Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
செயற்கைக்கோள் அலைக்கற்றை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 25 டிசம்பர் 2023

தொலைத்தொடர்பு சேவைகளுக்கு என 138 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்திய தந்திச் சட்டம்-1885, இந்திய கம்பியில்லா தந்திச் சட்டம்-1933 மற்றும் தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடமை) சட்டம்-1950 என மூன்று சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பல்வேறு புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதா-2023-ஐ  மக்களவையில் டிச. 20-ஆம் தேதியும் மாநிலங்களவையில் 21-ஆம் தேதியும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தொலைத்தொடர்பு சேவை முழுவதையும் மத்திய அரசே தற்காலிகமாக கையகப்படுத்தும் உரிமை, போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என பல்வேறு புதிய மாற்றங்கள் இதில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான அம்சம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது, செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான அலைக்கற்றை (Spectrum) ஒதுக்கீட்டை எந்த முறையில் இந்திய அரசு ஒதுக்கீடு செய்யப் போகிறது என்ற கேள்வி நீண்ட காலமாக தொலைத்தொடர்பு துறையில் நிலவிவந்தது.

அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கிடையே நீண்ட காலமாக நிலவிவந்த இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல முறையில் அல்லாமல் உரிமம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கான அம்சம் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஆ.ராசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆ. ராசா எதிர்ப்பு

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டை உரிமம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து, திமுக துணை பொதுச் செயலாளரும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவருமான ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆ. ராசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அலைக்கற்றை #Spectrum ஏலம் விடப்படவில்லை என்று என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று இந்த தேசம் பேசட்டும்!" என பதிவிட்டிருந்தார்.

2ஜி வழக்கில் ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை (FCFS) என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதுதான் அந்த வழக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது. 

2ஜி ஒதுக்கீட்டில் இந்தியாவுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட வழக்கில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தொடர்புபடுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

2ஜி ஒதுக்கீடு - நடந்தது என்ன?

2ஜி 1991-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்புவரை இந்திய அரசு மட்டுமே இந்த அலைக்கற்றைகளை பெற்று, இந்தியாவுக்குள் அந்த அலைக்கற்றை மூலமான சேவைகளை வழங்கி வந்தது.

1991-இல் சில தனியார் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு கருவிகளை உருவாக்கும் உற்பத்தி அனுமதியும், அலைக்கற்றை சேவை அனுமதியும் கொடுக்கப்பட்டது.

சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களுக்கு செல்பேசி வசதியை கொண்டு செல்ல தொலைத்தொடர்பு உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு 'ஏலம் முறையில்' விற்கும் நடைமுறை 1992-ஆம் ஆண்டு வந்தது.

இந்த சட்டத்தை மாற்றி தேசியத்தொலைத்தொடர்பு கொள்கை -1999 கொண்டுவரப்பட்டு, வாஜ்பாய் அமைத்த அமைச்சரவை குழு கொடுத்த பரிந்துரைகளின் மூலம் 2003 அக்டோபர் முதல் புதிய நடைமுறைகள் வந்தன.

அதன் அடிப்படையில், ஆ.ராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏலம் இல்லாமல், லைசென்ஸ் முறையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பயன்படுத்தினார். அது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய 2ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு அடிகோலியது.

2012-ஆம் ஆண்டில் இதுதொடர்பான வழக்கில், அப்போதைய மத்திய அரசின் முடிவு தன்னிச்சையானது எனவும், அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய ஏலம் விடுவதுதான் ஒரே வழி எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து, ஏலம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்பின்பு 3ஜி, 4ஜி, இப்போது 5ஜி வரை ஏலத்தின் மூலமே அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. 

 இதற்கிடையில், 2ஜி வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரமில்லையென்று கூறி 2017 டிசம்பரில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்தது.  

 
கனிமொழி

பட மூலாதாரம்,ANI

பாஜக மீதான விமர்சனம்

தான் கடைப்பிடித்த நடைமுறைகளை கேள்வி கேட்ட பாஜக, இன்று அதே வகையான நடைமுறைகளை சட்டமாக்க முனைந்திருப்பதை ஆ.ராசா கேள்வி கேட்டிருக்கிறார்.

2017-இல் வழங்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக கருத்து தெரிவித்திருந்தது.

ஆனால், அதே உச்சநீதிமன்றத்தின் முந்தைய கருத்துகளை மீறும் வகையில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஏல முறை தவிர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி இப்போதைய புதிய மசோதாவால் எழுகிறது.

உச்ச நீதிமன்ற கருத்தை மீறுகிறதா?

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத வழக்குரைஞர் ஒருவர் கூறுகையில், "இப்படி உரிமத்தின் அடிப்படையில் செயற்கைக்கோள் அலைக்கற்றைகளை ஒதுக்கினால் வெளிப்படைத்தன்மை இருக்காது" என்றார்.

 
உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏலத்தின் அடிப்படையில்தான் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை மத்திய அரசு புறந்தள்ளுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கென தனியான விதிகள் இல்லாதபோது உச்சநீதிமன்றம் இதுகுறித்து கேள்வி கேட்டது. இப்போது இதற்கென சட்டத்தையே உருவாக்குகின்றனர். ஆனாலும், இது உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு முரணானது தான். இதையே மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியும்" என தெரிவித்தார்.

"தனியார்மயமாக்கலை மேலும் பரவலாக்குவதற்கு இது வழிவகை செய்யும்" என அவர் தெரிவித்தார்.

மேலும், 2ஜி வழக்கில் பாஜகவினர் ஏல முறை இல்லாததை கேள்வி எழுப்பிய நிலையில், இப்போது பாஜக அரசே ஏல முறையை கொண்டு வராதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

செயற்கைக்கோள் அலைக்கற்றை

பட மூலாதாரம்,GETTY IMAGES

செயற்கைக்கோள் அலைக்கற்றை - அரசு முடிவு ஈலோன் மஸ்க்கிற்கு சாதகமா?

உரிமம் அடிப்படையில் இதனை வழங்கும்போது பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. இது, ஏர்டெல் நிறுவனத்தின் OneWeb, ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார் லிங்க், அமேசானின் குய்பர் (Kuiper) போன்ற நிறுவனங்களுக்கு வெற்றியாக பார்க்கப்படுகின்றது. 

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றைகளுக்கான உரிமங்களை வழங்கினால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் என்கின்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் அரசு இணையதளங்கள் முடக்கம், பிரதமர் மோதியின் ட்விட்டர் கணக்கு 'ஹேக்` செய்யப்பட்டது போன்றவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஏல முறையையே பின்பற்ற வேண்டும் என கூறி தங்களுடைய கருத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI-க்கு அனுப்பியது. 

இணைய சேவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"செயற்கைக்கோள் அலைக்கற்றை என்பது மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம். ரேடியோ அதிர்வெண் (Radio frequency) அடிப்படையில் இது செயல்படுகிறது" என்கிறார், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ஆர். பத்ரி. இதனை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார் அவர்.

"நம் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்தால் இணைப்பு ஒன்றாக இருந்தாலும் அதை வைத்து அனைத்து மின் சாதனங்களையும் இயக்க முடியும். அதேமாதிரி, செயற்கைக்கோள் அலைக்கற்றையை யார் உரிமம் மூலம் வாங்குகிறார்களோ, அவர்களின் 5ஜி இணைப்பை வாங்கும் நபர் ஒருவர், 5ஜி கொண்ட மொபைல் போனிலிருந்து தன் வீட்டையே 'ஸ்மார்ட் வீடாக' மாற்றிவிட முடியும். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும். மற்ற 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற அலைக்கற்றைகள் மூலம் மொபைல் இணைய சேவைகளை மட்டுமே பெற முடியும்" என்றார்.

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் உரிமம் மூலமாகவே ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

 
5ஜி அலைக்கற்றை

பாஜகவின் பதில் என்ன?

இந்த கருத்தைத்தான் நிர்வாக ரீதியிலான ஒதுக்கீட்டுக்கு வரும் எதிர்ப்புகளுக்கான பதிலாகத் தருகிறார், பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

"செயற்கைக்கோள் அலைக்கற்றை உலகம் முழுவதிலுமே இப்படி நிர்வாக ரீதியில்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அப்படியிருக்க, அதனை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான எந்தவொரு முன்மாதிரியும் இல்லை.

மேலும், மொபைல் போன் தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படும் அலைக்கற்றைகளுக்கும் செயற்கைக்கோள் அலைக்கற்றைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அலைபேசி அலைக்கற்றைகளுக்கு எல்லை வரையறை உண்டு.

செயற்கைக்கோள் அலைக்கற்றைகளுக்கு அதன் பெயருக்கு ஏற்றாற்போல் எந்த பிராந்திய எல்லைகளும் இல்லை. எனவே, செயற்கைக்கோள் அலைக்கற்றைகளை ஐ.நாவின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தான் மேலாண்மை செய்கிறது. 

எந்த வகை அலைக்கற்றை தொகுப்பு என்ன பயன்பாட்டுக்கு உகந்தது என்பதை தொழில்நுட்ப ரீதியாக தீர்மானிக்கும் கடமையும் பொறுப்பும் இந்த அமைப்புக்கே உண்டு." என தெரிவித்தார்.

உரிமம் அடிப்படையில் இதனை ஒதுக்கும்போது நிறைய நிறுவனங்களின் பங்கேற்பு காரணமாக அதிக முதலீடுகள் வரும் என்கிறார் நாராயணன் திருப்பதி. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கேள்வி எழுப்பப்படுவது குறித்து கேட்கையில், "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை" என பதிலளித்தார்.

திமுக, அதிமுகவின் பார்வை என்ன?

பெரும் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றோருக்கு இந்த அம்சம் சாதகமாக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார், திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன். 

அவர் கூறுகையில், "மத்திய அரசு அவர்களின் வசதிக்கு எல்லாவற்றையும் மாற்றிக்கொள்கிறது. அப்போதுதான், அதானி, அம்பானியை உள்ளே கொண்டு வர முடியும். உரிமம் அடிப்படையில் அலைக்கற்றைகளை வழங்கினால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு இப்படி பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர்." என தெரிவித்தார்.

இந்த மசோதா குறித்து அதிமுக  செய்தித்தொடர்பாளர்  வைகைச்செல்வனிடம்  கேட்டபோது, " எல்லா மசோதாக்களையும் அவசரஅவசரமாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் இதில் கேட்க வேண்டும்" என்றார்.

ஏலம் இல்லாமல் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, "ஊழல் இல்லாத போக்குக்கு எது வழிசெய்யுமோ அதைத் தொடர வேண்டும். கடந்த காலத்தில் எப்படி கொடுத்தார்களோ, அப்படியே கொடுக்க வேண்டும்" என்றார்.

 
பி.எஸ்.என்.எல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”பி.எஸ்.என்.எல் பாதிக்கப்படும்”

பி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு இம்முடிவு பாதகங்களை ஏற்படுத்தும் என்கிறார், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க முன்னாள் தலைவர் பத்ரி.

"4ஜி அலைக்கற்றையே பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கவில்லை. அப்படியிருக்கும்போது தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயற்கைக்கோள் அலைக்கற்றையை உரிமம் முறையில் வழங்குவது மேலும் பாதிப்புகளையே ஏற்படுத்தும். பொதுத்துறை நிறுவனங்களை மேலும் அழிப்பதுதான் இதன் நோக்கமாக இருக்கிறது" என்கிறார்.

மேலும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும்பாலும் தொலைத்தொடர்பு துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கே மத்திய அரசு வழங்குவதாகவும் லாப நோக்கத்தில் இப்படி செய்யும்போது இணையத்திற்கான கட்டணம் நிச்சயம் உயரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால், சாமானியர்கள் இணைய பயன்பாட்டை அணுகுவது மட்டுப்படுத்தப்படும் என்பது அவருடைய வாதமாக இருக்கிறது. இதனால், மக்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளை நோக்கி செல்ல வேண்டியிருக்கும் எனவும், இதனை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பத்ரி தெரிவித்தார்.

"பொருளாதார ரீதியாக பி.எஸ்.என்.எல் வலுவிழந்துள்ளது. அதனை இந்த அரசு மேலும் ஆழப்படுத்துகிறது. இது பொதுத்துறை நிறுவனங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிரானது" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c4nyk5vzdmeo



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.