Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்திரா காந்தி நிராகரித்ததை மோதி முயற்சிப்பது ஏன்? பா.ஜ.க. வியூகம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சந்தீப் ராய்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 செப்டெம்பர் 2023, 07:12 GMT
    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது, ஆனால் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் குறித்தும், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரத்தில் எழுந்த யூகங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் கூறும்போது, “இது அரசியல் சட்ட திருத்தம் மட்டுமல்ல, இதற்கு மாநிலங்களின் ஒப்புதலும் தேவைப்படும். பாஜக ஆளும் ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவையை இப்படி கலைக்கலாம். ஆனால், பிற மாநிலங்களில் சட்டப்பேரவையில் காலத்தை இப்படி குறைக்க முடியாது” என்றார்.

மறுபுறம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ தற்போது குழுதான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே இப்படி பதற்றம் அடைய வேண்டிய அவசியம் என்ன? குழு அமைக்கப்பட்டுள்ளது, பின்னர் அவர்களின் அறிக்கை தாக்கல் செய்யப்படும். நாளைக்கே இதை செய்துவிடுவோம் என்று நாங்கள் கூறவில்லையே” என இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,ANI

மத்திய அரசின் நோக்கம் என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏன் கூட்டப்படுகிறது என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது. மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, அதன்பிறகு அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பிரச்சினை ஏன் எழுப்பப்படுகிறது?

5 நாட்கள் நடைபெறும் சிறப்பு அமர்வில் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா போன்ற பிரச்னைகளும் இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆனால், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான வினோத் சர்மா, இது ஒருவகையான 'திசை திருப்பல்' என்று நம்புகிறார்.

"பாஜக தன் மீது கவனத்தை திருப்ப முயல்கிறது"

சிறப்பு கூட்டத்தொடரின் ஐந்து நாள் அமர்வு குறித்து வினோத் ஷர்மா பிபிசி நிருபர் மான்சி டாஷிடம், “பொதுமக்களை வசீகரிப்பதற்காக இத்தகைய அரசியல் செய்யப்படுகிறது. புல்லட் ரயிலாகட்டும், பெரிய திட்டங்களின் அறிவிப்பாகட்டும் அல்லது உலகின் மிகப்பெரிய சிலையாகட்டும் அரசின் அறிவிப்பு பெரிதாக இருக்கும். ஆனால் அவற்றின் இலக்கு மிக குறுகியது.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்த அரசியல் சட்டத்தை நிறைய மாற்ற வேண்டிவரும். மேலும், இது கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல், எனவே, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும். இதை தவிர்த்து இதன் பின்னணியில் பெரிய உள்நோக்கம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.” என குறிப்பிட்டார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பாஜகவின் வியூகம் குறித்து வினோத் சர்மா கூறும்போது, “எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சந்திப்பில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு பாஜக அசௌகரியமாகி, தன்மீது கவனத்தை திருப்ப முயல்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திப்பு நடத்தும்போது, சிறப்பு கூட்டத்தொடர் பற்றி அறிவிக்கிறது, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதன் பிறகு அமைதி நிலவுகிறது. சபாநாயகர் கூட அமைதியாக இருக்கிறார்” என தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசு அரசியலமைப்பு நடைமுறைகளை தனக்கு ஏற்ற வழியில் பயன்படுத்துவதில் விருப்பமாக இருக்கிறது. அதே நேரத்தில், தனக்கு இருக்கும் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகிறது. அப்படி இல்லையெனில் சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை அரசு சொல்லியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செயல்முறைகள் எப்படி இருக்கும்?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் மூத்த பத்திரிகையாளர் வினோத் சர்மா கூறுகிறார். அரசியலமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மாநிலங்களவை ஒப்புதல் பெறப்பட்டு, மாநில சட்டபேரவைகளை கலைக்க வேண்டும் என்கிறார் அவர்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பிபிசியிடம் பேசும்போது, “இந்தப் பிரச்னை முன்பு எழுப்பப்பட்டது, அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டால் இது சாத்தியமாகும்” என்று கூறினார்.

அதே நேரத்தில், மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியம் என்றும், இதற்காக அனைத்து மாநில சட்டபேரவைகளையும் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நம்புகிறார்.

இது அவர் கூறுகையில், “அரசியலமைப்பை திருத்துவதற்கு, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். மக்களவையில் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது, மேலும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற அரசாங்கம் முயற்சி செய்யலாம். ஜிஎஸ்டி விவகாரத்தில் செய்ததுபோல்” என குறிப்பிட்டார்.

ஆனால் அரசியலமைப்புத் திருத்தத்தைத் தவிர, குறைந்தபட்சம் பாதி மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் இந்த திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.

“ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த 14 மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும், பாஜகவுக்கு இது கடினமானது அல்ல. 12 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இரண்டு மூன்று மாநிலங்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றன. ஒடிசாவிற்கும் ஆந்திராவிற்கும் இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், மாநிலங்களவையில் தான் சிக்கல் ஏற்படும்” என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“காங்கிரஸ் ஆதரிக்காவிட்டால், மாநிலங்களவையில் இதனை நிறைவேற்றுவது கடினம். அதேநேரம், இந்த மசோதாவைக் கைவிட்டு, தேர்தலை சந்திப்பது என்பது காங்கிரசுக்கு கடினம்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதையெல்லாம் அரசு சமாளித்தாலும் மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்படுமா என்ற கேள்வியும் எழும்.

இது குறித்து பிரதீப் சிங் கூறும்போது, “முன்னதாக இது தொடர்பாக இரண்டு திட்டங்கள் இருந்தன. ஒன்று, இரண்டு கட்டங்களாகச் செய்யப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பும் பின்பும் நடைபெற வேண்டிய சட்டப்பேரவை தேர்தல்களை ஒன்றாக நடத்துவது. இரண்டாவது, பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசுகள் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிவிட்டு பின்னர் ஆட்சியை கலைத்துக்கொள்ள வேண்டும், மீதமுள்ள மாநிலங்களின் அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால், இதில் மீண்டும் ஒரு சட்டரீதியான சிக்கல் உள்ளது. ”

ஒரே நேரத்தில் மத்தியிலும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்றால், அதற்கு தேவையான வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதும் சவாலானது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு அதிகமாக மின்னணு வாங்கு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் தேவைப்படும்.

நாட்டின் பல பகுதிகள் மிகவும் பதற்றமானவை, அங்கு தேர்தலை நடத்தும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னெடுத்து செல்வதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு விடை தேட வேண்டும்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் யாருக்கு லாபம்?

“'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது இப்போது தொடங்கிய விஷயம் அல்ல. அதற்காக முயற்சிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டன, எனினும், இந்திரா காந்தி அதை நிராகரித்தார்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங்

ஆனால், நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

“தேர்தல்களில் கறுப்புப் பணம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், அது கணிசமாகக் குறையும். தேர்தல் நிதி திரட்டுவது என்பது கட்சிகளுக்கு மிகப்பெரிய சுமை. இதுபோன்ற சூழ்நிலையில் சிறிய கட்சிகள் பலன் பெறலாம், ஏனெனில் அவை சட்டபேரவை மற்றும் மக்களவை தேர்தல்களுக்கு தனித்தனியாக பிரசாரம் செய்ய வேண்டியதில்லை” என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் பாஜக, காங்கிரஸ் போன்ற பெரிய தேசிய கட்சிகள் இறுதியில் அதிக பலன் அடையும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுவது சிறிய கட்சிகளுக்கு கடினமாக இருக்கலாம்.

“ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கும் நன்மை என்னவென்றால், பிரதமருக்கு பிரச்சாரம் செய்ய நேரம் கிடைக்கும், மேலும் பிரசாரத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியும். பிரதமர் இன்னும் பிரபலமான முகமாக இருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அவர்கள் ஒவ்வொரு 6 முதல் 8 மாதங்களுக்கு ஒருமுறை வேர்வை சிந்தி பிரசாரம் செய்ய வேண்டியது இல்லை ” என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரே நாடு ஒரே தேர்தல் - கோரிக்கை எப்போது தொடங்கியது?

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளும் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

1983 ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணையம், அப்போதைய இந்திரா காந்தி அரசிடம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை முன்வைத்தது.

இது தொடர்பாக பிரதீப் சிங் கூறும்போது, “1999ல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, சட்ட கமிஷன் பரிந்துரைத்தது. 2014ல், பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில், அதற்கான வழியை கண்டுபிடிப்பதாக கூறியிருந்தது. அதன் பின், 2016ல், பிரதமர் மோதி, இரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்து உரக்க எழுப்பினார். அடுத்த ஆண்டு, நிதி ஆயோக் இதற்கான திட்டத்தை வகுத்தது. 2018 சட்ட ஆணையம், முழு தயாரிப்புக்குப் பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறியது. 2019-இல் மோதி மீண்டும் வெற்றி பெற்றபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டினார். இதனை காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன” என்றார்.

“2022 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. 2022 டிசம்பரில், சட்ட ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து அவர்களின் கருத்தை கேட்டது. உண்மையில், அரசாங்கம் இதற்காக நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது” என்றும் அவர் கூறுகிறார்.

எந்தெந்த நாடுகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது?

உலகில் பொதுத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படும் நாடுகள் மிகக் குறைவு.

ஐரோப்பாவில் பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலும் இது நடைமுறையில் உள்ளது. ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் இவை இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகள்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் இந்தியா முன்னேறினால், இந்த குழுவில் இணையும் உலகின் நான்காவது நாடாக நமது நாடு இருக்கும்.

இவை தவிர இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய அனுபவத்தை கொண்டுள்ளது. அங்கு, 2015 இல் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, ஆகஸ்ட் 2017 இல் ஒரே நேரத்தில் பொது தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cv21v9z59x8o

  • கருத்துக்கள உறவுகள்

தென் மாநிலங்களில் உள்ள மாநில அரசுகளை கலைப்பதட்காக போடும் திடடம்தான் இது. அநேகமான தென் மாநிலங்களில் பிஜேபி ஆட்சியில்லை. அத்துடன் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் மாநில ஆட்சி இருக்கும். அத்துடன் கருது கணிப்புகளும் பிஜேபி இட்கு சாதகமாக இல்லை. எனவே இப்படி எல்லாவற்றையும் கொண்டு வந்து விரைவாக எல்லா தேர்தலையும் நடத்த முயல்கிறார்கள். சந்திராயனை வைத்தாவது ஆட்சியை கைப்பற்றும் திடடமாக இருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் ஏதேனும் சில மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாடே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்துவது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

இதில் முக்கியமாக, தேர்தல் நடைமுறையில் இந்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்பது ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' ஆதரவளிக்கும் தரப்பினரின் கருத்தாக உள்ளது.

ஏனெனில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் புதிய திட்டங்கள், வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட எதையும் தேர்தல் முடியும் வரை அரசால் அறிவிக்க முடியாது.

தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் ஏதேனும் சில மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்பது அதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது.

அத்துடன், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால், தேர்தல் செலவுகள் வெகுவாகக் குறையும், அரசுப் பணியாளர்களை அவ்வப்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

தற்போதைய அரசியல் சூழலில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்தல் 1952ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

அப்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகும் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டது.

இருப்பினும், அதற்கிடையே இந்தத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது.

இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி 1957ஆம் ஆண்டு கேரளாவில் ஆட்சி அமைந்தது.

அந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்னமே அரசமைப்பு சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு ஆட்சியைக் கலைத்தது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால் 1960இல் கேரள சட்டமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டியதானது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ன சொல்கிறார்?

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவற்றில் முக்கியமாக, 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு, சில மாநிலங்களின் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு முன்பாக 1972இல் நடத்தப்பட்டது.

கடந்த 1967இல், பல மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

 
ஒரே நாடு ஒரே  தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா (அப்போது ஒரிசா) ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளோ அல்லது கூட்டணி ஆட்சியோ அமைக்கப்பட்டது.

ஆனால், இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டன.

இப்படியாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் மாறியது. இந்நிலையித முந்தைய அந்தத் தேர்தல் நடைமுறையை தற்போது மீண்டும் கொண்டு வர மத்திய பாஜக அரசு முயல்கிறது என்கிறார் ராவத்.

ஒரே நாடு ஒரே தேர்தல்: 'தற்போதைய சூழலில் எளிதான காரியமல்ல'

இந்தியாவில் 1967 வரை மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. எனவே அப்போது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் இருந்ததால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது எளிதாக இருந்தது.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மத்தியில் பாஜகவும், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளும் ஆட்சியில் உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்கிறார் ராவத்.

அதேநேரம், நாடாளுமன்ற மக்களவைக்கும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமா? அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது என்றும் ராவத் தெரிவித்துள்ளார்.

இவர் 2015இல், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அரசமைப்பு சட்டத்தில் என்ன திருத்தங்கள் தேவை?

ஒரே நாடு ஒரே  தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

“நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தால் முடியும் என்று மத்திய அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன், நான்கு முக்கியமான பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்போது ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது,” என்று ராவத் கூறுகிறார்.

முதலாவதாக, சட்டமன்றங்களின் பதவிக்காலம், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கிய அரசமைப்பு சட்டத்தின் ஐந்து பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மற்றும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வகை செய்யும் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்திருந்ததாக ராவத் கூறுகிறார்.

அதாவது ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்பதற்குப் பதிலாக, ‘ஆக்கப்பூர்வமான நம்பிக்கை தீர்மானம்’ என்னும்படி இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன்படி நாடாளுமன்றத்திலோ, மாநில சட்டமன்றங்களிலோ ஒரு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் ஆட்சி கவிழ நேர்ந்தால், அதன் காரணமாக நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களிலும் பதவிக்காலம் பாதிக்கப்படாதபடி, புதிய அரசு ஆட்சியைத் தொடரும் விதத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததாக ராவத் கூறுகிறார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால், தற்போதைய நிலையில் கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்கிறார் ராவத்.

கூடுதலாக எவ்வளவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை?

ஒரே நாடு ஓரே தேர்தலை செயல்படுத்த வேண்டுமானால், மொத்தம் 35 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை.

இதனடிப்படையில், தற்போதைய நிலையில் கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதே எண்ணிக்கையில் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படும்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரம் ஒன்றின் விலை தலா 17 ஆயிரம் ரூபாய். அத்துடன் இவற்றைப் பெற ஓராண்டுக்கு மேலாகும் எனவும் கூறுகிறார் ராவத்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு என அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால், தற்போதுள்ள எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படும் என்று பிபிசியிடம் கூறினார் இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி.

“நடைமுறையில் சாத்தியமில்லை”

அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் கலைக்க முடியாது என்பதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையில் சாத்தியப்படாது என்கிறார் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளரும், அரசமைப்பு சட்டத்தில் நிபுணத்துவம் மிக்கவருமான பிடீடி ஆச்சாரி.

“சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான உரிமை அந்தந்த மாநில அரசுக்குத்தான் உண்டு. ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுவது போன்ற தருணங்களில்தான் மத்திய அரசு அங்கு நடைபெற்று வரும் ஆட்சியைக் கலைக்க முடியும். ஆனால், ஒரே நேரத்தில் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் மத்திய அரசால் முன்கூட்டியே கலைக்க இயலாது,” என்கிறார் ஆச்சாரி.

எந்தவொரு மாநிலத்தின் சட்டமன்றத்தையும் அதன் பதவிக்காலத்துக்கு முன்பாகக் கலைப்பது அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானதாகவும் இருக்கும் எனவும் ஆச்சாரி கூறுகிறார்.

அதிகார மோதலும், அரசமைப்பு நெருக்கடியும்

ஒரே நாடு ஒரே  தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த 1967இல், பல மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் அது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் எனக் கருதுகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி.

அப்படியொரு நிலை ஏற்படும்போது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநில தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.

அத்தகைய சூழல், தேர்தல் நடத்தும் உரிமை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே விவாதம் எழலாம். அது அரசமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கலாம். இதுதொடர்பாக அரசமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்தால், அதன் விளைவாக மாநில அரசுகளுடன் மோதல் உருவாகலாம்.

இதைத் தவிர, தேர்தலுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி அல்லது கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை என்றால், அது மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தேர்தல் நடத்த எவ்வளவு செலவு?

ஒவ்வொரு முறை தேர்தல் நடத்துவதற்கும் செய்யப்படும் செலவும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தேவைக்கான முக்கிய காரணமாகத் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதில் உண்மை முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.

“உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் குறைந்த செலவில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக ஒரு அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது.

இதில் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், பணியாளர்களுக்கான ஊதியம், பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளம், வாக்குப்திவு இயந்திரத்துக்கான செலவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்,” என்கிறார் ஓ.பி.ராவத்.

தேர்தல் செலவுகள் தொடர்பாக கிடைக்கப் பெறும் தரவுகளின் அடிப்படையில், கென்யாவில் நடத்தப்படும் தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக 25 டாலர்கள் செலவிடப்படுகின்றன. இது உலக அளவில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் தேர்தலில் ஒன்று.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியாவில் ஒரு தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக ஒரு அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது.

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சுமார் 1.75 டாலர்கள் செலவிடப்பட்டது.

“இந்தியாவில் தேர்தலை நடத்த சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் செலவாகும். இது பெரிய விஷயமில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கின்றன.

இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. இதன் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பணம் ஏழைகளைச் சென்றடைகிறது,” என்கிறார் எஸ்.ஒய்.குரோஷி.

அரசியல் ரீதியான எதிர்ப்பு எப்படி இருக்கும்?

பேனர்கள், விளம்பரங்கள் என்று ஆட்டோக்காரர் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை தேர்தல் நேரத்தில் பல்வேறு தரப்பினருக்கும் வேலை கிடைக்கும்.

குரோஷியின் கூற்றுப்படி, தேர்தல்களின்போது சாதாரண குடிமக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களை வலியச் சென்று பார்க்கும் ஒரே சந்தர்ப்பம் இதுதான்.

சாமானியர்களும் இதை விரும்புகிறார்கள். அதாவது அரசியல் கட்சியினர் மீண்டும் மீண்டும் தங்களை நாடி வந்து பார்க்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் விருப்பமாக உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, ஒன்றரை மாதங்களுக்கு மத்திய அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முடியாது.

ஆனால், ஏற்கெனவே அமலில் இருக்கும் திட்டங்களில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதேநேரம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் எந்த பாதிப்பும் உண்டாகாது.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1983இல் எழுந்தது.

இந்திரா காந்தி கண்டுகொள்ளாத கோரிக்கை

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1983இல் எழுந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

அதன்பிறகு 1999இல், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.

அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

அதன்பிறகு, 2014 மக்களவைத் தேர்தலின்போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்திருந்தது.

தற்போது அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

அதோடு, இதுதொடர்பான மத்திய அரசு குழுவில் இடம்பெற்றிருந்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, குழுவில் இருந்து விலகியுள்ளார்.

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு முன்னெடுக்கும் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.

தலைவர்கள் எதிர்ப்பு

இதனிடையே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அண்மையில் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற எண்ணம் யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதலாகும்’ என்று விமர்சித்திருந்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதால் சாமானியர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ‘ஒரே நாடு ஒரே கல்வி’ மற்றும் ‘ஒரே நாடு ஒரே சிகிச்சை’ தான் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய மத்திய பாஜக அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது. இதுதவிர, டெல்லி சர்வீஸ் மசோதாவை மாநிலங்களவையிலும் மத்திய அரசு எளிதாக நிறைவேற்றி உள்ளது.

ஆனால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது முற்றிலும் மாறுபட்ட பிரச்னை.

அரசமைப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த இலக்கை நோக்கிய அரசின் பயணம் எளிதானது அல்ல. மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தையும் அடையலாம்.

https://www.bbc.com/tamil/articles/c80ydgnpl2wo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.