Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அர்வி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கமலா தியாகராஜன்
  • பதவி, பிபிசி டிராவல்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார்.

அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார்.

சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா?

எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என.

தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும்.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,AHAMED ZUBAIR

படக்குறிப்பு,

அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை

தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி

கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது.

வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன.

வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை.

அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார்.

"ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார்.

"இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார்.

தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள்.

"பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார்.

அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MAHMOOD KOORIA

படக்குறிப்பு,

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார்.

40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது.

இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது.

அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர்.

"தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர்.

அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார்.

 

அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம்

தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது.

குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார்.

"வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர்.

அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார்.

"நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன)

 

முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள்

அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI

படக்குறிப்பு,

1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார்

காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார்.

"பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார்.

"முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார்.

இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன.

 

தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி

அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள்.

இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார்.

"எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார்.

"அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார்.

வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் .

மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார்.

இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார்.

"இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.