Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கென்யாவுக்கு நீர் மேலாண்மை கற்றுத் தரும் தமிழர் - நீர்நிலை பாதுகாவலராக மாறிய பொறியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிமல் ராகவன்

பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN

 
படக்குறிப்பு,

கென்யாவிலும் நீர்நிலை புனரமைப்பு பணிகளில் நிமல் ராகவன் ஈடுபட்டுள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

நீரின்றி அமையாது உலகு என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து திருவள்ளுவர் குறள் எழுதியுள்ளார். தற்போது தண்ணீரின்றி விவசாயிகள், பொதுமக்கள் துன்பப்படும்போது இப்பிரச்னையை தீர்க்க பாடுபடுவது என்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று அழுத்தமாகக் கூறுகிறார் நிமல் ராகவன்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்த நிமல் ராகவன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நீர்நிலை புனரமைப்பில் பணியாற்றியுள்ள நிமல், தற்போது ஆப்ரிக்காவின் கென்யாவிலும் நீர்நிலை புனரமைப்புக்கு உதவி வருகிறார்.

இதுவரை 166 நீர்நிலைகளை புனரமைத்துள்ளதாகவும் 167வது நீர்நிலையாக நெடுவாசலில் உள்ள ஐயனார் குளத்தைப் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்தார்.

விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்டுள்ள நிமல் ராகவன், பொறியியல் படித்துவிட்டு துபாயில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய கஜா புயல்தான் இவரது வாழ்க்கையின் திசையையும் மாற்றியுள்ளது.

 
நிமல் ராகவன்

பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்

“துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தேன். அப்போதுதான் கஜா புயல் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

எங்கள் பகுதியில் தென்னை மரங்கள் அதிகம். கஜா புயலுக்கு பின்னர் அனைத்து தென்னைகளும் சாய்ந்துவிட்டன. மரங்கள் எல்லாம் சாய்ந்து, விவசாய நிலங்கள் சேதமாகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்," என்று அப்போது தம்மைப் போன்று விவசாயக் குடும்பங்களும் எதிர்கொண்ட சோதனைகள் குறித்து விவரித்தார்.

அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு புயலால் பாதிக்கப்பட்ட 90 கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன்.

அந்த நேரத்தில், பேராவூரணி பகுதியில் விவசாய பாசனத்துக்கும், குடி நீருக்கும் தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்த நிமல் ராகவன், "அருகிலுள்ள ஏரியைத் தூர்வாருவதன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்று நினைத்தேன். நீர்நிலை புனரமைப்பு தொடர்பான எனது பணி அப்போதுதான் முதன்முதலில் தொடங்கியது,” என்று நிமல் ராவகன் நம்மிடம் குறிப்பிட்டார்.

நிமல் ராகவன்

பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN

பெரிய குளத்தை தூர்வாருவதில் தொடங்கிய ஏரி புனரமைப்பு

கஜா புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், வாழ்வாதாரம் குறித்த பெரிய கேள்வி விவசாயிகளின் முன் இருந்தது. நெல், கடலை, உளுந்து போன்றவற்றைப் பயிரிடுவதன் மூலம் இழப்பில் இருந்து விரைவில் வெளியே வரமுடியும் என்று நிமல் நம்பினார்.

ஆனால், அப்போது அதற்கான நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை இருக்கவில்லை. இதையடுத்து பேராவூரணியில் உள்ள 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்தை தூர் வாரும் பணியில் அவர் ஈடுபட்டார்.

பெரிய குளம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கடல் போன்று விரிந்திருக்கும். 564 தன்னார்வலர்கள் இணைந்து 107 நாட்கள் பணியாற்றி குளத்தைச் சீர் செய்து நீரை நிரப்பினோம்.

இதைச் செயல்படுத்த 27 லட்சம் ரூபாய் செலவானது. பக்கத்தில் உள்ள ஊர்கள், சமூக ஊடகங்கள் மூலம் நிதியைத் திரட்டி இந்தப் பணியைச் செய்து முடித்தோம். நாங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு நிலத்தடி நீர்மட்டம் 350 அடியில் இருந்தது. குளத்தைச் சீர் செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இது 50 அடியாக உயர்ந்தது,” என்றார்.

தற்போது பெரிய குளம் ஏரி மூலம் 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வருகின்றன.

ஆறு மாதங்களில் செய்த இந்த வேலையால் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும்போது இதையே ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது என்ற எண்ணத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியதாகவும் அதன் பின்னர்தான், நீர்நிலைகள் புனரமைப்பில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியதாகவும் நிமல் குறிப்பிடுகிறார்.

நிமல் ராகவன்

பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN

நீர்நிலை புனரமைப்புக்கு சிக்கலாக விளங்கும் ஆக்கிரமிப்புகள்

தற்போது நீர்நிலைகளை புனரமைப்பதற்குப் பல்வேறு விதமாகவும் உதவிகள் கிடைப்பதாக நிமல் கூறுகிறார்.

மெகா ஃபவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை மூலம் இந்தப் பணிகளைஅ அவர் செய்து வருகிறார்.

தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அறக்கட்டளை 2021ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மேலும் நம்மிடம் அவர் பேசியபோது, நீர்நிலைகள் புனரமைப்புக்கு ஆக்கிரமிப்புகள் பெரிய தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். “நிறைய இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருப்பார்கள். நீர்நிலைகளின் மணலை அள்ளி விற்பனை செய்து வருவார்கள். நாங்கள் நீர்நிலையை புனரமைக்கப் போகிறோம் என்று சொல்லும்போது அவர்கள் மூலம் பிரச்னை வரும்.

பொதுவாக நாங்கள் ஓர் ஊரில் நீர்நிலையைப் புனரமைக்கும்போது அந்த ஊரை சேர்ந்த தன்னார்வலர்களைத்தான் முன்னிலைப்படுத்துவோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை சரி செய்ய இது உதவும். இதேபோல், காவல்துறையின் உதவியுடனும் இதுபோன்ற எதிர்ப்புகளை எதிர்கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய நிமல், “ஒரு சில இடங்களில் நீர்நிலைகளை புனரமைத்த பின்னரும் பொதுமக்கள் மீண்டும் குப்பைகளைக் கொட்டுவார்கள். கழிவு நீர் மீண்டும் நீர்நிலைகளில் கலக்கப்படுவது போன்றவை பிரச்னைகளாகத் தொடர்கின்றன,” என்றார்.

நிமல் ராகவன்

பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN

கென்யாவிலும் நீர்நிலைகள் புனரமைப்புக்கு உதவிக்கரம்

இந்தியாவின் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீர்நிலை புனரமைப்பு தொடர்பாகப் பணியாற்றியுள்ள நிமல் தற்போது ஆப்ரிக்க நாடான கென்யாவில் நீர்நிலைகள் புனரமைப்புக்கு உதவி செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கென்யாவில் உள்ள கிரீன் ஆப்ரிக்கா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு நீர்நிலை புனரமைப்பு தொடர்பாக உதவும்படி என்னிடம் கேட்டு வந்தனர்.

கொரோனா ஊரடங்கு போன்ற சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாமல் இருந்தது. கென்யாவில் மழை பொழிகிறது. ஆனால், நீரை சேர்த்து வைப்பதற்கு இடம் இல்லாததால் நிலம் வறண்டு கிடக்கிறது.

தற்போது, இதுவரை மூன்று நீர்நிலைகளைப் புனரமைத்துள்ளோம். இதுபோக, 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உல்பொலொசாட் என்ற ஏரியை புனரமைக்கவுள்ளோம். மேலும், சூடான், தான்சானியா என 8 ஆப்ரிக்க நாடுகளிலும் பணியாற்றவுள்ளோம்” என்றார்.

இலங்கையிலும் ஏரியை புனரமைப்பதற்காக நிமலுக்கு அழைப்பு வந்தது. கொரோனா, பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பதற்ற சூழல் போன்றவை காரணமாக பணிகளைத் தொடங்க முடியாமல் இருந்தது. தற்போது நிலைமை சீராகிவிட்டதால் விரைவில் தொடங்கி விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிமல் ராகவன்

பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN

துபாயில் லட்சங்களில் ஊதியம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு தற்போது நீர்நிலைகள் புனரமைப்பில் ஈடுபட்டு வருவதால் வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை நிமல் ராகவனிடம் வைத்தோம்.

அதற்கு அவர், “தொடக்கத்தில் சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டில் பணம் வாங்கித்தான் செலவை சமாளித்து வந்தேன். தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இதுபோக தற்போது நண்பன் அறக்கட்டளை நிதி அளித்து வருகிறது.

நீர்நிலைகள் புனரமைப்பு தொடர்பாக வெளியூர்களுக்குப் பயணிப்பது தொடர்பான செலவுகளை அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். கல்வி நிலையங்களுக்குச் சென்று வகுப்பு எடுத்து வருகிறேன். இதன் மூலம் பணம் கிடைக்கிறது,” என்று பதில் அளித்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு யாராவது தண்ணீரை காசு கொடுத்து பாட்டிலாக வாங்கி குடித்தால் நாம் அவர்களைப் பெரிய பணக்காரர்களாக நினைப்போம். ஆனால், தற்போது அனைவருமே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து கிடைக்கும் பல டிஎம்சி தண்ணீரைச் சேமித்து வைக்க நீர்நிலைகள் சரியாக இல்லை. அவற்றை சரி செய்வதன் மூலம் தேவைக்கும் அதிகமாக நீரை சேமித்து வைக்க முடியும்," என்கிறார் நிமல்.

"நான் நீர்நிலை புனரமைப்புப் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, ஆண்டுக்கு ஒரு போகம் விவசாயம் செய்வதாக பெரிய விஷயமாக இருந்ததாகவும் தற்போது இரண்டு, மூன்று போகம் விவசாயம் பண்ணுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் அதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நிமல் ராகவன்.

https://www.bbc.com/tamil/articles/cld9p3vlrk9o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.