Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப் - ராணுவத்தை சமாளித்து நாட்டை சிக்கலில் இருந்து மீண்டும் மீட்பாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தர்ஹாப் அஸ்கர்
  • பதவி, பிபிசி உருது
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார்.

2019-ல் மருத்துவச் சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில், பாகிஸ்தானின் அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலை உட்பட பல விஷயங்கள் மாறிவிட்டன.

கடந்த நான்கு வருடங்களில் அரசியல் கட்சிகளின் கதைகள் மட்டும் மாறாமல் அரசாங்கங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில நிறுவனங்கள் வலுப்பெற்றபோது, நம் கையில் எதுவும் இல்லை என்று எங்கிருந்தோ குரல் வந்தது.

இத்தனை மாற்றங்கள் இருந்தாலும், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பிய பிறகு, நிலைமை நன்றாக மாறும் என்று முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், நவாஸ் ஷெரீப்பின் அரசியல் வரலாறு மற்றும் தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டால், அவருக்கு வரவிருக்கும் காலம் எளிதானது அல்ல என்று அவரது அரசியல் எதிரிகள் நம்புகிறார்கள்.

ஆனால், நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பியுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாகிஸ்தானை விட வித்தியாசமான சூழலை சந்திக்க நேரிடும் என்பது ஒன்று நிச்சயம்.

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பின் தாய்நாடு திரும்பினார்.

நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில ஆண்டுகளில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியலிலும் மட்டுமின்றி, நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலில் ராணுவம் தலையிடுவதாகக் குற்றம்சாட்டி, 'மக்களாட்சியை மதியுங்கள்' என்ற முழக்கத்தை நவாஸ் ஷெரீப் முன்வைத்தார்.

2018 இல், நவாஸ் ஷெரீப்பும் அவரது மகளும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற பிறகு சிறைக்குச் சென்றனர். பின்னர் அவரது மனைவி குல்சூம் நவாஸ் மரணமடைந்தார். அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்தது.

2019 ஆம் ஆண்டில், நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்ற நிலையில், தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்தார். மேலும், லண்டனில் இருந்தபடியே பாகிஸ்தானின் அரசியலில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர் அவரது அரசியல் போட்டியாளரான இம்ரான் கானின் கட்சியுடனான உறவுகளில் பெருமளவில் விரிசல் ஏற்பட்டது. இது போன்ற நிலையில், தெஹ்ரீக்-இ-இன்சாப்பும் ராணுவமும் இணைந்து செயல்பட்டன என்ற வாதமும் முடிவுக்கு வந்தது.

இந்த காலகட்டத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உட்பட நாட்டின் பதின்மூன்று அரசியல் கட்சிகள், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பிடிஎம்) பதாகையின் கீழ் இம்ரான் கானுக்கு எதிராக செயல்பட்டன.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் கூட்டங்களில் உரையாற்றிய பெரும்பாலான நேரங்களில், நவாஸ் ஷெரீப் அப்போதைய ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் டிஜி, ஐஎஸ்ஐ லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீது மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பின்னர் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது கட்சியின் அரசியல் அறிக்கைகளில் மாற்றம் தென்படத் தொடங்கியது. நாட்டின் மோசமான பொருளாதார நிலைக்கு அப்போதைய அரசைப் பொறுப்பாக்கி அரசியலில் ராணுவம் தலையிடுவதாக குற்றம் சாட்டிய அதே கட்சி, ஜெனரல் பாஜ்வாவின் பதவி நீட்டிப்புக்கு ஆதரவளித்தது.

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வரும் நாட்களில் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் பாகிஸ்தான் அரசியலின் மையப்புள்ளிகளாகத் திகழ்வார்கள் என கருதப்படுகிறது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த முஸ்லிம் லீக் (நவாஸ்)

ஏப்ரல் 2022 இல், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது, முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி பி.டி.எம். கூட்டணி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றது.

முஸ்லீம் லீக்கின் மோதல் பாணி ஒரு சமரச பாணியாக மாறிய அதேநேரத்தில் இம்ரான் கான் ராணுவத்துடனான சமரசக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.

வரலாறு மீண்டும்மீண்டும் மாற்றத்துக்கு உட்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2018ல் முஸ்லீம் லீக்கிற்கு (நவாஸ்) என்ன நடந்ததோ, அதுதான் இப்போது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கும் நடக்கிறது.

அரசியல் ஆய்வாளர் அஸ்மா ஷிராசி கூறுகையில், "முன்பு நடந்தது எல்லாம் வெளிப்படையாகவே இப்போதும் நடக்கின்றன. ஒரே வித்தியாசம் அரசியல் கதாபாத்திரங்கள் மாறிவிட்டன. இந்த விளையாட்டில் அரசியல் கட்சிகள் மட்டுமே பலவீனமடைந்துள்ளன" என்றார்.

இந்த முழு செயல்முறையிலும் முஸ்லீம் லீக் (நவாஸ்) அணுகுமுறை மற்ற சக்திகளை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசியல் ரீதியாக வலுவாக இருந்து, தனது கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால், அவரது நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் அவர் வேறு ஒரு பாதையை நோக்கிச் செல்வதற்கு முன்னுரிமை அளித்தார். இந்நிலையில், தற்போது நவாஸ் ஷெரீப் மீண்டும் 2018 இல் நடித்த அதே பாத்திரத்தில் நடிக்கிறார்," என்றார்.

பிடிஐயை சேர்ந்த சுல்பி புகாரி கூறுகையில், “மக்கள் பலத்துடன் ஆட்சிக்கு வந்தோம், இன்றும் யார் தலையீடும் இல்லாமல் தேர்தல் நடந்தால் தெஹ்ரீக்-இ-இன்சாப் வெற்றி பெறும்,” என்றார்.

பாகிஸ்தான் மக்களின் நலன்

முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவர் அஹ்சன் இக்பால், முஸ்லீம் லீக் நவாஸ் செய்ததெல்லாம் தனக்காக அல்ல என்றும் பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக என்று கூறுகிறார். “இதை நாங்கள் செய்யாமல் இருந்திருந்தால், இம்ரான் கானின் தவறான கொள்கைகளால் நாடு திவாலாகியிருக்கும். அதனால்தான் எங்கள் அரசியலை விட பாகிஸ்தானுக்கு முன்னுரிமை கொடுத்தோம்.”

அதேசமயம், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த நதீம் அப்சல் கூறுகையில், "இரு கட்சிகளும் தங்கள் சுயநலத்திற்காக பாகிஸ்தானின் ஜனநாயக அமைப்பை மேலும் பலவீனப்படுத்திவிட்டன," என்றார்.

ஆய்வாளர் வஜாஹத் மசூத் கூறுகையில், "பாகிஸ்தானின் வரலாற்றைப் பாருங்கள். இன்று இதுதான் நடக்கிறது. அதிகார வெறி கொண்ட அரசியல் கட்சிகளை ராணுவம் மற்றும் நீதிமன்றங்கள், அதிகாரத்துவம் உள்ளிட்ட பிற அமைப்புகள் ஒன்றுக்கொன்று பயன்படுத்திக்கொண்டன. அவர் ராணுவத்துடன் இணைந்து ஒரு இளைய சகோதரராகப் பணியாற்றுகிறார்.

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாட்டின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு எதிர்காலத்தில் குறையுமா என பொதுமக்களும், அரசியல்வாதிகளும் எதிர்பார்க்கின்றனர்.

"நாட்டின் அரசியலில் ராணுவத்தின் பங்கு மாறும்"

பாகிஸ்தானின் அரசியல் என்று வரும்போது, ராணுவத்தின் பெயர் மீண்டும்மீண்டும் குறிப்பிடப்படுகிறது. ராணுவத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் மறுத்து வருகிறது. பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் தலையீடு இல்லை என்று பலமுறை கூறப்பட்டு வருகிறது.

ஆனால், 23 நவம்பர் 2022 அன்று தனது பிரியாவிடை உரையில், முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, கடந்த எழுபது ஆண்டுகளாக அரசியலில் ராணுவம் தலையிடுவதால் ராணுவம் விமர்சிக்கப்படுகிறது, இது 'அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது' என்று கூறியிருந்தார். இருப்பினும், 2021 பிப்ரவரியில், எந்த சூழ்நிலையிலும் ராணுவம் எதிர்கால அரசியலில் தலையிடாது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், ராணுவம் அரசியலில் தலையிடாது என பலமுறை கூறி வருகிறார்.

2022ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கானின் பிடிஐ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, அரசியலில் ராணுவம் தலையிடுவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த நேரத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரிடமிருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை. மேலும் அவர்கள் 'வாக்கை மதியுங்கள்' என்ற கதையை மீண்டும் கையில் எடுக்கவில்லை.

மே 9ஆம் தேதி ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் வெளிப்படையாக அறிவித்தது.

இதற்குப் பிறகு, பிடிஐக்கு எதிரான ஒடுக்குமுறையில் ராணுவம் செயல்பட்டது. அதை நாட்டில் அறிவிக்கப்படாத ராணுவச் சட்டம் என்று அக்கட்சி விமர்சித்தது.

நிச்சயமாக ராணுவம் முன்பை விட பலமாகிவிட்டது. இதற்கான உதாரணங்கள் அண்மைக் காலங்களில் பார்க்கப்படுகின்றன. மே 9 சம்பவங்களில் தேடப்பட்டபோது காணாமல் போன தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பின்னர் தொலைக்காட்சி திரைகளில் தோன்றியுள்ளனர். சதக்கத் அப்பாஸி, உஸ்மான் தார் மற்றும் ஃபரூக் ஹபீப் போன்றவர் தலைவர்கள் அனைவரும் தங்கள் முந்தைய நிலைப்பாட்டை விட்டுவிட்டு, மே 9 ஆம் தேதி தாக்குதலுக்கு இம்ரான் கானை பொறுப்பேற்க வலியுறுத்தினர்.

இது குறித்து முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் அஹ்சன் இக்பால் கூறுகையில், ராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காப்பாற்ற முடியாது என்றார்.

அரசியலில் ராணுவத்தின் பங்கு குறித்து வஜாஹத் மசூத் கூறுகையில், "முதலில் நவாஸ் ஷெரீப்பை பதவியில் இருந்து அகற்றி, ராணுவம் தனது விருப்பப்படி இம்ரான்கானை ஆட்சிக்கு கொண்டு வந்தது, இம்ரான் கானை வெளியேற்றியதன் மூலம் ராணுவம் முன்பை விட பலம் அடைந்துள்ளது,” என்றார்.

இம்ரான் கான் பதவிக்கு வந்ததை அரசியல் சக்திகளால் தடுக்க முடியவில்லை என்றும், இம்ரானை பதவி நீக்கம் செய்ததில் எந்த ஜனநாயக இயக்கத்திற்கும் பங்கு இல்லை என்றும் அவர் கூறினார். பொருளாதார அமைச்சகம், தேசிய தரவு மற்றும் பதிவுத் தளம், மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மீது ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இதுபோன்ற அனைத்து இடங்களிலும் ராணுவம் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ராணுவ மேலாதிக்கத்தை வலுப்படுத்த மே 9 ஆம் தேதி சம்பவம் உண்மையில் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். "பொருளாதாரத்தின் தேவைகள் நாட்டின் திசையில் மாற்றத்தை கட்டாயப்படுத்தும் என்பது தான் ஒரே நம்பிக்கை. இன்றைய பாகிஸ்தான் முழுமையான, அறிவிக்கப்படாத ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது."

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அரசியல் கட்சிகளை எதிர்ப்பதை விட நவாஸ் ஷெரீப் வரும் நாட்களில் பொருளாதாரம் பற்றியே அதிகம் பேசுவார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானின் பொருளாதாரம்

பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் என்பது தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் ராணுவத்திற்கு முக்கியமான ஒரு மாற்றம். ஆனால் அதே ஆதாரத்தின் அடிப்படையில் அரசியல் நகர்வுகளும் வரும் நாட்களில் இயங்கும் என்பது நிபுணர்களின் கருத்து.

2015 வரை பாகிஸ்தான் தற்போதைய பொருளாதார நிலையை விட சிறந்த நிலையில் இருந்தது. முஸ்லீம் லீக் (நவாஸ்), பிபிபி (PPP) மற்றும் பிற அரசியல் கட்சிகள் இம்ரான் கான் மற்றும் அவரது பொருளாதாரக் கொள்கைகளைக் குற்றம் சாட்டுகின்றன. அதே நேரத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் 18 மாதங்கள் ஆட்சியில் இருந்த ஷாபாஸ் ஷெரீப்பின் அரசைக் குறைகூறுகிறது.

இந்த நேரத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம் தான் அனைத்து அரசியல் முடிவுகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்பது உண்மைதான் என ஆய்வாளர் அஸ்மா ஷிராசி கருத்து தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீப் எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கைகள் விடுவதை விட்டுவிட்டு பொருளாதாரம் சார்ந்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கூறினார். "ஆனால், அரசியல் சட்டத்தின் மேலாதிக்கத்தை அவர் எப்படித் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவருக்கு ஒரு பெரிய சவால்."

முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவர் அஹ்சன் இக்பால் கூறுகையில், நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை இதற்கு முன்பும் சிக்கலில் இருந்து மீட்டெடுத்தார் என்ற நிலையில், இப்போதும் அவர் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சரிசெய்வார் என்றார்.

தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் சுல்பி புகாரி கூறுகையில், "பாகிஸ்தான் இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பு ஷாபாஸ் ஷெரீப் அரசை நோக்கிச் செல்கிறது. கோவிட் போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நாங்கள் கட்டுக்குள் வைத்திருந்தோம்," என்றார்.

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டின் நீதித்துறையும் மாறிவிட்டதா?

நீதித்துறை மற்றும் பாகிஸ்தான் அரசியலின் பாதைகள் எப்போதும் ஒன்றாகவே தொடர்கின்றன என்பதை வரலாற்றின் பக்கங்கள் காட்டுகின்றன. நீதித்துறை எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் விமர்சிக்கப்பட்டும், சில சமயங்களில் சில குழுக்களால் பாராட்டப்பட்டும் வந்திருக்கிறது. இந்த போக்கு இன்றும் தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்தால், நீதித்துறையின் பங்கும் ஆய்வுக்கு உட்பட்டது. இங்கும் அரசியல் கட்சிகள் மாறினாலும் எதிர்ப்புகள் அப்படியே இருக்கின்றன.

நீதித்துறை இம்ரான் கானை ஆதரிப்பதாக முதலில் முஸ்லீம் லீக் (நவாஸ்) குற்றம் சாட்டியது. இப்போது தெஹ்ரீக்-இ-இன்சாப் நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கவில்லை என்று புகார் கூறுகிறது.

இது குறித்து ஆய்வாளர் வஜாஹத் மசூத் கூறும்போது, "அரசியல் சூழலுக்கு ஏற்ப நீதிமன்றத்தின் திசையே மாறுகிறது. இதுபோன்ற பல வழக்குகளை உள்ளடக்கிய வரலாறு பாகிஸ்தான் நீதித்துறைக்கு உண்டு," என்றார்.

முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டதைக் குறிப்பிடுகையில், "நாட்டின் அரசியல் அமைப்பில் தலையிடுபவர்களுடக்கு எங்கள் நீதித்துறை ஆதரவாக இருந்தது என்பதுடன் அது எப்போதும் சதி நாடகம் ஆடி வருகிறது," என்று கூறுகிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய பிபிபி தலைவர் நதீம் அப்சல், “கடந்த காலங்களில் நவாஸ் ஷெரீப் நீதித்துறையை ஆதரித்துப் பேசிவந்தார். ஆனால், அவரே தற்போது நீதித்துறையை விமர்சிக்கிறார். எதையும் தீர்மானிப்பது காலம் மட்டுமே என்ற பேச்சு உள்ளது," என்றார்.

நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் பாகிஸ்தானில் அரசியல் லாபங்கள் அடையப் பெறுவதாகவும், ஜனநாயக விரோத செயல்பாட்டின் தந்திரங்களைப் பயன்படுத்தி தலைவர்கள் அதிகாரத்திற்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாகிஸ்தானில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிற கட்சிகள் மீது பொறுப்புக்களைத் திணித்து வருகிறது.

பாகிஸ்தான் அரசியலில் வரவிருக்கும் மாற்றங்கள்

அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுடன், சமூகம் மற்றும் மக்களின் அணுகுமுறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று, பாகிஸ்தானின் வாக்காளர்கள் முன்பை விட அதிக அரசியல் புரிதலுடன் அரசியல் விஷயங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதில் ஏராளமான இளைஞர்களின் பங்கு அதிகரித்துள்ளது.

இதனுடன், எதையும் புரிந்துகொள்வதில் தாராள மனப்பான்மை இல்லாதது மற்றும் அரசியல் பாகுபாடும் அதிகரித்துள்ளது.

முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவர் அஹ்சன் இக்பால், இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டதற்கு இம்ரான் கான் மீது குற்றம் சாட்டுகிறார். மேலும் சமூகத்தில் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்குப் பதிலாக அதைக் குறைத்துள்ளார் என்றும் அவர் கூறுகிறார். “ஏனெனில் அவர் அரசியலில் வெறுப்பு மற்றும் மோசமான நடத்தை கலாச்சாரத்தை எப்போதும் ஊக்குவித்துவருகிறார்."

ஆனால், தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் சுல்பி புகாரி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, "உண்மையான பிரச்னை என்னவென்றால், பாகிஸ்தானின் வாக்காளர்கள் இப்போது அறிவாளியாகிவிட்டனர். எந்த தலைவர் இந்த நாட்டிற்கு எவ்வளவு சேதம் விளைவித்தார் என்பது அவர்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். தனது எதிர்காலத்தை தானே தீர்மானிக்க வேண்டும். ஒரு பிரபலமான தலைவரை சிறையில் அடைத்து பொதுத்தேர்தலை நடத்த நினைத்தால், வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரும் குரல் எழுப்புவார்கள். மக்களின் விருப்பத்தை புறக்கணித்து இதை செய்ய முடியாது. நாடு சரியான திசையில் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்," என்றார்.

அனைத்து அரசியல் வெறுப்பின் விளைவாகத் தான் பாகிஸ்தான் சமூகம் மிகவும் பிளவுபட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வஜாஹத் மசூத் கூறுகையில், “தலைவர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறமையற்றவர்கள் என்று பாகிஸ்தான் மக்களுக்கு 1958 முதல் சொல்லப்பட்டு, விளக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறது. மதத் தலைவர்கள், நாளிதழ்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் பொதுத் தலைவர்கள் மூலம் இப்படி ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.

"பெரும்பான்மையான மக்கள் அரசியலைக் கண்டு சலித்துவிட்டனர். அவர்கள் ஒரு மீட்பர் வந்து தங்கள் கடனைத் தள்ளுபடி செய்வார் என்றும், தங்களிடம் இருந்து வரி வசூலிக்காமல், பொருட்களை மலிவாக அளிப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானியர்கள் கடந்த காலத்தில் நசீம் ஹிஜாஸி மற்றும் சக்லைன் ஷா போன்ற கதாபாத்திரங்களின் மீது பைத்தியமாக இருந்தபோது, இன்று அவர்கள் உமைரா அகமதுவைப் படித்து காசிம் அலி ஷாவைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

 
நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரீப்பின் அரசியலில் மாற்றம் நிச்சயம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நவாஸ் ஷெரீப்பின் அரசியலிலும் மாற்றம் வருமா?

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது அரசியல் பற்றிப் பேசிய ஆய்வாளர் வஜாஹத் மசூத், நவாஸ் ஷெரீப்பின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கட்சியில் அவரது பிடி முன்பு போல் இருக்காது என்று கூறினார்.

பிடிஐ ஆதரவாளர்களான அவர்கள் வலுவான எதிர்க்கட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கருதுகின்றனர். பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அடிப்படை முடிவுகளைக் கோருகின்றன. நவாஸ் ஷெரீப் இதை செய்ய முடியாது. அரசியலில் ராணுவத்தின் தலையீடு காரணமாகத் தான் கடந்த காலங்களில் கூட, நவாஸ் ஷெரீப் ராணுவத்துடன் மோதினார். பொருளாதாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்குள் மோதல் தவிர்க்க முடியாததாகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர், நவாஸ் ஷெரீப்புக்கு எதிர்காலம் எளிதாக இருக்காது என்று கருதுகின்றனர்.

இதுபற்றி நதீம் அப்சல் கூறும்போது, “நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்த பிறகு, எல்லாவற்றையும் முழுமையாகக் கட்டுப்படுத்த விரும்பினார். அது இந்த நாட்டில் சாத்தியமில்லை. இதுவே முதல்முறையாக அவர் ஆட்சியில் இருந்து விலக காரணமாக அமைந்தது," என்றார்.

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு நீண்ட காலம் சமரச அரசியலைச் செய்ய முடியாது என்று நதீம் அப்சல் நம்புகிறார், ஆனால் "ஒரு கட்டம் வரை ராணுவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்." என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/czrwwmd3g77o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நவாஸ் ஷெரீப்: கெபினெட் அதிரடி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 2018இல், “அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ்” (Avenfield Properties) எனும் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்நாட்டு பஞ்சாப் நீதிமன்றம், 10 வருட சிறை தண்டனையும், இவ்வழக்கில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்துடன் (National Accountability Bureau) ஒத்துழைக்காதற்காக 1 வருட சிறை தண்டனை என மொத்தம் 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதே வருடம் அல்-அசிசியா எக்கு தொழிற்சாலை ஊழல் வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் 2019 இல், மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டி அனுமதி கேட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போதிலிருந்து நவாஸ் ஷெரீப் அங்கேயே வசித்து வந்தார்.

சுமார் 4 வருடங்கள் கழித்து நவாஸ் ஷெரீப், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு திரும்பினார். அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரை முன்னிறுத்த அவரது கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று, அவருக்கான தண்டனையை செயலாக்குவதை அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாகிஸ்தானின் காபந்து அரசாங்க கெபினெட் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார்.

இது நவாஸ் ஷெரீப்பின் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/278381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.