Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"
 
 
சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.
 
சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.
 
மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .
 
"தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "
 
என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை
 
‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’
 
என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,
 
‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’
 
என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.
 
பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை
 
'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',
 
அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.
 
பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்
 
"நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.
 
"கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே".
[ஐங்குறுநூறு 124]
 
முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.
 
"தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச்
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி"
[கலித்தொகை 59]
 
இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,
 
‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்
கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”
 
என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.
 
பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
 
ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,
 
"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று".
 
[குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.