Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு

- விஸ்வலிங்கம் சிவலிங்கம்

அன்பார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களே!

பரந்து, விரிந்து செயற்படும் ஜனநாயக சக்திகளே!

உங்களது சிந்தனைக்கும், விவாதத்திற்குமான கருத்து.

உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு

இலங்கை இனப் பிரச்சனை ஓர் நிர்ணயமான காலகட்டத்தை நெருங்கியுள்ளது. பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலையில் மிக நீண்ட காலமாகவே உள்ளன. நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் தொடர்ந்து இழுபறியில் உள்ள இப் பிரச்சனையை நாட்டில் பதவிக்கு வந்த எந்த அரசினாலும் தீர்க்க முடியவில்லை. பதிலாக பிரச்சனைகள் மேலும், மேலும் உக்கிரமடைந்தே செல்கின்றன. நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டதோடு அவை ராணுவ வழிகளாலும், இனக் கலவரங்களாலும், அரசியல் அமைப்பு வடிவங்களாலும் ஒடுக்கப்பட்டமையால் அதற்கான எதிர்ப்பு நிலமைகளும் அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டமாக, வன்முறையாக பரிமாணம் பெற்றன. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் சாத்வீக நிலையிலிருந்து வன்முறையாக மாற்றம் பெற்றது போலவே அரசியல் கோரிக்கைகளும் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வுகளைக் கோரிய நிலமையிலிருந்து தனி நாட்டுக் கோரிக்கையாக மாற்றமடைந்தன. ஜனநாயக உரிமைகளை சாத்வீக வழிகளில் பெற்றுக் கொள்ளலாம் என நம்பிச் செயற்பட்ட அரசியல் தலைமைகளின் அணுகுமுறைகள் தோல்வி அடைந்ததால் அரசியல் தலைமை தீவிரவாத சக்திகளின் கரங்களுக்கு மாறின.

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளை எட்டப்போகும் எமது நாடு ஜனநாயக ஆட்சி முறையைப் பேணுவதற்குத் தவறிவிட்டது. இதற்குக் காரணம் என்ன? நாட்டில் காணப்படுவது இனப் பிரச்சனையா (ethinic problem)? அல்லது அரசியல் அமைப்புப் பிரச்சனையா (constitutional problem)? அல்லது சிறுபான்மையினர் பிரச்சனையா (minority problem)? அல்லது இவை மூன்றுமா?

இப் பிரச்சனையில் ஒரு பக்கம் இனப் பிரச்சனையாக காணப்படினும், இப் பிரச்சனை தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதை விட அவை சிங்கள பேரினவாத, பௌத்த மத மேலாதிக்க சிந்தனைகளாலும், அச் சிந்தனைகளைச் செயற்படுத்த அரசியல் அமைப்பு ரீதியாக மேற்கொண்ட முயற்சிகளுமே அவற்றை இனப் பிரச்சனையாக மாற்ற உதவின. சுதந்திரத்தின் பின்னர் அரச யந்திரத்தை ஜனநாயகம் என்ற பெயரால் சுவீகரித்துக் கொண்ட பெரும்பான்மை சிங்கள அரசியல்; குடியேற்ற ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாகுபாடுகளுக்கு நிவாரணம் தேடுதல் என்ற பெயரில் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டது.

இந்த நிலமைகளை மாற்றி அமைக்க தமிழ் மக்கள் மத்தியிலும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களின் மத்தியிலும் காணப்பட்ட அரசியல் சக்திகளும் காலத்திற்குக் காலம் அரசியல் அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தினர். அரசாங்கங்களை ஆதரித்தனர். ஓப்பந்தங்களும், அரசியல் ரீதியான ஒத்துழைப்புகளும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இருப்பினும் அரசியல் அமைப்பு வடிவங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்ட முடியும் என்பது தொடர்ச்சியான நம்பிக்கையாக உள்ளது.

எனவே நாட்டில் இன்று நிலவும் இப் பிரச்சனை இனப் பிரச்சனை என்பதை விட அரசியல் அமைப்புப் தொடர்பான பிரச்சனையே என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்கிறோம்.

பாகுபாடுகளை உள் கட்டுமானமாகக் கொண்டிருந்த அரசியல் அமைப்புக் காரணமாகவும், அதன் பிரகாரம் இயற்றப்பட்ட சட்டங்களும் சிங்கள பேரினவாத பௌத்த மத மேலாதிக்க சிந்தனைகளைப் பலப்படுத்த உதவியதா? என்ற கேள்வி எழுகிறது. இனவாத சிந்தனைகளை மையமாகக் கொண்ட அரசியல் கட்டுமானம் மேலும் வன்முறையையும், நாடு தழுவிய அடிப்படையிலான ராணுவ மயமாக்கலையுமே விட்டுச் சென்றிருக்கிறது. எனவே பௌத்தமத மேலாதிக்க சிந்தனையும் அதன் நோக்கத்தை ஈடேற்றவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும்.

அரச கட்டுமானத்தைப் பயன்படுத்திய மேலாதிக்க சிந்தனைப் போக்கும், அதற்கு எதிரிடையாக படிப்படியாக உருவாகியுள்ள தமிழ்

குறும் தேசிய வாதமும் தத்தமது போக்குகளில் வெற்றியை அடையவில்லை என்பதை இன்றைய நிலமைகள் உணர்த்துகின்றன. பதிலாக எந்த மக்களின் சுமைகளைப் போக்குவதாகக் கூறி தத்தமது பயணங்களை மேற்கொண்டார்களோ அப் பயணம் எதிர்பார்த்த வழியில் தொடர முடியவில்லை என்ற முடிவையே அனுபவங்கள் உணர்த்துகின்றன. இதன் காரணமாக நாட்டின் அரசியல் கட்டுமானம் என்பது தோல்வி அடைந்த ஒன்றாக வர்ணிக்கப்படும் சூழலே தற்போது காணப்படுகிறது.

இப் பின்னணியில் இப் பிரச்சனை தொடர்பாக புதிய அணுகு முறை அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டின் அரசியல் தேவைக்கேற்றவாறு எய்தப்பட வேண்டும் என்பதை இரு சமூகங்களிலும் உள்ள ஜனநாயக சக்திகளால் புரியப்பட்டுள்ளன என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இதனையே சந்திரிகா அவர்களால் முன்வைக்கப்பட்ட அரசியல் பொதி, பெரும்பான்மைக் கல்விமான்களின் அறிக்கை, திஸ்ஸ விதாரண அவர்களின் அறிக்கை என்பன உணர்த்தி நிற்கின்றன.

இவ் அறிக்கையின் வசதிக்காக இனப் பிரச்சனை என இப் பிரச்சனையை வர்ணிக்கின்ற போதிலும் அடிப்படையில் இது ஓர் அரசியல் பிரச்சனையே என்பதைக் கருத்தில் கொண்டு தொடர்வோம். தற்போது இனப் பிரச்சனை தொடர்பாகவும், நாட்டின் அரசியல் கட்டுமானம் தொடர்பாகவும் பலத்த கருத்துப் பரிமாறல்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலே அதிகாரப் போட்டி காணப்படுவது போலவே சிறுபான்மை அரசியல் கட்சிகள் மத்தியிலும் வௌ;வேறு பரிமாணத்தில் இதற்கான முனைப்புகள் காணப்படுகின்றன. அணுகு முறைகளே வேறுபடுகின்றன. இருப்பினும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் இனப் பிரச்சனை தொடர்பாக தாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை முன்னெடுப்பதற்கு அரசியல் அமைப்பு மிகவும் தடையாக இருப்பதையும் உணர்ந்து வருகின்றன.

தற்போது செயற்பாட்டிலுள்ள இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் இறுக்கமான தன்மைகள் காரணமாகவும், பிரதான கட்சிகள் மத்தியிலே பொது இணக்கம் எட்ட முடியாத அளவுக்கு உள் போட்டிகள் காணப்படுவதாலும், பாராளுமன்றத்தில் சிறுபான்மைப் பலத்தை அரசு கொண்டிருப்பதாலும், இதனால் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அதிக ஆதிக்கத்தைச் செலுத்துவதாலும் நிலமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளது.

பெரும்பான்மைச் சிங்கள அரசியல் கட்சிகளின் கடந்த கால இனவாத அரசியல் கோட்பாடுகளும், அவை தொடர்ந்தும் இக் கட்சிகளின் உள்ளார்ந்த அணுகுமுறைகளாக காணப்படுவதாலும், சமீப காலமாக அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றுவரும் சிறுபான்மைச் சிங்கள அரசியல் கட்சிகளும் இனவாத அரசியல் மூலமே தமது அரசியல் பலத்தை விஸ்தரிக்க எண்ணுவதாலும், சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் மேலும் பலகாலம் மறுக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. அரசியல் அமைப்பில் பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க சிங்கள அரசியல் கட்சிகள் தவறி வருவது பெரும் அச்சத்தையே அளிக்கிறது.

நாட்டின் இனப் பிரச்சனை கூர்மை அடைந்து ஆயுத வன்முறையாக மிக நீண்ட காலமாக நீடிப்பதால் நாட்டின் ஆட்சி அதிகாரக் கட்டுமானமும் படிப்படியாக ராணுவத்தைச் சார்ந்து செயற்படும் நிலைக்குச் சென்றுள்ளது. நாட்டின் சிவில் அரசியல் கட்டுமானத்தில் ராணுவத்தின் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. அரசியல் சார்ந்த ஆயுத வன்முறையுடன், நாட்டின் பொதுவான வன்முறையும் அதிகரித்து சட்டம் ஒழுங்கு என்பன சீர்குலைந்து ஊழல், சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

செயற்பாட்டிலுள்ள திறந்த பொருளாதார நடிவடிக்கைகள் சிறுபான்மைச் சமூகத்தில் காணப்பட்ட வர்த்தக சமூகத்தினரிடையே பொருளாதார வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளமையாலும், பெரும்பாலான தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேறியுள்ளமையாலும், நாட்டின் வர்த்தகத் துறையிலும் அவர்களின் பலம் பெருகி வருவது ஒருபுறத்தில் இனவாத சக்திகளுக்கு அச்சத்தை அளித்துள்ள போதிலும், மறுபுறத்தில் இனவாத அடிப்படையிலான அரசியல் பலத்தை அதிகரிக்க வாய்ப்பை அளித்துள்ளது.

இந் நிலமைகள் மிக நீண்ட காலமாக தொடர்வதால் இவை காலப் போக்கில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்சங்களாகவும், சமூக விரோத சக்திகள் பலம் வாய்ந்தவைகளாக மாறவும், அரச கட்டுமானங்களில் படிப்படியாக ஆதிக்கத்தைச் செலுத்தவும் வாய்ப்பு ஏற்படும். இவற்றிற்கான அடையாளங்கள் ஏற்கெனவே ஆங்காங்கே காணப்படுவதும், அரசு செயற்படமுடியாது பலமிழந்து காணப்படுவதும், இதனால் சர்வதேச அளவில் தோல்வியுற்ற அரசாக கணிக்கப்படுவதும், நாட்டின் ஜனநாயக பாரம்பரியங்கள் படிப்படியாக அருகிச் செல்வதற்கான ஆபத்தான அறிகுறிகளாக உள்ளன.

இந் நிலையில் தேசிய அரசியல் கட்டுமானங்களில் ஜனநாயக மாறுதல்களை ஏற்படுத்துவதும், அதற்கு ஏற்றவாறு அரசியல் அணுகுமுறைகளை மாற்றுவதும் தேசியத் தேவையாக உள்ளது. எனவே சிறுபான்மை இனக் கட்சிகள் மத்தியிலே இதற்கான அவசியங்களை உணர்த்தும் வகையில் ஆழமான, கோட்பாட்டு அடிப்படையிலான அரசியல் அணுகுமுறைகள் பற்றிய விவாதங்களை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்கள் பற்றிய கருத்துக்களை அவதானிப்போம்.

உதாரணமாக இன்றைய அரசியலமைப்பு சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களை உறுதி செய்கிறது. இதனை அரசுக் கட்டுமானத்தின் முக்கிய ஜனநாயகக் கோட்பாடாக அரசு முன்வைக்கிறது. அவ்வாறானால் சுதந்திரமான பேச்சுரிமை என்பது நாட்டின் மொழிக் கொள்கை பற்றி எவ்வாறு தொழிற்படுகிறது? என்பது குறித்த கேள்வியை எழுப்பினால் அது சுதந்திரமான பேச்சுரிமை என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. இது போலவே சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படை அம்சத்தை எடுத்துக்கொண்டால் அவ் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான தேர்தல் தொகுதிப் பிரிப்புகள், அப் பிரிப்புகளின் மூலம் உருவாக்கப்படும் அதிகார அலகுகள் இச் சுதந்திரமான வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்றனவே ஏன்? அவ்வாறான சுதந்திரமான வாக்குரிமையின் அர்த்தம் என்ன? தேர்தலில் ஆள் மாறாட்டம் என்பது மிகவும் வெளிப்படையாக நடைபெறுகின்றதே! சுதந்திரமான வாக்குரிமை என்பது இதுவா?

இவற்றிற்கான பதில்கள் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படுவதாகவே உள்ளன. அவ்வாறானால் இவை எவ்வாறான சுதந்திரமான உரிமைகள்? இவற்றிற்கான வரையறுப்புகள் அர்த்தமுள்ளனவாக உள்ளனவா?

இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் அரசியல் எதிர்காலம் பற்றி மிகவும் வெளிப்படையானதும், கோட்பாட்டு அடிப்படையிலான அணுகுமுறை தற்போது தேவையாக உள்ளது. ஆயுத வன்முறை மூலம் தனிநாடு அடைய முடியும் என எடுத்த முயற்சிகளின் தோல்விகளும், சிறுபான்மை இனங்களின் தேசிய அபிலாஷைகளை காலத்திற்குக் காலம் சிறு சிறு சலுகைகள் மூலம் ஒடுக்கி விடலாம் என எடுக்கப்படும் முனைப்புகளும், நாடு முழுவதும் சிங்கள பேரினவாத சிந்தனைகளைப் பரப்பி தேசிய இனங்களை ஒடுக்கி விடலாம் என எடுத்த நடவடிக்கைகளும் மாற்றுச் சிந்தனைக்கான தோற்றுவாய்களை உசுப்பியுள்ளமையே இன்றுள்ள யதார்த்தமாகும்.

மேற்கூறப்பட்ட நிலமைகளின் அடிப்படைகளிலும், சர்வதேச ரீதியிலான அளவில் குறிப்பாக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்குப் பின்னர் அவ்வவ் நாடுகளின் உள் விவகாரங்களில் காணப்பட்டு வரும் இன உள் முரண்பாடுகள் ஓர் தேசிய எல்லைக்குள் வாழும் பல்வேறு இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்களை உருவாக்கி உள்ளன.

இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் மத்தியிலே தற்போது எழுப்பப்பட்டு வரும் சுயநிர்ணய உரிமைக்கான குரல்கள் சர்வதேச அளவில் ஒலிக்கப்படும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளின் ஓர் அங்கமாகும். சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு மக்கள் தம்மை ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுவிப்பதற்கான, குறிப்பாக குடியேற்ற ஆட்சியாளர்களிடமிருந்து தம்மை விடுவிக்கவே மக்கள் முதலில் இக் கோட்பாட்டை வலியுறுத்தினார்கள். பயன்படுத்தினார்கள். இக் கோரிக்கைகள் தேசிய எல்லைகள் சம்பந்தப்பட்டதாகவே காணப்பட்டன. குடியேற்ற ஆட்சியாளர்களிடமிருந்து தம்மை விடுவிப்பதற்காக “இறைமை”, “தனி அரசு”, “ சுதந்திர தனி அரசு” போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை விதேசிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான உள்ளடக்கத்தையே குறியீடாகக் கொண்டிருந்தன. குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஓர் தேசிய எல்லைக்குள் அப் பகுதி மக்களால் அல்லது ராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட பிரதேசங்கள் தேசிய அரசாக அடையாளப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக ஓர் தேசிய எல்லைக்குள் வாழ்ந்த ஏனைய சிறபான்மையினரின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கத் தவறிவிட்டன. இதன் காரணமாக ஐ.நா.சபை சாசனங்களின் மனித உரிமை சம்பந்தப்பட்ட பகுதிகள் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தவிர்த்துக்கொண்டன. மனித உரிமைகள் என்பது மனிதனுக்கு மனிதன் பாகுபாடு காட்டக்கூடாது என்ற பொதுவான அம்சத்தின் மூலம் சிறுபான்மையினரைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனக் கருதினார்கள். எதிர்காலத்தில் ஆபத்துக்களை எதிர் நோக்கக் கூடிய குழுக்களுக்கான பாதுகாப்பினையோ, அல்லது சில குழுக்களுக்கு விசேட உரிமைகள் வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவோ அல்லது கலாச்சார மற்றும் வேறுபாடுகளைக் கொண்ட இனக் குழுமங்களை மறைமுகமாகவேனும் பாதுகாக்க வேண்டும் என்றவாறான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறினார்கள்.

இதன் காரணமாக காலப்போக்கில் மனித உரிமைகளைப் பேணுதல் என்ற அம்சம் மேலும் மேலும் தீர்க்க முடியாத சிக்கலான நிலைக்குச் சென்றது. இதன் விளைவாக ஏற்கெனவே குறிப்பிட்டது போல சுதந்திரமான பேச்சுரிமை, வாக்குரிமை என்ற கோட்பாடுகள் மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அம்சங்களாக மாறின. இதனால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்த கால முடிவின் பின்னர் மனித உரிமை சம்பந்தப்பட்ட கோட்பாட்டு அம்சங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டிய நிலைக்குச் சென்றன. சிறுபான்மை இனங்களின் ஒட்டு மொத்தமான கூட்டு உரிமை (Collective rights ) பற்றி ஐ.நா.சபையில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்கள் 1992ம் ஆண்டு மாஸ்ரிச் ஒப்பந்தமாக ( Maastricht treaty ) வெளியாகின. சுயநிர்ணய உரிமை என்பது இரண்டு வகையாக விபரிக்கப்பட்டன. அவை உள்ளக சுயநிர்ணய உரிமை ( Internal self-determination ) எனவும், வெளி சுயநிர்ணய உரிமை (External self- determination) என்பதாகும். உள்ளக சுய நிர்ணய உரிமை என்பது ஓர் தேசிய எல்லைக்குள் வாழும் சகல சிறுபான்மை இனக் குழுமங்களினதும் கூட்டு உரிமையை ( collective right) வலியுறுத்துகிறது. வெளிச் சுயநிர்ணய உரிமை என்பது இறைமை, தனி அரசுக் கட்டுமானம் , சுதந்திர அரசு என்பது பற்றிப் பேசுகிறது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது கூட்டு உரிமை பற்றிப் பேசுகின்ற போதிலும் அவை வெறுமனே கலாச்சார, மத, மொழி மற்றும் அடையாளங்கள் பற்றி மட்டும் பேசவில்லை. கூடவே அரசியல் உரிமைகள் அதாவது சட்டம் இயற்றல், நிர்வகித்தல், நீதித்துறை அதிகாரம் என்பனவற்றையும் உள்ளடக்குகிறது.

இவ்வாறான இச் சர்வதேச கோட்பாட்டுப் பின்னணியில் இலங்கை அரசினது இன்றைய மற்றும் கடந்த கால அணுகுமுறைகளையும் அதாவது பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய ஒப்பந்தம், சந்திரிகா அரசின் தீர்வுப் பொதி என்பவற்றை உற்று நோக்குவோமாயின் அவை உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான முயற்சிகளே என்ற முடிவுக்குச் செல்ல முடியும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பு செயற்பாட்டிற்கு வந்து 29 வருடங்கள் கழிந்து விட்டன. இக் கால இடைவெளியில் பலமான அரசியல் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ் அரசியல் அமைப்பு வழங்கிய தேர்தல் முறை காரணமாக அதாவது விகிதாசார பிரதிநிதித்துவம் காரணமாக சிறிய கட்சிகளும் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிரதான சக்திகளாக வளர்ந்துள்ளமையை அவதானிக்க முடியும். இக் கட்சிகள் குறிப்பாக ஜே வி பி, ஜாதிக கெல உறுமய போன்றவை சிங்கள தேசியவாத அரசியலைப் பலமாக முன்வைப்பதாலும், இத் தேசியவாத அரசியலின் அடிப்படைகள் ஏனைய சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகள் குறித்து இறுக்கமான போக்கைக் கடைப் பிடிப்பதாலும், இனப் பிரச்சனை தொடர்பான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்வது மேலும் கடினமாக உள்ளது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந் நிலை தொடர்ந்து காணப்படுவதாலும், இக் கட்சிகள் படிப்படியாக பலமடைய வாய்ப்புகள் காணப்படுவதாலும் அரசியல் அமைப்பு ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து சிக்கலாகவே உள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல நாட்டின் அரசியல் கட்டுமானம் ஜனநாயக விழுமியங்களைக் கைவிட்டு ராணுவ அடிப்படையிலான தன்மையை நோக்கிச் செல்வதால் ஒட்டு மொத்தமான அரசியல் மாற்றம் ஒன்றை நோக்கிச் செல்வதே பொருத்தமான அரசியல் பாதையாக உள்ளது. இப் பாதையானது ஏற்கெனவே காணப்படும் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதுடன், ஜனநாயக விரோத போக்கு அம்சங்களைக் களைவதும் அவசியமாகிறது.

மேலும் நாட்டின் இன்றைய அரசியல் சூழல் சர்வதேச அரசியல் போட்டிகளின் தளமாக மாற்றமடைந்து வருகிறது. அரச கட்டுமானம் அதன் சுயத்தை இழந்து வருகிறது. அதாவது அதன் சுயநிர்ணய உரிமையை இழந்து வருகிறது. மேலும் மேலும் சர்வதேச ஆளுமை சக்திகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அரசின் சுயம் குறித்து பலமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. உள்நாட்டு நிலமைகளும், சர்வதேச உடுருவல்களும் சர்வதேச சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் உணரப்பட்டுள்ளது.

எனவே அரசின் சாராம்சம் குறித்த விவாதங்களும் அவசியமாக உள்ளன. அதாவது இறைமை குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களின் கைகளில் உள்ள வாக்குரிமையும், அவ் வாக்குரிமையைச் சுதந்திரமாகப் பயன்படுத்தி தாம் விரும்பிய அரசியல் கட்சியைத் தேர்வு செய்வதும் அதன் மூலம் தமது இறைமை அதிகாரதத்தைக் கையளிப்பதும் ஜனநாயகம் எனக் கருதப்படுகிறது. ஆனாலும் மக்களினால் வழங்கப்பட்ட இறைமை அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசு குறித்த விவாதங்களே சுயநிர்ணய உரிமையைக் கேள்விக்குட்படுத்துகின்றன. பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியை அமைத்துள்ள கட்சி என்ற வகையில் மட்டும் இறைமையுள்ள ஆட்சியாக அது அமைந்துவிட முடியாது. தேசிய எல்லைகளைப் பற்றி மட்டும் பேசுவது இறைமையாக அமைய முடியாது. பெரும்பான்மை என்பது தேசத்தில் வாழும் சகல தரப்பாரினதும் இணக்கத்தைப் பெற்றள்ளதா? என்பதும், ஆட்சிக்குட்பட்ட சகல தரப்பாரினதும் ஜனநாயக உரிமைகள் எங்ஙனம் பாதுகாக்கப்படுகிறது? என்பவைகளும் இறைமை அதிகாரத்தின் பிரதான அம்சமாகிறது. அதுவே சட்டபூர்வமான இறைமை அதிகாரமுள்ள அரசாக அமைகிறது. இலங்கையில் செயற்பாட்டிலுள்ள அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஆட்சியிலுள்ள அரசு சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறவில்லை. இந் நிலையில் பூரண இறைமையுள்ள அரசாக அது அமையவில்லை. அதாவது தனது ஆட்சிக்குட்பட்ட மக்களின் பூரண சம்மதத்தைப் பெறவில்லை என்பதாகும். இலங்கையில் தொடர்ச்சியாக அமைந்து வரும் அரசுகள் நாட்டின் சிறுபான்மை இனங்களின் சம்மதத்தைப் பெறாத ஆட்சியாகவே தொடர்ந்து காணப்பட்டன. அத்துடன் நாட்டில் அமைந்த அரசுகளின் ஆட்சிக் காலம் அவசரகாலச் சட்டத்தின் கீழேயே நீண்ட காலம் நீடித்தன. இதுவும் நாட்டின் இறைமை அதிகாரத்தின் சட்ட அங்கீகார வலு குறித்து சந்தேகங்களையே எழுப்புகிறது.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுப்பதும் பின்னர் அவ் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவதும், மாறாக செயற்படுவதும் தொடர்ச்சியான அரசியல் வரலாறாக உள்ளது. இதுவும் மக்களின் இறைமை அதிகாரத்தை மீறிச் செயற்படுதலேயாகும். இவ் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையின் அரசியல் போக்கு ஜனநாயக விரோதமாகவே உள்ளது.

எனவே வரலாற்றின் அடிப்படையிலும், கோட்பாடுகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது இலங்கையில் வாழும் தேசிய இனங்கள் தமது கூட்டு உரிமைக்காக அதாவது அரசியல் உரிமை, பாரம்பரிய தாயகங்களில் சுய ஆட்சி என்பன பிரிக்க முடியாத உரிமைகள் என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு இவற்றிற்கான மறுதலிப்பு சுதந்திர காலம் முதல் இன்று வரை நீடிக்கிறது என்பதனையும் தெரிவிக்கிறது.

தனி மனித உரிமைகளை மட்டும் வழங்குவதன் மூலம் இவை தீர்க்கப்பட முடியாதவை என்பதனை வலியுறுத்துவதோடு, நாம் தனியான இனக் குழுமங்கள் என்பதனையும், மொழி ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதனையும், கலாச்சாரம், மதம் என்பவற்றில் வித்தியாசமான வரலாறு உண்டு என்பதனையும், இவற்றிற்கு மேலாக எமக்கென பாரம்பரிய தாயகங்கள் உண்டு என்பதனையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சுருக்கமாகக் கூறின் எமது தாயகங்களை நாமே நிர்வகிக்க விரும்புகிறோம். அதேவேளை நாம் ஏனைய இனக் குழுமங்களுடனும் இணைந்து, நெருங்கி சமாதான சக வாழ்வுடன் வாழ விரும்புகிறோம்.

எமக்கு முன்னால் விரிந்துள்ள சவால்கள் பாரியன. எமது அவாக்களைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான அரசியல் சட்ட வடிவிலான பொறிமுறையைத் தேர்வு செய்வதும், அவ்வாறான பொறிமுறை மூலம் எம்மை நாமே நிர்வகிப்பதுடன், ஏனையோர்களுடன் சமாதான சகவாழ்வையும் எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதே அந்தச் சவாலாகும். எம் முன்னால் உள்ள கேள்வி இதுதான். அதாவது நாம் தேர்வு செய்யும் அரசியல் பொறிமுறையானது வௌ;வேறு இனக் குழுமங்களின் சுயாட்சி (self rule)யையும், அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் ஏனைய மக்களுடன் அதிகார பகிர்வு (shared- rule) ஆட்சியையும் தரும் சமநிலை பொறிமுறையாகும்.

இவ்வாறான சுயாட்சியையும், அதிகார பகிர்வினையும் வழங்கக்கூடிய பொறிமுறை சமஷ்டியே என நாம் உறுதியாக நம்புகிறோம். அதாவது பிரதேசங்களின் ஒன்றியம் என்பதாகும்.

சமஷ்டி ஆட்சி என்பதன் மூலம் நாம் புரிந்து கொள்வதென்ன?

சமஷ்டி ஆட்சி என்பது கிடையாகவும், நிலைக்குத்தாகவும் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் பொறிமுறையாகும்.

- சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை என்பவற்றின் அதிகாரங்கள் கிடையாகப் பிரிக்கப்படுகின்றன.

- அரசின் வௌ;வேறு மட்டங்களிடையே அதிகாரங்கள் நிலைக்குத்தாகவும் பிரிக்கப்படுகின்றன.

சுருக்கமாகக் கூறின் சமஷ்டி என்பது அரசியல் அமைப்பின் அதிகாரங்களை மத்திக்கும், பிரதேசங்களுக்கும் பிரிக்கும் ஒர் வழிமுறையேயாகும். இவ்வாறாக மத்திக்கும், பிரதேச அரசுகளுக்கும் அதிகாரங்களைப் பிரிப்பதும், பிரிக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் அமைப்புக்கள் அதிகாரத்தில் உயர்ந்தவை (supreme authority ) என்பதனையும் ஏற்றுக் கொள்வதாகும். சமஷ்டி ஆட்சியானது இரு வகையான அதிகார வடிவங்களைக் கொண்டிருக்கும்.அதாவது பகிர்வு அதிகாரம் (shared rule), சுய அதிகாரம் (self-rule) என்பதாகும். சமஷ்டி ஆட்சியின் பிரதான ஆட்சித் தத்துவம் வேற்றுமையையும், ஒற்றுமையையும் (Combining unity and diversity) இணைத்துச் செல்வதாகும். நாம் வற்புறுத்தும் சமஷ்டி வழிமுறையானது ஐக்கிய இலங்கைக்குள் இணக்கத்தை ஏற்படுத்துவது, பாதுகாப்பது, தனித்தனி அடையாளங்களை வளப்படுத்துவது என்ற கோட்பாடுகளைக் கொண்டிருக்கும்.

எனவே இத்தகைய மாற்றங்களின் மூலம் ஓர் உண்மையான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதே எமது இலட்சியமாகும். இதனால் தீவின் சகல பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதோடு சகல இனங்களுக்கும் அரசியல் சமத்துவத்தையும், சகல பிரதேசத்து மக்களினதும் சுயநிர்ணய உரிமையையம் உறுதி செய்வதாகும்.

ஜனநாயகமற்ற சமஷ்டி ஆட்சி அரசியல் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை என்பதனை உறுதியாக நம்புகிறோம். அத்துடன் கடந்த 25 வருடகாலமாக இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையையும் அது நிறுத்த உதவப்போவதில்லை. எனவே நாம் ஆரம்பிக்கும் இவ் ஜனநாயக இயக்கம் இலங்கையில் ஓர் உண்மையான ஜனநாயக அரசைத் தோற்றுவிக்க உதவப்போவதோடு மட்டுமல்ல உண்மையான சமஷ்டியையும் உருவாக்கும்.

எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள இந் நெருக்கடியின் அடிப்படைத் தோற்றுவாய் அரசியல் அமைப்புச் சம்பந்தப்பட்டதே என உறுதியாக நாம் நம்புகிறோம். ஆகவே உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அணுகப்பட வேண்டும் என்பதை இத் தருணத்தில் வற்பறுத்த விரும்புகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த விசு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.