஏற்கெனவே தெரிவான உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து, மீதமுள்ள உறுப்பினர்களை தெரிவுசெய்வார்கள்.

image_263dc4f3f0.jpg

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கருத்துப்படி, “இப்போதுள்ள ஆளுநர் சபை உறுப்பினர்களில், பழைய மாணவர் சங்க பிரதிநிதியைத் தவிர, ஏனையோர் பேராயரால் பிரத்தியேகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களாகவோ அழைத்து வரப்பட்டவர்களாகவோதான் இருக்கின்றார்கள். இவர்கள், பேராயரின் போக்கு, முடிவுகள் போன்றவற்றுக்கு மாறாக, செயற்படத் துணியமாட்டார்கள். அவருக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்” என்கின்றார்கள்.

போராடியவர்கள் ஒவ்வொருவரின் முகங்களிலும், ‘மோசமான யாப்புவிதி மீறல்கள் ஊடாக, கல்லூரி சீரழிக்கப்படுகின்றது. இதற்கு இப்போதுள்ளஆளுநர் சபைதான் பொறுப்புக்கூற வேண்டியது’ என்ற ஆக்ரோசமும் ஆதங்கமும் தெளிவாகப் பிரதிபலித்தன.

image_f50bb169bf.jpg

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் நிர்வாகக் குழு

யாப்பு விதிகளின் பிரகாரம் காணப்படும் இந்தக் குழு, கல்லூரிக்கான பட்ஜெட்டையும் ஆண்டு கணக்கறிக்கையையும் தயாரித்து, ஆளுநர் சபையின் அங்கிகாரத்தைப் பெற்று, தர்மகர்த்தா சபைக்கு அனுப்ப வேண்டும். இந்தக் குழுவில் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் அங்கத்தவராக இருப்பார். இங்குள்ள சோகம் என்னவென்றால், இந்தக் குழு கடந்த எட்டுஆண்டுகளாகக் கூடவில்லை. கடந்த எட்டுஆண்டு கால பட்ஜெட்டும் கணக்கறிக்கையும், இந்த நிர்வாகக்குழுவால் முறைப்படி யாப்புவிதிகளின் பிரகாரம் கூடி, தயாரிக்கப்படாதவையாகும்.

யாழ்ப்பாணக் கல்லூரியின் நிதிகளின் தர்மகர்த்தா சபை

1877ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சபை, அமெரிக்காவில் உள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறப்படும் ஆண்டுக் கட்டண நிதி தவிர, கல்லூரியின் அத்தியாவசிய செலவுகளுக்காக மேலதிகமாகத் தேவைப்படும் நிதியை, இந்த நிதிகளின் தர்மகர்த்தா சபைதான், வழங்கிக் கொண்டிருக்கின்றது.  இலங்கை அரசாங்கத்தில் இருந்து, இலவச பாடப்புத்தகம், இலவச சீருடை என்பவற்றைத் தவிர வேறு எதையும் யாழ்ப்பாணக் கல்லூரி பெற்றுக்கொள்வதில்லை.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையால் 2016ஆம் ஆண்டு, ‘யாழ்ப்பாணக் கல்லூரியின் சுயநிர்ணய உரிமை’ என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் ஆரம்பப் பகுதியில், இலங்கை கொலனித்துவ நாடாக இருக்கும்போது, அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் திரட்டிய நிதியைக் கொண்டு அமைக்கப்பட்டதே ‘நிதிகளின் தர்மகர்த்தா சபை’ என்றும் இப்பொழுது, இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று, சுயாட்சி, சுதந்திரம், இறைமை ஆகியவற்றுடன் எங்களை நாங்களே ஆண்டு கொண்டிருக்கின்றோம் என்பதை நியாயப்படுத்தி, உறுதிப்படுத்தும் வகையிலும், இறுதிப் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்தும் உருவாக்கப்பட்டு இருந்தது. 

அக்கோரிக்கைகளில் முக்கியமாக, அமெரிக்காவில் தர்மகர்த்தா சபையிடம் தற்போது இருக்கும் 40 மில்லியன் பணத்தில், ஒன்பதில் எட்டு வீதத்தை இலங்கையில், இலங்கையர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையை உருவாக்கி, அதன்கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் புத்தகம், அமெரிக்காவிலுள்ள நிதிகளின் தர்மகர்த்தா சபையின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

image_824fc0dfe1.jpg

நிதிகளின் தர்மகர்த்தா சபை, 2017ஆம் ஆண்டு ஜனவரியில் கடிதமொன்றை ஆளுநர் சபைக்கு அனுப்பியிருந்தது. அக்கடிதத்தில், பொறுப்புக்கூறல், உள்ளக ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலான சிறந்த நிர்வாக முகாமைத்துவத்தை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டு, கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டிய எட்டு சீர்திருத்தங்களையும் முன்வைத்திருந்தது. அவ்வாறு அமல்படுத்தத் தவறின் படிப்படியாக நிதி குறைப்பு செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

2017 ஜனவரி முதல் 2018 ஜூலை வரையுள்ள ஆறு காலாண்டு காலப்பகுதியில் கணிசமான நிதி குறைப்பு செய்யப்பட்ட நிலையில், 2018 ஜூலையில் நிதிகளின் தர்மகர்த்தா சபை, ஆளுநர் சபைக்கு மீண்டுமொரு கடிதத்தை அனுப்பியிருந்தது. அக்கடிதத்தில், தலைவரும் உபதலைவரும் ஆளுநர் சபையில் இருந்து விலகவேண்டும் என்றும் இவர்கள் விலகாவிட்டால், 100 சதவீதம் நிதியளிப்பதை நிறுத்திவிடுவோம் என்றும் அறிவித்திருந்தது.

இதையடுத்து, ஆளுநர் சபை, நிதிகளின் தர்மகர்த்தா சபைக்கு எதிராக, பாடசாலைக்கு கிரமமாக நிதி அளிக்கப்படவில்லை என்றும் தர்மகர்த்தா சபையின் தற்போதைய உறுப்பினர்கள் அகற்றப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரி வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு இன்றுவரை தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

‘உதவி செய்யப்போய் உபத்திரவங்களைத் தேடிக்கொள்வானேன்’ என்ற நிலைப்பாட்டுக்கு வந்த நிதிகளின் தர்மகர்த்தா சபை, யாழ்ப்பாணக் கல்லூரியுடனான உறவைத் துண்டித்து விட்டு, தர்மகர்த்தா சபையின் யாப்பில் குறிப்பிட்டவாறு சபையை கலைக்கும் போதான நடைமுறையைப் பின்பற்றுவதற்கும் ஆலோசித்து வருவதாக அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பிக்கப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் திகதி கொண்டாடவுள்ள ஒரு பழம்பெரும் கல்வி நிறுவனம், ‘யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்’ என்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம், ஆளுநர் சபைக்குள் இடம்பெறும் கல்லூரிக்குப் பாதகமான காய்நகர்த்தல்கள் பொதுவெளியில் வெட்டவெளிச்சமாகி உள்ளன.

‘கல்லூரியைப் பாதுகாப்போம்’ என்ற உணர்வு, உலகம் பூராவும் வாழும் பழைய மாணவர்களின் உள்ளங்களில் பொங்கி எழவேண்டும். கல்லூரி மீதான கரிசனை காரியசித்தி பெற வேண்டும். அடம்பன் கொடிகளாக ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பழைய மாணவர்கள், ஒன்றுதிரண்டு, மிடுக்காக எழவேண்டும்.

‘ஆடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்பது முதுமொழி. ஒன்று திரட்டிய அடம்பன் கொடியால், சும்மாஅம்மியைப் போட்டுஅடித்துக் கொண்டிருந்தால் அம்மி நகரப்போவதில்லை. நென்புகோல், உறுளை போன்ற உபகரணங்களையும் பயன்படுத்தி, அடம்பன் கொடியால் சுற்றி, இழுத்தால், அம்மி நகராமல் விடப்போவதில்லை.

‘குரே குரெ...’ என எழுச்சியுடன் கல்லூரி கீதம் இசைக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி மைந்தர்கள், அந்த நாதம் பேரெழுச்சியுடன் விண் மேலெழுந்து, கல்லூரியின் புனித ஆன்மாவின் மீது படந்திருக்கும் கரும்துகள்களைத் துடைத்து, புனிதமும் பூரணத்துவமும் அடையச் செய்யவேண்டும்.

(இக்கட்டுரைக்குத் தேவையான உசாத்துணை தகவல்களை, யாழ்ப்பாணக் கல்லூரியின் வட்டுக்கோட்டை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம். திருவரங்கன் வழங்கி, உதவியிருந்தார்)

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்ப்பாணக்-கல்லூரியில்-கைவைக்க-எத்தனிக்கும்-கயவர்-கூட்டம்/91-298861

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.