Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருதய தினம்: மாரடைப்பை தடுக்க உங்களிடம் இருக்க வேண்டிய 3 'உ'க்கள் என்ன தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இருதய தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமீப காலங்களில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருகிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 29 செப்டெம்பர் 2023, 05:28 GMT

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி 40வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன. இதற்கான காரணங்களையும், இருதய ஆரோக்யத்துக்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் சென்னை மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் பிரிவு இயக்குநர் மருத்துவர் ஜஸ்டின் பால் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி:

சமீப காலங்களில் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருவதை காண்கிறோம். இதற்கு என்ன காரணம்?

தற்போது 17-18 வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடற் பயிற்சி இல்லாததே. பள்ளிகளில் தற்போது விளையாட்டு மைதானங்கள் இல்லை. இளைஞர்கள் அதிகமான நேரம் புத்தகங்களோடு செலவிடுகிறார்கள். இரவில் 12-1 மணி வரை விழித்திருக்கிறார்கள். பள்ளி அல்லது வேலைக்கு செல்லும் ஒரு மணி நேரம் முன்பு எழுந்து அவசர அவசரமாக செல்கிறார்கள். இவை எல்லாமே மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும்.

 
இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு- காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரவு நேரங்களில் பிரியாணி, துரித உணவுகள் ஆகியை சாப்பிடுவது இருதய நோய்க்கு காரணங்கள் ஆகும்.

இளைஞர்களின் தற்போதைய உணவு பழக்கம் மாரடைப்பு ஏற்பட காரணமாக உள்ளதா?

ஒரு நாளில் நமக்கு தேவையான உணவில் 40% காலையிலும், 40% மதியமும், 20% இரவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை 5 மணிக்கு பிறகு, அதிகமான உணவை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால், இளைஞர்கள் பிரியாணி சாப்பிடுவது, துரித உணவுகள் சாப்பிடுவது என 50% உணவை இரவில் தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

நமது உணவில் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து 50% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய உணவில் கிட்டத்தட்ட 90% மாவுச்சத்து தான். தேவையான அளவு புரதச் சத்து நாம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உடல் பருமன் அதிகமாகிறது. குறிப்பாக வயிற்று பகுதியில் கொழுப்புச் சத்து சேர்கிறது. வயிற்று பகுதியில் கொழுப்பு சேரும் போது ரத்தக்குழாய்களிலும் கொழுப்பு சேரும், அவை ரத்த குழாய்களை அடைத்து மாரடைப்பு ஏற்படக் கூடும்.

 

இளைஞர்கள் பலரும் தற்போது இரவில் வெகு நேரம் விழித்திருக்கிறார்கள். இதனால் இருதய நலன் குறையுமா?

இரவிலும் பகலிலும் இருதய துடிப்புகளில் மாறுபாடுகள் இருக்கும், உடம்பில் சுரக்கும் கெமிக்கல்களில் மாறுபாடுகள் இருக்கும்.

2021-ல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் ஏழு மணி நேரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை தூக்கம் இருதய ஆரோக்கியத்துக்கு அவசியம் என்று கண்டறியப்பட்டது. ஏழு மணி நேரத்துக்கு குறைவாகவோ, ஒன்பது மணி நேரத்துக்கு அதிகமாகவோ தூங்குபவர்களுக்கு இருதய செயல்பாடு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வாரம் முழுவதும் குறைவாக தூங்கி விட்டு, சனி மற்றும் ஞாயிற்றுகிழமை அதிகமாக தூங்குவதும், அல்லது வார இறுதி நாட்களில் அதிக நேரம் விழித்திருப்பதோ இருதயத்துக்கு நல்லதல்ல.

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு- காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அதிக உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்துக்கு அவசியம் இல்லை.

உடற்பயிற்சிக் கூடங்களில் சிலர் பயிற்சி செய்திருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிக உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு ஏற்படுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இருதயத்தின் ஆரோக்யத்துக்கு அதிக உடற்பயிற்சி அவசியம் இல்லை. மிதமான உடற்பயிற்சியே போதுமானது. உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்பவர்கள், 50% கார்டியோ ட்ரேயினிங் மற்றும் 50% வெயிட் ட்ரேயினிங் செய்யலாம். அதிகமான வெயிட் ட்ரேயினிங் செய்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு பிறகு, இளைஞர்களிடம் மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளதா?

கொரோனவுக்கு முன்பிருந்தே, இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு,பொதுவாக அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகமாகி உள்ளது. அதாவது ஒரு வருடத்தில் மாரடைப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட சற்று அதிகரித்துள்ளது. Nature Medicine என்னும் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு ஒன்று இதனை உறுதிப்படுத்துகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 4 லட்சம் பேரும் 12 மாதங்களுக்கு கண்காணிக்கப்பட்டனர். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இருதய துடிப்பில் மாற்றம் போன்றவை அதிகம் ஏற்பட்டன என்பது தெரிய வந்துள்ளது.

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு- காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கொரோனாவுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதி்கமாகி உள்ளது.

கொரோனாவுக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு?

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அவருக்கு ரத்தம் உறையும் தன்மை அதிகரிக்கிறது. அதனால் ரத்த குழாய்களிலும், தமிணிகளிலும் ரத்தக் கட்டுகள் ஏற்படுகின்றன. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மற்றும் சீரற்ற இருதய துடிப்பு போன்றவை அதிகமாக ஏற்படுகின்றன.

தமிழ்நாட்டில் பிரபல நடிகர் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாள் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படும் என்ற செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மாரடைப்பு ஏற்படாது. இதனை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சத்தில் 800 முதல் 1300 பேருக்கு மாரடைப்பு ஏற்படும். கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது, அனைவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்.

இதில் அந்த 800 முதல் 1300 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மாரடைப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மிக மிக அரிதாக ஒரு லட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

 
இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு- காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வீட்டில் சுமூகமான உறவுகள் இல்லாததும் இருதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட என்ன காரணங்கள்?

மாரடைப்பு ஏற்பட சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், கொழுப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. ஆனால் இவை எதுவும் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். சென்னை மருத்துவக் கல்லூரியில் 2500 பேரிடம் மூன்று வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒருவருக்கு இது போன்று மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதுதெரிய வந்துள்ளது.

சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அளவிட முடியும். ஆனால், அளவிட முடியாத காரணிகளான உணவு, உறக்கம், உடற்பயிற்சி, உள்ளக் கட்டுப்பாடு சரியாக இல்லாததே இதற்கு காரணங்கள் ஆகும்.

மன உளைச்சலால் இருதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதா?

கண்டிப்பாக உள்ளது. பெற்றோர்களுக்கும், குழந்தைக்கும் சுமூகமான உறவு இருக்கும் போதும், கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு இருக்கும் போதும், மாரடைப்பு, இருதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, மன்னிக்கும் தன்மை இல்லாதது ஆகியவை இருதய நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. யார் மீதாவது கோபம் இருந்தால், அதை விட்டுவிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு- காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாரடைப்பு ஏற்படும் பெண்களில் ஆண்களை விட இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதில் ஆண் பெண் வித்தியாசங்கள் உள்ளனவா?

மாரடைப்பு ஏற்படும் பெண்களில் ஆண்களை விட இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது என்பது சென்னை மருத்துவக் கல்லூரியில் 2500 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், பெண்கள் அதிகமானோர் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனைக்கு வருவதில்லை.

பொதுவாக பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. கணவர், அல்லது பிள்ளை இரவில் வீட்டுக்கு வந்த பின், அவர்களுக்கு உணவு பரிமாறிய பிறகு தான் சாப்பிட வேண்டும் என்று பெண்கள் இருக்கக் கூடாது. தங்கள், உணவு, உறக்கம் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகள் என்ன?

வித்தியாசமான நெஞ்சு வலி, வேகமாக நடக்கும் போது ஏற்படும் நெஞ்சு வலி, அதிகமான வியர்வை, திடீர் படபடப்பு ஆகியவை மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும்.

 

மாரடைப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டால், அந்த நபர் தானே கார் அல்லது பைக் ஓட்டி மருத்துவமனைக்கு வரலாமா?

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் எந்த முறையில் மருத்துவமனைக்கு வந்தார்கள் என ஆய்வு ஒன்று செய்யப்பட்டது. சிலர் ஆம்புலன்ஸ் மூலம், சிலர் வாகனங்கள் மூலம், சிலர் நண்பர்கள் உடன் வந்திருந்தார்கள். அதில் ஆம்புலன்ஸ் மூலம் வந்தவர்கள் குறைவான நேரத்தில் மருத்துவமனையை அடைந்து விட்டனர், மேலும் ஆம்புலன்ஸ் மூலம் வந்தவர்களில் தான் அதிகமானோர் உயிருடன் இருந்தார்கள். எனவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருந்தால், உடனே ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு ஏற்படுமா?

ஆம். சர்க்கரை நோயாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம். நரம்புகள் சரியாக வேலை பார்த்தால் தான் அறிகுறிகளை உணர முடியும். அவர்களுக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் மற்றவர்களை போல அறிகுறிகள் ஏற்படாது.

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு- காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அனைவரும் ஒரு நாளுக்கு 30-40 நிமிடங்கள் வேகமாக நடப்பது இருதயத்துக்கு மிக நல்லது.

இருதய நோய்களை தவிர்க்க எல்லாரும் செய்ய வேண்டியது?

ஆரோக்யமான இருதயத்துக்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது மூன்று ‘உ’. உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, உள்ளக் கட்டுப்பாடு. நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் 10% குறைத்தால் கூட உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மாதத்தில் ஒரு கிலோ எடையை குறைக்க முடியும். அனைவரும் 30-40 நிமிடங்கள் ஒரு நாளுக்கு நடப்பது மிக மிக நல்லது. யார் மீதாவது கோபம் இருந்தால் அதை உடனே விட்டு விடுங்கள். அது உங்கள் இருதயத்துக்கு நல்லது. இவை எதுவும் மருத்துவர் கையில் இல்லை. உங்கள் கையில் தான் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c0kxg7814neo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.