Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 56 நிமிடங்களுக்கு முன்னர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் இப்போது ஏன் சர்ச்சையாகியிருக்கிறது?

 
ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு

ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்துஓ.என்.ஜி.சி நிறுவனம், இந்தத் திடத்திற்காகத் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வட்டத்திலும் சோதனைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் இதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 
ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம்,PROFEESOR JAYARAMAN

படக்குறிப்பு,

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்

‘விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்’

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய சோதனை கிணறுகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி அளிக்க கூடாது, என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் காவிரி படுகை முழுவதும் அறிவிக்கப்படவில்லை. கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விளையும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதியில் தலா 5 புதிய கிணறுகள் என மொத்தம் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு அனுமதி தர மறுத்து விண்ணப்பங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே முடிவை ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்,” என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும், என்றார் பேராசிரியர் ஜெயராமன். “ஆனால் அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பல முன்னுதாரணங்கள் முன் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார்.

மேலும் பேசிய அவர், "கடந்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்த இடங்களில் குழாய் மற்றும் சிமெண்ட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறதாகவும், அதனால் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே அரசுக்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோள்" எனவும் தெரிவித்தார்.

 

புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 30க்கும் மேற்பட்ட எண்ணெய் எரிவாயு கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாகக் கிணறுகள் தோண்டப்படுவதால் என்ன பிரச்னை ஏற்படப் போகிறது?

இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜெயராமன், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணறுகளில் ஆழம் குறைவாக இருப்பதால் தளர்வான பகுதியில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது என்றும், இதனால் பூமிக்கு அடியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறினார்.

“ஆனால், தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி ஒரு ரசாயனக் கலவை பூமிக்குள் செலுத்தப்பட்டு நிலத்தடியில் இருக்கக் கூடிய வண்டல் பாறை, களிப்பறை ஆகியவை செயற்கையாக நொறுக்கப்பட்டு எண்ணெய் மற்றும் மீத்தேன் எரிவாயு வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூமிக்குள் செலுத்தப்படும் இந்த ரசாயனங்கள் அபாயகரமானவையாக உள்ளன,” என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த நொறுக்குதல் முறையைச் செயல்படுத்த, மண்ணுக்கு அடியில் செலுத்துவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றார். “இதனை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் விவசாயம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும்,” என்றார்.

ஹைட்ரோகார்பன்
படக்குறிப்பு,

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள்

அதேபோல், மண்ணுக்கு அடியில் செலுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் போது, அது முழுமையான வெளியே வராமல் மண்ணுக்கு அடியில் தங்கி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றார். மேலும், வெளியே வரும் நீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலந்து அதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படும், என்றும் கூறினார்.

“டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணர்ந்ததால் மக்கள் போராடி இந்த திட்டங்களை கைவிட முயற்சி செய்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை செயல்பட்டு வரும் எரிவாயு கிணறுகள் பாதிப்பு ஏற்படாததால் மக்கள் அதனுடைய ஆபத்துகளை இன்னும் உணராமல் இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது செழிப்படைந்து வருவதால் இங்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது,” என்றார் பேராசிரியர் ஜெயராமன்.

 
ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம்,FACEBOOK/SUNDARRAJAN

படக்குறிப்பு,

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்

‘புதிய கிணறுகளுக்கான கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்’

தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் தெரிந்தும் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியதை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும், என்றார்.

“மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளைத் தளர்த்தி மாநில அரசின் அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை புதிதாக அமைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் எங்கும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என்றார்.

மேலும், “தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரியுள்ளதை பார்க்கும் போது மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் புதிய கிணறுகளை தமிழகத்தில் அமைத்திட அனுமதி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அனுமதி கோரி இருப்பதாக தோன்றுகிறது,” என்றார் சுந்தர்ராஜன்.

ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் நிபுணர் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது, என்று கூறிய அவர், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

 
ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம்,NAVASKANI

படக்குறிப்பு,

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி

‘ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்’

இது குறித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழக அரசு நிச்சயமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு எரிவாயு கிணறுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வரும்அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு அனுமதி நிராகரித்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நீதிமன்றத்தின் வாயிலாக புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி பெற்று கிணறுகள் அமைத்தால் மக்களை ஒன்று திரட்டி அதை தடுத்து நிறுத்துவோம். ராமநாதபுரம் மாவட்டம் மண்ணில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விடமாட்டோம்,” நவாஸ்கனி தெரிவித்தார்.

 
ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம்,MEYYANATHAN

படக்குறிப்பு,

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்

‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’

இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனுடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதிப்பதில்லை, என்றார்.

“தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதால் டெல்டா மாவட்டத்தை தவிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்,” என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி இருந்தததாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறினார். தற்போது அதே 20 கிணறுகளை புதிதாக அமைத்திட அனுமதி கோரியுள்ளனரா, அல்லது வேறு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து விட்டு தெரிவிப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cx91ljpgjjxo

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமநாதபுரம்: 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு அமைக்க அனுமதி அளித்தது யார்? அடுத்தது என்ன?

ஹைட்ரோகார்பன் திட்டம்

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 25 ஆகஸ்ட் 2025, 03:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்தக்கட்டமாக, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து, இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், அந்த மாவட்டமே 'மொத்தமாக அழிந்துவிடும்' என கவலையை வெளிப்படுத்துகின்றன, விவசாய, மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள்.

ஆனால், மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு - என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தின் காவிரி படுகையில் உள்ள 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதற்கு அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.2023 அன்று விண்ணப்பித்தது. அப்போதே தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

விவசாயம்

படக்குறிப்பு, இத்திட்டம் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் (சித்தரிப்புப்படம்)

மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் (HELP - Hydrocarbon Exploration Licensing Policy) அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது (OALP) ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக சுமார் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகளை, கிணறு ஒன்றுக்கு உத்தேசமாக ரூபாய் 33.75 கோடி செலவில் ரூபாய் 675 கோடி ரூபாய் செலவில் தோண்ட திட்டமிட்டு சோதனை கிணறுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்து.

மத்திய அரசு, சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16, ஜனவரி 2020ல் வெளியிட்ட அரசாணையின் படி, முன்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு "ஆய்வு" கிணறுகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்த முறையை மாற்றி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் வகையில் திருத்தம் செய்தது. அதன்படி, பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

அதாவது, கடலுக்குள் அல்லது கடலுக்கு வெளியே அமைக்கப்படும் இத்தகைய சோதனை ஆய்வு கிணறுகள் B2 பிரிவின் கீழ் வருகிறது, இத்தகைய B2 பிரிவு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு தேவையில்லை என்பது தான் அந்த திருத்தம்.

ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய 20 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் 2,000-3,000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்பது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். 'B' பிரிவு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக இது உள்ளது.

ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன?

ஓஎன்ஜிசியின் முன்மொழிவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஓஎன்ஜிசி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த கிணறு துளையிடும் பணிக்கான அனுமதி என்பது தற்காலிகமானது தான் என்றும் எண்ணெய் அல்லது வாயு கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் எச்சங்களும் கழிவுநீரும் முறையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி எண்ணெய் வளம் உள்ளதா என்று தேடுவதற்கு மட்டுமே, வணிக ரீதியிலான பணிகளுக்கு தனியாக சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும்.

அப்படி, அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அந்த 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.

'கடல்வளம் அழியும்'

ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்வளம் அழிந்துபோகும் என்கிறார், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி.

இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளில் சில பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்கரையிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பகமாக (Biosphere Reserve) உள்ளது.

"இத்திட்டத்தின்படி, தொண்டி முதல் ஏர்வாடி வரையில் 20 கிணறுகள் வரவுள்ளன. நிலையான மீன்வளத்துக்கான தீர்வுகளை ஆராய்ந்து வரும் சூழலில் அதற்காக நடவடிக்கை எடுக்காமல் கடல் வளம், மீன்வளத்தை அழிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

ஹைட்ரோகார்பன் திட்டம்

படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் வளம் குறைந்து போயுள்ளதால், எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படும் சூழலில் இது பிரச்னைகளை மேலும் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.

"மீன்கள் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டம் அளிக்கிறது. அப்படியான சூழலில் கடல் வளத்தை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். நிலத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஒருசில பகுதிகளுக்கு தான் இருக்கும், கடலில் பாதிப்பு என்றால் பல நூறு கிலோமீட்டருக்கு பாதிப்பு ஏற்படும்." என நல்லதம்பி கூறுகிறார்.

கடலில் வாழும் ஃபைட்டோபிளாங்டன் எனும் நுண்ணிய தாவரம் உலகுக்கு ஆக்சிஜனை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் செயல்முறையில் இந்த ஃபைட்டோபிளாங்டன் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆக்சிஜன் குறையும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

'விவசாயம் பாதிக்கப்படும்'

இத்திட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலைச்சாமி.

"ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் வைகை ஆற்றின் கடைமடை பகுதிகள். இயற்கை வழித்தடமாக இருந்த சித்தார்கோட்டை கால்வாய் என்ற பகுதிக்குள் உள்ள ஒரு ஊரும் இதன்கீழ் வருகிறது. வைகை ஆற்றை ஒட்டி இருக்கும் இந்த கிரமாங்களில் 80,000 ஏக்கர் பாசனப்பரப்பு இருக்கிறது. புன்செய் நிலங்கள் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண்மை, ஆற்றின் வளம் பாதிக்கப்படும். குறிப்பாக வைகை, தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயின் வழித்தடங்கள் பாதிக்கப்படும்." என்றார்.

"நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு"

இத்திட்டத்தால் நிலத்தடி நீர் மிகுந்த பாதிப்படையும் என்கிறார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

"இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும். தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம் போன்ற இடங்களில் இந்த கிணறுகள் அமைந்தால் அதன் நிலவளமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். " என தெரிவிக்கிறார், பேராசிரியர் ஜெயராமன்.

பேராசிரியர் ஜெயராமன்

பட மூலாதாரம், PROFEESOR JAYARAMAN

படக்குறிப்பு, 'இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும்' - பேரா. ஜெயராமன்

இத்திட்டத்துக்கு எதிராக மக்கள், விவசாயிகளை அணிதிரட்டி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஏல அறிவிக்கை வெளியான போது, அதை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை அமைக்க முடியாத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும் என்பது 'பூவுலகின் நண்பர்கள்' போன்ற சூழலியல் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

அமைச்சர் தங்கம் தென்னரசு

பட மூலாதாரம், THANGAM THENNARASU FB

படக்குறிப்பு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திருமப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கிய செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திரும்பப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது." என தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு என்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு இத்தகைய உறுதியை தெரிவித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு.

பிரதமர் மோதி 2021ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இந்தியா குறைக்கும் என கூறியிருந்தார். உலக நாடுகள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவரும் வேளையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியான முடிவு அல்ல என்கிறார் பிரபாகரன் வீர அரசு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78zyj33j9do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.