Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரை அறிமுகவுரை                                                             -சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                               உரை அறிமுகவுரை

                                                                                    -சுப. சோமசுந்தரம்

எனது நண்பரும் ஆசானுமான ஆங்கிலப் பேராசிரியர் .தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றிய உரையை என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அந்நூலுக்கான அறிமுக விழாவைத் தனது நெல்லை வி.மு.சத்திரம் கிளையில் நிகழ்த்தியது. அறிமுக உரையாற்ற எனக்கு அவர்கள் அளித்த வாய்ப்பு நான் ஈட்டியது என்றே சொல்ல வேண்டும். அவ்வுரையை எழுதும்போது பேரா.தில்லைநாயகம் அவர்கள் பத்துப் பத்து அதிகாரங்களாக எனக்கு அனுப்பி எனது கருத்தினை அளிக்க உரிமையோடு பணித்திருந்தார். நான் அளித்த கருத்துகளை சில இடங்களில் ஏற்று அவற்றை உரையில் ஏற்றியிருந்தார்; சில இடங்களில் காரணத்துடன் விளக்கி அவரது கருத்தினை நான் ஏற்கச் செய்திருந்தார். ஒத்திசைவு (Harmony) என்பது அதுதானே ! உரை நிறைவு பெற்றதும் நானே அந்நூலுக்கு அணிந்துரை எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். "என்னது நானா ?" என்று கேட்டதே நான் உடனடியாக ஆற்றிய எதிர்வினை. சமீப காலங்களில் இந்தக் கேள்வியை நான் கேட்டது இது இரண்டாவது முறை. சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியொன்றில் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்த நான் அழைக்கப்பட்டபோது இதே கேள்வியைக் கேட்டது முதல் முறை. தற்காலத்தில் நிறையப் பேர் பட்டமளிப்பு விழாப் பேருரையை ஒரு சம்பிரதாயமாக உணர்வின்றி வாசிப்பதைப் பார்த்தால், நான் அக்கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் பள்ளி நாட்களில் பாடப் புத்தகத்தில் கட்டுரையாக வாசித்த பேரறிஞர் அண்ணாவின் பட்டமளிப்பு விழாப் பேருரை என் நினைவிலேயே தங்கி விட்டதால், அவர் இடத்தில் நானா என்பதே என் கேள்விக்கான பொருள். எனினும் பேரா.தில்லைநாயகம் அவரது திருக்குறள் உரைக்கான அணிந்துரை தர உற்றவன் நான்தான் எனத் தீர்மானித்துவிட்டபடியால் அவர் இட்ட பணியை சிரம் மேற்கொண்டு செய்திருந்தேன். அணிந்துரை என்ற பெயரில் எழுதினாலும் அதனை நூலுக்கான அறிமுக உரையாகவே எழுதியிருந்தேன். எனது குருநாதரின் நூலுக்கு அணி சேர்க்க நான் யார் ? எனவே தமுஎகசவின் நூல் அறிமுக விழாவில் அறிமுக உரையாற்ற நான் பொருந்தி அமைந்தேன். நான் ஏற்கனவே நூலில் எழுதியிருந்த அணிந்துரை/அறிமுக உரையை ஒட்டி வெட்டிப் பேசுவது எனக்கு எளிதாய் அமைந்தது.
         இவ்வையத்திற்கு வாழ்வியல் பாடம் சொன்ன நூல் திருக்குறள் என்பதும், அது காலந்தோறும் காலத்திற்கு ஏற்ப சான்றோரால் பல மொழிகளில் உரை செய்விக்கப்பட்டது என்பதும் உலக அளவில் அறிஞர் பெருமக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் பாமரரும் கூட அறிந்த ஒன்று. அவ்வாறு நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேரா..தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும்  ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை என் பேறு.
          முன்னர் குறித்தது போல உரையின் உருவாக்க காலத்திலேயே வாசித்துப் பின்னூட்டம் அளித்தமையால், நான் ஒரு வாசகனாக மட்டுமல்லாமல் ஒரு விமர்சனப் பார்வையுடனும் உரைநூலை அணுகலானேன். இந்த அணுகு முறையில் எனக்கு நான்கு கோணங்கள் இருந்தன. முதலாவது, உரையாசிரியரின் முக்கிய நோக்கமான பாமரரையும் சென்றடையும் எளிமை. இரண்டாவது, திருக்குறளுக்கு உரை செய்யும் எந்த ஒரு உரையாசிரியருக்கும் உரித்தான காலம் தழுவியமை; அஃதாவது, மூலக்கருத்திலிருந்து விலகாமல் தம் காலத்திற்கு ஏற்றவாறு உரை செய்தல். மூன்றாவது, தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்குமான இணக்கம் பற்றியது; வேறுபாடு இன்மை பற்றியது. நான்காவது, பாட வேறுபாடு இன்றி அமைவது. முதல் இரண்டு கோணங்களும் நேர்மையான அணுகுமுறையிலும் பின்னிரண்டும் எதிர்மறைப் பார்வையிலும் விளைவன. அதாவது முன்னிரண்டான எளிமையும் காலந் தழுவியமையும் இருப்பதால் உரை சிறப்புப் பெறுவது; பின்னிரண்டில் மொழியினால் பொருள் வேறுபாடும், எவ்விடத்திலும் பாடவேறுபாடும் இல்லாததால் சிறப்புப் பெறுவது. உள்ளதால் அமையும் சிறப்பிற்கு இவ்வுரையின் மேற்கோள்களும், இல்லாததால் அமையும் சிறப்பிற்கு இருக்கும் வேறு உரைகளின் மேற்கோள்களும் பொருந்தி அமைவன. தீமையின்மையை விளக்க தீமை யாது என்பதை சொல்லித்தானே ஆக வேண்டும் !
        இவ்வுரையின்   சிறப்பியல்பான  எளிமை எனும் பண்பு உள்ளங்கை நெல்லிக்கனியாய்க் காணக் கிடைக்கும் ஒன்று. தமிழானாலும் ஆங்கிலமானாலும் உரையை வாசித்தவுடன் பொருளுணர்ந்து வாசகன் ஒவ்வொரு குறளையும் சரளமாகக் கடந்து செல்லுகையில் உணரற்பாலது இந்த இனிமை கலந்த எளிமை. குறிப்பாக ஆங்கில உரையைச் சொல்வதானால் எளிமையும் உயர்தரமும் (simple and elitist) வாய்க்கப் பெற்றது எனக் குறித்தே ஆக வேண்டும். எளிமையும் உயர்தரமும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றனவே ! இது எவ்வாறு கைகூடும் என்று கேட்டால், அது வாசித்துப் பார்த்தால் புரியும் என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. மேலும், அது பேரா.தில்லைநாயகம் ஒரு சிறந்த ஆங்கிலப் பேராசிரியர் என்பதற்குச் சான்று பகர்வது என்றும் நான் தப்பித்துக் கொள்ளலாம்.
           எனவே இது காலத்துக்கேற்ற உரை எனும் கருத்தினை ஒன்றிரண்டு  மேற்கோள்களுடன் சுட்டுவது இந்த அறிமுக உரைக்குப் பொருந்தி அமையும். இஃது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் முயற்சியாம்.
"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
"மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"
என நவிலும் 'மக்கட்பேறு' அதிகார உரைகளில் பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாசிரியர்களும், மு. வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற சில இக்கால உரையாசிரியர்களும் உள்ளது உள்ளவாறு 'மகனை'யே குறிக்கின்றனர். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற தற்கால அறிஞர் பெருமக்கள் மகனுக்குச் சொன்னவாறே உரைத்து, மகளுக்கும் பொருந்தும் எனச்  சுட்டுகின்றனர். நம் உரையாசிரியர் பேரா. தில்லைநாயகம் அவர்கள்  'மகன்' என்ற இடத்தில் பிள்ளைகள் என்று உரைக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது குறிக்கத்தக்கது. குறள் தோன்றிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் தவிர சான்றோர் அவையிலும், சமர்க்களத்திலும் ஆண்மகனே வந்து நின்றான். எனவே இவ்வகை அறங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது அன்றைக்கு செயற்கையானதொரு  படைப்பிலக்கியத்திற்கு வழி கோலுவதாய் அமைந்திருக்கும். "இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை" என்று யவனிகா ஸ்ரீராம் என்ற தற்காலக் கவிஞர் 'தடம்' ஏட்டின் நேர்காணலில் சொன்னதை வாசித்த ஞாபகம். படைப்பாளி தன் காலத்திற்குத்தானே எழுத முடியும் ? ஊகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை எப்படி அவன் நிர்ணயிக்க முடியும் ? படைப்பு அவனது காலத்தைக் கடந்து நின்றால், அது அவனை மீறிய தற்செயல் நிகழ்வாகத்தானே அமையும் ? காலச்சிறையில் வள்ளுவனே  கட்டுண்ட சில இடங்களில் அவனை விடுவிப்பதற்கான நமது உரையாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. அவ்விடுதலையே தற்காலச்  சமூக விடுதலைக்கு வித்திடும் என உணர்வது ஒரு உரையாசிரியரின் கடமையாகிறது. அதேவேளை பண்பாட்டு மாற்றத்தை அளவறிந்தே செய்துள்ள விதமும் குறிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக 'வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் பெண்ணுக்கு சொல்லப்பட்டதே ஆணுக்கும் என்று ஆசிரியர்  மெனக்கிடவில்லை. அக்கனவு மெய்ப்படும் வருங்கால உரையாசிரியர்களுக்கு  அதனை முன்பதிவு செய்து வைப்பதே இயற்கையானதாய் அமையும்; ஈண்டு  அமைந்துள்ளது. மேலும், திருக்குறள் கூட அனைத்து இடங்களிலும் காலத்தைக் கடந்து யோசிக்க இயலாது என்பதை வாசகனுக்கு எங்காவது உணர்த்தத்தானே வேண்டும் !
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" என்ற இடத்தில், "இத்தகையவள் பெய் என்றவுடன் மழை பெய்யும்" என்று உயர்வுநவிற்சியாகப்  பெரும்பாலும் ஏனையோர் கூற, நம் உரையாசிரியர், "இத்தகையவள் கணவன்  விரும்பும்போதெல்லாம் பெய்யும் மழை போன்றவள்என்று இயல்பு கூட்டுகிறார். அவ்விடத்தில், "இத்தகையவள்வேண்டும் நேரத்தில் வேண்டிய அளவு பெய்யும் மழை போன்றவள்" என்று மெருகேற்றலாமோ என்று நம் சிந்தனைக்கு வித்திடுகிறார்.
          தன் காலத்தின்  பகுத்தறிவுவாதியான வள்ளுவன், பெரிதும் ஆணாதிக்க சமூகமாக இருந்த கால கட்டத்தில் ஆணுக்குச் சொன்னதை இப்போது பொதுவில் வைப்பது வள்ளுவனுக்கும் உடன்பாடாகத்தான் இருக்க வேண்டும். எனவே இவ்விடயத்தில் அவனை, காலத்தை வென்று நிற்க வைத்துள்ளது பாடபேதம் ஆகாது என்பதையும் குறித்தாக வேண்டும்.
           காலம் கருதிய பொருள் கொண்டமைக்கு மேலும் சில மேற்கோள்கள் இவ்வறிமுகவுரைக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன்.
"மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்" (அதிகாரம்: கண்ணோட்டம்; குறள் 576),
"உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு" (அதிகாரம்: ஊக்கமுடைமை; குறள் 600),
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்" (அதிகாரம்: பண்புடைமை; குறள் 997)
என்ற மூன்று குறட்பாக்களிலும் அநேகமாக உரையாசிரியர் அனைவரும் முறையே இரக்கமற்ற, உணர்வற்ற மற்றும் பண்பற்றோருக்கு  மரத்தையே உவமையாகக் கூறியுள்ளனர். இயற்கையில் மரத்தின் மேன்மை கருதிய நம்  உரையாசிரியர், வள்ளுவர் இவ்விடங்களில் கூறிய 'மரம்' என்பதை பட்டமரம், மரக்கட்டை என்றே விரிவுரைத்தமை  அவரது நுண் மாண் நுழைபுலத்திற்குச் சான்று பகர்வது.
"நும்மினுஞ் சிறந்தது நுவ்வையாகும்" என்று நற்றிணைத்தாய் (நற்றிணை பாடல் 172) தன் மகளிடம், தான் சீராட்டி வளர்த்த மரம் அம்மகளை விடச் சிறந்தது என்றும் அவளது தமக்கையாகும் என்றும் சொல்வதால், மரம் எப்படி உணர்வற்றதாகும் ?
"கரிபொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின்வாடி" என்று பாலைக்கலியில் (பாடல் 34) வருவது போல் தன் கீழிருந்து ஒருவன் பொய் சாட்சி சொன்னதால் வாடிய மரம், எப்படிப் பண்பற்றதாகும் ? இங்ஙனம் மானிடரால், குறிப்பாகத் தமிழ் சமூகத்தால் கொண்டாடப் பெறும் மரத்தின் மாண்பினை உணர்ந்து வள்ளுவரும் மேற்கூறிய குறட்பாக்களில் மரம் எனக் குறித்தது சினையாகு பெயராய் மரக்கட்டையை என்று கொள்வது, நமது உரையாசிரியர் உணர்வுபூர்வமானவர் என்று நமக்கு அடையாளப்படுத்துகிறது.
              பெண்வழிச்சேறலில்  (அதிகாரம் 91) மனைவி சொற்படி நடப்பவரைப்  பொத்தாம் பொதுவாக இழிவாகக் கூறாமல், பண்பற்ற மனைவியின் சொற்படி நடத்தலை இழிவு எனக் கூறுவது நம் கருத்தினைக்  கவர்வது.
"மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது"
என்பதில், "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்" என்று கூறும் உரைகளுக்கு மாறாக, "இல்லற சுகத்தில் அளவுக்குமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார்என்று உரையாசிரியர் .தில்லைநாயகம் அவர்கள் கூறுவது சமூகத்தில் மனையாளின் மாண்பினையும் காத்து நிற்கும் திறம்.
             வரைவின் மகளிரையும்  (அதிகாரம் 92) தற்கால நோக்கில் பாலியல் தொழிலாளர்களாக அணுகும் பாங்கினைக் காணமுடிகிறதுஅதே சமயம் அவர்களிடம் மதிமயங்குவதை  எக்காலத்திலும் நியாயப்படுத்த இயலாது என்பது மட்டுமின்றி, சில இடங்களில்  நியாயப்படுத்துதல் பாடபேதம் ஆகும் என்பதையும் உணர்ந்து கயிற்றின் மேல் திறம்பட நடக்கிறார் நம் ஆசிரியர்.
           உரைக்கான நமது அணுகுமுறையில் மூன்றாவது கோணமான தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்குமான இணக்கத்திற்கு வருவோம்.   ஆங்கிலப் பேராசிரியரான .தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற்தேடலில் பொருள் சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு. உதாரணமாக, ஜி.யு. போப் அவர்கள்,
"தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது" எனும் குறளுக்கு
"தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்" என்று தமிழ் உரையில் பொருள் கொண்டுள்ளார்இஃது "தம்மக்கள் அறிவுடைமை தம்மின் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது" என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்வதாகும்
"Their children's wisdom greater than their own confessed through the wide world is sweet to every human breast" என்று ஆங்கிலத்தில் தந்துள்ளார். இஃது "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை" என்று நேரடிப் பொருள் கொள்வதாகும். இந்த இரண்டிலும் உள்ள பொருள் வேறுபாடு நமது உரையாசானிடம் தென்படவில்லை.
              இறுதியாக நாம் கவனத்தில் கொள்ள எண்ணிய பாடபேதம் அல்லது பாடவேறுபாடு பற்றிக் கூற வேண்டுமேயானால், அது உரையில் எவ்விடத்தும் தென்படவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். பொதுவாக கவனக் குறைவாலோ அல்லது தனிப்பட்ட விருப்பு-வெறுப்பினாலோ (personal agenda) உரையாசிரியர்களிடம் பாட வேறுபாடு தோன்றுவது உண்டு. இவ்விரு குறைகளும் அற்றவர் நம் ஆசிரியர் என்பதால்தான் அவரது உரையில் பாடவேறுபாடு தோன்றாமல் போனதோ என்னவோ ! பாடவேறுபாடு என்பது ஒரு உரையாசிரியர் எத்துணைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பெரும் பெயர் பெற்ற உரையாசிரியர்களிடமே இக்குறைபாடு ஏற்படுவதால் காணலாம்.
"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
                                    (குறள் 133)
எனும் குறட்பாவில் உயர்குலம், தாழ்குலம் என்பவை ஒழுக்கத்தினால் ஏற்படும் பாகுபாடாய் வள்ளுவனாலும், ஆன்றமைந்த உரையாசிரியர்களாலும் வரையறுக்கப் பெறுகின்றன. பரிமேலழகர் உரையில் 'தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை' என்று வள்ளுவன் சுட்டாத வருணக் கோட்பாடு வலிந்து திணிக்கப்படுவதைக் காணலாம்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
                                   (குறள் 110)
எனும் குறட்கருத்து புறநானூறில் (பாடல் 34) தோன்றுகிறது. "எந்த அறம் தவறியோர்க்கும் உய்வுண்டு; செய்நன்றி அறிதல் எனும் அறம் தவறியோர்க்கு உய்வில்லை" என்பதில் "எந்த அறம் தவறியோர்க்கும்" என்று வள்ளுவன் சுருங்கச் சொல்கிறான். மேற்கூறிய புறநானூற்றுப் பாடலில் மூன்று வகையான அறப்பிறழ்வுகள் அடுக்கப் பெறுகின்றன. அதில் மூன்றாவதாக, "குரவர் தப்பிய கொடுமையோர்க்கும்" என்பது, புறநானூற்றுப் பாடலை மேற்கோளாய்க் கொள்ள வந்த பரிமேலழகரால் "பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்" எனக் குறிக்கப்படுகிறது. குரவர் என்பது மூத்தோரைக் குறிக்கும் சொல். இங்கு பெற்றோரைக் குறிப்பது. "பெற்றோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறிய கொடுமையோர்" என்பது "பார்ப்பனர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறிய கொடுமையோர்" என ஆனது. பார்ப்பார் தப்பியோர் எங்ஙனம் கொடுமையோர் ஆனார் என்பது விந்தையிலும் விந்தை. புறநானூற்றில் இப்பாடவேறுபாடு பரிமேலழகரால்தான் ஏற்பட்டதா என்பது நாம் அறியோம். அவர் காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது என்பதே நம் கருத்துபாடவேறுபாடு செய்யும் கொடுமையோராய் நம் உரையாசிரியர் பேரா..தில்லைநாயகம் துளியளவும் இல்லை என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை.
            விமர்சனப் பார்வை என்று சொல்லிவிட்டு சிறப்புகள் மட்டும்தானே இங்கு பேசப்பட்டன ? உரையாசிரியர் என் நண்பரும் குருநாதரும் என்பதாலா ? இல்லை. சான்றாண்மை தழுவிய சிறப்புகள் வாய்க்கப் பெற்றவர் என்பதாலேயே அந்தப் பூவோடு இந்த நார் சேர்ந்து கொண்டது என்பதுதான் உண்மை.
           எனவே பொய்யாமொழிக்குத்  தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. இச்சீரிய இலக்கியப் பணியை சமூகப் பணியாக சிரம் மேற்கொண்ட பேரா..தில்லைநாயகம் அவர்களுக்கு நம் பாராட்டும் வாழ்த்தும்

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.