Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்தியின் யாத்திரை: வரலாற்றில் பதிவான யாத்திரைகள் போல இதனால் தாக்கம் இருக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தியின் யாத்திரை: வரலாற்றில் பதிவான யாத்திரைகள் போல இதனால் தாக்கம் இருக்குமா?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடையும் வகையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள 'இந்திய ஒற்றுமைப் பயணம்' (பாரத் ஜோடோ யாத்திரை) நாளை (செப்டம்பர் 7) தொடங்குகிறது.

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த நடைபயணம் நடக்கவுள்ளது.

நடைபயணம் குறித்த சில தகவல்கள்:

கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்த 'பாரத் ஜோடோ யாத்திரை' குறித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 7 மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பயணம், 150 நாட்கள் தொடர்ந்து நடந்து காஷ்மீரில் நிறைவடைகிறது.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

3,570 கி.மீ. தொலைவு செல்லும் இந்தப் பயணம், ஒவ்வொரு நாளும் காலை - மாலை தலா மூன்று மணிநேரம் என 20 கி.மீ தொலைவை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த நடைபயணம் நடைபெறும்.

இந்த நடைபயணத்தில் மூன்று விதமான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள். இந்த நடைபயணத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை கலந்துகொள்ளும் 100 பேர், நடைபயணம் மேற்கொள்ளப்படும் மாநிலத்தைச் சேர்ந்த 100 பேர், எந்தெந்த மாநிலங்கள் வாயிலாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லையோ அந்த மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் 300 பேர் இந்த நடைபயணத்தில் உறுதியாக கலந்துகொள்கின்றனர்.

 

பாரத் ஜோடோ யாத்ரா

பட மூலாதாரம்,BHARAT JODO TWITTER

அவர்கள் உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உண்டான வசதிகள் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய வெவ்வேறு வகையான கண்டெய்னர்களும் இந்த நடைபயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

'இந்திய ஒற்றுமை பயணம்' என்பதால் தேசியக்கொடியை ஏந்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இடதுசாரி, பொதுவுடைமை அமைப்புகள், காங்கிரஸ் விமர்சகர்கள், பொதுச் சமூகம் என பல்வேறு தரப்புக்கும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

 

Presentational grey line

 

Presentational grey line

எதற்காக இந்த நடைபயணம்?

"இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணம் தான் இந்த நடைபயணம்" என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸின் தலைவர் யார் என தினசரி யூகங்கள் வெளியாகிவரும் நிலையிலும், 2014-2022 வரை நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்கள் ஆகியவற்றில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

 

பாரத் ஜோடோ யாத்ரா

பட மூலாதாரம்,BHARAT JODO TWITTER

தாக்கத்தை ஏற்படுத்துமா?

ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், "காங்கிரஸ் தலைமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2004ல் சோனியா காந்தி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற கேள்வி வந்தபோது அவரை ஆதரித்தது தமிழ்நாடு தான். 2019-ல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது மு.க.ஸ்டாலின்தான். காங்கிரஸ் தலைமையைப் பொறுத்தவரையில் அதற்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து வந்தால் வலுவாக இருக்கும் என கருதுகின்றனர்" என தெரிவித்தார்.

காங்கிரசுக்கு இந்த யாத்திரை எந்தளவுக்கு கைகொடுக்கும் என்ற கேள்விக்கும் "இரண்டு ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. அதற்காக காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இரண்டு பயணங்கள் முக்கியமானதாக உள்ளது. ஒன்று ஜெயப்பிரகாஷ் காந்தி அவசரநிலை காலத்திற்கு பிறகு முன்னெடுத்த நடைபயணம். மற்றொன்று அத்வானியின் ரதயாத்திரை. ஒன்று ஜனநாயகத்திற்கு உதவியாகவும் மற்றொன்று வலதுசாரி அரசியலுக்கு உதவியாகவும் மாறியிருக்கிறது. இரண்டும் முன்னுதாரணமாக இருக்கும்போது ராகுல்காந்தியின் நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மக்கள் மீது இந்த நடைபயணங்கள் தாக்கம் ஏற்படுத்துகிறதோ, இல்லையோ எல்லோரும் இதுகுறித்து பேசுவார்கள். உரையாடலை தாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என வலதுசாரிகள் நினைக்கும்போது இந்த நடைபயணம் உதவியாக இருக்கும். விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்னைகளை எழுப்ப உதவிகரமாக இருக்கும்" என்றார்.

வரலாற்றில் சில யாத்திரைகள்

காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது. அதில், சில முக்கியமான யாத்திரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

பிரிட்டிஷாருக்கு எதிராக காந்தியின் தீவிரமான நடைபயணங்கள்

 

மகாத்மா காந்தி

பட மூலாதாரம்,PRAMOD KAPOOR/BBC

பிரிட்டிஷாருக்கு எதிராக பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார் மகாத்மா காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முகமாக மகாத்மா காந்தி மாறுவதற்கு தண்டி யாத்திரை வழிவகுத்தது.

உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து, அகமதாபாத்திலிருந்து தண்டி வரை 241 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொண்டார் மகாத்மா காந்தி. அவருக்கு அப்போது 61 வயது. தினசரி 24 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொண்டார். எந்த நோக்கத்திற்காக நடைபயணம் மேற்கொண்டாரோ அதனை நிறைவேற்றி காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாத்திரையாக இது கருதப்படுகிறது. அதன்பின் சுதந்திர இந்தியாவில் பல்வேறு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட யாத்திரைகளின் முன்னோடியாக தண்டி யாத்திரை கருதப்படுகிறது.

அத்வானியின் ரத யாத்திரை

 

அத்வானி

பட மூலாதாரம்,ADVANI

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் தொடங்கி பிகாரில் சமஸ்டிபுர் வரையில் மேற்கொண்ட பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கான ராமர் ரத யாத்திரை பயணம் முழுக்க "கோயிலை அங்கு கட்டுங்கள்" என்ற கோஷத்தை அத்வானி முன்வைத்தார். 1990 செப்டம்பர் - அக்டோபரில் பிகாரில் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ரத யாத்திரை மூலம் அத்வானி முன்னெடுத்துச் சென்ற, தீவிரமான இந்துத்வா அரசியல் நல்ல பலனைக் கொடுத்தது. 1996 தேர்தலில் 161 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 1984 தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற கட்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றமாக அமைந்தது. முதலாவது பாஜக அரசு அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பதவியேற்றது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் அது 13 நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தது.

 

Presentational grey line

 

Presentational grey line

நீதி கேட்டு நெடும்பயணம்

 

கருணாநிதி

பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89

1982ல் திருத்தணி கோயில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார். அப்போது, திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்படவேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றார் கருணாநிதி.

"எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அரசின் மீதான விமர்சனங்களை அவையில் பதிவுசெய்தது, திருச்செந்தூர் ஆலய அதிகாரி கொலைவழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட எம்.ஜி.ஆர் அரசு தயங்கியபோது, அந்த அறிக்கையை ரகசியமாகப் பெற்று பத்திரிகைகளில் வெளியிட்டது, கொலைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியபோது நீதிகேட்டு நெடும்பயணம் சென்றது என்று தொடர்ச்சியாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே, தனது கட்சியையும் உயிரோட்டத்துடன் வைத்திருந்தார் கருணாநிதி" என,"திராவிட இயக்க வரலாறு", "தமிழக அரசியல் வரலாறு" உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் பிபிசி தமிழுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் படை

1938 ஆகஸ்டு 1ஆம் தேதி 'தமிழர் படை' என்ற பெயரில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் உறையூரில் தொடங்கி தமிழகம் முழுதும் கிராமம் நகரம் வேறுபாடின்றி மாபெரும் பேரணியாகச் சென்று பட்டிதொட்டியெங்கும் 87 பொதுக்கூட்டங்களை நடத்தினர்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் குமாரசாமி பிள்ளை உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழுவினர், செப்டம்பர் 11, 1938 அன்று சென்னை) நகரில் இருந்த பிரிட்டிஷ் - இந்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை சென்றனர்.

இந்தத் தமிழர் படை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகமெங்கும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் 1939இல் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

வைகோவின் நடைபயணங்கள்

 

வைகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல தலைவர்கள் நடைபயணம் மேற்கொண்டிருந்தாலும் அனைத்து நடைபயணங்களும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியதில்லை. தமிழக அரசியல்வாதிகளில் அதிக நடைபயணங்களை மேற்கொண்டவர் வைகோ. மதுவிலக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காவிரிப் பிரச்னை என பல பிரச்னைகளுக்காக நீண்ட தூர நடைப்பயணங்கள் மேற்கொண்டார்.

திமுகவிலிருந்து விலகிய பின் 1994ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார். அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக என 1500 கி.மீ . தொலைவு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். எனினும், இந்த நடைபயணங்கள் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலில் மதிமுகவின் தோல்வி உணர்த்தியது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

நதிநீர் இணைப்புக்காக ஒருமாத காலமும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். காவிரி மீட்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் நடைபயணங்கள் மேற்கொண்டதுண்டு.

இப்போது காங்கிரஸ் கட்சி தன்னை மீட்டெடுக்க ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளும் இந்த 'ஒற்றுமை நடைபயணம்' அக்கட்சிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/india-62804511

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தி: "மதம், மொழியின் பெயரால் இந்தியாவை பிளவுபடுத்த முடியாது"

7 செப்டெம்பர் 2022, 11:35 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராகுல் காந்தி

இந்திய குடிமக்களை மதம், மொழியின் பெயரால் பிளவுபடுத்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையை துவக்கி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய மூவர்ண கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கினார். அப்போது வீர வணக்கம் செலுத்துவது போல சல்யூட் அடித்து தேசிய கொடியை ராகுல் பெற்றுக் கொண்டார்.

இந்த பயணத்தையொட்டி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.

இந்த யாத்திரையின் துவக்கமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், ஸ்வாரஜ் இந்தியா நிறுவனர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
 

ராகுல் காந்தி யாத்திரை

இதில் பேசிய ராகுல் காந்தி, ஒற்றுமை பயணத்தின் தேவை மற்றும் நோக்கத்தை விளக்கிப் பேசினார். இதைத்தொடர்ந்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை குற்றம்சாட்டி அவர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அதன் விவரம்:

"இந்திய தேசிய கொடி ,ஒரு நபருக்கான கொடி அல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தமான கொடி தேசிய மூவர்ண கொடி. இது தனிப்பட்ட மாநிலத்துக்கு மட்டும் சொந்தம் ஆனது அல்ல. இந்தியா என்ற தேசம் முழுமைக்கும் சொந்தமானது. இந்த கொடி, ஒரு மதத்துக்கோ ஒரு சமுதாயத்துக்கோ, மாநிலத்துக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு ஜாதிக்கோ சொந்தமானது அல்ல. இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு துகளுக்கும் சொந்தமானது இந்திய மூவர்ண கொடி. இது வெறும் நாடு மற்றும் மாநிலத்தின் அடையாளம் மட்டுமல்ல. இது ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாகவும் இருக்கிறது.

 

ராகுல் காந்தி

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ராகுல் காந்தி

ஒவ்வொரு இந்திய மகனும் பாதுகாக்கப்படுகிறான், சுதந்திரமான, வெளிப்படையான வாழ்க்கையை அவன் வாழ்வதை அது உறுதிப்படுத்துகிறது. எந்தவொரு மதத்தை பின்பற்றவும் மொழியை பேசவும் கூடிய உரிமையை இந்த கொடி குடிமகன்களுக்குத் தந்திருக்கிறது. ஆனால், இன்று இந்த கொடி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது," என்றார் ராகுல் காந்தி.

 

Presentational grey line

 

Presentational grey line

தாக்குதலுக்கு உள்ளான ஜனநாயக நிறுவனங்கள்

 

ராகுல் காந்தி

"இந்தியா என்பது எல்லோர் மீதும் திணிக்கப்பட்ட தனிப்பட்ட தத்துவம் அல்ல. இந்தியா என்பது இந்த நாட்டில் உள்ள எல்லா குடிமகனின் மொழி, பண்பாடு, கலாசாரம். இதுதான் இந்தியா. இந்தியா என்ற நிறுவனம்தான் இந்த கொடியை பாதுகாக்க வேண்டும்.

இந்தியா என்ற தத்துவம் மற்றும் குரலை மூவர்ண கொடி பாதுகாக்க வேண்டும். ஆனால், இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக நிறுவனமும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பால் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.

அவை, இந்த கொடியை தங்களுடைய சொத்தாக கருதுகின்றன. தனிப்பட்ட முறையில் தங்களால் மட்டுமே இந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று அவை நினைக்கின்றன.

இந்த நாட்டில் உள்ள எதிர்கட்சிகளை அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றைக் கொண்டு அச்சுறுத்தப் பார்க்கிறார்கள் (மத்தியில் ஆளும் பாஜக). இந்தியர்களை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்தியர்கள் ஒருபோதும் அச்சப்பட மாட்டார்கள். எத்தனை மணி நேரம் நீங்கள் (மத்திய அரசு) விசாரணை அறையில் வைத்திருந்தாலும் ஒரு நாளும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். இந்திய நாட்டில் எந்தவொரு எதிர்கட்சித் தலைவரையும் இதுபோன்று அடைத்து வைத்து விசாரித்து அச்சுறுத்த முடியாது.

மதம், மொழி போன்றவற்றின் பெயரால் இந்த நாட்டை பிளவுபடுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும் என்று ராகுல் காந்தி பேசினார்.

மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் பொருளாதாரம்

 

ராகுல் காந்தி

இந்தியா இன்று வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத வேலையில்லா திண்டாட்டத்தை நாடு எதிர்கொண்டு பேரழிவை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஊடக நண்பர்கள் மெளனமாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் இது புரிகிறது. ஆனால், தொலைக்காட்சிகளில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை பற்றி காட்ட மாட்டார்கள். அவர்கள் நம்முடைய பிரதமரிந் முகத்தை மட்டும்தான் தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.

பாஜக அரசாங்கம் திட்டமிட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர தொழில் நிறுவனங்களை நடத்துவோரை நசுக்கி வருகிறது. குறிப்பிட்ட ஒரு சில பெரு நிறுவனங்களின் பணக்கார தொழிலதிபர்கள் மட்டுமே இந்த நாட்டின் பொருளாதாரத்தை தங்களுடைய கைகளுக்கு உள்ளே வைத்திருக்கிறார்கள். துறைமுகங்கள், நிலக்கரி, விமான நிலையங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையும் அந்த ஒரு சில பெரும் பணக்காரர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவர்களின் ஆதரவு இல்லாமல் நமது பிரதமரால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அவர்கள் ஊடகங்களை கைகளில் வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் பிரதமரின் படம் ஊடகங்களில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துகிறார்கள். அதற்கு கைமாறாக அவர்களுக்கு வேண்டியவற்றை பிரதமர் உறுதிப்படுத்துகிறார். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாய எதிர்ப்பு சட்டங்கள் என அனைத்தும் இந்த சில தொழிலதிபர்களின் பணத்தை காக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவை பிரித்தாளும் முயற்சியை மேற்கொண்டு நாட்டின் வளத்தை திருடினார்கள். அந்த பாணியைத்தான் இந்தியாவில் தற்போது ஆளும் மோதி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி உலக பொருளாதாரத்தை கையில் வைத்துக் கொண்டு செல்வாக்கு செலுத்தியது போல இன்றைக்கு இந்தியாவில் உள்ள ஒரு சில பெருநிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இந்தியாவின் எதிர்காலத்தை அபகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு என அனைத்தின் நோக்கமும் பெரு முதலாளிகளின் வளத்துக்காகத்தான் என்று ராகுல் காந்தி பேசினார்.

"நாட்டில் உள்ள வேளாண் குடிமக்கள் உயிர் வாழவே போராடுகிறார்கள். இந்த சூழலில் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். நமது இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியாத சூழலில், விலைவாசி விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் வரலாற்றில் இல்லாத மிக மோசமான காலகட்டத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே, இந்த தருணத்தில் இந்தியர்கள் அனைவரையும் ஒற்றுமையாக இணைப்பதையும் அவர்களை ஒற்றுமையாக திரட்டுவதையும்தான் இந்த பாரத ஒற்றுமை என்ற நெடும் நடைபயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், பாஜக செய்வது போல இந்த நாட்டு மக்களின் குரலை நசுக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த மக்களின் ஞானத்தை கேட்டறிய நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த யாத்திரையை நடத்துகிறோம்," என்றார் ராகுல் காந்தி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

117 பேருடன் 3,570 கிமீ பாத யாத்திரையை அடுத்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் முடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

 

ராகுல் காந்தி யாத்திரை

பாரத் ஜோடோ யாத்திரை அடுத்த 150 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

முன்னதாக, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் "வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். என் அன்பான நாட்டை நான் இழக்க மாட்டேன்," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

தலைமை ஏற்க அழைப்பு

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை தெரிவித்தார்.சோனியாவோ, ராகுலோ கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்களாக கருதப்படுவோரில் முன்னணியில் பேசப்படுபவர் அசோக் கெலாட்.

 

Presentational grey line

 

Presentational grey line

"காந்தி குடும்பத்தின் மிகப் பெரிய குணமே, அவர்கள் கட்சியின் நலனுக்காக முடிவுகளை எடுப்பவர்கள்," என்று கெலாட் தெரிவித்தார். "ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியினரும் ஏன் கூறுகிறார்கள்? இன்றும், ராகுல் காந்தியின் பின்னால் ஏன் காங்கிரஸ் தொண்டர்கள் திரள்கிறார்கள் தெரியுமா? காரணம், அவர் தலைவரானால் மட்டுமே கட்சி ஒற்றுமையாக இருக்கும்" என்று கன்னியாகுமரியில் 'பாரத் ஜோடோ யாத்திரை' தொடங்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெலோட் கூறினார்.

பாஜக விமர்சனம்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையை விமர்சித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "அகண்ட பாரதத்தை" நோக்கி காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

1947இல் இந்தியாவை பாகிஸ்தானாகவும் பின்னர் வங்காளதேசமாகவும் காங்கிரஸ் பிரித்தது. பிரிவினை குறித்து ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தால், பாரத் ஜோடோவால் எந்தப் பயனும் இல்லை. பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். இந்தியா ஏற்கெனவே அப்படியேதான் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, சில்சார் முதல் செளராஷ்டிரா வரை இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

 

அண்ணாமலை பாஜக

இதே கருத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலையும் எதிரொலித்தார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வந்தால் அது காங்கிரஸுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், அவர் தலைவரானால் அது பாஜகவுக்கு நல்லதுதான் என்று அண்ணாமலை தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62822239

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.