Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கொள்ளை கும்பல் - அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கொள்ளை கும்பல் - அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக கொண்டை ஊசி, ஹேர்பின் உள்ளிட்ட பெண்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கார் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களை திருடிச்செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சாமார்த்தியமாக பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பி, பலமான பொருட்களை கொண்டு தாக்காமல், அன்றாட பொருட்களை வைத்து கொள்ளையடிக்கும் முறைக்கு பெயர்போன 'திருச்சி ராம்ஜி நகர்' கொள்ளை கும்பல் இந்த திருட்டு சம்பவங்களுக்குப் பின் இருப்பதை உறுதி செய்துள்ள சென்னை காவல்துறையினர், விசாரணை வலையை விரித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் மட்டுமே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 'ராம்ஜி நகர்' கொள்ளையர்கள், தற்போது தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இரண்டு மாத கால தேடுதலுக்கு பின்னர், சென்னை தேனாம்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள், ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த ஒரு நபரை கடந்த வாரம் பெங்களூரு சென்று கைது செய்துவந்தனர்.

 

'ராம்ஜி நகர்' கொள்ளை கும்பலைச் சேர்ந்த சபரி (33) என்ற நபர் கைதாகியுள்ள நிலையில், பிற நபர்களைக் கண்டறியத் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் யார்? பின்னணி என்ன?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த ராம்ஜி மூலே என்பவர் திருச்சியில் நடத்திய பருத்தி ஆலையில் ஆந்திரா, குஜராத் என பல வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

1990களில் இருந்து 2007வரை செயல்பட்ட அந்த ஆலையின் அடையாளமாக அந்த பகுதி ராம்ஜி நகர் என்ற பெயர் பெற்றது.

ஆலையில் வேலை செய்த பலர் தொடர்ந்து தமிழ்நாட்டில் தங்கிவிட்டாலும், வட மற்றும் தென் மாநில மொழிகளை இன்றும் சரளமாகப் பேசுகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் கொள்ளையடித்து தங்களது வாழ்க்கையை வாழுகின்றனர்.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களாக அவர்கள் பெருகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தங்களது வங்கிக் கணக்குகளைப் பிற மாநிலங்களில் வைத்திருப்பார்கள் என்றும் தமிழ்நாட்டில் தங்கள் மீது எந்த வழக்கும் பதிவாகாத வகையில் இதுநாள் வரை செயல்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான காவல்நிலையங்களில் பல நூறு திருட்டு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறியப்படுபவர்கள்தான் ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இவர்களை தேடி பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து திருச்சி ராம்ஜி நகர் பகுதிக்கு விசாரணை அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர்.

ராம்ஜி நகர் கொள்ளையர்களை நேரடியாக அணுகி, அவர்களை திருட்டு தொழிலிலிருந்து மீட்க பல காவல்துறை அதிகாரிகள் முயன்றும் இன்றுவரை பயன் இல்லை என்றும் தெரிகிறது.

 

1990களின் பின்பகுதியில் தொடங்கி இன்றுவரை இந்தியாவின் பல பகுதிகளில் வங்கி,நகைக்கடைகள், ஏடிஎம் அறைகள், பொது இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்கள், கூட்டநெரிசலான பகுதிகளில் நகை, பணப்பை உள்ளிட்ட பலவகையான பொருட்களைத் திருடும் வேலையில் ஈடுபட்டு அதையே தங்களது வாழ்வாதாரமாக வைத்திருப்பவர்கள்தான் ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்கிறார்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள்.

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் திருடும் விதம்

ராம்ஜி நகர் கொள்ளையர்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அவர்களை கைது செய்தவர்கள் என பல மூத்த அதிகாரிகளிடம் பேசினோம். தமிழ்நாடு காவல்துறையில் ஐ.ஜி ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சாரங்கன் ஐபிஎஸ்.

இவர் திருச்சி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். ராம்ஜி நகர் கொள்ளையர்களை அடையாளம் காண அவர்களின் புகைப்படங்கள், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட தரவு தளத்தை உருவாக்க முனைந்தவர்.

 

''ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பொதுவாக யாரையும் தாக்க மாட்டார்கள். யாரையும் காயப்படுத்திக் கொள்ளையடிக்க மாட்டார்கள். மக்களின் கவனத்தை திசை திருப்பி பொருட்களைக் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் தனித்திறன்,'' என்கிறார் சாரங்கன்.

 

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் திருடும் விதத்தை மேலும் விவரித்த சாரங்கன் பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார்.

 

எடுத்துக்காட்டாக, சாலையில் பத்து ரூபாய் நோட்டுகளை வீசியிருப்பார்கள், அதனை எடுக்கவரும் நபர் குனியும்போது, அவர்களிடம் உள்ள பணப்பையை எடுத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.

 

திடீரென இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொண்டு வருவது போல வந்து, நகை அணிந்துள்ள நபர் மீது மோதிவிட, அதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நபர் நகையைத் திருடிவிட்டு ஓடிவிடுவார்.

கண்ணாடியை உடைக்கும் சத்தம் கூட அதிகமாக கேட்காது. துளையை பெரிதாக்கி உடைப்பார்கள் என்பதால், அருகே அவர்களின் குழுவை சேர்ந்த மற்றவர்கள் அங்கு செல்லும் மக்களின் கவனத்தை ஏதாவது பேசி திசை திருப்புவார்கள். சந்தேகம் ஏற்பாடாத நேரத்தில் பொருட்களை ஒருவர் எடுத்துச்சென்றுவிடுவார், குழுவில் உள்ள மற்றவர்கள் மெதுவாக அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.

 

கும்பலாக ஒரு கடையில் நுழைந்து, சந்தேகம் கேட்பது போல ஒரு குழு இயங்க, மற்றொரு குழு பொருட்களை லாவகமாக எடுத்துச்சென்றுவிடும்.

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழுவாக திருட செல்வது ஏன்?

பலமொழிகளை பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பதால், பஞ்சாபி, மராத்தி, போஜ்புரி,இந்தி,குஜராத்தி என பல மொழிகளில் பேசி, அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று அதிக கவனம் இல்லாத வங்கிகளில் கொள்ளையடித்த சம்பவங்கள் உள்ளன. திருட செல்லும்போது ஒரு குழுவாக இருப்பார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். பதின்பருவத்தில் இருந்தே திருட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபடுவதால், பலரும் பிற வேலைகளுக்கு செல்வதற்கு விருப்பம் காட்டுவதில்லை என்று தெரியவருகிறது.

 

ஒரு சில சம்பவங்களில் திருட்டில் யாராவது பிடிபட்டுவிட்டால், அந்த இடத்தில் கைதாகுவதற்காக ஒரு நபரை உடன் அழைத்துவருவது ராம்ஜி நகர் கொள்ளையர்களின் வழக்கம் என்பதால், திருட செல்வதற்கு குழுவாகத்தான் செல்வார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.

 

குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை, குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவராகவும் கைதாகும் நபர் வேறு நபராக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள் என்பதால், வழக்கில் ஒரு சில நபர்கள் கைதுசெய்யப்பட்டாலும், திருட்டில் ஈடுபட்ட நபர், சில நாட்கள் கழித்து மீண்டும் திருட்டில் ஈடுபடுவார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் திருட செல்வதால், தங்களுக்கென ஒரு வழக்கறிஞர் குழுவை இவர்கள் தங்கள்வசம் வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். கொள்ளையடித்த பணத்தை தங்களுக்குள் பிரித்துக்கொள்வது, ஒரு பங்கை வழக்கு நடத்துவதற்கு ஒதுக்குவது போன்றவற்றில் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

ராம்ஜி நகர் பகுதிக்குள் நுழைந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த பதிலும் கிடைக்காது என்றும் தேடிச் செல்லும் நபரைக் கைது செய்வது மிகவும் அரிது என்றும் தெரிவிக்கின்றனர்.

 

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் தற்போது கவனிக்கப்படுவது ஏன்?

பல ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட ராம்ஜி நகர் கொள்ளையர்கள் ,தற்போது சென்னை நகரில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

தி.நகர், பூக்கடை, பாண்டிபஜார், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் களவாடிய சம்பவங்களை அடுத்து, இவர்களைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

''தற்போது ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த சபரி என்ற நபரை விசாரித்து வருகிறோம். இவர் தி.நகர் கிரி ரோடு பகுதியில் காரில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியைத் திருடியுள்ளார்.

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் குறித்து இதுவரை வெளிமாநிலங்களிலிருந்து தகவல் கேட்பார்கள். தற்போது சென்னையில் பல இடங்களில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரில் பல இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து துல்லியமாக அடையாளம் காண முடிந்ததால், சரியான நபரைக் கைது செய்வதில் நாங்கள் குறியாக இருக்கிறோம். அவர்கள் குழுவில் இருந்து அனுப்பும் நபரை கைது செய்வதை ஏற்கமுடியாது. திருட்டில் ஈடுபட்ட நபரை புகைப்படத்தை வைத்து கைது செய்துவருவதால், ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பலர் பிடிபடுவார்கள்,''என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர்.

 

''விசாரணை முடிவில்தான் எத்தனை பொருட்கள் எந்த இடங்களில் களவாடப்பட்டன என்று தெரியவரும். இதுவரை ஆறு மடிக்கணினிகளைக் கைப்பற்றியுள்ளோம்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

 

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த சபரியை அடையாளம் கண்டதாகவும், சென்னையில் இருந்து வெளியேறி பெங்களூரூவில் தங்கியிருந்த சபரி, டெல்லி செல்வதற்காகத் தயாரான சமயத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,CHENNAI POLICE

 
படக்குறிப்பு,

கைது செய்யப்பட்ட சபரி

வெளிமாநிலங்களில் திருடிய சம்பவங்கள்

ராம்ஜி நகர் திருடர்கள்

இதுவரை பிற மாநிலங்களில் பதிவாகியுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கையில், பொது இடங்களில் மக்களை திசைதிருப்பி அலைப்பேசி, மடிக்கணினி, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வண்டியை திருடுவது, பணப்பை உள்ளிட்டவற்றைத் திருடியுள்ளது தெரியவருகிறது. இதுவரை இவர்கள் பல ஆயிரம் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும், யாரையும் தாக்கிப் பொருட்களைத் திருடியதில்லை என்றும் கூறப்படுகிறது.

 

2019ல் ஹைதராபாத்தில், ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வங்கி அதிகாரியின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடம் மோசமாகப் பேசி வம்புக்கு இழுப்பது போல பாவனை செய்து ரூ.58 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என்று வழக்கு பதிவாகியுள்ளது.

 

இதேபோல, பெங்களூரூவில் பரபரப்பான சாலையில் நிறுத்தியிருந்த காரில் இருந்த ரூ.30,000 கொண்ட பணப்பை, மடிக்கணினி மற்றும் சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அந்த கார் கண்ணாடியை வெறும் கொண்டை ஊசியைக் கொண்டு உடைத்து யாரும் பார்க்காதவாறு பொருட்களை எடுத்துச்சென்றுள்ளனர்.

 

2021ல் சண்டிகர் மாநிலத்தில் அரங்கேற்றிய திருட்டில், வங்கிக்கு பணம் கொண்டுசெல்லும் வண்டியை மறித்து, ஓட்டுநரிடம் வண்டியில் இருந்து ஆயில் வழிந்து வருவதாகக் கூறியுள்ளனர். ஓட்டுநர் இறங்கியதும், வண்டியில் ரூ.39 லட்சம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் திருடிச்சென்றனர். இந்த வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் பல வாரங்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல வாரங்கள் கழித்துத் திருச்சி வந்த அவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்திய பின்னர்தான் அவர்களைக் கண்டறிய முடிந்தது என்று தெரியவந்துள்ளது.

சொந்த மாநிலத்தில் கொள்ளையைத் தொடங்கியது ஏன்?

வடமாநிலத்தில் உள்ள பவாரியா கொள்ளையர்களை போல தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்ஜி நகர் கொள்ளையர்கள், பிற மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையடித்துச் சம்பாதிக்கும் பணத்தைத் தங்களது வேலைக்கு ஏற்ப பங்குபோட்டுக் கொள்வார்கள் என்று ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அதிகாரி கருணாநிதி கூறுகிறார்.

 

''ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 1990களில் இருந்து மிகவும் பிரபலமாக இருந்தனர். இவர்கள் திருட்டில் ஈடுபடும்போது யாரையும் காயப்படுத்த மாட்டார்கள். பொருட்களை எடுப்பது மட்டும்தான் இவர்களின் நோக்கமாக இருக்கும். திருட்டில் சிக்கிக் கொண்டால், பொருட்களைத் திருப்பிக் கொடுத்து விடுவதோடு, தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.பல ஆண்டுகளாக இவர்கள் குறித்த தகவலைக் கேட்டுப் பிற மாநிலக் காவல்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருவார்கள். தற்போது இவர்கள் தமிழ்நாட்டில் திருட்டைத் தொடங்கியுள்ளனர் என்பது புலனாகிறது.'' என்கிறார் அவர்.

 

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருந்த பலரும் திருந்தி நல்லமுறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகவும், ஒரு சிலர் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வருவது வருத்தத்தைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

''ஒரு காலத்தில் ராம்ஜி நகர் பகுதி என்றாலே திருட்டுக் கும்பல் வசிக்கும் இடம் என்று தான் சொல்வார்கள். திருச்சி நகரத்தில் இருந்து வெறும் 10கிலோமீட்டரில் தான் உள்ளது. தற்போது அது நகரத்தில் ஒரு பகுதியாகி விட்டதால், அங்கிருந்த பலர் நல்ல விலைக்கு நிலங்களை விற்றுவிட்டுத் திருந்தி நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் திருட்டில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதைத் தான் சமீபகாலச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன,'' என்கிறார் கருணாநிதி.

நீங்கள் கவனமாக இருப்பது எப்படி?

ராம்ஜி நகர் கொள்ளையர்களை போல கவனத்தை திசை திருப்பும் நபர்களிடம் இருந்து பொது மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று கருணாநிதியிடம் கேட்டோம்.

 

திசை திருப்பவதை கொள்ளையர்கள் நோக்கமாக வைத்திருப்பதால், பொது மக்கள் தங்களது பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை தங்களது கடமையாகக் கருதவேண்டும்.

 

பொது இடங்களில் நகை,பணம், மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பைகளை வெளியில் தெரியும்படி எடுத்து செல்வதைத் தவிர்க்கவேண்டும்.

அதிக மதிப்பிலான பணத்தை வங்கியிலிருந்து எடுக்க செல்லும்போது அல்லது நகைக் கடையில் பையை எடுத்துக்கொண்டு சாலையில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். யாரும் உங்களை நோட்டம் விடுகிறார்களா என்று பார்ப்பது நல்லது. உங்கள் பொருட்களைக் கவனமாக வைத்திருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கடையில் இருந்து வெளியேறவேண்டும்.

காரில் பொருட்களை வைத்துச்செல்லும்போது, வெளியில் இருந்து பார்த்தவுடன் தெரியும்படி பொருட்களை வைக்கவேண்டாம். முடிந்தவரை உங்களது பொருட்களை வைத்து செல்வதைவிட, அங்கு ஒரு நபரைப் பாதுகாப்பிற்காக விட்டுச்செல்வது நல்லது. அல்லது பாதுகாப்பு நிறைந்த இடத்தில் காரை நிறுத்திச் செல்லலாம்.

சாலையில் பணம் அல்லது மதிப்புள்ள பொருள் எதாவது கிடந்தால் அதனை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

பொது இடங்களில் சம்பந்தமில்லாத நபர் உங்களிடம் பேச்சுக்கொடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது.

சாலையில் நடக்கும் தகராறுகளைப் பார்ப்பதில் ஆவலாக நீங்கள் நிற்கும் சமயத்தில் உங்கள் பொருள் களவாடும் வாய்ப்புள்ளது என்பதால், தேவையற்ற தகராறுகளைப் பார்ப்பதில் கவனம் வேண்டாம்.

https://www.bbc.com/tamil/articles/clw1q7rq545o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.